பொங்கி வழிகின்ற பெருநாள் திடல்கள்
தவ்ஹீத் ஜமாஅத் எங்கும், எதிலும் குர்ஆன் ஹதீஸ் என்ற பார்வையைச் செலுத்துகின்ற தனித்தன்மை
மிக்க ஓர் இயக்கம். அதன் அடிப்படையில் தான் தனது கிளைகள் தோறும் பெருநாள் தொழுகைகளைத்
திடல்களில் தொழுவதற்கு ஏற்பாடு செய்கின்றது.
தமிழகமெங்கும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திடல்களில் நடத்தப்பட்ட
பெருநாள் தொழுகையில் மக்கள் சாரை சாரையாக வந்து கலந்து கொண்டனர். பத்திரிகைகளில் பெருநாள்
தொழுகை குறித்த செய்தி மற்றும் புகைப்படங்களில் தவ்ஹீத் ஜமாஅத் பெரும் இடத்தை ஆக்கிரமித்திருந்தது
இதற்கு ஒரு சான்று!
இவற்றையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாத மத்ஹபுவாதிகள், அந்த மக்கள் கூட்டத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள்.
ரமளான் முழுவதும் பள்ளியில் தொழுதுவிட்டு இப்போது ஏன் திடலுக்குப்
பாய்கிறீர்கள்? என்று கடையநல்லூர் என்ற
ஊரில் மத்ஹபுவாதிகள் ஒலிபெருக்கி மூலம் ஓலமிட்டுள்ளனர்.
மக்கள் திடலுக்கு ஓடி வருவதன் மர்மத்தை இந்த மத்ஹபுவாதிகள் இன்னும்
புரிந்ததாக இல்லை. பெருநாள் உரை என்ற பெயரில் இவர்கள் அறுக்கும் அறுவையின் வேதனை தாளாமல், அதுவும் ஹஜ் பெருநாட்களில், இப்ராஹீம் நபி, இஸ்மாயீலின் கழுத்தை அறுப்பதற்குக் கத்தியை வைத்த போது கத்தி
அறுக்கவில்லை, அதைக் கல்லில் தூக்கி எறிந்த
போது கல் பிளந்து விட்டது என்று அறுத்துத் தள்ளும் மொட்டைக் கத்தியின் அறுவை தாங்காமல்
திடலுக்கு ஓடி வருகின்றனர். ஏகத்துவப் பிரச்சாரத்தின் தேட்டம் காரணமாக திடலைத் தேடி
வருகின்றனர் என்ற மர்மம் இந்த மத்ஹபுவாதிகளுக்குப் பிடிபடவில்லை.
அன்று தவ்ஹீதுக்கு வர விடாமல், தவ்ஹீதை வளர விடாமல் செய்வதற்கு முயற்சித்துப் பார்த்தார்கள்.
அது பலிக்காமல், பயனளிக்காமல் போனது. இப்போது
கடல் அலையாய் திடலுக்கு வரும் கூட்டத்தைத் தடுக்கிறார்கள். இதில் இவர்கள் ஒரு போதும்
வெற்றி பெறப் போவதில்லை.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர்.
(தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
அல்குர்ஆன் 61:8
மக்கள் கூட்டம் அதிகமாக, அதிகமாக தவ்ஹீத் ஜமாஅத்திற்குப் பொறுப்பும் அதிகமாகின்றது.
மக்களின் இந்த வளர்ச்சிக்கு ஏற்ப அழைப்பாளர்கள் பெருகியாக வேண்டும்.
அதிகம் அதிகம் அழைப்பாளர்கள் உருவாகியாக வேண்டும். அந்த தாயீக்களின் உருவாக்கத்தில்
கவனம் செலுத்துவோமாக!
ஒவ்வொரு கிளை தோறும் ஒரு தாயீயை உருவாக்க, தவ்ஹீது இஸ்லாமியக் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுப்பி ஏகத்துவத்தை
நிலைநாட்டுவோம்.
EGATHUVAM DEC 2009