Apr 20, 2017

அறிஞர்களின் பார்வையில் அலகாபாத் தீர்ப்பு

அறிஞர்களின் பார்வையில் அலகாபாத் தீர்ப்பு

அனுபம் குப்தா....

 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி நடந்த பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குள் மறைந்து கிடக்கும் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்ட லிபரஹான் கமிஷனின் வழக்கறிஞர்.

லிபரஹான் கமிஷன் தனது அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்னாலேயே அதை விட்டு விலகி விட்டார். இதற்குக் காரணம், அறிக்கையில் அடங்கியிருக்கும் பதிவுகள் தொடர்பாக, கமிஷன் தலைவர் நீதிபதி லிபரஹானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான்.

பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்டிருக்கிறார் அனுபம் குப்தா! லிபரஹான் கமிஷனில் பத்து ஆண்டுகள் வழக்கறிஞராகச் செயல்பட்டார். அயோத்தியா இயக்கத்தின் அதி தீவிர ஆதரவாளர்கள் இவரின் குறுக்கு விசாரணையில் குறுக்கொடிந்து போனார்கள்.

செப்டம்பர் 30, 2010 அன்று நீதிபதி சுதிர் அகர்வாலின் 5098 பக்கங்கள் கொண்ட தீர்ப்பையும், எஸ்.யூ. கானின் 285 பக்கத் தீர்ப்பையும், தரம்வீர் சர்மாவின் 1181 பக்கத் தீர்ப்பையும் படித்துப் பார்த்து அவை ஒவ்வொன்றையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்த ஒரு சில வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர்.

இவரிடத்தில் ஃப்ரண்ட் லைன் பத்திரிகையின் நிருபர்கள் வெங்கடேசன், வெங்கடேஷ் ராம கிருஷ்ணன் ஆகியோர் கண்ட பேட்டியை இப்போது பார்க்கப் போகின்றோம்.

கேள்வி: இந்த மூன்று நீதிபதிகளின் தீர்ப்பைப் பற்றி நீங்கள் குறிப்பிடுகின்ற கருத்து என்ன?

நீதிமன்றம் வழங்கிய இறுதி நிவாரணத்தில் நாடு மூழ்கிக் கிடக்கின்றது. இப்போது நாட்டின் கவனம் நீதிமன்றத்தை விட்டும் திருப்பப்பட்டு விட்டது.

சுதந்திரம் பெற்ற மதச் சார்பின்மை உலகை விட்டும் முழுமையாக விலகி ஏதோ தங்களை வேறொரு தனி ஓர் உலகத்தில், யுகத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டே சுதிர் அகர்வாலும், ஷர்மாவும் தீர்ப்பளித்திருக்கின்றனர் என்று முழுமையாக நம்புகிறேன்.

தான் ஒரு தீவிர இந்து மதப் பற்றாளர் என்று நீதிபதி ஷர்மா தெளிவாகக் குறிப்பிடுகின்றார். அவர் வைக்கின்ற வாதங்கள் அனைத்தும் அயோத்தியா பக்தர்கள் லிபரஹான் கமிஷன் முன் தெரிவித்த வாதங்களின் எதிரொலிகள்.

உதாரணத்திற்கு, இந்த வழக்கில் வைக்கப்பட்ட வாதங்களில் ஒன்றான, பாபரி மஸ்ஜித் கட்டடத்தை பள்ளிவாசல் என்று அழைக்கலாமா? கூடாதா?' என்ற விஷயத்தை எடுத்துக் கொள்வோம்.

"பள்ளியைக் கட்டுவதற்குக் காரணம் எதுவாகவும் இருக்கட்டும். பாபரி மஸ்ஜிதின் மனாரா மற்ற பள்ளிகளுடன் ஒத்திருக்கின்றதா? என்ற விவகாரமாக இருக்கட்டும். இதில் சர்ச்சை செய்வது வீண்! அதை ஒரு பள்ளிவாசலாகத் தான் நாம் கருத வேண்டும்'' என்று நீதிபதி சுதிர் அகர்வால் குறிப்பிடுகின்றார்.

நீதிபதி ஷர்மாவோ ஒவ்வொரு கண்ணோட்டமாக உள்ளே சென்று, "இது இஸ்லாமிய கொள்கை நெறிப்படி கட்டப்படவில்லை. அதனால் இது பள்ளிவாசலே இல்லை'' என்று குறிப்பிடுகின்றார். இது நம்மை அப்படியே தூக்கி வாரிப் போடுகின்றது. காரணம், இது லிபரஹான் கமிஷன் முன்னால் சங் பரிவாரக் கும்பல் வைத்த அதே வாதம் தான்.

இப்போது இதற்கு எதிராக அவர்களிடம், "இது பள்ளி இல்லை என்றால் அதை நீங்கள் ஏன் எதிர்க்கின்றீர்கள்? ஏன் அதற்காக ஓர் இயக்கத்தைத் துவக்கினீர்கள்? அதை ஏன் உடைத்தீர்கள்?'' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அது பள்ளிவாசலே இல்லை என்ற வாதம் உண்மையில் ஒரு கேலிக் கூத்தாகும்.

ராமர் அங்கு பிறந்தார், கோயிலை இடித்து விட்டுத் தான் பள்ளி கட்டப்பட்டது, இது ஓர் அந்நிய நாட்டு அடக்குமுறையாளர்களின் அடக்குமுறைச் சின்னம் என்று மக்கள் நம்பி விட்டுப் போகட்டும். இதை ஒரு பள்ளிவாசல் இல்லை என்று சொல்வது முற்றிலும் பொருத்தமற்ற வாதமாகும். பிரச்சனையே இது பள்ளிவாசல் என்பதால் தான். பள்ளி இல்லை என்றால் அது அர்த்தமற்றதாகி விடும்.

