Apr 12, 2017

ஷாஹே மீரான் சஞ்சலம் தீர்ப்பாரா?

ஷாஹே மீரான் சஞ்சலம் தீர்ப்பாரா?

ஷாஹே மீரான் சஞ்சலம் தீர்க்கும் எங்கள் கஞ்ச சவாயி நாகூரார்!

நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்ஹாவிலே!

இவை நாகூர் ஹனீபாவின் பாடல் வரிகள். இல்லை! இல்லை! கொழுந்து விட்டெரியும் கொடிய நரகின் நெருப்புப் பொறிகள்.

சாதாரணப் பாடல் வரிகளை நமது வாய்கள் நம்மை அறியாமல் முணுமுணுக்கும். அதனால் நாம் பாவிகளாகி விட மாட்டோம். ஆனால் இந்தப் பாடல் வரிகளை ஒரு முஸ்லிமின் வாய் முணுமுணுத்து விட்டால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியே போய் விடுவான். மீண்டும் ஏகத்துவக் கலிமாவைச் சொல்லி அவன் இஸ்லாத்தை ஏற்க வேண்டும். அந்த அளவுக்குப் பாவமான பாடல் வரிகள். காரணம், இது இஸ்லாத்தின் கடவுள் கொள்கையைத் தகர்த்தெறிந்து விடுகின்றது.

அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர் வழி காட்டுகிறான். அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்) பருகச் செய்கிறான். நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான்.

அல்குர்ஆன் 26:78-81

எல்லாம் வல்ல அல்லாஹ் தான் நோயை நீக்குபவன் என்று திருக்குர்ஆன் கூறியிருக்கையில், நாகூர் ஷாகுல் ஹமீதுக்கு அந்த ஆற்றல் இருப்பதாகக் கூறி அவரைக் கடவுளாக்கிக் கவிதை பாடுகின்றார். இத்துடன் மட்டும் அவர் நிற்காமல் இன்னும் ஒரு படி தாண்டி, நமனை, அதாவது எமனைக் கூட இவர் விரட்டி விடுவாராம். பாருங்கள்! பாடலாசிரியரின் இந்தப் பைத்தியக்காரத்தனத்தை!

உயிர் கொடுப்பதும், உயிரைப் பறிப்பதும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது என்று இப்ராஹீம் (அலை) கூறுகின்றார்கள். ஆனால் பாழாய் போன பாடலாசிரியர் இந்த ஆற்றல் ஷாகுல் ஹமீதுக்கு இருக்கின்றது என்று பிதற்றுகின்றார்.

ஷாகுல் ஹமீதைக் கடவுளாக்கும் கவிதை வரிகளைக் கண்டு எந்த ஓர் ஆலிமும் குரல் எழுப்ப வரவில்லை. கண்டனம் தெரிவிக்கவில்லை. தெரிவிக்கவும் மாட்டார்கள். காரணம், ஏழாண்டு படித்த இந்த ஆலிம்களும் ஷாகுல் ஹமீதைக் கடவுளாகத் தான் கொண்டிருக்கிறார்கள்.

நமனிடம் மாட்டிய நாகூர் மீரான்

முஹ்யித்தீனைப் புகழ்கின்ற ஒவ்வொரு மவ்லிதுக் கிதாபிலும் யாகுத்பா, யாஸய்யிதீ வஷைஹீ என்ற பாடல்கள் இடம்பெறுகின்றன.

சுப்ஹான மவ்லிது ஓதினாலும் முஹ்யித்தீன் மவ்லிது ஓதினாலும் இந்தப் பாடல்களைப் பாடாமல் விட மாட்டார்கள். அப்படி ஓர் அதி முக்கியத்துவத்தை இந்தப் பாடல்கள் பெற்றிருக்கின்றன. அதிலும் குறிப்பாக சில வரிகள் மிக மிக முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வரிகளை மூன்று தடவை பாடுவார்கள்.

அதி முக்கியத்துவம் வாய்ந்த பாடல் வரிகள் இவை தான்.

நாகூராரே! நன்மைகளின் சங்கமமே! செவிப்புலனிலும் சீரிய உறுப்புகளிலும் அழகிய பார்வையிலும் குறைந்த ஆயுளில்லாமல் நீடித்த ஆயுளைப் பெறுவதிலும் எனக்கு உதவிடுங்கள்.

காதர் மீரானை இந்த ஆலிம்களே கடவுளாக்கிப் பாடும் போது அந்தத் தமிழ் பாடலின் ஆசிரியரை மட்டும் எப்படிக் குறை காண முடியும்?

