அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர் 36 - காலித் கண்ட அன்பார் வெற்றி
எம். ஷம்சுல்லுஹா
ஓராண்டு காலமாக வீரத் தளபதி காலித், ஹீராவில் முடங்கிக் கிடந்தாலும் முற்றிலுமாக முன்னேற்றம் ஒன்றுமில்லை
என்று சொல்வதற்கில்லை. யானைப் பசிக்கு சோளப் பொறி என்பது போல், வெற்றித் தளபதி காலிதின் வீரப் பசிக்கு அன்பார், அய்னுத் தமர் போன்ற நகரங்கள் வெற்றியாகக் கிடைத்தன.
தூமத்துல் ஜன்தலை முற்றுகையிட்டிருக்கும் மற்றொரு படைத் தளபதி
இயாள் வராத வரை மதாயினுக்குச் செல்லக் கூடாது என்பது ஆட்சித் தலைவர் அபூபக்ரின் கட்டளை!
அதன்படி, இயாள் வருகைக்காகக் காத்திருக்கும்
இடைவெளியில் தான் அன்பார், அய்னுத் தமர் ஆகியவற்றை காலித்
கைப்பற்றுகிறார்.
அன்பார் என்பது ஹீராவுக்கு மிக அருகில் உள்ள நகரமாகும். அன்பார்
என்றால் வித்துக்கள் என்று பொருள். கோதுமை தானிய மணிகள், வித்துக்கள் இங்கு வந்து குவிவதால் இதற்கு இந்தப் பெயர் வரலாயிற்று!
பாரசீகப் பேரரசின் கீழ் உள்ள இந்நகரத்திலும் இதற்கு அருகில்
உள்ள அய்னுத் தமரிலும் பாரசீகப் படைகள் நிலை கொண்டிருந்தன. ஹீராவைத் தன் கைவசப்படுத்திக்
கொண்ட இஸ்லாமியப் படைகளுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கும் முகமாகவே பாரசீகப் படைகள் இந்நகரங்களில்
மையம் கொண்டிருந்தன.
பாரசீகப் பேரரசு இராக்கிலும், ஹீராவிலும்
விழுந்து விட்டது. இனி விழ வேண்டிய இடம் மதாயின் ஆகும். மதாயினுக்கு இயாள் வராமல் செல்ல
முடியாது. எனவே ஹீராவுக்கு அருகிலுள்ள பாரசீகப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த அன்பாரையும், அய்னுத் தமரையும் கைப்பற்ற காலித் ஆயத்தமானார்.
அதன்படி ஹீராவில் கஅகாஃ பின் அம்ரை ஆட்சியாளராக நியமித்து விட்டு, அன்பாரை நோக்கித் தமது அணி வகுப்பைத் தொடர்ந்தார். படையின் முன்னணியில்
அக்ரஃ பின் ஹாபிஸை தலைவராக நியமித்திருந்தார்.
அன்பாரை நோக்கி அணிவகுப்பு
பாரசீகப் பேரரசின் ஆட்சிக் கோட்டைகளை ஒவ்வொன்றாகத் தமது கைவசப்படுத்தி
வரும் இஸ்லாமியப் பேரரசின் மாபெரும் வெற்றி வீரர் காலித் படையெடுத்து வருகின்ற போது, "வந்தார்கள்; வென்றார்கள்'' என்று வரலாறு சொல்லி விடக் கூடாது என்பதை உணர்ந்த அன்பார் நகரம்
முழுமையாக விழித்துக் கொண்டது.
அசத்தலாக அடியெடுத்து அனைத்தையும் காலித் கைப்பற்றி விட்டார்
என்ற கெட்ட பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக அன்பார் நகரம், தனது கோட்டைகளைச் சுற்றிலும் ஆழமான, அகலமான அகழியை தோண்டி வைத்திருந்தது.
பல்வேறு படைக் களங்களைக்
கண்ட காலிதிடம் இது ஒன்றும் பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தவில்லை.
அன்பார் நகரம் விடுத்த இந்த மிரட்டலில் காலித் ஆடிப் போகவில்லை.
அசைந்து கொடுக்கவும் இல்லை.
பொதுவாகப் போர்க்களங்களில் காலங்கடத்தும் யுக்தி எதுவும் காலிதுக்கு
அறவே பிடிக்காது. அறப்போர்க் களத்தில் இந்தத் தளபதிக்குப் பிடிக்காத வேலை மட்டுமல்ல, பிடிக்காத வார்த்தையும் "தாமதம்'' என்பது தான்.