நீதிபதி டி.வி. ஷர்மா

ஷர்மாவின் தீர்ப்பில் ஏற்கனவே நான் அனுபவத்தில் அறிந்து வைத்திருந்த வாதங்களே அதிகம் பிரதிபலித்தன. ஒளிவு மறைவு இல்லாத, மழுப்பாத, கலப்பற்ற, பொருந்தாத அடிப்படை வாத இந்து மதக் கண்ணோட்டத்திலேயே அவரது தீர்ப்பு எதிரொலிக்கின்றது.

நீதிபதி சுதிர் அகர்வால்

நீதிபதி சுதிர் அகர்வால் நீண்ட ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றார். தான் எழுதிய தீர்ப்பின் மூலம் ஒரு நினைவுச் சுவடியைப் படைத்திருக்கின்றார். தீர்ப்பின் இருபத்தியொரு வால்யூம்களிலும் தெளிவான ஒரு எழுத்தோட்டம், கட்டுக்கோப்பு இழையோடியிருக்கின்றது.

இத்தனையையும் நாம் கூறினாலும் அவர் ஓர் ஊறிய மதவாதி! ஷர்மாவைப் போன்று அவரும் ஒரு தீவிர இந்து மத நம்பிக்கையாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நீதிபதி எஸ்.யூ. கான்

நீதிபதி சிப்கத்துல்லாஹ் கான், தனது தீர்ப்பின் அடிப்படையாகக் கொண்ட முக்கிய சாராம்சங்களில் இதர இரு நீதிபதிகளை விட்டும் முற்றிலும் வேறுபடுகின்றார். இவரது தீர்ப்பில் (275வது பக்கம்) எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவாக நிலத்தைப் பிரிக்கின்ற விவகாரத்தில், "(வழக்கில் சம்பந்தப்பட்ட) ஏதாவது ஒரு சாராருக்கு அவர்களின் முழுமையான தனி பயன்பாட்டுக்கும் அனுபவத்திற்கும் நிலத்தை ஒதுக்க வேண்டும்  என்பது கட்டாயமல்ல! விரும்பத்தக்கது தான்'' என்று குறிப்பிடுகின்றார்.

பள்ளியின் மைய மாடம் முஸ்லிம்களின் அனுபவத்தில் தான் இருந்தது. வெளியில் உள்ள ராம் சபுத்ரா மட்டுமே இந்துக்களின் அனுபவத்தில் இருந்தது என்று ஒப்புக் கொண்டாலும் அதை அவர் முஸ்லிம்களுக்கு அளிக்காமல் இந்துக்களுக்கு அளித்திருக்கின்றார்.

"பிற இனத்துடன் இரண்டறக் கலந்து, முன் யோசனைக்கு இடம் கொடுக்காமல் கையில் கிடைக்கின்ற சாதனங்களைப் பயன்படுத்திக் கொண்டு சுதாரிப்புடன் வாழ்கின்ற இனம் தான் உயிர் வாழ முடியும்'' என்ற சார்லஸ் டார்வின் தத்துவத்தை மேற்கோள் காட்டி பள்ளியின் மைய மாடத்தை இந்துக்களுக்கு ஒதுக்கி, தான் அளித்த தீர்ப்பை நியாயப்படுத்துகின்றார்.

வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், சிறுபான்மை சமுதாயத்தின் ஒருவராக இருந்து கொண்டு வாழ்வதற்காகப் பெரும்பான்மை சமுதாயத்தின் உணர்வுடன் கண்டிப்பாக ஒன்றிப் போயாக வேண்டும் என்று தெரிவிக்கின்றார்.

இந்த டார்வின் தத்துவத்தைப் பின்பற்றியதன் விளைவாக, அல்லது பெரும்பான்மைக்குத் தக்க தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விதியைப் பின்பற்றியதன் விளைவாக இவர் தனது தீர்ப்பில் குவிமாடத்தை இந்துக்களுக்கு வழங்கியதன் மூலம் இந்தக் கட்டடத்தின் அமைப்பையும் நிலத்தின் வரைபடத்தையும் தலைகீழாகப் புரட்டியிருக்கின்றார். ஒரு சொத்தைப் பிரிப்பதற்குரிய அடிப்படைக் கொள்கையைத் தலைகீழாக மாற்றியிருக்கிறார்.

டார்வின் ஒருபோதும் பெரும்பான்மையினரின் ஆதிக்க வெறிக்கு ஆதரவாக இருந்ததில்லை. டார்வினின் புனித விளக்கம் என்ற நூல், டார்வினும் அவரது குடும்பத்தினரும் அடிமைத்தனம் மற்றும் இன வாதத்தை ஒழிப்பதில் எவ்வளவு உறுதியாக இருந்தனர் என்பதைத் தெளிவாக விளக்குகின்றது.

கேள்வி: இடிக்கப்பட்ட பாபர் பள்ளிக்குக் கீழ் ராமர் கோயில் இருந்ததா? அல்லது தற்காலிகக் கோயில் எழுப்பப்பட்ட அதே இடத்தில் தான் ராமர் பிறந்தாரா என்ற வரலாற்றுப்பூர்வமான கேள்விகளுக்கு நீதிமன்றம் விடை காண முடியாதா? அது நீதிமன்றத்திற்கு அசாத்தியம் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

ஆம்! ஆனால் இல்லை! ஒரு குறிப்பிட்ட விவகாரம் குறித்து இரு தரப்பினரும் மோதிக் கொள்கின்ற போது அது தொடர்பாக நீதிமன்றத்தைக் குறை சொல்ல முடியாது. ஆயினும் நீதிமன்றத்திற்கு முன் பல்வேறு வழிமுறைகள், பரிகாரங்கள் இருக்கின்றன.

