Apr 9, 2017

படைப்பின் தொழில் நுட்பம் - பி.எஸ். அலாவுதீன்

படைப்பின்  தொழில் நுட்பம் - பி.எஸ். அலாவுதீன்

(மறைந்த அறிஞர் பி.எஸ். அலாவுதீன் அவர்களின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களிலிருந்து இக் கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.)

மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான்.

அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்.

அல்குர்ஆன் 87:1, 2, 3

இந்த வசனங்களில் படைப்பினங்களைப் பற்றிய ஒரு நியதியை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அனைத்துப் பொருட்களையும் படைத்தான்; பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்தினான்; அவற்றின் தொழில்நுட்பத்தை முழுமைப்படுத்தினான். அதற்குப் பொருத்தமான, நிறைவான எல்லையை அவை அடையும்படிச் செய்தான்.

ஒவ்வொரு படைப்புக்கும் அதனதன் வழியையும் அவற்றின் பணியையும் அவற்றின் இலக்கையும் நிர்ணயித்தான். பின்னர் அவற்றை எதற்காகப் படைத்தானோ அந்தக் குறிக்கோளை அவை அடைவதற்கான வழியை அவற்றிற்குக் காட்டினான். அவை உருவானதற்கான நோக்கத்தை அவை உணரும்படிச் செய்தான். அவை வாழும் காலம் வரை அவற்றுக்கு பொருத்தமானவற்றையும் தேவையானவற்றையும் நிர்ணயம் செய்து அவற்றை அடையும் வழியைக் காட்டினான்.

இந்த நியதி இப்பிரபஞ்சத்தின் எல்லாப் பொருட்களிலும் காணப்படுகின்றது. அவை எவ்வளவு பெரிய பொருளாயினும் சரி! மிகச் சிறிய ஒன்றாயினும் சரி! அற்பமான பொருளானாலும் சரி! பிரமாண்டமான பொருளானாலும் சரி! இப்பேரண்டத்தின் ஒவ்வொரு பொருளுமே மிகுந்த தொழில் நுட்பத்துடன் சீராக அமைக்கப்பட்டு முழுமையாக வடிவமைக்கப் பட்டுள்ளன.

அதனதன் தொழிலை நிறைவேற்றுவதற்கு ஏற்பவே ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன. அவை இருப்பதற்கு ஓர் எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த எல்லையை அவை சென்றடைவதற்கு மிக எளிதான வழியும் மார்க்கமும் அவற்றுக்கு இலகுவாக்கப்பட்டுள்ளன.

இப்படி இப்பிரபஞ்சத்தின் எல்லாப் பொருட்களுமே முழுமையாக சீர் செய்யப்பட்டுத் தான் திகழ்கின்றன. அவை இணைக்கப்படுவதற்கு முன்னர், தனிமங்களாக இருந்த போது, தனிமங்களின் பணிகளை நிறைவேற்ற வழிவகைகள் இலகுவாக்கப்பட்டிருந்தது. அதைப் போன்று அவை இணைக்கப்பட்டு, சேர்மங்களாக்கப்பட்ட போதும் அந்தச் சேர்மங்களின் பணிகளையும் செவ்வனே நிறைவேற்றுவதற்குரிய வழிகள் சுலபமாக்கப்பட்டுள்ளன.

மிகப் பெரும் சூரிய மண்டலம் அதன் பிற கோள்களுடன் எப்படிப்பட்ட அமைப்புடனும், சீருடனும் இணைக்கப்பட்டு ஓர் ஒழுங்குடன் பணியாற்றிக் கொண்டிருக்கின்றதோ அதே போன்ற அமைப்பும், சமச் சீரான நிலையும் ஒரு தனித்த அணுவிலும் காணப்படுகின்றது. அந்த அணுவின் மின்னாற்றலுக்கு இடையிலும் புரோட்டான் (நேர் மின்மம்), எலக்ட்ரான் (எதிர் மின்மம்) ஆகியவற்றுக்கிடையிலும் காணப்படுகின்றது.

பல உயிரணுக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டு, முறையாக வடிவமைப்பட்டுள்ள ஓர் உயிருள்ள படைப்பு எப்படிப்பட்ட ஒழுங்குடன் செயல்படுகின்றதோ அதைப் போன்றே ஒரு தன்னந்தனியான உயிரணுவும், முழுமையான வடிவமைப்புடனும் செயல் திறனுடனும் தனது பணியைச் செவ்வனே நிறைவேற்றுவதற்குரிய முன்னேற்பாடுகளுடன் திகழ்கின்றது.

ஒரு தன்னந்தனியான அணுவுக்கும், மிகப் பெரிய சூரிய மண்டலமாக அது உருவாவதற்கும் மத்தியில் எத்தனையோ படித்தரங்கள் இருக்கின்றன. அதே போல் ஒரேயொரு உயிரணுவுக்கும், பல உயிரணுக்கள் இணைந்து உருவாகும் ஓர் உயிர்ப் படைப்புக்கும் மத்தியில் எத்தனையோ படித்தரங்கள் இருக்கின்றன. அத்தனை படித்தரங்களின் போதும் அவை முறையோடும், சீரோடும் அமைக்கப்பட்டிருப்பதையும், தனித்தனியாக அவை இருந்த போது காணப்பட்ட அந்த ஒழுங்கமைவு அத்தனை படித்தரங்களிலும் இருப்பதையும் நாம் காணலாம்.

அதைப் போன்றே அவற்றின் அமைப்பு, இயக்கம், விதி ஆகிய அனைத்திலுமே இதே நியதியை நாம் கடைசி வரை காணலாம். இந்த ஆழமான பேருண்மைக்கு இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே நிதர்சனமான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

இந்தப் பிரபஞ்சத்தின் தாளம் தவறாத சுருதி லயத்தைச் செவிமடுக்கும் ஒவ்வொரு மனிதனின் மனதிற்கும் இந்த உண்மைகள் ஒட்டு மொத்தமாகப் புலப்படும். திறந்த மனதுடன் இந்தப் பிரபஞ்சத்தின் முற்ற வெளிகளில் நடமாடும் ஒவ்வொரு பொருட்களையும் நாம் ஆராயும் போது இந்தப் பேருண்மைகள் பளிச்சென்று புலப்படும். இந்த உள்ளுணர்வு எல்லாக் கால கட்டத்தின் போதும் வாழ்கின்ற மனிதனுக்கும், முயன்று அறிவு பெற நினைக்கும் மனிதர்கள் அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று தான்.