அரபியிலும் தமிழிலும் போட்டி போட்டுக் கொண்டு இந்த அறிவிலிக் கவிஞர்கள் காதர் மீறானைக் கடவுளாக்கி மகிழ்கின்றார்கள்.

காதர் மீறானைக் கடவுளாக்குவதில் இருவரும் சம நிலையில் தான் இருக்கின்றார்கள். ஒரேயொரு வித்தியாசம்! ஹனீபா பாடும் கவிதை தமிழில் இருக்கிறது. ஆலிம்கள் பாடும் கவிதை அரபியில் இருக்கிறது. ஹனீபா பாட்டை சாதாரண பாடலாக நினைத்துக் கேட்பார்கள். மவ்லிது அரபியில் இருப்பதால் அதைப் புனிதமாகக் கருதி ஆலிம்களை வைத்துப் பாடுவார்கள்.

இதில் வேடிக்கை என்னவெனில், நமனை விரட்ட மருந்தொன்று இருக்கிறது என்று இவர்களால் பாராட்டப்படுகின்ற நாகூர் மீறான் நமனின் பிடியில், அதாவது மலக்குல் மவ்த்தின் பிடியில் சிக்கி மரணத்தைத் தழுவியவர்.

நாகூர் மீறான், தன்னுடைய உயிரைக் கைப்பற்ற வந்த மலக்குல் மவ்த்தை ஓட ஓட விரட்டியடித்து, சாகாவரம் பெற்ற சாஸ்தவமாய் இதுவரை வாழ்ந்து கொண்டிருந்தால் இப்படிப் பாடுவதில் ஓர் அர்த்தமிருக்கும்.

ஆனால் அவரே மலக்குல் மவ்த்தின் பிடியில் மாட்டி மரணித்து விட்டார். அவரிடம் என்ன மருந்து இருக்கும்? என்று இந்த அறிவிலிக் கவிஞர்களும் அதைப் பாடிக் காசு பணம் சம்பாதிக்கும் ஆலிம்களும் சிந்திக்கவில்லை. இது உண்மையில் வேடிக்கையும் வினோதமும் ஆகும்.

பிணத்திடம் ஒரு பிரார்த்தனை

அத்துடன் இன்னொரு வேடிக்கை வினோதத்தைப் பார்ப்போம்.

ஒருவர் இறந்து விட்டால் அவருடைய உறுப்புகள் அத்தனையும் உடனே செயலிழந்து விடுகின்றன. கண்கள் மட்டும் ஆறு மணி நேரங்கள் கழித்து செயலிழக்கின்றன. இறந்து விட்ட ஷாகுல் ஹமீதுக்கும் இதே நிலை தான்.

ஷாகுல் ஹமீது இறந்து ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன.

அவரது கண்களுக்குப் பார்வையில்லை. அவரது காதுகளுக்குச் செவியுறும் ஆற்றல் இல்லை. கை, கால்கள் போன்ற உறுப்புகளுக்கு அசையக் கூடிய ஆற்றல் இல்லை. இதைக் கீழ்க்காணும் வசனத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

(எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்! என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:193-194

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர்.

அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:20, 21

இந்த வசனங்களின் அடிப்படையிலும், அறிவியல் அடிப்படையிலும் ஷாகுல் ஹமீது மரணித்தவர். அவருக்குப் பார்க்கின்ற கண்கள் இல்லை. கேட்கின்ற காதுகள் இல்லை. பிடிக்கின்ற கைகள் இல்லை. நடக்கின்ற கால்கள் இல்லை. அவர் ஒரு மய்யித்! ஆம்! இறந்த ஒரு சடலம்! செத்த பிணம்!

அவரிடம் போய், கண் பார்வையைத் தா, செவிப்புலனைத் தா, உறுப்புகளுக்கு ஆற்றலைத் தா என்று இவர்கள் கேட்கிறார்கள் என்றால் இவர்களை நாம் என்னவென்பது?

அற்புதப் படைப்புகள்

ஒரு மனிதன் உயிருடன் இருக்கின்றானா? இல்லையா? என்பதை அறிவதற்கு அடையாளமாகவும், ஆதாரமாகவும் அமைந்திருப்பதே கண் பார்வையும் செவிப்புலனும் தான். பார்வைப் புலனும், செவிப் புலனும் படைப்பாளன் அல்லாஹ்வின் படைப்பாற்றலைப் பறைசாற்றி நிற்கின்ற அற்புத அரிய படைப்புகள். அதனால் தான் அல்லாஹ் இப்படியொரு சவாலை விடுக்கின்றான்.

