ஏகத்துவமும் இணை கற்பித்தலும் தொடர்: 5 - அல்லாஹ்வின் பண்புகளும் தனித் தன்மைகளும்
அல்லாஹ்வின் பண்புகளும் தனித் தன்மைகளும்
கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்
இறை நிராகரிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு
முஸ்லிமும் அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் தனித் தன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வை மறுப்பது அல்லது அல்லாஹ்வின் பண்புகள், பெயர்கள் மற்றும் ஆற்றல்களில் ஏதாவது ஒன்றை மறுப்பது அல்லது
அல்லாஹ்வுடைய ஆற்றல்கள், பண்புகள் அவனுக்கு இருப்பதைப்
போல் அல்லாஹ் அல்லாத பொருட்களுக்கோ மற்றவர்களுக்கோ இருப்பதாக நம்புதல் கூடாது. மேலும்
அல்லாஹ்வைப் பற்றி அவனும், அவனுடைய தூதரும் எத்தகைய விளக்கங்களை
வழங்கியுள்ளார்களோ அதில் குர்ஆன், ஹதீஸ் துணையின்றி எவ்வித சுய
விளக்கங்களையும் நாம் கூறக் கூடாது.
இவ்வாறு ஒருவன் செய்தால் நிச்சயமாக அவனும் அல்லாஹ்வை மறுத்தவனாவான்.
எனவே நாம் அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் தனித்தன்மைகளை அறிந்து கொள்வதுடன் இறை நிராகரிப்பாளர்கள்
மற்றும் இணை வைப்பவர்களின் தவறான கொள்கைகளையும் இன்ஷா அல்லாஹ் விரிவாகக் காணவிருக்கின்றோம்.
அல்லாஹ் இருக்கின்றான் என்பதை ஒருவன் நம்ப மறுத்தால் அவன் இஸ்லாத்தை
விட்டும் வெளியேறிய இறை மறுப்பாளனாவான். அல்லாஹ் என ஒருவன் இருப்பது உண்மையே என்பதற்குத்
திருக்குர்ஆன் ஏராளமான சான்றுகளை முன்வைக்கின்றது.
அல்லாஹ் ஒருவனே!
அகில உலகங்களையும் படைத்து, பராமரித்து, பாதுகாக்கும் இறைவன் ஒருவனே என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
இதனை திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது.
உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன்
வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:163)
"அல்லாஹ் ஒருவன்'' என (முஹம்மதே!)
கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
அவனுக்கு நிகராக யாருமில்லை. (அத்தியாயம்: 112)
அவனே வானத்திலும் இறைவன், பூமியிலும்
இறைவன். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன். (அல் குர்ஆன் 44:84)
"இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள்! அவன் ஒரே ஒரு கடவுளே!
எனவே எனக்கே பயப்படுங்கள்!'' என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல் குர்ஆன் 16:51
ஒரே நிர்வாகத்தில் இருவர் அதிகாரம் செலுத்தும் போது நிச்சயமாக
அந்த நிர்வாகம் சீராக இயங்காது. இருவருக்குமிடையே சண்டைச் சச்சரவுகள், பிரிவினைகள் கண்டிப்பாக ஏற்பட்டே தீரும். உலக நடைமுறைகள் இதனை
நமக்கு நன்றாகவே படம் பிடித்துக் காட்டுகின்றன.
ஆனால் வானம் பூமி மற்றும் கோள்களின் இயக்கங்கள் படைக்கப்பட்ட
காலம் முதல் இன்று வரை ஒரே சீராக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதுவே இவற்றை நிர்வாகம்
செய்பவன் ஒரே ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்பதை நம் பகுத்தறிவுக்குத் தெளிவாக
எடுத்துரைக்கிறது.
அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால்
இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ்
தூயவன்.
அல்குர்ஆன் 23:22
அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக்
கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்)
போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ்
தூயவன்.
