Apr 16, 2017

தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு தொடர்: 2

தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு தொடர்: 2

வலீமா விருந்து

திருமண நிலைப்பாடு தொடர்பான விஷயங்களில் மணப்பெண் தேர்வு மார்க்க அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும், திருமண உரை என்பது கட்டாயமல்ல என்பதையும் கடந்த இதழில் கண்டோம்.

திருமணத்திற்காக உற்றார் உறவினர்களை, நண்பர்களை அழைக்கச் செல்லும் நம்முடைய சகோதரர்கள் வாய்மொழியாக அழைத்தாலும், அழைப்பிதழ்கள் வாயிலாக அழைத்தாலும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தான் அழைக்கிறார்கள்.

புகாரியில் இடம் பெற்ற அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் ஹதீஸ் அடிப்படையில் இப்படி ஓர் அழைப்பு இல்லை என்று தெளிவாக விளங்கிக் கொள்கிறோம்.

திருமண அவைக்கு ஒருவரை அழைக்கவில்லை என்றாலும், அழைத்த பின்னர் ஒருவர் திருமண சபைக்கு வரவில்லை என்றாலும் நம்முடைய தவ்ஹீத் சகோதரர்கள் கடுமையாகக் கடிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கடிந்து கொள்வதற்குக் காரணம், திருமணம் தொடர்பான இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ளாதது தான்.

அதே சமயம் திருமணத்தின் போது வைக்கப்படுகின்ற விருந்தில் கலந்து கொள்வது நபிவழியாகும்.

ஒருவர் திருமண சபையில் போல் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. ஆனால் திருமண விருந்திற்கு அழைக்கப்பட்டு அதில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர் மீது குற்றமாகும்.

3. வலீமா விருந்து

நபி (ஸல்) அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை விருந்து வைக்கும்படிச் சொல்கிறார்கள். ஆனால் இது கட்டாயமோ, கடமையோ கிடையாது. கடன் வாங்கியோ, சொத்துக்களை விற்றோ, நகைகளை அடகு வைத்தோ விருந்து வைக்கக் கூடாது.

கறி, சாப்பாடு போட்டுத் தான் விருந்து வைக்க வேண்டும் என்பதில்லை. வெறும் பிஸ்கட், டீயாகக் கூட இருக்கலாம்.

வசமான இறைச்சி இல்லையென்றால் அது வலீமா விருந்தே அல்ல என்றே சமுதாயம் கருதுகின்றது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் இறைச்சி இல்லாமலேயே வலீமா விருந்தளித்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (சத்துஸ் ஸஹ்பா எனுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அப்போது நபியவர்கன் வலீமா - மணவிருந்துக்காக முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்கடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, (அவ்வாறே அது கொண்டுவந்து விரிக்கப்பட்டது.) அதில் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவை இடப்பட்டன. இதுவே அன்னாரின் வலீமா - மணவிருந்தாக அமைந்தது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 5159

எனவே வலீமா விருந்தை சாதாரணமாக இனிப்பு வழங்கி அல்லது சம்சா, டீ வழங்கி நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இன்று திருமணத்தின் போது ஏற்படுகின்ற உச்சக்கட்ட செலவே இந்த விருந்தில் தான். அதிலும் கடன் வாங்கி, கடன் கிடைக்காத போது வட்டிக்கு வாங்கி விருந்து வைக்கும் கொடுமை சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. கடன் வாங்கிக் கல்யாணம் என்று சொல் வழக்கில் உதாரணம் கூறும் அளவுக்குத் திருமணத்தின் போது கடன் வாங்கும் கொடுமை, சமுதாயத்தில் ஊடுருவி விட்டது. இதற்காகப் பலர் வீட்டைக் கூட விற்றிருக்கின்றனர். அந்த அளவுக்கு இந்தத் திருமண விருந்து மக்களை ஆட்டி அலைக்கழிக்கின்றது.

அதனால் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் இந்தச் சமூக நிர்ப்பந்தத்திற்குப் பலியாகி விடக் கூடாது.

