Apr 12, 2017

ஹதீஸ் கலை ஆய்வு தொடர் 14 - மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?

ஹதீஸ் கலை ஆய்வு தொடர் 14 - மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?

எஸ். அப்பாஸ் அலீ, எம்.ஐ.எஸ்.சி.



மதம் மாறியவனைக் கொல்லுமாறு மார்க்கம் சொல்லவில்லை என்பதற்குப் பல குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டினோம். எதிர் கருத்தைக் கொண்டவர்கள் இவற்றுக்குக் கூறும் மறுப்புகளுக்கான விளக்கத்தையும், எதிர்வாதங்களும் முறையான பதில்களும் என்ற தலைப்பின் கீழ் கண்டோம்.

மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு வேறு சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள். அவற்றுக்கான விளக்கத்தைப் பார்த்து வருகிறோம்.

ஆதாரம்: 2

மதம் மாறியவன் யாராக இருந்தாலும் அவனைக் கொல்ல வேண்டும் என்பதற்குப் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதிமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. அவை:

1. திருமணமானவன் விபச்சாரம் செய்வது.

2. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாக கொலை செய்வது. 3. ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை விட்டு விட்டவன். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 3465

மார்க்கத்தை விட்டுவிட்டவனைக் கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். நமது விளக்கம்

இஸ்லாத்தை விட்டு விட்டவன் என்பதுடன் ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறியவன் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துச் சொல்கிறார்கள். அரசாங்கத்திற்குக் கட்டுப்படாமல் அதற்கு எதிராகக் கிளம்புபவன் தான் கொல்லப்படுவான் என்பதே இதன் பொருள். ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இதே மாதிரியான ஹதீஸ் இதை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று தன்மைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலே தவிர (வேறெந்த நிலையிலும்) முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணம் முடித்த பிறகும் விபச்சாரம் செய்தவன் கல்லெறிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றே கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான் அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான் அல்லது நாடு கடத்தப்படுவான். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸயீ 3980

ஆதாரம்: 3

மதம் மாறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: (யூதராயிருந்த) ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டுப் பின்பு யூதராக மாறி விட்டார். அந்த மனிதர் என்னிடம் இருந்த போது முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் வந்தார்கள். இவருக்கு என்ன? என்று முஆத் கேட்டார்கள். நான், இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டு யூதராகி விட்டார் என்று சொன்னேன். முஆத் (ரலி) அவர்கள், நான் இவருக்கு மரண தண்டனை அளிக்காதவரை அமர மாட்டேன். இது தான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்பாகும் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரி 7157

மதம் மாறிய யூதரைக் கொல்ல வேண்டும். இது தான் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் தீர்ப்பு என்று முஆத் (ரலி) அவர்கள் கூறுவதால் மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் கூறுகிறார்கள்.

நமது விளக்கம்

முஆத் (ரலி) அவர்கள் குர்ஆனுடைய ஒரு வசனத்தை அல்லது நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸைச் சுட்டிக்காட்டி இது அல்லாஹ்வுடைய தீர்ப்பு, இன்னும் அவனது தூதருடைய தீர்ப்பு என்று கூறவில்லை. மாறாக எந்த ஆதாரத்தையும் காட்டாமல் பொதுவாகவே இப்படிச் சொல்கிறார்கள். அல்லாஹ்வுடைய தீர்ப்பு என்றால் எந்த வசனத்தில் அல்லாஹ் மதம் மாறியவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளான்? குர்ஆனில் அப்படி ஒரு கட்டளை இல்லவே இல்லை. மதம் மாறியவர்களைக் கொல்வது ரசூலுடைய தீர்ப்பு என்றால் ரசூல் (ஸல்) அவர்கள் எந்த ஹதீஸில் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்? நபி (ஸல்) அவர்கள் மதம் மாறியவர்களைக் கொல்லுமாறு சொல்லவில்லை என்பதை மேலே நிரூபித்திருக்கிறோம். ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் கூறாததை அவர்கள் பெயரால் இட்டுக்கட்ட மாட்டார்கள் என்பதில் எள்ளளவும் நமக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு வசனத்தையோ அல்லது ஹதீஸையோ புரிந்து கொள்வதில் மனிதன் என்ற அடிப்படையில் தவறு அவர்களிடம் வர வாய்ப்புண்டு. அவர்கள் எந்த ஆதாரத்திலிருந்து இதை விளங்கினார்களோ அந்த ஆதாரத்திலிருந்து முறையாக இவர்கள் தீர்ப்பளித்திருக்கவும் வாய்ப்புள்ளது. புரிந்து கொள்வதில் தவறு ஏற்பட்டு தவறாக தீர்ப்பளிக்கவும் வாய்ப்புள்ளது.