இந்த அகழிகள் எல்லாம் போரை காலங்கடத்தச் செய்யும் ஏமாற்று யுக்திகள்
என்பதை நன்கு புரிந்து கொண்ட காலித் அடுத்தகட்ட அவசர போர்ப் பணிகளில் ஈடுபடலானார்.
அதன் முதற்கட்டமாக, கோட்டை மீது
நின்று கொண்டிருக்கும் எதிரிப் படையினரின் வியூகத்தைக் கொஞ்சம் மதிப்பிடலானார்.
அனுபவமும், ஆற்றலும் நிறைந்த அச்சமறியாத
காலித், எதிரிப் படையினரை மதிப்பிட்ட பின் சொன்ன வார்த்தை, "இவர்கள் போர் அறிவில்லாத பேர்வழிகள்'' என்பது தான்.
அன்பார் மக்களின் அலறல் குரல்
காலித் குறிப்பிட்டது போலவே பாரசீக ஆளுநர் ஷீர்ஸாதிடம் அன்பார்
நகரத்து அரபியர் எழுப்பிய அலறல்கள் இதோ:
அன்பாருக்கு அதிகாலையில் ஓர் ஆபத்து வந்து விட்டது. வந்து வளைத்து
நிற்கும் படையோ வலிமையானது. அதை வெறித்துப் பார்க்கும் நமது படையோ பலவீனமானது.
இது அன்பார் மக்கள் எழுப்பிய அபயக் குரல்.
இதைக் கேட்ட ஆளுநர் ஷீர்ஸாத், "இவர்கள் தங்களுக்குள்ளாகவே ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள்.
முன் கூட்டியே இவர்கள் இப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்ட போது அதுவே தான் இறுதி முடிவாகவும்
அமையும். காலித் மட்டும் வரம்பு தாண்டவில்லையெனில் அவரிடம் நான் உடன்பாடு காணவும், ஒப்பந்தம் செய்யவும் தயங்க மாட்டேன்'' என்று அன்பார் அரபியர்களுக்குப் பாரசீக ஆளுநர் பதில் கூறிக்
கொண்டிருந்தார்.
இது கோட்டை மேல் நடந்த கோழைத்தனமான கூத்தாகும்.
கண்களைப் பறித்த அம்புக்
கணைகள்
அதே சமயம் கோட்டையின் மதில் சுவர்களைச் சுற்றி முற்றுகையிட்டிருந்த
முஸ்லிம் படை வீரர்களிடம் காலித் போர் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்.
கோட்டை மேல் நிற்கும் இவர்களைக் குறியாகக் கொண்டு உங்கள் அம்பு
மழை பொழியட்டும் என்று உத்தரவு போட்டார். அவ்வளவு தான்!
கன மழையாய்ப் பாய்ந்த அம்பு மழையில் சுமார் ஆயிரம் பேர் பார்வையிழந்தனர்.
இதனால் அன்பார் போருக்கு, "கண்கள் போர்'' என்ற பெயர் வழங்கப்படுகின்றது.
"அன்பார் மக்களின் கண்களைப் பறிக்கும் அம்புகள்'' என்று அன்பார் அரபியர் கூக்குரல் போட்டனர். அவர்களின் அலறலைக்
கேட்ட ஆளுநர் ஷீர்ஸாத், காலிதுக்கு சமாதானத் தூது அனுப்பினார்.
அமைதித் தூதர் கொண்டு வந்த ஒப்பந்த விண்ணப்பத்தில் காலிதின்
நிபந்தனைகள் காணப்படவில்லை. அதனால் காலித் அதைப் புறக்கணித்தார். போர்க்களப் பணியில்
மும்முரம் காட்டினார். அகழியைச் சுற்றி ஓர் அவசரச் சுற்றை மேற்கொள்கின்றார்.
ஒட்டகப் பாலம்
அகழியின் ஒரு நெருக்கமான பகுதியைப் பார்க்கின்றார். மின்னல்
போல் ஒரு வியூகம் அவருக்குப் பளிச்சிட்டது. அதன்படி அவர் தன் படையில் உள்ள பலவீனமான
ஒட்டகங்களை அறுத்துப் பலியிடச் செய்கின்றார். வந்த மக்களுக்கு உணவு படைப்பதற்கு அல்ல!
அகலமான அந்தக் குழிகளில் இந்த ஒட்டகங்களைப் போட்டு நிரப்பி, ஒட்டகப் பாலம் ஒன்றை அமைத்து ஒரு வரலாறு படைப்பதற்காக!
அது போலவே அந்தப் பள்ளம் நிரம்பியது. ஒட்டகப் பாலமும் அமைந்தது.
அவ்வளவு தான்!