எப்போது ஒரு மனிதன் தனது இதய வாசல்கள் அனைத்தையும் திறந்து வைத்துக் கொண்டு. அவனது நரம்புகளை எல்லாம் விழிப்புடன் வைத்துக் கொண்டு இப்பிரபஞ்சத்தின் இயக்கத்தைச் செவிமடுக்க முயல்கிறானோ அப்போது அவன், அதன் தாளம் தவறாத சுருதியைக் கேட்கவே செய்வான்.

மனிதன் இப்பிரபஞ்சத்தை நோக்கும் முதல் நோக்கில் அவனுக்கு ஏற்படும் அந்த உள்ளுணர்வை, தனித்தனி உதாரணங்கள் மூலம் அவன் அறிய முயலும் போதும், நுட்பமாக ஆராய முற்படும் போதும் தெளிவாக அவனால் புரிந்து கொள்ள முடியும்.

அறிவு இறை நம்பிக்கையைத் தூண்டுகின்றது

நியூயார்க் கல்விச் சங்கத்தின் தலைவர் கிரேஸி மோரிஸன் என்பார், "மனிதன் தனித்து இயங்க முடியாது'' என்று ஒரு நூல் எழுதியிருக்கின்றார். அந்நூலுக்கு விண்ணியல் ஆய்வாளர் பேராசிரியர் மஹ்மூது ஸாலிஹ் என்பார், "அறிவு இறை நம்பிக்கையைத் தூண்டுகின்றது'' என்ற தலைப்பில் ஒரு விரிவுரை எழுதியிருக்கின்றார். அந்த நூலில் அவர் எழுதியுள்ள கருத்துக்களைப் பார்ப்போம்.

வழிதவறாத பறவைகள்

ஆர்க்டிக் பிரதேசத்தில் டெர்ன் என்றழைக்கப்படும் நீள மூக்குடைய கடற்பறவை ஒன்று உள்ளது. இந்தப் பறவை, கோடை காலத்தில் ஆர்க்டிக் பிரதேசத்திலும், குளிர் காலத்தில் அண்டார்டிகா பகுதிக்கும் செல்கின்றது. இதற்காக இந்தப் பறவை பறந்து செல்லும் தூரம் 22,000 மைல்கள் ஆகும்.

முத்தாரம் 01.07.1984, பக்கம் 7

பறவைகளுக்கு, அவை தமது இருப்பிடங்களை விட்டு எவ்வளவு தூரத்துக்குப் பறந்து சென்றாலும் மீண்டும் அவற்றின் இருப்பிடங்களுக்கே திரும்பி வந்து விடுகின்ற இயல்புணர்ச்சி உண்டு. நம் வீட்டு வாசலில் கூடு கட்டி வாழும் தொண்டைப் பகுதி புடைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு வகைச் சிட்டுக்குருவி இலையுதிர் காலத்தில் தென்திசை நோக்கி புறப்பட்டுச் செல்கின்றது. அவை எத்தனை ஆயிரம் மைல்கள் தூரம் சென்றாலும் அடுத்து வரும் வசந்த காலத்தில் தமது கூடுகளுக்குத் திரும்பி விடுகின்றன.

அதே போன்று அமெரிக்க நாட்டுப் பறவைகளில் பெரும்பாலானவை செப்டம்பர் மாதத்தில் தென் திசை நோக்கி, கூட்டம் கூட்டமாகப் பறந்து போய் விடுகின்றன. கடல் கடந்து, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அவை பறந்து போய் விடுகின்றன. ஆயினும் அவை தமது இருப்பிடங்களுக்குத் திரும்பி வரும் போது வழியைத் தவற விடுவதில்லை. திரும்பி வருவதற்குப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.

செய்தி கொண்டு செல்லும் புறாக்கள் அவற்றுக்குப் பரிச்சயமில்லாத புதிய சப்தங்களைக் கேட்டு மிரண்டு தடுமாறிப் போனாலும், பயம் தெளிந்ததும் தமது இருப்பிடங்களை நோக்கி மறக்காமல் வந்து விடுகின்றன.

காற்று வீசும் போது மரங்களிலும், கூடுகளிலும் பட்டு வரும் வாசனைகளை வைத்துக் கொண்டு தனது கூட்டுக்குத் திரும்பி விடும் தேனீயானது, காற்று வீசாமல் சலனமற்று இருக்கும் போதும் தனது கூட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்து சேர்ந்து விடுகின்றது.

எவ்வளவு நெடுந்தூரம் சென்றாலும் தனது இருப்பிடத்திற்குத் திரும்பி விடும் இந்த இயல்புணர்ச்சி மனிதனுக்குள் மிகப் பலவீனமாகவே காணப்படுகின்றது. ஆயினும் அவன் திசையறி கருவி போன்ற கருவிகளால் தனது குறைவான ஆற்றலை முழுமைப்படுத்திக் கொள்கிறான். பறவைகள், பிராணிகளுக்கு இயற்கையாக அமைந்திருக்கும் அந்த இயல்புணர்ச்சியின் தேவையை மனிதன் தனது பகுத்தறிவின் மூலம் ஈடு செய்து கொள்கின்றான்.

பார்வைப் புலனும் பகுத்தறிவும்

சில நுண்ணிய புழுப் பூச்சியினங்களுக்கு, மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே காணத்தக்க சின்னஞ்சிறிய கண்கள் இருக்கின்றன. அந்தக் கண்களின் ஆற்றலையும் வரம்பையும் நம்மால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியாது. பருந்து, கழுகு போன்ற பறவைகளுக்கு, தொலைநோக்கி (டெலஸ்கோப்) போன்று ஒரு பொருளை அண்மையிலும், உருப் பெருக்கியும் காட்டும் கண்கள் இருக்கின்றன.

இங்கேயும் தனது இயந்திர சாதனங்களால் மனிதன் அவற்றை மிகைத்து விடுவதைப் பார்க்க முடிகின்றது. அவனுக்கு இருக்கின்ற பார்க்கும் சக்தியைப் போன்று இருபது லட்சம் மடங்கு அதிகமான சக்தி இருந்தால் மட்டுமே பார்க்க முடியும் அளவுக்குத் தொலைவில் இருக்கின்ற நட்சத்திரங்களைக் கூட டெலஸ்கோப் மூலம் அவனால் பார்க்க முடிகின்றது. மேலும் அவன் தனது மின்னியல் நுண்ணோக்காடி மூலம் சாதாரணமாகப் பார்க்க முடியாத நுண்ணிய பாக்டீரியாக்களையும் பார்க்கிறான்.

