Apr 12, 2017

மார்க்கம் மாறாது

மார்க்கம் மாறாது

எம். ஷம்சுல்லுஹா

புனித மிக்க ரமளான் மாதத்தில் அல்லாஹ் திருக்குர்ஆன் வேதத்தை அருளி அதன் மூலம் இந்த மார்க்கத்தை நிறைவடையச் செய்து விட்டான். நிறைவான மார்க்கத்தில் யாரும் இனி எதையும் எப்போதும் சேர்க்கவும் முடியாது; நீக்கவும் முடியாது. மாற்றவோ, திருத்தவோ, திணிக்கவோ முடியாது. இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். அல்குர்ஆன் 5:3

அல்லாஹ்வும் அவனது தூதரும் எதை நமக்கு மார்க்கம் என்று கற்றுத் தந்தார்களோ அந்த மார்க்கத்தில் ஒன்றைச் சேர்க்கவோ நீக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.

அறிவியல் புரட்சி, புதுப்புது கண்டுபிடிப்புக்கள், நவீன கலாச்சாரங்கள், பண்பாடுகள் என மாறி வரும் மனிதச் சிந்தனைகளைக் காரணம் காட்டி இந்த மார்க்கத்தில் மாற்றம் செய்யக் கூடாது. அதற்கு அவசியமும் இல்லாத அளவுக்கு எக்காலத்திற்கும் பொருந்தும் சட்ட திட்டங்களை இஸ்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது.

கலீஃபாக்கள், நபித்தோழர்கள், இமாம்கள், ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் சரி! நிறைவு பெற்ற இந்த மார்க்கத்தில் புதிதாக எதையும் சேர்ப்பதற்கோ, அல்லது இருக்கும் ஒரு சட்டத்தை மாற்றுவதற்கோ அவர்களுக்கு எள்ளளவும் அதிகாரம் இல்லை.

காரணம் நீங்கியும் காரியம் நீங்கவில்லை

ஒரு சில வணக்கங்களை சில காரணங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அந்தக் காரணங்கள் நீங்கிய பிறகும் அந்த வணக்கங்கள் இன்று வரை தொடரத் தான் செய்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜிரி 6ஆம் ஆண்டில் உம்ரா செய்ய வந்த போது இணை வைப்பவர்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். அப்போது ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்படுகின்றது. அதன்படி அவர்கள் மறு ஆண்டு (ஹிஜிரி 7ல்) உம்ரா செய்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களையும், தோழர்களையும் இணை வைப்பவர்கள் இளக்காரமாகப் பார்க்கிறார்கள். மதீனாவின் காய்ச்சல் முஹம்மதையும் அவரது தோழர்களையும் பலவீனப்படுத்தி விட்டது என்று பரிகசிக்கின்றார்கள்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஏழு சுற்றுக்கள் கொண்ட தவாஃபில் முதல் மூன்று சுற்றுக்களில் சற்று ஓடுமாறும், இதர நான்கு சுற்றுக்களில் சாதாரண நடையை மேற்கொள்ளுமாறும் தமது தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.

இதன் மூலம் தாங்கள் புத்துணர்ச்சியுடனும், புதுத் தெம்புடனும் தான் இருக்கிறோம் என்று உணர்த்துகிறார்கள்.

இதைப் பின்வரும் ஹதீஸ் நமக்கு விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் (மக்காவுக்கு) வந்தபோது, யஸ்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் இவர்கள் வந்துள்ளனர் என்று இணை வைப்போர் பேசிக் கொண்டனர். அப்போது (பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக) நபி (ஸல்) அவர்கள் மூன்று சுற்றுக்கள் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என்றும் ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே நடந்து செல்ல வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். தவாஃபின் மொத்தச் சுற்றுக்களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என இரக்கத்தின் காரணமாகவே நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1602

இதன் பின்னர் உம்ராவில் மட்டுமல்ல, ஹஜ்ஜிலும் இது தொடர்கின்றது. நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த போதும், இறந்த பின்பும் மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையான இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்து விட்டன. எந்தக் கொம்பனும் முஸ்லிம்களுக்கு எதிராக வாய் திறக்கும் சூழல் அறவே இல்லை. அதாவது, முஸ்லிம்கள் நோயுற்று பலவீனமாக இருக்கிறார்கள் என்று எதிரிகள் விமர்சனம் செய்த அந்தக் காரணம் நீங்கி விட்டது. ஆனால் தவாஃபின் போது முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுகின்ற அந்தக் காரியம், நபியவர்களின் வழிகாட்டு முறை நீங்கவில்லை. இன்றும் தொடர்கிறது; இனி இறுதி நாள் வரையிலும் தொடரத் தான் செய்யும்.

