இலங்கை உமர் அலியுடன் விவாதம்
மயக்கம் தெளிந்தது
(இலங்கை உமர் அலி என்பவர் தவ்ஹீத் இயக்கத்தில் பிரச்சாரம் செய்து
வந்தார். பின்னர் திடீரென தடம் புரண்டு புது வழியைக் கண்டுபிடித்தார். முஸ்லிம் என்றால்
ஒரு அமீரிடம் பைஅத் செய்ய வேண்டும். நான் அமீராக உள்ளதால் என்னிடம் ஒவ்வொருவரும் பைஅத்
செய்ய வேண்டும். அவ்வாறு பைஅத் செய்யாதவர்கள் காஃபிர்கள் என்பது அவர் கண்டு பிடித்த
கேடுகெட்ட கொள்கை. தவ்ஹீத் இயக்கத்தின் பிரச்சாரகராக இவர் இருந்ததால் இவருக்கு ஒரு
மரியாதை இருந்தது. இவர் மீது அபிமானம் கொண்ட பலர் இவரது வழிகேட்டில் விழ ஆரம்பித்தனர்.
உண்மையான தவ்ஹீத்வாதிகள் கவலைப்பட்டு அவருடன் பகிரங்க விவாதத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
அந்த விவாதத்துக்குப் பின்னர் அல்லாஹ்வின் அருளால் உமர் அலியின் வழிகேட்டில் இருந்து
பலர் விடுபட்டனர். அந்த விவாதம் நடந்த போது நிலவிய சூழ்நிலைகளை அப்போது பார்வையாளராக
இருந்த ஒரு கொள்கைச் சகோதரர் அதை இங்கு நினைவு கூர்கிறார். - ஆசிரியர்)
கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில், தவ்ஹீத் பிரச்சாரத்தில் தேக்கம் ஏற்படும் அளவுக்கு தவ்ஹீதுவாதிகளிடம்
சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. எங்களிடையே ஒரு தாயியாக இருந்த உமர் அலியுடன்
சிலரும், நாங்கள் சிலருமாகப் பிரிந்து இயங்கும் நிலை ஏற்பட்டது.
எங்களுக்கு மத்தியில் நல்லுறவு ஏற்பட குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில்
முயற்சிகள் செய்யப்பட்டதும் உண்டு. அதன் தொடர்பாகப் பலமுறை இரு தரப்பும் சந்தித்து
விவாதித்துக் கொண்டதும் உண்டு.
உமர் அலியார் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜமாஅத்துல் முஸ்லிமீன்
என்று ஒரு ஜமாஅத்தை ஆரம்பித்துக் கொண்டு, அதற்குத் தம்மையே
அமீராகவும் அறிவித்துக் கொண்டார். தம்மிடம் பைஅத் செய்து முஸ்லிம் ஜமாஅத்தில் இணையாதவர்கள்
காபிர்கள் என்று சொன்னார்.
யார் பைஅத் இல்லாமல் மரணிக்கிறாரோ அவர் அறியாமைக் கால மரணத்தைத்
தழுவுகிறார் என்ற ஒரு ஹதீஸை வைத்துக் கொண்டு, தமது ஜமாஅத்தைச்
சேராதவர்கள் அனைவரையும் - மொத்த உலக முஸ்லிம்களையுமே - காபிர்கள் என்றார். ஜமாஅத்துல்
முஸ்லிமீனைப் பற்றிப் பிடித்துக் கொள் என்று வருகின்ற ஹதீஸையும் உமரலியார் தமக்கு வாய்ப்பாகப்
பயன்படுத்தத் தொடங்கினார்.
முஸ்லிமில் வரும் ஹதீஸில் பைஅத் என்று கூறப்படுவது தம்மிடம்
பைஅத் செய்வது தான் எனவும் ஜாஹிலியத்தில் மரணிப்பது என்பது காபிர்களாக மரணிப்பது எனவும்
உமரலியார் விளக்கம் அளித்துத் தமது நாவன்மையால் சிலரை நம்பச் செய்தார். அவரது பேச்சை
நம்பி எங்களுடனிருந்த சகோதரர்களில் சில நூறு பேர், அவருடன்
இணைந்தனர். எங்களில் சிலர் சிந்தனையை முற்றாக அவரிடம் அடகு வைத்த பரிதாப நிலையை நாங்கள்
காண நேர்ந்தது.