நமது கிழட்டுக் குதிரையை இருட்டு நேரத்தில் எங்காவது கொண்டு போய் விட்டு விட்டு நாம் மட்டும் திரும்பி வந்து விடுவோமானால், வழியில் எவ்வளவு கும்மிருட்டு நிலவிய போதும் அது வழியை அறிந்து நமது வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுகின்றது.

எவ்வளவு வெளிச்சமற்ற நிலையிலும் அதனால் பார்க்க முடிகின்றது. வெளிச்சமே இல்லாவிட்டாலும் பாதையிலும், அதன் இரு மருங்கிலும் காணப்படும் வெப்ப அளவின் மாற்றத்தை அது அனுமானித்துக் கொள்கின்றது. வழியில் காணப்படும் மிகக் கடினமான வெப்பத்தின் ஒளிக்கதிர்களால் மிகக் குறைந்த அளவுக்கே உணர்ச்சிக்கு ஆளாகும் தனது கண்களால் அது எப்படியோ வழியை அறிந்து, வந்து சேர்ந்து விடுகின்றது.

அது போன்று எவ்வளவு இருட்டாக இருந்தாலும், எங்கோ செடி கொடிகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கின்ற எலியின் உடலில் காணப்படும் கதகதப்பான வெப்பத்தை அறிந்து ஆந்தை, எலியை வேட்டையாடி விடுகின்றது. மனிதர்களாகிய நாம் இருட்டில் ஒரு பொருளைக் காண்பதற்கு ஆற்றல் இல்லாதவர்களாக இருந்தாலும் நமது பகுத்தறிவால் கண்டுபிடித்த மின்சார விளக்குகள் மூலம் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி இரவையே பகலாக்கி விடுகின்றோம்.

தேனீக்களின் கூட்டு வாழ்க்கை

தேனீக்களில் பாட்டாளித் தேனீ, ஆண் தேனீ, ராணித் தேனீ என்று மூன்று வகைகள் இருக்கின்றன. பெண் தேனீக்களில் கருவுறாதவை பாட்டாளித் தேனீக்களாகவும், கருவுற்றவை ராணித் தேனீக்களாகவும் கருதப்படுகின்றன. அந்தப் பாட்டாளித் தேனீக்கள் இனப் பெருக்கத்திற்காகப் பலதரப்பட்ட பருமன்களிலும், அளவுகளிலும் தேன் கூட்டில் பல அறைகளை உருவாக்குகின்றன. அவற்றில் அளவில் சிறியதான அறைகளைத் தொழிலாளித் தேனீக்களுக்கும், அவற்றை விடப் பெரிய அறைகளை ஆண் தேனீக்களுக்கும், கருவுற்றிருக்கும் ராணித் தேனீக்களுக்கு ஒரு பிரத்தியேகமான அறையும் ஆயத்தப்படுத்துகின்றன.

ராணித்தேனீ கருவுறாத முட்டைகளை ஆண் தேனீக்களின் அறைகளிலும், சினைப்படுத்தப்பட்ட முட்டைகளை பெண் தேனீக்களின் அறைகளிலும் எதிர்கால ராணித் தேனீக்களின் அறைகளிலும் இடுகின்றது. உழைக்கும் தேனீக்களான அந்தப் பெண் தேனீக்கள் அந்த முட்டையிலிருந்து புது இனப்பெருக்கம் ஏற்படும் வரை நீண்ட காலம் அவற்றைக் கவனத்துடன் காக்கின்றன.

முட்டைகளிலிருந்து வெளிப்படும் சின்னஞ்சிறு தேனீக்களுக்குத் தேனுடன் மகரந்தத் தூளைச் சேர்த்து மென்று எளிதில் செரிப்பதற்கேற்ற உணவாக்கி அவற்றுக்கு ஊட்டுகின்றன. அவை ஆண், பெண் என இனம் மாறும் அந்தக் குறிப்பிட்ட காலம் வரை தேனையும் மகரந்தத் தூளையுமே உணவாக்கி வளர்க்கின்றன. அவ்வாறு இன மலர்ச்சி ஏற்பட்டதும் அந்தப் பணியை நிறுத்திக் கொள்கின்றன. அவற்றில் பெண் தேனீக்களாக மாறுபவை இப்போது உழைக்கும் பாட்டாளித் தேனீக்களாக மாறி விடுகின்றன.

ராணித் தேனீயின் பிரத்தியேக அறையில் இருக்கின்ற பெண் தேனீக்களுக்கு மட்டும் தான் மெல்லப்பட்டு செரிப்பதற்கேற்றவாறு பக்குவப்படுத்தப்பட்ட உணவு ஊட்டப்படுகின்றது. இவ்வாறு பிரத்தியேகமாகக் கவனிக்கப்படும் அந்தப் பெண் தேனீக்கள் மட்டும் தான் ராணித் தேனீக்களாக மாறும் வாய்ப்பைப் பெறுகின்றன. அவை மட்டும் தான் சினையூட்டப்பட்ட முட்டைகளையும் ஈனுகின்றன. அவ்வாறு தொடர்ந்து சினையூட்டப்பட்ட முட்டைகளை ஈனும் பணி சில குறிப்பிட்ட அறைகளில் மாத்திரம் தான் நிகழ்கின்றன.

எப்படி செரிப்பதற்கேற்றவாறு உணவை மாற்றித் தரும் அந்த ஆச்சரியமான பணியைச் சில குறிப்பிட்ட தேனீக்களே ஏற்றிருக்கின்றனவோ அதே போல சில குறிப்பிட்ட முட்டைகளிலிருந்து மட்டும் தான் இனப் பெருக்கமும் நிகழ்கின்றது. உண்மையில் இது நமது ஆராய்ச்சிக்கும் தனிச் சிறப்பியல்பைப் பற்றிய ஆய்வுக்கும் உரிய ஒன்றாகத் திகழ்கின்றது.

அந்த உணவின் விளைவுகளில் எப்படி இந்த அதிசயம் நிகழ்கின்றது என்பதைக் கண்டுபிடித்து அதை நமது ஆராய்ச்சியுடன் பொருந்த வைத்துப் பார்ப்பதும் அவசியமாகப் படுகின்றது.

இந்த மாற்றங்கள் ஒரு பிரத்தியேகமான முறையில் தேனீக்களின் கூட்டு வாழ்க்கையைச் சுற்றி வியாபித்துக் கொண்டிருக்கின்றன. தேனீ என்ற ஒன்று உருவாவதற்கோ, உருவான பின் அது உயிர் வாழ்வதற்கோ இந்தச் சாமர்த்தியமும், அறிவும் அவசியமில்லை என்றாலும் அவற்றின் கூட்டு வாழ்க்கைக்கு அவை அவசியமாகப்படுகின்றன.