இது குறித்து உமர் (ரலி) அவர்கள் தெரிவிக்கும் கருத்து இதோ:

உமர் (ரலி) அவர்கள் நாம் ஏன் இப்போது தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்? நாம் அன்று செய்தது நமது பலத்தை இணைவைப்பாளர்களுக்குக் காட்டுவதற்காகத் தானே! ஆனால் இன்று அல்லாஹ் அவர்களை அழித்து விட்டான். பிறகு ஏன் செய்ய வேண்டும்? எனக் கூறிவிட்டு, எனினும், இதை நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள். அதை விட்டுவிட நாம் விரும்பவில்லை எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஸ்லம் நூல்: புகாரி 1605

நபி (ஸல்) அவர்கள் செய்து விட்டார்கள். அதனால் நாம் செய்தாக வேண்டும் என்பது தான் உமர் (ரலி) அவர்களின் நிலைப்பாடு! அது தான் மார்க்கத்தின் நிலையும்!

அறிவு மறுத்தாலும் அது மார்க்கமே!

மார்க்கத்தில் உள்ள ஒரு சில வணக்கங்களை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்ளத் தயங்கும். அதற்காக அவற்றை யாரும் மாற்றி விட முடியாது.

உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, நீ தீங்கோ, நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன் என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆபிஸ் பின் ரபீஆ

நூல்: புகாரி 1597

ஒரு கல்லுக்குப் போய் முத்தம் கொடுப்பதை அறிவு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் அவர் ஆட்சியாளராக இருந்தாலும், அதை மாற்றுவதற்குத் தமக்கோ வேறு யாருக்குமோ அதிகாரம் இல்லை என்பதை அழகாய் உணர்த்திக் காட்டினார்கள்.

ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்கள் இந்த மார்க்கத்தில் எந்த மாற்றத்தையும் புகுத்த அனுமதியில்லை. அப்படியே ஆட்சித் தலைவர்கள் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் நபித்தோழர்கள் அந்தத் தவறைச் சுட்டிக் காட்டத் தவறியதில்லை. அதற்குச் சான்றாகச் சில நிகழ்வுகளைக் காணலாம்.

உஸ்மான் (ரலி) செய்த மாற்றம்

ஹஜ்ஜில் தமத்துஃ என்ற வகை உண்டு. ஹஜ் செய்யச் செல்பவர் முதலில் உம்ராவை முடித்து விட்டு இஹ்ராமைக் களைந்து விடுவார். அதன் பின்னர் மீண்டும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவு செய்வார்.

இவ்விரண்டிற்கும் இடையே கிடைக்கும் நாட்களில் அவர் தமது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டுக் கொள்ளலாம். இந்த ஒரு வசதி ஹஜ்ஜின் இந்த முறையில் கிடைப்பதால் இதற்கு தமத்துஃ (சவுகரியம்) என்று பெயர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் இவ்வகையான ஹஜ் கூடாது என்று தடுத்தார்கள். உஸ்மான் (ரலி) விதித்த இந்தத் தடைக்கு ஆட்சேபணை செய்த அலீ (ரலி) அவர்கள் தாம் ஹஜ் செய்யும் போது தமத்துஃ முறையிலேயே ஹஜ் செய்கின்றார்கள்.

நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும், அலீ (ரலி) அவர்களுடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும் உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஃ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள், ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் கட்டி லப்பைக்க பி உம்ரத்தின் வ ஹஜ்ஜத்தின் என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டுவிட மாட்டேன் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மர்வான் பின் ஹகம்

நூல்: புகாரி 1563

நான் தமத்துஃ ஹஜ்ஜைத் தடுத்துக் கொண்டிருக்கும் போதே நீ அதைச் செய்கிறாயே என்று உஸ்மான் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களைப் பார்த்துக் கேட்கும் போதும், மனிதர்களில் எவருக்காகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை நான் விடுவதற்கு இல்லை என்று அலீ (ரலி) கூறியதாகக் கூடுதல் விளக்கத்துடன் நஸயீ 2674 ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

உஸ்மான் (ரலி) அவர்கள் செய்ய நினைத்த மாற்றம் எடுபடாமல் போய், தமத்துஃ ஹஜ் என்ற நபி (ஸல்) அவர்களின் வழிமுறை இன்றும் செயல்பாட்டில் உள்ளது.

உஸ்மான் (ரலி) செய்த மற்றொரு மாற்றம்

நபி (ஸல்) அவர்கள் மினாவில் தங்கிய போது நான்கு ரக்அத்துக்கள் கொண்ட தொழுகைகளைக் குறைத்து இரண்டு ரக்அத்துக்களாக, பயணத் தொழுகையாகத் தான் தொழுதார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் இதை மாற்றி நான்கு ரக்அத்துக்களாகத் தொழுதார்கள். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆட்சேபிக்கின்றார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்கள் மினாவில் எங்களுக்கு (இரண்டாகச் சுருக்காமல்) நான்கு ரக்அத்களாகவே தொழுவித்தார்கள். இது பற்றி (அத்தொழுகையில் கலந்து கொண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வினப்பட்ட போது இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன் என்று கூறினார்கள். பின்னர் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். அபூபக்ர் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். மினாவில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடனும் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். (இப்போது நான் தொழுத) நான்கு ரக்அத்களிலிருந்து ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு ரக்அத்கள் எனக்கு வாய்க்க வேண்டுமே! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் யஸீத்

நூற்கள்: புகாரி 1084, முஸ்லிம் 1122

நபிவழி அடிப்படையில் சுருக்கித் தொழாமல், கூடுதலாகத் தொழுததால் அது அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக ஆக வேண்டுமே என்று ஆதங்கமும் படுகின்றார்கள்.

மர்வான் செய்த மாற்றம்

ஜும்ஆவில் தொழுகைக்கு முன்னர் உரை நிகழ்த்த வேண்டும். ஆனால் பெருநாளில் தொழுகைக்குப் பின்னர் உரை நிகழ்த்தப்பட வேண்டும். ஜும்ஆவில் தொழுகை முடியும் வரை மக்கள் கலையாமல் இருந்து உரையைச் செவிமடுக்கின்றனர். ஆனால் பெருநாள் தொழுகை முடிந்ததும் உரையைக் கேட்காமல் மக்கள் கலைந்து விடுகின்றனர். இதைக் கவனத்தில் கொண்டு மதீனாவில் ஆட்சியாளராக இருந்த மர்வான் என்பவர் நபிவழியை மாற்றியமைக்கின்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாலும் ஹஜ்ஜுப் பெருநாலும் (பள்வாசலில் தொழாமல்) திடலுக்குப் புறப்பட்டுச் செல்பவர்களாக இருந்தார்கள். அன்று அவர்கள் செய்யும் முதல் வேலை தொழுவதேயாகும். (தொழுகை முடிந்த) பின்னர் மக்களை முன்னோக்கி எழுந்து நிற்பார்கள். மக்கள் அனைவரும் அப்படியே தத்தமது வரிசைகல் அமர்ந்து கொண்டிருப்பார்கள் அப்போது மக்களுக்கு அவர்கள் உபதேசம் புரிவார்கள்; (வலியுறுத்த வேண்டியதை) அவர்களுக்கு வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) அவர்களுக்குக் கட்டளையிடுவார்கள். (ஏதேனும் ஒரு பகுதிக்கு) படைப் பிரிவுகளை அனுப்ப நினைத்திருந்தால் அனுப்பி வைப்பார்கள். அல்லது எதைப் பற்றியேனும் உத்தரவிடவேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். (இவற்றை முடித்த) பின்னரே (மதீனாவுக்கு) திரும்பிச் செல்வார்கள்.

