பொதி சுமக்கும் கழுதைகள்
கே.எம். அப்துந் நாசிர்
துணை முதல்வர், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்
ரமலான் மாதத்தின் சிறப்பே அம்மாதத்தில் திருமறைக் குர்ஆன் அருளப்
பெற்றது தான். ஆனால் ஒவ்வொரு வருடமும் ரமலானை அடைகின்ற நாம் எதற்காக ரமலான் சிறப்பிக்கப்பட்டதோ
அத்தகைய திருமறைக் குர்ஆனுடைய சட்டங்களை நடைமுறையில் பின்பற்றுகின்றோமா? என்றால் பெரும்பான்மை இஸ்லாமியர்களின் பதில் இதற்கு, இல்லை என்றே இருக்கும்.
தவ்ராத் சுமத்தப்பட்டு, பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே
அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக்
கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ்
நேர் வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் 62:5)
தவ்ராத் என்ற வேதத்தைப் பெற்று அவ்வேதக் கருத்துக்களை நடைமுறையில்
முறையாகப் பின்பற்றாத யூத சமுதாயத்தை அல்லாஹ், பொதி சுமக்கின்ற கழுதைக்கு உதாரணமாகக் கூறுகின்றான்.
கழுதையின் முதுகில் அழுக்கு மூட்டைகளை ஏற்றி வைத்தாலும் அது
அழுக்கு மூட்டை என்பதைச் சிந்திக்காமல் அது சுமந்து செல்லும். அது போல் அறிவு நிறைந்த
புத்தகங்களை ஏற்றினாலும் அதையும் அழுக்கு மூட்டையைப் போல் சுமந்து தான் செல்லுமே தவிர
அதிலுள்ள கருத்துக்கள் ஆழமிக்கவை என்பதை கழுதை அறியாது.
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? என்றொரு பழமொழி கூடக் கூறுவார்கள். தான் முதுகில் சுமக்கும்
பொருளின் மதிப்பை அறியாத மிருகம் தான் கழுதை. அது போன்று தான் தவ்ராத் வேதத்தைப் பெற்று
அதனை வாயளவில் மட்டும் படித்து விட்டு செயலளவில் பின்பற்றாமல் அதிலுள்ள கருத்துக்களை
மாற்றியும் மறைத்தும் வந்த யூத சமுதாயத்தை அல்லாஹ், ஏடுகளின் மதிப்பை உணராமல் வெறும் பொதி மூட்டையாகச் சுமக்கும்
கழுதைக்கு ஒப்பாகக் கூறுகிறான்.
வேதத்தை மாற்றிய வேதக்காரர்கள்
வேதக்காரர்களான யூத, கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட வேதக்
கருத்துக்களை மாற்றினார்கள்; மறைத்தார்கள்
என்பதை திருமறைக் குர்ஆன் பல்வேறு இடங்களில் தெளிவுபடுத்துகின்றது.
அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று
விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர். (அல்குர்ஆன் 2:75)
தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக "இது அல்லாஹ்விடமிருந்து
வந்தது'
என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும்
அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு
உள்ளது. (அல்குர்ஆன் 2:79)
அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம்
என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர்.
"இது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' எனவும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அறிந்து
கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:78)
அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறித்ததால் அவர்களைச் சபித்தோம்.
அவர்களின் உள்ளங்களை இறுக்கமாக்கினோம். வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள்
மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர்.
அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் துரோகத்தை நீர் பார்த்துக் கொண்டே
இருப்பீர். ஆகவே அவர்களைக் கண்டு கொள்ளாது அலட்சியப்படுத்துவீராக! நன்மை செய்வோரை அல்லாஹ்
விரும்புகிறான். ( அல் குர்ஆன் 5:13)
"நாங்கள் கிறித்தவர்கள்'' என்று கூறியோரிடமும் உடன்படிக்கை எடுத்தோம். அவர்களுக்கு அறிவுரை
கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். எனவே கியாமத் நாள் வரை அவர்களிடையே
பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தினோம்.
அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்குப் பின்னர் அறிவிப்பான்.
வேதமுடையோரே! நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களிடம் வந்து விட்டார்.
வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார்.