இதன்படிப் பார்த்தால், சில குறிப்பிட்ட பாத்திரங்களில் மட்டும் சினைப் பெருக்கத்திற்கு ஏற்றவாறு உணவை நிலை மாற்றும் அந்தக் கலையில் தேனீ, மனிதனை வென்று விடுகின்றது என்றே தோன்றுகின்றது.

நாயின் மோப்ப சக்தி

நாய் அதற்கு வழங்கப் பட்டிருக்கும் ஒழுகும் மூக்கினால், உயிர்ப் பிராணிகளை மோப்பம் பிடித்து அறியும் ஆற்றல் பெற்றிருக்கின்றது. அதனுடைய குறைந்த அளவிலான மோப்ப சக்தியை வலிமைப்படுத்திக் கொள்வதற்கு மனிதனிடமிருப்பது போன்ற புதுமைக் கருவிகள் எதுவும் அதனிடம் இல்லை. இருப்பினும் நம்முடைய சாதாரண நுகரும் சக்தியால் அறிய முடியாத, மைக்ரோஸ்கோப் மூலமே காண முடியுமளவுக்கு நுண்ணிய அணுக்களையும் நாயினால் உணர முடிகின்றது.

நம்மைத் தவிர எல்லாப் பிராணிகளாலும் நமது அதிர்வு மண்டலங்களுக்கு அப்பாலிருந்து வரும் பெரும்பாலான ஒலிகளைச் செவியுற முடிகின்றது. நமது கேட்கும் சக்தியை வென்று விடத்தக்க அவ்வளவு நுண்ணிய செவிப்புலன்கள் அவற்றுக்கு இருக்கின்றன. ஆயினும் இன்று மனிதனால் கண்டுபிடிப்புச் சாதனங்கள் மூலம் பல மைல்களுக்கு அப்பால் பறந்து போகும் ஒரு கொசுவின் ஒலியைக் கூடக் கேட்க முடிகின்றது. மேலும் அவனால் தனது கருவிகள் மூலம் சூரியனின் ஊதாக் கதிர்களின் வீழ்ச்சி ஒலியைக் கூட பதிவு செய்து விட முடிகின்றது.

ஒரு வகை நீர்ச்சிலந்தி தனது சிலந்தி வலை நூலால் பலூன் போன்ற வடிவத்தில் ஒரு கூடு கட்டுகின்றது. அதைத் தண்ணீருக்கு அடியிலுள்ள ஏதேனும் ஒரு பொருளில் மாட்டி வைத்து விட்டுப் பிறகு வெளியே வந்து தனது சாமர்த்தியத்தால் காற்றுக் குமிழிகளை உண்டாக்கி அவற்றைத் தனது உடலிலுள்ள ரோமங்களில் திரட்டிக் கொண்டு தண்ணீருக்குள் எடுத்துச் சென்று அவற்றை அந்தக் கூட்டுக்குள் அவிழ்த்து விடுகின்றது. இப்படியே பலமுறை முயன்று அந்தக் குமிழிகளால் அந்தக் கூட்டை ஊத வைக்கின்றது. ஊதிய பலூனைப் போன்று அது மாறியதும் அதனுள் குஞ்சு பொறித்து அவற்றை வளர்க்கின்றது. இங்கே அதனுடைய வலை நெய்யும் திறமையையும் அதனுடைய பொறியியல் திறமை மற்றும் வானியல் ஆய்வு ஆகியவற்றையும் கண்டு வியக்கின்றோம்.

பிறந்த இடம் நோக்கி...

ஆற்றிலே பிறக்கின்ற சின்னஞ்சிறு வஞ்சிர மீன், ஆற்றை விட்டு வெளியேறி கடலில் பல ஆண்டு காலம் நீந்தித் திரிந்து விட்டுப் பிறகு அது பிறந்த அந்தக் குறிப்பிட்ட ஆற்றுப் பகுதிக்குத் திரும்பி வந்து விடுகின்றது. அவற்றில் பெரும்பான்மையானவை ஆற்றுப் பெருக்கு ஏராளமாக இருக்கும் ஆற்றுப் பகுதி வழியாக எதிர் நீச்சல் போட்டு தமது பிறப்பிடத்தை வந்தடைகின்றன.

இப்படிப்பட்ட எல்லைகளை வகுத்துக் கொண்டு, தான் பிறந்த இடத்தை வந்து சேர்ந்து விடுகின்ற திறமையை அதற்கு அளித்தது எது? அவ்வாறு கடலை விட்டு வெளியேறி அது நீச்சல் போட்டு வந்து கொண்டிருக்கும் போது நீரின் வேகத்தால் வேறொரு சிற்றோடைக்கு அடித்துச் செல்லப்பட்டு விட்டால் உடனடியாக, "இது தான் பிறந்த இடமல்ல' என்பதைக் கண்டு கொண்டு ஆற்றைக் குறுக்கே கிழித்துக் கொண்டு வேறு பக்கத்திற்கு வந்து, பிறகு அங்கிருந்து நீரோட்டத்திற்கு எதிராக நீந்தி முடிவில்  எப்படியோ தனது பிறப்பிடத்தை வந்து அடைந்து விடுகின்றது.

விலாங்கு என்பது ஈல் வகையைச் சேர்ந்தது. அது பாம்பல்ல; ஒரு வகை மீன் தான்! பாம்பு போல ஷேப் கொண்டு நழுவும் மீன். முதுகெலும்பு உண்டு. எப்போதும் தண்ணீரில் வாழும். நதிக் கரையில் மிகச் சில நேரம் வாழ்ந்தாலும் தன் வாழ்நாட்களில் ஒரு பகுதியையாவது கடலில் கழிக்கும். ஏனெனில் முட்டையிடுவதற்கு அவற்றுக்கு உப்புத் தண்ணீர் வேண்டும். எனவே நதிவாழ் ஈல் மீன்களால் கடலுக்குப் போவதற்கென்றே சில சமயம் தரையில் ஊர்ந்து செல்ல முடிகின்றது. அப்படிக் கடல் நோக்கித் தரையில் ஊர்ந்து செல்கையில் அவற்றுக்கு மூச்சு வாங்குவதற்காக அவற்றின் சருமத்தின் மேலிருக்கும் ஒரு விதமான ஜவ்வு பயன்படுகின்றது.

