Apr 17, 2017

ஸிஹ்ர் ஓரு விளக்கம் தொடர் - 2

ஸிஹ்ர் ஓரு விளக்கம் தொடர் - 2

பி. ஜைனுல் ஆபிதீன்

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்பது குறித்து நாம் விரிவான விளக்கம் அளித்துப் பல கேள்விகளையும் கேட்டிருந்தோம். அதில் முதலாவதாக நாம் கேட்ட பால் குடி தொடர்பான ஹதீஸ் பற்றி இஸ்மாயீல் ஸலஃபி இது வரை வாய் திறக்கவில்லை. இதற்கு அவர் அளிக்கும் பதிலில் எல்லா முடிச்சுக்களும் அவிழ்ந்து விடும் என்பதால், பதில் சொன்னால் மாட்டிக் கொள்வேன் என்ற (இலங்கை உமர் அலி) மனநிலையில் அவர் இருப்பது தெரிகிறது.

ஆயினும் நானும் பதில் சொன்னேன் என்று காட்டிக் கொள்வதற்காக மலகுல் மவ்த்தை மூஸா நபி கன்னத்தில் அறைந்த ஹதீஸ் குறித்து சில தமாஷான பதில்களைக் கூறியுள்ளார். நாம் கேட்ட அனைத்துக்கும் பதில் வந்த பின் மொத்தமாக ஒரே தொடரில் இன்ஷா அல்லாஹ் அதற்கான பதிலை வெளியிடுவோம்.

இப்போது ஸிஹ்ர் குறித்த ஆய்வை மட்டும் பார்ப்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மன நிலை பாதிக்கப்பட்டதை இஸ்மாயீல் ஸலபி வேறு வார்த்தை மூலம் ஒப்புக் கொண்டதை சென்ற தொடரில் நாம் நிரூபித்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலை பாதித்ததாக ஒரு ஹதீஸ் இருந்தால் அது ஒன்றே அந்த ஹதீஸை மறுக்கப் போதிய காரணமாகும் என்பதையும் இஸ்மாயீல் ஸலபியின் வார்த்தைகளைக் கொண்டே நிரூபித்தோம்.

அடுத்ததாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டிருந்தால் அதை எதிரிகள் விமர்சனம் செய்திருப்பார்களே? அப்படி எந்த விமர்சனமும் செய்யப்பட்டதாக ஆதாரம் இல்லாததால் நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறப்படுவது பொய் என்று திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் பின்வருமாறு நாம் விமர்சனம் செய்திருந்தோம்.

எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலை நாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள்.

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்; செய்ததைச் செய்யவில்லை என்கிறார்; செய்யாததைச் செய்தேன் என்கிறார்; இவர் கூறுவதை எப்படி நம்புவது? என்று விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள்.

இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.

மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். எனவே நபிகள் நாயகத்துக்கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்துப் பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களின் எதிரிகளில் ஒருவர் கூட இது பற்றி விமர்சனம் செய்ததாக எந்தச் சான்றும் இல்லை.

எனவே அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கு நாம் எழுதிய காரணங்களில் இதுவும் ஒரு காரணமாகும்.

இதற்கு இஸ்மாயீல் ஸலஃபி பின்வருமாறு பதில் கூறுகிறார்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அதைக் காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள். அப்படி விமர்சனம் செய்ததாக எந்தத் தகவல்களும் இல்லை. எனவே, விமர்சனம் இல்லை என்பதே நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றது என்ற அடிப்படையில் சகோதரர் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கின்றார்.

உள்ளதை வைத்து விமர்சனம் செய்வது தான் நியாயமான விமர்சனமாகும். ஆனால், அவர் இந்த வாதத்தை பல்வேறுபட்ட மிகைப்படுத்தல்கள் செய்து ஹதீஸில் கூறப்படாத செய்திகளை மேலதிகமாக இணைத்தே வலுப்படுத்த முனைகிறார்.

எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலை நாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். (பக்: 1298)

நபி (ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் மனைவியருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே தாம்பத்திய உறவில் ஈடுபட்டதாக நபி (ஸல்) அவர்களுக்குப் போலி உணர்வு ஏற்பட்டது. 6 மாதம் அல்ல, 6 வருடம் இந்த நிலை ஏற்பட்டால் கூட இதை எதிரிகள் விமர்சனம் செய்ய மாட்டார்கள். விமர்சனம் செய்யவும் முடியாது. ஏனெனில், இது வெளி உலகுக்குத் தெரியும் சமாச்சாரமல்ல.

