நாகூர் கந்தூரி நாசமாகும் அமல்கள்
தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு
நினைவு வைத்திருப்பர். ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள் தெரியாது. இதற்குக்
காரணம் அவர்கள் அந்தந்த மாதத்தில் நடக்கும் அவ்லியாக்களின் கந்தூரிகளை வைத்து மாதத்தைக்
கணக்கிடுவது தான்.
ரசூலுல்லாஹ் மவ்லிது (ரபிய்யுல் அவ்வல்), முஹ்யித்தீன் மவ்லிது (ரபிய்யுல் ஆகிர்), பஷீரப்பா கந்தூரி (ஜமாதில் அவ்வல்), ஷாகுல் ஹமீது மவ்லிது (ஜமாதில் ஆகிர்), காஜா நாயகம் மவ்லிது (ரஜப் மாதம்) என அவ்லியாக்களின் பெயரிலேயே
மாதப் பிறையைக் கணக்கு வைத்திருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு அவ்லியாக்களின் கந்தூரிகள் அவர்களை ஆக்கிரமித்து
நிற்கின்றன.
ஜமாதில் ஆகிர் மாதம் பிறக்கவிருக்கின்றது. பெண்கள் கணக்குப்படி
ஷாகுல் ஹமீது மவ்லிதுப் பிறை, நாகூர் கந்தூரிப் பிறை பிறக்கவிருக்கின்றது.
பிறை 1 முதல் 14 நாட்கள் நடக்கும் இந்தக் கந்தூரி நாகூரில் படு விமரிசையாக நடைபெறும்.
நாகூர் செல்ல முடியாதவர்களுக்காக ஷாகுல் ஹமீது தர்காவின் கிளைகளும்
சில ஊர்களில் உண்டு. அந்தக் கிளைகளில் அவர்கள் கந்தூரிகளைக் கொண்டாடி தங்கள் பக்திகளை
வெளிப்படுத்திக் கொள்வார்கள்.
இக்கந்தூரியில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி
இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற
நாடுகளிலிருந்தும் கூட பக்தர்கள் வந்து நாகூர் சன்னதியில் குழுமுவார்கள்.
இப்படி இவர்கள் வந்து நாகூரில் குழுமுவதன், கூடுவதன் நோக்கம் என்ன? இவையெல்லாம்
அவ்லியாக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுத் தரும். இவை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும்
காரியங்கள் இது தான் இவர்களது எண்ணம். அதற்காகத் தான் இத்தனை பெரிய பயணம், செலவுகள், 14 நாட்களுக்கு மேற்கொள்ளும் சிரமங்கள்.
நாம் இங்கே பார்க்கப் போவது இவர்கள் செய்கின்ற இந்தக் காரியங்கள்
இவர்களுக்கு எள் அளவாவது, எள் முனையளவாவது பயனளிக்குமா? என்பதைத் தான்.
இந்தக் கேள்விக்கு, நன்மையையும்
தீமையையும் பிரித்துக் காட்ட வந்த அல்குர்ஆன் அளிக்கும் பதிலைப் பார்ப்போம்.
என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை)
மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத்
தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.
அல்குர்ஆன் 18:102
இந்த வசனத்தில் இவர்களை இறை மறுப்பாளர்கள் என்று அழைப்பதுடன்
இவர்களின் இந்தக் காரியங்களுக்குத் தண்டனையாக நரகம் தான் பரிசு என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.
(ஏக இறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல்
நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன்
வரும் போது எதையும் காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத் தான் காண்பான். அப்போது அவனது
கணக்கை நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
அல்குர்ஆன் 24:39
இவர்கள் செய்கின்ற இந்த வணக்கங்களை கானல் நீர் என்று மேற்கண்ட
வசனம் கூறுகின்றது.
இந்தக் கானல் நீரை தண்ணீராகக் காண்பவர்கள் மாபெரும் நஷ்டவாளிகள்!
இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விளக்குகின்றான்.
செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்பீராக!
இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ
தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.
அல்குர்ஆன் 18:103, 104
1. மாபெரும் நஷ்டவாளிகள்
2. இவர்களது முயற்சி இவ்வுலகிலேயே வீணாகி விடுகின்றது.
