இப்படியும் சில தஃப்ஸீர்கள் தொடர் 4 - அழுது புலம்பிய ஆதம் நபி (?)
விளக்கவுரை என்பது இறை வார்த்தையையும், இறைத்தூதர்களின் வாழ்க்கையையும் சரியான முறையில் புரிந்து கொள்வதற்கு
உதவி புரிவதாய் இருக்க வேண்டும். அதை விடுத்து அவ்விரண்டையும் கேலிப் பொருளாக்கும்
விதத்தில் இருக்கக் கூடாது. குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு விளக்கவுரை அளிக்கும் சிலர்
இந்த இலக்கணத்தைத் தெளிவாக மீறியுள்ளார்கள் என்பதைப் பல விளக்கவுரைகள் நமக்கு எடுத்துக்
காட்டுகின்றன.
ஒரு புறம் குர்ஆன், ஹதீஸ்களுக்கு எதிரான, முரணான விளக்கங்கள் என்றால் மறுபுறம் குர்ஆன் வசனங்கள், இறைத்தூதர் அவர்களின் போதனைகள் ஆகியவற்றைக் கேலி செய்யும் விதமாகப்
பல விளக்கவுரைகள் தஃப்ஸீர் நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் முதல் மனிதர், மனித குலத்தின் தந்தை ஆதம் (அலை) அவர்களைக் கேலி செய்யும் வகையில்
ஒரு விரிவுரை பல விரிவுரை நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது. இதோ அந்தக் கேலி வார்த்தைகள்:
ஆதம் (அலை) பூமியில் இறக்கப்பட்ட போது அவர்களுக்கு வயிற்றைக்
கலக்கியது. இதனால் அவர்களுக்குக் கவலை ஏற்பட்டது. (அந்நேரத்தில்) என்ன செய்வது என அறியாதிருந்தார்கள்.
அப்போது அல்லாஹ் (ஆதமே) உட்காரும் என வஹீ அறிவித்தான். ஆதம் (அலை) அவர்கள் அமர்ந்தார்கள்.
தனது தேவையை நிறைவேற்றிய போது காற்று பிரிந்ததால் திடுக்கிட்டு, அழுது, தனது
விரலைக் கடித்துக் கொண்டார்கள். அதற்காக ஆயிரம் வருடங்கள் தன்னைக் கடிந்து கொண்டே இருந்தார்கள்.
நூல்: அத்துர்ருல் மன்சூர் பாகம் 1, பக்கம் 310
ஆதம் (அலை), அவர்களது மனைவி ஆகிய இருவரையும் முதலில் இறைவன் உயர்ந்த நிலையில்
வைத்திருந்தான். குறிப்பிட்ட மரத்தை நெருங்கக் கூடாது என்ற கட்டளையை இருவருக்கும் பிறப்பித்திருந்தான்.
ஆனால் ஷைத்தானின் தூண்டுதலால் இறைக்கட்டளையை மீறி இருவரும் அம்மரத்தின் கனியைப் பறித்து
புசித்தார்கள் என்பதால் அவ்விருவரையும் உயர்ந்த நிலையிலிருந்து இறைவன் வெளியேற்றினான்.
அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள்
இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். "இறங்குங்கள்! உங்களில்
சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன'' என்றும் கூறினோம்.
அல்குர்ஆன் 2:36
இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது தான் மேற்கண்ட இறைத்தூதரை
அவமதிக்கும் விளக்கத்தை இமாம்கள் உதிர்த்துள்ளார்கள்.
ஆதம் (அலை) அவர்களுக்கு பூமியில் மலம் கழிக்கும் தேவை ஏற்பட்ட
போது என்ன செய்வது என அறியாமல் முழித்தார்களாம். இறைவன், உட்கார்' என்று
கட்டளையிட்ட பிறகே உட்கார்ந்து மலம் கழித்தார்களாம். அது மட்டுமின்றி காற்று பிரிந்த
போது ஏதோ நடந்து விட்டதாக உணர்ந்து, கவலையில் ஆதம் (அலை) அழுதே விட்டதாக மேற்கண்ட விளக்கத்தில் இமாம்கள்
கூறுகிறார்கள். இதை இறைவனோ, இறைத்தூதரோ
கூறாமல் நமக்குத் தெரிய வாய்ப்பே இல்லை என்றிருக்கும் போது இந்த இமாம்களுக்கு எவ்வாறு
தெரிந்தது? இறைவனோ, இறைத்தூதரோ எங்கும் இதைக் கூறவில்லை. இமாம்கள் தங்கள் கற்பனைக்
குதிரையைப் பறக்க விட்டு, கைச்சரக்கை
இதில் கலந்து விட்டிருக்கிறார்கள் என்பது தெளிவு.
