Apr 17, 2017

தாடி - ஓர் ஆய்வு

தாடி - ஓர் ஆய்வு

எஸ். அப்பாஸ் அலீ, எம்.ஐ.எஸ்.சி.

தாடி வைப்பது நபிவழி என்று மக்கள் பரவலாக அறிந்திருக்கிறார்கள். ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ர),

நூல்: புகாரி 5892

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கி)களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 435

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தாடியை வளர விடுங்கள் என்ற ஒரு உத்தரவை மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் மாறு செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள். ஒருவர் தாடியை அகற்றிவிட்டால் அவர் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் ஒப்ப நடந்தவராவார். மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களுக்கு ஒப்ப நடப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: அபூதாவுத் 3512

எனவே தாடி வைப்பது வலியுறுத்தப்பட்ட நபிவழி என்று இதன் மூலம் அறிய முடிகிறது. இந்த சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக நாம் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. நமது முயற்சியில்லாமல் தானாக வளரும் தாடியை அகற்றாமல் இருந்தாலே சுன்னத்தை நிறைவேற்றிய நன்மை நமக்கு கிடைக்கின்றது. அது மட்டுமின்றி தாடியைப் பொறுத்த வரை அது நமது உடலின் ஓர் அங்கமாக இருக்கின்றது. நமது வாழ்நாள் முழுவதும் இந்த சுன்னத்தைத் தொடர்ந்து நிறைவேற்றும் பாக்கியம் இதன் மூலம் நமக்குக் கிடைக்கின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் தாடி வைக்க வேண்டும். தாடியை மழிப்பதும் ஒட்ட நறுக்குவதும்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இணை வைப்பாளர்கள் அதாவது மஜூசிகள் (நெருப்பு வணங்கிகள்) தங்களது தாடிகளை மழித்து வந்தனர். இச்செயலை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மஜூசிகளைப் பற்றி கூறப்பட்ட போது, மஜூசிகள் தங்களது மீசைகளை அதிகமாக வைக்கிறார்கள். தாடிகளை மழிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஸஹீஹு இப்னி ஹிப்பான் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வேதமுடையவர்கள் அதாவது யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்களது தாடிகளை (மழிக்காமல்) ஒட்ட வெட்டி வந்தனர். இவர்கள் தாடியை விட மீசையை அதிகமாக வளர்த்தார்கள். இதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதிர்ந்த வயதுடைய அன்சாரிகள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், அன்சாரி கூட்டத்தாரே! (உங்கள் தாடிகளை) சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! வேதமுடையவர்கள் முழுக்கால் சட்டை அணிகிறார்கள். வேட்டி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் முழுக்கால் சட்டையும் வேட்டியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! வேதமுடையவர்கள் காலுறை அணிகிறார்கள். காலணி அணிவதில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் காலுறையும் காலணியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது மீசைகளை நீங்கள் (ஒட்ட) கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி),

நூல்: அஹ்மது 21252

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்; தாடிகளை வளர விடுங்கள்; மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 5892

இணை வைப்பாளர்கள் தங்களது மீசையை வளர விட்டு, தாடியை ஒட்ட நறுக்கி வந்தார்கள் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தாடிகளை வளர விட வேண்டும்; மீசையை ஒட்ட நறுக்க வேண்டும் என்பதே நமக்கு இடப்பட்ட கட்டளை. இவ்வாறு செய்தால் தான் நாம் இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்ய முடியும். எனவே, தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளை தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்ற காரணத்திற்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாடியை மழிப்பதற்கும் ஒட்ட வெட்டுவதற்கும் இடையில் வித்தியாசம் இருந்தாலும் இவ்விரு செயல்களால் தாடி அகற்றப்பட்டு தாடி வைக்கவில்லை என்ற தோற்றமே ஏற்படுகிறது. எனவே மார்க்கம் இவ்விரு செயல்களையும் தடை செய்கிறது. தாடியை வெட்டுவதற்குத் தடையில்லை