வரலாறு தொடர்பாக இரு தரப்பினரும் போரிடும் போது இதற்கு இப்படித் தான் தீர்வு. அதற்கு அப்படித் தான் தீர்வு என்று ஒரு முடிவுக்கு வருவது அசாத்தியம் என இந்த விஷயத்தில் நீதிமன்றம் தெரிவித்திருக்கலாம்.

லிபரஹான் கமிஷனுக்கு முன்பாக சாட்சியளிக்க வந்த உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்கிடம் நான் எழுப்பிய கடைசிக் கேள்வி, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை சம்பந்தமாகத் தான்.

ராமர் கோயிலுக்கு ஆதரவாக லிபரஹான் கமிஷன் முன் கல்யாண் சிங் தாக்கல் செய்தது தொல்லியல் ஆய்வுத் துறை அளித்த அறிக்கையின் கடைசி அத்தியாயத்தைத் தான். அந்த அறிக்கையின் முற்பகுதியில் கூறப்பட்ட செய்திக்கும் பிற்பகுதியில் கூறப்பட்ட செய்திக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் இருந்தது.

இந்துக் கோயில்களின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்த தூண்கள், பெரும் பெரும் கட்டடத் துண்டுகள் அனைத்தும் மிகுந்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பின.

தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் கற்பனை வாதங்கள் அனைத்தும் அப்போதைய பி.ஜே.பி. அரசாங்கத்திற்குத் தக்க உருவாக்கப்பட்டிருந்தன.

அறிவியல் ஆய்வு என்ற பெயரில் அரசாங்கத்தின் தொல்லியல் துறை அரசியல் துஷ்பிரயோகத்திற்காகப் பயன்பட்டதும் பலியானதும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.

வரலாறு மற்றும் தொல்லியல் துறை ரீதியிலான பித்தலாட்டங்களை இவ்வழக்கில் சாட்சி சொன்ன இடதுசாரி சிந்தனையாளர்கள் தோலுரித்துக் காட்டினர். இது நீதிபதி அகர்வாலிடம் அறிவு மற்றும் உணர்வுப்பூர்வமான பாரபட்சமான பார்வையை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக அவர்கள் கம்யூனிஸ்ட்களாக, மார்க்ஸிஸ்ட்களாக இருப்பதே குற்றம் என்பது போல் நீதிபதி அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார்.

வரலாறு அல்லது தொல்லியல் துறை விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் கூட உருப்படியாகத் தீர்வு காணுமா? என்பது ஒரு கேள்விக் குறி தான்.

எனினும் நீதிமன்றத்திற்கு முன்பு இந்த விவகாரம் வரும் போது அதை விட்டும் நீதிமன்றம் விலகிக் கொள்ள முடியாது. ஆனால் அதை அறிவார்ந்த அடக்கத்துடன் நீதிமன்றம் கையாள வேண்டும்.

தொல்லியல் துறைக்கு எதிரான ஆட்சேபணையை மதிப்பீடு செய்வதில் இந்த அறிவடக்கத்தை அகர்வாலின் தீர்ப்பில் காண முடியவில்லை. தொல்லியல் துறையின் அறிக்கைக்கு எதிராக சாட்சி சொன்ன சூரஜ் பான், டி. மண்டல் மற்றும் இன்னபிற அறிஞர்களை சுத்த கம்யூனிஸ்ட்கள், மார்க்ஸிஸ்ட்கள், முஸ்லிம்களின் கைக்கூலிகள் என்று கடுமையாகச் சாடி அவர்கள் மீது அகர்வால் தனது ஆத்திரத்தை அள்ளிக் கொட்டியிருக்கின்றார்.

நீதித்துறையின் நடுநிலைத் தன்மையை அகர்வால் தன்னுடைய இந்து மதச் சிந்தனைக்கு சரணடையச் செய்து விட்டார்.

கேள்வி: நீதிமன்றம் தனக்கு முன்னால் இருக்கும் இந்த வழக்கின் பிரச்சனையை, மத நம்பிக்கையின் அடிப்படையில் என எப்படி விளங்கிக் கொண்டது?

வழக்கு எண்: 4, தீர்வு காண வேண்டிய பிரச்சனை எண்: 11, "வழக்கில் உள்ள இந்தச் சொத்து ராமர் பிறந்த இடமா?'' என்று தான் கேட்கின்றது.

தெளிவாகவே இது வரலாற்று உண்மை தொடர்பான கேள்வி! அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஓர் அசாத்தியமான பணி தேவைப்படுகின்றது. அதனால் இந்தப் பிரச்சனையின் கேள்வியை, பொதுவாக "இந்துக்களின் மத நம்பிக்கை, சம்பிரதாயங்கள்படி இந்த வழக்கில் உள்ள சொத்து ராமர் பிறந்த இடமா?'' என்பதாக அமைத்துக் கொண்டார்.

அவர் தனது தீர்ப்பில் இந்தப் பிரச்சனையின் கேள்வியை எப்படி மாற்றியிருக்கின்றார்? உருத்தெரியாமல் ஆக்கியிருக்கின்றார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு! இது அவரது தீர்ப்பில் இடம்பெறுகின்ற அபாயகரமான பகுதியாகும்.

