Apr 12, 2017

அசத்தியத்திற்கு அடிமையாக வேண்டாம்

அசத்தியத்திற்கு அடிமையாக வேண்டாம்

அப்பாஸ் அலீ

இஸ்லாத்துடன் மற்ற மதங்களை ஒப்பிடும் போது எந்த மதத்திலும் இல்லாத பல்வேறு தனிச் சிறப்புகளை இதில் மட்டுமே நம்மால் காண முடியும். அல்லாஹ்வின் மார்க்கம் மனிதர்களின் மறுமை வெற்றிக்கு வழிகாட்டுவதோடு இம்மை வெற்றிக்கும் வழிகாட்டுகிறது. திருக்குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் களையும் ஒருவர் கடைப்பிடித்து வாழ்ந்தால் இந்த உலகத்திலேயே அவர் நன்மைகளை அடைய முடியும். இது இஸ்லாத்திற்கு மட்டும் உள்ள தனிச் சிறப்பாகும்.

பேய் பிசாசு நம்பிக்கை உள்ளவர்களால் இரவில் தன்னந் தனியாகச் செயல்பட முடியாது. யாரும் இல்லாத தெருவில் தனியே நடமாட முடியாது. பயம் இவர்களை கவ்விக் கொள்ளும். நிம்மதியை இழந்து கோழைகளாகத் திரிவார்கள். பில்லி சூனியத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் தனக்கு ஏதாவது சிறிய சிரமம் வந்து விட்டாலும் யாராவது சூனியம் வைத்து விட்டார்களோ என்று பதறுவார்கள். அறிவை இழப்பதோடு சம்பாதித்த பொருளையும் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் கொடுத்து ஏமாறுகிறார்கள். பேய், பிசாசு, பில்லி, சூனியம், தகடு, தாயத்து போன்ற மூட நம்பிக்கைகளுக்கு இஸ்லாத்தில் எள் அளவு கூட அனுமதியில்லை. பில்லி சூனியம், தர்ஹா வழிபாடு போன்ற அனாச்சாரங்களை நம்பாதவர்கள் தங்களது பொருளாதாரத்தையும் அறிவையும் பாதுகாத்துக் கொள்கிறார்கள். சுய மரியாதையுடன் வீரர்களாக வலம் வருகிறார்கள். இது ஏகத்துவக் கொள்கையால் இந்த உலகத்தில் நமக்குக் கிடைக்கின்ற நன்மைகளாகும். அனாச்சாரங்களுக்கு ஆணிவேர்

மூட நம்பிக்கைகளை நிலை நாட்டுவதற்காகப் புனையப்பட்ட கற்பனைக் கதைகளை அடிப் படையாகக் கொண்டு, இவை உண்மை என்று பலர் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஏமாற்றுப் பேர்வழிகள் செய்து காட்டும் தந்திர வித்தைகளை உண்மை என்று நம்பி ஏமாறுபவர்களும் உண்டு. மேஜிக் என்று கூறி தந்திர வித்தைகளை மக்களுக்குப் பலர் செய்து காட்டுகிறார்கள். இவர்களது வித்தைகளைப் பார்க்கும் போது ஏதோ அற்புதங்களைச் செய்வது போல் நமக்குத் தோன்றுகிறது. வித்தைகளை செய்து காட்டுபவர் இது கண்கட்டி வித்தை தான். இதில் எந்த அற்புதமோ மறைமுகமான சக்தியோ இல்லை என்று கூறும் போது இது பொய்யான வித்தை தான் என்று மக்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் இதே வித்தைகளை பில்லி சூனியம், மறைமுகமான சக்தி என்று கூறிச் செய்தால் மக்கள் அப்போதும் நம்பத் தயாராக இருக்கிறார்கள். ஏமாற்றப்பட்ட தங்களின் கண்களை மட்டுமே நம்புகிறார்கள். இந்த இடத்தில் குர்ஆன் ஹதீஸை வைத்து உரசிப் பார்த்து, சிந்திக்க மறந்து விடுகிறார்கள். தங்களுடைய நோக்கங்களை அடைவதற்காகப் பேய் பிசாசு தன் மீது வந்து விட்டதாகக் கூறி நாடகமாடுபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களது நெருங்கிய உறவினர்களாக இருப்பதால் இவர்களின் மீதுள்ள நம்பிக்கையில் மூடநம்பிக்கையை உண்மை என்று பலர் கருதுகிறார்கள். இந்த மூட நம்பிக்கைகள் பொய்யானவை என்பதற்கான போதிய ஆதாரங்களை குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து அறிந்த பிறகும் சிலருக்குச் சந்தேகம் வருகிறது. எனது தாய்க்குப் பேய் பிடித்திருக்கிறது. எனது சகோதரிக்கு சூனியம் செய்யப்பட்டிருக்கிறது. தர்ஹாக்களுக்குச் சென்ற உடன் நோய் குணமாகி விட்டது. இதுவெல்லாம் எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? என்று சிலர் கூறுவதே இந்தச் சந்தேகத்திற்குக் காரணம். உறுதியான ஈமான் உள்ளவன் இவையெல்லாம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தவறான நம்பிக்கைகளாக இருப்பதை மட்டும் கவனத்தில் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு இவை பொய்யானவை என்று நம்புவான். இறைவன் எப்படிப் பொய் சொல்வான்? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்படிப் பொய் சொல்வார்கள்? என்று ஒருவன் நினைத்தால் அவன் இதுபோன்ற தவறான நம்பிக்கைகளுக்கு இடமளிக்க மாட்டான். மூடநம்பிக்கை மருத்துவம்