அல் குர்ஆன் 23:91
இறைவன் ஒருவன் தான் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் திருமறைக்
குர்ஆன், அந்த இறைவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதையும் அல்லாஹ்வை நாம்
பார்க்காவிட்டாலும் அவன் இருக்கின்றான் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளை அள்ளிக்
கொட்டுகின்றது. திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் ஆதாரங்களைச் சிந்திக்கும் எந்தப் பகுத்தறிவுவாதியும்
அல்லாஹ் இருக்கின்றான் என்பதைத் தன்னுடைய பகுத்தறிவால் ஒருபோதும் மறுக்க இயலாது.
கடவுள் இருக்கிறானா?
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதே
இஸ்லாத்தின் அடிப்படை. ஆனால் பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளக் கூடிய
சிலர் எந்தக் கடவுளும் இல்லை என்று கூறி அல்லாஹ் என்கிற உண்மையான இறைவனையும் மறுக்கின்றனர்.
கடவுளை மறுப்பவர்களை நாத்திகவாதிகள் என்று நடைமுறையில் குறிப்பிடுவார்கள்.
ஆனால் கடவுள் இருக்கின்றான்; அவன்
அல்லாஹ் ஒருவன் தான் என்பதற்கு ஏராளமான சான்றுகளைத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது.
அவற்றில் நம் சக்திக்குட்பட்டு என்னென்ன சான்றுகளை திருக்குர்ஆன் முன்வைக்கின்றது என்பதை
நாம் காணவிருக்கின்றோம்.
அந்தச் சான்றுகளை நாம் இங்கே விரிவுரை போன்று எடுத்துரைக்கவில்லை.
அவ்வாறு விரிவுரையாக கூறத் துவங்கினால் அவற்றை விவரித்து முடிப்பதற்கு முன்பாக நம்முடைய
அறிவும் ஆயுளும் முடிந்து விடும். எனவே சான்றுகளை மட்டுமே நாம் இங்கே வரிசைப்படுத்தியிருக்கின்றோம்.
இந்தச் சான்றுகளில் திருக்குர்ஆனை உண்மைப்படுத்தும் நவீன விஞ்ஞான
உண்மைகளை நாம் கொண்டுவரவில்லை. திருக்குர்ஆன் நேரடியாக மனித சமுதாயத்தைப் பார்த்து
பேசுவது போன்ற சான்றுகளை மட்டுமே காணவிருக்கின்றோம்.
அல்லாஹ் அவன் தான் உண்மையான கடவுள் என்பதற்குத் தன்னுடைய படைப்பாற்றலை
ஒவ்வொன்றாக எடுத்துரைத்து இதனைச் சிந்தித்துப் பாருங்கள் என்று இந்த மனித சமூகத்திற்கு
அறைகூவல் விடுகின்றான். இறைவன் சான்றுகளாகக் காட்டும் விஷயங்களை சிந்தனை செய்யும் எவரும்
இவற்றை ஒருவன் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை மறுக்க இயலாது. படைத்தவன்
ஒருவன் இல்லாது இவை இயங்காது என்பதை அவன் ஒத்துக் கொள்வான். இதோ இறைவன் காட்டும் சான்றுகளைப்
பாருங்கள்.
இரவு, பகல் மாறி மாறி வருவதிலும், வானங்களையும், பூமியையும்
அல்லாஹ் படைத்திருப்பதிலும் (இறைவனை) அஞ்சுகிற சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 10:6)
வானங்களையும், பூமியையும்
படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும்
விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 2:164)
அவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின்
விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து பசுமையான பயிர்களை வெளிப்படுத்துகிறோம்.
அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை அப்பயிர்களில் வெளிப்படுத்துகிறோம். பேரீச்சை மரத்தின்
பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத்
தோட்டங்களையும்,
ஒலிவமரம், மாதுளை ஆகியவற்றையும் (வெளிப்
படுத்துகிறோம்.) அவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவும், (தன்மையில்) வேறுபட்டதாகவும் உள்ளன. அது பலன் கொடுக்கும் போது
அதன் பலனையும்,
அது கனிவதையும் கவனியுங்கள்! நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு
இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 6:99)
இரவை நீங்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலை வெளிச்சமுடையதாகவும் அவனே அமைத்தான். செவிமடுக்கும் சமுதாயத்திற்கு
இதில் சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 10:67)
அவனே பூமியை விரித்தான். மலைகளையும், நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை
அமைத்தான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள்
உள்ளன. (அல்குர்ஆன் 13:3)
பூமியில் அருகருகில் அமைந்த பல பகுதிகள் உள்ளன. திராட்சைத் தோட்டங்களும், பயிர்களும், கிளைகளுடையதும்
கிளைகளே இல்லாததுமான பேரீச்சை மரங்களும் உள்ளன. ஒரே தண்ணீர் தான் அதற்குப் புகட்டப்படுகிறது.
(இவ்வாறு இருந்தும்) சுவையில் ஒன்றை விட மற்றொன்றை சிறந்ததாக்கியுள்ளோம். விளங்கும்
சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 13:4)
அவனே வானத்திலிருந்து உங்களுக்காகத் தண்ணீரை இறக்கினான். அதில்
குடிநீரும் உண்டு. நீங்கள் மேய்ப்பதற்கான தாவரங்கள் அதனால் கிடைக்கின்றன. அதன் மூலம்
பயிர்களையும்,
ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச்
செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது. இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவற்றை உங்களுக்காக அவன் பயன் படச் செய்தான். (ஏனைய)
நட்சத்திரங்களும் அவனது கட்டளைப்படி வசப்படுத்தப் பட்டுள்ளன. விளங்கும் சமுதாயத்துக்கு
இதில் பல சான்றுகள் உள்ளன. பூமியில் அவன் உங்களுக்காகப் படைத்தவை மாறுபட்ட பல நிறங்களைக்
கொண்டுள்ளன. படிப்பினை பெறும் சமுதாயத்துக்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:10-13)
பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு
இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:67)
"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர்
ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து
மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது.
சிந்திக்கிற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:68, 69)
ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை.
நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 16:79)
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து
அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு
அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி
பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. அல்லாஹ் இரவையும், பகலையும் மாறி மாறி வரச் செய்கிறான். சிந்தனையுடையோருக்கு இதில்
படிப்பினை உள்ளது. (அல்குர்ஆன் 23:43,44)
மண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி
இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை. (அல்குர்ஆன் 30:20)
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து
உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது
அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 30:21
வானங்களையும், பூமியையும்
படைத்திருப்பதும், உங்களது மொழிகளும், நிறங்களும் வேறு பட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது.
அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. 9அல்குர்ஆன்
30:22)
இரவிலும், பகலிலும் நீங்கள் உறங்குவதும், அவனது அருளைத் தேடுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. செவியுறும்
சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:23)
மின்னலை அச்சமூட்டுவதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும்
உங்களுக்கு அவன் காட்டுவதும், வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பிறகு அதன் மூலம் அதற்கு உயிரூட்டுவதும் அவனது சான்றுகளில்
உள்ளவை. விளங்கக் கூடிய சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:24)
அவனது கட்டளைப்படி வானமும், பூமியும்
நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. (அல்குர்ஆன் 30:25)
மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் இறைவனை மறுப்பவர்களுக்கு எதிராகத்
திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் சான்றுகளாகும். எனவே இறைவன் ஒருவனே, அவன் தான் அல்லாஹ் என்பதை யாரேனும் மறுத்தால் அவன் மறுமையில்
நிரந்தர நரகத்திற்குச் செல்வான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அல்லாஹ் உருவமற்றவனா?
அல்லாஹ்வைப் பற்றிய பல உண்மைகள் குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமாக வழி கெட்ட அறிஞர்கள் மூலம் மக்களுக்குப்
போதிக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்று அல்லாஹ் உருவமற்றவன் என்பதாகும்.