கேள்வி: 1989ல் ராமர் சிலை சார்பில் தியோகி நந்தன் அகர்வால் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகளின் அணுகுமுறை சரியானது தானா?

வழக்கின் வாதியாக, வழக்காளியாக சிலையை ஆக்குவது ரோமர்களின் சட்டத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட நடைமுறையாகும்.

மத நம்பிக்கை கொண்ட மக்களின் நீண்ட நலனைக் கருத்தில் கொண்டு, சிலைகளுக்கு ஒரு சட்டப்பூர்வமான கற்பனைப் பாத்திரத்தை வரலாற்று ரீதியாகக் கொடுப்பது அவசியம் என்று கருதப்பட்டது. அப்போது தான் கடவுளுக்காக வேண்டி அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் வசதியாகும்.

இந்துக் கடவுள்களுக்கு அல்லது சிலைகளுக்கு நீதிமன்றத்தில் வந்து வழக்காடும் சட்டத் தகுதி உண்டு என்பதில் அறவே சந்தேகமில்லை. இந்த அளவில் நீதிமன்றத்தின் கருத்து சரியானது தான். ஆனால், "சிலை இருந்த இடத்திற்கும் சட்டத் தகுதி உண்டு; அதுவும் சட்டப்பூர்வ வாதி'' என்று நீதிபதி சொல்வது எந்த வகையிலும் நியாயமில்லை. நீதித்துறை வரலாற்றில் இதற்கு எந்த முன்மாதிரியும் இல்லை.

அகர்வால் மற்றும் ஷர்மா ஆகியோரின் தீர்ப்பில் அவர்களின் மத வெறியைப் படம் பிடித்துக் காட்டுவதற்கு இந்தக் கருத்து அடங்கிய வரிகளே போதும்.

கேள்வி: 1961ல் தாக்கல் செய்த சுன்னத் ஜமாஅத் வழக்கை, காலம் கடந்தது என்று நீதிபதிகள் எவ்வாறு அறிவித்தனர்? 1989ல் ராமர் தன் நண்பர் என்று தியோகி நந்தன் மூலம் தாக்கல் செய்த வழக்கை காலம் கடந்தது அல்ல என்று எப்படி நியாயப்படுத்துகின்றனர்?

சட்டத்துறையில் கால வரம்பு என்பது மிகப் பெரிய நுணுக்கமான விஷயமாகும். உண்மையில் ஒருவர் மற்றொருவரின் சொத்தை அபகரித்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்டவர் 12 வருடங்கள் கழித்து நீதிமன்றத்தை அணுகினார் என்றால் அவருக்குக் கால வரம்புச் சட்டப்படி நீதிமன்றம் நீதி வழங்காது.

இந்தச் சட்டம் பழைய வழக்குகளைத் தாக்கல் செய்வதைத் தவிர்க்கின்றது; தடுக்கின்றது. தன் சொத்தின் மீது, தானே கவனம் செலுத்தாதவர்களைக் காப்பதற்கு இந்தச் சட்டம் மறுக்கின்றது.

1989ஆம் ஆண்டு வழக்கைப் பொறுத்த வரை நீதிபதி அகர்வால் (பாரா 2, 617ல்) இவ்வழக்கு தாக்கல் செய்வதற்குரிய காரணத்தை (ஈஹன்ள்ங் ர்ச் ஹஸ்ரீற்ண்ர்ய்) அறிவது கடினமாக உள்ளது என்று தெரிவிக்கின்றார்.

(ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டுமென்றால், தான் வழக்கு தொடுப்பதற்குரிய காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டும். இதற்குத் தான் ஈஹன்ள்ங் ர்ச் ஹஸ்ரீற்ண்ர்ய் என்றழைக்கப்படுகின்றது.)

"ராமருக்காக அவரது நண்பர் தியோகி நந்தன் அகர்வால் (ராம் லல்லா) வழக்கு தொடர்வதை அவசியமாக்கும் எந்த ஓர் அச்சுறுத்தலும் இல்லை. அதனால் வழக்கு தொடுப்பதற்குரிய உரிமை அவருக்கு ஏற்படவில்லை'' என்று அகர்வால் மீண்டும் 2, 630 பாராவில் தெரிவிக்கின்றார்.

அவரது இவ்விரு கருத்துக்களும் அவரது துறையின் திறமையை வெளிப்படுத்துகின்ற அதே வேளையில், 1989 வழக்கைத் தாக்கல் செய்வதற்குத் தகுந்த காரணத்தை (ஈஹன்ள்ங் ர்ச் ஹஸ்ரீற்ண்ர்ய்) தியோகி நந்தன் அகர்வால் தெரிவிக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி விடுகின்றது.

இந்த வழக்கின் தன்மை இவ்வாறிருக்கும் போத சிவில் சட்ட நடைமுறை, ஆணை எண்: 7, விதி 11ன்படி, இந்த வழக்கு எவ்விதத் தயக்கமும் தாமதமும் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டிய வழக்காகும். ஆனால் நீதிபதி அகர்வால் மேற்கண்ட காரணத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, இது காலம் கடந்தது என்று முஸ்லிம்கள் செய்த ஆட்சேபணையைத் தள்ளுபடி செய்திருக்கின்றார். இது ஒரு நயவஞ்சகத்தனமாகும்.