பலவற்றை அலட்சியம் செய்து விடுவார். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன. (அல்குர்ஆன் 5:14,
15)
மேற்கண்ட வசனங்கள் யூத, கிறித்தவர்கள் இறை வேதங்களை எப்படியெல்லாம் மாற்றினார்கள்; வளைத்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. பின்வரும் ஹதீஸ் அவர்களின் நிலையை இன்னும் மிகத்
தெளிவாக விளக்குகின்றது.
அப்துல்லாஹ் பின் உமர் (ர-) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் சென்று தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபச்சாரம்
செய்து விட்டதாகக் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில்
என்ன காண்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள்.
அதற்கவர்கள், "அவர்களை நாம்
கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள்
கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது'' என்று பதிலüத்தார்கள். உடனே (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ்
பின் சலாம் (ரலி) அவர்கள் "நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபச்சாரம் செய்தவர்களை சாகும் வரை) கல்லால் அடிக்க
வேண்டுமென்று தான் அதில் கூறப்பட்டுள்ளது'' என்று சொன்னார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்கüல் ஒருவர் "விபச்சாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை
தரப்பட வேண்டும்' என்று கூறும்
வசனத்தின் மீது தனது கையை வைத்து மறைத்துக் கொண்டு, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ்
பின் சலாம் (ரலி) அவர்கள், "உன்
கையை எடு''
என்று சொல்ல, அவர் தனது கையை எடுத்தார். அப்போது அங்கே (விபச்சாரக் குற்றத்திற்கு)
கல்லெறி தண்டனை தரும்படிக் கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள்,
"அப்துல்லாஹ் பின் சலாம் உண்மை சொன்னார்.
முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத் தான் செய்கிறது'' என்று சொன்னார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபி (ஸல்)
அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது.
அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக்
கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவள் மீது
கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை நான் பார்த்தேன்.
நூல்: புகாரி 3635
யூதர்கள் எவ்வாறு தங்களுக்கு இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதங்களை
நடைமுறைப் படுத்தாமல் அதனைப் புனிதப்படுத்த மட்டும் செய்தார்களோ அது போன்று தான் இன்றைய
இஸ்லாமிய சமுதாயத்தின் நிலையும் இருப்பதைப் பார்க்கின்றோம்.
இறைச் சட்டத்தைப் புறக்கணிக்கும் இஸ்லாமியர்கள்
மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங்களை
அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர்
(ஏக இறைவனை) மறுப்பவர்கள். (அல்குர்ஆன் 5:44)
மேற்கண்ட வசனத்தில் இறைச் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்காதவர்கள்
காஃபிர்கள் என்று திருமறைக் குர்ஆன் கூறுகின்றது. சில நேரங்களில் சில சூழ்நிலைகளில்
மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்படுவதற்கு மார்க்கம் நமக்கு அனுமதித்துள்ளது. இதனைப்
பின்வரும் வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
"நீங்கள் பொய்யர்களாக இருந்தால் இதற்குரிய தண்டனை என்ன?'' என்று அவர்கள் கேட்டனர். "யாருடைய சுமையில் அது காணப்படுகிறதோ
அவரே (அவரைப் பிடித்துக் கொள்வதே) அதற்குரிய தண்டனை. நாங்கள் அநீதி இழைத்தோரை இவ்வாறே
தண்டிப்போம்'' என்று இவர்கள் கூறினர்.
அவரது சகோதரரின் சுமைக்கு முன் இவர்களின் சுமைகளை (சோதிக்க) ஆரம்பித்தார். பின்னர்
அவரது சகோதரரின் சுமையிலிருந்து அதை வெளியே எடுத்தார். இவ்வாறே யூஸுஃபுக்கு தந்திரத்தைக்
கொடுத்தோம். அல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக்
கொள்ள முடியாதவராக இருந்தார். (அல்குர்ஆன் 12:74, 75, 76)
யூஸுஃப் நபியவர்கள் ஒரு நாட்டில் அமைச்சராக இருக்கிறார்கள்.
அந்த நாட்டின் மன்னரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அதனைச் செயல்படுத்தக் கூடிய பொறுப்பிலும்
இருக்கிறார்கள். அதே நேரத்தில் தமது நாட்டில் உள்ள சட்டப்படி தமது சகோதரரை அவர்கள்
கைப்பற்ற இயலவில்லை.