இந்த மாதிரி அல்லல் படுவதெல்லாம் பெண் ஈல்கள் தான். முட்டையிடுவதற்காக நாடு கடந்து கூட கடலுக்கு வந்து சேரும். பெண் ஈல்களைக் கடலோர ஆண் ஈல்கள் (அளவில் சற்று சிறியவை) "வா நாமெல்லாம் ஜாலியாக நீந்தலாம்'' என்று அழைத்துச் செல்ல, பெண்கள் இந்தப் பேச்சைக் கேட்டு ஆண்களுடன் நூறு மைல் கணக்கில் நீந்தி கடலுக்குள் சந்தோஷப்பட்டு முட்டையிட்டு விட்டுச் செத்துப் போகும். ஐரோப்பிய மீன்கள் இம்மாதிரி முட்டையிட பெர்முடா வரை வருவதும் உண்டு. அங்கே இட்ட முட்டைகள் லார்வா பருவத்தில் நீரோட்டத்தில் மறுபடி ஐரோப்பிய நதிகளின் முகவாய் வரை சென்று அங்கே ஒரு முழு மீனாக மாறுகின்றன.

ஏன்? எதற்கு? எப்படி? -  சுஜாதா

ஜூனியர் விகடன், 18.07.1984

விலாங்கு மீன் என்ற இந்த ஆச்சரியமான படைப்பு நன்கு முழுமையாக வளர்ந்து பருவம் அடைந்ததும் அவை வாழும் பலதரப்பட்ட குட்டைகளையும், ஆறுகளையும் விட்டு வலசை புறப்பட்டு விடுகின்றன. அவை ஐரோப்பாவைச் சேர்ந்தவையாக இருந்தால் ஐரோப்பியப் பெருங்கடலில் பல ஆயிரம் மைல்களைக் கடந்து நெடுந்தொலைவிலுள்ள ஆழமான பகுதிகளுக்குச் சென்று அங்கே முட்டையிட்டு விட்டு இறந்து விடுகின்றன.

கொந்தளிப்பான தண்ணீரைத் தவிர வேறு எதனையும் அறிந்திருக்க முடியாத, அந்த முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் அவற்றின் தாயைப் போலவே அந்தப் பெருங்கடலில் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, எங்கிருந்து அவற்றின் தாய் தனது பயணத்தைத் துவங்கியதோ அதே இடத்திற்கு வந்து சேர்ந்து விடுகின்றன. பின்னர் அங்கிருந்து பல்வேறு குட்டைகள், குளங்கள், ஆறுகள், சிறு கடல்கள் இவற்றை நோக்கிச் சென்று விடுகின்றன.

எனவே தான் எந்த வகைத் தண்ணீரும் இந்தக் கடல் விலாங்கு மீன்களுக்கு ஏற்புடையதாக அமைந்து விடுகின்றது. அவற்றின் நெடும் பயணத்தின் போது மிகப் பெரும் கடல் கொந்தளிப்பு, வெள்ளம், புயற்காற்று ஆகியவற்றை அவை எதிர்கொண்ட போதும் உறுதியாய் அவற்றைச் சமாளிக்கின்றன. இடைவிடாது அடித்துக் கொண்டிருக்கும் கடல் அலைகளுக்கு ஈடு கொடுத்து, தமது தாயின் இருப்பிடத்தை வந்து சேர்ந்து விடுகின்றன.

இப்போது அவை வளரத் தலைப்படுகின்றன. முழுமையாக வளர்ந்து பருவம் அடைந்ததும் கண்ணுக்குத் தெரியாத ஒரு விதி அவற்றை, அவை எங்கு பிறந்தனவோ அதே இடத்திற்கு மீண்டும் வலசை புறப்படச் செய்கின்றது. இவ்வாறு அவற்றை அவற்றின் பிறப்பிடத்தை நோக்கி உந்தித் தள்ளும் அந்த உந்து விசை எங்கிருந்து பிறக்கின்றது?

இது வரை அமெரிக்க நாட்டு விலாங்கு மீன் வகைகள் ஐரோப்பியக் கடல்களில் வேட்டையாடப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததில்லை. அது போன்றே ஐரோப்பிய நாட்டு விலாங்கு மீன் வகைகள் அமெரிக்க நீர் நிலைகளிலும் வேட்டையாடப் பட்டதில்லை. அது தனது நெடும் பயணத்தின் போது கடந்து வந்த தூரத்தை ஈடு செய்வதற்காக ஒரு இயற்கையான சக்தி, அந்த ஐரோப்பிய நாட்டு மீனை வளர்ப்பதில் ஒன்றோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளோ தாமதிக்க வைக்கின்றது. ஏனெனில் ஒரு அமெரிக்க விலாங்கு மீன் கடந்து வந்த தூரத்தை விட ஐரோப்பிய விலாங்கு மீன் அதிக தூரத்தைக் கடந்து வர வேண்டியிருக்கின்றது.

பொதுவாக எல்லா வகை விலாங்கு மீன்களிலும் இருக்கின்ற அணுக்கள் எல்லாம் ஒன்றாகவே இருந்தால் அவை அனைத்திற்கும் வழிகாட்டுதலும், அதைச் செயல்படுத்துவற்கு அவசியமான எண்ணங்களும் ஒன்றாகவே இருக்க வேண்டுல்லவா? இது எப்படி ஐரோப்பிய விலாங்குகளுக்கும், அமெரிக்க விலாங்குகளுக்கும் வேறுபட்டது? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சேட்டிலைட் இல்லாத செய்திப் பரிமாற்றம்

டோசி டோசி என்று ஒருவகை வண்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? ஆண் வண்டுக்கு மோகம் ஏறும் போது, பக்கத்தில் உள்ள கல்லைத் தட்டுமாம். சாதாரண மைக்கினால் கூட வாங்கிக் கொள்ள முடியாதபடி அவ்வளவு மென்மையாகத் தட்டுமாம். ஐந்து மைலுக்கு அப்பால் இருக்கும் பெண் வண்டுக்கு அது எட்டி, அது புரிந்து கொண்டு பறந்து வருமாம். (ஆதாரம்: இயான் மெஸ்ஸிடர் எழுதிய நூல்)

குமுதம், 28.061984,

அரசு பதில்கள், பக்கம்: 16

பால்கனி வழியாக நம் வீட்டு மாடத்தில் ஒரு பெண் வண்ணத்துப் பூச்சியைக் காற்று கொண்டு வந்து சேர்த்து விட்டால், கண்டு கொள்ள முடியாத ஒரு சமிக்ஞையை அது உடனே அனுப்புகின்றது. அதன் துணையான ஆண் வண்ணத்துப் பூச்சி எங்கோ தொலை தூரத்தில் பறந்து கொண்டிருந்த போதும் அதன் சமிக்ஞையைப் புரிந்து கொண்டு உடனடியாக அதற்கு மறுமொழியும் தந்து விடுகின்றது.

