Apr 27, 2017

ஸகாத் தொடர்: 3 - ஸகாத் யாருக்குரியது?

ஸகாத் தொடர்: 3 - ஸகாத் யாருக்குரியது?


ஸகாத் கட்டாயக் கடமை என்பதையும், அதனை முறையாக நிறைவேற்றுபவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புகளையும், அதை நிறைவேற்றாதவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைகளையும் கடந்த இதழ்களில் விரிவாகப் பார்த்தோம்.

இந்தத் தொடரில் ஸகாத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் யார்? என்பதை நாம் விரிவாகக் காண இருக்கின்றோம்.

திருக்குர்ஆன் 9:60 வசனத்தில் ஸகாத் வழங்கப்படுவதற்குத் தகுதியானவர்களாக எட்டு வகையினரை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

அவர்கள் 1. யாசிப்பவர்கள் 2. ஏழைகள். 3. ஸகாத்தை வசூல் செய்பவர்கள் 4. உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் 5. அடிமைகளை விடுதலை செய்வதற்கு 6. கடன் பட்டவர்கள் 7. அல்லாஹ்வின் பாதையில் செலவிடுதல் 8. நாடோடிகள். ஆகியோராவார்கள்.

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன் (அல்குர்ஆன் 9:60)

மேலும் நபியவர்களும் ஸகாத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (1395)

செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஏழைகள் என்றால் தேவையுடையவர்கள் என்று பொருளாகும். மேற்கண்ட 9:60 வசனத்தில் கூறப்பட்டவர்களில் அனைவருமே தேவையுடையவர்களாகத் தான் உள்ளனர். அதன் காரணமாகத் தான் நபியவர்கள் பொதுவாக செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். யாசிப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் வித்தியாசம்

மேற்கண்ட 9:60 வது வசனத்தில் யாசிப்பவர்கள் என்பதற்கு அரபியில் "ஃபுகரா'' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது "ஃபகீர்'' என்ற சொல்லின் பன்மையாகும். "ஃபகீர்'' என்ற சொல்லிற்கு தேவையுடையவன் என்பது நேரடிப் பொருளாகும். ஏழைகள் என்பதற்கு அரபி மூலத்தில் "மஸாகீன்'' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது "மிஸ்கீன்'' என்ற சொல்லின் பன்மையாகும்.

மிஸ்கீன் என்றால் யார் என்பதை நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்கடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான். நீங்கள் விரும்பினால், "அவர்கள் மக்கடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்க மாட்டார்கள்'' எனும் (இந்த 2:273வது) இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (4539)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எந்தச் செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனது நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான். (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி(1479)

மேற்கண்ட ஹதீஸ்களில் ஏழை என்பதற்கு அரபி மூலத்தில் மிஸ்கீன் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. அதாவது மிஸ்கீன் என்பவன் தன்னுடைய வறுமை நிலையை யாரிடமும் வெளிப்படுத்தாமல், பிறரிடம் யாசகமாகக் கேட்பதற்கு வெட்கப்பட்டு, தன்மானத்துடன் வாழ்பவராவார். இவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஸகாத்தை வழங்குவது முஃமின்கள் மீது கடமையாகும்.
ஆனால் ஃபகீர் என்பவரும் வறுமை நிலையில் உள்ளவர் தான். ஆனால் இவர்கள் தங்களின் நிலையை வெளிப்படுத்தி உதவி கேட்பார்கள். அல்லது அவர்களின் வறிய நிலைமை வெளிப்படையாகத் தெரியும். ஒருவர் இந்நிலைக்கு உள்ளாகும் போது அவனது தனது நிலைமையை வெளிப்படுத்தி ஸகாத்தைப் பெறுவது மார்க்கத்தில் குற்றமாகாது.

செல்வந்தன் என்றால் யார்?

