Apr 10, 2017

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு – 5

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு – 5

பி. ஜைனுல் ஆபிதீன்

முதஷாபிஹ் வசனங்களை மனிதர்களில் எவராலும் விளங்கிக் கொள்ள முடியாது என்ற கருத்துடையோரின் வாதங்களையும், அதற்கு நமது மறுப்புகளையும் கண்டோம். இனி நமது வாதங்களைக் காணவிருக்கின்றோம். அதற்கு முன் முதஷாபிஹ் பற்றி நமது முடிவை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

திருக்குர்ஆனில் முஹ்கம் என்றும், முதஷாபிஹ் என்றும் இரு வகையான வசனங்கள் உள்ளன. இரு வகையான வசனங்களும் மனிதன் விளங்குவதற்காகவும், படிப்பினை பெறுவதற்காகவுமே இறைவனால் அருளப்பட்டன. ஒருவருக்கும் விளங்காத எந்த ஒரு வசனமும் திருக்குர்ஆனில் இல்லை. ஆயினும் முஹ்கம் எனும் வகையிலமைந்த வசனங்கள் எளிதில் எவரும் விளங்கத்தக்கவையாகவும், வழிகேடர்கள் தங்களின் தவறான கொள்கைக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியாதவையாகவும் உள்ளன.

முதஷாபிஹ் எனும் வகையிலான வசனங்கள், கல்வியில் உறுதிப்பாடு கொண்டோர் அதன் முறையான அர்த்தத்தை விளங்கிக் கொள்ளத் தக்கதாகவும், வழிகேடர்கள் தங்கள் தவறான கொள்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தக்கவையாகவும் அமைந்திருக்கும். இது தான் முதஷாபிஹ் பற்றி நமது நிலைபாடு ஆகும். இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

முதல் ஆதாரம்

முதஷாபிஹ் வசனங்கள் விளங்குமா? விளங்காதா? என்ற கருத்து வேறுபாடு கொண்டுள்ள இரண்டு சாராரும் தங்களின் கூற்றுக்கு முதல் ஆதாரமாக திருக்குர்ஆனின் 3:7 வசனத்தையே எடுத்து வைக்கிறோம் என்பதை முன்பே தெரிவித்துள்ளோம். அந்த வசனத்தின் சரியான பொருள் என்ன என்று தீர்மானித்து விட்டால்    வேறு ஆதாரம் எதுவும் தேவைப்படாமலேயே முதஷாபிஹ் வசனங்கள் பற்றி ஒரு முடிவுக்கு நாம் வந்து விட முடியும். முன்பு இது பற்றி நாம் சுருக்கமாகச் சொல்லியிருந்தாலும் அதிக விளக்கத்துடன் இங்கே அதை விளக்குவோம்.

(முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட (முஹ்கம்) வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில (முதஷாபிஹ்) வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுகின்றனர். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் விளக்கத்தை அறிய மாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.

அல்குர்ஆன் 3:7

இது மாற்றுக் கருத்துடையோர் இந்த வசனத்திற்குச் செய்யும் அர்த்தமாகும்.

இதே வசனத்திற்கு நாம் செய்யும் பொருள் என்ன என்பதை இங்கே காண்போம்.

(முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் "இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.

அல்குர்ஆன் 3:7

இரண்டு சாராரும் எந்த இடத்தில் முரண்படுகிறோம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறோம். அரபி மொழி இலக்கணம் இந்த இரண்டு அர்த்தங்களுக்கும் இடம் தருவதால் இரு வேறு முரண்பட்ட அர்த்தங்களைக் கொள்ள வேண்டிய நிலை. மாற்றுக் கருத்துடையோர் செய்த அர்த்தம் தான் சரியானது என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களின் முடிவு சரியானது என்பதை எவரும் மறுக்க முடியாது. நமது அர்த்தம் தான் சரி என்றால் நமது முடிவு சரியானது என்றாகும். இதற்குத் தீர்வு காண அரபு மொழி இலக்கணம் துணை செய்யாத போது வேறு சான்றுகளின் அடிப்படையிலேயே இதற்குத் தீர்வு காண முடியும்.

