ஜனநாயகம் நவீன இணை வைத்தலா - 2
பி. ஜைனுல் ஆபிதீன்
ஆட்சியதிகாரம், சட்டம் இயற்றும்
அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது என்று வாதிட்டு ஜனநாயகத்தை மறுப்பது எவ்வளவு மடமை என்பதை
நாம் சென்ற இதழில் கண்டோம்.
இவ்வாறு வாதிடக் கூடியவர்கள் வணக்க வழிபாடுகளைச் செய்யும் போது
அல்லாஹ் கூறியபடி செய்யாமல் தங்களின் மதகுருமார்கள் சொன்னபடி செய்வதன் மூலம் தங்கள்
வாதத்திற்குத் தாங்களே முரண்படுகிறார்கள் என்பதையும் சென்ற இதழில் நாம் எடுத்து வைத்துள்ளோம்.
இந்த வாதத்தில் இவர்கள் பொய்யர்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகளே
அம்பலப் படுத்துவதை நாம் காணலாம்.
இவ்வாறு வாதிடும் இயக்கத்தினர் தமது இயக்கத்திற்காகவோ, அல்லது தமக்காகவோ ஒரு சொத்தை வாங்குகிறார்கள் என்று வைத்துக்
கொள்வோம். சொத்தின் உரிமையாளரிடம் பணத்தைக் கொடுத்துப் பேசி முடித்தவுடன் அந்தச் சொத்து
அவர்களுக்குரியதாகி விடும். இன்னும் உறுதிப்படுத்த நாடினால் இருவரும் எழுதி வைத்துக்
கொள்ளலாம். இப்படித் தான் குர்ஆனும், நபிவழியும்
கூறுகின்றன.
ஆனால் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப முத்திரைத் தாள் வாங்குவதும், அந்த முத்திரைத் தாளில் அதை எழுத வேண்டும் என்பதும், எழுதிய பின் அதைப் பத்திரப் பதிவாளர் முன் பதிவு செய்வதும் மனிதர்கள்
இயற்றிய சட்டமாகும். இந்த வாதத்தைச் செய்வோர் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால்
மேற்கண்ட மனிதச் சட்டங்களை மீற வேண்டும். வெள்ளைத் தாளில் மட்டும் எழுதி வைத்துக் கொள்ள
வேண்டும்.
இந்த வாதத்தைச் செய்யும் ஒருவர் கூட இப்படிச் செய்வதில்லை. எந்த
அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்று கூறினார்களோ அந்த அதிகாரத்துக்குக் கட்டுப்படும்
போது தங்கள் வாதம் பொய்யானது என்று தம்மையும் அறியாமல் ஒப்புக் கொள்கின்றனர்.
இது போன்ற வாதங்களைச் செய்பவர்கள் தமது அலுவலகத்துக்காகவோ அல்லது
சொந்தப் பயன்பாட்டுக்காகவோ ஒரு கட்டடம் கட்ட நினைக்கிறார்கள். அல்லது ஒரு பள்ளிவாசலையே
கட்ட நினைக்கிறார்கள். நமக்குச் சொந்தமான இடத்தில் நாம் விரும்பும் கட்டடத்தைக் கட்டிக்
கொள்ளும் உரிமை இஸ்லாத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மனிதச் சட்டங்கள் இதில் பல விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளன.
கட்டப்படும் கட்டடத்தின் அளவு, பயன்படுத்தப் படும் மூலப் பொருட்கள், கட்டடத்தின் உயரம் மற்றும் அடுக்குகள் அனைத்தையும் முன்கூட்டியே
திட்டமிட்டு,
பல மட்டங்களில் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறாமல் கட்டடம்
கட்டக் கூடாது என்பது மனிதச் சட்டம்.
இப்போது இவர்கள் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன
செய்ய வேண்டும்?
எனது சொந்த இடத்தில் சொந்தக் கட்டடத்தைக் கட்ட நான் எவரிடமும்
அனுமதி பெற மாட்டேன் என்று கூற வேண்டும். ஆனால் தமது வாதத்தைத் தாமே மீறும் வகையில்
அந்த மனிதச் சட்டத்தை அப்படியே பேணுவதைக் காண்கிறோம். அல்லாஹ்வுக்கே அதிகாரம் என்பது
இப்போது இவர்களுக்கு மறந்து போய் விடுகின்றது.
இவர்கள் தமது கொள்கைகளை மக்களிடம் சொல்வதற்காக வார, மாத இதழ்களை நடத்துகிறார்கள். இஸ்லாம் இந்த உரிமையை வழங்கியுள்ளது.
ஆனால் இவர்கள் அற்பமான தபால் சலுகை வேண்டும் என்பதற்காக இதழ்களின் பெயரைப் பதிவு செய்கிறார்கள்.
அதற்காகப் பல்வேறு துறைகளில் அனுமதி பெறுகிறார்கள்.
மனிதச் சட்டங்களுக்குப் பணிந்து நாங்கள் அனுமதி வாங்கியுள்ளோம்
என்பதைத் தெரிவிக்கும் வகையில் பதிவு எண்களைக் குறிப்பிடுகிறார்கள். சட்டம் இயற்றும்
அதிகாரம் மனிதனுக்கு உள்ளதை அப்போது மட்டும் ஒப்புக் கொள்கிறார்கள்.
