சிறுவர்களைப் பாதிக்கும் சின்னத்திரை
டி.வி.யை அணையுங்கள்
விஷால் களைப்பாகவும் வெண் திரையில் மூழ்கிப் போன உறக்கமிழந்த
கண்களுடன் காட்சியளித்தான். அவன் ஏதோ அலைக்கழிப்புக்கு ஆட்பட்டிருப்பது அப்படியே அப்பட்டமாகத்
தெரிந்தது.
படிப்பில் தொடர் புறக்கணிப்பு, அக்கறையின்மை, ஆர்வமின்மை, ஒரு வித்தியாசமான பழக்கவழக்கம் எல்லாம் அவனிடத்தில் குடிகொண்டுள்ளன
என்று அவனது பெற்றோர், தாத்தா பாட்டி ஆகியோர் கவலையுடன்
தெரிவித்தனர்.
இதற்குக் காரணம் என்ன? இரவில் அதிகமான
நேரத்தை டி.வி. பார்ப்பதில் செலவழிக்கின்றான் என்று விஷாலின் தாயார் தெரிவிக்கின்றார்.
தன்னுடைய வகுப்பு மாணவர்களைப் பற்றி, சக நண்பர்களைப்
பற்றிப் பேச வேண்டிய விஷால் பென்-10, போக்மேன்
(டி.வி. காட்சிகள்) பற்றியே பேசிக் கொண்டிருக்கிறான். விஷால் வகுப்பில் யாருடனும் பேசாமல்
இல்லை. ஆனால் பேசினால் இந்தக் காட்சிகளை, இந்த நிகழ்ச்சிகளைப்
பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர்களிடம் மட்டுமே பேசுகிறான். இதில் ஆர்வம் இல்லாதவர்களிடம்
பேசுவதில்லை. விஷாலுக்கு நிஜ உலக நண்பர்கள் இல்லை. நிழல் உலக நண்பர்கள் தான் இருக்கிறார்கள்.
இது ஒரு விதமான பழக்கத்திற்குக் குழந்தைகள் ஆட்பட்டுக் கிடக்கிறார்கள் என்பதை விட, பேயாட்டத்தின் ஆட்டிப் படைப்பில், அலைக்கழிப்பில் சிக்கிக் கிடக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.
திமித்ரி கிறிஸ்டாகிஸ் என்பவர் சியாட்டில் நகரில் அமைந்திருக்கும்
குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகள் பற்றிய ஆராய்ச்சி செய்து வருகிறார். அவர்
தனது ஆய்வில் தெரிவிப்பதாவது:
சிறு வயதுக் குழந்தைகளிடம் தொற்றிக் கொண்டிருக்கின்ற தொலைக்காட்சி
பார்க்கும் பழக்கத்தால் பிந்தைய கால கட்டத்தில் அக்குழந்தைகளின் கவன சக்தி பாதிப்புக்குள்ளாகின்றது.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் டி.வி. பார்க்கின்ற 1 வயது முதல் 3 வயது வரையிலான
குழந்தைகள் 7 வயதை அடையும் போது பெரும்பாலும் அக்குழந்தைகளின் பத்து சதவிகித
கவனத்திறன் பாதிப்புக்குள்ளாகி விடுகின்றது.
இதே குழந்தைகள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் டிவி பார்த்தால்
அவர்கள் ஏழு வயதை அடையும் போது 30 சதவிகித கவனத் திறன் பாதிக்கும்
அபாயம் உள்ளது என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.
அளவுக்கு அதிகமான டி.வி. பார்த்தல் குழந்தைகளின் கூரிய பார்வையில்
மட்டுமல்லாமல் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில், செயல்பாடுகளில்
பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கவனக்குறைவு, உண்மையான
சாத்தியமான வாழ்க்கையைத் தாங்கிக் கொள்ளாத தன்மை, நண்பர்களிடமிருந்து
இயற்கைக்கு மாற்றமான சக்தியை எதிர்பார்க்கும் மனநிலை போன்ற பாதிப்புகள் இதில் உள்ளடங்கும்.
குழந்தைகளின் இரண்டு வருடம்
குழந்தைகளின் முதல் இரண்டு வருட வாழ்க்கை, மூளை வளர்ச்சியின் மிக இன்றியமையாத கால கட்டமாகும். ஒவ்வொன்றுக்கும்
விடை காணத் துடிக்கும் வினா சிந்தனை, விளையாட்டு, பெற்றோர்களுடனும் மற்றவர்களுடனும் அது கொள்கின்ற கலந்துரையாடல்
ஆகியவற்றின் மூலம் உலகில் வாழும் மனித சமூகத்தின் ஓர் அங்கமாக அந்தக் குழந்தை பரிணமிக்கின்றது.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அறவே டி.வி. பார்க்கக் கூடாது.
இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாகக்
கண்டிப்பாக எக்காரணத்தை முன்னிட்டும் டி.வி. பார்க்க அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்க
குழந்தைகள் நல மருத்துவர்களின் சங்கம் பரிந்துரை செய்கின்றது.
குழந்தைகளின் மூளையை அளவுக்கு அதிகமாக உந்தித் தள்ளி, அதைத் தூண்டி, கிளறி விடக்
கூடிய வேலையை டி.வி. நிகழ்ச்சிகள் செய்கின்றன. இது மிகப் பெரிய பிரச்சனையாகும். எந்த
அளவுக்கு அதிகமதிகம் குழந்தைகள் டி.வி. பார்க்கின்றனவோ அந்த அளவுக்கு அந்தக் குழந்தைகள்
உணர்ச்சிவசப்படுகின்றன. ஒருவிதமான அமைதியின்மைக்கும், கலவரத்திற்கும் கட்டுப்பாடற்ற தன்மைக்கும் உள்ளாகின்றன. எதிலும்
கவனம், சிந்தனை செலுத்துகின்ற பக்குவத்தை முற்றிலும் அந்தக் குழந்தைகள்
இழந்து விடுகின்றன.
குழந்தைகளின் இப்படிப்பட்ட மனநிலை, செயல்பாட்டுக்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு,
யதார்த்த வாழ்க்கையில் செயல்களுக்கும் சம்பவங்களுக்கும் ஒரு
தொடர்ச்சி இருக்கும். உதாரணமாக, ஒரு மனிதனை மற்றொருவன் தாக்குகிறான்
என்றால் பாதிக்கப்பட்டவன் மருத்துவமனைக்குச் செல்வான், அதன் பிறகு தனது வீட்டுக்குச் செல்வான். அங்கு அவனது உறவினர்கள்
ஆறுதல் கூறுவார்கள். இப்படியாக ஒரு யதார்த்த வாழ்க்கையில் சம்பவம் நடந்தால் அதன் தொடர்ச்சி
இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், ஒருவன் மற்றொருவனைத் தாக்கினால் உடனே அவன் பழிவாங்கப் புறப்படுவான்.
துரத்துவான். அல்லது அவனது சந்ததி பழிவாங்க வருவான். இப்படியாக அடுத்தடுத்து விளைவுகள், நிகழ்வுகள் சென்று கொண்டேயிருக்கும். இதுபோன்று டி.வி. நிகழ்ச்சியில்
உடனுக்குடன்,
திடீர் திடீரென்று காட்டப்படுகின்ற காட்சி மாற்றம் உண்மையானதல்ல.
இப்படி அவசரமான, அதிரடியான, யதார்த்த வாழ்க்கைக்குப் புறம்பான காட்சி மாற்றங்கள், அதைக் காணும் குழந்தைகளின் மூளையில் நியூரான் (மூளைக்கும் உடலின்
இதர பகுதிகளுக்கும் செய்தியைக் கொண்டு செல்லும் நரம்பு செல்) இணைப்புகளில் மாற்றத்தை
ஏற்படுத்துகின்றது. ஒரு குழந்தை டி.வி.க்கு முன்னால் வசீகரம் செய்யப்பட்டு அமர்ந்திருக்கும்
போது நரம்பு மண்டலப் பாதைகள் உருவாக்கப்படுவதில்லை.
டி.வி. என்பது குடும்ப உறுப்பினர் இல்லை
பிரதான உணவு நேரம் குடும்ப நேரமாக அமைய வேண்டும். இந்த உணவு
வேளையின் போது தான் குடும்பம் ஒன்றாக உட்கார்ந்து அன்றாட முக்கிய நிகழ்வுகளைப் பரிமாறிக்
கொள்கின்றது. ஒரு நகைச்சுவை நேரமாகவும் இது ஆகிக் கொள்கின்றது. இந்தக் கலந்துரையாடல்
ஒரு குழந்தையின் உளவியல் ரீதியிலான வளர்ச்சிக்குரிய ஒரு முக்கிய கட்டமாகும்.
குழந்தைகளின் படிப்பு நேரத்தில் பெற்றோர்கள் டி.வி. பார்க்கின்றனர்.
இது குழந்தைகளைப் படிப்பிலிருந்து திசை திருப்பி விடுகின்றது. எனவே பிள்ளைகள் படிக்கும்
நேரத்தில் டி.வி.யை அணைப்பது பெற்றோர்களின் முழு முதல் கடமையாகும்.
டி.வி. பார்ப்பதை வரையறுத்தல்
பள்ளிக்கூட வேலை, விளையாட்டுப்
பணி தொடர்பான கடமைகள் போன்றவை குடும்பத்திற்கென்று ஒரு நேரத்தை ஒதுக்குவதற்கு முட்டுக்கட்டையாக
இருக்கின்றன. டி.வி. பார்க்கும் நேரங்களை வரைமுறைப்படுத்துங்கள் அல்லது அதை முழுமையாகத்
தவிர்த்து விட்டு அந்த நேரத்தைச் சேமியுங்கள். உங்களால் அதிக நேரம் குடும்பத்திற்கு
ஒதுக்க முடியும்.