தன்னுடைய உழைப்பின் மூலம் தனது மற்றும் தன்னுடைய குடும்பத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்பவர்கள் அனைவரும் செல்வந்தர் ஆவார்கள். இவர்கள் அனைவரும் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கு அதிகமாக ஸகாத் நிறைவேற்ற வேண்டிய அளவிற்கு செல்வத்தைப் பெற்றிருந்தால் அவர்கள் கண்டிப்பாக அதனை நிறைவேற்ற வேண்டும்.
செல்வந்தர்கள் ஸகாத் பெறுவது கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தனுக்கும், தெளிவான அறிவுள்ள, ஊனமில்லாத திடகாத்திரமானவனுக்கும் ஸகாத்தைப் பெறுவது ஹலாலாகாது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி (589)

இரண்டு மனிதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தர்மப் பொருளிலிருந்து கேட்டு வந்தனர். நபியவர்கள் அந்த இருவரின் மீதும் பார்வையை (மேலும் கீழுமாகப்) பார்த்தார்கள். அந்த இருவரையும் திடகாத்திரமானவர்களாகக் கண்டார்கள். பிறகு நீங்கள் இருவரும் விரும்பினால் உங்களுக்கு நான் வழங்குகிறேன். ஆனால் இதில் செல்வந்தருக்கும், சம்பாதிக்கும் வலிமை பெற்றவருக்கும் எந்த பாத்தியதையும் கிடையாது என்று கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (18001)

செல்வ நிலையில் உள்ளவர்கள் பின்வரும் ஐந்து நிலைகளில் இருந்தால் அவர்கள் ஸகாத் பொருளைப் பெற்று, பயன்படுத்திக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தனுக்கு ஸகாத்தைப் பெறுவது ஹலாலாகாது. ஐந்து
நபர்களைத் தவிர. 1. அதனை வசூல் செய்யக் கூடியவர்கள். 2. தன்னுடைய செல்வத்தைக் கொண்டு ஸகாத் பொருளை விலைக்கு வாங்கியவர் 3. கடன் பட்டவர்கள் 4. அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள் 5. ஸகாத்திலிருந்து ஒரு ஏழைக்கு தர்மமாக வழங்கப்படுகிறது; அவன் அதிலிருந்து ஒரு செல்வந்தருக்கு அன்பளிப்பாக வழங்குவது.
அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) நூல்: அஹ்மத் (11555)

மேற்கண்ட ஹதீஸிலிருந்து செல்வந்தர்களாக உள்ளவர்கள் ஸகாத்தை வசூல் செய்கின்ற பொறுப்பில் இருந்தால் அவர்களுக்கு அதிலிருந்து வழங்கலாம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. மேலும் ஸகாத்தாக உள்ள ஒரு பொருளை ஒரு செல்வந்தர் விலைக்கு வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
செல்வந்தராக உள்ள நிலையில் கடன்பட்டவர்கள் யார் என்பதை பற்றிய விபரம் பின்னால் வருகிறது.
மேலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்குவது கூடும். 9:60 வசனத்தில் ஸகாத்தை அல்லாஹ்வுடைய பாதையில் செலவிட வேண்டும் என்று வந்துள்ளது. அல்லாஹ்வுடைய பாதை என்பது இறைவனுடைய பாதையில் சத்தியக் கொள்கையை நிலைநாட்டுவதற்காகப் போரிடக் கூடியவர்கள் என்பது தான் விளக்கமாகும்.

சிலர் 9:60 வசனத்தில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வுடைய பாதை எது என்பதைச் சரியாக விளங்காமல் அனைத்து நல்ல காரியங்களுக்குச் செலவிடுவதும் அல்லாஹ்வுடைய பாதை தான்;. எனவே நம்முடைய ஸகாத்தை பள்ளிவாசல் கட்டுவதற்கும், பணக்கார மாணவர்களும் சேர்ந்து பயிலும் மதரஸாக்களுக்கும், எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் பயன்படுத்தலாம் எனக் கூறுகின்றனர். இது அறியாமையாகும். 9:60 வசனத்தில் அல்லாஹ் 8 வகையினரைக் குறிப்பிடுகின்றான். இதில் 7 சாராருக்குக் கொடுத்தாலும் அல்லாஹ்வுடைய பாதையில் செலவிடுவது தான். இதில் இறைவன் அல்லாஹ்வுடைய பாதை என்று ஏன் தனியாகக் கூற வேண்டும். அல்லது அல்லாஹ்வுடைய பாதையில் ஸகாத்தைச் செலவிடுங்கள் என்று இறைவன் பொதுவாகக் கூறியிருக்கலாம். ஏன் 8 வகையாகப் பிரிக்க வேண்டும்.