உங்கள் செவிப் புலனையும், பார்வைகளையும் அல்லாஹ் நீக்கி விட்டு, உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால் அதைக் கொண்டு வருகின்ற அல்லாஹ் அல்லாத (வேறு) கடவுள் யாரேனும் உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! எனக் கேட்பீராக! சான்றுகளை எவ்வாறு விளக்குகிறோம் என்பதையும், பின்னர் அவர்கள் எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக!

அல்குர்ஆன் 6:46

இந்த அறிவிலிக் கவிஞர்களோ அல்லாஹ்வின் சவாலை ஷாகுல் ஹமீது எதிர் கொள்வார் என்று கூறுகின்றனர். செவிப்புலனையும் பார்வைப்புலனையும் அல்லாஹ் நீக்கி விட்டால் அதைத் தருகின்ற ஆற்றல் ஷாகுல் ஹமீதுக்கு இருப்பதாகக் கூறுகின்றனர். அந்தோ பரிதாபம்! அவரோ கரையானுக்கு இரையாகி, மண்ணோடு மண்ணாகி விட்டார். அவருடைய உயிர், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது.

நாளை மறுமையில் அவர் எழுப்பப்பட்டு இறைவன் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார். இதைத் தான் அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகின்றான்.

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

அல்குர்ஆன் 35:14

நாளை மறுமையில் ஷாகுல் ஹமீது உண்மையில் ஓர் இறைநேசராக இருந்து, மக்கள் அவரை உதவிக்கு அழைத்து வணங்கியிருந்தால் அவர் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்படுவார். கூடெடுத்து, கொடியேற்றி, மவ்லிது ஓதி பக்தியை வெளிப்படுத்திய அவ்லியா பக்தர்களும் இறைவன் முன்னிலையில் நிறுத்தப்படுவர்.

அப்போது ஷாகுல் ஹமீது, தனது பக்தர்கள் தன்னை வணங்கியதை மறுத்து விடுவார். அழைத்தவர்கள் அம்போவென்று நரகத்தில் தூக்கி வீசியெறியப்படுவார்கள். ஷாகுல் ஹமீது நல்லவராக இருந்தால் அவர் சுவனம் செல்வார். தீயவராக இருந்தால் அவரும் அவர்களுடன் சேர்ந்து நரகம் போவார்.

இப்படிப்பட்ட அடியார்களை அழைத்துப் பிரார்த்தித்து, நரகத்தில் மாட்டிக் கொள்ளலாமா?

தரையில் ஓடும் கப்பல்கள் தவத்தில் வாடும் பீர்கள்

சந்திரனுக்குப் போக முடியுமா? சாத்தியமா? என்று மனிதனின் சிந்தனை தான் அன்று இறக்கை கட்டிப் பறந்தது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் மனிதன் சந்திரனுக்கு இறக்கை கட்டிப் பறந்தே விட்டான். அங்கு போய் கொடியும் நாட்டி விட்டான். அவனுடைய அடுத்தக் கனவு செவ்வாய் கிரகம்.

இப்போது இருபத்தோறாம் நூற்றாண்டில் செவ்வாய்க்கு இயந்திர மனிதனை முன்னோட்டமாக அனுப்பி வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறான். செவ்வாயில் தன் செவ்வாய்க்குத் தண்ணீர் கிடைக்காதா? என்று அங்கு தண்ணீரைக் கண்டறிய தணியாத தாகத்தில் இருக்கிறான்.

அறிவியல் கொளுத்தி விட்ட புரட்சி வெளிச்சத்தில் சந்திரனில் கொடியேற்றி, செவ்வாய்க்கு இயந்திரக் கூடு அனுப்பி சாதனை படைத்துக் கொண்டிருக்கின்ற மனிதர்கள் வாழ்கின்ற இந்த நவீன உலகத்தில், சமாதியை நோக்கி சந்தனக் கூடு எடுத்து, சன்னிதான சன்னதியில் கொடி ஏற்றி இருட்டில் தட்டழிந்து கொண்டிருக்கின்ற மனிதர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அதற்கு நாகூர் கந்தூரியை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

கடலில் கப்பல் ஓடக் கண்டிருக்கிறோம். ஆனால் கரையில், கட்டாந்தரையில் கப்பல் ஓடக் கண்டிருக்கிறோமா? நிச்சயமாக இல்லை. ஆனால் தரையில், தார் போட்ட சாலையில் கப்பல் ஓடுகின்றது. நாகப்பட்டிணத்திலிருந்து புறப்பட்டு நாகூர் வரை ஓடுகின்றது.

