Apr 10, 2017

மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார் தொடர் - 6

மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார் தொடர் - 6
எம். ஷம்சுல்லுஹா

இன்னும் சொல்லப் போனால் தங்களது பரிந்துரையாளர்கள் என்று மக்கா இணை வைப்பாளர்கள் எவர்களை நம்பிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர்! அவர்கள் மாபெரும் இறைத் தூதர்கள். இதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள்.

இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்'' என்று கூறி விட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1601, 3352

இவ்விரு இறைத் தூதர்களும் சாதாரணத் தூதர்கள் கிடையாது. அந்த அரபியர்களின் தந்தையர்களும் ஆவர். இப்படி அவர்களது இரத்தத்துடன் இரண்டறக் கலந்த அந்த தூதர்களைத் தான் தங்கள் பரிந்துரையாளர்கள் என்று மக்கா இணை வைப்பாளர்கள் நம்பினர்.

அவர்கள் நம்பிய அந்த மாபெரும் இறைத் தூதர்கள் எங்கே? இறை நேசர்கள் என்ற பெயரில் இங்க இவர்கள் நம்புகின்ற சாதாரண அடியார்கள் எங்கே?

அந்த இறைத் தூதர்கள், நல்லடியார்கள் தாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இவர்கள் இறை நேசர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்ற முஹ்யித்தீன், காஜா முஈனுத்தீன், ஏர்வாடி இப்ராஹீம், ஷாகுல் ஹமீது, மஸ்தான் போன்றோர்கள் இறை நேசர்கள் என்பதற்கோ, நல்லடியார்கள் என்பதற்கோ நேரடியாக எந்தச் சான்றும் இல்லை.

மக்கா இணை வைப்பாளர்கள் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட தூதர்களை பரிந்துரையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருந்த போதும் அவர்களின் நம்பிக்கையை அல்லாஹ் தகர்த்தெறிந்து, அந்த மக்களை இணை வைப்பாளர்கள், இறை மறுப்பாளர்கள் என்று முத்திரையிட்டு விட்டான்.

இந்த ஆலிம்களோ, அந்த நபிமார்களுக்கு அருகில் கூட நெருங்க முடியாத ஆட்களை, வரலாற்றுத் தடயமே இல்லாதவர்களை, ஆதாரப்பூர்வமான வரலாற்றை இழந்து விட்ட சாதாரணமானவர்களைப் பரிந்துரையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இந்த நம்பிக்கையை இறைவன் எப்படி ஏற்றுக் கொள்வான்?

இந்த வகையில் மக்கா காஃபிர்களின் கடவுள் நம்பிக்கை சற்று உயர்வாகவும், இவர்களது நம்பிக்கை மிக மிக மட்ட ரகமானதாகவும் அமைந்து விடுகின்றது. இதன்படி பார்க்கும் போது இந்த ஆலிம்கள் மக்கா காஃபிர்களை விட கீழ் நிலையிலேயே உள்ளார்கள்.

எனவே இவர்கள் மக்கா காஃபிர்களை விடவும் அதிகமான நரகத் தண்டனை பெறுவதற் குத் தகுதியானவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் இவர்களை ஒரு போதும் முஸ்லிம்கள் என்று கூற முடியாது.

என்ன தான் மறுமை நம்பிக்கை கொண்டிருந்தாலும் அந்த நம்பிக்கை, இணை வைப்பின் காரணமாகத் தகர்ந்து போய் விடுகின்றது.

"நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

அல்குர்ஆன் 39:65, 66

இந்த எச்சரிக்கை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல! எல்லா இறைத் தூதர்களுக்கும் தான்.

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

அல்குர்ஆன் 6:88

இறைத் தூதர்கள் இணை கற்பித்தாலே அவர்களது அமல்கள் எல்லாம் அழிந்து போகும் எனும் போது இவர்கள் எம்மாத்திரம்?

ஒரு குடம் பால் ஒரு துளி விஷம்

இவர்களது இறை நம்பிக்கை, ஏனைய அமல்கள் எல்லாமே இணை வைப்பின் காரணமாக அழிந்து போய் விடுகின்றன. இவர்களது தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்கள், இன்ன பிற சமூக நலச் சேவைகள் அத்தனையுமே அழிந்து போய் விடுகின்றன. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் போதும். அவ்வளவு பாலும் விஷமாக மாறி வீணாகி விடுகின்றது. அது போல் இணை வைப்பவர்கள் செய்கின்ற அத்தனை அமல்களும் பாழாகிப் போய் விடுகின்றன. அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து, இந்த ஆலிம்கள் கொண்டிருக்கும் இறை நம்பிக்கை இவர்களுக்கு ஒரு போதும் கை கொடுக்காது என்று தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நாம் தான் இறை நம்பிக்கை கொண்டிருக்கிறோமே! நாம் எப்படி நரகத்திற்குப் போவோம்? என்று ஒருவர் இணை வைப்பில் நீடிப்பாரானால் அவர் குர்ஆனைச் சரியாக விளங்காதவர் ஆவார். காரணம், எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறுகின்றான்.

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை. (அல்குர்ஆன் 12:106)

அதாவது இம்மக்கள் இறை நம்பிக்கை கொள்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. ஆனால் இணை வைக்கின்றனர் என்று கடுமையாகச் சாடுகின்றான்.

அதனால் ஒருவரிடம் இறை நம்பிக்கை மாத்திரம் இருந்தால் போதாது. அவரிடம் இணை வைப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். இறை நம்பிக்கை அல்லது அது போன்ற மறுமை நம்பிக்கை ஒருவரிடம் இருந்து அவர் இணை வைப்பாரானால் அவரும் நரகவாதி தான்.

எனவே மக்கா காஃபிர்கள் மறுமை நம்பிக்கை இல்லாதவர்கள்; இந்த ஆலிம்கள் மறுமை நம்பிக்கை உள்ளவர்கள்; அவர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு உண்டு என்று பேசுவதெல்லாம் இங்கு அடிபட்டுப் போய் விடுகின்றது. அடுத்து இன்னொரு கேள்வி எழுகின்றது.

இனிமையான குரலில், லயிக்க வைக்கும் ராகத்தில் மிக ரசனையாகக் குர்ஆனை ஓதி, நம்மை வசப்படுத்தி ரசிக்க வைக்கும் இந்த ஆலிம் பெருமக்களா நரகில்? ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.


அதற்கான பதிலைச் சில ஹதீஸ்களிலிருந்து பார்ப்போம்.

EGATHUVAM OCT 2005