எனவே தான் தமது சகோதரர்களிடமே திருடர்களுக்குரிய தண்டனை என்னவென்று
கேட்கிறார்கள். அவரைப் பிடித்துக் கொடுப்பதே அதன் தண்டனை என்ற பதிலை அவர்களிடமிருந்து
பெற்றுக் கொண்டு அதனடிப்படையில் தம் சகோதரரைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள்.
"மன்னரின் சட்டப்படி சகோதரரை அவரால் எடுத்துக் கொள்ள முடியாமல்
இருந்தது''
என்ற வாசகம் ஒரு மன்னரின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கலாம்
என்பதற்குச் சான்றாக இருக்கிறது.
மேலும் தம் சகோதரரைத் தம்முடன் சேர்த்து வைத்துக் கொள்வதற்காகத்
தான் யஃகூப் நபியுடைய சமுதாயத்தின் சட்டம் என்னவென்று கேட்டு அதைப் பயன்படுத்துகிறார்கள்.
மற்றவர்கள் விஷயத்தில் இவ்வாறு தமது தந்தை வழியாகக் கிடைத்த சட்டத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை
என்பதும் இவ்வசனங்களிலிருந்து தெரிகிறது.
எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி புரியும் நாடுகளில் மார்க்கம், வணக்கம் தொடர்பான விஷயங்களைத் தவிர்த்து மற்ற சட்டங்களில் அந்த
ஆட்சிக்குக் கட்டுப்படுவதும், அதை
நடைமுறைப் படுத்துவதும் குற்றமில்லை என்பதற்கு இந்த வசனங்கள் சான்றாக உள்ளன.
அல்லாஹ்வின் சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும்
வசனங்கள் யாவும் அதற்கான ஆட்சி, அதிகாரம்
கிடைக்கும் போது செயல்படுத்த வேண்டியவையாகும்.
என்றாலும் இன்றைக்கு இஸ்லாமிய ஆட்சி இல்லாமல் இருந்தாலும் நடைமுறைப்படுத்த இயலக்கூடிய
இறைச் சட்டங்களையாவது நாம் பின்பற்றுகிறோமா? என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.
இறைச் சட்டத்திற்கு எதிராக இணை வைக்கும் முஸ்லிம்கள்
பல்வேறு இறை வசனங்கள் இணை கற்பிப்பது பெரும்பாவம், அதற்குக் கூலி நிரந்தர நரகம் என எச்சரிக்கை செய்கின்றன.
தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக்
கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான்
நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை
செய்தார். (திருக்குர்ஆன் 4:48)
தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக்
கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான்
நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்)
தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார். (திருக்குர்ஆன் 4:116)
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது "என் அருமை
மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! (திருக்குர்ஆன் 31:13)
"நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
(திருக்குர்ஆன் 39:65,66)
"மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். "இஸ்ராயீலின்
மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய
அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக
ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும்
இல்லை''
என்றே மஸீஹ் கூறினார். (திருக்குர்ஆன் 5:72)
பெரும்பாலான இஸ்லாமியர்கள் மேற்கண்ட வசனங்களையெல்லாம் வெறும்
வாயளவில் தான் ஓதிக் கொண்டிருக்கிறார்களே தவிர இதனை நடைமுறையில் கொண்டு வரவில்லை. இதன்
காரணமாகத் தான் இன்று இஸ்லாமியர்கள் தர்ஹா வழிபாடு, தாயத்து, தகடு, பேய், பிசாசு, மௌலிதுகள் போன்ற மூடநம்பிக்கைகளுடன் இணைந்த இணை கற்பிக்கின்ற
காரியங்களில் மூழ்கித் திளைக்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் திருமணம் போன்ற அன்றாட காரியங்கள் அனைத்திலும்
நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தல், ஆரத்தி எடுத்தல், வாழை மரம் கட்டுதல், தாலி கட்டுதல் போன்ற இணை கற்பிக்கும் காரியங்கள் எங்கும் எதிலும்
நீக்கமற நிறைந்து காணப்படுகிறது.
திருமறைக் குர்ஆன் மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்தும் அதனை
ஓதிக் கொண்டே இணை கற்பிப்பவர்கள் இறைவனின் பார்வையில் ஏட்டைச் சுமக்கும் கழுதைகள் போன்று
தான்
இறையதிகாரத்தைக் கையிலெடுத்த இஸ்லாமியர்கள்
மார்க்கத்தில் எந்த ஒரு வணக்கமாக இருந்தாலும் அதனைக் கடமையாக்குகின்ற, வழிகாட்டுகின்ற அதிகாரம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.
