நிர்வாகவியல் தொடர்: 3
இஸ்லாமிய நிர்வாகம்
-ஹாமீன் இப்ராஹீம்
அன்றாட நடவடிக்கைகளின் ஒழுங்கும்
சிலரை பார்த்தால் அவர்கள் குடியிருக்கும் வீடு அழுக்கடைந்து
போய், எந்தப் பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது. ஒரு பொருளை
வைத்தால் தேவைக்குக் கிடைக்காது. கண்ட இடமெல்லாம் பொருட்கள். ஒரு நாளைக்கு மேசை மேல்
இருக்கும்;
ஒரு நாளைக்கு அலமாரியில் இருக்கும்.
காலையில் ஒரு நாள் 7 மணிக்கு எழுவார்.
ஒரு நாள் 5 மணிக்கு! ஒரு நாள் 6 மணிக்கு!
உறங்கச் செல்வதும் இப்படித் தான்.
இப்படித் தனது தினசரி நடவடிக்கைகளையே ஒழுங்குற நிர்வகிக்கத்
தெரியாமல் எவ்வளவு நேர விரையம்? பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?
நமது செயல்பாடுகளை ஒழுங்குற அமைத்துக் கொள்ள வேண்டும். எழும்
நேரம், உறங்கும் நேரம், உணவு உண்ணும்
நேரம், வீடு சுத்தம், உடை சுத்தம், தினசரி தொடர்ச்சியாகச் செய்யும் செயல்கள், வாராந்திரச் செயல்கள், மாதாந்திரச்
செயல்கள் என ஒரு தெளிவான திட்டமிடுதல் வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இதில் நமக்குப் பெரிய முன்மாதிரியாவார்கள்.
அவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் குறிப்பிட்ட நேரத்தில் அமைந்தன.
தொழுகை என்ற வணக்கம் நமக்குக் கற்றுத் தரும் பாடங்களில் இவை
முக்கியமானவை.
தொழுகை நம்பிக்கை கொண்டவர்கள் மீது நேரம் குறிப்பிட்ட கடமை
ஆதமின் மக்களே! பள்ளிக்கு வரும் போது உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்
என அன்றாட வாழ்வில் நேர ஒழுங்குகளைப் பேணி நடக்க, ஆடைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள, தலைமுடி தாடி போன்றவற்றை ஒழுங்குறப் பராமரிக்க என தினசரி வாழ்வின்
அத்தனை செயல்களையும் முறைப்படுத்தும் பயிற்சியாகவும் தொழுகை அமைந்துள்ளது.
உணர்ச்சி
மக்களின் உணர்ச்சிகளை சரியான முறையில் ஒரு தலைவர், நிர்வாகி தெரிந்திருக்க வேண்டும்.
இன்றைய காலங்களில் மக்களின் உணர்ச்சிகள் தவறாகத் தூண்டப்பட்டு, தவறாக வழிநடத்தப்படுவதைப் பார்க்கிறோம். அது இஸம் சார்ந்த உணர்ச்சியாகவோ, தனிமனித வெறியாகவோ இருக்கலாம். மறுபுறம் உணர்ச்சி வசப்படாதீர்கள்
என சிலர் கூறுவது முழுமையாக ஏற்கக் கூடியதுமில்லை. இஸ்லாம் இதில் நடு நிலையைப் போதிக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிக்க அனுப்பிய தோழர், தாம் வசூலித்து வந்த பொருளில், இது எனக்கு, இது ஜகாத்திற்கு
எனக் கூறியபோது நபியவர்களின் முகம் சிவந்தது. மக்களை அழைத்து செய்தியைக் கூறினார்கள்.
(பார்க்க: புகாரி 7174, 6979)
இது தனி நபரைக் கேவலப்படுத்த அல்ல. லஞ்சம் என்ற ஒரு சமூகத் தீமைக்கு
இது வழிவகுத்து விடக்கூடாது என்ற தொலை நோக்கில் அவ்வாறு செய்தார்கள்.
ஆனால் போர் படையில் புகுந்து நம்பிக்கையாளர்களை மக்கா, மதீனா என்ற அடிப்படையில் பிரிக்க அப்துல்லாஹ் பின் சலூல் என்ற
நயவஞ்சகன் முயன்ற போது, இவனுக்குத் தண்டனை கொடுத்து
விடலாம் என உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் கூறிய போது தடுத்தார்கள். (பார்க்க: புகாரி
3518)
போர் வெற்றிப் பொருட்களைப் பிரிப்பதில் தங்களுக்குப் பாதகம்
ஏற்பட்டு விட்டது என மதீனத்து அன்சாரித் தோழர்கள் கூறிய போது, மக்கள் எல்லாம் வெற்றிப் பொருட்களுடன் போகும் போது நீங்கள் அல்லாஹ்வின்
தூதருடன் செல்ல பிரியப்பட மாட்டீர்களா? என கண்ணீர்
மல்க, உணர்ச்சிப் பெருக்குடன் கேட்டார்கள். (பார்க்க: புகாரி 3147, 4330, 4331)
அதனால் தேவையான நேரத்தில், தேவையான
அளவு சரியான முறையில் உணர்ச்சிப்பூர்வமாக நடந்து கொள்வதால் உணர்ச்சிகள் சரியான முறையில்
கையாளப்படும். அது நன்மைகளையும் ஏற்படுத்தும்.