மனித குலத்தின் தந்தை ஆதம் (அலை) அவர்களையும் இந்த இமாம்கள்
விட்டு வைக்கவில்லை. தங்களின் விரிவுரை விளையாட்டில் ஆதம் (அலை) அவர்கள் வாழ்க்கையையும்
கேலிப் பொருளாக ஆக்கிக் கொண்டது அனைத்து முஸ்லிம்களின் கண்டனத்திற்குரியதே!
இடி, மின்னல்
அல்லது (இவர்களது தன்மை,) வானத்திலிருந்து விழும் மழை போன்றது. அதில் இருள்களும், இடியும், மின்னலும்
உள்ளன. இடி முழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி தமது விரல்களைக் காதுகளில் வைத்துக் கொள்கின்றனர்.
(தன்னை ஏற்க) மறுப்போரை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.
அல்குர்ஆன் 2:19
இறைத்தூதரிடமிருந்து சத்தியக் கொள்கைப் பிரச்சாரத்தை செவியேற்ற
பிறகும்,
செவிடன் காதில் ஊதிய சங்கைப் போன்று இருப்பவர்கள் வானத்திலிருந்து
விழும் மழையை போன்றவர்கள் என இறைவன் உதாரணம் கூறுகிறான். அதன் தொடர்ச்சியில் வானத்தில்
இடி,
மின்னல் ஆகியவை உள்ளன என்றும் கூறுகிறான்.
இடி, மின்னல் எவ்வாறு
ஏற்படுகிறது என்பதை விஞ்ஞானம் வளர்ந்த இக்கால கட்டத்தில் அறிவியலாளர்கள் பின்வருமாறு
கூறுகிறார்கள். குளிர்ச்சியான காற்று பூமியிலிருந்து மேலெழும்பிச் செல்கிறது. அந்தக்
காற்று ஈரமாக இருப்பதால் மேலே செல்வதற்குத் தேவைப்படும் சக்தியை தனக்குள் இருந்தே எடுத்துக்
கொள்கிறது. இது மேலும் குளிர்ச்சியடைந்து மேகங்களாக உருவெடுக்கின்றன.
பூமியிலிருந்து செல்லும் இந்த மேகங்கள் ஏற்கனவே அங்கிருக்கும்
மேகங்களுடன் மோதும் போது 6 ஆயிரம் முதல்
7 ஆயிரம் டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும். இந்த வெப்பத்தினால்
அந்த பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும் ஏற்படுகின்றது. அந்த வெளிச்சத்தை மின்னலென்றும், சப்தத்தை இடியென்றும் சொல்கிறோம்.
இந்த விஞ்ஞான விளக்கம் ஒருபுறமிருக்க, இடி, மின்னல் ஆகியவற்றுக்கு
நமது இமாம்கள் அளிக்கும் விளக்கம் வினோதமாக இருக்கின்றது. அரபியில் இடி என்பதைக் குறிக்க
ரஃது என்ற சொல் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. இதற்கு இமாம்கள் கூறும் விளக்கம் பின்வருமாறு:
ரஃது எதுவென்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.
அவர்களில் சிலர் (ரஃது என்பது) மேகக்கூட்டத்தை விரட்டுகின்ற வானவர் ஆவார் என்று கூறுகின்றனர்.
ரஃது என்றால் இறைவனைத் துதிக்கின்ற வானவரவார் என அபூ ஸாலிஹ்
கூறுகிறார்.
நூல்: தஃப்ஸீருல் தப்ரீ
பாகம் 1, பக்கம்
338
ரஃது என்பது மேகத்தை இழுத்து செல்ல நியமிக்கப்பட்டிருக்கும்
வானவர் என ஷஹ்ர் பின் ஹவ்ஷப் கூறுகிறார்.
நூல்: தஃப்ஸீருல் தப்ரீ
பாகம் 1, பக்கம்
339
சூஃபியாக்களின் கருத்துகளில் நான்காவது கருத்து இடி என்பது வானவர்களின்
கர்ஜனைகள், அவர்களின் அதிர்வுகளே மின்னல், அவர்களின் அழுகையே மழை என்பதாகும்.