இறைத் தூதரும் கூட இறைவனுடைய அனுமதியின் பிரகாரம் ஒன்றைக் கூற முடியுமே அவருடைய சுய
விருப்பப்படி எதையும் செய்துவிட முடியாது.
"அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து
அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை.
"அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது' என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும்
அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.'' (அல்குர்ஆன் 12:40)
சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால்
இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.
உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர். இது (இறைவனை) அஞ்சியோருக்கு அறிவுரை. (அல்குர்ஆன்
69:44-49)
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்!
அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக ஆக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை
பெறுகிறீர்கள்! (அல்குர்ஆன் 7:3)
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ்
உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை)
மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31,
32)
மேற்கண்ட வசனங்கள், மார்க்கத்தில் இறைவன் கடமையாக்கிய சட்டங்களைத் தான் பின்பற்ற
வேண்டும்;
இறைத் தூதருக்கு மட்டும் தான் கட்டுப்பட வேண்டும் என்பதை மிகத்
தெளிவாகப் பிரகடனப்படுத்துகின்றன. ஆனால் இவ்வசனங்களையெல்லாம் ஓதக் கூடிய இஸ்லாமிய சமுதாயத்தில்
பலர் இதனை நடைமுறைப்படுத்துவதில்லை. இறைவனின் பார்வையில் ஏட்டைச் சுமக்கும் கழுதைகள்
போன்று தான் இவர்களின் நிலை உள்ளது.
இறைச் சட்டத்திற்கு நிகராக ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும்; மத்ஹபு இமாம்களின் பெயரால் கூறப்பட்டவற்றைத் தான் அந்தந்த மத்ஹபைச்
சார்ந்தவர்கள் பின்பற்ற வேண்டும்; ஆலிம்கள்
கூறுவது தான் வேதவாக்கு; தங்களுடைய
மனம் விரும்பியது தான் மார்க்கம் என்று இறை வசனங்களை முற்றிலுமாகப் புறக்கணித்தே வாழ்கின்றனர்
என்பதை மறுப்பதற்கில்லை.
வேதத்தை மறந்து வட்டியில் வீழ்ந்த சமுதாயம்
நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும்
நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.
- அல்குர்ஆன் 3:130
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல்
பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை
அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த
பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம்
உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி
கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின்
இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை
கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!
அவ்வாறு நீங்கள் செய்யா விட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்!
நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும்
அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.
- அல்குர்ஆன்: 2:275-279
வட்டி வாங்குவோர் நிரந்தர நரகத்தை அடைவார்கள் என்பதும் அல்லாஹ்வுக்கு
எதிராகப் போர்ப் பிரகடனம் செய்கிறார்கள் என்பதும் சாதாரணமான எச்சரிக்கை அல்ல. இறைவனை
அஞ்சுகிற எந்த முஸ்லிமும் நிரந்தர நரகத்தில் தள்ளுகின்ற காரியத்தை ஒருக்காலும் செய்ய
மாட்டான்.
ஆனால் வேத வரிகளை நடைமுறைப்படுத்த மறந்த இஸ்லாமியர்களில் பலர்
இன்றைக்கும் வட்டி வாங்கி உண்பவர்களாகத் தான் உள்ளனர். குர்ஆனை ஓதித் தான் வட்டிக்
கடையையே துவக்கவும் செய்கின்றனர். குர்ஆன் எச்சரிக்கை செய்த பிறகும் அதை நடைமுறைப்படுத்தாத
இவர்கள் ஏட்டைச் சுமக்கும் கழுதைகளாகத் தான் உள்ளனர்.
வல்ல நாயனின் வரிகளை மறந்து வரதட்சணையில் வீழ்ந்த சமுதாயம்
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!