தமிழகத்தைப் பொறுத்த வரை நாகூர் ஹனீஃபா அவர்களின் இசைப் பாடல்களின்
மூலம் தான் இந்த வழிகெட்ட கொள்கை அதிகமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
"உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர். உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்''
"கலைவளர்த்த காவலர் நபிகள் நாயகர். உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்''
"உருவமற்ற ஏக தெய்வக் கொள்கையை தரணி எங்கும் நிலைத்து நிற்கச்
செய்தவர்''
என்ற பாடல் வரிகள் மூலம் தான் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட இஸ்லாம்
உருவமற்ற இறைவனைப் போதிக்கிறது என விளங்கி வைத்துள்ளனர்.
சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படும் சில வழிகேடர்களும், "அல்லாஹ் உருவமற்றவன்; அவன் ஒன்றுமில்லாத
பேரொளியான ஒரு சூன்யம் தான்' என்ற தவறான கொள்கையைப் பிரச்சாரம்
செய்து வருகின்றனர். அல்லாஹ் உருவமுடையவன், அவன் அர்ஷில்
இருக்கின்றான்,
இறைவனின் அர்ஷை எட்டு மலக்குகள் சுமந்து கொண்டிருப்பார்கள் என்று
குர்ஆன் சான்றுகளின் அடிப்படையில் எடுத்துரைக்கும் போது, "அப்படியென்றால் அல்லாஹ்வின் எடை எட்டு மலக்குகள் சுமக்கும் அளவுக்குத்
தானா?' எனக் கேட்டு இறைவனைக் கேலிப் பொருளாக்குகின்றனர்.
அது போன்று இறைவன் மறுமையில் தன்னுடைய பாதத்தினால் நரகத்தை மிதிப்பான்
என்பது தொடர்பான செய்தியைக் கூறும் போது "அப்படியென்றால் அல்லாஹ்வும் நரகத்திற்குச்
சென்று விடுவானா?' என்று கேட்டு இறைவனைப் பரிகாசம்
செய்கின்றனர்.
இவர்கள் இவ்வாறு இறைவனைக் கேலியும் கிண்டலும் செய்வதற்குக் காரணம்
இறைவன் உருவமற்றவன், ஒன்றுமில்லாத சூனியம் என்பதை
நிலைநாட்டுவதற்காகத் தான். இறைவன் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்பதை ஒத்துக் கொண்டால்
இறைவன் உருவமுடையவன் என்று ஏற்க வேண்டியது ஏற்படும் என்பதாலும் இறைவன் நரகத்தைக் காலால்
மிதிப்பான் என்பதை ஏற்றுக் கொண்டால் இறைவனுக்கு கால்கள் உள்ளன என்று ஏற்றுக் கொள்ள
வேண்டிய நிலை ஏற்படும், இதன் மூலம் இறைவன் உருவமுள்ளவன்
என்பது நிரூபணமாகிவிடும் என்பதாலுமே இவர்கள் இதனைப் பரிகசித்து மறுக்கின்றனர்.
அகில உலகங்களையும் படைத்த இறைவனுக்கு அவனுக்கே தகுதியான ஒரு
தோற்றம் உள்ளது. அதனை இவ்வுலகில் யாரும் காண முடியாது. மறுமையில் இறைவனின் நல்லடியார்கள்
காண்பார்கள் என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இவற்றை மறுப்பவன் ஏராளமான
குர்ஆன் வசனங்ள் மற்றும் நபிமொழிகளை மறுத்து, இறைவனைப் பற்றி
இட்டுக்கட்டிய குற்றத்திற்கு உள்ளாகி விடுவான்.