காபிர்களின் சட்டங்களுக்குக் கட்டுப்படக் கூடாது என்பதால், பாஸ்போர்ட், அடையாள அட்டை
போன்றவைகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்று உமர் அலி சொன்னதும் அதை வேத வாக்காகக் கொண்டவர்கள்
அவற்றைக் கிழித்ததும், எங்கள் அரசாங்கத்துக்குத் தெரியாமல்
அயல் நாடு செல்ல முயன்று பிடிபட்டு அடி உதைகளுக்கு ஆளானதும் கொடுமையாகும். ஆனால் காபிர்களின்
அரசாங்கம் வெளியிட்ட ரூபாயைப் பயன்படுத்த உமரலியார் தடை விதிக்காதது அவரது குழம்பிய
மனநிலையையே காட்டியது.
அரசாங்கம் வகுத்தளித்த சட்டத்தின் படி வாகனங்களுக்குக் கட்டாயம்
இன்ஷுரன்ஸ் எடுக்க வேண்டும். ஆனால் உமர் அலி, அவ்விதம் இன்ஷுரன்ஸ்
எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டதால், அவரிடம் பைஅத்
செய்த ஜமாஅத்தினர் தம்மிடம் இருந்த வாகனங்கள் அனைத்தையும் விற்று விட்டனர். தமது வாழ்க்கைத்
தேவைக்கு அளவுக்கு மிச்சமாக விவசாயம் செய்யக் கூடாது என்றெல்லாம் உமரலியாரின் உத்தரவுக்குக்
கட்டுப்பட்டு,
பெரும் நஷ்டங்களைச் சந்தித்தனர். அமீருக்குக் கட்டுப்பட வேண்டும்
என்று எச்சரித்து மக்களைத் தவறான பாதைக்குக் கொண்டு சென்றார் உமரலியார்.
தம்மிடம் பைஅத் செய்த ஜமாஅத்தினர் தவிர அனைவரும் காபிர்கள் என்பதால், காபிர்களின் வசமுள்ள கஅபாவுக்கு ஹஜ் செய்யக் செல்லக் கூடாது
என்று சொன்னது மிகப் பெரிய கொடுமை.
ஒரு குடும்பத்தில் கணவன் பைஅத் செய்து மனைவி அவ்விதம் செய்யா
விட்டாலோ, அல்லது மனைவி பைஅத் செய்து கணவன் செய்யாவிட்டாலோ அவர்களது திருமணம்
ரத்தாகி விட்டது என்றார். பல கணவன் மனைவியர் பிரிந்த பரிதாபங்கள் நடந்தன. அமீருக்குக்
கட்டுப்பட வேண்டும் என்று மிரட்டி, அவரும் அவரது
நெருங்கிய சகாக்களும் பல திருமணங்கள் செய்தனர். தலாக்கும் நிக்காஹும் விளையாட்டுக்களாகவே
நடந்தேறின.
மக்களின் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்களுக்குத் தீர்வு காண வேண்டியதொரு
முக்கியமாதொரு கடமை நமக்குண்டு என்பதால், உமரலியின்
கூற்றுக்குத் தக்க பதில்களை ஆதாரப்பூர்வமாக நமது அறிஞர்கள் அளித்தனர்.
முஸ்லிம் அறிவிப்பில் வரும் பைஅத் என்பது ஆட்சியாளரிடம் செய்யும்
பைஅத் தான் என்றும், ஆட்சியாளரிடம் பைஅத் செய்யாவிட்டால்
கூட ஒருவர் காபிராகி விட மாட்டார் என்றும் எமது அறிஞர்கள் விளக்கினார்கள்.
சுவர்க்கத்திற்குரியவர்கள் என்று நபி (ஸல்) அவர்களால் கூறப்பட்ட
தல்ஹா (ரழி),
ஜுபைர் (ரழி) ஆகியோர் அமீருல் முஃமினீன் அலீ (ரழி) அவர்களிடம்
பைஅத்தை முறித்தவர்கள் என்பதை எடுத்து வைத்தனர். இன்னும் சொன்னால் அலீ (ரழி) அவர்களை
எதிர்த்து அன்னை ஆயிஷா (ரழி) தலைமையில் நடைபெற்ற ஜமல் யுத்தத்தில் கலந்து போரிட்டு
அவ்விருவரும் ஷஹீதானார்கள் என்று கூறி, அலீ (ரழி)
அவர்களிடம் பைஅத் செய்யாத அந்த இரண்டு ஸஹாபிகளும் காபிர்களா? அப்படியாயின் அவ்விரண்டு பேரைக் குறித்தும் நாயகம் (ஸல்) அவர்கள்
சுவர்க்கவாதிகள் என்று முன்னறிவிப்புச் செய்திருப்பார்களா? என்ற வாதத்தை நமது அறிஞர்கள் முன் வைத்தனர்.
