Apr 12, 2017

சீக்கிரமாய் பலித்த சித்தீக்கின் வாக்கு

சீக்கிரமாய் பலித்த சித்தீக்கின் வாக்கு

இந்த இயக்கத்தை விட்டுப் பிரிந்தவர்கள் என்னென்ன நிலையில் ஆகி விட்டார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதை விட்டுப் போனால் தற்குறியாய் ஆகிவிடுவோம்

இது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் சித்தீக் என்பவர், சென்னை கிரீன் பேலஸ் என்ற ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பின் போது தெரிவித்த கருத்தாகும்.

எழுதிய மை காய்வதற்குள்ளாக... என்று சொல்வார்களே அதுபோல், இந்த வார்த்தைகள் வெளிவந்த சித்தீக்கின் வாயிலுள்ள உமிழ்நீர் காய்வதற்குள்ளாக அவரது வாக்குப் பலித்து விட்டது. இந்த இயக்கத்தை விட்டுப் பிரிந்து சென்ற அவர்களின் தற்குறித்தனம் நிகழ்ந்து விட்டது.

மண்ணடியில் அவரது அணியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் அவரது தலைவர் பாக்கர் வெளிப்படுத்திய அறியாமையும், கொட்டிய உளறலும் இதோ:

இப்ராஹீம் நபியின் வாழ்க்கையைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படியானால் முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கையைப் பின்பற்ற வேண்டாமா? (நவூதுபில்லாஹ்)

இதுதான் பாக்கர் கொட்டிய உளறலின் சாராம்சம்!

எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.

அல்குர்ஆன் 60:4

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்மாணிக்கப்பட்டிருப்பதே இப்ராஹீம் நபியின் இந்த முன்மாதிரிக் கொள்கையில் தான்.

காமாலைக் கண்ணுக்குக் காணும் பொருளெல்லாம் மஞ்சளாகத் தெரிவது போன்று இப்ராஹீம் நபியின் இந்தப் பாதை பாக்கருக்குப் பிரிவினையாகத் தெரிகின்றது. காரணம், அவர் இப்போது பிரிந்து கிடக்கும் சமுதாயத்தை ஒன்றுபடுத்தப் போகின்றாராம்! எனவே ஒற்றுமை ஏற்படுத்தும் இவருக்கு இப்ராஹீம் நபியின் கொள்கை முழக்கம் ஒரு முட்டுக்கட்டையாக வந்து நிற்கின்றது.

அதை ஓய்ப்பதற்கு என்ன வழி? என்று மார்க்க ஆய்வில் கரை கண்ட இந்தத் திருவாளர் தனது மார்க்க அறிவை வெளிச்சம் போட்டு பளிச்சென்று காட்டியிருக்கிறார்.

புறக்கணிப்பு என்ற இப்ராஹீம் நபியின் மார்க்கமெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது; அதைக் கிடப்பில் தூக்கிப் போட வேண்டும். அது மக்களைப் பிரிக்கின்றது. அதை அமுல்படுத்த வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தீக்குண்டத்தில் தீக்குளிக்க வேண்டும். மனைவியைக் கொண்டு போய் பாலைவனத்தில் விட வேண்டும். அதன் பின்னர் தான் இந்த வசனத்தைச் செயல்படுத்த வேண்டும்

என்னே ஒரு அறிவு விளக்கம்! கேட்கும் போதே மயிர் கூச்செறிகின்றது.

தீக்குளிப்பு ஹஜ் சர்வீஸ்

புறக்கணிப்பு எப்படி இப்ராஹீம் நபியின் மார்க்கமோ அதுபோல் ஹஜ் செய்வதும் இப்ராஹீம் நபியின் மார்க்கம் தான்.

பாக்கரின் இந்த மார்க்க விளக்கத்தின்படி அவர் நடத்தும் ஹஜ் சர்வீஸை தீக்குளிப்பு சேவையாக மாற்றுவாரா?

சென்னை விமான நிலையத்திற்கு முன்னால் ஒரு தீக்குண்டத்தை ஏற்பாடு செய்து, அதில் இவரது ஹஜ் சர்வீஸில் செல்லும் அனைவரும் இஹ்ராம் உடையுடன் போய் தீக்குளிக்க வேண்டும். அதில் உயிருடன் கரையேறினால் அவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல வேண்டும் என்று பாக்கர் சொல்வாரா? இதில் இவருக்கு ஒரு லாபமும் இருக்கிறது. தீக்குண்டத்தில் ஹாஜி இறந்து விட்டால் அவருக்குப் பணத்தைத் திரும்பத் தர வேண்டாமல்லவா?

இப்ராஹீம் நபியின் புறக்கணிப்பைப் பின்பற்ற வேண்டுமென்றால் அவரைப் போல் தீக்குண்டத்தில் விழ வேண்டும்; அப்படி விழுந்தவர் தான் இப்ராஹீம் நபியின் புறக்கணிப்பைப் பின்பற்ற முடியும் என்ற அதிமேதாவித்தனமான மார்க்க விளக்கத்திற்குப் பதில் தான் இது!

இப்போது இந்த மேதாவி கேட்கின்ற கேள்விக்கு வருவோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டாமா?

இந்தக் கேள்வியின் மூலம் நபி (ஸல்) அவர்களின் பாதை வேறு; இப்ராஹீம் (அலை) அவர்களின் பாதை வேறு என்று இந்த அறிவாளி, நபிமார்களின் ஒரே பாதையை இரு வேறு பாதைகளாக்கிக் காட்டுகிறார்.

