பெண்கள் எவ்வளவு தூரம் தனியாகப் பயணம் செய்யலாம்?
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கி விட்டோம் என்று பெண்ணுரிமை இயக்கங்கள்
பீற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த இட ஒதுக்கீடெல்லாம் பெண்களுக்குச் சுதந்திரத்தைப்
பெற்றுத் தந்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். என்ன தான் ஒரு பெண், எம்.பி.யாக இருந்தாலும் தலைநகர் டெல்லியில் தனியாக இரவு நேரத்தில்
சுதந்திரமாக நடந்து வர முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. இது தான் உண்மை. இந்த
உண்மை மனிதச் சட்ட நாயகர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் புரியவும் மாட்டார்கள். ஆனால்
இஸ்லாமிய மார்க்கம் ஓர் இயற்கை மார்க்கம்.
உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக!
இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான்.
அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றுதலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில்
அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 30:30)
இந்த இயற்கை மார்க்கம், பெண்களின் இயல்பை, பலவீனத்தைப்
புரிந்து பெண்களுக்கென்று வாழ்க்கைப் பயணத்திலும் வழிப் பயணத்திலும் ஒரு சரியான வழிகாட்டலை
வழங்குகின்றது.
அந்த வழிகாட்டல் தொடர்பாக நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் புகாரியில்
பதிவாகியுள்ளன. ஆனால் அந்த ஹதீஸ்களில் முரண்பாடுகள் தென்படுகின்றன. இதைப் பற்றிய விளக்கத்தைப்
பார்க்கும் முன் அந்த ஹதீஸ்களை முதலில் பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும்
இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை
(மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள
வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி
1088, முஸ்லிம் 2386
இந்த ஹதீஸ் ஒரு நாள் தூரம் பயணம் செய்யக் கூடாது என்று கூறுகின்றது.
நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு விஷயங்களைச் செவியுற்றேன்:
1. ஒரு பெண் கணவனோ (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினரோ உடன் இல்லாமல்
இரண்டு நாட்கள் தொலைவுக்குப் பயணம் செய்யக் கூடாது.
2. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு
நோற்கக் கூடாது.
3. சுப்ஹுத் தொழுததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ர் தொழுததிலிருந்து
அஸ்தமனம் வரையும் தொழக் கூடாது.
4. மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல்
அக்ஸா (பைத்துல்மக்திஸ்), எனது (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசல்
ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிவாசல்களுக்கு (நன்மையை நாடிப்) பயணம் மேற்கொள்ளக்
கூடாது.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 1197
இந்த ஹதீஸில் இரண்டு நாட்கள் என்று உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத்
தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள
வேண்டாம்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1086, முஸ்லிம்
2381
இந்த ஹதீஸ் மூன்று நாட்கள் என்று குறிப்பிடுகின்றது.
இந்த 3 ஹதீஸ்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் குழப்பமோ, கோளாறோ, முரண்பாடோ கிடையாது.
பொதுவாக ஒரு ஹதீஸ் இன்னொரு ஹதீசுடன் முரண்படுவது போல் தோன்றினால்,
1. அந்த இரு ஹதீஸ்களையும் இணைத்து கருத்துக் காண வேண்டும்.
ஆனால் இங்கு அவ்வாறு இணைத்துக் கருத்துக் காண்பதற்கு வழியில்லை.
ஒரு நாள் பயணம் என்ற ஹதீஸ் சரியானது என்று வைத்துக் கொண்டால்
இரண்டு நாட்கள்,
மூன்று நாட்கள் என்று அறிவிக்கப்படும் இரு ஹதீஸ்களையும் அது
மறுக்கின்றது.
இப்படி ஒவ்வொரு ஹதீஸும் மற்ற இரண்டு ஹதீஸ்களை மறுக்கின்றன.
2. இது போன்ற நேரத்தில் இம்மூன்றும் வெவ்வேறு கால கட்டத்தில் கூறப்பட்டதற்கு
ஆதாரம் இருந்தால் கடைசியாகக் கூறப்பட்டதை நாம் எடுத்துக் கொள்ளலாம். மற்ற இரண்டும்
முன்னர் கூறப்பட்டுப் பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்று முடிவு செய்தால் முரண்பாடு
நீங்கி விடும். ஆனால் இம்முன்றில் இது தான் இறுதியானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகள் வரும் போது அவை அனைத்தையும்
நாம் நிறுத்தி வைக்க வேண்டும். இம்மூன்று ஹதீஸ்களுமே சரியான ஹதீஸ்கள் அல்ல என்ற முடிவை
எடுத்து வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்தப் பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும்.
இது தான் இஸ்லாத்தின் அடிப்படையாகும். இது தான் தர்க்க ரீதியாகவும் சரியானதாகும். முரண்பட்ட
மூன்றையும் யாராலும் நடைமுறைப்படுத்த முடியாது.
வேறு ஆதாரங்களைத் தேடும் போது இந்த விஷயத்தில் சரியான முடிவு
எடுக்கத்தக்க ஆதாரம் கிடைக்கிறது.
பெண்களின் பயணம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு ஒரு வரையறையை
நிர்ணயிப்பதற்குக் காரணம், இந்த வரையறை இல்லையென்றால் பெண்களின்
கற்புக்குக் குந்தகம் ஏற்பட்டு விடும். அல்லது ஒரு பெண் தானே வலியத் தவறி விடுவாள்.
இதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் இப்படியொரு வரையறையை நிர்ணயிக்கின்றார்கள்.
இந்த வரையறையில் 3 நாட்கள் ஒருபுறமிருக்கட்டும்!
ஒரு நாள் அதாவது 24 மணி நேரங்கள் கூட இது போன்ற
தவறுகள் நிகழ்வதற்கு மாபெரும் அவகாசம்.
அதுவும் இந்த நவீன காலத்தில், போக்குவரத்துப்
புரட்சி உள்ள காலத்தில் இந்த அவகாசம் சாதாரண ஒன்றல்ல! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
இப்படி ஓட்டை,
உடைசல் உள்ள சட்டத்தைத் தருவார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
அப்படியானால் எங்கோ ஓரிடத்தில் குழப்பம் இருக்கின்றது என்று
நாம் பார்த்தாக வேண்டும். அந்தக் குழப்பம் வேறெங்குமில்லை. அது அறிவிப்பாளர்களின் புரிதலில்
தான் ஏற்பட்டுள்ளது. இதை நாம் யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்யவில்லை. தப்ரானியில்
இடம் பெற்றுள்ள,
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்
இதை நமக்கு விளக்குகின்றது. அந்த ஹதீஸ் இது தான்.
கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண்
மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தவுடன், "மக்கள்
மூன்று நாட்கள் என்று கூறுகிறார்களே!'' என்று அவர்களிடம்
வினவப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), "இது
அவர்களது யூகம் தான்'' என்று பதிலளித்தார்கள்.
நூல்: தப்ரானி
புகாரியில் இடம்பெற்றுள்ள முரண்பட்ட மூன்று ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள், தாங்கள் விளங்கிய தவறான விளக்கத்தின் அடிப்படையிலேயே அறிவிக்கின்றார்கள்.
ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதற்குத் தெளிவான விளக்கத்தை
அளித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சரியான வழிகாட்டலைத் தெரிவிக்கின்றார்கள். அந்த
வழிகாட்டல் அடிப்படையில் நாம் அனைவரும் செயல்படுவோமாக!
EGATHUVAM APR 2010