மதீனாவின் ஆளுநரான மர்வான் பின் ஹகமுடன் ஒரு ஹஜ்ஜுப் பெருநாலோ அல்லது நோன்புப் பெருநாலோ நான் தொழச் செல்லும் வரை (முதலில் தொழுகை பிறகு சொற்பொழிவு எனும்) இந்த நடைமுறையையே கடைப்பிடித்து வந்தனர். (மர்வானுடன் நான் தொழச் சென்ற அந்த நால்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்த போது கஸீர் பின் ஸல்த் என்பார் உருவாக்கிய சொற்பொழிவு மேடை (மிம்பர்)

ஒன்று அங்கே தீடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் (பெருநாள் தொழுகையைத்) தொழுவிப்பதற்கு முன்பே சொற்பொழிவு மேடையில் ஏறப் போனார். உடனே நான் (முதலில் தொழுவித்து விட்டு பிறகு உரையாற்றும்படி கோர) அவரது ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் (சொற்பொழிவு மேடையில்) ஏறித் தொழுகைக்கு முன்பே உரை (குத்பா) நிகழ்த்தலானார். அப்போது நான் அவரிடம், அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிவழியை) மாற்றி விட்டீர்கள் என்று சொன்னேன். அதற்கு மர்வான், அபூ சயீதே! நீங்கள் அறிந்திருக்கும் (அந்த) நடைமுறை மலையேறி விட்டது என்று சொன்னார். அதற்கு நான், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிந்திருக்கும் (நபிகளாரின்) நடைமுறை நான் அறியாத (இந்தப் புதிய) நடைமுறையை விடச் சிறந்ததாகும் என்று சொன்னேன். அதற்கு மர்வான், மக்கள் தொழுகை முடிந்துவிட்டால் எம(து உரை)க்காக அமர்ந்து கொண்டிருக்க மாட்டார்கள். எனவே நான் உரையை தொழுகைக்கு முன்பே வைத்துக் கொண்டேன் என்று சொன்னார்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 956

ஆட்சியாளர் மர்வானின் இந்தச் செயலை அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தடுக்கிறார்கள். அதையும் மீறி மர்வான் தொழுகைக்கு முன்னர் உரை நிகழ்த்தி விடுகின்றார். ஆனாலும் மர்வான் கொண்டு வந்த அந்த மாற்றம் நீடிக்கவில்லை. ஆட்சியாளராக இருந்தாலும் மார்க்கத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முயற்சிக்கும் போது நபித்தோழர் அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் தம்மால் இயன்ற வரை தடுப்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிரியா பிறை சிரியாவுக்கே!

நபி (ஸல்) அவர்கள் காலம் தொட்டு இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டே சென்றது. சிரியாவும் இஸ்லாமிய சாம்ராஜ்யமானது. அகன்ற அரபகத்திலே நோன்பும், பெருநாட்களும் இரு வேறு பகுதிகளில் இரு வேறு நாட்களில் அமைந்தன. அப்போது சிரியாவில் முஆவியா (ரலி) பிறை பார்த்த தகவலைத் தெரிந்து கொண்ட இப்னு அப்பாஸ் (ரலி) அதை ஏற்கவில்லை. ஒட்டுமொத்த மதீனாவும் ஏற்கவில்லை. ஏன்? இதை முஸ்லிமில் இடம்பெறும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்? என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம் என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா? என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள் என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம் என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா? என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: குரைப்

நூல்: முஸ்லிம் 1819

இப்படித் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அதற்கு மாற்றமாக மதீனாவாசிகளாகிய நாங்கள் செயல்பட மாட்டோம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெளிவான விளக்கம் தருகிறார்கள். இன்றைய உலகப் பிறைச் சிந்தனை(?)யாளர்களை ஊனப் பார்வையாளர்கள் என்று வெளுத்துக் கட்டுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த பிறைச் சிந்தனை மற்றும் செயல்பாட்டுக்கு எதிராக எழுந்த உலகப் பிறைக்கு உலை வைத்து உடைத்தெறிகின்றார்கள். மார்க்கம் மாற்றப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகின்றார்கள்.