3. தீமையைச் செய்து விட்டு அதை நன்மை என்று நம்பி ஏமாறுகின்ற கொடுமை!
ஒருவன் ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்து மாட்டிக் கொண்டு
தண்டனை பெறுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு தண்டனை பெறுகின்ற அவன், தனக்கு அந்தத் தண்டனை நியாயமானது தான் என்று உணர்ந்தே ஏற்றுக்
கொள்கிறான். இதில் அவனுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. ஆனால் அதே சமயம், டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணம் செய்த ஒருவன், தான் வாங்கிய டிக்கெட் போலியானது என்றாகி, அதற்காகத் தண்டனை பெறும் போது அவன் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாகி
விடுகின்றான். அதை அவனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதன் மூலம் அவன் அடைகின்ற ஏமாற்றத்திற்கு
ஓர் அளவே இல்லை. அவ்லியா பக்தர்களின் நிலை இதைப் போன்றது தான்.
கடவுள் மறுப்புக் கொள்கையுள்ள ஒருவன் அல்லாஹ்வை நம்பப் போவதில்லை; மறுமையையும் நம்பப் போவதில்லை. நாளை மறுமையில் அவன் தண்டனை பெறுகின்ற
போது அது அவனுக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தரப் போவதில்லை. காரணம், தான் செய்த தப்புக்கு அந்தத் தண்டனை என்று அவன் ஏற்றுக் கொள்ளப்
போகின்றான்.
ஆனால் அவ்லியா பக்தர்களின் நிலை அவ்வாறல்ல! அவர்கள் தாங்கள்
செய்த காரியங்களை நன்மை என்று நம்பியவர்கள்! அதனால் அவர்களது ஏமாற்றம் அளவிட முடியாதது.
ஷாகுல் ஹமீது மீது பக்தி கொண்டு மவ்லிது ஓதுவது, சந்தனக்கூடு எடுப்பது, கொடி ஏற்றுவது, பீரோட்டம் ஓடுவது, நாகூருக்குப்
பயணம் மேற்கொள்வது, அங்கு 14 நாட்கள் தங்குவது போன்ற எல்லாமே மார்க்கத்தின் பெயரால் நன்மை
என்று கருதிச் செய்யப்படும் வீணான காரியங்கள்.
வீணான காரியங்களை நன்மை என்று செய்பவர்கள் அல்லாஹ்விடம் மாபெரும்
நஷ்டத்திற்குரியவர்கள். நரகத்தைத் தங்குமிடமாக ஆக்கிக் கொள்பவர்கள்.
எனவே ஷாகுல் ஹமீது கந்தூரி மட்டுமல்ல! ஒவ்வொரு அவ்லியா கந்தூரி
கொண்டாடும் முஸ்லிமும் இந்தப் பட்டியலில் தான் இடம் பெறுவார் என்பதைக் கவனத்தில் கொள்ள
வேண்டும்.
இந்தப் பட்டியலில் ஈடுபடுவோர் தாங்கள் நல்லமல்களைச் செய்திருக்கிறோம்
என்று நம்புகிறார்கள். அந்த அமல்கள் அனைத்தையும் காற்றில் பறக்கும் புழுதிகளாக, கரைந்து போகும் சாம்பல்களாக இறைவன் ஆக்கி விடுகின்றான். இதனால்
இவர்களது அமல்களை நிறுப்பதற்குத் தராசைக் கூட வைப்பதில்லை.
அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து
விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.
அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும்
கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.
அல்குர்ஆன் 18:105, 106
இத்தனைக்குப் பிறகும் ஒருவர் நாகூர் செல்வாரானால் அவர் அல்லாஹ்வின்
இந்த வசனங்களைக் கேலிப் பொருளாக்கியவர் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
ஷாகுல் ஹமீது மவ்லிது தொடர்பான கதை கப்ஸாக்களையும், கவிதை வரிகளையும், கந்தூரி என்ற
பெயரில் நடக்கும் மடைமைத்தனங்களையும் மவ்ட்டீகங்களையும் இந்த இதழ் உங்களுக்கு அடையாளம்
காட்டுகின்றது.
நேர்வழி காட்டுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
EGATHUVAM MAY 2009