Apr 20, 2017

இப்படியும் சில தஃப்ஸீர்கள் - 2

இப்படியும் சில தஃப்ஸீர்கள் - 2

ஆகுக என்றால் ஆகாது (?)

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

இறைவன் என்பவன் எதையும் செய்து முடிக்கும் வல்லவன், மகா ஆற்றலுடையவன் என்று அனைத்து முஸ்லிம்களும் அவனது வல்லமையை, சக்தியை சரியாக புரிந்து வைத்துள்ளனர். இறைவனுக்கு இணை கற்பிக்கும் பலரின் செயல்பாடுகள் இந்த நம்பிக்கைக்கு மாற்றமாய் அமைந்திருந்தாலும் இறைவன் எதற்கும் வல்லமையுள்ளவன் என்ற நம்பிக்கையில் யாரும் குறை வைப்பதில்லை. அவனுடைய ஆற்றலை யாரும் குறைத்து மதிப்பிடுவதில்லை. இறைவன் தனது ஆற்றலைப் பற்றி பின்வருமாறு கூறுகிறான்.

அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து ஆகு' என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும். அல்குர்ஆன் 2:117

எதையும் இறைவன் படைப்பதாக, நிகழ்த்துவதாக இருந்தால் அவன் ஆகு என்று கூறினாலே போதும்; உடனே அது ஆகிவிடும் என இறைவன் மக்களுக்குத் தன் ஆற்றலை விளக்கிக் கூறுகின்றான்.

இறைவன் ஒன்றைப் படைப்பதற்கு அல்லது நிகழ்த்துவதற்கு, ஆகு' என கூறுவதே அவனுக்கு போதுமானது என்றே பாமர இஸ்லாமியர்களும் புரிந்துள்ளனர்.

பாமரர்களும் சரியாகப் புரிந்துள்ள மேற்கண்ட வசனத்திற்கு விளக்கம் என்ற பெயரில் இமாம் கஸ்ஸாலி கூறுவதைக் கேட்டால், படித்தால் இறைவனின் ஆற்றல் பற்றிய முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு அது வேட்டு வைப்பதாக உள்ளது. இதோ அந்த அற்புத விளக்கம் (?)

இவ்வசனத்தின் வெளிப்படையான பொருள் சாத்தியமற்றதாகும். ஏனெனில் (இறைவன் ஒன்றை நாடும் போது அதை நோக்கிக் கூறும்) ஆகு என்ற அவனுடைய சொல், ஒன்று உருவாகுவதற்கு முன்னரே அதை நோக்கிச் சொல்லப்படுவதாக இருந்தால் அது அசாத்தியமானதாகும். காரணம் இல்லாதது அது படைக்கப்படும் வரை உரையாடலைப் புரிந்து கொள்ளாது. அந்தப் பொருள் இருக்கும் போது அவ்வாறு (சொல்லப்படுவதாக) இருந்தால், இருப்பது உருவாக்கப்படுவதை விட்டும் தேவையற்றது. நூல்: இஹ்யாவு உலூமித்தீன் வ அஹூ தக்ரீஜுல் ஹாஃபிழில் இராக்கி

பாகம்: 1, பக்கம்: 198

கஸ்ஸாலி இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை விளக்கினால் இக்கருத்தின் அபத்தம் புரிய வரும். இறைவன் ஒன்றைப் படைக்க நாடினால் ஆகு என்று கூறுவதே அவனுக்குப் போதுமானது என இறைவன் மேற்கண்ட வசனத்தில் கூறினான் அல்லவா? அதற்கு விளக்கம் கூறும் போது, இவ்வாறு இறைவன் கூறுவது சாத்தியமே இல்லை' என்கிறார். ஏனெனில் ஒன்றை நோக்கி ஆகு' என்று கூறுவதாக இருந்தால் அது முன்னால் இருந்தால் தான் அவ்வாறு கூற முடியும். கண் முன்னே இல்லாததை நோக்கி ஆகு என்று எவ்வாறு கூற முடியும் என படைத்த இறைனை நோக்கியே கேள்வி எழுப்புகிறார்?