அவர்களுடனும், அவர்களது மனைவியருடனும் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினை இது! இதனை எப்படி எதிரிகள் விமர்சனம் செய்ய முடியும்? எனவே, சூனியம் செய்யப்பட்டிருந்தால் எதிரிகள் விமர்சனம் செய்திருப்பார்கள், விமர்சனம் செய்யாததினால் சூனியம் செய்யப்பட்டது என்பது பொய்யான தகவல் என அவர் வாதிடுவது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்று சிந்தித்துப் பாருங்கள்!

காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்களே! என்ற அர்த்தமற்ற - நியாயமற்ற - நபி (ஸல்) அவர்களுடைய சமூக வாழ்வில் சம்பந்தப்படாத சங்கதியை வைத்து, யூகம் செய்து, அந்த யூகத்தின் அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பது எவ்வளவு தவறான அணுகுமுறை என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்!

அவர்களுக்கு இது குறித்த எவ்வித அறிவும் இல்லை. அவர்கள் வெறும் யூகத்தையே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக வெறும் யூகம் உண்மைக்கு எந்தப் பயனும் தராது. (53:28)

அவர்கள் வெறும் யூகத்தையும் தங்கள் மனம் விரும்புவதையுமே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக அவர்களது இரட்சகனிடமிருந்து நேர்வழி அவர்களிடம் வந்தே இருக்கின்றது. (53:23)

வெறும் யூகங்களைப் பின்பற்றுவது எந்த வகையிலும் சத்தியத்திற்கு துணை நிற்காது எனும் போது, யூகத்தின் அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்கும் இவரின் வாதத்தின் உண்மை நிலையை மக்கள் சிந்திக்க வேண்டும்.



மிகைப்படுத்தலும், இட்டுக்கட்டலும்:

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார், செய்ததைச் செய்யவில்லை என்கிறார், செய்யாததைச் செய்தேன் என்கிறார், இவர் கூறுவதை எப்படி நம்புவது? என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள். (பக்: 1298)

ஹதீஸில் சொல்லப்படாத செய்திகளைத் தானாகக் கற்பனை பண்ணி, நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகவும், செய்ததைச் செய்யவில்லையென்றும் - செய்யாததைச் செய்ததாகவும் கூறியதாகச் சித்தரிக்க முனைகின்றார். நபி (ஸல்) அவர்கள் குறித்தல்லவா பேசுகின்றோம் என்ற அச்சமோ, கண்ணிய உணர்வோ கொஞ்சம் கூட இல்லாது ஹதீஸை விமர்சிக்கின்றோம் என்ற எண்ணம் துளி கூட இன்றி இவ்வாறு சொந்தக் கருத்தை ஹதீஸின் கருத்தாக முன் வைக்கலாமா?

இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.

மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். எனவே நபிகள் நாயகத்துக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். (பக்: 1298)

இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக எண்ணியது எதிரிகளுக்கு அல்ல, நபித் தோழர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை எனும் போது, எதிரிகளுக்குத் தெரிந்திருக்கும், அவர்கள் நிச்சயமாக விமர்சித்திருப்பார்கள் என்று கூறுவது அர்த்தமற்ற வாதமாகும். இந்தப் பந்தியிலும் இந்தப் பாதிப்பு நிச்சயமாக மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை என்ற யூகத்தையே அவர் முன்வைத்துள்ளார்.

5 வேளை அல்ல, 50 வேளை மக்களுக்குத் தொழுகையை நடத்தினாலும் அவருக்கு ஏற்பட்டதாக ஹதீஸ் கூறும் பாதிப்பு வெளி உலகுக்குத் தெரிவதற்கான வாய்ப்பே இல்லை எனும் போது, இவ்வாதம் அர்த்தமற்றுப் போகின்றது. இந்தப் பந்தியிலும் அவர் யூகத்தைத் தான் முன்வைக்கின்றார்.

6 மாதம் இந்தப் பாதிப்பு நீடித்தது என்ற அடிப்படையில்தான் இந்த வாதத்தையே வலுப்படுத்துகின்றார். ஆனால், சூனியம் 6 மாதம் நீடித்தது என்ற கால அளவு ஆதாரபூர்வமானதல்ல. எனவே, இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு என்ற அவரின் வாசகப்படியே அவரின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.