அந்தக் காதலர் இருவரையும் தடுமாறச் செய்வதற்காக நமது முயற்சியால் புதுப்புது வாசனைகளை உண்டாக்கினாலும் அந்த வண்ணத்துப் பூச்சிகளின் இந்தச் செய்திப் பரிமாற்றத்தை நம்மால் குலைக்கவே முடியாது. அறிவுத் திறன் குறைந்த இந்தச் சாதாரண படைப்புக்கு ஏதாவது வானொலி நிலையம் இருக்கின்றதா? அல்லது அந்த ஆண் வண்ணத்துப் பூச்சியிடம் அதன் துணை அனுப்பும் செய்திகளைப் பெறுவதற்கான ஏரியல் எதுவும் இருக்கின்றதா? அல்லது அவை ஒலி அலைகளை அதிர்வுறச் செய்த அந்த அதிர்வுகளின் மூலம் பதில்களைப் பெறுகின்றனவா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தொலைபேசி, வானொலி ஆகியவை நமது அதிசயமான கண்டுபிடிப்புகள் தான். மிக விரைவான செய்திப் பரிமாற்றத்திற்கு அவை நமக்கு வழிகோலுவது உண்மை தான். ஆயினும் அந்தச் செய்திப் பரிமாற்றங்களுக்கு உரிய சாதனங்களும், குறிப்பிட்ட இடங்களும் நமக்குத் தேவைப் படுகின்றனவே!

எனவே இந்த வகையில் அவையெல்லாம் தேவைப்படாமல் தமது செய்திப் பரிமாற்றங்களை நடத்திக் கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிகள் நம்மை வென்று விட்டதாகவே சொல்ல வேண்டும்.

தாவரங்களின் வேலையாட்கள்

தாவரங்கள், தாம் இவ்வுலகில் நீடித்திருப்பதற்காகச் சிலரை, அவர்கள் விரும்பாவிட்டாலும் பணியாளர்களாக நியமித்து அவர்களிடமிருந்து தந்திரமாக வேலை வாங்கிக் கொள்கின்றன. ஒரு மலரிலிருந்து இன்னொரு மலருக்கு மகரந்தப் பொடிகளை எடுத்துச் செல்லும் வண்டுகள், காற்று மற்றும் நடமாடும், பறக்கும் எல்லாப் பொருட்களும் தங்களை அறியாமலேயே தாவரங்களுக்காக இந்தப் பணியை மேற்கொள்கின்றன. அவற்றின் மூலம் தாவர இனங்கள் விருத்தியடைந்து கொண்டும் அதன் வித்துக்கள் பரப்பப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.

அவ்வளவு தூரம் போவானேன்? தலை சிறந்த மனிதனைக் கூட அந்தத் தாவர இனங்கள் இந்தப் பொறியில் சிக்க வைத்து விடுகின்றன. மனிதனும் அவற்றைப் பெருக்குவதற்கு அருமுயற்சிகள் செய்பவனாகவே திகழ்கின்றான். கலப்பையும் கையுமாகவே காட்சியளிக்கின்றான். விதைக்க, நாற்று நட, நீர் பாய்ச்ச, அறுவடை செய்ய என்பன போன்ற பல கடமைகளுக்கு அவன் ஆளாகி விடுகின்றான். அவன் மாத்திரம் இந்தக் கடமைகளில் கவனம் செலுத்தவில்லை என்றால் பட்டினி அவனது தலைவிதியாகி விடும். காலம் காலமாக மனிதன் உருவாக்கியிருக்கின்ற நாகரீகங்கள் சிதைந்து, பூமி அதன் பழைய இயற்கை நிலைக்கு மாறி விடும்.

உறுப்புகளை வளர்க்கும் உயிரினங்கள்

கடல் நண்டு போன்ற எத்தனையோ பிராணிகள், அவற்றின் கால்கள் அல்லது கொடுக்குகளில் ஒன்றை இழந்து விட்டால் தனது உடலில் ஓர் உறுப்பு குறைந்து போய் விட்டதைத் தெரிந்து கொண்டு உடலிலுள்ள உயிரணுக்களையும், மரபு வழிக் காரணிகளையும் தூண்டுகின்றன. இழந்த உறுப்புக்குப் பதிலாக வேறொரு காலையோ அல்லது கொடுக்கையோ வளரச் செய்து இழப்பை ஈடு செய்து கொள்கின்றன.

எப்போது அந்த உயிரணுக்கள் சேர்ந்து காலாக, கொடுக்காக மாறுகின்றனவோ அப்போது அவை தமது செயல்பாட்டை, அதாவது வளர்ச்சியை நிறுத்திக் கொள்கின்றன. இழந்த உறுப்பு வளர்ச்சியடைந்த உடன் தமது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் நேரம் வந்து விட்டது என்பதை அந்த உயிரணுக்கள் எப்படியோ ஒரு முறையில் தெரிந்து கொள்கின்றன.

ஆக்டோபஸ் என்ற பல கால்களையுடைய ஒரு கடல்வாழ் உயிரி இரண்டாகப் பிளந்து விட்டாலும், அந்த இரண்டு துண்டங்களில் ஒரு துண்டத்தின் வழியாகத் தன்னைச் சீர் செய்து கொள்ளும் ஆற்றல் மிக்கதாகத் திகழ்கின்றது.

உணவுப் பண்டங்களில் காணப்படும் ஒரு வகைப் புழுக்களின் தலையை நாம் கொய்து விட்டால் விரைந்து இன்னொரு தலையை உருவாக்கிக் கொள்ள அதனால் முடியும்.