திருமணத்திற்காகக் கடன் வாங்குவதற்கு அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். ஏனெனில், கடன் இருந்தால் இறைவனின் மன்னிப்பு கிடைக்காது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே நின்று, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும் என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்? என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்) என்று பதிலளித்தார்கள்.

பிறகு (சிறிது நேரம் கழித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எப்படிக் கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்)? என்று கேட்டார்கள். அந்த மனிதர், நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்? என்று கேட்டார்.

மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம், நீங்கள் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும்போது (கொல்லப்பட்டுவிட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.) ஆனால், கடனைத் தவிர! ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போதுதான்) இவ்வாறு கூறினார் என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி), நூல்: முஸ்லிம் 3498

எனவே சமுதாயம் வெட்டி வைத்திருக்கும் சமூக நிர்ப்பந்தம் என்ற படுகுழியில் கொள்கைச் சகோதரர்கள் விழாத வண்ணம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி விருந்து வைக்கும் அவல நிலைக்குச் சென்று விடக் கூடாது.

4. விருந்தில் கலந்து கொள்ளுதல்

திருமண விருந்துக்கு ஒருவர் அழைக்கப்பட்டால் அந்த விருந்தில் போய் கலந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் விருந்துக்குப் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை: ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸாவைப் பின் தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1240

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கல் ஒருவர் வலீமா (மண) விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதனை ஏற்றுச் செல்லட்டும்!

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி 5173

வலீமாவில் கலந்து கொள்வது சுன்னத் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அது மாப்பிள்ளை வீட்டு விருந்தாக இருக்க வேண்டும்.

பெண் வீட்டு விருந்து

ஒரு கொள்கைவாதி, தன் மகளை, தன் பொறுப்பில் சகோதரியைத் திருமணம் முடித்துக் கொடுத்தால் அதற்காகத் தனது வீட்டில், அதாவது பெண் வீட்டில் விருந்து வைக்கக் கூடாது. பிறர் வைக்கின்ற பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்ளவும் கூடாது.

இவ்வாறு நாம் சொல்கின்ற போது, பெண் வீட்டு விருந்துக்கு மார்க்கத்தில் தடை இருக்கின்றதா? என்று கேள்வி கேட்கிறார்கள். பெண் வீட்டு விருந்து வைப்பதற்குத் தடையில்லை என்று தீர்ப்பும் அளிக்கிறார்கள். இப்படித் தீர்ப்பளிப்பது பாமரனாக இருந்தால் பரவாயில்லை. மார்க்கம் படித்த, அதிலும் மதீனாவில் போய் மார்க்கம் படித்தவர்கள் இந்த அறியாமைக் கேள்வியைக் கேட்கிறார்கள். இவர்களுக்கு மார்க்கத்தின் முக்கியமான அடிப்படையே தெரியவில்லை.

தடை இருக்கின்றதா?

தடை இருக்கின்றதா? என்று எப்போது, எதில் பார்க்க வேண்டும் என்று தெரியாததால் தான் இப்படி ஒரு புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்கிறார்கள்.

தடையை எப்போது பார்க்க வேண்டும்? எதில் பார்க்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உத்தரவு, அங்கீகாரம் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். ஒருவர் லுஹர், மக்ரிப், இஷா ஆகிய தொழுகைக்குப் பின்னால் சுன்னத் தொழுவது போன்று ஃபஜ்ருக்குப் பின்னாலும் சுன்னத் தொழலாமா? என்று நினைக்கின்றார். இப்போது அவர் அதற்கு உத்தரவு இருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும். அதாவது அல்லாஹ்வின் கட்டளை அல்லது தூதர் (ஸல்) அவர்களின் கட்டளை, அல்லது பிறர் செய்வதைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் அளித்த ஒப்புதல் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.