காரணங்கள்

நாம் செய்யும் அர்த்தமே சரியானது என்பதற்குச் சில காரணங்கள் உள்ளன. "உள்ளங்களில் கோளாறு இருப்போர் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுவார்கள்'' என்ற வசனத்தில் இடம் பெற்ற "குழப்பத்தை நாடி'' என்ற வார்த்தைப் பிரயோகம் நமது கருத்தை உறுதி செய்கின்றது. அதாவது குழப்பம் விளைவிக்கும் தீய நோக்குடன் முதஷாபிஹ் வசனங்களை அணுகுவதற்கே இந்த வசனம் தடை விதிக்கின்றது. குழப்பம் விளைவிக்கும் தீய நோக்கின்றி அதை அணுகலாம்; விளங்கலாம் என்று இதிலிருந்து தெளிவாகின்றது.

மாற்றுக் கருத்துடையோர் செய்த அர்த்தத்தின் படி முதஷாபிஹ் வசனங்களின் பொருள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்; கல்வியில் சிறந்தவர்கள் தங்களுக்கு விளங்காவிட்டாலும் நம்பிக்கை கொண்டோம் என்று கூறுவார்கள் என வருகின்றது. அதாவது முதஷாபிஹ் வசனங்களை இறைவன் அருளியதன் காரணம் அதை விளங்க வேண்டும் என்பதல்ல, விளங்காவிட்டாலும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்து.

விளங்கினாலும் விளங்கா விட்டாலும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது தான் முதஷாபிஹ் வசனங்கள் அருளப்பட்டதன் நோக்கம் என்றால், "கல்வியில் சிறந்தவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்'' என்று இறைவன் கூற மாட்டான்.

ஏனெனில் நம்பிக்கை கொள்வது கல்வியில் சிறந்தவர்களுக்கும், கல்வியறிவு அற்றவர்களுக்கும் பொதுவான அம்சமாகும். "முஃமின்கள் நம்பிக்கை கொள்வார்கள்'' என்று கூறியிருந்தால் அவர்களது கூற்றில் ஏதேனும் நியாயம் இருக்கும்.

ஆனால் "முஃமின்கள்' என்று பொதுவாகக் கூறாமல் "கல்வியில் சிறந்தவர்கள்' என்று இறைவன் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதையும், "கற்றவர்கள்' என்று கூடக் கூறாமல், "கல்வியில் சிறந்தவர்கள்' என்று கூறியிருப்பதையும் கவனிக்கும் போது கல்வியில் சிறந்தவர்கள் அதை விளங்கி நம்பிக்கை கொள்வார்கள் என்ற கருத்தையே தருகின்றது.

திருக்குர்ஆனின் மற்றொரு இடத்தில் இறைவன், "வர்ராஸிகூன பில் இல்மி'' (கல்வியில் சிறந்தவர்கள்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறான். அந்த இடத்தைக் கவனிக்கும் போது நமது கருத்துக்கு மேலும் வலு ஏற்படுகின்றது.

அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புகின்றனர்.

அல்குர்ஆன் 4:162

ஈமான் கொள்வது பற்றிக் கூறப்படும் இந்த வசனத்தில், "கல்வியில் சிறந்தவர்கள்'' என்று கூறியதுடன், "முஃமின்களும்'' என்று பொதுவாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் நம்பிக்கை கொள்வது மட்டுமே இங்கு பிரதானமாகக் கூறப்படுகின்றது. ஆனால் 3:7 வசனத்தில் "கல்வியில் சிறந்தவர்கள்'' என்று மட்டும் கூறப்படுவதால் அவர்கள் முதஷாபிஹ் வசனங்களை விளங்கி ஈமான் கொள்வார்கள் என்பதே பொருத்தமானது என்பதை உணரலாம்.