அவரது கருத்துப்படி, ஒரு சொத்துக்கு உரிமை (விளம்புகைப் பரிகாரம்) கோரி வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமானால் கண்ம்ண்ற்ஹற்ண்ர்ய் ஆஸ்ரீற் (கால வரம்புச் சட்டம்) விதி 58ன்படி ஒருவரது உரிமை பறிக்கப்பட்டிருக்க வேண்டும். அது தான் அவருக்கு வழக்கு தொடுப்பதற்குரிய உரிமையை அளிக்கின்றது.

(உதாரணத்திற்கு, என்னுடைய நிலத்தில் இன்னொருவர் கட்டடம் கட்டுகின்றார் என்றால் என்னுடைய உரிமை பறிக்கப்படுகின்றது. இது எனக்கு வழக்கு தொடுக்கும் உரிமையை அளிக்கின்றது. ஆனால் அதே சமயம், பாதிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று வருடங்களுக்குள்ளாக வழக்குத் தொடுக்கப்பட வேண்டும்.)

1989ல் ராம் லல்லாவின் உரிமைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்றால் இல்லை. அவரது உரிமை ஏதேனும் பறிக்கப்பட்டதா என்றால் நிச்சயமாக இல்லை.

ஒரு பேச்சுக்கு ராம் லல்லாவின் உரிமை பறிக்கப்பட்டிருந்தால் அல்லது பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக 1989ல் வழக்கு தொடர முடியுமா? என்றால் முடியாது. காரணம், பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். அதாவது 1949லிருந்து 1952க்குள் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் ராம் லல்லாவுக்காக 1989ல் தியோகி நந்தன் அகர்வால் வழக்கிற்குள் வந்திருக்கின்றார். அவ்வாறு வந்தது செல்லாது என்று தான் நீதிபதி சுதிர் அகர்வால், தானே கூறிய கால வரையறைப்படி அதைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

ஆனால் 1989ல் எந்தவிதமான உரிமையும் ராம் லல்லாவுக்குப் பாதிக்கப்படவில்லை; பறிக்கப்படவில்லை. காரணம், "(அவர் பிறந்த இடமே கடவுள் ஸ்தானம், கடவுளுக்கு எல்லையே இல்லை) கடவுளுக்கு எதிராகக் கால வரையறைச் சட்டம் துவங்கவே இல்லை'' என்று கூறி, தான் கூறிய கால வரைச் சட்டத்திற்கு நேர்முரணாக 1989 வழக்கு செல்லும் என்று தீர்ப்பளிக்கின்றார்.

இவரது எதிரும் புதிருமான தீர்ப்பு வழக்கின் தன்மையை முற்றிலும் மாற்றி விட்டது.

வாத அடிப்படையில் பார்த்தால், வழக்கு தாக்கல் செய்வதற்குரிய காரணத்தைச் சொல்லாத ஒரு காரணத்துக்காகவே இது தள்ளுபடி செய்யப்பட வேண்டிய வழக்காகும்.

நிரந்தர மைனர்?

நீதிபதிகள் அகர்வாலும், ஷர்மாவும் இந்துக் கடவுள் சிலை ஒரு நிரந்தர மைனர் என்ற கருத்தை ஒப்புக் கொள்கின்றனர். நீதிபதி கான் இதை ஒப்புக் கொள்ளவில்லை.

கால வரைச் சட்டம் சிலருக்கு விதிவிலக்கு அளிக்கின்றது.

அந்த விதிவிலக்கில் மைனர்கள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள், பைத்தியக்காரர்கள் ஆகியோர் அடங்குவர்.

எனவே கடவுளின் நண்பர் தியோகி நந்தன் அகர்வால், ராமருக்காக 1989ல் தாக்கல் செய்த வழக்கைக் காப்பாற்றுவதற்காக ராமர் சிலையை நிரந்தர மைனர் என்று அகர்வாலும், ஷர்மாவும் ஆக்கியிருக்கின்றார்கள்.

முதல் தீர்ப்புக்கு முரணான தீர்ப்பு

1926ஆம் ஆண்டு சிதார்மால் ய/ள் பஞ்சு லால் வழக்கில் நிரந்தர மைனர் தொடர்பான ஆட்சேபணை இதே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் வந்தது. "ஒரு சிலைக்கு நிரந்தர மைனர் என்ற தகுதி உண்டு'' என்ற தத்துவத்திற்கு எதிராகத் தான் இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மதம் மற்றும் அறக்கட்டளை இந்துச் சட்டம் என்ற நூலிலிருந்து எஸ்.யூ. கான் இதற்கு மேற்கோள் காட்டுகின்றார். இது ஓர் ஆதாரப்பூர்வமான நூல்.

நீதிபதி பி.கே. முகர்ஜி எழுதிய இந்த நூலிலிருந்தே அகர்வாலும் ஷர்மாவும் தங்களின் சில முடிவுகளுக்கு ஆதாரமாக மேற்கோள் காட்டுகின்றனர்.

அந்த நூல் தான், "இந்துக் கடவுள் சிலையையும் மைனரையும் ஒப்பிடுவது தவறானது மட்டுமல்ல. வழக்கின் போக்கையே வேறு பாதைக்கு மாற்றிவிடக் கூடியது'' என்று குறிப்பிடுகின்றது.

இதன் அடிப்படையில் தான் நீதிபதி கான் இந்த விஷயத்தில் மற்ற இரு நீதிபதிகளுக்கு முற்றிலும் மாறுபடுகின்றார். நாம் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராமருக்கு மைனர் தகுதி அளித்த தற்போதைய தீர்ப்பு அது ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு நேர் மாற்றமானதாகும்.