தங்களுக்கு அற்புத சக்தி இருக்கிறது என்று மக்களை நம்ப வைத்தால் தான் அதிகமான செல்வத்தைக் கொள்ளையடிக்கலாம் என்று போலி மந்திரவாதிகள் நினைக்கிறார்கள். வெறுமனே மருத்துவம் என்று கூறி சிகிச்சை செய்தால் பெரிய அளவில் இலாபத்தை ஈட்ட முடியாது என்று இவர்கள் கருதுகிறார்கள். எனவே மருத்துவம் செய்துவிட்டு நோய் நீங்கியதற்குத் தன்னுடைய தனிப்பட்ட ஆற்றல் தான் காரணம் என்று மக்களை நம்ப வைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் மந்திரவாதி கொடுத்த மருந்தாலும் சிகிச்சையாலும் தான் நோய் குணமாகிறது.

எந்த மருந்தும் இல்லாமல் வைத்தியம் செய்யும் முறை இன்றைக்குக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. உடலில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து அந்த உறுப்பை செயலுறச் செய்யும் நரம்பை தூண்டினால் கோளாறு சரியாகி விடும். இதை மருத்துவம் என்று கூறிச் செய்தால் பிரச்சனையில்லை. ஆனால் பில்லி சூனியம் போன்ற மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்துச் செய்கிறார்கள். இவர்களது முயற்சியால் பலன் கிடைப்பதால் இவர்கள் கூறுவது உண்மை என்று நம்பி மக்கள் ஏமாறுகிறார்கள். ஈமானை இழந்த கூட்டம்

மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாரான இஸ்ரவேலர்கள் இறைவன் புறத்திலிருந்து பல சான்றுகளைக் கண்கூடாகப் பார்த்தார்கள். வல்ல இறைவனைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்ற ஏகத்துவக் கொள்கையை உறுதிப் படுத்தும் பல அற்புதங்களைக் கண்டார்கள். மன்னு ஸல்வா என்ற வானுலக உணவு இறைவன் புறத்திலிருந்து இலவசமாக இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. மூஸா (அலை) அவர்களையும் அவர்களுடன் இருந்த ஈமான் கொண்டவர்களையும் காப்பாற்றுவதற்காக அல்லாஹ் கடலில் ஒரு பாதையை ஏற்படுத்தினான். இதைக் கண்கூடாகக் கண்டு இறைவனது அற்புத உதவியால் உயிர் பிழைத்தவர்கள் தான் இந்த இஸ்ரவேலர்கள்.