ஒரு வாதத்திற்கு இருப்பதை நோக்கி இறைவன் ஆகு என்று கூறுவான் என விளக்கமளித்தால் அதுவும் தவறு தான். ஏற்கனவே இருப்பதை நோக்கி ஆகு என ஏன் கூற வேண்டும்? ஏற்கனவே இருப்பதை நோக்கி ஆகு என கூறத் தேவையில்லையே? அது தான் இருக்கின்றதே' என்கிறார்

இவ்வசனத்திற்கு எப்படிப் பொருள் கொண்டாலும் கருத்து தவறாகவே இருக்கின்றது. எனவே இவ்வசனத்தின் பொருளை அப்படியே நம்பாமல் ஏதோ இறைவன் தனது ஆற்றலை பற்றிச் சொல்கிறான் எனப் புரிந்து கொள்ள வேண்டும்' என்று கூறுகிறார்.

மனிதர்களின் நிலையை எவ்வாறு மதிப்பிடுவோமோ அந்த நிலைக்கு இறைவனை வைத்துப் பார்க்கிறார் இந்தக் கல்விக் கடல் (?).

இல்லாத ஒன்றை நோக்கி இறைவன் பேசுகின்றான், அவற்றுக்குக் கட்டளையிடுகின்றான் என்பதே இவர் இவ்வாறு விளக்கம் அளிப்பதற்குக் காரணமாய் இருக்கின்றது.

இல்லாத ஒன்றை நோக்கிப் பேசுவது மனிதர்களுக்குச் சாத்தியமற்றதே. ஆனால் யாவற்றையும் படைத்தாள்கின்ற இறைவன், இல்லாததை நோக்கியும்  உரையாட ஆற்றலுள்ளவன். அவனைப் பொறுத்த வரை பகல், இரவு, பெரியது, சிறியது, இருப்பது, இல்லாமலிருப்பது எல்லாம் ஒன்றே.

இறைவனைப் பொறுத்த வரை இல்லாதது என்ற ஒன்றே கிடையாது. இல்லாதது என்பவையும் அவனுடைய நாட்டத்தில் இருக்கக் கூடியதே,

இறைவன் என்பவன் எதை நோக்கியும் பேச ஆற்றுலுள்ளவன் என்ற அடிப்படையைக் கூட கருத்தில் கொள்ளாமல் இறைவனின் வார்த்தை அர்த்தமற்றது என்ற அபத்தமான கருத்தை விளக்கம் என்ற பெயரில் கொட்டுகிறார்.

இந்த லட்சணத்தில், "இறைவா, கஸ்ஸாலிக்கு நீ கல்வியை வழங்கியதைப் போன்று எங்களுக்கும் கல்வியை வழங்குவாயாக'' என்று மார்க்கக் கல்வி பயிலும் மாணவர்கள் பிரார்த்தனை புரிவது அறியாமையின் உச்சக்கட்டமாகவே தோன்றுகிறது,

சுருக்கமாகச் சொன்னால், இறைவனுக்கு எவ்வாறு பேச வேண்டும் என தெரியவில்லை என்ற விஷக்கருத்தை சொல்லாமல் சொல்கிறார் இமாம் (?) கஸ்ஸாலி.

நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. அல்குர்ஆன் 35:14

இல்லாததை நோக்கி இறைவனால் பேச இயலாது என்று கூறி இறைவனை பலவீனமானவனாகத் தானும் எண்ணி, மக்களையும் அவ்வாறு எண்ணம் கொள்வதற்குத் தூண்டுவதாக இவ்விளக்கம் இல்லையா?

இறைவனின் ஆற்றலையே கேள்விக் குறியாக்கக்கூடிய வகையில் விளக்கமளித்துள்ளார் கஸ்ஸாலி. இறைவனின் ஆற்றல் பற்றிய முஸ்லிம்களின் நம்பிக்கையைத் தகர்த்தெறியக் கூடியதாக உள்ளது இந்த விளக்கம்.

இவரது விளக்கம் அந்த வசனத்தை நன்கு விளங்கிட நமக்கு உதவுமா? அல்லது நம்மைக் குர்ஆனிலிருந்து தூரப்படுத்துமா? என்பதைச் சிந்திக்க வேண்டும். இமாம்களின் தவறுகளை நியாயப்படுத்தும் குறைமதியினர் இதற்குப் பதில் கூற வேண்டும்.

கவ்ஸருக்கு விளக்கம்?

(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.