வக்ஃப் வாரியத்தின் வழக்கு

நீதிமன்றம் இரண்டு காரணங்களுக்காக வக்ப் வாரிய வழக்கைத் தள்ளுபடி செய்கின்றது. அந்த இரண்டு காரணங்களை இப்போது பார்ப்போம்.

காரணம்: 1 பகுதி அனுபவ உரிமை

வக்ப் வாரிய வழக்கைப் பொறுத்த வரையில் இந்த வழக்கில் அனுபவ உரிமையைக் கோருவது மட்டும் தான் சரியான பரிகாரமும், நிவாரணமும் ஆகும்.

அனுபவப் பாத்தியதை பறிக்கப்படும் போது நீதிமன்றத்தில் முக்கியமாகக் கோர வேண்டிய பரிகாரம் அனுபவ உரிமை மீட்பு தான்.

அதற்குத் துணைப் பரிகாரமாக சொத்துரிமையை, விளம்புகைப் பரிகாரத்தைக் (உங்ஸ்ரீப்ஹழ்ஹற்ண்ர்ய்) கோரலாம். வக்ப் வாரிய வழக்கு இப்படித் தான் அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் இந்த வழக்கைத் தொடர்வதற்குக் காரணம் (ஈஹன்ள்ங் ர்ச் ஆஸ்ரீற்ண்ர்ய்) 1949 டிசம்பர் மாதம் பள்ளியில் சில இந்துக்கள் சிலைகளைக் கொண்டு வைத்தது தான். இந்த அத்துமீறிய செயல் முஸ்லிம்களுடைய அனுபவ உரிமையைப் பறித்து விட்டது. அனுபவ உரிமை மீட்பு கோரி வழக்குத் தொடர வேண்டுமானால் கால வரைச் சட்டப்படி 12 வருடங்களுக்குள்ளாக வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

"சிலைகளைக் கொண்டு போய் வைத்ததால், முஸ்லிம்கள் முழுமையாகத் தங்கள் அனுபவ உரிமையை இழக்கவில்லை. (பகுதி அனுபவ உரிமை முஸ்லிம்களிடம் இருந்து கொண்டிருக்கின்றது) 12 வருடம் என்ற கால வரைச் சட்டப்படி அனுபவ உரிமை கோரி வழக்குத் தொடர வேண்டுமானால் முஸ்லிம்கள் அந்த அனுபவ உரிமையை முழுமையாக இழந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் முழுமையாக அனுபவ உரிமையை இழக்கவில்லை. அதனால் 12 வருடம் என்ற காலை வரைச் சட்டப்படி அனுபவ உரிமை கோரி வழக்கு தொடர முடியாது'' என்று சுதிர் அகர்வால் தெரிவிக்கின்றார்.

அகர்வாலின் இந்தக் கண்டுபிடிப்பு சுத்தப் பொய்யும், அபத்தமும் ஆகும். 1949 டிசம்பர் மாதம் சிலையைக் கொண்டு வைத்ததால் தான் முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜிதுக்கு வர முடியாமல் ஆயினர். அது தான் உண்மை எனும் போது, முஸ்லிம்களிடம் எந்த அடிப்படையில் 1949க்குப் பிறகு அனுபவ உரிமை இருக்கின்றது?

காரணம்: 2

கால தாமதம்

இந்த வழக்கு, காலம் கடந்தது என்று முடிவு செய்யப்பட்டதற்கு மற்றொரு காரணமும் உண்டு. இந்த வழக்கு அனுபவ உரிமையை (டர்ள்ள்ங்ள்ள்ண்ர்ய்) முதன்மையாகக் கோருகின்றது என்பதை இந்த நீதிபதிகள் பார்க்காமல் அதை அப்படியே தூரத் தள்ளிவிட்டு, அதன் துணைக் கோரிக்கையான விளம்புகைப் பரிகாரத்தை (உங்ஸ்ரீப்ஹழ்ஹற்ண்ர்ய்) பிரதான கோரிக்கையாக (திட்டமிட்டு) பார்த்திருக்கின்றனர்.

சொத்துரிமை கேட்டு வழக்குத் தாக்கல் செய்வதற்குரிய கால வரையறை (பழைய சட்டப்படி) ஆறு ஆண்டுகளாகும்.

(குறிப்பு: அனுபவ உரிமை கோரி வழக்கு தாக்கல் செய்வதற்குரிய கால வரையறை தான் 12 ஆண்டுகள். சொத்துரிமை கோரி வழக்கு தாக்கல் செய்வதற்கு பழைய சட்டப்படி 6 ஆண்டுகள். தற்போதைய சட்டப்படி 3 ஆண்டுகள் ஆகும்.)

"சர்ச்சைக்குரிய பகுதி பாபரி மஸ்ஜித்; அதில் இந்துக்களுக்கு உரிமை இல்லை'' என்று முஸ்லிம்கள் கோரியிருந்தனர். இதை ஓய்ப்பதற்கு நீதிபதிகள் முஸ்லிம்களின் அனுபவ உரிமையை முதலில் ஓய்க்கின்றனர். அது எப்படி?