தண்ணீருக்கு வழியில்லாமல் தாகத்தால் இவர்கள் வாடிய போது தனது கைத்தடியைப் பாறையின் மீது அடித்து அதில் பன்னிரண்டு நீரூற்றுக்களை மூஸா (அலை) அவர்கள் இறைவனுடைய உதவியால் வரவழைத்தார்கள். இந்த அற்புதத்தையும் கண்ணால் கண்டு பயனடைந்தவர்கள் தான் இந்த இஸ்ரவேலர்கள். கொலை செய்யப்பட்ட ஒருவர் இறைவனால் உயிரூட்டப்பட்டு கொலை செய்தவர் யார் என்பதைத் தன் வாயினால் தெளிவுபடுத்திய அற்புதத்தையும் கண்கூடாக இவர்கள் கண்டார்கள். இறை நம்பிக்கையை அதிகப்படுத்தும் பல அற்புதங்களை இவர்கள் கண்கூடாகக் கண்டிருந்தும் சாமிரீ என்பவன் செய்து காட்டிய அற்பமான வித்தையை நம்பி இறை நிராகரிப்பாளர்கள் ஆனார்கள். இஸ்ரவேலர்கள் வைத்திருந்த நகைகளைச் சேகரித்து அவற்றை உருக்கி ஒரு காளைக் கன்றை சாமிரீ செய்தான். மூஸா (அலை) அவர்களின் காலடி மண்ணை எடுத்து உலோகத்தால் ஆன மாட்டிற்குள் எறிந்தான். அந்த மாட்டிலிருந்து ஒரு சப்தம் வந்தது. சப்தம் வந்ததை அடிப்படையாக வைத்து, இது தான் நமது கடவுள் என்று இஸ்ரவேலர்கள் நம்பி சாமிரீயின் சதியில் விழுந்தார்கள். நமது அறிவுக்குப் புலப்படாத காரியங்களைச் செய்து இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமான கருத்துக்களை அவன் விதைக்கும் போது, இதில் ஏதோ பித்தலாட்டம் உள்ளது என்று புரிந்து கொண்டு ஈமானில் உறுதியாக இஸ்ரவேலர்கள் இருந்திருக்க வேண்டும். சப்தமிட்ட இந்தப் போலிப் பிராணியால் நமது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா? நமக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியுமா? என்று இவர்கள் சிந்தித்துப் பார்த்திருந்தால் சாமிரியால் உருவாக்கப்பட்ட சிலையை அவர்கள் கடவுளாக ஏற்றிருக்க மாட்டார்கள். உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழி கெடுத்து விட்டான் என்று (இறைவன்) கூறினான்.

உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப்பட்டவராகவும் திரும்பினார். என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா? அல்லது (நான் புறப்பட்டுப் போய்) அதிக காலம் ஆகி விட்டதா? அல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா? என்று கேட்டார்.

நாங்கள் உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு திட்டமிட்டு மாறு செய்யவில்லை. மாறாக அந்தச் சமுதாயத்தின் அணிகலன்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டன. அதை வீசினோம். இவ்வாறே ஸாமிரியும் வீசினான்.

அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவன் இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார் என்றான்.

அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?

என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக்குக் கட்டுப் படுங்கள்! என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.

மூஸா, எங்களிடம் திரும்பி வரும் வரை இதிலேயே நீடிப்போம் என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 20:85-91

உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம் என்று அல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடம் கூறுகிறான். இஸ்ரவேலர்கள் காளைக் கன்றை கடவுளாக ஆக்கிக் கொண்ட போது இதன் மூலம் நீங்கள் சோதிக்கப்படுகிறீர்கள் என்று ஹாரூன் (அலை) அவர்களும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

நமது இறை நம்பிக்கையை இறைவன் சோதிப்பதற்காக ஸாமிரீ போன்ற பொய்யர்கள் உருவாவார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றும் வித்தைகளைக் காட்டி இறை மறுப்பின் பக்கம் மக்களை இழுத்துச் செல்வார்கள். இந்த நேரத்தில் இவர்கள் கூறும் பொய்யான வித்தைகளை உண்மை என்று நம்பி பேய் பிசாசு, பில்லி சூனியம், ஏவல் போன்ற மூட நம்பிக்கைகளில் நாம் விழுந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும். இதைத் தான் மேற்கண்ட சாமிரியின் சம்பவம் தெளிவாக எடுத்துரைக்கிறது. தஜ்ஜாலுடைய குழப்பம்