அல்குர்ஆன் 108:1

கவ்ஸர் என்றால் நீர்த்தடாகம் எனவும், அதையொட்டிய பல நிகழ்வுகளையும் நபிகளார் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான்,  "ஜிப்ரீலே, இது என்ன?'' என்று கேட்டேன். "இது அல்கவ்ஸர்'' என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ர)

நூல்: புகாரி 4964

மறுமை நாளில் மக்களின் தாகத்தைப் போக்குவதற்காக இறைவன் நபிகளாருக்கு கவ்ஸர்' எனும் நீர்த்தடாகத்தை வழங்குவான். அவர்களின் சமுதாய மக்கள்
யாவருக்கும் அதிலிருந்து நபிகளார் நீரருந்த வழங்குவார்கள். ஒரு சிலர் இதில் நீரருந்த முடியாதவாறு தடுக்கப்படுவார்கள்.

இன்னும் இது போன்ற ஏராளமான விளக்கங்களை நபிகளாரின் பொன்மொழிகளில் காணமுடிகின்றது.

ஆக கவ்ஸர் என்றால் நீர்த்தடாகம் என்பது தெளிந்த நீரோடையைப் போன்று தெளிவான விஷயமாகும்.

இப்போது இமாம்கள் கவ்ஸருக்கு அளித்துள்ள விளக்கங்களை காண்போம்.

 ஹஸன் என்ற அறிஞர் கூறுகிறார் : கவ்ஸர் என்றால் குர்ஆன் ஆகும். நூல்: இமாம் சுயூத்தி அவர்களின் அத்துர்ருல் மன்சூர்

பாகம்: 15,  பக்கம்:  701

3 கவ்ஸர் என்பது இறைவன் நபிகளாருக்கு வழங்கிய நபித்துவம், இதர நன்மைகள், அல்குர்ஆன் ஆகியவைகளாகும் என இக்ரிமா அவர்கள் கூறுகிறார்கள்,

நூல்: இமாம் சுயூத்தி அவர்களின் அத்துர்ருல் மன்சூர்

பாகம்: 15,  பக்கம்:  702

 சொர்க்கத்தில் உள்ள நதியாகும். அதன் இரு ஓரங்களிலும் முத்துக் கலசங்கள் உள்ளது. அதிலே நபிகளாரின் மனைவிமார்கள் இருப்பார்கள்.  நூல்: இமாம் சுயூத்தி அவர்களின் அத்துர்ருல் மன்சூர்

பாகம்: 15,  பக்கம்:  701

கவ்ஸர் என்பதற்கு இமாம்கள் என்போர் தங்கள் விருப்பப்படி விளக்களித்துள்ளதை அறியலாம். ஒருவர் குர்ஆன் என்கிறார், ஒருவர் நபித்துவம் என்கிறார். மற்றொருவர் சொர்க்கத்தில் உள்ள நதி என்கிறார். மேலும் நபிகளாரின் மனைவிமார்களும் அங்கே இருப்பார்களாம்?

சம்பந்தமே இல்லாமல் நபிகளாரின் மனைவிமார்களை எதற்காக இத்துடன் இணைக்கிறார் என்பதை யூகிக்க இயலவில்லை.

நபிகள் நாயகம், கவ்ஸர் என்பது நீர்த்தடாகம் என விளக்கியிருக்கும் போது, அதைக் குறிப்பிடாமல் தங்கள் இஷ்டத்துக்கு விளக்கம் கூற வேண்டிய அவசியம் என்ன?

ஹதீஸ் அடிப்படையில் நின்று இமாம்கள் தங்கள் விளக்கங்களைக் கூறவில்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.

ஹதீஸ் அடிப்படையில் தங்களின் விளக்கங்களைக் கூறியிருந்தால் அதை மனதார ஏற்போம். அதற்கு மாறாக அவர்களின் விளக்கம் இருக்குமெனில் அதை ஒருக்காலும் ஏற்காததுடன், அது தவறு என்று மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போமாக!

நரக சங்கிலி

பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.) அல்குர்ஆன் 69:32

தீர்ப்பு நாளில் மனிதர்களை இறைவன் விசாரணை செய்து அவர்கள் உலகில் செய்த செயல்களுக்கேற்ப அனைவருக்கும் பதிவேட்டை வழங்குவான். சொர்க்கவாசிகளுக்கு வலது கையிலும் நரகவாசிகளுக்கு இடது கையிலும் அந்தப் பதிவேடு வழங்கப்படும். இவைகள் யாவும் இதற்கு முந்தைய வசனங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

யாருக்கு இடது கையில் வழங்கப்படுமோ அவனது நிலை தான் மேற்கண்ட வசனத்தில் கூறப்படுகிறது.