அலீ (ரழி) அவர்களுக்கு எதிராக முஆவியா (ரழி) அவர்கள் தலைமையில்
பல ஸஹாபாக்கள் போரிட்டு, பலர் கொல்லப்பட்டனர். சிஃப்பீன்
யுத்தம் பற்றியும் எடுத்துக் காட்டப்பட்டு, அந்த நபித்
தோழர்கள் காபிர்களா? என்றும் கேட்கப்பட்டது.
யஸீதுக்குப் பல நபித்தோழர்கள் பைஅத் செய்தும் நபியவர்களின் பேரர்
ஹுஸைன் (ரழி) அவர்கள் மட்டும் பைஅத் செய்ய மறுத்துப் போரில் கொல்லப்பட்டார்களே! அவர்களை
சுவர்க்கத்து இளைஞர்களின் தலைவர் என்று நபியவர்களே நவின்றுள்ள போது அவர்கள் எப்படிக்
காபிராவார்கள் என்று கேள்விகளைத் தொடுத்தனர்.
அபூபக்கர் (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் ஃபாத்திமா
(ரழி) அவர்கள்,
அபூபக்கர் (ரழி) அவர்களிடம் பைஅத் செய்யவில்லை; பேசவும் இல்லையே; அவர்களிடம்
பேசா நிலையிலேயே மரணித்தும் விட்டார்களே! அவர்கள் காபிரா? அப்படியானால் சுவனத்துப் பெண்களின் தலைவி என்று நபிகள் (ஸல்)
அவர்கள் முன்னறிவித்தார்களே! என்றெல்லாம் கேட்கப்பட்டது.
இதன் பின்னர், சிந்தித்துத்
தெளிவு பெற்ற சிலர் உமர் அலியின் பிடியில் இருந்து மீண்டனர். ஆனால் உமரலியாரோ நமது
அறிஞர்கள் முன் வைத்த அத்தனை வாதங்களுக்கும் கேள்விகளுக்கும் தந்த ஒரே பதில், இவை சரித்திரம் - தாரீக் - இதை ஏற்பது ஷிர்க் - ஏற்பவன் காபிர்
என்பது தான். நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் கூட சரித்திரம்
என்று கூறி நிராகரித்தார். இவரது திசை திருப்பலைப் புரிந்து கொள்ள முடியாத சிலர் அவரை
நம்பி அவருடனேயே இருந்தனர்.
நிலைமை இப்படியிருக்க ஜம்யிய்யது அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின்
அழைப்பின் பேரில் முஅஸ்கருக்கு (மாநாட்டிற்கு) இந்தியாவிலிருந்து எமது நாட்டிற்கு வருகை
தந்த உலமாக்களை தஃவத் என்ற முறையில் கடிதம் மூலமும் நோட்டீஸ் மூலமும் உமரலியார் அழைத்தார்.
10.11.1992 அன்று உமர் அலியின் ஊரான ஏத்தாளையில் நடந்த பொதுக் கூட்டத்தில்
பேச வந்த இந்திய உலமாக்களைத் தம்முடன் விவாதிக்க வருமாறு கடிதம் மூலமும் ஒலிபெருக்கி
மூலமும் அழைப்பு விடுத்தார்.
பி. ஜைனுல் ஆபிதீன், உமரலியாரின்
அழைப்புக்குப் பதிலளித்தார். நாங்கள் ஒரு ஜமாஅத்தின் அழைப்பில் வந்துள்ளோம். அவர்களால்
எங்கள் நிகழ்ச்சிகள் முன்னரே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. நாங்கள் இந்தியா சென்றதும்
எங்களுக்கு உமரலியார் அழைப்பு அனுப்பினால் எங்கள் செலவில் வந்து பகிரங்கமாக விவாதிக்கத்
தயார் என்று அந்தக் கூட்டத்திலேயே பி. ஜைனுல் ஆபிதீன் பதிலளித்தார்.