இதிலிருந்தே மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்ட அல்லாஹ்வுடைய பாதை என்பது இறைவனுடைய பாதையில் சத்தியக் கொள்கையை நிலைநாட்டுவதற்காகப் போரிடுபவர்களை மட்டுமே குறிக்கும். அதைத் தான் மேற்கண்ட நபிமொழியும் தெளிவுபடுத்துகிறது. மேலும் மதரஸாக்களில் படிக்கின்ற ஏழை மாணவர்களுக்காக மட்டும் செலவிட வேண்டும் என்று குறிப்பிட்டு ஸகாத்தை வழங்குவதில் தவறில்லை. ஏழை ஒருவர் தனக்கு ஸகாத்திலிருந்து வழங்கப்பட்ட பொருளை செல்வந்தருக்கு அன்பளிப்பாக வழங்கினால் அந்த செல்வந்தர் அதனை பெற்றுக் கொள்ளலாம்.

நபியவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தர்மப் பொருள்களைப் பெறுவது ஹராமாகும். ஆனால் பரீரா (ரலி) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தர்மப் பொருளை நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது நபியவர்கள் அதனைச் சாப்பிட்டுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்களுக்கு இறைச்சி ச்காண்டு வரப்பட்டது. அப்போது நான் "இது பரீராவுக்கு தர்மம் செய்யப்பட்ட பொருள்'' என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இது பரீராவுக்கு தர்மமாகும்; நமக்கு அன்பளிப்பாகும்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (1493)

கடன் பட்டவர்கள்

ஒருவர் தன்னுடைய வறுமையின் காரணமாக கடன் வாங்கியிருந்தால் அவர் ஏழை என்பதில் வந்து விடுவார். அவருக்கு ஸகாத்திலிருந்து வழங்கி அவருடைய கடனை அடைப்பதற்கு உதவி செய்ய வேண்டும்.

மேலும் செல்வந்தர்கள் கடன்பட்டிருந்தாலும் அவர்களுடைய கடனை அடைப்பதற்காக ஸகாத்திலிருந்து வழங்கலாம் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். செல்வந்தர்கள் கடன் பட்டால் அவர்களுடைய செல்வத்திலிருந்து அடைக்க வேண்டியது தானே, எதற்காக அவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்க வேண்டும்? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

செல்வந்தர்கள் கடன்பட்டால் அவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்கலாம் என்பது செல்வந்தர்கள் தம்முடைய சுய தேவைக்காகப் பெற்ற கடன் அல்ல. மாறாகப் பொது விஷயத்திற்காக ஒன்றைப் பொறுப்பேற்கும் போது அதில் கடன் ஏற்பட்டால் அதைப் பொறுப்பேற்றவர் தன்னுடைய செல்வத்திலிருந்து தான் அடைக்க வேண்டும் என்பது கிடையாது. ஸகாத் பொருளைப் பெற்றும் அவர் அந்தக் கடனை அடைக்கலாம். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தர்மப் பொருட்கள் நம்மிடம் வரும் வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்'' என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:

கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்ற வரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் வாழ்க்கையின் அடிப்படையை' அல்லது வாழ்க்கையின் அவசியத் தேவையை' அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம். இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, "இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்'' என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் வாழ்க்கையின் அடிப்படையை' அல்லது வாழ்க்கையின் அவசியத் தேவையை' அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும். கபீஸா! இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடை செய்யப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார்.
நூல்: முஸ்லிம் 1730 (தமிழாக்கம் எண்: 1887)

மற்றவருக்காகப் பொறுப்பேற்ற ஒரு செல்வந்தர் அதனை நிறைவேற்றுவதற்காக தர்மப் பொருளை பெற்றுக் கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். ஸகாத்தை வசூலிப்பவர்கள்

உரியவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்று, அதைப் பாதுகாத்து, உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகப் பணியாற்றுகின்ற அனைவரும் ஸகாத்தை வசூலிப்பவர்களில் அடங்குவர். இவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் இவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்க வேண்டும்.
இதன் அடிப்படையில் தான் நற்காரியங்களுக்காக வசூல் செய்பவர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது. சில சகோதரர்கள் கமிஷன் பெறுபவர்களை ஏதோ அநியாயமாகப் பறித்துச் சாப்பிடுபவர்களைப் போல் கருதுகின்றனர். இது தவறாகும். நற்காரியங்களுக்காகத் தன்னுடைய நேரங்களையும், காலங்களையும் செலவிட்டு அரும்பாடுபட்டு வசூல் செய்பவர்களுக்கு வழங்கினால் தான் நற்பணிகள் தொடர்ந்து நடைபெறும். அல்லாஹ்வே வழங்குமாறு கூறியிருப்பதினால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நாம் விளங்கிக் கொள்ளலாம். ஸகாத்தை வசூல் செய்பவர்கள் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம்.
அப்துல்லாஹ் பின் சஅதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் (ரலி) அவர்கடம் அவர்களது ஆட்சிக் காலத்தின் போது சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம், "நீங்கள் மக்கள் (நலப்) பணிகள் சிலவற்றுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும், அதற்காக ஊதியம் தரப்பட்டால் அதை நீங்கள் வெறுப்பதாகவும் எனக்குத் தகவல் வந்ததே! (உண்மைதானா?)'' என்று கேட்டார்கள். அதற்கு நான் ஆம்' என்றேன். உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் எந்த நோக்கத்தில் இப்படிச் செய்கிறீர்கள்?'' என்று கேட்க, நான், "என்னிடம் பல குதிரைகளும் பல அடிமைகளும் உள்ளனர். நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். ஆகவே, என் ஊதியம் முஸ்லிம்களுக்கு தர்மமாக இருக்கட்டும் என்று நான் விரும்புகின்றேன்'' என்று பதிலத்தேன். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அப்படிச் செய்யாதீர்கள். ஏனென்றால், நீங்கள் விரும்பியபடியே நானும் விரும்பி வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு (மக்கள் நல நிதியிலிருந்து) நன்கொடை வழங்குவார்கள். நான், "என்னைவிட அதிகத் தேவை உடையோருக்கு இதைக் கொடுங்கள்'' என்று சொல்லி வந்தேன். இறுதியில் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், (நன்கொடைப்) பொருள் ஒன்றை எனக்கு அத்த போது, நான், "என்னை விட அதிகத் தேவை உடையோருக்கு இதை வழங்குங்கள்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "(முதலில்) இதை வாங்கி உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு, (தேவைப்படவில்லை யென்றால்,) தர்மம் செய்து விடுங்கள். இந்தச் செல்வத்திலிருந்து எது நீங்கள் எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களுக்கு வந்ததோ அதை (மறுக்காமல்) வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் வரவில்லை யென்றால் நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (7163)

வசூல் செய்பவர்கள் தம்மை வசூல் செய்வதற்கு யார் நியமித்தார்களோ அவர்களிடமிருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வித மோசடியும் செய்து விடக் கூடாது. ஸகாத் பொருளை உரியவர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காகப் பணியாற்றுபவர் அதனை முறையாகச் செய்தால் அவருக்கும் தர்மம் செய்த கூலி கிடைக்கும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிமான, நம்பிக்கைக்குரிய பாதுகாவலன், தான் ஏவப்பட்ட முறையில் முழுமையாக - நிறைவாக, நல்ல முறையில் மனப்பூர்வமாகத் தான் ஏவப்பட்டபடி, ஏவப்பட்டவருக்குத் தர்மம் செய்தால் அவனும் தர்மம் செய்தவர்களில் ஒருவனாவான்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: புகாரி (1438)

மேலும் வசூல் செய்பவர் தமக்கு முறையாக வழங்கப்பட்ட கூலிக்கு மேல் அதிலிருந்து எடுத்தால் அவர் மோசடியாளராவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம் ஒருவரை ஒரு பணியைச் செய்வதற்காக நியமிக்கின்றோம். அவருக்கு அழகிய முறையில் கூலியும் வழங்கி விடுகின்றோம். அதற்கு பிறகு அவர் (அதிலிருந்து) எடுத்துக் கொள்வது மோசடியாகும்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: அபூதாவூத் (2554)
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அஸ்த்' எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத்' வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக்கொண்டு நபியவர்கடம் திரும்பி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பப்பு வழங்கப் படுகிறதா இல்லையா என்று பாரும்!'' என்று கூறினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்த பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து "இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கல் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நால் தமது பிடரியில் சுமந்து கொண்டு நிச்சயம் வருவார். அது ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது ஆடாக இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்'' என்று கூறிவிட்டு "(இறைவா! உனது செய்தியை மக்கடம்) நான் சேர்த்துவிட்டேன்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (6636)

உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள்

ஸகாத்தைப் பெற தகுதியானவர்களில் உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் என்ற பிரிவினரும் அடங்குவார்கள். உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் என்ற பிரிவினரில் முஸ்லிம்
அல்லாதவர்களும், புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் அடங்குவர்.

உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் என்று அல்லாஹ் கூறியதிலிருந்தே இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட வேண்டிய முஸ்லிம் அல்லாதவர்களும் அடங்குவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஸகாத் நிதியிலிருந்து வழங்கும் போது அவர்களின் உள்ளம் மேலும் இஸ்லாத்தின் பால் ஈர்ப்பு கொள்வதற்கு அது காரணமாக அமையும்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். மேலும் "இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (4667)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கொடுத்தார்கள். அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் அவர்கள் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்'' என்று கூறினார். நூல்: முஸ்லிம் 4275 (தமிழாக்கம் எண்: 4630)

நாடோடிகள்

நாடோடிகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் இப்னுஸ் ஸபீல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லின் நேரடிப் பொருள் பாதையின் மகன்' என்பதாகும்.
ஒருவனிடம் ஒரு செயல் அதிக அளவில் காணப்படும் போது அச்செயலுடன் மகன் என்பதைச் சேர்த்துக் கூறுவது அரபுகளின் வழக்கம்.

எப்போது பார்த்தாலும் போரில் பங்கெடுப்பவன் போரின் மகன்' என்று குறிப்பிடப்படுவது வழக்கம். எப்போது பார்த்தாலும் ஊர் ஊராகச் சென்று கொண்டிருப்பவன் பாதையின் மகன்' என்று குறிப்பிடப்படுவான்.

சாதாரணமாகப் பயணம் செய்பவர்கள் இச்சொல்லால் குறிக்கப்பட மாட்டார்கள். பயணமே வாழ்க்கையாக மாறியவர்கள் தான் இச்சொல்லால் குறிப்பிடப்படுவர். எனவே நாடோடிகள் என்பது இச்சொல்லுக்கு நெருக்கமான சொல் எனலாம்.

வீடு வாசல் ஏதுமில்லாமல் ஊர் ஊராகச் சுற்றக் கூடியவர்களுக்கு ஸகாத் நிதியை வழங்கி அவர்களை நிலையாக இருக்கச் செய்வதற்கு ஸகாத் நிதியைச் செலவிடலாம்.

இச் சொல்லுக்கு பிரயாணி, வழிப்போக்கன் என்று பலரும் பொருள் கொண்டுள்ளனர். பயணம் செய்வதே ஸகாத் பெறுவதற்கான தகுதியா எனக் கேட்டால் பயணத்தில் சென்று அனைத்தையும் இழந்து விட்டு சொந்த ஊருக்குச் செல்ல முடியாதவன் என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள்.

இவர்கள் வாதப் படி பயணிகள் என்ற அர்த்தம் மட்டுமே இச்சொல்லுக்கு உண்டு. அனைத்தையும் இழந்து சொந்த ஊர் செல்ல இயலாதவன் என்பது இச்சொல்லில் இல்லாத - கற்பனை செய்யப்பட்ட விளக்கமாகும்.

மேலும் சாதாரணப் பயணியைக் குறிக்க வேறு சொல் உள்ளது. பாதையின் மகன் என்பது எப்போது பார்த்தாலும் பயணத்தில் இருக்கும் நாடோடியையே குறிக்கும். நாடோடி என்று பொருள் கொண்டால் நாடோடியாக இருப்பதே ஸகாத் பெறுவதற்கான தகுதியாகும் என்பது ஏற்கத் தக்கதாகவும் உள்ளது.
பயணத்தில் சென்று அனைத்தையும் இழந்தவன் என்பவன் ஃபகீர் - தேவையுள்ளவன் என்ற வகையில் தானாக அடங்கி விடுவான். இத்தகையோரை உள்ளடக்கவே ஏழை என்றும் தேவையுள்ளவன் என்றும் இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


அடிமைகளை விடுதலை செய்வதற்கும் ஸகாத்திலிருந்து செலவிடலாம். ஆனால் தற்போது உலக நாடுகள் எதிலும் அடிமை முறை கிடையாது. இஸ்லாம் கூறும் போதனைகள் அனைத்தும் அடிமைத் தளைகளை கட்டவிழ்க்கும் வண்ணமே அமைந்துள்ளன.

EGATHUVAM APR 2011