தண்ணீரில் கப்பல் நீரைக் கிழித்துக் கொண்டு சீறிப் பாய்ந்து செல்லலாம். ஆனால் தரையில் அப்படிச் செல்ல முடியாதல்லவா?

அதனால் நாகையில் இஷாவுக்குப் பிறகு அந்தக் கப்பல் புறப்பட்டு, போதை ஏறியவனைப் போன்று தள்ளாடித் தள்ளாடி சுப்ஹ் நேரத்தில் நாகூர் வந்து சேர்கின்றது.

மனிதர்களைத் தூக்கி வருவதற்குப் பெயர் தான் கப்பல்! ஆனால் இந்தக் கப்பலை மனிதர்கள் - மண்டையில் சரக்கில்லாத மாலுமிகள் - தார்ச்சாலையில் தாங்கிப் பிடித்து இழுத்து வருகின்றார்கள்.

ஊர் கூடித் தேர் இழுத்தல்

கோயில் திருவிழாக்களின் போது இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் ஊர் கூடித் தேர் இழுப்பார்கள். அவர்கள் கூட தரையில் ஓடக் கூடியதைத் தான் தரையில் இழுத்துச் செல்கின்றனர். ஆனால் இந்த அவ்லியா பக்தர்களோ கடலில் ஓடும் கப்பலை அல்லவா தரையில் ஓட்டுகிறார்கள்?

இங்கே தரையில் இவ்வாறு கப்பல் ஓடுகின்றது என்றால் தர்ஹாவில் கந்தூரி நாட்களின் போது அங்குள்ள தர்மகர்த்தா ஒருவர் பீர் என்ற பெயரில் ஒரு தவம் இருப்பார். பீர் இருக்கும் அவ்வேளையில் மூன்று நாட்கள் நோன்பும் நோற்கிறார்கள். இந்த மூன்று நாட்களும் மிளகு மூட்டையில் உட்கார்ந்து இருப்பார்களாம். தர்ஹாவில் தவக்கோலம் பூண்டிருக்கும் அவரிடம் வந்து ஆண்களும் பெண்களும் ஈக்களாய் மொய்ப்பார்கள்.

அவருக்குக் கராமத் விளங்குகிறது; காரணம் துலங்குகிறது என்ற நம்பிக்கையில் இந்த ஆச்சாரியாரிடம் ஆசி பெற மக்கள் முண்டியடித்துக் கொண்டு அவர் முன்னால் வந்து கூடுவார்கள். பத்து நாட்கள் பீர் இருந்த அவர் கடற்கரையை நோக்கி ஓடுகின்றார். அப்போது அங்கு தோண்டப்பட்ட குழியில் அற்புதமாக நீர் பொங்குகின்றது என்றெல்லாம் காதில் பூச்சுற்றுகின்றார்கள். குழந்தையில்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற படுமோசமான நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது.

இவ்வாறு பீர் சாஹிபாக இருந்த அவருக்கு ஒரு தெய்வீகத் தன்மை ஊட்டப்படுகின்றது. அதனால் தேரோட்டம் போன்று நாகூரில் பீரோட்டம் ஒன்று நடைபெறுகின்றது. இதற்காகவும் ஒரு கூட்டம் அலை போன்று கரையில் அலை மோதும்.

ஏனிந்த கூட்டம் இப்படி அலைமோதுகின்றது? எதற்காக இப்படி ஒரு கூட்டம் அணி திரள்கின்றது?

இதுவெல்லாம் தங்களுக்கு நன்மையைத் தரும் என்ற நம்பிக்கையில் தான். ஆனால் இது நன்மையைப் பெற்றுத் தருமா?

யாருக்கு அவனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாகக் கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? அல்லாஹ், தான் நாடியோரை வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 35:8


இவர்கள் ஷைத்தானின் மாய, தீய வலையில் சிக்கியவர்கள். இவர்களுக்காக நீங்கள் கவலைப்படக்கூடாது என்று அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்குக் கூறுகின்றான் என்றால் இவர்கள் எவ்வளவு பெரிய நஷ்டவாளிகள் எனத் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தீய திருவிழா கந்தூரி கூட்டத்திலிருந்து அலலாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!

EGATHUVAM MAY 2009