இந்தத் தொடரில் மவ்லவி ஜைனுல் ஆபிதீனுக்கும் உமர் அலிக்கும்
இடையே பல கடிதப் போக்குவரத்துக்களுக்குப் பிறகு 08.07.1993 அன்று பி. ஜைனுல் ஆபிதீன் தமது சகாக்களான மவ்லவி ஸைபுல்லாஹ், ஸுலைமான், தமிழ்நாடு ஜம்இய்யத்து அஹ்லில்
குர்ஆன் வல் ஹதீஸின் பொருளாளர் முஹம்மது உஸ்மான் கான் ஆகியோருடன் இலங்கை வந்தார். ஜுலை
12ம் தி உமரலியுடனும் அவரது சகாக்களுடனும் விவாத ஒப்பந்த விதிகள்
பற்றிப் பேசி 13ம் தேதி ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். தீர்ப்பு
வழங்குவதற்காக இன்றி நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு நடுவரை ஏற்படுத்திக் கொள்ள
வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டபடி அனஸ் மாஸ்டர் அவர்கள் இரு தரப்பினராலும்
நடுவராக ஏற்படுத்தப்பட்டார்.
14.07.1993 புதன்கிழமை புத்தளம் நகர சபை மண்டபத்தில் அவரது தலைமையில் விவாதம்
நடைபெற்றது. உமர் அலி தம் விவாதத்தில் யார் பைஅத் இன்றி மரணிக்கின்றாரோ அவர் அறியாமைக்கால
மரணத்தைத் தழுவுகிறார் என்று முஸ்லிமில் வரும் ஹதீஸையும், அஹ்மதில் வரும் இதே கருத்துள்ள இன்னொரு ஹதீஸையும் முன் வைத்து, பைஅத் அவசியம்; எங்களது ஜமாஅத்தில்
பைஅத் செய்யாத ஜைனுல் ஆப்தீன் உட்பட அனைவரும் காபிர்கள் என்று தனது வாதத்தை எடுத்துரைத்தார்.
இதற்குப் பதிலளிக்கும் போது ஜைனுல் ஆபிதீன் பல கேள்விகளை எழுப்பினார்.
அவற்றில் ஒரு கேள்விக்கும் உமரலியார் பதில் கூறவில்லை. அவரது கேள்வியின் சாரம் பின்வருமாறு
அமைந்திருந்தது.
நபியவர்கள் இவ்வாறு உமரலியிடம் நேரடியாகக் கூறவில்லை. இப்னு
உமர் (ரழி) அவர்களிடம் இதைக் கூறினார்கள். அவர் நாஃபிவு என்பவரிடம் கூறினார். அவர்
ஸைத் பின் முஹம்மதிடம் கூறினார். அவர் ஆஸிம் என்பாரிடம் கூறினார். அவர் முஆத் என்பாரிடம்
கூறினார். அவர் உபைத் என்பாரிடம் கூறினார். அவர் முஸ்லிம் என்பாரிடம் கூறினார் என்ற
வரிசையிலேயே இந்தச் செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
இவர்களெல்லாம் யார்? உண்மையிலேயே
உலகத்தில் வாழ்ந்தவர்களா? கற்பனைப் பாத்திரங்களா? உண்மையிலேயே உலகத்தில் வாழ்ந்தவர்கள் என்றால் அதை எப்படி அறிந்து
கொண்டீர்கள்?
பைஅத் செய்யாதவர்கள் ஜாஹிலிய்யத்தான - அதாவது காபிரான - மரணத்தைத்
தழுவுவார்கள் என்பதை அறிவிக்கும் இவர்கள் பைஅத் செய்தவர்கள் தானா? பைஅத் செய்யாத சிலரும் இவர்களில் உள்ளனர். பைஅத் செய்யாதவர்
காபிர் என்ற உங்கள் வாதப்படி இவர்களும் காபிராகி விட்டனர். உங்கள் கருத்துப்படி காபிர்கள்
வழியாக இது அறிவிக்கப்படுகிறது.