மாற்றுப் பரிகாரம், வழிமுறைகள்
புத்தகங்கள், மாத இதழ்கள், விளையாட்டுச் சாமான்கள், புதிர்கள், அட்டை விளையாட்டுக்கள் (செஸ், தாயம், குறுக்கெழுத்து போன்றவை) போன்ற சின்னத்திரை சாராத அதிகமான விளையாட்டுக்களை
ஊக்குவியுங்கள். கண்ணாமூச்சு விளையாட்டு, வீட்டுக்கு
வெளியே உள்ள விதவிதமான விளையாட்டுக்கள், ஹாபி எனப்படும்
விருப்ப வேலைகள் போன்றவற்றில் நேரத்தைக் கழிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
நிகழ்ச்சிகளை நிரல்படுத்துதல்
கல்வி, படிப்பு, விருப்ப வேலைகளில் ஆர்வத்தை வளர்க்கின்ற டி.வி. நிகழ்ச்சிகளில்
உட்காருங்கள். அந்த நிகழ்ச்சி நிரல்களை எடுத்து எல்லோருடைய பார்வை படும் விதத்தில்
உங்கள் வீட்டிலுள்ள ஃபிரிட்ஜ், அலமாரி போன்ற இடங்களில் ஒட்டுங்கள்.
அதன்படி அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு டி.வி.யை உடனே அணைத்து விடுங்கள்.
குழந்தைகளுடன் கூட்டாக உட்கார்தல்
குழந்தைகள் டி.வி. பார்ப்பதற்கு அனுமதிக்க முடிவு செய்து விட்டால்
நீங்களும் முழு நிகழ்ச்சி முடியும் வரை குழந்தைகளுடன் அமருங்கள். முழுமையாக உட்கார
முடியாவிட்டால் ஆரம்பத்தில் சில நிமிடங்கள் அந்தக் காட்சியைக் காணுங்கள். டிவியின்
ஓசை, நிறங்களின் தகவு ஆகியவற்றைச் சரியாக அமைத்து விட்டு இடையிடையே
நிகழ்ச்சிகளைக் கண்காணித்துக் கொள்ளுங்கள்.
குடும்ப விதி
குழந்தைகளின் வீட்டுப் பாடம் முடிந்த பிறகும் அன்றாடம் பார்க்கும்
பணியில் சலிப்பு ஏற்பட்ட பிறகும் மட்டுமே டி.வி. பார்ப்பது என்பதை குடும்ப விதியாக்கி
அதைக் கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள்.
குழந்தைகள் அடிக்கடி தங்களுக்கு விருப்பமான சேனல்களை யாருக்கும்
தெரியாமல்,
சப்தத்தைக் குறைத்து வைத்துக் கொண்டு டிவிக்கு மிக அருகில் உட்கார்ந்து
கொண்டு பார்க்கின்றனர். இது கண்டிப்பாகக் குழந்தைகளின் பார்வை சக்தியில் பெரும் பாதிப்பை
ஏற்படுத்தி விடும். இதைப் பெற்றோர்கள் கண்காணிப்பதுடன் மோசமான சேனலை குழந்தைகள் கையில்
கிடைக்காமல் இருப்பதற்கு, கண்ணில் படாமல் இருக்கும் வகையில்
சம்பந்தப்பட்ட சேனலை லாக் செய்து விடுங்கள்.
சின்னத் திரையில் வந்து கொட்டுகின்ற தகவல்கள், செய்திகள் போன்றவற்றை விளங்குகின்ற ஆற்றல் திறனை, உணர்வதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள். டிவியில் உள்ள அறிவுகளை
குழந்தைகள் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் அது கட்டிக் கிடக்கும் கழிவு
நீர் போன்று ஆகிவிடும்.
ஆனால் நாம் குறிப்பிட்ட அந்த வயது வரம்புக்குக் கீழ் உள்ள குழந்தைகள்
டிவி பார்க்க ஆரம்பித்தால் மூளை வளர்ச்சி பரிமாணத்தின் பயங்கரமான பெரும் விளைவுகளையும்
பாதிப்புகளையும் ஏற்டுத்தி விடும்.
பெற்றோர்கள் இதற்குப் பெரிய முக்கியத்துவத்தை அளித்து, குழந்தைகளின் உடல் நலன், எதிர்கால நலன், வளர்ச்சி, முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு
டிவி சுவிட்சுகளை அணைத்து விடுவோமாக!
(Source: The Hindu,
Sunday Magazine - 26.07.2011)
EGATHUVAM SEP 2011