எனவே, நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

பல யூகங்களை முன்வைத்து, சில மேலதிக கருத்துக்களையும் சேர்த்துக் கொண்டு இறுதி முடிவை மட்டும் திட்டவட்டமாகத் தெரிவித்து விடுகின்றார். பலவீனமான அறிவிப்பாளர்கள் பலர் ஒரு செய்தியைச் சொன்னாலும், அது பலவீனமானது தான் எனக் கூறும் இவர், பல யூகங்கள் சேர்ந்து திட்டவட்டமான உண்மை என்ற நிலையை அடையாது என்பதை அறியாதிருப்பது ஆச்சரியமாகவுள்ளது!

நல்லறிஞர்கள் ஏன் விமர்சனம் செய்யவில்லை:

எதிரிகள் விமர்சனம் செய்யாததற்கு நாம் விளக்கம் கூறி விட்டோம். இது நபி (ஸல்) அவர்களது குடும்ப விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனவே நபித்தோழர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே விமர்சித்திருக்க முடியாது என்பதே அந்த நியாயமான பதிலாகும்.

இந்தப் பதிலில் இஸ்மாயீல் ஸலஃபி என்ன கூறுகிறார்?

நபிகள் நாயகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு குடும்பப் பிரச்சனை தான். மனைவியுடன் கூடாமலே கூடியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்தது அவர்களின் மனைவிக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும். எனவே எதிரிகளுக்கு இது தெரிய வழியில்லை எனும் போது அவர்கள் எப்படி விமர்சனம் செய்திருப்பார்கள்?

மக்களுக்குத் தெரியாது என்பது ஒரு செய்தி. நபிகள் நாயகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு மன நிலை சம்பந்தப்பட்டது அல்ல. குடும்பப் பிரச்சனை சம்பந்தப்பட்டது என்பது மற்றொரு செய்தி.

உண்மையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பாதிப்பு, உடலுறவில் ஈடுபடாமலே உடலுறவில் ஈடுபட்டதாகப் போலித் தோற்றம் மட்டும் தான் ஏற்பட்டதா? என்பதையும், இது மக்களுக்குத் தெரிந்திருந்ததா? என்பதையும் முடிவு செய்து விட்டால் இதில் தெளிவு கிடைத்து விடும்.

இது குறித்து வரும் அறிவிப்புகள் அனைத்தையும் திரட்டி ஆய்வு செய்யும் போது பொதுவான மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்று அந்த ஹதீஸ்கள் கூறுவதை உறுதி செய்ய முடிகிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் ஒரு நாள் அல்லது ஓரிரவு என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள். (நூல்: புகாரி, ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கம் எண்: 5763)

பிரமையூட்டப்பட்டார்கள் என்பதை விட பிரமையூட்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது தான் சரியான மொழிபெயர்ப்பாகும். அரபு மூலத்தில் கான என்ற சொல் இரண்டு இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்ததைக் குறிக்கும். எனவே செய்து கொண்டிருந்ததாக என்று தமிழாக்கம் செய்தது போல் பிரமையூட்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்று தான் தமிழ்ப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட ஹதீஸில் உடலுறவு கொள்ளாமல் உடலுறவு கொண்டதாக நபியவர்கள் நினைத்ததாகக் கூறப்படவில்லை. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக அவர்களுக்கு பிரமை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. இது பொதுவாக அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டதாகத் தெளிவாகக் கூறுகிறது. உடலுறவு அல்லாத மற்ற விஷயங்களிலும் மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. அதுவும் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என்று இந்த அறிவிப்பு கூறுகிறது.

செய்யாததைச் செய்வதாக அடிக்கடி அவர்களுக்குத் தோன்றினால் அது குடும்பத்துப் பிரச்சனை அல்ல. குடும்பத்தாருக்கு மட்டுமே தெரிந்த விஷயம் அல்ல. எப்போதும் மக்களுடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருப்பவர்கள் என்பதால் இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

மற்றும் சில அறிவிப்புகளைப் பாருங்கள்!