இதைக் கூறியவர்களே காபிர்கள் எனும் போது அவர்கள் கூறிய இந்தச்
செய்தியை நீங்கள் எப்படி நம்பினீர்கள்? பைஅத் செய்யாத
அவர்கள் காபிர்கள் அல்ல என்பது உங்கள் பதிலானால் பைஅத் செய்யாவிட்டால் காபிராக மாட்டார்கள்
என்பதை நீங்களே ஒப்புக் கொண்டவராவீர்கள்.
அல்லது இந்தச் செய்தியை நபியவர்களிடம் கேட்டீர்களா? நீங்கள் நேரடியாகக் கேட்கவில்லையானால், சரித்திரத்தின் துணை கொண்டே நபிமொழி என்று நீங்கள் அறிந்ததாகச்
சொன்னால், நீங்களே சரித்திரத்தை ஏற்று விட்டீர்கள். சரித்திரத்தை ஏற்பவன்
காபிர் என்ற உங்கள் வாதப்படி உங்களுக்கே அந்தப் பட்டத்தைச் சூட்டிக்கொண்டீர்கள். ஹிஜ்ரி
40க்குள் நடந்த சம்பவங்களை - நபியின் முன்னறிவிப்புடன் சம்பந்தப்பட்ட
சம்பவங்களை - கூறினால் அது சரித்திரம் என்று நிராகரித்த நீங்கள் 200ஆம் ஆண்டில் வாழ்ந்த முஸ்லிம் என்பவரை - அவர் நல்லவர் என்பதை
- எப்படி ஏற்றீர்கள்?
இந்தக் கேள்விக்கு விடை கூறாமல் அடுத்த விஷயத்திற்கு செல்ல முடியாது
என்பதில் ஜைனுல் ஆப்தீன் உறுதியாக இருந்தார். இவற்றுக்குப் பதில் சொல்வதில்லை என்பதில்
உமர் அலியும் உறுதியாக இருந்தார்.
இவற்றுக்குரிய நேரடியான பதிலில் அவரது சாயம் வெளுத்து விடும்
என்ற அச்சத்தில் அல்லாஹ்வின் மீது ஆணையாக இது நபிமொழி தான் இப்படித் தான் கடைசி வரை
கூறினாரே தவிர பதில் கூறவில்லை. ஒரு கட்டத்தில் இவற்றுக்குப் பதில் சொன்னால் நான் மாட்டிக்
கொள்வேன் என்று கூறியதும் சபையே கொல்லென்று சிரித்தது.
உமரலியார் பதில் சொல்லாமல் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக்
கொண்டிருந்தார். இந்த ஜமாஅத்தில் பைஅத் செய்யாதவர்கள் காபிர்கள். எனவே, பைஅத் செய்து கொண்டு முஸ்லிம் ஜமாஅத்தில் நுழையுங்கள். குர்ஆன்-ஸுன்னாவை
ஆதாரம் என்று ஏற்றுக் கொண்டு, இப்போது இந்த ஹதீஸைச் சொன்னவர்
காபிரா முஸ்லிமா என்கிறார். எங்களது தலையங்கம் நீங்கள் காபிரா இல்லையா என்பது தான்.
இவர் வரலாற்றை எடுக்கிறார். நான் இதற்குப் பதில் சொன்னால் பிடித்துக் கொள்வார் என்றார்.
ஜைனுல் ஆபிதீன் தமது அடுத்த உரையில், வராலாற்றைச் சொல்வது ஷிர்க் என்று உமர் அலி கூறியதன் அடிப்படையில், வரலாற்று ரீதியாக உள்ள தொடரில் ஹதீஸைச் சொன்னதால், உமர் அலி தம்மை முஷ்ரிக் என்று ஒப்புக் கொண்டார் என்றார்.
உமர் அலி மீண்டும் பேசும் போது நபி (ஸல்) காலத்தில் ஒருவர் இஸ்லாத்தை
ஏற்பதாக இருந்தால் நாயகம் அவர்களிடம் நேரில் வந்து நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று
முன்னிலையாகத் தான் கூற வேண்டும். அது போல் ஒருவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமானால் அமீராகிய
என்னிடம் நேரில் வந்து கூற வேண்டும் இல்லாவிட்டால் அவர் முஸ்லிமே இல்லை என்பதாகக் கூறினார்.