நூல் தஃப்ஸீருர் ராஸி பாகம் 19, பக்கம் 22
மின்னல் என்பது ஒளியினால் ஆன சாட்டையாகும். வானவர் அதைக் கொண்டு
மேகத்தை இழுப்பார் என மற்ற அறிஞர்கள் கூறுகிறார்கள்.
பர்க் (மின்னல்) என்பது நான்கு முகமுடைய வானவர் ஆவார். அவை மனித
முகம்,
குள்ளநரியின் முகம், பறவை முகம், சிங்க முகம் ஆகியவையாகும். தன்னுடைய இறக்கையினால் அது அடிக்கும்
போது ஏற்படுவதே மின்னல் எனப்படும்.
நூல்: தஃப்ஸீருல் தப்ரீ
பாகம் 1, பக்கம்
342
இடி என்பது வானவரின் பெயர், அவர்களின் கர்ஜனை
வானவர்களின் அழுகை தான் மழை நீர்
ஒளியினால் ஆன சாட்டையே மின்னல்
நான்கு முகமுடைய வானவர், தன்னுடைய இறக்கையினால் அடிக்கும் போது ஏற்படுவதே மின்னல்
இவை தாம் இடி, மின்னல் தொடர்பாக இமாம்கள் அளித்த (மேற்கண்ட) விளக்கங்களின்
தொகுப்பு.
இதைப் படிக்கும் யாரும் இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று
நினைக்குமளவுக்கு இந்த விளக்கம் இல்லையா?
இஸ்லாம் பிற மக்களிடம் சென்றடைவதற்கும், முஸ்லிம்கள் இஸ்லாத்தைச் சரியான முறையில் புரிந்து கொள்வதற்கும்
இமாம்கள் கூறும் பெரும்பாலான விளக்கங்கள் தடைக்கல்லாக இருப்பதை இவற்றின் மூலம் அறியலாம்.
இதற்கு சப்பைக் கட்டும் ஆலிம்கள் (?) இது தவறு என்பதைப் பகிரங்கமாக ஒப்புக் கொள்ள முன்வருவார்களா?
பெயர் பட்டியல்
ஒருவருடைய அதிகாரத்திற்குட்பட்ட விஷயங்களில் மற்றொருவர் தேவையின்றி
தலையிடுவதை அதிகப் பிரசங்கித்தனம் என்கிறோம். நம்முடைய விவகாரங்களில் தேவையின்றி ஒருவர்
மூக்கை நுழைப்பதை நாம் விரும்ப மாட்டோம். நம்முடைய வீட்டில் ஒருவர் வந்து, இதை இங்கே வை; அதை அங்கே வை என்று அதிகாரம் செய்தால் நாம் பொறுத்துக் கொண்டு, அதை ஏற்று செயல்படுவோமா? இதைச் சொல்வதற்கு நீ யார் என்றே நிச்சயம் கேள்வியெழுப்புவோம்.
இந்த அதிகப் பிரசங்கித்தனத்தைத் தம் விஷயத்தில் பொறுத்துக் கொள்ளாதவர்கள்
இறைவனுடைய விஷயத்தில் மௌனம் காத்து, ஏற்றுக் கொள்கின்றனர்.
இமாம்கள் பல சந்தர்ப்பங்களில் இறைவனுடைய அதிகாரத்திற்குட்பட்ட
விஷயத்தில் புகுந்து அதிகப்பிரசங்கி வேலையைச் செய்துள்ளார்கள். இறைவனும், இறைத்தூதரும் நமக்குப் பயன் தரக்கூடியவற்றை மட்டுமே சொல்லித்
தருவார்கள். எதில் நமக்குத் துளியும் பயனில்லையோ அதைச் சொல்லாமல் விட்டுவிடுவார்கள்.
ஒரு முஸ்லிம் அதில் புகுந்து கொண்டு தேவையற்றதை விளக்கம் என்ற பெயரில் உளறிக் கொட்டக்
கூடாது. இது போன்ற காரியத்தில் ஈடுபடுவது அதிகப் பிரசங்கித்தனம் என்றே கருதப்படும்.
இமாம்கள் எவ்வாறு அதிகப் பிரசங்கி வேலையைச் செய்துள்ளார்கள்
என்பதைக் காண்போம்.