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது. இறுதியில் ஒரு நாள் அவர்கள் என்னிடம் இருந்த போது அல்லாஹ்விடம் (உதவி கோரிப்) பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு என்னிடம், ஆயிஷா (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவளிக்கும் படி அல்லாஹ்விடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவளித்து விட்டான் என்று கூறினார்கள். (நூல்: புகாரி, ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கம் எண்: 5766)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. (நூல்: புகாரி, ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கம் எண்: 3175)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்.... (நூல்: புகாரி, ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கம் எண்: 3268)

இவை அனைத்தும் புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனைவிமாருடன் சேர்வது மட்டுமின்றி பொதுவாக அவர்கள் செய்யாததைச் செய்ததாக பிரமைக்கு உள்ளானார்கள் என்று ஹதீஸில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்புகள் எதையும் பார்க்காமல் நாம் இட்டுக்கட்டி மிகைப்படுத்திக் கூறுவதாக இஸ்மாயீல் ஸலபி கூறி இருப்பதைக் கவனியுங்கள்!

இப்போது அவர் மேலே பயன்படுத்தியுள்ள கடும் சொற்களை திரும்பிப் பாருங்கள்!

ஹதீஸில் சொல்லப்படாத செய்திகளைத் தானாகக் கற்பனை பண்ணி, நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகவும், செய்ததைச் செய்யவில்லையென்றும் - செய்யாததைச் செய்ததாகவும் கூறியதாகச் சித்தரிக்க முனைகின்றார். நபி (ஸல்) அவர்கள் குறித்தல்லவா பேசுகின்றோம் என்ற அச்சமோ, கண்ணிய உணர்வோ கொஞ்சம் கூட இல்லாது ஹதீஸை விமர்சிக்கின்றோம் என்ற எண்ணம் துளி கூட இன்றி இவ்வாறு சொந்தக் கருத்தை ஹதீஸின் கருத்தாக முன் வைக்கலாமா?

நாம் சித்தரிக்க முனைகிறோமா ஹதீஸ்களில் உள்ளதன் அடிப்படையில் விமர்சனம் செய்திருக்கிறோமா? இவர் எந்த அளவுக்கும் துணிந்து பொய் சொல்வார் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி பேசும் போது அச்சமோ, கண்ணிய உணர்வோ இல்லாமல் பேசுகிறோம் என்று கூறுகிறாரே இது யாருக்குப் பொருந்தும்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாததைச் செய்ததாகக் கூறினார்கள் அல்லது கருதினார்கள் என்ற செய்தி உண்மை என்று சாதிக்கும் இஸ்மாயில் ஸலபிக்கு இது பொருந்துமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாததைச் செய்ததாக வரும் செய்தி பொய் என்று நிராகரிக்கும் நமக்குப் பொருந்துமா? சிந்தித்துப் பாருங்கள். இவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து பேசுகிறோம் என்ற அச்சமோ, கண்ணிய உணர்வோ இல்லாததால் தானே நபிகள் நாயகம் அவர்களைத் தரம் தாழ்த்தும் கட்டுக்கதைக்கு வக்காலத்து வாங்குகிறார்.

நபிகள் நாயகத்தின் மனைவிகளுக்கு மட்டும் தான் இது தெரியும்; மக்களுக்குத் தெரியாது என்று இவர் வாதிடுவது தவறு என்பதற்கு மற்றொரு ஆதாரமும் உள்ளது.

மனிதர்கள் சூனியம் செய்யாமல் இது போன்ற பாதிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டிருந்தால் யாருக்கும் தெரியாது என்று கூறுவதை ஏற்கலாம். ஆனால் மேற்கண்ட ஹதீஸ்களில் லபீத் என்ற யூதன் சூனியம் செய்ததாகக் கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்காக அவன் சூனியம் செய்து, அது பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்கும் போது அதைப் பற்றி எதிரிகளிடம் அவன் சொல்லாமல் இருப்பானா? இவ்வாறு சூனியம் செய்வதற்கு அவனுக்கு ஒரு நோக்கமும் இல்லாமல் இருக்க முடியாது. நபிகள் நாயகத்தையே வீழ்த்தி வெற்றி கண்டு விட்டேன் என்று காட்டுவது போன்ற நோக்கத்துக்காகத் தான் இதை அவன் செய்திருக்க முடியும். வேறு எந்த நோக்கத்துக்காக அவன் செய்திருந்தாலும் அவன் மூலம் எதிரிகளுக்குப் பரவாமல் இருக்க முடியாது.