முஆவியாவுடன் மற்றொரு மோதல்

முஆவியா, இப்னு அப்பாஸ் ஆகிய இருவரும் கஅபாவை தவாஃப் செய்தார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ருக்னுல் யமானி, ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டார்கள். முஆவியாவோ கஅபாவின் எல்லா மூலைகளையும் முத்தமிட்டார்கள். அதைக் கண்ட இப்னு அப்பாஸ் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருக்னுல் யமானி, ஹஜருல் அஸ்வத் ஆகிய இரு மூலைகளைத் தவிர வேறெதையும் முத்தமிட மாட்டார்கள் என்று சொன்னார்கள். அதற்கு முஆவியா (ரலி), அம்மூலைகளில் எதுவும் வெறுக்கப்படக் கூடியதல்ல என்று பதிலளித்தார்கள்.

நூல்: அஹ்மத் 3533

ஆட்சித் தலைவர் முஆவியாவின் விருப்பம் கஅபாவின் எல்லா மூலைகளையும் முத்தமிட வேண்டும் என்பது! அதையே அவர் நிறைவேற்றவும் செய்கிறார்.

ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ஆட்சித் தலைவரைப் போல் செய்யாதது மட்டுமின்றி, அவ்வாறு செய்வது மார்க்கமல்ல என்பதையும் உணர்த்தி விடுகின்றார்கள். அதற்கு முஆவியா (ரலி) தமது சொந்தக் கருத்தைத் தான் பதிலாகத் தருகிறாரே தவிர மார்க்க ரீதியிலான ஆதாரம் எதையும் தரவில்லை. அதனால் அது மார்க்கமாகாது.

இதுவரை நாம் பார்த்த இந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இன்றைய அறிவியல் காலத்தில் ஒரு சில மார்க்கச் சட்டங்களைப் பார்ப்போம்.

பயணத் தொழுகை

அன்றைய கால தரைவழிப் பயணம் என்பது குதிரை, ஒட்டகம், கோவேறுக் கழுதைகள் போன்ற உயிர்ப் பிராணிகளை மையமாகக் கொண்ட பயணம். அதனால் 100 கி.மீ. தூரத்தைக் கடக்க ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஆகும். அதுபோன்ற கடினமான பயணம் இருந்த அந்தக் காலகட்டத்திற்குப் பயணத் தொழுகையின் சலுகைகள் பொருந்தும்; இப்போது இன்றைய அறிவியல் உலகில் 100 கி.மீ. என்பது ஒரு மணி நேர மேட்டர் தான். எனவே இப்போது அந்தச் சட்டம் பொருந்தாது; பயணத் தொழுகையின் சலுகை கிடையாது என்ற சிந்தனை மத்ஹபுக்காரர்களிடம் மிக ஆழமாக ஊறிப் போய் உள்ளது.

இவர்களின் இந்தச் சிந்தனைப்படி,

சுருக்கியும், இணைத்தும் தொழுகின்ற பயணத் தொழுகை

பயணத்தில் நோன்பை விடும் சலுகை

காலுறையில் மஸஹ் செய்யும் சலுகை போன்ற சட்டங்கள் எல்லாம் தேவையில்லை என்பதே!

சிரமத்திற்காகத் தான் இந்தச் சலுகைகள்! இப்போதைய வாகனங்களில் இந்தச் சிரமங்கள் இல்லை. அதனால் சலுகைகள் தேவையில்லை என்பதே இவர்களது முடிவு!

இவர்களின் இந்த முடிவை, தவாஃபின் முதல் மூன்று சுற்றுக்களில் ஓட்டம், பயணத் தொழுகை போன்றவற்றைக் குறிப்பிடும் ஹதீஸ்கள் தகர்த்து விடுகின்றன.