வழிகேட்டைப் புகுத்திய ift. மொழிபெயர்ப்பு
அல்லாஹ் உருவமற்றவன் என்ற வழிகெட்ட கொள்கை தமிழகத்து முஸ்லிம்களிடம்
ஆழப் பதிந்த காரணத்தினால் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பிலும் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக
மிக மோசமாக விளையாடியுள்ளனர். தங்களுடைய கைச்சரக்கைப் புகுத்தி, மனோ இச்சைப் பிரகாரம் மொழிபெயர்த்துள்ளனர். இதற்கு ஜமாஅத்தே
இஸ்லாமி அமைப்பின் ஐ.எஃப்.டி. குர்ஆன் மொழிபெயர்ப்பைச் சான்றாகக் கூறலாம்.
அல்லாஹ் தன்னுடைய தகுதிக்குத் தகுந்தவாறு அர்ஷ் எனும் பிரமாண்டமான
ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்கிறான். இறைவனுடைய அர்ஷை சுமப்பதற்கு மலக்குகளை இறைவன்
ஏற்படுத்தியுள்ளான். அவர்கள் இப்போதும் அர்ஷைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். கியாமத்
நாளிலும் சுமந்து கொண்டிருப்பார்கள். இதற்கான சான்றுகளை நாம் அர்ஷைப் பற்றி எழுதும்
போது விரிவாகப் பார்க்க இருக்கின்றோம். இறைவன் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்பதைத் திருக்குர்ஆன்
பல்வேறு இடங்களில் எடுத்துக் கூறுகிறது.
இறைவன் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்பதை ஏற்றுக் கொண்டால்
அவன் உருவமுள்ளவன் என்ற பொருள் வந்து விடும் என்பதால் அர்ஷ் என்பது இறைவனின் பிரம்மாண்டமான
படைப்பு என்பதையும், இறைவனின் ஆசனம் என்பதையும் ஐஎஃப்டி
குர்ஆன் மொழிபெயர்ப்பில் மறைத்து அர்ஷ் என்றால் "இறைவனின் அதிகாரம்'' என தவறான விளக்கம் கொடுத்துள்ளனர். இவர்கள் அர்ஷைப் பற்றிக்
கூறிய கருத்துகளில் மார்க்கத்திற்கு மாற்றமான பல விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் பின்னர்
விரிவாக விளக்க உள்ளோம். இங்கு அர்ஷ் என்பதற்கு ஆட்சி செலுத்தும் அதிகாரம் என்று அவர்கள்
தவறான விளக்கம் கொடுத்ததை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றோம்.
இதோ அவர்களின் வழிகெட்ட விளக்கத்தைப் பாருங்கள்.
அரபி மொழியில் அர்ஷ் என்பதற்குச் சிம்மாசனம் என்று பொருள். அல்லாஹ்வின்
அர்ஷைப் பற்றி அறிய இயலாது. அல்லாஹ் பேரண்டத்தைப் படைத்த பிறகு தனது எல்லையற்ற ஆட்சிக்கு
கேந்திரமாக்கிய ஓர் இடத்திற்கு அர்ஷ் என்று கூறியிருக்கலாம். அல்லது அர்ஷ் என்பது ஆட்சி
செலுத்தும் அதிகாரத்தைக் குறிக்கலாம். ஆக இவ்விரு பொருள் கொள்ளவும் இங்கு இடமுண்டு.
(ஐஎஃப்டி மொழி பெயர்ப்பு பக்கம் : 1221)
மேலும் 69:17 வசனத்தில் கியாமத் நாளில் எட்டு
மலக்குகள் இறைவனின் அர்ஷை தம்மீது சுமந்து கொண்டிருப்பார்கள் என வந்துள்ளது. இதற்கு
ஐஎஃப்டி விரிவுரையில் கூறியிருப்பதைப் பாருங்கள்.
