ஷாகுல் ஹமீது மவ்லிது தொடர்: 2
பறவைக்குக் கடிதம்
மவ்லிதுகள் கட்டுக் கதைகளின் தொகுப்பாகவும், இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தகர்த்தெறியும் நச்சுக் கருத்துக்களைக்
கொண்டதாகவும் அமைந்துள்ளன. இந்த வரிசையில் ஷாகுல் ஹமீது மவ்லிதில் இடம் பெற்றுள்ள கட்டுக்
கதைகளின் பெரும் பகுதியை ஏகத்துவம் மே 2009 இதழான நாகூர் கந்தூரி விமர்சன இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை
இப்போது பார்ப்போம்.
ஒரு பறவையின் இறைச்சியை உண்பதற்காக ஒரு மனிதர் அதன் மீது (ஒரு
கல்) எறிந்தார். அதனால் அந்தப் பறவை ஓடிவிட்டது. ஷாகுல் ஹமீது ஒரு சொல்லால் அதை அழைத்தார்.
அப்பறவை உடனே வந்து சேர்ந்தது.
ஷாகுல் ஹமீது மவ்லிதில் காணப்படும் இந்தப் பாடலுக்கு விளக்கவுரையாக
அமைந்துள்ள உரைநடைப் பகுதியில் கூறப்பட்டுள்ளதையும் அறிந்து விட்டு இது குறித்து ஆய்வு
செய்வோம்.
நாகூரின் கடற்கரையில் ஷாகுல் ஹமீது தங்கியிருந்த போது கவலையின்றி
வாழ்ந்த ஒரு வகைப் பறவையைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவருடன் இருந்த பக்கீர்களில்
ஒருவர் அந்தப் பறவையைக் கல்லால் எறிந்தார். உடனே அப்பறவை மாவாவுன் கைர் என்ற இடத்துக்கு
(அல்லது ஆற்றுக்கு அப்பால்) ஒரேயடியாகப் பறந்தோடி விட்டது. அந்தப் பறவையைக் காணவில்லையே
என்று கேட்டார். நடந்த விபரம் அவரிடம் கூறப்பட்டது. உடனே அப்பறவைக்கு ஷாகுல் ஹமீது
கடிதம் எழுதினார். அதை ஷாஹ் ஹஸன் என்பாரிடம் கொடுத்தனுப்பி அப்பறவையிடம் படித்துக்
காட்டச் சொன்னார். அப்பறவையிடம் அக்கடிதம் படித்துக் காட்டப்பட்ட போது உடனே தனது வசிப்பிடத்தை
நோக்கித் திரும்பி வந்து விட்டது.
ஷாகுல் ஹமீதின் கட்டளைக்குப் பறவைகள் கூடக் கட்டுப்பட்டு நடந்தன.
அதன் பாஷையும் அவருக்குத் தெரிந்திருந்தது என்று சித்தரிப்பதே இக்கதையின் நோக்கம்.
பறவை காணாமல் போய் விட்டதற்கான காரணம் ஷாகுல் ஹமீதுக்குத் தெரியாமல்
மற்றவர்களிடம் விசாரித்து அறிந்து கொண்டதாகவும் இக்கதை ஒப்புக் கொள்கிறது. பறவை ஏன்
காணாமல் போய் விட்டது? என்பதை அறிய
முடியாத ஷாகுல் ஹமீது அதற்கு எப்படிக் கடிதம் எழுதினார்?
பறவைகளில் பல வகைகள் உள்ளன. ஒரு வகையைச் சேர்ந்த பறவைகள் அனைத்தும்
ஒரே மாதிரியாகவும் தனித்து அடையாளம் காண முடியாததாகவும் அமைந்திருக்கும். இந்த வகைப்
பறவை என்று இனம் காண முடியுமே தவிர தனிப்பட்ட பறவையை அறிந்து கொள்ள முடியாது.
பறவைக்குக் கடிதம் கொண்டு சென்றவர் அந்தப் பறவை இருக்குமிடத்தை
எப்படிக் கண்டு பிடித்தார்? நாகூரிலிருந்து
தப்பி வந்த பறவை இது தான் என்பதை எப்படி அறிந்து கொண்டார்?
