ஹதீஸ் கலை ஆய்வு தொடர் 17 - நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதா?
எஸ். அப்பாஸ் அலீ, எம்.ஐ.எஸ்.சி.
நகைப்பிற்குரிய விளக்கம்
நபிகள் நாயகத்திற்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறுவதை நம்பினால்
இறை வேதத்தில் ஐயம் ஏற்பட்டு விடும் என்பதைக் கண்டோம். இதற்குப் பதில் சொல்ல முடியாதவர்கள்
ஒரு புதுமையான விளக்கத்தைத் தருகின்றார்கள்.
வஹீ விஷயத்தில் மட்டும் உள்ளதை உள்ளபடி கூறினார்கள். மற்ற விஷயத்தில்
தான் மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்று விளக்கம் தருகிறார்கள். இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும்.
குர்ஆன் இறை வேதம் தான் என்று முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்து
கொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நபியவர்களின்
ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறை வாக்கா? இல்லையா என்று அறியும் நிலையில் மக்கள் இருந்தார்கள். ஆறு மாத
காலம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நபி (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் அந்தக் காலத்து
மக்களிடம் இந்த வாதம் எடுபடுமா? என்று சிந்திக்கத் தவறி விட்டார்கள்.
செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் சந்தேகத்திற்குரியதாகத் தான்
மக்கள் பார்ப்பார்களே தவிர வஹீக்கு மட்டும் விதி விலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை மூளை தொடர்பானது என்பதால் அவர்கள் கூறிய அனைத்தும்
சந்தேகத்திற்குரியதாகி விடும். நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்யாமலேயே செய்ததாக நினைத்தார்கள்
என்று சூனியம் தொடர்பாக வரும் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. மார்க்க விஷயத்தில் குழப்பம்
ஏற்படவில்லை. மாறாக உலக விஷயத்தில் தான் குழப்பம் ஏற்பட்டது என்று பிரித்துக் காட்டாமல்
பொதுவாக எல்லாக் காரியங்களிலும் அவர்களுக்கு இந்தக் குழப்பம் ஏற்பட்டது என்றே ஹதீஸில்
இடம் பெற்றுள்ள வாசகம் உணர்த்துகிறது.
எந்த விதமான ஆயுதங்களும் இல்லாமல் ஒருவருக்குத் தீமை அளிப்பது
என்பது இறைவனுக்கு மட்டுமே சாத்தியம். இந்த ஆற்றல் சூனியம் செய்வதன் மூலம் மனிதர்களுக்கும்
உண்டு என்று நம்புவது இணை வைப்பில் கொண்டு சேர்த்து விடும். இஸ்லாத்தின் அடிப்படைக்
கொள்கையான ஏகத்துவக் கொள்கைக்கு எதிராக இது அமைந்திருப்பதாலும் இந்த ஹதீஸை ஏற்றுக்
கொள்ளக் கூடாது.
எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?
நபி (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென
நிலைநாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம்
வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து
நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். செய்ததைச்
செய்யவில்லை என்கிறார்; செய்யாததைச் செய்தேன் என்கிறார்; இவர் கூறுவதை எப்படி நம்புவது? என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை
அன்றைய காஃபிர்கள் ஒரு போதும் தவற விட்டிருக்க மாட்டார்கள்.
இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்திருந்தால் இந்த
விஷயம் எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாதம் வரை நீடித்த
பாதிப்பு மக்கள் அனைவருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மக்களோடு மக்களாகக் கலந்து
பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை
மறைத்திருக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தினமும் பள்ளிவாசலில் ஐந்து வேளை தொழுகை
நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள்.
எனவே நபி (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள்.
இதை மையமாக வைத்துப் பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். ஆனால் எதிரிகளில் ஒருவர்
கூட இது பற்றி விமர்சனம் செய்ததாக எந்தச் சான்றும் இல்லை. எனவே அவர்களுக்கு சூனியம்
வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
EGATHUVAM JUL 2009