இந்த வாதத்தைச் செய்பவர்களை ஒருவன் மோசடி செய்து விட்டால் இவர்கள்
என்ன செய்கிறார்கள்? மனிதச் சட்டங்களின் அடிப்படையில்
உருவாக்கப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படியோ அல்லது இந்திய உரிமையியல் சட்டத்தின்
படியோ புகார் தெரிவிக்கின்றனர். நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கின்றனர். மனிதச் சட்டங்களின்படி
எங்களுக்கு நீதி வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகுவதன் மூலம் தங்கள் வாதம் அபத்தமானது
என்பதை ஒப்புக் கொள்கின்றனர். மனிதச் சட்டங்களை ஏற்றுக் கொண்டால் தான் மோசடி செய்யப்பட்ட
பணம் எங்களுக்குக் கிடைக்கும் என்றால் அது எங்களுக்குத் தேவையில்லை என்று கூற வேண்டியது
தானே?
இவர்களின் வீட்டில் ஒருவன் திருடி விடுகிறான். இலட்சக் கணக்கான
ரூபாய் மதிப்புடைய பொருள் திருட்டுப் போய் விடுகின்றது. இஸ்லாமியச் சட்டத்தின்படி திருடனின்
கையை வெட்ட வேண்டும். இந்தியாவில் சில மாதங்கள் சிறைத் தண்டனை தான் அளிக்கப்படும்.
அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமான சட்டம் தான் இந்தியாவில்
உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டே இவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். மனிதச்
சட்டப்படியாவது எங்களுக்கு நீதி வழங்குங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடுகின்றனர். இவர்கள்
செய்த வாதம் இப்போது என்னவானது?
ஹஜ் எனும் கடமையைச் செய்ய எந்த மனிதரிடமும் நாம் அனுமதி வாங்க
வேண்டியதில்லை. ஆனால் பாஸ்போர்ட், விஸா என்று பல்வேறு அனுமதிகளை
வாங்கினால் தான் ஹஜ் செய்ய முடியும் என்று மனிதச் சட்டங்கள் கூறுகின்றன.
மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை
என்ற முடிவுக்கு இவர்கள் வருகிறார்களா? அல்லது மனிதச்
சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டும் என்று கூறுவார்களா?
இவர்கள் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தித் தான் எல்லாவிதமான
கொடுக்கல் வாங்கல்களையும் செய்கிறார்கள்.
தங்கம், வெள்ளி போன்றவை இயற்கையாகவே
மதிப்புடைய பொருட்கள். அதன் மூலம் கொடுக்கல், வாங்கல் நடத்தினால்
அதில் குறை ஏதும் சொல்ல முடியாது.
அல்லது பண்டமாற்று முறையில் கொடுக்கல் வாங்கல் நடத்தினால் அதையும்
குறை கூற முடியாது. ஏனெனில் பண்டங்களுக்கு இயற்கையாகவே மதிப்பு உள்ளது.
ஆனால் ரூபாய் நோட்டுக்களுக்கு இயற்கையாக எந்த மதிப்பும் கிடையாது.
1000 ரூபாய் நோட்டுக்கு உரிய இயற்கையான மதிப்பு அதைத் தயாரிக்க ஆகும்
செலவு தான். அதாவது 1000 ரூபாய் நோட்டைத் தயாரிக்க 10 ரூபாய் ஆகும் என்றால் அது தான் அந்தக் காகிதத்தின் மதிப்பு!
மனிதச் சட்ட அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, அந்தப் பேப்பரைக் கொண்டு வருபவனுக்கு 1000 ரூபாய் மதிப்புடைய பொருளைக் கொடுக்கலாம் என்று உத்தரவாதம் தருவதால்
தான் அதற்கு செயற்கையாக மதிப்பு கூடுகின்றது.
ஒருவர் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்திக் கொடுக்கல் வாங்கல்
செய்யும் போதே,
மனிதச் சட்டங்களைப் பின்பற்றாமல் என்னால் வாழ முடியாது என்று
வாக்குமூலம் தருகிறார்.
குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, சாலை விதிகள்
என ஆயிரமாயிரம் விஷயங்களில் சட்டமியற்றும் அதிகாரம் மனிதனுக்கு இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.
இதற்குக் கட்டுப்படாமல் ஒரு மனிதனும் வாழ முடியாது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.
யாரும் சொல்லாத தத்துவத்தை (?) சொன்னால்
ஒரு கூட்டம் சேர்க்கலாம் என்பதற்காக மக்களை மடையர்களாக்குகிறார்களே தவிர எள்ளளவும்
இவர்களது வாதத்தில் நேர்மையில்லை.
தேர்தலைப் புறக்கணிப்பதற்கு மட்டும் தான் இவர்களது வாதத்தை நடைமுறைப்படுத்த
முடியுமே தவிர இதைத் தவிர வேறு எந்த ஒன்றிலும் இவர்களின் வாதம் செல்லத்தக்கதாக இல்லை.
தமது வாதத்தைத் தாமே மறுக்கும் இழிவு தான் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.
இந்த வாதத்தில் உள்ள இன்னும் பல தவறுகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த
இதழில் காண்போம்.
EGATHUVAM FEB 2009