அப்படியானால் உமர் அலியாகிய உங்களிடம் நேரில் வந்து நீங்கள்
அல்லாஹ்வின் தூதர் என்று கூற வேண்டுமா? உங்களை இறைத்
தூதராகப் பிரகடனம் செய்கிறீர்களா? என்று ஜைனுல் ஆபிதீன் கேட்டதற்கு
- திரும்பத் திரும்பக் கேட்டதற்கு - உமர் அலி பதிலும் கூறவில்லை. மறுக்கவும் இல்லை.
ஃபாதிமா (ரழி) பைஅத் செய்யாத சம்பவம் பற்றிய ஹதீஸ் புகாரியில்
இடம் பெற்றதாக ஜைனுல் ஆபிதீன் கூறியதற்கு அது பொய்யான செய்தி என்றார் உமரலி. உடனே ஜைனுல்
ஆபிதீன் பொய்யும் மெய்யும் கலந்துள்ள புகாரி முஸ்லிமிலிருந்து மெய்யானவற்றை எப்படிக்
கண்டறிந்தீர்கள். அறிவிப்பாளர்களின் சரித்திரத்தை வைத்தா? அல்லது உங்களுக்குத் தனியாக வஹீ வந்ததா? வரலாற்றின் துணையால் இவற்றை நபி மொழி என்றால் உங்கள் வாதப்படி
நீங்கள் காபிராகி விடுவீர்கள். வரலாறு தேவையில்லை என்றால் நபிமொழி என்று எதைச் சொன்னாலும்
நம்புவீர்களா?
கைத்தடி வைத்துக் கொள்வது மூஃமினுக்கு அடையாளம் என்றும் ஹதீஸ்
உள்ளது. அதன்படி உங்களிடம் கைத்தடி இல்லாததால் உங்களை காபிர் என்று சொல்லலாமா? இந்த ஹதீஸ் சரியானது இல்லை என்று நீங்கள் சொல்வதாக இருந்தால்
எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள்? என்று ஜைனுல்
ஆபிதீன் கேட்டதற்கு உமர் அலியிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
காலை 8 மணி முதல் 9 மணிவரை விவாதம் நடக்குமென ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால்
பகல் 11 மணிக்கே பதில் இல்லாமல் முழித்த உமரலியார் முபாஹலாவுக்கு அழைத்தார்.
தொடர்ந்து ஜைனுல் ஆபிதீன் தொடுத்த ஒவ்வொரு கேள்விக்கும் முபாஹலாவுக்குத் தயாரா என்று
கேட்டு விவாதத்தை முடிப்பதிலேயே உமர் அலி குறியாக இருந்தார்.
விவாதத்தின் போதே மக்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர் என்றாலும், முபாஹலாவைக் காரணம் காட்டி அவர் மக்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக
ஜைனுல் ஆபிதீன் அதையும் ஏற்றார்.
முபாஹாவுக்கு அழைப்பதற்கு சத்தியத்தில் இருக்கும் தங்களுக்கே
உரிமை இருப்பதாகக் கூறி இந்தியாவிற்கு அழைத்தார். உமர் அலி அழைப்பை ஏற்று நாங்கள் இலங்கை
வந்தது போல் எங்களது அழைப்பை ஏற்று அவர் இந்தியா வர வேண்டும் என்று ஜைனுல் ஆபிதீன்
கூறிய போது உமர் அலி பல காரணங்களைக் கூறித் தட்டிக் கழிக்கப் பார்த்தார். அவற்றுக்கு
விளக்கம் கூறிய பின் தம்மிடம் பணம் இல்லை என்றார். கொழும்பு தவ்ஹீத் ஜமாஅத் உமர் அலி
மற்றும் அவரது குடும்பத்தினருக்கான போக்குவரத்துச் செலவை ஏற்றனர். இந்தியாவில் உமர்
அலிக்காக எப்போதும் தயாராக இருப்பதாக பி. ஜைனுல் ஆபிதீன் அறிவித்த உடன் ஐந்து மணிக்கே
விவாதம் முடிவுக்கு வந்தது.
மொத்தத்தில் உமர் அலியின் பிடியில் சிக்கியிருந்த பலர் மயக்கம்
தெளிந்தனர். பலர் அவரிடம் செய்த பைஅத்தை முறித்துக் கொண்டதாகவும் எம்மிடம் தெரிவித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
EGATHUVAM DEC 2009