Apr 6, 2017

ஹனபி மத்ஹபில் ஈஸா நபி?

ஹனபி மத்ஹபில் ஈஸா நபி?

அபூமுஹம்மத்

மத்ஹபுகள் மீது எவ்வாறு வெறியூட்டப்படுகிறது என்பதற்கு மேலும் சில சான்றுகளைக் காண்போம்.

சுருங்கச் சொல்வதென்றால் நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில் குர்ஆனுக்கு அடுத்த மகத்தான அற்புதம் அபூஹனிஃபா தான்.

நூல்: துர்ருல் முக்தார்,

பாகம்: 1, பக்கம்: 52

ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாக அரபிக் கல்லூரிகளில் போதிக்கப் படும் துர்ருல் முக்தாரில் இந்தத் தத்துவம் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில் திருக்குர்ஆன் மகத்தானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கடுத்த அற்புதம் அபூஹனீஃபா தான் என்றால் அதன் பொருள் என்ன?

நபி (ஸல்) அவர்களைப் பார்க்காத, அவர்களின் காலத்தில் பிறந்திராத அபூஹனீஃபாவை, நபியவர்களின் அற்புதம் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம்?

குர்ஆனில் எந்தத் தவறும் இல்லாதது போன்று, அபூஹனீஃபாவின் தீர்ப்புகளிலும் தவறே இருக்காது என்று அர்த்தமா? அப்படியானால் அல்லாஹ்வைப் போன்று அபூஹனீஃபாவும் தவறுக்கு அப்பாற்பட்டவர் என்று நிலை நாட்டப் போகிறார்களா?

உலகில் உள்ள எல்லா நூற்களையும் விட திருக்குர்ஆன் சிறப்பாக இருப்பது போன்று, உலகிலுள்ள அனைத்து மனிதர்களிலும் அபூஹனீஃபா சிறந்தவர் என்று அர்த்தமா?

அப்படியானால் நபித்தோழர்களை விட, நான்கு கலீபாக்களை விட இவர் சிறந்தவர் என்று கூறப் போகிறார்களா? எந்தப் பொருள் கொண்டாலும் அது அபத்தமாகவே உள்ளது.

நபியவர்கள் தமது நபித்துவத்தை நிரூபிக்க குர்ஆனைச் சமர்ப்பித்தார்கள். அது போல் அபூஹனீஃபாவையும் சமர்ப்பித்து தமது நுபுவ்வத்தை நபியவர்கள் நிரூபித்தார்களா? இப்படியும் அர்த்தம் கொள்ள முடியாது.

எனவே இமாம்கள் மீது பக்தி வெறியூட்டுவதற்காக இவ்வாறு உளறியுள்ளனர் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அறிந்து கொள்ளலாம்.

அவரது மாணவர்களிடமும், அவரைப் பின்பற்றியவர்களிடமும் அவரது காலம் முதல் இன்று வரை ஞானத்தை அல்லாஹ் ஒப்படைத்து விட்டான். முடிவில் அவரது மத்ஹபின் அடிப்படையில் ஈஸா (அலை) அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள்.

நூல்: துர்ருல் முக்தார்,

பாகம்: 1, பக்கம்: 52

அல்லாஹ்வின் வேதத்தின் அடிப்படையிலும், அவனது தூதரின் போதனையின் அடிப்படையிலும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களை ஓரணியில் திரட்டக்கூடிய ஈஸா (அலை) அவர்கள் - மத்ஹபுகளை எல்லாம் தகர்த்தெறியக் கூடிய ஈஸா (அலை) அவர்கள் - அபூஹனீஃபாவைப் பின்பற்றுவார்கள் என்று எழுத இவர்களின் கை கூசவில்லை.

"நான் அபூஹனீஃபாவின் பரக்கத்தை நாடி அவரது கப்ருக்குச் செல்வேன். எனக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு, அவரது கப்ருக்கருகே நின்று அல்லாஹ்விடம் கேட்பேன். விரைந்து அந்தத் தேவை நிறைவேற்றப்படும்'' என்று ஷாஃபி இமாம் கூறினார்கள்.

துர்ருல் முக்தார் விரிவுரை, பக்கம்: 51

அல்லாஹ்வைத் தொழும் போது கூட கப்ரை நோக்கித் தொழக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். கப்ரைத் தொழுவதாகப் பிறருக்குத் தோன்றாமல் இருக்க நபியவர்கள் இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆனால் இங்கு அபூஹனீபாவின் கப்ருக்கருகில் நின்று பிரார்த்தனை செய்தால் உடனே நிறைவேறும் என்று கூறி இமாம்கள் மீது பக்தி ஊட்டப்படுவதுடன் இணை வைப்பதற்கான வாசலும் திறந்து விடப்படுகின்றது.

ஷாஃபி, அபூஹனீஃபா ஆகிய இரண்டு இமாம்களுமே இது போன்ற சமாதி வழிபாட்டைக் கடுமையாகக் கண்டித்திருந்தும் அவர்கள் பெயரிலேயே இவ்வாறு இட்டுக் கட்டுவதற்கு இவர்களுக்கு வெட்கமில்லை.

ஷாஃபி அவர்கள் அபூஹனீஃபாவின் கப்ருக்கு அருகே சுப்ஹு தொழுதார்கள். அப்போது குனூத் ஓதவில்லை. ஏன் என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "இந்தக் கப்ரில் இருப்பவரை மதிப்பதற்காக'' என்று விடையளித்தார்கள். இவ்வாறே பிஸ்மியைச் சப்தமின்றி ஓதினார்கள்.

துர்ருல் முக்தார் விரிவுரை, பக்கம்: 51

சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது நபிவழி என்பது ஷாஃபி இமாம் அவர்களின் நம்பிக்கை. அது போல் பிஸ்மியை சப்தமாக ஓதுவது நபிவழி என்று அவர்கள் நம்பினார்கள்.

ஷாஃபி அவர்கள் எதை நபிவழி என்று நம்பினார்களோ அதை ஒரு மனிதருக்காக விட்டு விட்டார்கள் என்றால் நபியை விட அபூஹனீஃபாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக ஆகின்றது.

உண்மையான இமாம்கள் ஒருக்காலும், உயிரே போனாலும் நபிவழியை எவருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஷாஃபி இமாமை சந்தர்ப்பவாதியாகவும், கொள்கைப் பிடிப்பில்லாதவராகவும் காட்டி, தங்கள் இமாமுக்கு மதிப்பை உயர்த்தத் திட்டமிடுகின்றார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.

அபூஹனீஃபா அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் போன்றவராக இருக்கும் போது அவருக்கு இத்தகைய சிறப்புகள் எப்படி இல்லாமல் போகும்?

(அதே நூல், அதே பக்கம்)

நீங்கள் உஹது மலையளவு தர்மம் செய்தாலும் என் தோழர்கள் கையளவு செய்த தர்மத்தின் கூலியை அடைய முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். மற்ற நபித்தோழர்களின் நிலையையே எவரும் அடைய முடியாது எனும் போது, உம்மத்திலேயே மிகச் சிறந்தவரான அபூபக்ர் (ரலி) அவர்களின் நிலையை அபூஹனீஃபா அடைய முடியுமா?


இவர்களின் இந்தக் கூற்று, மத்ஹப் வெறியைத் தவிர வேறொன்றுமில்லை.

EGATHUVAM FEB 2008