1. 1949ல் இந்துக்கள் சிலைகளை வைத்த பின் அதை ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்று அறிவித்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145, 146 பிரிவுகளின் கீழ் அதை நடுவர் ஆற்ற்ஹஸ்ரீட்ம்ங்ய்ற் செய்து விடுகின்றார். எப்போது ஒரு சொத்து ஆற்ற்ஹஸ்ரீட்ம்ங்ய்ற் செய்யப்பட்டு விடுகின்றதோ அது சட்டப்பூர்வமான பாதுகாப்பிற்குள் வந்து விடுகின்றது. இந்த அடிப்படையில் இந்த வழக்கில் அனுபவ உரிமை (டர்ள்ள்ங்ள்ள்ண்ர்ய்) கோரி வழக்கு தாக்கல் செய்வது அவசியமில்லை என்று ஆகி விடுகின்றது. நீதிபதிகள் இந்த ஆற்ற்ஹஸ்ரீட்ம்ங்ய்ற்ஐ பெரிய ஆதாரமாக எடுத்துக் கொண்டு முதலில் முஸ்லிம்களின் அனுபவ உரிமையை ஓய்த்து விடுகின்றனர்.

2. எப்போது சட்டப்பூர்வமான பாதுகாப்பில் உள்ள சொத்துக்கு அனுபவ உரிமை கோரும் வழக்கு இல்லை என்றாகி விடுகின்றதோ அப்போது சொத்துரிமை பிரகடனம் (உங்ஸ்ரீப்ஹழ்ஹற்ண்ர்ய்) மட்டும் போதும் என்றாகி விடுகின்றது. சொத்துரிமைப் பிரகடனம் கோரும் வழக்கை 6 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு முஸ்லிம்கள் 6 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யத் தவறியதால் அந்த வழக்கு காலம் கடந்தது என்ற அடிப்படையில் செல்லாததாகி விடுகின்றது.

நீதிபதிகள் இவ்வாறு முதலில் அனுபவ உரிமை, இரண்டாவது சொத்துரிமை என்று இரண்டு உரிமைகளையும் ஓய்த்து விட்டனர்.

என்னுடைய பார்வையில் இவ்வழக்கில் அனுபவ உரிமை குறித்து எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி சாதாரண கேள்வியல்ல. அது மிகப் பெரிய விஷயமாகும். இதைச் சாதாரண பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்துகின்ற குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 145, 146 என்ற குறுகிய பிரிவுகளைப் பயன்படுத்தித் தீர்க்கக்கூடிய அளவுக்கு இது சாதாரண விஷயமல்ல.

1949 டிசம்பரில் முஸ்லிம்கள் இழந்த அனுபவ உரிமையை ஆற்ற்ஹஸ்ரீட்ம்ங்ய்ற் என்ற அடிப்படையில் மட்டும் பார்த்திருப்பது மிக மிகக் குறுகிய கண்ணோட்டமாகும்.

கேள்வி: 1986ல் பாபரி மஸ்ஜிதின் வாயிற் கதவு பூட்டைத் திறக்கும்படி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் கதவைத் திறந்தது தான் 1992ல் பள்ளி உடைக்கப்படுவதற்குக் காரணமானது. அந்த உத்தரவை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை இந்த அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்புகள் தள்ளுபடி செய்து விட்டன. சட்ட விரோத உத்தரவைக் கண்டு கொள்ளாதது நியாயமா?

இந்த விவகாரத்தில் எஸ்.யூ. கானின் தீர்ப்பு ஒரு சிறப்புத் தகுதியைப் பெறுகின்றது. பூட்டுக்களைத் திறக்கும்படி மாவட்ட நீதிபதி போட்ட உத்தரவு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தவறான காரியமாகும் என எஸ்.யூ. கான் குறிப்பிடுகின்றார்.

ஆனால் ஷர்மாவோ தன்னுடைய 9 பக்கங்கள் கொண்ட தனித் தீர்ப்பில், "இந்துக்கள் ஏற்கனவே 1950லிருந்து அந்தப் பகுதியின் அனுபவத்தில் இருக்கிறார்கள் என்பதாலும் பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டு விட்டதாலும், அந்த உத்தரவு இந்துக்களின் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதாலும் அது சரியான உத்தரவு தான்'' என்று உறுதிப்படுத்துகின்றார்.

இதன் மூலம் ஷர்மா 1949ல் நடந்த சட்ட விரோதச் செயலையும், 1992ல் நடந்த சட்ட விரோதச் செயலையும் சட்டப்பூர்வமாக்கி விடுகின்றார்.

1986ஆம் ஆண்டு உத்தரவு ஓர் இடைக்கால உத்தரவு! வழக்கின் முக்கியப் பிரச்சனையே தீர்க்கப்பட்டு விட்டதால் அதற்கு இனி எந்த வேலையும் இல்லை என்றாகி விட்டது. அதனால் நீதிபதி சுதிர் அகர்வால் எந்தக் கருத்தும் சொல்லாமல் தந்திரமாக நழுவி விடுகின்றார்.

கேள்வி: அரசியல் சட்டம் 25ன் வரையறைகள் என்ன? இந்தச் சட்டம் மதத்தைப் பிரச்சாரம் செய்வதற்கும், அம்மதத்தைப் பின்பற்றி நடப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கின்றது. அந்தச் சட்டத்திற்குக் கீழ் இடம்பெறுகின்ற மத நம்பிக்கைக்குள் மதத்தின் முக்கியமான சித்தாந்தங்கள் எல்லாம் அடங்குமா?