மக்களுக்கு இது தெரிந்த விஷயமாக இருந்தது என்பதற்கு இது மட்டுமின்றி மற்றொரு காரணமும் இருக்கிறது.

புஹாரி 5763வது ஹதீஸில் பின் வருமாறு கூறப்பட்டுள்ளது.

(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அத்தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல, முதலாமவர், இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்டார். தோழர், லபீத் பின் அஃஸம் (எனும் யூதன்) என்று பதிலளித்தார். அவர், எதில் வைத்திருக்கிறான்? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே இருக்கிறது? என்று கேட்க, மற்றவர், (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான் எனும் கிணற்றில் என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்து விட்டுத் திரும்பி) வந்து, ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொன்னார்கள்.

சூனியம் எங்கே வைக்கப்பட்டது என்பது தெரிந்தவுடன் தம் தோழர்கள் சிலருடன் நபிகள் நாயகம் அவர்கள் புறப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருந்துள்ளது என்பதை இதில் இருந்தும் அறியலாம்

மக்களுக்கு இது தெரியாமல் குடும்பத்தில் நடந்த பிரச்சனை என்பதால் தான் எதிரிகள் விமர்சனம் செய்யவில்லை என்று இவர் கூறுகிறார். மக்களுக்கு இது தெரிந்த விஷயமாக இருந்தது என்று தான் ஹதீஸ்களில் கூறப்படுகிறது. குடும்பப் பிரச்சனை மட்டுமின்றி பொதுவாகவும் இந்த நிலை ஏற்பட்டது என்றும் ஹதீஸிலேயே கூறப்படுகிறது.

அப்படியானால் எதிரிகள் இதை விமர்சனம் செய்யாமல் இருந்திருப்பார்களா? என்ற நம்முடைய கேள்வி அதே ஜீவனுடன் நிற்கிறது. நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டு, செய்யாததை செய்ததாக அடிக்கடி மனக்குழப்பம் ஏற்பட்டிருந்தால் எதிரிகள் இதை எவ்வளவு அருமையாகப் பயன்படுத்தியிருப்பார்கள். ஒருவர் கூட இது பற்றி விமர்சிக்கவில்லை என்றால் சூனியம் வைக்கப்படவில்லை என்பது தான் காரணம். சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறுவது பொய் என்பது தான் காரணம்.

அடுத்து இஸ்மாயில் ஸலபி இன்னொரு ஆதாரத்தையும் மேலே எடுத்து வைக்கிறார்.

6 மாதம் இந்தப் பாதிப்பு நீடித்தது என்ற அடிப்படையில் தான் இந்த வாதத்தையே வலுப்படுத்துகின்றார். ஆனால், சூனியம் 6 மாதம் நீடித்தது என்ற கால அளவு ஆதாரபூர்வமானதல்ல. எனவே, இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு என்ற அவரின் வாசகப்படியே அவரின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.

அதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆறு மாதம் பாதிப்பு ஏற்பட்டது என்பது ஆதாரப்பூர்வமானது அல்ல என்பதால் இரண்டு மூன்று நாட்களில் இந்தப் பாதிப்பு நீங்கி இருக்கலாம் என்கிறார். ஒருவரது வாதத்தை மறுத்து ஆய்வு செய்யும் இலட்சணத்தைப் பாருங்கள். விவாதத்தின் முக்கியமான அம்சத்தை உள்ளடக்கிய ஒரு ஹதீஸ் பலவீனமானது என்று போகிற போக்கில் ஒரு காரணத்தையும் கூறாமல் எழுதி விட்டுச் செல்கிறார்.

ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள் உள்ள ஒரு ஹதீஸை மறுக்கக் கூடாது என்ற தலைப்பில் மறுப்பு எழுதும் போது, ஒரு ஹதீஸைத் தள்ளுபடி செய்வதாக இருந்தால் அதிலுள்ள அறிவிப்பாளர்கள் பற்றி விரிவாக விளக்கி இந்தக் காரணத்தால் இது பலவீனமானது என்று நிரூபிக்க வேண்டுமல்லவா? அவர் இதைத் தக்க காரணத்துடன் நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளார். அவர் காரணத்துடன் நிரூபித்த பின்பு தான் இந்த வாதத்தை எடுத்து வைக்க வேண்டும்.

இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM MAR 2010