இப்படி நபிமார்களுக்கிடையே பாரபட்சம் காட்டுவதற்காக நாம் தான் நவூதுபில்லாஹ் சொல்ல வேண்டும். ஆனால் அதையும் அவரே சொல்லிக் கொண்டார். இப்போது நாம் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், அல்குர்ஆனின் அடிச்சுவடு கூட இந்த ஆசாமிக்குத் தெரியவில்லை என்பது தான்.

பழனிபாபா ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் மக்களைப் பார்த்து, உனக்கு ஐந்து கலிமா தெரியுமா? என்று கேட்டு வந்தவர்களை அவமானப்படுத்துவார். பாக்கர் பாபா ஒவ்வொரு கூட்டத்திலும் அல்ஹம்து சூராவுக்கு அர்த்தம் தெரியுமா? என்று கேட்கிறார். அந்தோ பரிதாபம்! தோற்றுவாய்க்கு அர்த்தம் தெரிவது ஒருபுறமிருக்கட்டும்! இவருக்கு அரபியில் அதை ஒழுங்காக வாசிக்கவாவது தெரிகின்றதா? என்றால் இல்லை. இஹ்தி நஸ்ஸிராத்தல் முஸ்தகீம் என்று சொல்வதற்குப் பதிலாக முஸ்தகீன் என்று உளறுகின்றார். முஸ்தகீனுக்கு அர்த்தம் தெரியுமா? என்று கேட்கிறார். இப்போது இவர் சொல்கின்ற அந்த முஸ்தகீனுக்கு அல்ல! முஸ்தகீம் என்பதன் அர்த்தத்தைப் பார்ப்போம்.

எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!

அல்குர்ஆன் 1:5

இது தான் அர்த்தம்! அல்லாஹ்விடம் நேர்வழியைக் கேட்கிறோம். அந்த நேர்வழி எது? என்பதையும் அல்லாஹ் விளக்குகின்றான்.

எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணை கற்பித்தவராக இருக்கவில்லை என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 6:161

இப்ராஹீம் நபியின் வழி தான் நேர்வழி என்று அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகின்றான். இந்த வழியைப் பின்பற்றுமாறு தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு உத்தரவிடுகின்றான்.

(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக! என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை.

அல்குர்ஆன் 16:123

இந்த வழியைத் தான் நபி (ஸல்) அவர்கள் பின்பற்றினார்கள். இப்ராஹீம் நபியின் மார்க்கம் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மார்க்கம். இந்த இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது.

இப்ராஹீம் நபியின் மார்க்கத்தில் பின்பற்றுவதற்கு விதிவிலக்கு ஒன்றே ஒன்று தான். அதையும் அல்லாஹ் தெளிவுபடுத்தி விடுகின்றான்.

உங்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை)

அல்குர்ஆன் 60:4

இப்ராஹீம் நபி, தனி நபராக நின்று சிலைகளை உடைத்தார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் ஆட்சியதிகாரத்தைப் பெற்ற பின் அதைச் செய்தார்கள்.

இதைத் தவிர இப்ராஹீம் நபியின் அனைத்து வழிகளையும் முஹம்மது (ஸல்) அவர்கள் பின்பற்றியிருக்கிறார்கள்.

முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றாரே! நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தில் சமரசம் செய்து விட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எங்காவது கூறினார்களா? நபியவர்களால் பகைமை பாராட்டப்பட்ட அனைவரும் அவர்களது குடும்பத்தினர், குலத்தினர் தானே! சொந்தம், பந்தம், வீடு, வாசல் அத்தனையையும் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்களே! அது புறக்கணிப்பு இல்லையா?

ஆக, இப்ராஹீம் நபியின் மார்க்கம் தான் முஹம்மது (ஸல்) அவர்களின் மார்க்கமாகும். உண்மை இவ்வாறிருக்கையில், இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை விட்டு விட்டு, முஹம்மது நபியின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள் என்று கூறினால், முஹம்மது நபியின் மார்க்கம் என்று தனியாக உள்ளதா?

இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்கின்றது. அதன் மீது இந்த அறிவு சூன்யத்துக்கு ஏற்பட்ட வெறுப்பு இப்ராஹீம் நபியின் மீதும் திரும்புகின்றது. அதனால் இப்ராஹீம் நபி மீது வெறுப்பை அள்ளிக் கொட்டுகிறார்.

தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில் நல்லோரில் இருப்பார்.

அல்குர்ஆன் 2:130

மடையன் தான் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிப்பான் என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்தப் பைத்தியம் தான் இப்போது பாக்கரைத் தொட்டிருக்கின்றது.

ஆரம்பத்தில் நாம் எடுத்துக் காட்டிய சித்தீக்கின் வார்த்தையில் கூறுவதென்றால் தற்குறித்தனம் பிடித்திருக்கின்றது. அவரது வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வந்து உமிழ்நீர் காய்வதற்குள்ளாகவே இப்படி தற்குறிகளாக ஆகிவிட்டனர். இதைத் தான், சீக்கிரம் பலித்த சித்தீக்கின் வார்த்தைகள் என்று குறிப்பிடுகின்றோம்.


ஏகத்துவத்தைக் கொள்கையாகக் கொண்ட ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட தற்குறிகளைத் தலைவர்களாக்கிக் கொள்வதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோமாக!

EGATHUVAM APR 2009