அரசியல் சட்டம் 25 முழு அதிகாரம் படைத்த உரிமையைக் கொண்டிருக்கவில்லை. அது ஓர் வரையறுக்கப்பட்ட உரிமையைத் தான் கொண்டிருக்கின்றது. இதன் கீழ் வருகின்ற உரிமை, அரசியல் சட்டத்தின் மற்ற அடிப்படை உரிமைகளுக்குக் கண்டிப்பாகப் பொருந்தியாக வேண்டும். மதத்தின் பெயரால் எதைச் செய்தாலும் இந்தச் சட்டப் பிரிவு 25 வந்து தடுத்துக் காப்பாற்றி விடும் என்று கருதி விடக் கூடாது. அது அரசியல் சட்டத்தின் மற்ற அடிப்படை உரிமைகளுடன் உரசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கு எல்லா மதத்தினருக்கும் இந்தச் சட்டம் சுதந்திரத்தை அளிக்கின்றது. இந்தச் சட்டத்தை இந்துக்களுக்கு மட்டும் தான் என்று எல்லை நிர்ணயிப்பது அரசியல் சட்டத்தின் முக்கியத்தன்மையையே சிதைத்து விடும். இந்துக்களுக்குச் சமமாக முஸ்லிம்களும் அந்தச் சட்டப் பிரிவு 25ன் படி உரிமைகளைப் பெறுகின்றனர்.

இந்தச் சட்டத்தின் விதியைப் பயன்படுத்தி ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றும் பழக்க வழக்கங்களை மற்ற மதத்தின் மீது திணித்து விட முடியாது.

எங்கே அந்த 2.77 ஏக்கர் நிலம்?

அலகாபாத் நீதிமன்றத்தின் கூறு கெட்ட, கூழ்முட்டை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அகோரா, குழந்தை ராமர், முஸ்லிம்கள் ஆகிய மூன்று சாராருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

சட்ட நிபுணர்கள், அரசியல் விமர்சகர்கள் போன்றோரும் நீதிபதிகள் குறிப்பிடுவது 2.77 ஏக்கர் நிலத்தைத் தான் என்று விளக்கமளிக்கின்றனர்.

ஆனால் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று வாதிகளும் இதைத் தவறு என்கின்றனர்.

காரணம், தொடரப்பட்ட வழக்கு ஒரேயொரு துண்டு நிலம் தொடர்பாகத் தான். அது தோராயமாக 130 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட 10,660 சதுர அடி நிலம் தான். இது தான் சர்ச்சைக்குரிய இடம். இதைப் பிரித்து, பிய்த்துக் கொடுத்தால் ஒவ்வொரு தரப்புக்கும் கிடைக்கப் போவது சுமார் 3500 சதுர அடி நிலம் தான். இங்கு 2.77 ஏக்கர் நிலம் எப்படி வந்தது?

ராம் கதா பூங்கா என்ற பெயரில் ஒரு சரித்திரப் பூங்காவை அமைக்கப் போகின்றோம்; சுற்றுலா வளர்ச்சி மற்றும் புனித யாத்திரிகர்களின் வசதிகளை மேம்படுத்தல் என்ற போர்வையில் அப்போதைய உத்தரபிரதேச கல்யாண் சிங் அரசு, 7.10.1991 மற்றும் 10.10.1991 ஆகிய தேதிகளில் பாபரி மஸ்ஜிதுக்கு அருகில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது. பின்னர் அந்த நிலத்தை ராம ஜென்ம பூமி நியாஸ் என்ற ராம ஜென்ம பூமி டிரஸ்டிடம் உ.பி. அரசு குத்தகைக்கு விட்டது. இதை எதிர்த்து ஆறு ரிட் மனுக்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்களில் முக்கியமானது, பாபரி மஸ்ஜித் வழக்கின் மனுதாரரான முஹம்மது ஹாஷிம் அவர்களின் மனுவாகும்.

உ.பி. அரசின் அந்த உத்தரவைத் தடுத்து நிறுத்தி அலகாபாத் உயர்நீதிமன்றம் ஓர் இடைக்காலத் தடையை அக்டோபர் 1991ல் வழங்கியது.

இறுதியில் பள்ளி இடிக்கப்பட்ட பிறகு, உ.பி. அரசின் நிலம் கையகப்படுத்தும் ஆணையை 11.12.1992 அன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மனுதாரர்களின் வாதங்களை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், இந்த நிலத்தைக் கையகப்படுத்தி, பள்ளியை இடித்த இடத்தில் கோயில் கட்டலாம் என்ற தீய நோக்கத்தைப் பின்னணியாகக் கொண்டது தான் இந்த அரசாங்க ஆணை' என்றும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இது தான் 2.77 ஏக்கர் உருவான பின்னணியாகும். அன்றிலிருந்து தான் 2.77 ஏக்கர் எல்லோரது மனதிலும் இடம் பிடித்தது. இந்த அடிப்படையில் தான் அலகாபாத் உயர்நீதிமன்றமும் 2.77 ஏக்கர் நிலத்தைப் பங்கு வைக்க வேண்டும் என்று சொல்கின்றது. ஆனால் இந்த நிலம் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தை உள்ளடக்கவில்லை. ஆனால் அதே சமயம் சர்ச்சைக்குரிய ராம் சபுத்ரா (ராமரின் பாத மேடை), சீதா ரசோய் (சீதாவின் சமையலறை) ஆகியவற்றின் சில பகுதிகள் பாபரி மஸ்ஜித் இடத்தின் 10600 சதுர அடிக்குள் வருகின்றது.

எனவே 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரிய பகுதியே இல்லை எனும் போது அந்த நிலத்தைப் பிரிப்பது, பள்ளி, கோயில் கட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மூன்று வழக்காளிகளும் கூறுகின்றனர். எனவே இந்த அடிப்படையிலும் இது தவறான தீர்ப்பு என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


பாபரி மஸ்ஜித் இடத்தைச் சுற்றியுள்ள 67.703 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு 1993ஆம் ஆண்டு கையகப்படுத்தியது என்பதும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.

EGATHUVAM FEB 2011