ஒரு பறவையின் அமைப்பு நமக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும்
ஏற்படுத்தலாம். அந்தப் பறவை நம்மை விட்டுக் கடந்து விட்டால் அதை மறந்து விட்டு மற்ற
வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுவோம். ஒரு நல்லடியார், திருமணம் கூடச் செய்யாமல் ஆசாபாசங்களைத் துறந்தவர், ஒரு பறவை காணாமல் போனதற்காக, அதை வரவழைப்பதற்காக தனது சீடரை அனுப்பி வைப்பாரா? அந்தப் பறவை இல்லாமல் வாழ முடியாதா? அல்லது இறை தியானத்தில் ஈடுபட முடியாதா? இது ஒன்றும் தலை போகின்ற விவகாரம் இல்லையே!
நல்லடியார்கள் ஆற்ற வேண்டிய பணிகளும் கடமைகளும் ஆயிரம் இருக்க
ஒரு பறவையைத் தேடி தம் சீடரின் பொன்னான நேரத்தை வீணடிப்பது தான் நல்லடியாரின் பணியா?
பறவைகள் தமக்கிடையே பேசிக் கொள்ளும் என்பது ஏற்றுக் கொள்ளக்
கூடியது தான். அந்த மொழியை, அதே பறவை இனத்தைச்
சேர்ந்த ஏனைய பறவைகள் தான் புரிந்து கொள்ள முடியுமே தவிர மனிதர்களால் அறிந்து கொள்ள
முடியாது. தாவூத் நபி, சுலைமான் நபி
ஆகியோருக்குப் பறவைகளின் மொழியைக் கற்றுக் கொடுக்கப்பட்டதாகக் குர்ஆன் கூறுகின்றது.
தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக்
கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே
தெளிவான அருட்கொடையாகும் என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 27:16
இது இந்த இரண்டு நபிமார்களுக்கு இறைவன் வழங்கிய தனிச் சிறப்பாகும்
என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அந்தத் தனிச் சிறப்பு ஷாகுல் ஹமீதுக்கும் இருப்பதாகக்
காட்டுவது ஆதாரமற்ற மூட நம்பிக்கையாகும்.
மேலும் பறவைகள் தமக்கிடையே பேசிக் கொண்டாலும் அந்தப் பேச்சை
எழுத்தில் கொண்டு வர முடியாது. எறும்புகள் பேசிக் கொண்டதை சுலைமான் நபி புரிந்து கொண்டதாகக்
குர்ஆன் கூறுகின்றது. அந்த மொழியை எழுத்தில் கொண்டு வர முடியுமா? என்றால் நிச்சயமாக முடியாது.
இவர் பறவைக்குக் கடிதம் எழுதினார் என்று கூறப்படுவதால் மனித
மொழியால் தான் அதை எழுதியிருக்க முடியும். மேலும் அந்தக் கடிதத்தை அவரது சீடர் தான்
பறவையிடம் வாசித்துக் காட்டியதாகவும் இந்தக் கதை கூறுகின்றது. எனவே மனித மொழியில் எழுதப்பட்ட
கடிதம் தான் என்பதை இது மேலும் ஊர்ஜிதப்படுத்துகின்றது. அப்படியானால் மனிதர்களின் மொழியை
பறவைகள் அறிய முடியுமானால் ஷாகுல் ஹமீதை விட அப்பறவைக்கு அதிக சிறப்பு இருக்கின்றது
என்று தான் கருத வேண்டும்.
ஏனெனில் மனிதர்களின் மொழியை அப்பறவை புரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்தியும்
உள்ளது.
நல்லவேளை! அப்பறவையின் அடக்கத்தலம் தர்கவாதிகளுக்குத் தெரியவில்லை.
தெரிந்திருந்தால் மனித மொழியைத் தெரிந்த அப்பறவைக்கும் ஒரு தர்காவைக் கட்டி பறவை அவ்லியாவாக
ஆக்கியிருப்பார்கள்.
இப்போதும் குடிமுழுகி விடவில்லை. அந்தப் பறவை அவ்லியா இங்கே
தான் அடக்கமாகியுள்ளார் என்பதைக் கனவில் காட்டப்பட்டது என்று யாராவது கூறி தர்கா கட்டலாம்.
அதையும் நம்புவதற்குத் தமிழகத்தில் பக்தர்கள் உள்ளனர்.
EGATHUVAM JUL 2009