காலிதின் படையினர் கோட்டையின் வாசல்களைத் தகர்த்தெறிந்தனர்; கோட்டையைக் கைப்பற்றினர். அடுத்தக்கட்ட நடவடிக்கையாகக் கொலைகள், கைதுப் படலங்கள் ஏதுமின்றி நகரத்திற்குள் காலித் நுழைய எத்தனிக்கும்
வேளையில் பாரசீக ஆளுநர் ஷீர்ஸாத், காலிதிடம் சரணடைகின்றார். காலிதின்
அத்தனை கட்டளைகளுக்கும் கட்டுப்படுகின்றார். ஆனால் அவர் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார்.
வெறுமனே உள்ள ஒரு குதிரைப் படையினருடன் தன்னை, தான் கோரும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்
கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று காலித் அவரை விடுதலை செய்கிறார்.
அதன்படி அன்பார் அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி அது இஸ்லாமியப்
பேரரசின் கீழ் வந்தது. ஸப்ரிகான் பின் பத்ர் என்பாரை அதன் ஆளுநராக நியமித்து விட்டு, அடுத்த இலக்கான அய்னுத் தமரை நோக்கி காலித் தன் படைகளைக் கொண்டு
செல்கின்றார்.
அடுத்த இலக்கு அய்னுத்தமர்
அன்பார் இஸ்லாமியப் பேரரசின் கீழ் வந்ததும் காலிதின் கவனம் அய்னுத்
தமரை நோக்கித் திரும்பியது. இதற்கிடையே, அன்பாருக்கு
அருகிலுள்ள பவாஸீஜ், கல்வாதி ஆகிய நகரங்கள் காலிதிடம்
உடன்படிக்கை செய்து கொண்டன.
இப்போது காலித், அய்னுத் தமரை
நோக்கித் தமது படையை நடத்திச் சென்றார். அய்னுத் தமரிலும் பாரசீக ஆட்சி தான் நடந்து
கொண்டிருந்தது. அந்நாட்டின் ஆளுநர் மிஹ்ரான் பின் பஹ்ராம் ஜுபீன் ஆவார். இவரது ஆட்சிக்குட்பட்ட
இந்நாட்டைச் சுற்றிலும் ஹுதைல், நமிர், தக்லப், இயாத் ஆகிய அரபுக் கிளையினரும்
மற்றும் சில அரபுக் கிளையினரும் வாழ்ந்து வந்தனர். அக்கிளையாருக்குக் கூட்டுத் தலைவர்
அக்கத் பின் அபீ அக்கத் என்பவராவார்.
காலித், அய்னுத் தமரை நோக்கி வருகிறார்
என்று தெரிந்ததும் அக்கத் பாரசீக ஆளுநர் மிஹ்ரானிடம், "அரபியர் தான் அரபியருடன் நன்கு போரிடத் தெரிந்தவர்கள். நாங்களும்
அரபியர்; காலித் படையினரும் அரபியர். நாங்கள் இருவரும் பார்த்துக் கொள்கிறோம்.
நீங்கள் போரிட வேண்டிய அவசியமில்லை'' என்று தெரிவித்தார்.
இதை மிஹ்ரானும் சரி கண்டார்.
"நீங்கள் சொல்வது சரி தான். அந்நியர்களாகிய நாங்கள் அந்நியரிடம்
போர் புரிவதில் எந்த அளவுக்குத் திறமைசாலிகளோ அது போல் அரபியர்கள், அரபியரிடம் போர் புரிவதில் திறமைசாலிகள்'' என்று கிண்டலாகக் கூறினார்.
இதை உண்மையென நம்பிய மிஹ்ரானின் பாரசீக சகாக்கள், "இந்த நாயிடம் நீங்கள் ஏன் இவ்வாறு சொல்ல வேண்டும்? நாம் என்ன காலிதை எதிர்த்துப் போர் செய்ய முடியாதவர்களா? கையாலாகாதவர்களா?'' என்று கேட்டனர்.
அதற்கு மிஹ்ரான், "பாரசீகத்
தோழர்களே! நான் உங்களுக்குப் பாதகமான காரியத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன். உங்களுக்கு
நன்மையான காரியத்தையே செய்திருக்கிறேன். உங்கள் ஆட்சிகளை அழித்தொழிக்கின்ற ஒருவர்
(காலித்) உங்களுக்கு எதிராகக் கிளம்பி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களுடைய வாள்
முனையை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார். அவரை விட்டும் இந்த அரபியர்களை வைத்து உங்களை
நான் காக்கப் போகிறேன். முள்ளை முள்ளால் எடுக்கப் போகிறேன். இந்த அரபியர் காலிதை வென்று
விட்டால் உங்களுக்கு லாபம் தானே! அதே சமயம் இந்தப் போர் தோல்வியாக மாறினால் இவர்கள்
(அக்கத்தின் அரபுக் குலத்தவர்கள்) முற்றிலும் பலவீனமாகின்ற வரை நீங்கள் போர்க் களத்திற்கு
வரத் தேவையில்லை. அவர்கள் முற்றிலும் பலவீனமானதும் நாம் காலித் அணியினரை புதுத் தெம்புடன்
போரிட்டு, தோற்கடித்துப் புறமுதுகு காணச் செய்யலாம் அல்லவா?'' என்று தன் சகாக்களிடம் தெரிவித்தார்.