நபி (ஸல்) அவர்கள் தாடியை மழிப்பதையும் அதை ஒட்ட வெட்டுவதையும் மட்டுமே தடை செய்துள்ளார்கள். தாடியை வெட்டவே கூடாது என்று தடை விதிக்கவில்லை. ஒருவர் தாடியை ஒட்ட வெட்டாமல் சிறிது நீளமாக விட்டு வெட்டினால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. ஆனால் இன்றைக்கு இலங்கையைச் சார்ந்த சில அறிஞர்கள் தாடியை வெட்டவே கூடாது என்று கூறி வருகின்றனர். சில ஹதீஸ்களைத் தவறாகப் புரிந்து கொண்டே இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: புகாரி 5893

மேற்கண்ட ஹதீஸில் தாடியை வளர விடுங்கள் என்று மொழி பெயர்த்துள்ள இடத்தில் அஉஃபூ என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. சில அறிவிப்புகளில் அவ்ஃபூ, வஃப்பிரூ மற்றும் அர்கூ ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ன. ஹதீஸில் கூறப்பட்டுள்ள அஉஃபூ, அவ்ஃபூ, வஃப்பிரூ மற்றும் அர்கூ ஆகிய வார்த்தைகளுக்கு தாடியை வெட்டவே கூடாது என அகராதியில் பொருள் இருப்பதாக, தாடியை வெட்டக் கூடாது என்று கூறுவோர் வாதிடுகிறார்கள். மீசையைக் குறைப்பது போன்று தாடியை குறைக்கக் கூடாது

இவர்கள் கூறுவது போல் இச்சொற்களுக்கு இந்த அர்த்தம் இருப்பதாக எந்த அரபி அகராதி நூலும் கூறவில்லை. மாறாக, தாடியை அதிகமாக வைக்க வேண்டும். மீசையைக் குறைப்பது போன்று குறைத்து விடக் கூடாது என்றே லிஸானுல் அரப் எனும் அரபு அகராதியில் கூறப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் தாடியை இஃபா செய்யுமாறு உத்தரவிட்டதாக ஹதீஸில் உள்ளது. இஃபா என்றால் தாடியை அதிகமாக வைப்பதும் மீசையை குறைப்பதைப் போன்று குறைக்காமல் இருப்பதாகும்.

நூல்: லிஸானுல் அரப், பாகம்: 15, பக்கம்: 72

மேற்கண்ட வார்த்தைக்கு, தாடியை வெட்டக் கூடாது என்ற பொருளை லிஸானுல் அரப் ஆசிரியர் கூறவில்லை. மீசையைக் குறைப்பது போன்று தாடியை குறைக்கக் கூடாது என்றே கூறியுள்ளார். இந்த விளக்கத்தையே நாமும் கூறுகிறோம். மீசையை ஒட்ட வெட்டுவதைப் போன்று தாடியை ஒட்ட வெட்டக் கூடாது. இதை விடவும் கூடுதலாக தாடியை வைக்க வேண்டும் என்றே நாம் கூறுகிறோம். மேலும் (வளர விடுங்கள் என்ற அர்த்தத்தில்) தாடி தொடர்பான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள சொற்கள் வேறு சில ஹதீஸ்களில் வெட்டப்பட்ட தலை முடி விஷயத்தில் கூறப்பட்டிருக்கின்றது.

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக ஹுதைபிய்யாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணை வைப்பவர்கள் தடுத்து விட்டிருந்தனர். எனக்கு (காது சோணை வரை) நிறைய தலைமுடி இருந்தது.