ஃபஜ்ர் தொழுகையில் முன் சுன்னத்தை விட்டிருந்தால், பின்னால் தொழலாம். ஆனால் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் சுன்னத் என்பது கிடையாது. இது தெளிவாகத் தெரிந்த பின்னால் அவர் நம்மிடம், ஃபஜ்ருக்குப் பின் சுன்னத் தொழுவதற்குத் தடை இருக்கின்றதா? என்று கேட்கக் கூடாது. காரணம், இபாதத்தில், வணக்கத்தில் நாம் பார்க்க வேண்டிய அளவுகோல் உத்தரவு இருக்கின்றதா? என்பது தான்.

ஒரு சில ஊர்களில் பெருநாள் தொழுகைக்கு முன்பு சுன்னத் தொழுகின்றார்கள். இவ்வாறு தொழக் கூடாது என்று நாம் சொல்கின்ற போது, இதற்குத் தடை இருக்கின்றதா? என்ற கேள்வியைக் கேட்கக் கூடாது. ஏனெனில் இது வணக்கம். இதில் உத்தரவு இருக்கின்றதா? என்று தான் பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று முதன் முதலில் பெருநாள் தொழுகையைத் தான் தொழுதிருக்கின்றார்கள். மற்ற தொழுகையைத் தொழவில்லை. (பார்க்க: புகாரி 751)

இந்த அளவுகோல் நாமாகக் கண்டுபிடித்தது அல்ல! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2697

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 3242

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு அமலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 3243

பின் விளைவுகள் பித்அத்துக்கள் தான்

முஸ்லிம் 3243 ஹதீஸில் அமல் - வணக்கம் என்ற வார்த்தையே இடம்பெறுகின்றது. இபாதத்தில், வணக்க வழிபாடுகளில் இப்படி ஓர் அளவுகோல் இல்லை என்றால் எல்லா பித்அத்களும் உள்ளே நுழைந்து விடும்.

எல்லா பித்அத்களையும் நியாயப்படுத்த, தடை இருக்கின்றதா? என்ற கேள்வி காரணமாக அமைந்து விடும்.

தொழுகைக்குப் பின் கூட்டு துஆ ஓதாதீர்கள் என்று நாம் சொன்னால் அவ்வாறு ஓதுபவர் உடனே, தடையிருக்கின்றதா? என்று கேட்பார். இதுபோல் மிஃராஜ் இரவில் தொழுகை, மிஃராஜில் நோன்பு நோற்றல், பராஅத் இரவுத் தொழுகைகள், பராஅத் நோன்பு, கத்தம் ஃபாத்திஹா என அனைத்து பித்அத்களும் அமர்க்களமாக அணி வகுத்து உள்ளே நுழைந்து விடும். எனவே இபாதத்துகளில் தடை இருக்கின்றதா என்று பார்க்கக் கூடாது. உத்தரவு அல்லது அங்கீகாரம் இருக்கின்றதா? என்று தான் பார்க்க வேண்டும்.

இபாதத்தில் உத்தரவைப் பார்க்க வேண்டும் என்று சொல்கின்ற போது, இபாதத்தில் தடையே வராது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. தடையும் வரும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்வாசலின் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சயைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பின்னர், உங்கல் எவருக்கேனும் ச உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தமது முகத்துக்கு எதிரே அவர் உமிழவேண்டாம்; தமது வலப் பக்கத்திலும் உமிழ வேண்டாம்; தம் இடப்புறமோ அல்லது பாதத்திற்கு அடியிலோ அவர் உமிழட்டும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 411

வாழ்க்கை தொடர்பானவை

உணவு, உடை, கொடுக்கல் வாங்கல் போன்றவை வாழ்க்கை சார்ந்த செயல்களில் அடங்கும்.

ஒரு முஸ்லிமுக்கு, சாப்பிட அனுமதிக்கப்பட்டவை எவை? உடுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டவை எவை? பொருளாதாரத்தைத் திரட்டுகின்ற வழிகளில் அனுமதிக்கப்பட்டவை எவை? என்று மார்க்கம் வழிகாட்டியாக வேண்டும். அவ்வாறு வழிகாட்டும் போது, தரை வாழ் பிராணிகளில் வெள்ளாடு சாப்பிடலாம், செம்மறியாடு சாப்பிடலாம், மாடு சாப்பிடலாம் என்று உண்ண அனுமதிக்கப்பட்ட பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

அதுபோன்று கடல்வாழ் பிராணிகளில் மீன் சாப்பிடலாம், நண்டு சாப்பிடலாம், இறால் சாப்பிடலாம் என்று ஒரு பட்டியல் நீளும்.