இதைக் கேட்ட மிஹ்ரானின் சகாக்கள், "உண்மையில் இது ஒரு ராஜ தந்திர நடவடிக்கை'' என்று பாராட்டினர். "அப்படியே நடந்து கொள்வோம்'' என்று அவனது ஆலோசனைக்கு இணங்கினர். அதன்படி அவனும் அவனது சகாக்களும்
அய்னுத் தமரிலேயே தங்கி விட்டனர்.
பதறி ஓடிய பாரசீக ஆளுநர்
அரபுக் குலங்களின் தலைவரான அக்கத், தன் படையுடன் "கர்க்'' எனும்
பகுதிக்குச் செல்லும் பாதையில் காலிதை எதிர் கொண்டார். இரு அணியினரும் எதிரெதிரே அணி
வகுத்தனர்.
காலித் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அணி வகுத்த மாத்திரத்திலேயே
அக்கத்தை காலித் கைது செய்து விட்டார். எனினும் கொல்லாமல் விட்டு விட்டார். அவர் கைதான
மறு வினாடியே அவருடன் வந்த அரபுக் கிளையினர் அத்தனை பேரும் தலைதெறிக்க ஓட்டமெடுத்தனர்.
முஸ்லிம்கள் அவர்களை துரத்திச் சென்று பலரைக் கைது செய்தனர்.
அக்கத்தின் படை சுக்கு நூறாக நொறுங்கி, திக்குத் தெரியாமல் ஓடுகின்றது என்ற தகவல் கிடைத்தவுடன் பாரசீக
ஆளுநர், தலை தப்பியது புண்ணியம் என்று தன் பரிவாரத்துடன் கோட்டையை விட்டுத்
தப்பி ஓடி விட்டார்.
அலறியடித்து ஓடி வந்த அக்கத் (அரபிய) கூட்டத்தினர் கோட்டைக்குள்
நுழைந்து கொண்டனர். கோட்டைக்கு வந்த காலித், படைத் தளபதியாகச்
செயல்பட்ட அக்கத், அவருக்குப் படைத் துணையாக வந்த
அம்ர் பின் ஸயிக் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தார்.
கோட்டையில் இருந்த போராளிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டு, பெண்கள் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களது பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தக் கோட்டைக்கு உள்ளே ஒரு மாதா கோயில் இருந்தது. பூட்டிக்
கிடந்த அந்தக் கோயிலின் கதவுகளை உடைத்துச் சென்றதும் அதனுள் நாற்பது இளைஞர்கள் ஒளிந்திருப்பதைக்
கண்டார். "நீங்கள் யார்?'' என்று கேட்டதற்கு, "நாங்கள் மார்க்கக் கல்வி பயில்வதற்காக நேர்ந்து விடப்பட்ட அடைக்கலங்கள்; அமானிதங்கள்'' என்று கூறினர்.
(தாங்கள் போராளிகள் அல்ல, பாதிரிகள்; எனவே எங்களைக் கொல்லாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்).
அவர்களை காலித் பிடித்து முஸ்லிம்களிடம் பங்கீடு செய்து விட்டார்.
இவர்களில் ஹும்ரான் என்பவர் உஸ்மான் (ரலி)யிடம் வழங்கப்பட்டார்.
ஸீரீன் என்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி)யிடம் வழங்கப்பட்டார். இவரது மகன் தான் முஹம்மது
பின் ஸீரீன் ஆவார். இப்னு ஸீரீன் என்று அழைக்கப்படும் இவர் தபஃ தாபியீன்களில் உள்ளவர்.
இவர் நம்பகமான,
சிறந்த ஹதீஸ் அறிவிப்பாளர் ஆவார். புகாரி, முஸ்லிம் போன்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூற்களில் உயரிய இடத்தைப்
பிடித்திருக்கின்றார். இப்படிப்பட்ட பிற்காலப் பிரபலங்களும் இந்தப் போர்க் கைதிகளின்
சந்ததியினராக வந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM FEB 2008