நூல்: புகாரி 4191

மேற்கண்ட ஹதீஸில் நிறைய தலைமுடி என்று பொருள் செய்துள்ள இடத்தில் வஃப்ரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. தாடி விஷயத்தில் கூறப்பட்ட வஃப்பிரூ என்ற சொல்லும் வஃப்ரத் என்ற இச்சொல்லும் ஒரே வேர்ச் சொல்லிலிருந்து உருவானவை. கஅப் (ரலி) அவர்களுக்கு நிறைய தலைமுடி இருந்தது எனக் கூறப்பட்டிருப்பதால் கஅப் (ரலி) அவர்கள் தலைமுடியை வெட்டவே இல்லை என்று விளங்க மாட்டோம். இதைப் போன்று தாடியை வளர விடுங்கள் என்றால் தாடியை வெட்டவே கூடாது என்று விளங்கி விடக் கூடாது. அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர், காதின் சோனை வரை இருக்கும் அளவிற்குத் தம் தலை முடியிலிருந்து சிறிதளவை(க் கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.

நூல்: முஸ்லிம் 533

மேற்கண்ட ஹதீஸிலும் வஃப்ரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. காதின் சோனை வரை இருக்கும் அளவுக்கு கத்தரிக்கப்பட்ட முடிக்கு இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதிலிருந்து இந்த வார்த்தைக்கு முடியை வெட்டவே கூடாது என்ற பொருள் இருப்பதாக வாதிடுவது தவறு என்பது தெளிவாகிறது. வேதமுடையவர்கள் மீசையை வெட்டவில்லையா?

அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள், அல்லாஹ்வின் தூதரே, வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள்; மீசைகளை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது மீசைகளை நீங்கள் கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மது 21252

மேற்கண்ட ஹதீஸில் வேதமுடையவர்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று பொருள் செய்துள்ள இடத்தில் யுவஃப்பிரூன என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேதமுடையவர்கள் தங்களது மீசையை வெட்டாமல் இருந்தார்கள் என்று நாம் புரிந்து கொள்ள மாட்டோம். ஒட்ட நறுக்காமல் கூடுதலாக வைத்திருந்தார்கள் என்றே புரிந்து கொள்வோம். நபி (ஸல்) அவர்கள் இதே சொல்லைப் பயன்படுத்தி, உங்களது தாடிகளை வளர விடுங்கள் என்று கட்டளையிடுகிறார்கள். அப்படியானால் தாடியை ஒட்ட நறுக்கி விடாமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே இதன் கருத்தாகும். தாடி தொடர்பான ஹதீஸில் வளர விடுங்கள் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபூ என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்ஃபா என்ற வார்த்தை ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் தலைமுடியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்ஃபூ என்ற சொல்லும் அவ்ஃபா என்ற சொல்லும் ஒரே வேர்ச்சொல்லிலிருந்து உருவானவை. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து புரியலாம். அபூஜஅஃபர் (அல்பாக்கிர் முஹம்மத் பின் அலீ) அவர்கள் கூறுகிறார்கள்:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர) அவர்கள் அருகில் நானும் என் தந்தை (அலீ பின் ஹுசைன்) அவர்களும் வேறு சிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ர) அவர்கடம் குயல் பற்றிக் கேட்டோம். ஒரு ஸாஉ தண்ணீர் போதும் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது என்றார். அதற்கு ஜாபிர் (ர) அவர்கள், உன்னை விட அதிக முடியுள்ளவரும் உன்னை விடச் சிறந்தவரு(மான அல்லாஹ்வின் தூதர் அவர்களு)க்கு அந்த அளவுத் தண்ணீர் போதுமானதாக இருந்தது எனக் கூறினார்கள். பிறகு ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள்.

அதிக முடியுள்ளவர் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபா என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு முடியை வெட்டாமல் இருத்தல் என்ற பொருள் இருக்குமேயானால் நபி (ஸல்) அவர்கள் தலைமுடியை வெட்டியதே இல்லை என்ற தவறான கருத்து ஏற்படும்.

ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தமது தலைமுடியை வெட்டியதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே இவ்வார்த்தைக்கு முடியை வெட்டாமல் இருத்தல் என்று பொருள் இருப்பதாக வாதிடுவது தவறு என்பதைச் சந்தேகமற உணரலாம்.

இறைவன் நாடினால் அடுத்த இதழில்...

EGATHUVAM MAR 2010