உறுதி
நன்மைகளை ஏவி, தீமைகளைத்
தடுக்கும் பணி இஸ்லாமியப் பணிகளில் எல்லாக் காலங்களிலும் பின்பற்றியாக வேண்டிய ஒன்று!
நன்மையை ஏவும் பணியை மட்டும் செய்தால் மிகச் சுலபம். சிலர் நன்மையை
செய்துவிட்டால் தீமை தானாகப் போய்விடும் என்று வாதிடுகின்றர்கள்.
இதற்குக் காரணம், தீமையைத் தடுத்தால்
ஏற்படும் சமூக மாற்றங்கள், எதிர்ப்புகள், நாம் கொலை செய்யப்படலாம் என்றளவுக்குப் பரவிக்கிடக்கும் தீமையைக்
கண்டு ஒரு வகை பயம்.
நன்மையைச் செய்து விடுவதால் தீமை ஒரு போதும் அகலாது. இது, நாற்றமெடுத்த ஒரு அறையில் நறுமணப் பொருட்களை வைப்பது போன்றதாகும்.
நறுமணம் போன பிறகு மீண்டும் நாற்றமடிக்கும். எனவே நாற்றத்திற்கான காரணத்தைக் கண்டுபிடித்து
அகற்றுவது,
பின் நறுமணம் அடிப்பது தான் சரியான முறையாகும்.
நபி (ஸல்) அவர்கள் இஸ்ரா வல் மிஃராஜ் பயணம் போய் வந்த போது, குறைஷிகளிடம் இதைச் சொன்னால் அவர்கள் பொய்ப்பிப்பார்கள் என்பது
மட்டுமல்ல;
இதுவரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் பலரும் திரும்பி விடுவார்கள்
என்பது தெரிந்தும் செய்தியைப் போட்டுடைத்த உறுதி தான் இஸ்லாமிய நிர்வாகியின் உறுதி.
பொறுமை
பல நேரங்களில் தவறாக அர்த்தம் செய்யப்படும், எல்லோருக்கும் இருக்க வேண்டிய ஒரு நல்ல குணம். சில நிர்வாகிகள்
பொறுப்பை ஏற்றுக் கொண்டதோடு இருக்கும் இடம் தெரியாது. கேட்டால், பொறுமையாக எல்லாம் நடக்கும் என்பார்கள். முடங்கிக் கிடப்பதற்கு
மறுபெயர் பொறுமை எனத் தவறாக விளங்கியுள்ளார்கள்.
பொறுமை என்பது ஒரு காரியத்தைச் செய்து விட்டு, அதற்கான விளைவுக்கு அவசரப்படாதிருப்பதாகும். நாம் செய்யும் காரியங்களால்
ஏற்படும் எதிர்ப்புகளைப் பொறுத்துக் கொள்வதாகும்.
உதாரணமாக, ஒரு மாநாட்டை நடத்தினால் அதனால்
எவ்வளவு மக்களை வென்றெடுத்துள்ளோம்; வேறு என்னென்ன
நன்மைகள் விளைந்துள்ளன என பார்ப்பது அவசியம். ஆனால் நடத்தி முடித்த மறு நாளே, அது அப்படி நடக்கவில்லை; இது இப்படி
நடக்கவில்லை என அதில் நடந்த குறைகளை பெரிதுபடுத்திப் பேசி, நன்மைகளை இருட்டடிப்புச் செய்வது பொறுமையாகாது.
ஒரு கிராமத்தில் அழைப்பு பணியை, சீர்திருத்தப் பணியை மேற்கொள்வோர் மக்களின் எதிர்ப்புகளைப் பார்க்கும்
போது, அந்த மக்கள் விளங்காமல் செய்வது போலவே பதிலுக்கு நாமும் செய்ய
வேண்டும் என்று நினைப்பது பொறுமையான செயல் அல்ல!
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரத்தைத் தொடங்கி 13 ஆண்டுகள் பட்ட கஷ்டங்கள், கல்லெறி
முதல் கொலை முயற்சி வரை! அவர்கள் அத்தனைக்கும் பொறுமை! பொறுமை! பொறுமையை மட்டுமே பதிலாகத்
தந்தார்கள்.