நமது உடலில் ஏற்படும் வெட்டுக் காயங்களின் உயிரணுக்களைத் தூண்டி முன்பிருந்தபடியே அவை இணைந்து கொள்ளும்படிச் செய்வதற்கு நம்மாலும் முடிகின்றது. என்றாலும் ஒரு புதிய கையையோ, அல்லது சதைப் பகுதியையோ, எலும்பு, நகம், நரம்புகளையோ இழந்து விடும் போது அவற்றை மீண்டும் உருவாக்க உயிரணுக்களை எவ்வாறு தூண்ட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது எப்போது சாத்தியமாகும்? அந்நிலையை மனிதன் அடைவது சாத்தியம் தானா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

உடலில் இழந்த அல்லது சேதமுற்ற பகுதி புதிதாக உருவாவது எவ்வாறு? எனும் புதிருக்கு விளக்கமளிக்கக் கூடிய வியத்தகு உண்மை ஒன்று இங்கே இருக்கின்றது. உயிரணுக்கள் தமது முதல் கட்டங்களின் போது பல கூறுகளாகப் பிரிகின்றன. அவ்வாறு அவை பிரியும் போது அவற்றில் ஒவ்வொரு அணுவும் முழுமையான வேறொரு உயிரைப் படைக்க ஆற்றல் மிக்கதாய் மாறி விடுகின்றது. முதல் உயிரணு இரண்டாகி, பின்னர் அவ்விரண்டும் பிரிந்து நான்காகி இப்படியே பிரிந்து கொண்டு போனாலும் ஒன்று போல் தோற்றமளிக்கக் கூடிய இரண்டிற்குள்ளும் அவற்றைப் பற்றிய எல்லா விபரங்களும் அடங்கியிருக்கின்றன. இன்னும் எத்தனையோ செய்திகள் அவை ஒவ்வொன்றின் உள்ளும் பதிவாகியிருப்பதை நாம் நுண்ணோக்காடியில் காணலாம்.

மொத்தத்தில் தனித்தனியான ஒவ்வொரு அணுவுக்குள்ளும் அந்தப் படைப்பின் முழுமையான தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் நமது உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுக்குள்ளும் நம்மைப் பற்றிய எல்லா தகவல்களும் அடங்கியிருப்பதால் அந்த உயிரணுக்கள் ஒவ்வொன்றிற்குள்ளும் அதன் ஒவ்வொரு இழைகளிலும் நாம் இருக்கிறோம் என்பதில் மட்டும் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.

விதையில் ஒரு சாப்ட்வேர்

அந்தப் புத்தகத்தின் அடுத்த பாடத்தில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

கருவாலி மரத்தின் கொட்டை ஒன்று நிலத்தில் விழுகின்றது. காற்றடித்து, பூமியின் ஏதோ ஒரு பள்ளத்தில் உருண்டு போய் விழுந்து கிடக்கும் அந்தக் கொட்டையைக் கனமான பழுப்பு நிறத்தையுடைய அதன் ஓடு பாதுகாக்கின்றது. வசந்த காலம் வந்ததும் அந்தக் கொட்டையின் மேல் ஓட்டை உடைத்துக் கொண்டு முளை விட ஆரம்பிக்கின்றது.

ஒரு முட்டைக்குள் எப்படி அந்த முட்டையின் மரபு வழிக் காரணிகள் பல அடங்கியிருக்கின்றனவோ அதே போல அந்தக் கொட்டைக்குள் இருக்கும் அதன் பருப்பு, அதன் பாரம்பரியத்தைப் பற்றிய எல்லாச் செய்திகளும் அடங்கிய மென்பொருளாக, சாப்ட்வேராக அமைந்துள்ளது. அந்தப் பருப்பின் வழியாக அது உணவு உட்கொள்ள ஆரம்பிக்கின்றது. தனது வேர்களை மண்ணுக்குள் பதிக்கின்றது. இப்போது அங்கே ஒரு சிறு கன்றும் பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு கருவாலி மரமும் உருவாகி நிற்பதை நாம் பார்க்கிறோம்.

அந்தக் கருவாலி மரக் கொட்டைக்குள்ளிருந்து வெளி வரும் முளைக்குள் பல மில்லியன் மரபு வழிக் காரணிகள் அமைந்திருக்கின்றன. அவை இலை, கிளை, பழம், கொட்டை, கொட்டையின் ஓடு அனைத்தையும் உருவாக்குகின்றன. அது உருவாக்கும் ஒவ்வொன்றும் அந்தக் கொட்டை எந்தக் கருவாலி மரத்தினுடைய கொட்டையோ அதே மரத்தின் பாகங்களுக்கு அப்படியே ஒத்திருக்கின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உலகில் தோன்றிய முதல் கருவாலி மரத்தினுடைய கொட்டையும், பழமும், இலையும், கிளையும் எப்படி இருந்தனவோ அப்படியே தான் இத்தனை மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரும் இருக்கின்றன. கொஞ்சமும் மாறுபடவில்லை.

வழிகாட்டப்படும் உயிரணுக்கள்

எந்த உயிருள்ள படைப்பில் இருக்கின்ற உயிரணுக்களாக இருந்தாலும் அவை தம்மை அந்தப் படைப்பினுடைய தசையின் ஒரு கூறாகப் புனைந்து கொள்ள வேண்டிய அவசியமுடையவையாக இருக்கின்றன. அன்றாடம் உராய்வினாலும் தேய்மானத்தினாலும்  சிதைந்து கொண்டிருக்கின்ற உடலின் மேல் தோலின் ஒரு கூறாகத் தம்மைத் தியாகம் செய்து கொள்ள வேண்டிய அவசியத்திற்கு உயிரணுக்கள் ஆளாகின்றன.

பற்களுக்குப் பளபளப்பைத் தரும் இனாமல் பூச்சாகவோ, கண்களுக்குத் தெளிவையும் பளபளப்பையும் தரும் திரவமாகவோ அல்லது மூக்கு, காது போன்ற அங்கங்களை உருவாக்குவதில் பங்கேற்க வேண்டிய அவசியம் உடையவையாகவோ இருக்கின்றன.

மேலும் ஒவ்வொரு செல்லும் தன்னை அந்தந்த வடிவங்களுக்கு ஏற்பப் புனைந்து கொள்வதுடன் அதனதன் முக்கியமான பணியை நிறைவேற்றுவதற்குரிய தனித் தன்மைகள் பெற்றுத் திகழ்வதும் அவசியமாகும்.

ஆனால் எந்தெந்த உயிரணு வலது கையாக மாறக் கூடியவை, எவை இடது கையாக மாறக் கூடியவை என்பதையெல்லாம் யூகித்து அறிவது சிரமம். ஆயினும் ஏதோ ஓர் உயிரணு இடது காதின் ஒரு கூறாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில் மற்றொன்று வலது காதின் கூறாக மாறிக் கொண்டிருக்கின்றது.

இநத உயிரணுக்களின் செயல்பாட்டினை ஆராயும் போது பல்லாயிரக்கணக்கான உயிரணுக்களிடம், மிகச் சரியான ஒன்றை மிகச் சரியான தருணத்திலும் மிகச் சரியான இடத்திலும் செய்ய வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளதைப் போல் தெரிகின்றது.

குளவிகளின் இனப் பெருக்கம்

இந்த உலகில் எத்தனையோ வித விதமான படைப்புகள் காணப்படுகின்றன. அந்தப் படைப்புகள் பல்வேறு வடிவங்களில் சிறந்த உள்ளுணர்வையும், அறிவுத் திறத்தையும் அல்லது நமக்கே புரியாத ஒரு தகுதியையும் புலப்படுத்துபவையாகத் திகழ்கின்றன.

