திருப்புமுனையாகட்டும் தீவுத் திடல் மாநாடு
இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நாம் எழுப்பவே முடியாது; அது ஓர் எட்டாக்கனி என்றே தமிழக முஸ்லிம்களாலும், முஸ்லிம் தலைவர்களாலும் கருதப்பட்டது. அதற்கு ஓர் அடிப்படைக்
காரணமும் இருந்தது.
இந்திய விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு
இட ஒதுக்கீடு இருந்தது. நாடு விடுதலை பெற்றதும் முஸ்லிம்களிடமிருந்து அந்த இட ஒதுக்கீட்டு
உரிமை பறிக்கப்பட்டது. திரும்பவும் இட ஒதுக்கீட்டைக் கேட்டால் அது ஒரு தேச விரோத உணர்வாகப்
பார்க்கப்படும் அல்லது ஆக்கப்படும் என்று அன்றைக்கு இருந்த அசாதாரணமான நிலையில் முஸ்லிம்களும்
முஸ்லிம் தலைவர்களும் பயந்தனர்.
இட ஒதுக்கீடு சாத்தியமில்லை என்பதற்கு இந்தப் பயம் தான் அடிப்படைக்
காரணமாக அமைந்தது. தமிழகத்திலும் மத்தியிலும் இட ஒதுக்கீடு இல்லாதது தான் நம் தலையெழுத்து
என்று முஸ்லிம்கள் வாளாவிருந்து வந்தனர். கொள்கையளவில் கூட இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை
ஏற்றுக் கொண்ட இயக்கங்கள் இல்லை என்ற நிலையே தமிழகத்தில் இருந்தது.
இந்த சமயத்தில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு, முஸ்லிம்களின் அவல நிலையை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியது.
தாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் காட்டும் கட்டாயம்
ஏற்பட்டது. இந்தக் கால கட்டங்களில் தலைதூக்கிய தவ்ஹீதுக் கொள்கையாளர்கள் இட ஒதுக்கீடு, காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து அதை மக்களுக்கு உணர்த்தினர்.
முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு என்ற வித்தை விதைத்து, அதற்கு நீர் பாய்ச்சி வளரச் செய்தனர். இதற்காக 1999 ஜூலை 4ல்
சென்னை கடற்கரையில் ஒரு வாழ்வுரிமை மாநாடு, 2004 மார்ச் 21ல்
தஞ்சையில் ஒரு பேரணி, கும்பகோணத்தில்
2006 ஜனவரி 29ல்
பேரணி,
2007 ஜூலை 4ல் சிறை நிரப்பும் போராட்டம் என பல்வேறு கட்டப் போராட்டக் களங்களின்
பரிசாக தமிழகத்தில் 3.5 சதவிகித இட
ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தனர்.
இந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் ஒரு வீரியத்தையும் இலக்கை
அடைவதில் ஒரு வெறித்தனத்தையும் சமுதாய மக்களின் உள்ளங்களில் ஊட்டியதும் உரமாக்கியதும்
தவ்ஹீதுக் கொள்கை தான்.
அடக்கப்பட்ட சமுதாயமான இஸ்ரவேலர்களிடம் அடக்குமுறை தர்பார் நடத்திய
ஃபிர்அவ்னுக்கு எதிராக மூஸா நபியை ஆர்த்தெழச் செய்த அற்புத சக்தி தவ்ஹீத் தான். இறைத்
தன்மைக்குச் சொந்தம் கொண்டாடிய ஏகாதிபத்திய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ஃபிர்அவ்னை எதிர்த்து
ஒரு சாமானியரான மூஸாவை நிற்க வைத்து, ஃபிர்அவ்னின் சாம்ராஜ்யத்தைச் சாய வைத்ததும் சரிய வைத்ததும்
இந்த ஏகத்துவக் கொள்கை தான்.
சத்தியப் பணியுடன் சமுதாயப் பணியும் செய்த இறைத்தூதர் மூஸா நபியின்
போராட்டம், இட ஒதுக்கீட்டுப் போராளிகளுக்கு
வித்தானது; சத்தானது.
2006 ஜனவரி 29ல்
நடைபெற்ற குடந்தைப் பேரணி மாநாடு, ஜெயலலிதாவையே
இட ஒதுக்கீட்டிற்கான ஆணையம் அமைக்கச் செய்தது. அதுவே அடுத்து வந்த கருணாநிதியின் ஆட்சியில்
ஆணையாக வந்தது. இது தான் உண்மை.
ஆணையம் வெற்றுப் பேப்பர், இட ஒதுக்கீடு தருவதற்குத் தமிழக அரசுக்கு அதிகாரமே இல்லை என்றெல்லாம்
கூறி ஓட்டுக்காகவும் சீட்டுக்காகவும் சமுதாயத்தை அடகு வைத்த இயக்கங்களும், இட ஒதுக்கீட்டிற்காக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடாத இலக்கியக்
கழகங்கள் எனும் அனாமதேயங்களும், பெயர்
தாங்கி சமுதாய இயக்கங்களும், லெட்டர்பேடு
இயக்கங்களும் தாங்கள் தான் இட ஒதுக்கீட்டை வாங்கித் தந்ததாகப் போலியாகச் சொந்தம் கொண்டாடினாலும்
அதற்கு உண்மையான சொந்தக்காரர்கள் நாம் தான். அதற்குப் பின்னணியாக இருந்தது ஏகத்துவம்
தான். இந்த ஏகத்துவம் என்ற மந்திரக்கோல் நம்மிடம் இல்லாவிட்டால் இட ஒதுக்கீட்டை நம்மால்
ஒரு போதும் வாங்கியிருக்க முடியாது. இட ஒதுக்கீடு பெற அல்லாஹ்வின் அருளால் நாம் தான்
காரணம் என்பதற்கு இந்த ஒன்றே போதிய ஆதாரமாகும்.
மாநிலத்தில் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த அதே ஏகத்துவவாதிகள்
தான்,
இன்ஷா அல்லாஹ் வரும் ஜூலை 4ல் சென்னை தீவுத் திடலில், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளின்படி மத்தியில் 10 சதவிகித இட ஒதுக்கீடு கோரி களமிறங்கியிருக்கிறோம். இவ்வாறு
நாம் களமிறங்கியிருப்பதற்குக் காரணம் பேருக்காக அல்ல! இது தூதுச் செய்தியின் தூய பணிகளில்
ஒன்று என்பதற்காகவே!
அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார்.
(அல்குர்ஆன் 7:157)
இந்தச் சமுதாயத்தின் சுமைகளை அகற்றி, இட ஒதுக்கீட்டை இக்லாஸ் என்ற தூய்மையான எண்ணத்தில் அடைவதற்காகவே!
சமுதாயத்தின் வறுமையும் வெறுமையும் நீங்கிட மத்தியில் நாம் காணவிருக்கின்ற
இட ஒதுக்கீட்டிற்கான மாநாட்டிற்குக் களமிறங்குவோம்! கனவை நனவாக்குவோம்! கானல் நீரை
காணும் நீராக்குவோம் இன்ஷா அல்லாஹ்! கேள்வி பதில்
EGATHUVAM APR 2010