பிற்காலத்தில் தஜ்ஜால் என்பவன் தோன்றுவான். அவன் பல அற்புதங்களை மக்களுக்கு முன்னிலையில் செய்து காட்டி தன்னைக் கடவுளாக ஏற்றுக் கொள்ளுமாறு கூறுவான். ஈமானில் பலவீனமானவர்கள் இவன் சொல்வதை உண்மை என்று நம்பி இவனைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்வார்கள். அற்பமான கண் கட்டி வித்தைகளைக் கண்டு ஏமாறுபவர்கள் கண்டிப்பாக தஜ்ஜாலுடைய குழப்பத்தில் விழாமல் இருக்க மாட்டார்கள். தஜ்ஜால் செய்கின்ற அற்புதம் மிகவும் வியக்கத்தக்க விதத்தில் இருக்கும். இறைவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாத காரியங்களைக் கூட செய்து காட்டி மக்களை நம்ப வைப்பான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: நான் உங்கடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன். வேறெந்த இறைத் தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம், நரகம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதைச் சொர்க்கம் என்று கூறுகின்றானோ அது தான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர) நூல்: புகாரி 3338

நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதை விட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), உமது கேள்வி என்ன? என்று கேட்டார்கள். நான், தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் இறைச்சியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இது என்ன பிரமாதம்? அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்ட விருக்கிறானோ) அவற்றை விட இவை அல்லாஹ்வுக்கு மிகவும் சாதாரணமானவையே என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா(ரலி)

நூல்: முஸ்லிம் 5634

உறுதியான இறை நம்பிக்கை உள்ளவர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஜ்ஜால் புறப்பட்டு வரும் போது இறை நம்பிக்கையாளர்களில் ஒருவர் அவனை நோக்கிச் செல்வார். அப்போது அவரை ஆயுதமேந்திய தஜ்ஜாலின் பாதுகாப்புப் படையினர் எதிர்கொண்டு, எங்கே செல்கிறாய்? என்று கேட்பார்கள். அந்த மனிதர், (இப்போது) புறப்பட்டிருக்கும் இந்த மனிதனை நோக்கிச் செல்கிறேன் என்று பதிலளிப்பார். அதற்கு அவர்கள், நம் இறைவனை (தஜ்ஜாலை) நீ நம்பவில்லையா? என்று கேட்பார்கள். அந்த மனிதர், நம் இறைவன் யார் என்பது தெரியாதது அல்ல என்று கூறுவார். அதற்கு அவர்கள், இவனைக் கொல்லுங்கள் என்று கூறுவார்கள். அப்போது அவர்களில் சிலர் சிலரிடம், உங்கள் இறைவன் (தஜ்ஜால்), யாரையும் தானின்றி கொல்லக் கூடாதென உங்களுக்குத் தடை விதிக்கவில்லையா? என்று கூறுவார்கள். ஆகவே, அவர்கள் அந்த மனிதரை தஜ்ஜாலிடம் கொண்டு செல்வார்கள். அந்த இறை நம்பிக்கையாளர் தஜ்ஜாலைக் காணும் போது, மக்களே! இவன் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட தஜ்ஜால் ஆவான் என்று சொல்வார்.

உடனே தஜ்ஜாலின் உத்தரவின் பேரில், அவர் பிடித்துக் கொண்டு வரப்பட்டு (தூண்களுக்கிடையே) நிறுத்தப்படுவார். இவனைப் பிடித்து இவனது தலையைப் பிளந்து விடுங்கள் என்று அவன் கட்டளையிடுவான். அப்போது அவர், முதுகும் வயிறும் வீங்கும் அளவுக்கு அடிக்கப்படுவார்.

பிறகு தஜ்ஜால், என் மீது நீ நம்பிக்கை கொள்ளவில்லையா? என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், நீ பெரும் பொய்யன் மசீஹ் ஆவாய் என்று கூறுவார். பிறகு அவரது உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து அவருடைய இரு கால்கள் வரை தனித் தனியே பிளக்கும்படி கட்டளையிடப்படும். அவ்வாறே செய்து (அவரது உடலை இரு துண்டுகளாக்கியதும்) அவ்விரு துண்டுகளுக்கிடையில் தஜ்ஜால் நடந்து வருவான்.