எழுபது முழம் உள்ள சங்கிலியால் பிணைக்கப்பட்டு நரகில் தள்ளப்படுவான் என அவ்வசனம் கூறுகிறது.

இனி இதில் விளக்குவதற்கு ஒன்றுமே இல்லை என்றாலும் சில இமாம்கள் இந்தச் சங்கிலியையும் விட்டு வைக்கவில்லை. விளக்கம் தருவதில் சூரப்புலிகளான அவர்கள் இந்தச் சங்கிலியைப் பற்றி விளக்கம் தருகிறார்கள்.

 அந்தச் சங்கிலியானது ஒருவனது பின் துவாரத்தில் நுழைந்து அவனது வாய் வழியாகவோ அல்லது அவனின் தலை வழியாகவோ வெளியே வரும் என எனக்குத் தகவல் கிடைத்தது.

நூல்: தஃப்ஸீரு அப்துர் ரஸ்ஸாக் பாகம்: 3,  பக்கம்: 343

என்னே ஒரு கற்பனை! இந்தச் சங்கிலியைப் பற்றி இப்போது விளக்க என்ன அவசியம் நேர்ந்தது? இந்தத் தகவல் இவருக்கு எங்கிருந்து கிடைத்தது?

இது போதாதென்று ஒரு முழம் என்பதையும் விலாவாரியாக விளக்கி விளாசுகிறார்கள்.

நரகவாசி பிணைக்கப்படும் சங்கிலி எழுபது முழம் கொண்டதாக இருக்கும் என இறைவன் தெரிவித்துள்ளான். ஒரு முழம் என்பதை இவ்வுலகில் நாம் எவ்வாறு கணக்கிடுவோமோ அது போன்று எழுபது முழமா? அல்லது ஒரு முழம் என்பதை வேறு விதத்தில் இறைவன் கணக்கிடுவானா என்பதை இறைவனும் இறைத்தூதரும் கூறாததால் இதைப் பற்றிய ஆய்வுக்குள் நாம் செல்ல வேண்டிய தேவையில்லை. வேறு கணக்கு என்றிருந்தால் அதை இறைவன் நமக்குத் தெளிவாகவே விளக்கிக் கூறியிருப்பான். இதிலிருந்தே நாம் ஒரு முழம் என்பதை எவ்வாறு கணக்கிடுவோமோ அதைப் போன்று தான் எழுபது முழம் என்பதை விளங்கலாம்.  ஆனால் நவ்ஃப் என்ற அறிஞர் இதற்கு மாற்றமாக எந்த ஆதாரமுமின்றி தன் மனோ இச்சையின் அடிப்படையில் விளக்கம் அளிக்கின்றார்.

 நவ்ஃப் என்ற அறிஞர் அவ்வசனம் தொடர்பாக விளக்கும் போது ஒவ்வொரு முழமும் எழுபது காலடிகள் கொண்டதாக இருக்கும். ஒரு காலடி (தூரம்) என்பது உனக்கும் (அந்நாளில் அவர் கூஃபாவின் மைதானத்தில் இருந்தார்) மக்காவிற்கும் இடையில் உள்ள தூரத்தை விட வெகு தொலைவானதாகும் என நவ்ஃப் கூறியதை நான் செவியேற்றேன் என்று நுஸைர் என்பவர் கூறுகிறார்.

பார்க்க:  தஃப்ஸீரு அப்துர் ரஸ்ஸாக் பாகம்: 3,  பக்கம்: 343

ஒரு முழம் என்பது எழுபது காலடிகள் தூரம் கொண்டதாம். ஒரு காலடி தூரம் என்பது கூட நாம் நினைப்பது கிடையாதாம். மக்காவிற்கும் கூஃபாவிற்கும் இடைவெளி தான் ஒரு காலடி தூரமாம். இதைப் போன்ற எழுபது முழம் கொண்ட சங்கிலியால் நரகவாசி பிணைக்கப்படுவான் என்று அந்த இமாம் விளக்கமளிக்கின்றார். இதை நபிகள் நாயகம் கற்றுத் தந்துள்ளார்களா? என்பதை சிந்திக்கத் தவறிவிட்டார்கள்.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM FEB 2017