(அல்குர்ஆன்4:4)
விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம்
செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம்
இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து
விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தி அடைந்தால் உங்களுக்குக் குற்றம்
இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞான
மிக்கவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:24)
கள்ளக் கணவர்களை ஏற்படுத்தாதவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கற்பொழுக்கமுடையோராகவும் உள்ள அடிமைப் பெண்களுக்கு மணக் கொடைகளை
நியாயமான முறையில் வழங்கி விடுங்கள்! (அல்குர்ஆன் 4:25)
அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள்
மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. (அல்குர்ஆன் 60:10)
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் பெண்களுக்கு மஹர் கொடுத்து மணம்
முடிக்கச் சொல்கின்றன. ஆனால் இதற்கு மாற்றமாக லட்சக்கணக்கில் தொகையாகவும், நகையாகவும் பெண்ணிடமிருந்து வாங்கி மணம் முடிக்கும் அவல நிலை
உள்ளது. இறை வேதத்தை வாயளவில் ஓதிக் கொண்டே வரதட்சணையை ஆமோதிக்கும் சமுதாயம் இவ்விஷயத்தில்
ஏட்டைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பாகவே உள்ளனர்
படைத்தவனின் வரிகளை மறைத்து பாகப்பிரிவினை
இறந்தவனின் சொத்துக்களை எவ்வாறு பங்கிட வேண்டும் என்பதற்குரிய
சட்டங்களை 4:11, 12, 176 ஆகிய வசனங்களில்
இறைவன் நமக்கு வரையறுத்துக் கூறியுள்ளான். இச்சட்டங்களைப் பின்பற்றாதவர்களை இறைவன்
பின்வருமாறு மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்கிறான்.
இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன்
நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
இதுவே மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்)
நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை
உண்டு. (அல்குர்ஆன் 4:13, 14)
இறைவன் சொன்ன அடிப்படையில் பாகப் பிரிவினை செய்யாதவர்கள் நிரந்தர
நரகத்திற்குச் சொந்தக்காரர்கள் என்று இறை மறை எச்சரிக்கை செய்த பிறகும் இன்றைக்குப்
பெரும்பாலான இஸ்லாமியர்கள் இறைச் சட்டத்தை ஓதிக் கொண்டே அதற்கு மாற்றம் செய்கின்றனர்.
இத்தகையவர்கள் பொதி சுமக்கும் கழுதைக்கு ஒப்பானவர்கள் தான்.
தனியோனின் கட்டளைகளைத் தகர்த்த முத்தலாக்
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம்
(மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ்
படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால்
அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக்
கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு
ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 2:228)
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு)
நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு
நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும்
(சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால்
தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள்
என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும்
குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை
மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 2:229)
இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு தடவை என்பது திரும்பப்
பெறுவதற்குரிய இரண்டு தலாக்குகள் ஆகும். அதாவது இவ்விரு தலாக்குகளுக்குப் பிறகு மூன்றாவது
முறை தலாக் விட்டால் அவர் தனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ள முடியாது. எனவே இத்தலாக்
ஒன்றன் பின் ஒன்றாக நிகழ வேண்டும் என்பதை இந்த வசனம் விளக்குகிறது.
ஒருவன் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அவன் மூன்று வாய்ப்புக்களையும்
பயன்படுத்தி விட்டான், அவன் மனைவியை
நிரந்தரமாகப் பிரிந்து விட்டான் என்று மத்ஹபுகளில் சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இரண்டு தலாக்குகள் என்று கூறவில்லை. மாறாக
தலாக் என்பது இரண்டு தடவைகள் என்று கூறுகின்றான். குறிப்பிட்ட காலக் கெடு முடிவடையாத
வரை ஒரு தடவை என்பது பூர்த்தியாகாது. ஒருவர் தன் மனைவியை நோக்கி ஒரே சமயததில், உன்னை மூன்று முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் முன்னூறு
முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் அவர் ஒரு தடவை தலாக் கூறியதாகத் தான்
பொருள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில்
மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது
அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 2689
"நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) காலத்திலும் உமர்
(ரலி) அவர்களின் ஆட்சியில் மூன்று ஆண்டு காலத்திலும் மூன்று (தலாக் என்பது) ஒரு தலாக்காகவே
கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று அபுஸ்ஸஹ்பா என்பவர் இப்னு அப்பாஸிடம் கேட்டார். அதற்கு
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: தாவூஸ்
நூல்: முஸ்லிம் 2690, 2691
அப்து யஸீத் மகனான ருகானா தனது மனைவியை ஒரே அமர்வில் முத்தலாக்
விட்டு விட்டார். பின்னர் அதற்காகப் பெரிதும் கவலைப் பட்டார். அவரிடம் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், "நீ
அவளை எப்படி தலாக் விட்டாய்?'' என்று
கேட்டார்கள். நான் அவளை முத்தலாக் விட்டேன் என்று அவர் பதில் கூறினார். அதற்கு நபி
(ஸல்) அவர்கள், "ஒரே அமர்விலா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். "அது ஒரு
தலாக் தான். நீ விரும்பினால் அவளை மீட்டிக் கொள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் அவளை மீட்டிக்
கொண்டார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத் 2266
ஒரே நேரத்தில் முத்தலாக் என்பதை ஆதரிப்பவர்கள் இறைவனின் பார்வையில்
ஏடுகளைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பானவர்கள் தான்.