இந்த வசனத்தை முடிக்கும் போது, "வமா யத்தக்கரு இல்லா உலுல் அல்பாப்'' என்று இறைவன் குறிப்பிடுகிறான். "அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை; பாடம் பெறுவதில்லை'' என்பது இதன் பொருள். இன்னும் பல வசனங்களிலும் இதே கருத்துள்ள வார்த்தையை இறைவன் பயன்படுத்தி இருக்கிறான். அந்தந்த வசனங்களில் கூறப்பட்டவை எப்படி அறிவுடையோரால் விளங்கிக் கொள்ள முடியுமோ அது போல் இவையும் விளங்கத்தக்கவை தான் என்பதை இதி-ருந்து அறியலாம்.

இரண்டாவது ஆதாரம்

மனித சமுதாயம் நேர்வழி பெறுவதற்காகவும், படிப்பினை பெற வேண்டுமென்பதற்காகவும் திருக்குர்ஆனை அருளியதாக இறைவன் கூறுகின்றான். நேர்வழி பெற வேண்டுமானால், படிப்பினை பெற வேண்டுமானால் நிச்சயமாக அது புரியும்படி அமைந்திருக்க வேண்டும். எவருக்குமே புரியாத மந்திர உச்சாடனங்கள் நேர்வழி காட்ட இயலாது. இந்தப் பொதுவான விதியிலிருந்து முதஷாபிஹ் வசனங்கள் விலக்குப் பெற வேண்டுமானால் அதை இறைவன் தெளிவாகக் கூறியிருப்பான்.

அதிலிருந்து விலக்கு அளிக்கவே 3:7 வசனத்தை இறைவன் அருளியிருப்பான் என்று மாற்றுக் கருத்துடையோர் கூறுவது ஏற்புடையதல்ல. விதிவிலக்கு அளிக்கும் வசனங்கள் அதைத் தெள்ளத் தெளிவாகக் கூறிவிடும். ஆனால் 3:7 வசனத்திற்கு இவர்கள் செய்த பொருளே சரியானதல்ல எனும் போது விதிவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.

முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்றோ, குர்ஆன் விளங்கும் என்ற பொது விதியிலிருந்து முதஷாபிஹ் வசனங்கள் விலக்குப் பெற்றவை என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸிலும் இல்லை.

எனவே ஏனைய வசனங்களிலும், நபிமொழிகளிலும், "குர்ஆன் வசனங்கள் விளங்கத்தக்கவையே'' என்று கூறப்படும் கருத்துக்கு ஒட்டியே 3:7 வசனத்திற்குப் பொருள் கொள்ள வேண்டும். இலக்கணமும் அதற்கு இடம் தருகின்றது. அந்த வசனத்தில் இடம் பெறும் வாசகங்களும் அதை உறுதி செய்கின்றன.

மேலும், "குர்ஆன் முழுவதும் விளங்கிடத்தக்கவை'' என்பதைக் கூறும் ஏராளமான வசனங்கள் உள்ளன. அவற்றை அப்படியே எழுதினால் கட்டுரை நீண்டு விடும் என்பதால் அந்த வசனங்களில் சிலவற்றின் எண்களை மட்டும் இங்கே தந்துள்ளோம்.

2:99, 2:159, 2:185, 2:219, 2:221, 2:242, 2:266, 3:103, 3:118, 3:138, 4:26, 4:82, 4:174, 5:15, 5:89, 6:105, 6:114, 7:52, 10:15, 10:37, 11:1, 16:89, 17:41, 17:89, 18:54, 20:2, 22:16, 22:72, 24:1, 24:18, 24:34, 24:46, 24:58, 24:59, 26:2, 27:1, 28:2, 29:49, 39:27, 41:3, 46:7, 54:17, 54:22, 54:32, 54:40, 55:2, 58:5, 65:11


இந்த வசனங்களும் இந்தக் கருத்தில் அமைந்த மற்ற வசனங்களும், திருக்குர்ஆன் விளங்கும் என்பதற்குத் தெளிவான சான்றுகளாக உள்ளன. திருக்குர்ஆனில் விளங்காதவை எவையுமே இல்லை என்பதே தெளிவு. இன்னும் பல வலுவான ஆதாரங்களைப் பார்ப்போம்.

EGATHUVAM OCT 2005