மஹ்ஷர் மன்றத்தில் உயர் தூதரின் உலமாக்களுக்கு எதிரான புகார் - 2
அபூஜாஸிர்
"அபூபக்ர் தமது இல்லத்திற்கு உள்ளேயே தமது இறைவனை வணங்கவோ, தொழவோ, தாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும். ஆனால் இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ, இவற்றைப் பகிரங்கமாகச் செய்வதோ கூடாது''
நாம் சுட்டிக் காட்டியிருக்கும் புகாரி ஹதீஸில் இந்த வாசகம்
மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். அபூபக்ர் எது வேண்டுமானாலும் செய்து
கொள்ளலாம்;
ஆனால் அவர் அதைப் பகிரங்கமாகச் செய்யக் கூடாது. அதாவது அவர்
குர்ஆனை ஓதினால் சப்தமாக ஓதக் கூடாது. இது தான் மக்கா காஃபிர்களின் நிபந்தனை!
இந்த நிபந்தனை எதைக் காட்டுகிறது? அவர்கள் குர்ஆன் மீது கொண்டுள்ள கடுமையான வெறுப்பைக் காட்டுகிறது? இந்தக் குர்ஆன் இப்படி வெகுவாக மக்களை ஈர்த்து விடுகிறதே என்பது
தான் அவர்களின் பெருங்கவலை!
குர்ஆன் வசனம் என்றதுமே அவர்களது குலையெல்லாம் நடுங்க ஆரம்பித்து
விடுகின்றது. அதனால் தான் ஒட்டு மொத்த வெறுப்பையும் இந்தக் குர்ஆன் மீது கொட்டித் தீர்த்தனர்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் குர்ஆன் என்ற இந்தத் தூதுச் செய்தியைக்
கொண்டு வந்த துவக்க காலம் முதலே இணை கற்பிப்பவர்களின் வெறுப்பலைகள், வேதனைக் குமுறல்கள் வெளிப்பட ஆரம்பித்தன.
இவ்வாறு அவர்கள் காட்டிய வெறுப்பலைகள் கீழ்க்கண்ட வகையில் பிரதிபலித்தது.
1. கொலை முயற்சி
இது நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு வெளியேறும் வரை நடந்து
கொண்டிருந்தது.
"இணை வைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே
மிகக் கடுமையானது எது?'' என்று நான் அப்துல்லாஹ் இப்னு
அம்ர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "(மக்காவில்) உக்பா இப்னு அபீ முஐத் என்பவன் நபி (ஸல்) அவர்கள்
தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களின் கழுத்தில் போட்டு அதைக்
கடுமையாக நெறித்ததைப் பார்த்தேன். அப்போது அபூ பக்ர் (ரலி) வந்து நபி (ஸல்) அவர்களை
விட்டு உக்பாவை (தம் கையால்) தள்ளினார்கள். அப்போது "என் இறைவன் அல்லாஹ் தான்
என்று சொல்லும் காரணத்திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்(ல முயற்சிக்)கிறீர்கள்? அவரோ தம் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு
வந்திருக்கிறார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உர்வா இப்னு ஸுபைர்(ரலி)
நூல்: புகாரி 3678
குர்ஆன் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பை இப்படிக் குமுறிக்
கொப்பளித்தனர். அந்த வெறுப்பின் காரணமாகத் தான், குர்ஆன்
கூறும் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மக்களை வேரறுக்க முனைந்தனர்.
2. பிரச்சாரத்திற்குத் தடை
"இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக)
வீணான காரியம் செய்யுங்கள்!'' என்று (ஏக இறைவனை) மறுப்போர்
கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 41:26
அபூதர் (ரலி) கூறினார்கள்:
நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தேன். அப்போது ஒருவர்
தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார் என்ற செய்தி எங்களுக்கு
எட்டியது. எனவே நான் என் சகோதரரிடம், "நீ
இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரது செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வா!'' என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு
திரும்பி வந்தார். நான், "உன்னிடம் என்ன செய்தி உள்ளது?'' என்று கேட்டேன். "நன்மை புரியும்படி கட்டளையிடவும், தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கிற ஒரு மனிதராக அவரைக்
கண்டேன்'' என்றார். "போதிய செய்தியை எனக்கு நீ கொண்டு வரவில்லை'' என்று நான் அவரிடம் கூறினேன். பிறகு தோல் பையையும், கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன்.
அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத்
தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. (வேறு உணவு இல்லாததால்)
ஸம் ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன்.
அப்போது அலீ (ரலி) (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார்.
"ஆள் (ஊருக்குப்) புதியவர் போன்று தெரிகிறதே!'' என்று
கேட்டார். நான் ஆம் என்றேன். உடனே அவர்கள், "அப்படியென்றால்
வீட்டிற்கு வாருங்கள்'' என்று கூறினார்கள். நான் அவர்களுடன்
எதைப் பற்றியும் கேட்காமலும் (எதைப் பற்றியும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன்.
காலையானதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால்
ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ (ரலி) என்னைக்
கடந்து சென்றார்கள். "மனிதர் தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும்
வரவில்லையா?''
என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான் இல்லை என்றேன். உடனே அலீ
(ரலி) "என்னுடன் நடங்கள்'' என்று சொல்லி விட்டு, "உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு
எதற்காக வந்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு, "நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால்
நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்'' என்று நான்
சொன்னேன். அதற்கு அவர்கள் அவ்வாறே செய்கிறேன் என்று கூறினார்கள்.
"இங்கே தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒருவர் புறப்பட்டிருக்கிறார்
என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே நான் என் சகோதரரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன்.
அவர் என்னிடம் போதிய பதிலைக் கொண்டு வரவில்லை. எனவே நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க
விரும்பினேன்''
என்று சொன்னேன்.
அதற்கு அவர்கள், "நீங்கள்
சரியான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். எனவே என்னைப் பின்தொடர்ந்து
வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில் (என்னுடன் வரும் போது)
இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகிற ஒருவனைக் காண்பேனாயின் என்
செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவர் ஓரமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க்
கொண்டிருங்கள்''
என்று கூறினார்கள்.
இறுதியில் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம், "எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்'' என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த
அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்.
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அபூ தர்ரே! (நீ இஸ்லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன்
ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கி விட்ட செய்தி உனக்கு எட்டும் போது எங்களை
நோக்கி வா!''
என்று கூறினார்கள்.
அதற்கு நான், "உங்களை
சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே
உரக்கச் சொல்வேன்'' என்று சொல்லி விட்டு இறையில்லத்திற்கு
வந்தேன். அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர்.
நான், "குறைஷிக் குலத்தாரே! வணக்கத்திற்குரியவன்அல்லாஹ்வைத்
தவிர வேறெவருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும், அவனுடைய தூதரும் ஆவார் என்றும் நான் உறுதி கூறுகிறேன்'' என்று சொன்னேன். உடனே அவர்கள், "இந்த மதம் மாறியை எழுந்து சென்று கவனியுங்கள்'' என்று கூறினார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது
போல் நான் அடிக்கப் பட்டேன்.
அப்போது அப்பாஸ் (ரலி) என்னை அடையாளம் கண்டு கொண்டு, என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு
குறைஷிகளை நோக்கி, "உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்!
கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்)
கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தை ஒட்டித் தானே உள்ளது!'' என்று கேட்டார்கள். உடனே அவர்கள் என்னை விட்டு விலகி விட்டார்கள்.
மறுநாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப்
போன்றே சொன்னேன். அவர்கள், "இந்த மதம் மாறியை எழுந்து
சென்று கவனியுங்கள்'' என்று கூறினார்கள். நேற்று என்னிடம்
நடந்து கொண்டதைப் போன்றே நடந்து கொண்டார்கள். அப்பாஸ் (ரலி) என்னைப் புரிந்து கொண்டு
என் மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். அப்பாஸ் அவர்கள் நேற்று
சொன்னதைப் போன்றே (அன்றும்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: புகாரி 3522, 3861
நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களது
கொள்கையை ஏற்று அதை எடுத்துச் சொன்ன மக்களுக்கும் எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட
காட்டுமிராண்டித் தனத்தைத் தெரிந்து கொள்ள
இந்த ஒரு ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
3. சமூக பகிஷ்காரம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய வந்த கட்டத்தில், மக்கள் வெள்ளத்தில் மிதந்த அந்தத் தலைவர் மலரும் நினைவுகளாக
வெளியிட்ட ஒரு வரலாற்றுப் பின்னணி.
நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் காலை மினாவில் இருக்கும்
பொழுது "நாம் நாளை பனு கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம். அது குறைஷிகள்
"குப்ரின் (இறை நிராகரிப்பின்) மீது நிலைத்திருப்போம்' என்று சத்தியம் செய்த இடம்'' என்றார்கள்.
''நபி (ஸல்) அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும் வரை இவர்களோடு திருமண
ஒப்பந்தமோ,
வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ செய்ய மாட்டோம்'' என குறைஷிக் குலத்தாரும் கினானா குலத்தாரும் பனு ஹாஷிம் மற்றும்
பனுல் முத்தலிபுக்கு எதிராகச் சத்தியம் செய்ததை இது குறிக்கிறது'' என ஸுஹ்ரீ கூறுகிறார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1590
நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காகத் தங்களிடம் ஒப்படைக்கக்
கோரி இப்படி ஒரு சமூகப் பகிஷ்காரத்தை குறைஷிகள் செய்தனர். இதுவும் முஹம்மத் (ஸல்) அவர்கள்
கொண்டு வந்த குர்ஆன் மீது காட்டிய வெறுப்பின் வெளிப்பாடு தான்!
4. பள்ளிவாசலில் தொழுவதற்குத் தடை
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை.
அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
அல்குர்ஆன் 2:114
பள்ளிவாசலில் தொழுவதற்குத் தடை செய்வதைப் பற்றி இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
பின்வரும் வசனங்களில் இந்தக் குற்றத் தன்மையை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறான்.
தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம்
செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை
அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை! அவன் விலகிக் கொள்ளவில்லையானால்
முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி!
அல்குர்ஆன் 96:11-16
அன்று மக்கத்து காஃபிர்கள் இதில் வரம்பு கடந்து சென்றனர். இதன்
உச்சக்கட்டமாகத் தான் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்த போது ஒட்டகத்தின் குடலைக்
கொண்டு வந்து போட்டனர்.
நபி (ஸல்) அவர்கள் கஅபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்த போது
அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து
"இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப் பையைக் கொண்டு வந்து, முஹம்மத் ஸஜ்தா செய்யும் போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு
உங்களில் யார் தயார்?'' என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில்
மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்வதைப் பார்த்ததும்
அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டு விட்டான். அதை நான் பார்த்துக் கொண்டு
தான் இருந்தேன். ஆனால் அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப்
பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறை மறுப்பாளர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர்.
நபி (ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது
ஃபாத்திமா (ரலி) அங்கே வந்து நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை
எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்தி
"யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக'' என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி (ஸல்)
அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில்
"அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்'' என அவர்களும் நம்பியிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 240
5. விமர்சனக் கணைகள்
கத்திகள், கண்ட துண்டமாக வெட்டும் வாட்கள், குறி வைத்துத் தாக்கும் ஏவுகணைகள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்களைக் காலியாக்கி விடும் இயந்திரத்
துப்பாக்கிகள் இவை அத்தனையையும் விட வலிமையான ஆயுதம் ஒன்று உண்டு. அந்த ஆயுதம் மனிதனின்
மேனியைத் தொடாது. அவனது உள்ளத்தை நோக்கிப் பாயும் கொடியதொரு ஆயுதம். ஆம்! அது தான்
விமர்சனக் கணைகள்!
தன் மேனியில் பட்ட காயங்களைக் கூட ஒரு மனிதன் தாங்கிக் கொள்வான்.