இறை மறையை மறந்து இருட்டு திக்ர்
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக
ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)
இறைவனை எவ்வாறு நினைவு கூர வேண்டும் என்ற ஒழுங்கு இங்கே கூறப்படுகிறது.
முத-ல்,
பணிவுடனும், அச்சத்துடனும் இறைவனை நினைவு கூர வேண்டும். இரண்டாவது, நாவால் மட்டும் இறைவனின் பெயரைக் கூறாமல் உள்ளத்திலும்
நினைவு கூர வேண்டும். மூன்றாவதாக, உரத்த
சப்தமின்றி நினைவு கூர வேண்டும்.
இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பலர் ராத்திபு என்ற
பெயரிலும், ஹல்கா என்ற பெயரிலும்
பெரும் கூச்சலுடனும், ஆட்டம், பாட்டத்துடனும் அல்லாஹ்வை நினைவு கூர்வதாக நினைத்துக்
கொண்டு பாவத்தைச் சுமந்து வருகின்றனர். இறைச் சட்டத்திற்கு எதிரான இவர்கள் ஏட்டைச்
சுமக்கும் கழுதைகளே!
குர்ஆனுக்கு எதிரான கூட்டு துஆ
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை
அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)
இவ்வசனம் இறைவனிடம்
எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையைக் கற்றுத் தருகிறது. மனிதனிடம்
கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக
அல்லாஹ்விடம் பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.
பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது
முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய்
விடும்.
பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல்
யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.
மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின்
ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது. இதி-ருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது
முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும். ஒவ்வொருவருக்கும் தனித் தனித்
தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.
ஆனால் குர்ஆன் வரிகளை ஓதிக் கொண்டே கூட்டு துஆ ஓதுபவர்கள்
இறைவனின் பார்வையில் ஏட்டைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பானவர்கள் என்பதில் எந்தச்
சந்தேகமும் இல்லை.
இது மட்டுமல்லாமல் தொழுகையை நிலைநாட்டுதல், ஜகாத்தை நிறைவேற்றுதல், பெற்றோர் நலம் பேணுதல், உறவைப் பேணுதல் நற்பண்புகளைக் கடைப்பிடித்தல், தீய பண்புகளை விட்டொழித்தல் போன்ற பல விஷயங்களில் நாம்
வேதத்தைப் பெயரளவில் மட்டும் தான் படித்து வருகிறோமே தவிர நடைமுறையில் அவற்றை நாம்
பின்பற்றுவதில்லை.
திருமறைக் குர்ஆன் இறங்கிய மாதத்தை அடைந்து அதற்காக
அம்மாதம் முழுதும் நோன்பு நோற்ற நாம், இவ்வேதத்தை நடைமுறையில் பின்பற்றக் கூடிய நன்மக்களாக ஆக
வேண்டும்.
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இறை வேதத்தை(யும் நபிவழியையும்) கற்றறிந்த மக்களே! நீங்கள்
(அதில்) உறுதியோடு இருங்கள். அவ்வாறு இருந்தால் நீங்கள் (எல்லா வகையிலும்) அதிகமாக
முன்னுக்குக் கொண்டு செல்லப்படுவீர்கள். (அந்த நேர் பாதையை விடுத்து) வலப் பக்கமோ
இடப் பக்கமோ (திசைமாறிச்) சென்றீர்களானால், வெகுதூரம் வழி தவறிச் சென்று விடுவீர்கள்.
(நூல்: புகாரி 7282)
EGATHUVAM OCT 2008