இந்த வசனம் முதஷாபிஹாத் முடிவான பொருள் கொள்ள இயலாத வசனங்களில்
ஒன்றாகும். அர்ஷ் என்றால் என்னவென்று நம்மால் அறிந்து கொள்ள முடியாது. இறுதித் தீர்ப்பு
நாளில் அதனை எட்டு வானவர்கள் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கும் விதத்தையும் நம்மால்
புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்து கொண்டிருப்பான். எட்டு
வானவர்கள் அவனை அர்ஷுடன் சேர்த்து சுமந்து கொண்டிருப்பார்கள் என்று எந்நிலையிலும் கற்பனை
செய்தும் பார்க்க இயலாது. அதே நேரத்தில் அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்திருப்பான் என்றும்
குர்ஆனில் கூறப் படவில்லை. இறைவனின் சுயத்தன்மை குறித்து திருக்குர்ஆனில் எந்தக் கருத்தோட்டம்
நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறதோ அந்தக் கருத்தோட்டமும் கூட உடல், திசை, இடம் ஆகியவற்றை விட்டுத் தூய்மையானவனாகிய
இறைவன் ஓரிடத்தில் அமர்ந்திருக்கிறான்; ஒரு படைப்பு
அவனைத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறது என்று எண்ணுவதற்குத் தடையாக உள்ளது. எனவே
தோண்டித் துருவி இதன் பொருளை நிர்ணயிக்க முயல்வது நம்மை நாமே வழிகேட்டின் அபாயத்தில்
வீழ்த்திக் கொள்வதாகும்.
(ஐஎஃப்டி மொழிபெயர்ப்பு, பக்கம் : 1008)
மிகப் பெரும் வழிகெட்ட கருத்தைப் புகுத்தியுள்ளனர். அல்லாஹ்
அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்று குர்ஆனில் பல்வேறு இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால்
இவர்களோ அவ்வாறு இல்லை என குர்ஆன், சுன்னாவிற்கு
மாற்றமான கருத்தைக் கூறியுள்ளனர். இறைவன் உருவமற்றவன் என்ற அடிப்படையை நம்பிய காரணத்தினாலேயே
இப்படித் தவறான கொள்கையின் பக்கம் தடம்புரண்டு விட்டனர்.
இவர்களின் வழிகேட்டிற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்:
கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தா செய்ய அழைக்கப்படும் நாளில்
அவர்களுக்கு அது இயலாது. (அல்குர்ஆன் 68:42)
"கெண்டைக் கால் திறக்கப்படும் நாளில்'' என்றால், மறுமையில் இறைவன் தனது கெண்டைக்
கா-ல் விழுந்து மக்களை பணியச் சொல்வான் என்பது மேற்கண்ட வசனத்தில் பொருள்.
இவ்வுலகில் இறைவனுக்குப் பணிவதை யார் வழக்கமாகக் கொண்டிருந்தார்களோ
அவர்கள் பணிவார்கள்; மற்றவர்கள் இறைவன் கா-ல் விழ
முடியாது. இது நபிகள் நாயகம் அளித்த விளக்கம். (புகாரியில் 4919வது ஹதீஸில் இதைக் காணலாம்)
மேற்கண்ட வசனத்திலிருந்தும் ஹதீஸிலிருந்தும் இறைவனுக்கு கெண்டைக்
கால் உள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால் இறைவனுக்கு கெண்டைக் கால் உள்ளது என ஒத்துக்
கொண்டால் இறைவன் உருவமுள்ளவன் என ஏற்க நேரிடும் என்பதால் இந்த வசனத்தின் மொழிபெயர்ப்பில்
ஐஎஃப்டி நிறுவனத்தினர் தங்களுடைய கைச்சரக்கை நுழைத்துள்ளனர். இதோ அவர்களின் தமிழாக்கத்தைப்
பாருங்கள்.
எந்த நாளில் கடினமான நேரம் வருமோ மேலும் மக்கள் ஸஜ்தா செய்தவற்காக
அழைக்கப்படுவார்களோ அந்த நாளில் இந்த மக்களால் ஸஜ்தா செய்திட இயலாது.
(ஐஎஃப்டி மொழிபெயர்ப்பு, பக்கம் : 1005)
இது போன்றே பின்வரும் வசனத்திலும் விளையாடியுள்ளனர்.
அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப் படுத்தவில்லை.
கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது
வலது கையில் சுருட்டப் பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும்
அவன் உயர்ந்தவன்.
அல்குர்ஆன் 39:67
மேற்கண்ட வசனத்தில் இறைவனுக்கு இரண்டு கைகள் உள்ளன என்று தெளிவாகக்
கூறப்பட்டுள்ளது. இது உண்மையிலே இறைவனின் கைகள் தான். இதை நயியவர்களும் ஹதீஸ்களில்
தெளிவு படுத்தியுள்ளார்கள். இறைவனின் கைகள் பற்றி வரும் போது இதனை நாம் விரிவாக விளக்குவோம்.
"இந்த நிர்வாகத்தை என் கைப்பிடியில் நான் வைத்திருக்கிறேன்' என்று ஒருவர் கூறுகிறார் என வைத்துக் கொள்வோம். இங்கு கை என்பது
உண்மையான கையைக் குறிக்காது. மாறாக அதிகாரம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.
39:67வது வசனத்தில் கூறப்பட்டுள்ள கைகள் என்ற வார்த்தைக்கு அதன் நேரடியான
பொருளைக் கொடுத்தால் இறைவன் உருவமுள்ளவன் என்ற கருத்து வந்து விடும். இதனை மறைப்பதற்காக
ஐஎஃப்டி விரிவுரையில் கூறியுள்ள கருத்தைப் பாருங்கள்.
பூமியிலும், வானத்திலும்
அல்லாஹ்வின் முழு அதிகாரத்தையும் அதனை அவன் பயன்படுத்தும் நிலையையும் காட்டுவதற்காக
கைப்பிடியில் இருக்கிறது. கையில் சுருட்டப்பட்டிருக்கிறது என்பன உருவகமாகக் கூறப்பட்டுள்ளன.
(ஐஎஃப்டி விரிவுரை, பக்கம்: 783)
மேலும் குர்ஆனில் பல்வேறு இடங்களில் இறைவனுடைய முகம் என்ற வார்த்தை
வந்துள்ளது. இங்கு இறைவனுடைய முகம் என்று மொழி பெயர்த்தால் இறைவனுக்கு உருவமுள்ளது
என்று வந்து விடும் என்பதால் இறைவனுடைய முகம் என்று வரக்கூடிய அனைத்து இடங்களிலும்
இறைவன் என்று மட்டுமே மொழிபெயர்த்துள்ளனர். இது எவ்வளவு பெரிய வழிகேடு என்பதை மக்கள்
சிந்திக்க வேண்டும்.
சவூதி உலமாக்களின் பார்வையில் இவ்வாறு செய்பவர்கள் காஃபிர்களாவார்கள்.
இதைத் தான் ஐஎஃப்டி மொழிபெயர்ப்பில் பல இடங்களில் செய்துள்ளனர்.
இங்கு நாம் மற்றொரு கருத்தையும் பதிய வைக்க விரும்புகிறோம்.
பிஜே அவர்களின் தர்ஜமாவில் மற்ற மொழி பெயர்ப்புகளுக்கு மாற்றமாக சில கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
குர்ஆன் ஹதீஸின் அடிப்படையிலேயே அக்கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. இதில் மாற்றுக்
கருத்துக் கொண்டவர்களை விவாதக் களத்தில் சந்தித்தும் நம்முடைய சத்தியத்தைப் பதிவு செய்துள்ளோம்.
ஆனால் பிஜே என்ற தனி மனிதரின் மீதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்
மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் இன்றளவும் பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பை திரைமறைவிற்குள்
இருந்து கொண்டு குறைகூறி வருகின்றனர். இவர்கள் உண்மையிலேயே நியாயத்திற்காக, சத்தியத்திற்காகப் பாடுபடுவதாக இருந்தால் பிஜே அவர்களின் தர்ஜமாவிற்கு
முன்பாக பல்லாண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்ட இது போன்ற தவறான கருத்துகளை ஏன் விமர்சனம்
செய்யவில்லை?