பிறகு அந்த உடலைப் பார்த்து, எழு என்பான். உடனே அந்த மனிதர் (உயிர் பெற்று) நேராக எழுந்து நிற்பார். பிறகு அவரிடம், என் மீது நம்பிக்கை கொள்கிறாயா? என்று தஜ்ஜால் கேட்பான். அதற்கு அந்த மனிதர், உன்னைப் பற்றி இன்னும் கூடுதலாகவே நான் அறிந்து கொண்டேன் என்று சொல்வார். பிறகு அந்த மனிதர், மக்களே! (இவன் இவ்வாறெல்லாம் செய்வதால் இவனை இறைவன் என நம்பி விடாதீர்கள்.) இவன் எனக்குப் பிறகு மக்களில் வேறெவரையும் எதுவும் செய்ய முடியாது என்று கூறுவார்.

உடனே தஜ்ஜால் அவரை அறுப்பதற்காகப் பிடிப்பான். ஆனால், அப்போது அவரது பிடரியிலிருந்து காறை எலும்புவரையுள்ள பகுதி செம்பாக மாறிவிடும். ஆகவே, அவனால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. பிறகு தஜ்ஜால் அந்த மனிதரின் கைகளையும் கால்களையும் பிடித்துத் தூக்கியெறிவான். அந்த மனிதரை தஜ்ஜால் நெருப்பில் தூக்கியெறிந்து விட்டான் என மக்கள் எண்ணிக் கொள்வார்கள். ஆனால், அவர் சொர்க்கத்தில் தான் வீசப்பட்டிருப்பார்.

இந்த மனிதர் தான் அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்விடம் மக்களிலேயே மகத்தான உயிர்த் தியாகம் செய்தவர் ஆவார் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 5632

மேற்கண்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்களால் புகழ்ந்து சொல்லப்பட்ட மனிதரிடமிருந்து நம் சமுதாயம் பாடம் பெற வேண்டும். உயிரை எடுப்பதும் உயிரைக் கொடுப்பதும் இறைவனின் ஆற்றல். இந்த ஆற்றலை இறைவன் சோதனைக்காக தஜ்ஜாலிற்கு வழங்கியுள்ளான். இவற்றைப் பயன்படுத்தி தஜ்ஜால் அற்புதம் செய்த போதிலும் அவனுடைய வழிகேட்டில் அந்த மனிதர் விழுந்து விடவில்லை. எனவே போலி வித்தைகளை நம்பி இறை நம்பிக்கையை இழந்து விடக் கூடாது.

பொய்யர்கள் என நிரூபிக்கும் சான்றுகள்

தவறான கருத்துக்களை விதைப்பவர்கள் எத்தனை தந்திர வித்தைகளைச் செய்தாலும் அவர்கள் பொய்யர்கள் என்பதற்கான சான்று களை அல்லாஹ் வைத்திருப்பான். கொஞ்சம் சிந்தனையைத் தூண்டினால் இந்தச் சான்றுகளை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். தஜ்ஜால் பாரதூரமான பல விஷயங்களைச் செய்து காட்டினாலும் அவன் இறைவன் கிடையாது என்பதை நிரூபிப்பதற்கு அவனிடத்தில் சில பலவீனங்களை அல்லாஹ் வெளிப்படுத்திக் காண்பிப்பான். அவனுடைய ஒரு கண் குறையுள்ளதாக இருக்கும். அவனது நெற்றியில் காஃபிர் - இவன் இறை மறுப்பாளன் என்று எழுதப் பட்டிருக்கும். உலகின் எல்லா பகுதிகளுக்கும் அவனால் சென்று வர முடியும். ஆனால் மக்காவிற்கும் மதீனாவிற்கும் அவனால் செல்ல முடியாது. இது போன்ற பலவீனங்கள் இறைவனுக்கு இருக்காது. எனவே சிந்தனையுள்ளவர்களும் இறை நம்பிக்கையாளர்களும் இவற்றை வைத்து இவன் பொய்யன் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்கன் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால் என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், தஜ்ஜால் என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனது கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ர) நூல்: புகாரி 3439

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காவல் புரிந்து கொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை நில நடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறை மறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)

நூல்: புகாரி 1881


EGATHUVAM FEB 2009