ஆனால் விமர்சனக் கணைகளை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது.
இந்த உளவியல் போர் ஆயுதம் ஒருவரை உடைந்து நொறுங்கி உருக்குலைந்து
போகச் செய்து விடும். அந்தப் பணியை குறைஷிகள் மிக நன்றாகச் செய்தனர்.
தூதுச் செய்தியை எடுத்துச் சொல்லிய நபி (ஸல்) அவர்களை பைத்தியக்காரர்
என்றனர்.
"அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்'' என்று அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 15:6)
(முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர்
உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர். "இவர் பைத்தியக் காரர்'' என்றும் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 68:51
குறிகாரர், கவிஞர் என்று கூறி தாக்குதல்
தொடுத்தனர்.
உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும்
அல்லர். "(இவர் ஒரு) கவிஞர். இவரது அழிவை எதிர்பார்க்கிறோம்'' என்று கூறுகிறார்களா?
அல்குர்ஆன் 52:29, 30
இது கவிஞனின் கூற்று அல்ல. குறைவாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்.
இது சோதிடனின் கூற்றும் அல்ல. குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
அல்குர்ஆன் 69:41, 42
சூனியக்காரர் என்று பட்டம் சூட்டி பாடுபடுத்தினர்.
அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர்.
"இவர் பொய்யர்; சூனியக்காரர்'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர்.
அல்குர்ஆன் 38:4
இப்படிப்பட்ட இந்த விமர்சனக் கணைகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களின் உள்ளத்தை மிக ஆழமாகப் பாதித்தது. இவை எல்லாவற்றையும் விட அவர்களை மகாப் பொய்யர்
என்று மக்கத்து இறை மறுப்பாளர்கள் கூறியது நபியவர்களை வாட்டியெடுத்தது. நபி (ஸல்) அவர்களின்
ஆழ் மனது வேதனையை அல்லாஹ்வின் வார்த்தைகளே அளந்து காட்டுகின்றன.
அவர்கள் கூறுவதன் காரணமாக உமது உள்ளம் கலங்குவதை அறிவோம்.
அல்குர்ஆன் 15:97
"இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும்
செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர்
எச்சரிப்பவரே! அல்லாஹ்வே எல்லா பொருளுக்கும் பொறுப்பாளன்.
அல்குர்ஆன் 11:12
அல்லாஹ்விடமிருந்து வந்த செய்திகளை மக்களிடம் சமர்ப்பிக்காமல்
விட்டு விடுதல் என்பது நபி (ஸல்) அவர்களால் எண்ணிப் பார்க்க முடியாத ஒன்று! அதைக் கூடச்
செய்து விடுவார்களோ என்ற அளவுக்கு அவர்களை இந்த விமர்சனங்கள் பாதித்தன. அதற்குத் தான்
அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் ஆறுதல் கூறுகின்றான்.
6. நாட்டை விட்டுத் துரத்துதல்
நபி (ஸல்) அவர்கள் இந்தத் தூதுச் செய்தியைக் கொண்டு வந்த மாத்திரத்திலேயே
அவர்கள் மீதும்,
அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் மீதும் கொலை முயற்சியும், கொலை வெறித் தாக்குதலும் தொடங்கி விட்டது. பிரச்சாரத்திற்குத்
தடை விதித்தல்,
சமூகப் பகிஷ்காரம், பள்ளிவாசலில்
தொழுவதற்குத் தடை, விமர்சனக் கணைகள் என பல்வேறு
கொடுமைகளையும்,
சித்ரவதை களையும் கட்டவிழ்த்து விட்டனர். அதன் பின்னர் அவர்களைக்
கொலை செய்து விட வேண்டும் என்று குறைஷி நாடாளுமன்றத்தில் ஒரு இறுதித் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
(முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ
(ஏக இறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர்.
அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.