அதை ஏன் வழிகேடு என்று கூறவில்லை? என்பது தான் நம்முடைய கேள்வியாகும்.
அல்லாஹ்வின் விஷயத்திலும் இன்னும் பல இடங்களிலும் மார்க்கத்திற்கு
விரோதமான மொழிபெயர்ப்பைச் செய்துள்ள ஐஎஃப்டி மொழிபெயர்ப்பை குறைந்த பட்சம் வாங்க வேண்டாம்
என்றாவது கூறியிருப்பார்களா? அல்லது இந்த மொழிபெயர்ப்பில்
இத்தகைய தவறுகள் உள்ளன; இதில் எச்சரிக்கையாக இருந்து
கொள்ளுங்கள் என்றாவது கூறியிப்பார்களா? சவூதி அரசிடம்
இதற்கு எதிராக ஏதேனும் முறையிட்டிருப்பார்களா?
பிஜே அவர்களுக்கு எதிராகச் செய்த சதிவேலைகளில் நூறில் ஒரு பகுதியைக்
கூட இதற்கு எதிராகச் செய்திருக்க மாட்டார்கள். மாறாக இப்போது இவர்கள் இந்த தர்ஜமாவைத்
தான் வாங்கி அன்பளிப்புச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவே இவர்களுக்கு மார்க்கப்
பற்று என்பது இரண்டாம் பட்சம் தான். தனி மனித வெறுப்பே இவர்களிடம் தலை தூக்கி நிற்கிறது
என்பதற்குத் தெளிவான சான்றுகளாகும்.
அல்லாஹ்வைப் போன்று யாருமில்லை
அல்லாஹ்வின் தோற்றம், தனித் தன்மைகள்
மற்றும் பண்புகளைப் பற்றி ஆதாரப்பூர்வமாக நாம் பார்ப்பதற்கு முன்பாக சில அடிப்படைகளை
விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
இறைவன் உருவம் உள்ளவன். அவனுக்கு முகம். கைகள். விரல்கள், கால்கள், கண்கள் ஆகியவை உள்ளன எனக் கூறும்
போது அந்த முகம் எவ்வாறு இருக்கும்? அவனுடைய கைகள்
நம்முடைய கைகளைப் போன்று இருக்குமா? அவனுடைய கால்கள்
நம்முடைய கால்களைப் போன்று இருக்குமா? என்றெல்லாம்
ஒப்புவமை கற்பிப்பது கூடாது. இறைவனுக்கு உதாரணம் காட்டுவதும் கூடாது. இதனைப் பின்வரும்
திருமறை வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல்குர்ஆன்
42:11)
செவியேற்றல் என்ற தன்மையும், பார்த்தல்
என்ற தன்மையும் மனிதர்களுக்கும் இருக்கிறது. இத்தன்மைகளை இறைவனுக்கு நிகரானதாக நாம்
கருதிவிடக் கூடாது என்பதால் தான் பரிசுத்தமானவனாகிய அல்லாஹ், "அவனைப் போல் எதுவுமில்லை' என்று
முதலில் கூறிவிட்டுப் பிறகு "செவியேற்பவன்; பார்ப்பவன்' என்று கூறியுள்ளான்.
அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான்.
நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் 16:74)
அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:4)
இதிலிருந்து இறைவனின் தோற்றம் பற்றி நாம் கூறும் போது அது யாருக்கும்
ஒப்பான ஒன்றல்ல;
அவனைப் போன்றோ, அவனுக்கு உதாரணமாகவோ, அவனுக்கு நிகராகவோ யாருமில்லை என்பதை நம் உள்ளத்தில் நன்றாகப்
பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் இறைவன் உருவமுள்ளவன் என்பதற்குரிய
விரிவான சான்றுகளைக் காண்போம்.
EGATHUVAM MAY 2010