வீரம்
தைரியம் இல்லாத மனிதர்கள் நிர்வாகப் பொறுப்புகளுக்கு வருவது
மிகவும் ஆபத்தானது.
எதிரிகளின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்தியதாலேயே எனக்கு வெற்றி
கிடைத்தது என நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி)
நாம் பயந்தால் நமது எதிரிகளுக்கு வெற்றியை நாமே கொடுத்து விடுவோம்.
உண்மையை, சத்தியத்தைப் பேசும் போது, எடுத்துரைக்கும்
போது நாள்பட்ட புண்களுக்கு மருந்து போடுவது போல் வலிக்கும். ஆனால் மருந்து போடாவிட்டால்
புண் பெரிதாகும்.
எதிர்ப்புகள், விமர்சனங்கள், தாக்குதல்கள் ஆகியவற்றைக் கண்டு பயந்து நமது பணிகளை அத்துடன்
நிறுத்தி விட்டு, ஊரோடு ஒத்துப் போவோம் என கோழைத்தனத்திற்கு
புதிய வியாக்கியானம் பேசக்கூடாது.
எதிர்ப்புகள், அச்சுறுத்தல்கள்
பாதிக்காமல் அடுத்த கட்டங்களை யோசித்து முடிவு செய்து நடைமுறைப்படுத்திக் கொண்டே இருக்க
வேண்டும். வீரம் என்பது விளையும் விதை!
உண்மை எதுவென்றால் எல்லா நேரங்களிலும் நமக்கு அல்லாஹ்வின் உதவி
உள்ளது; அவன் நம்மோடு இருக்கின்றான் என்ற நம்பிக்கை வேண்டும்.
எங்கள் இறைவா! அவன் (ஃபிர்அவ்ன்) எங்களுக்குத் தீங்கிழைப்பான்; அல்லது அவன் எங்கள் மீது வரம்பு மீறுவான்; என அஞ்சுகிறோம் என்று (மூஸா, ஹாரூன்
ஆகிய) இருவரும் கூறினர். அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும்
உங்களுடன் இருக்கிறேன் என்று அவன் கூறினான்.
அல்குர்ஆன் 20:45, 46
விவேகம்
உறுதி, வீரம், பொறுமை போன்ற அத்தனை ஆற்றல்களும் முட்டாள் என்ற பெயரை வாங்கித்
தந்து விடாமல் இருப்பதற்கு விவேகம் மிகவும் முக்கியம். எதை முதலில் செய்ய வேண்டும்? எதை எங்கு செய்ய வேண்டும்? எப்போது
பொங்கி எழ வேண்டும்? எப்போது பின் வாங்க வேண்டும்? என சூழ்நிலை, நேரத்தைப்
பொறுத்துச் செய்யப்படும் முடிவு தான் விவேகம்.
நபி (ஸல்) அவர்கள் ஹுதைபியாவில் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள்.
அவர்கள் மக்கத்துக் காபிர்களுக்குப் பணிந்து போய்விட்டார்கள் என நபித்தோழர்கள் எல்லாம்
எண்ணினார்கள். ஆனால் அவர்களின் தூர நோக்குப் பார்வையை அல்லாஹ், மகத்தான வெற்றி என்று பாராட்டுகின்றான்.
(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக
அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.
அல்குர்ஆன் 48:1-3
புதுமைகளைப் பயன்படுத்துதல்
இன்றைய அறிவியல் வளர்ச்சி எல்லா துறைகளிலும் நாள்தோறும் பல மாற்றங்களைப்
புதுமைகளைக் கண்டு வருகின்றது அவற்றை முறையாகக் கற்று, பயன்படுத்தாவிட்டால் நாம் பின்தங்கி விடுவோம். நமது வளர்ச்சி, எந்தத் துறையிலும் எங்கும் நின்று விடக்கூடாது.
இஸ்லாம், வணக்க வழிபாடுகளில் புதுமைகள்
புகுவதை இரும்புக் கரம் கொண்டு தடுக்கும். ஆனால் வாழ்க்கை வசதிகளில் புதுமைகளை உடனே
ஏற்றுக் கொள்ள ஒரு மார்க்கம் வழிகாட்டுகின்றது என்றால் அது இஸ்லாம் மட்டுமே!
நடத்தைகள், நிர்வாகவியல், சமூகவியல், அரசியல், அறிவியல், கணிணி, இணைய தளங்கள், தொடர்பு முறைகள்
போன்றவற்றைத் தெரிந்து கொள்வதோடு அவற்றின் சமீபத்திய வளர்ச்சிகளை உடனே கற்றுக் கொள்ள
வேண்டும். இது தொடர வேண்டும்.
அதே சமயம் இதில் வீண் விரயம், பகட்டு
ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM MAY 2009