தாவர இனத்தில் வெள்ளரி சாப்பிடலாம்; வெங்காயம் சாப்பிடலாம் என்று அதில் ஒரு பட்டியல் போட வேண்டி வரும்.

உடையில் காட்டன் அணியலாம்; பாலியஸ்டர் அணியலாம் என்று ஒரு பட்டியல் நீளும்.

வியாபாரத்தில் அரிசி வியாபாரம் செய்யலாம், ஜவுளி வியாபாரம் செய்யலாம் என்று அனுமதிக்கப்பட்ட வியாபாரத்தின் பட்டியல் ஆயிரக்கணக்கில் வரும்.

இப்படி அனுமதிக்கப்பட்ட விஷயங்கள் என்று பார்த்தால் உலகில் கோடான கோடி தேறும். அத்தனையையும் ஒரு வேதத்தில் சொல்லி விட முடியாது. அப்படிச் சொன்னால் அது வேதமாக இருக்காது. அதற்கென்று பல நூறு பாகங்கள் தேவைப்படும். எனவே இதுபோன்ற வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் மார்க்கம் தடுக்கப்பட்டதை விளக்கி விடும்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். (அல்குர்ஆன் 2:173)

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (அல்குர்ஆன் 5:3)

உணவில் இதுபோன்ற வசனங்களிலும், ஹதீஸ்களிலும் தடை செய்யப்பட்ட உணவுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கும்.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். (அல்குர்ஆன் 2:275)

வியாபாரத்தில் வட்டி கூடாது, மோசடி கூடாது என்று தடைகள் கூறப்பட்டிருக்கும்.

எனவே இது போன்ற வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் தடை இருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும். இதில் உத்தரவு இருக்கின்றதா? என்று தேடக் கூடாது. அதே சமயம் இந்த விஷயங்களில் உத்தரவே வராது என்றும் விளங்கிக் கொள்ளக் கூடாது. உத்தரவும் வரும்.

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் 2:168)

இதுபோன்று உத்தரவு வரும் போது, அதற்கு மாற்றமானதைச் செய்யக் கூடாது என்ற தடையும் அதில் அடங்கியிருக்கும்.

தூய்மையானதை உண்ணுங்கள் என்று சொல்லப்பட்டால், அசுத்தத்தை உண்ணக் கூடாது என்ற தடை அதனுள் அடங்கியிருக்கும்.

பெண் வீட்டு விருந்துக்குத் தடை

இவற்றின் பின்னணியாகக் கொண்டு பெண் வீட்டு விருந்து பற்றிப் பார்ப்போம்.

வலீமா விருந்து விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை நோக்கி, அதாவது மணமகனை நோக்கி, நீ விருந்து கொடு! என்று சொல்கிறார்கள். எனவே மாப்பிள்ளை தான் விருந்து கொடுக்க வேண்டும் என்று தெளிவாகி விடுகின்றது.

பெண் வீட்டில் வரதட்சணை வாங்கக் கூடாது என்பதில் தவ்ஹீதுவாதிகள் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

ஆனால் வரதட்சணை வாங்கக் கூடாது என்று நாம் அழுத்தமான, ஆழமான பிரச்சாரத்தை மேற்கொள்கின்ற போது, குராபி ஆலிம்கள் நம்மைப் பார்த்து கேட்ட கேள்வி, பெண்ணிடத்தில் வாங்குவதற்குத் தடை இருக்கின்றதா? என்று தான்.

பிச்சைக்காரனுக்குப் பிச்சை போடுவதற்குப் பதிலாக அவனிடமிருந்து எடுப்பதற்குத் தடையிருக்கின்றதா? என்று கேட்பது போல் இருக்கின்றது என்று அதற்கு நாம் பதில் சொன்னோம்.

