Apr 30, 2017

பொருளியல் தொடர் 15 - சந்தேகமானதை விட்டு விலகுதல்

பொருளியல் தொடர் 15 - சந்தேகமானதை விட்டு விலகுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப் பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிட மானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர்  வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடை விதிக்கப்பட்டவையே. அறிக: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்து கொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி), நூல்: புகாரி 52

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப் பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. யார் சந்தேகமானதை விட்டுவிடுகிறாரோ அவர் ஹராமை அதைவிட அதிகமாக விட்டு விடுவார். வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர்  வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி), நூல்:  அஹமத் 17624

சந்தேகமானதை விட்டுவிடுவதில் ஸஹாபாக்கள் முன்னோடிகளாக இருந்தார்கள். சந்தேகம் என்று வந்துவிட்டால் அதைக் கொஞ்சம் கூட யோசிக்கமல் விட்டுவிடுவார்கள். அது சிறிய விஷயமாக இருந்தாலும் சரி தான்; பெரிய விஷயமாக இருந்தாலும் சரி தான்.

உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறியதாவது: நான் அபூஇஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்து கொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து "நான், உக்பாவுக்கும் நீ மணந்து கொண்டுள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டியிருக்கிறேன்'' (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர்கள் ஆவீர்கள்) என்று கூறினார். நான் "நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணமுடித்துக் கொண்டபோது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவில்லையே!'' என்று கேட்டேன்.  ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவிலிருந்த நபி (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீயும் உம் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்டுப் போன பிறகு எப்படி (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)?'' என்று கூறினார்கள். ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்து விட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்துகொண்டாள். (நூல்: புகாரி 88)

இந்த ஹதீஸில், சந்தேகமானதை விட்டு விலகிக் கொள்வதற்காக ஒரு நபித்தோழர் மக்காவிலிருந்து மதினாவிற்குப் பயணித்திருக்கிறார். தான் மணமுடித்த பெண்ணைக் கூட தொடாமல் மணக்கோலத்திலேயே பிரிந்திருக்கிறார். ஸஹாபாக்கள் சந்தேகமானதை விட்டு விலகிக் கொள்வதிலே முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள் என்பதற்கு மற்றோர் நிகழ்ச்சி

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் ஈட்டி (மூலம் வேட்டையாடுவதைப்) பற்றிக் கேட்டேன்.  அதற்கு அவர்கள், பிராணியை ஈட்டி அதன் முனையால் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்; பக்கவாட்டாகத் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்ணாதே.  ஏனெனில் அது அடித்துக் கொல்லப்பட்டதாகும்'' என்றார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே! (வேட்டைக்காக) நான் எனது நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்புகிறேன்; வேட்டையாடப்பட்ட பிராணிக்கு அருகில் எனது நாயுடன் மற்றொரு நாயையும் நான் காண்கிறேன்; அந்த மற்றொரு நாய்க்காக நான் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை; இவ்விரு நாய்களில் எது வேட்டையாடியது என்பதும் எனக்குத் தெரியவில்லை (அதை நான் சாப்பிடலாமா?)'' எனக் கேட்டேன்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சாப்பிடாதே! நீ அல்லாஹ்வின் பெயர் கூறியது உனது நாயை அனுப்பும்போது தான்.  மற்றொரு நாய்க்கு நீ அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை'' என விடையளித்தார்கள். (நூல்: புகாரி 2054)

ஒரு பொருளில் சந்தேகத்தின் சாயல் தென்பட்டால் அது மோசடி அல்லது ஏமாற்றுவதற்குச் சமம். இது போன்ற சந்தேகத்திற்கு இடமான பொருட்களை விட்டுத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் "அஸ்த்' என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூ-ப்பவராக நியமித்தார்கள். அவர் "இப்னுல் லுத்பிய்யா' என்று அழைக்கப்பட்டு வந்தார்.  அவர் ஸக்காத் வசூ-த்துக் கொண்டு வந்தபோது, "இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பüப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறினார்.  நபி (ஸல்) அவர்கள், "இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பüப்புக் கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தனது கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்கüல் யாரேனும் அந்த "ஸகாத்' பொருüல் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாüல் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும்; பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்'' என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்கüன் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, "இறைவா!  (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?'' என்று மும்முறை கூறினார்கள். (நூல்: புகாரி 2597)

நம்முடைய காலத்தில் வரதட்சணை என்பது பெரும் கொடுமையாக முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ளது. ஆனால் தவ்ஹீதை முழுமையாக ஏற்று நடப்பவர்கள் வரதட்சணை வாங்குவதில்லை. ஆனால் சில தவ்ஹீத்வாதிகள், "நாங்களாகக் கேட்பதில்லை; அவர்களுடைய பெண்ணிற்கு அவர்களாகத் தருகிறார்கள்; அல்லது அன்பளிப்பாகத் தருகிறார்கள் என்று சொல்லி வாங்குகிறார்கள்.