கஹ்ஃப் என்ற அத்தியாயத்தில் குகைத்தோழர்களின் வரலாறு கூறப்படுவதை
அறிவோம். அவர்கள் வாழ்விலிருந்து படிப்பினை பெற போதுமான தகவல்கள் அந்த அத்தியாயத்திலேயே
இடம்பெற்றுள்ளன. குகையின் பெயரையோ, அதில் இருந்தவர்களின் பெயரையோ தெரிந்து கொள்வதில் எந்தப் படிப்பினையும்
இல்லை. எனவே தான் இறைவனும் இவற்றைக் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் இந்த இமாம்கள், இறைவன் சொல்லாவிட்டால் என்ன? அதற்குத் தான் நாங்கள் இருக்கிறோமே' என்பது போல தங்கள் கற்பனைக்குத் தோன்றியதை மலை போல் கொட்டிக்
குவித்துள்ளார்கள்.
குகையில் ஆரம்பித்து அப்போதிருந்த நீதிபதி (?) வரைக்கும் ஒன்று விடாமல் அத்தனைக்கும் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதில் உள்ள நாய்க்குக் கூட பெயர் குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்?
குகையின் பெயர் பான்ஜலூஸ், அவ்வூரின் பெயர் லவ்ஸ், நகரின் பெயர் அஃப்ஸூஸ், நாயின் பெயர் கித்மீர் என்பதாகும். அந்த இரண்டு நீதிபதிகளில்
ஒருவர் மார்னூஸ், மற்றொருவர்
உஸ்தூஸ் ஆவர். அரசரின் பெயர் தக்யூஸ். குகைத் தோழர்களின் பெயர் தவானுஸ், நவாஸ், மார்தூனஸ், சார்னூஸ், தஸ்தனூஸ்
மக்ஸிலிமீனா, யம்லீகா ஆகியவையாகும்.
ஜிப்ரீல் (அலை) அவர்களின் பெயர் அப்துல்லாஹ், மீகாயில் (அலை) அவர்களின் பெயர் உபைதுல்லாஹ் என்பதாகும்.
நூல்: தஃப்ஸீர் மகாதில் பின் சுலைமான்
பாகம் 2, பக்கம்
304
(குறிப்பு: அந்த லூஸ், இந்த லூஸ் என இந்தப் பெயர்களைப் படிப்பதற்குள் நாம் லூஸாகி விடுவோம்
போலிருக்கிறதே என்று வாசகர்களுக்குத் தோன்றலாம். அல்லாஹ்விற்காகப் பொறுத்துக் கொள்ளுங்கள்)
இங்கே நாம் கேட்க விரும்புவது, ஏன்
இந்த அதிகப் பிரசங்கித்தனம்? வலிந்து
கொண்டு இத்தனைக்கும் பெயர் சொல்ல என்ன அவசியம் நேர்ந்தது? ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் இமாம்கள் இவ்வாறு கூறவில்லை. பல
இடங்களில் இது போன்ற வேலையை, அதிகப்
பிரசங்கித்தனத்தைச் செய்துள்ளார்கள்.
இப்றாஹீம் (அலை) அவர்கள் (பலி கொடுத்த) ஆட்டின் பெயர் ஜரீர், சுலைமான் (அலை) அவர்களின் ஹூத் ஹூத் பறவையின் பெயர் அன்கஸ், குகைத் தோழர்களுடைய நாயின் பெயர் கித்மீர், இஸ்ரவேலர்கள் வணங்கிய காளைக் கன்றின் பெயர் புஹ்மூத் என்பதாகும்.
ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறக்கப்பட்டனர். ஹவ்வா (அலை) ஜித்தாவிலும், இப்லீஸ் பிதுஸ்த பீஸான் என்ற பகுதியிலும், பாம்பு இஸ்பஹான் என்ற பகுதியிலும் (இறக்கப்பட்டனர்) என ஹஸன்
பஸரீ கூறியதை நான் கேட்டேன் (என உபாத் என்ற அறிஞர் கூறுகிறார்)
நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்
பாகம் 5, பக்கம்
144
இது இறைவனுடைய அதிகாரத்தில் தலையிடும் காரியமில்லையா? அல்லாஹ்வின் அடிமைகளான நாமே நம் விஷயத்தில் பிறர் தலையிடுவதைப்
பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றால், நமது எஜமானனாகிய அவன் விஷயத்தில் நாம் தலையிடுவதை இறைவன் பொறுத்துக்
கொள்வானா?
தன்னுடைய அதிகாரத்தில் தலையிடுவது தன்னால் தேர்வு செய்யப்பட்ட
தன் தூதர்களாக இருந்தாலும் அதை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். இறைவனுக்குக் கொஞ்சமும்
பிடிக்காத, ஏற்றுக் கொள்ளவே முடியாத
செயல் இது என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறோம்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM APR 2011