அல்குர்ஆன் 8:30
இந்த வசனத்தில் குறிப்பிடுவது போன்று நபி (ஸல்) அவர்களைக் கொலை
செய்வதற்கு அல்லது நாடு கடத்துவற்கு, குறைஷிகள்
செய்த முயற்சிகளைப் பின்வரும் ஹதீஸ்களில் தெரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர்
(ரலி) அவர்களின் வீட்டிற்குக் காலை அல்லது மாலை நேரங்களில் வருபவர்களாக இருந்தார்கள்.
ஒரு நாள் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது இல்லத்தில் மகள்கள் ஆயிஷா (ரலி), அஸ்மா (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து "அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் நம்மிடம் வழக்கமாக வரும் நேரத்தில் வராமல் இந்தப் பகல் நேரத்தில் தமது தலையை
மூடியவர்களாக வந்து கொண்டு இருக்கிறார்கள்'' என்று கூறினார்.
நண்பகலில் சூரியன் உச்சியில் இருக்கும் நேரத்தில் நபி (ஸல்)
அவர்கள் அங்கு வந்தது வீட்டிலிருந்தவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அபூபக்ர் (ரலி)
அவர்கள், "புதிதாக ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் தான் நபி (ஸல்) அவர்கள்
இந்த நேரத்தில் நம்மிடம் வந்திருக்கின்றார்கள்'' என்று கூறினார்கள்.
நபியவர்கள் வந்தவுடன் வீட்டில் நுழைந்து விடவில்லை. வாசலில்
நின்று அனுமதி கோரினார்கள். அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதும் வீட்டிற்குள் சென்று
அபூபக்ர் (ரலி) அவர்களிடம் "உங்களுடன் இருப்பவர்களை வெளியே போகச் சொல்லுங்கள்.
உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்'' என்று கூறினார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு
அர்ப்பணமாகட்டும். இந்த வீட்டில் என்னுடன் இருப்பவர்கள் உங்களது குடும்பத்தினர் தான்.
எனது புதல்வியரான அஸ்மா, ஆயிஷா ஆகியோர் தான் இங்கு உள்ளனர்'' என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "மதீனாவிற்கு
ஹிஜ்ரத் புறப்பட்டுச் செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது'' என்று கூறினார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் "என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!
நானும் உங்களுடன் புறப்பட்டு வர விரும்புகிறேன்'' என்று
கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், "நீங்கள்
என்னுடன் வருவதை நானும் விரும்புகின்றேன்'' என்று பதில்
சொன்னார்கள். (ஆதாரம்: புகாரீ 2138, 3905)
நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்திற்கான பயண ஏற்பாடுகள் பரபரப்பாக
நடந்து கொண்டிருக்க முஷ்ரிக்குகள் நபி (ஸல்) அவர்களை எப்படியேனும் தீர்த்துக் கட்டிவிட
வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தனர். அன்றைய தினம் மக்கா நகரில் குறைஷிகள்
ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு யோசனைகள் முன் வைக்கப்பட்டன.
சிலர் நபி (ஸல்) அவர்களைக் கைது செய்து இதே இடத்தில் கட்டிப் போட வேண்டும் என்று கூறினார்கள்.
சிலர் நபி (ஸல்) அவர்களை மக்காவிலிருந்து நாடு கடத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.
இன்னும் சில கொடியவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்து விட வேண்டும் என்று கொக்கரித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களை எங்கே கண்டாலும் கொலை செய்து விட வேண்டும்
என்று குறைஷிகள் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்பட்டது. அவர்கள்
அனைவரும் ஒன்று சேர்ந்து லாத், உஸ்ஸா ஆகிய சிலைகளுக்கு முன்னால்
போய் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.
(ஆதாரம்: அஹ்மத் 2626)
கொலை முயற்சி, பிரச்சாரத்
தடை, பள்ளிவாசலில் தொழுகைக்குத் தடை, சமூகப் பகிஷ்காரம், விமர்சனங்கள், நாடு கடத்துதல் ஆகிய இவை அனைத்தும் குர்ஆனுக்கு எதிராக மக்கத்துக்
காஃபிர்கள் காட்டிய வெறுப்பின் காரணமாகத் தொடுக்கப்பட்ட தாக்குதல்களாகும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM FEB 2008