ஏனென்றால் இச்சட்டத்தை நேரடியாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதாக முஆத் (ரலி) அவர்கள் சொல்லவில்லை. அல்லது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு யாருக்காவது தீர்ப்பளித்ததைக் கண்டதாகவும் அவர்கள் கூறவில்லை. ஒரு ஹதீஸிலிருந்து தானாக விளங்கியும் இவ்வாறு கூற முடியும். சரியாகவும், தவறாகவும் கூறியிருக்க வாய்ப்பு இருக்கும் போது இதைக் கொண்டு வந்து நிறுத்தி, ஒருவரைக் கொல்வது சம்பந்தமான விஷயத்தை நிறுவக் கூடாது. எனவே முஆத் (ரலி) அவர்கள், இது அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) தீர்ப்பு என்று எந்த ஆதாரத்தை வைத்துச் சொன்னார்களோ அந்த ஆதாரம் நமக்குக் காண்பிக்கப்பட்ட பிறகு தான் இது உண்மையில் அல்லாஹ்வுடைய தீர்ப்பா? இல்லையா? என்று முடிவு செய்ய முடியும். ஒரு பிரச்சனைக்குச் சரியான முடிவைக் காண்பதாக இருந்தால் அது தொடர்பாக வரும் அனைத்து ஆதாரங்களையும் ஒன்று சேர்த்துத் தான் முடிவைக் காண வேண்டும். மதம் மாறியவர்களாக இருந்தாலும் அவர்கள் இஸ்லாமிய விரோதிகளாக மாறும் போது தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதைப் பல ஹதீஸ்களின் மூலம் முன்பே நிரூபித்தோம். எதிர் தரப்பினர் எடுத்துக் காட்டிய ஹதீஸில் யூதன் மதம் மாறி இஸ்லாத்திற்கு எதிராகச் சென்றவன் என்றோ அல்லது எதிரி அல்ல என்றோ இடம் பெறவில்லை. பொதுவாக மதம் மாறியவன் என்று தான் வருகிறது. இஸ்லாமிய விரோதியாக மாறியவனைத் தான் கொல்ல வேண்டும் என்று பல ஹதீஸ்கள் கூறுவதால் இந்த யூதன் இஸ்லாத்திற்கு விரோதமாகச் சென்றதால் முஆத் (ரலி) அவர்கள் கொல்லும் படி கூறினார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும். இது தான் ஹதீஸையும், நபித்தோழர்களின் செயலையும் இணைத்து விளங்கியதாக அமையும். நடைமுறை சிக்கல்கள்

இச்சட்டம் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பதுடன் பல நடைமுறைச் சிக்கல்களையும் தோற்றுவிக்கிறது. 1. மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று நாம் கூறினால் இஸ்லாத்திற்கு வந்தவன் இஸ்லாத்தைப் பற்றிச் சிந்திக்கப் பயப்படுவான். அவனுக்கு ஏற்படும் சந்தேகங்களை வெளிக்கொணர அஞ்சுவான். ஆனால் இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறினால் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் கூறி விளங்கிக் கொள்ள முயற்சிப்பான். அவன் மேலும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கு இம்முறை உதவும். இல்லையென்றால் இந்தச் சந்தேகங்கள் அவனுக்கு மிகைத்து இறுதியில் மதம் மாறுகின்ற நிலைக்குத் தள்ளப்படுவான். 2. அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் உண்மையானதென்றும், தெளிவானதென்றும், எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதிலைத் தரக் கூடியதென்றும் நாம் நம்பும் போது ஏன் இப்படி ஒரு சட்டத்தை இயற்றி நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்?

3. மாற்று மதத்திற்கு மாறியவனைக் கொலை செய்வது மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல் மதவெறியைத் தான் உருவாக்கும். முஸ்லிம்களுடன் பழக்கம் வைப்பதை மக்கள் விட்டுவிட்டு இஸ்லாத்தின் எதிரிகளோடு இணைந்து கொள்வார்கள்.

4. இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறினால் தான் இஸ்லாத்தை விளங்காத மக்கள் கூட விளங்கிக் கொள்வதற்காக இஸ்லாத்தில் இணைந்து கொள்வார்கள். இதன் மூலம் அவர்கள் உண்மையான முஸ்லிமாவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். மதம் மாறியவரைக் கொலை செய்வோம் என்றால் விளங்க நினைப்பவர்கள் கூட பயந்து கொண்டு இதில் இணைய மறுத்து விடுவார்கள். 5. இதை இஸ்லாமியச் சட்டம் என்றால் உலக மக்களிடையே இஸ்லாம் கொடூரமான மார்க்கம் என்ற தவறான கொள்கை எளிதாகப் பரவி விடும். இன்னும் இஸ்லாம் தவறான கொள்கையுள்ள மார்க்கம் என்பதால் தான் சவாலை எதிர் கொள்ளாமல் நிர்ப்பந்தப்படுத்துகிறது என்ற எண்ணமும் அவர்களுடைய மனதில் எழும்.

6. இஸ்லாம் ஒளிவு மறைவு இல்லாத மார்க்கம் என்பதால் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறுபவர்கள் மேடை அமைத்து இச்சட்டத்தைப் பகிரங்கப்படுத்துவார்களா? பகிரங்கப்படுத்த முடியாத ஒரு சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குச் சொல்வார்களா?

7. இஸ்லாத்தை விரும்பாதவர்களை இஸ்லாமிய சமுதாயத்தில் நிர்பந்தப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தால் அவன் இச்சமுதாயத்திற்குத் தீங்கு செய்ய நினைப்பானே தவிர நன்மை செய்ய நாட மாட்டான். 8. இஸ்லாத்தை விட்டு யாரும் வெளியேறக் கூடாது. அப்படி வெளியேறினால் கொல்லப்படுவார்கள் என்று ஒரு புறம் நாம் கூறிக் கொண்டு, இன்னொரு புறம் மாற்று மதத்தினரை நோக்கி, உங்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு எங்கள் மார்க்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் என்று கூறுவது நம்மை மத வெறி பிடித்தவர்களாக மக்கள் மன்றத்தில் காட்டும். இது நம்முடைய அழைப்புப் பணிக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமையும்.


9. இஸ்லாம் அழகிய மார்க்கம் என்று நாம் அனைவரும் ஒத்துக் கொண்டுள்ளோம். மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது என்றால் இச்சட்டம் அறிவுப்பூர்வமானது, அழகானது என்பதை நிரூபிக்கும் கடமை இச்சட்டத்தைக் கூறுபவர்களுக்கு உண்டு. இவர்கள் இந்தச் சட்டத்தை அழகானது அறிவுப்பூர்வமானது என்று எப்படி நிரூபிப்பார்கள்?

EGATHUVAM MAY 2009