உலகப் பிறையும் ஊனப் பார்வையும்

இன்று உலகப் பிறை என்று சொல்லிக் கொண்டு, ஓர் ஊனப் பார்வைக் கூட்டம் இந்தியாவிலும் இலங்கையிலும் கிளம்பியிருக்கின்றது. இக்கூட்டம் பிறை மூலம் உலகை ஒன்றுபடுத்தப் போகிறோம் என்ற புதியதொரு தத்துவத்தை உதிர்த்தது. வேடிக்கை என்னவெனில் இவர்கள் தம் சொந்த ஊரிலேயே, தங்கள் சொந்த அமைப்பிலேயே ஒன்றாகப் பெருநாள் கொண்டாட முடியாமல் வெளியூரில் போய் பெருநாள் கொண்டாடினார்கள்.

ஒரு கூட்டம் லிபியாவைப் பார் என்றது. மற்றொரு கூட்டமோ சவூதியாவைப் பார் என்றது.

பிறையைப் புறக் கண்ணால் பார்க்க வேண்டியதில்லை, கணிப்பே போதுமானது என்றது ஒரு கூட்டம்.

பிறை பார்ப்பதும் வேண்டாம்; கணிப்பதும் வேண்டாம்; சவூதி சொல்வது தான் சட்டம் என்றது இன்னொரு கூட்டம்.

இப்படியெல்லாம் கோளாறு, குளறுபடிகள் செய்கின்ற கூட்டம் தோன்றும்; மார்க்கத்தில் இல்லாததைக் கொண்டு வந்து திணிக்கும். சவூதிக்கும் இந்தியாவுக்கும் இரண்டரை மணி நேரம் தானே வித்தியாசம் என்றெல்லாம் கேட்டு இஸ்லாத்தில் இல்லாத ஒன்றைக் கொண்டு வந்து சேர்க்க எத்தனிக்கும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்தந்த ஊர்களில் உள்ள பிறையை மட்டும் பார்; உலகப் பிறையைப் பார்க்காதே என்ற கருத்தில் உத்தரவிடுகின்றார்கள்.

அதைத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் மதீனா மக்களும் பின்பற்றுகிறார்கள். முஸ்லிமில் இடம் பெறும் குரைப் அறிவிக்கும் ஹதீஸ் இந்த விபரத்தைத் தெளிவாக நமக்குத் தெரிவிக்கின்றது.

ஸஹர் பாங்கு

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஸஹர் பாங்கை அறிமுகம் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ரமளானில்) பிலால், (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். எனவே, இப்னு உம்மி மக்தூம் அவர்கள் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும் வரை (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள் என்று கூறினார்கள்:

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 617

பிலால் (ரலி) அவர்கள், (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி (ஸல்) அவர்கள், இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர் தாம் ஃபஜ்ர் (வைகறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்! என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்போர்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1919

கடிகார அலாரம், கைப்பேசி அலாரம், தொலைக்காட்சி அலாரம், தொலைபேசி அலாரம் என்று அலறுகின்ற அலாரங்கள் நிறைந்த இந்த அறிவியல் காலத்தில் ஸஹர் பாங்கு தேவை தானா என்ற சிந்தனை ஏற்பட்டு, இந்த நபிவழியை தமிழகத்தில் யாரும் இது வரை நடைமுறைப்படுத்தவில்லை. அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீது ஜமாஅத் தான் அறிமுகம் செய்தது.

குர்ஆன், ஹதீஸைப் பெயரளவில் கொண்ட இயக்கம் கூட இதைக் குழப்பம் என்றது. ஓலமிடும் ஒலி பெருக்கிகளைக் காரணம் காட்டி இந்த நபிவழியைப் புறக்கணிக்கின்றது. நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் இந்த அறிவியல் உலகத்திற்குத் தேவையில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றது.

நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸைச் செயல்படுத்தினால் குழப்பம் வரும் என்று கூசாமல் சொல்கிறார்கள் என்றால் இவர்கள் யார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் நம்மைப் பார்த்து மனோ இச்சையைப் பின்பற்றுவதாகக் கூறுவது தான் இதில் வேடிக்கை.


இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த மார்க்கத்தில் ஏதேனும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஏதாவது ஒரு கூட்டம் முயலும். ஆனால் நிச்சயமாக அது முற்றிலும் முறியடிக்கப்படும்; காரணம் இந்த மார்க்கம் மாறாது.

EGATHUVAM JUL 2009