உண்மையில் இது அன்பளிப்பு இல்லை. அவர்களுடைய பெண்ணை நாம் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகக் கொடுக்கின்ற லஞ்சம். நாம் அவருடைய பெண்ணைத் திருமணம் செய்யாமல் இருந்தால் தருவார்களா? அல்லது ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் பாதியில் நின்றால் நாங்கள் தந்த அன்பளிப்பை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்களா? மாட்டார்கள். "என் பெண்ணே உன்னுடன் வாழாத போது உனக்கு எதற்கு இந்தப் பொருட்கள்?' என்று சொல்லி பிடுங்கி விடுவார்கள். அதனால் திருமணத்திற்கு அவர்களாகத் தருகிறார்கள் என வாங்கினால், வரி வசூல் செய்பவர் (மக்கள்) எப்படி அவர்களாகத் தருகிறார்கள் என வாங்கி, மறுமையில் அதைச் சுமந்து கொண்டு வருவாரோ அதே போன்று துôக்கிக் கொண்டு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

அதே நேரத்தில் திருமணம் முடிந்து ஐந்தாறு வருடங்கள் கழித்து இதுபோன்ற அன்பளிப்புக்களைக் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்வதில் தவறில்லை. அது அன்பளிப்பு தான். இது திருமணத்திற்காகக் கொடுக்கப்பட்டதில்லை. மாறாகக் குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் கொடுக்கப்பட்டதாகும்.

நபி (ஸல்) அவர்கள் சந்தேகமான எல்லா விஷயங்களையும் தடுப்பவர்களாக இருந்தார்கள்.

புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதில் வணங்கப்படக் கூடிய அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு சிலை இருக்கின்றதா?'' என்று (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு (மக்கள்) இல்லை என்று பதிலளித்தார்கள். "அவர்களது திருவிழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடப்பதுண்டா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். "நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலோ அல்லது ஆதமுடைய மகனுக்கு இயலாத காரியத்திலோ நேர்ச்சையை நிறைவேற்றுதல் இல்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி)

நூல்: அஹ்மத் 16012

அந்த இடத்தில் வணங்கப்படக்கூடிய சிலைகள் இருந்தால் நபி (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள். அவர் அல்லாஹ்வுக்கே நேர்ச்சை செய்திருந்தாலும் பார்ப்பவர்களுக்கு அது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டார்கள்

தொழுகை விஷயத்தில் கூட சந்தேகமானதை விட வேண்டும் என்று  மார்க்கம் நமக்குக் கட்டளையிடுகிறது.

உங்களில் ஒருவருக்கு தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: முஸ்லிம் 990

நபி (ஸல்) அவர்களுடைய பேரன் ஹசனுக்கு இதைத் தான்  கட்டளையிட்டார்கள்.

"நீ சந்தேகமானதை விட்டுவிட்டு சந்தேகம் இல்லாததின் பக்கம் திரும்பி விடு. நிச்சயமாக உண்மை என்பது நிம்மதியாகும். பொய் என்பது சந்தேகமானதாகும்'' என நபி (ஸல்) அவர்கள் எனக்கு கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹசன் (ரலி), நூல்: திர்மிதி 24420

சந்தேகமானதை விடுவதில் நபி (ஸல்) அவர்கள் சிறந்த முன்மாதிரியாக இருந்தார்கள்.

அனஸ் (ர-) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். "இது ஸதகா (தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி 2431)

தர்மப் பொருள்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஹராம். அதனால் கீழே கிடக்கின்ற பேரீச்சம் பழம் ஸதகவாக இருக்குமோ என்று அவர்களுக்குச் சந்தேகம் வந்ததால் அதைவிட்டு விலகிவிட்டார்கள்.

எது ஹராம்? எது ஹலால்? என்பது பற்றி நபி (ஸல்) அவர்களுடைய விளக்கத்தை பார்ப்போம்.

அல்ஹுஸனிய்யு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஹலாலாவது மற்றும் என் மீது ஹராமாவது எது? என்பதை பற்றி எனக்கு அறிவியுங்கள்'' என்றேன். நபியவர்கள் என் மீது பார்வையை ஏற்றி இறக்கினார்கள். (பிறகு) "நன்மை என்பது தன் பக்கம் உள்ளம் அமைதியடையுமோ இன்னும் எதன் பக்கம் உள்ளம் நிம்மதி பெறுமோ அதுவாகும். பாவம் என்பது உள்ளம் எதன் பக்கம் அமைதி பெறாதோ இன்னும் உள்ளம் எதன் பக்கம் நிம்மதியடையாதோ அதுவாகும். முஃப்திகள் உனக்குத் தீர்ப்பு வழங்கினாலும் சரியே. நாட்டுக் கழுதையின் இறைச்சியின் பக்கமும், கோரைப் பற்களுள்ள விலங்கினங்களின் பக்கமும் நெருங்காதே!'' என்று கூறினார்கள்.  (நூல்: அஹ்மது 17076)

நாம் அல்லாஹ்விற்கு பயந்து சந்தேகமானதை விட்டால் இந்த உலகத்தில் நஷ்டம் வரும். ஆனால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் தருவான்.

"நீ அல்லாஹ்விற்கு பயந்து ஏதேனும் விஷயத்தை விட்டால் அதை விட சிறந்ததை அல்லாஹ் உனக்கு தருவான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மது 19819)

உலகத்தில் நாம் வாழ்கின்ற போது ஒரு தெருவில் நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வழியில் கலவரம் அல்லது போலீஸ் தடியடி நடக்கிறது என்று யாராவது சொன்னால் அந்த வழியில் செல்ல மாட்டோம்.  நாம் நேரில் பார்க்காவிட்டாலும் சந்தேகம் என்று வந்துவிட்டால் ஓதுங்கிக் கொள்வோம். அதே போலத் தான் மார்க்க விஷயத்தையும் நாம் அணுக வேண்டும்.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM SEP 2011