இப்போது இதே பதிலைத் தான், பெண் வீட்டு விருந்தை ஆதரிக்கும் ஜாக் போன்ற இயக்கத்தினரிடமும் கூறுகிறோம்.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! (அல்குர்ஆன் 4:4)

பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் என்று வருகின்றது. இதிலேயே பெண்ணிடம் வாங்கக் கூடாது என்ற தடையும் அடங்கியிருக்கின்றது. இந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு வரதட்சணை வாங்கக் கூடாது என்று வீரியமிகு பிரச்சாரத்தை மேற்கொள்கிறோம்.

அதே போன்று, மாப்பிள்ளையை நோக்கி, விருந்து கொடு என்று சொல்லும் போது, அந்த உத்தரவிலேயே, திருமண விருந்து பெண் வீட்டில் இல்லை என்ற தடையும் இருப்பது நமக்குத் தெளிவாக விளங்கி விடுகின்றது.

உத்தரவின்றி உள்ளே வராதே!

உத்தரவின்றி உள்ளே வரக் கூடாது என்று சில இடங்களில் போட்டிருப்பார்கள். அனுமதி பெற்று உள்ளே வரவும் என்று சில இடங்களில் போட்டிருப்பார்கள். இரண்டிலும் வார்த்தைகள் வெவ்வேறாக இருந்தாலும் கருத்து ஒன்று தான். உள்ள வருவதற்கு அனுமதி பெற்றாக வேண்டும் என்ற கருத்தைத் தான் இரண்டு வாசகங்களும் தருகின்றன.

இது போன்று தான் மார்க்கம் ஓர் உத்தரவைப் பிறப்பிக்கின்றது என்றால் அதற்கு நேர் மாறானதைச் செய்யக் கூடாது என்ற தடையும் அதில் உள்ளடங்கி விடுகின்றது.

அளக்கும் போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! (அல்குர்ஆன் 17:35)

இப்படி ஓர் உத்தரவை அல்லாஹ் பிறப்பிக்கின்றான் என்றால் அதற்கு நேர்மாறானதைச் செய்யக் கூடாது என்ற தடை அதில் அடங்கியுள்ளது. இந்தத் தடையை இன்னொரு இடத்தில் வெளிப்படுத்தியும் கூறுகின்றான்.

அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! (அல்குர்ஆன்11:84)

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் 2:168)

அனுமதிக்கப்பட்டதை உண்ணுங்கள் என்ற உத்தரவு இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. பின்வரும் வசனத்தில் ஹராமானதை உண்ணாதீர்கள் என்று வெளிப்படுத்திக் கூறப்படுகின்றது.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! (அல்குர்ஆன் 2:188)

மார்க்கம் ஓர் உத்தரவைப் பிறப்பிக்கின்ற போது, அதற்கு நேர்மாறானதைச் செய்யக் கூடாது என்ற தடையும் அதில் அடங்கியிருக்கின்றது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுகள்.

எனவே வாழ்க்கை சார்ந்த விஷயங்களாக இருந்தாலும் ஓர் உத்தரவு வந்து விட்டால் அதில், தடையிருக்கிறதா? என்று கேட்கக் கூடாது. அது அர்த்தமற்ற கேள்வியாகி விடும்; கேலிக் கூத்தாகி விடும்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 7:31

இப்படிக் கூறும் போது, நிர்வாணமாகப் பள்ளிக்கு வருவதற்குத் தடை இருக்கிறதா? என்று சிந்திப்பவர் எவரும் கேட்க மாட்டார்கள்.

எனவே இந்த விளக்கத்தின்படி, பெண் வீட்டு விருந்து என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கு நேர்மாற்றமான நடைமுறை; அது ஒரு மறைமுக வரதட்சணை. இந்த அடிப்படையில் இது ஒழித்துக்கட்டப்பட வேண்டிய ஒரு சமூகத் தீமை என்பதில் சந்தேகமில்லை.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM DEC 2009