உதாரணமாக குளவிகளுக்கு இனப் பெருக்கக் காலம் வந்ததும் ஆண் குளவி ஒரு வெட்டுக்கிளியைப் பிடித்து, அதில் எந்த இடத்தில் குத்தினால் அது உணர்விழந்து விடும் என்பதைத் தெரிந்து, அந்தப் பொருத்தமான இடத்தில் ஒரு குத்து குத்தி அதை உணர்விழக்கச் செய்கின்றது.

உணர்விழந்த அந்த வெட்டுக்கிளி பாதுகாப்பாக வைக்கப்பட்ட மாமிசத்தைப் போல் உயிருடன் பத்திரமாக இருக்கின்றது. பிறகு ஒரு குழி தோண்டி அதில் அந்த வெட்டுக்கிளியைப் போட்டு விடுகின்றது.

இப்போது பெண் குளவி வந்து மிக நுட்பமாக அந்த வெட்டுக் கிளியின் உடலில் எங்கே துளையிடப்பட்டுள்ளதோ அந்தப் பொருத்தமான இடத்தில் முட்டையிட்டுப் பின்னர் குழியை மூடிவிட்டுப் பறந்து போய் விடுகின்றது.

புழு, பூச்சியினங்களை உணவாக உட்கொண்டு தான் குளவிகள் உயிர் வாழ்கின்றன. ஆனால் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் புழு, பூச்சிகளைக் கொன்று அதைத் தின்று தான் உயிர் வாழ வேண்டும் என்றால் அதன் பாடு ஆபத்தாக முடிந்து விடும். அதற்கு அவசியமில்லாமல் தனது குஞ்சுகள் இந்த வெட்டுக்கிளியின் மாமிசத்தையே உணவாக உட்கொள்ளட்டும் என்றெல்லாம் சிந்திக்காமல் தன்னிச்சையாகக் கூட அந்தக் குளவி இந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை தனது குஞ்சு உயிர் வாழ்வதற்காக இம்முறையைத் தான் குளவிகள் பின்பற்றி வருகின்றன.

அவ்வாறு அந்தக் குஞ்சுகளின் உணவுக்கான முன்னேற்பாடுகளை அது செய்து வைக்கவில்லை என்றால் இம்மண்ணில் குளவி இனமே இல்லாது அழிந்து போயிருக்கும். மேலோட்டமாகத் தெரியும் இந்த ரகசியத்திற்கு இது வரை எந்த விளக்கமும் தெரியவில்லை. ஆயினும் இதை ஒரு தற்செயலான செயல் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியவில்லை.

முட்டையிட்டு முடிந்ததும் பெண் குளவி குழியை மூடி விட்டு மகிழ்ச்சியாகப் பறந்து போய், பிறகு மடிந்து விடுகின்றது. அதுவோ அதன் முன்னோர்களோ இந்தச் செயலைப் பற்றி ஒரு நாளும் சிந்தித்ததில்லை. தமது குஞ்சுகளுக்கு அடுத்து என்ன நேரிடப் போகின்றது என்ற அறிவும் அவற்றுக்கு இல்லை. அந்தக் குழிக்குள் குஞ்சு என்கின்ற ஒன்று வரப் போகின்றது என்பதோ அதுவும் நம்மைப் போன்றே வாழ்ந்து நம்மைப் போன்றே தனது இனத்தின் விருத்திக்காகப் பாடுபட்டுப் பிறகு மடியும் என்பதோ அவற்றுக்குத் தெரியாது.

எறும்புகளின் அறிவாற்றல்

ஒரு வகை எறும்பு இனத்தில் தொழிலாளி எறும்புகள் குளிர் காலங்களில் பிற எறும்புகளின் உணவுக்காகச் சின்னச் சின்ன வித்துக்களை இழுத்து வந்து புற்றுக்களில் சேர்க்கின்றன. புற்றுக்குள் தானியங்கள், வித்துக்கள் போன்றவற்றை அரைப்பதற்கென்றே ஒரு கிடங்கை அந்த எறும்புகள் உருவாக்குகின்றன.

அங்கே குடியிருக்கும் எறும்புகளுக்கு தானியங்களை அரைத்து உண்ணுவதற்கேற்ற வகையில் முன்னேற்பாடுகள் செய்து தருவதற்கான பொறுப்பை, பெரிய தாடைகளையுடைய சில எறும்புகள் ஏற்றுக் கொள்கின்றன. அது ஒன்று தான் அந்த எறும்புகளின் வேலை. இலையுதிர் காலம் வரும் போது அந்தக் கிடங்கிலுள்ள எல்லா தானியங்களும் அரைத்து முடிக்கப்பட்டு விடுகின்றன. இப்போது பெரிய எண்ணிக்கையுடைய அந்த எறும்புகளின் தலை சிறந்த பணி முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டுள்ள அந்த உணவைப் பாதுகாப்பது ஒன்று தான்.

இன்னும் சில வகை எறும்புகளை அவற்றின் உள்ளுணர்வோ அல்லது அறிவுத் திறமோ எதுவோ ஒன்று அவற்றின் உணவுக்காகவும் வசிப்பதற்காகவும் புல் வீடுகளை வளர்க்கச் சொல்லித் தூண்டுகின்றது. புல்லால் ஆன அந்தக் குடில்களே அவற்றிற்கு உணவாகவும் பயன்படுவதால் அவற்றைத் தோட்ட வீடுகள் என்றும் சொல்லலாம்.

அவை தேன் கூடுகளுக்கு இடர் விளைவிக்கும் சில குறிப்பிட்ட கம்பளிப் புழுக்களையும் பூச்சிகளையும் வேட்டையாடி உண்ணுகின்றன. அந்தப் புழுக்களும் பூச்சிகளும் தான் அவற்றுக்கு மாமிசம் வழங்கும் ஆடு மாடுகளாகும். அந்தப் புழுக்களிலிருந்து தேனைப் போல் வடியும் ஒரு திரவத்தையும் அந்த எறும்புகள் உணவாகக் கொள்ளுகின்றன.

சில எறும்புகள் அவற்றிலேயே சிலவற்றைப் பிடித்துத் தமக்கு அடிமைகளாக்கிக் கொள்கின்றன. வேறு சில எறும்புகள் தமக்குக் குடில் அமைத்துக் கொள்ளும் போது இலை தழைகளை தமக்குத் தேவையான பருமனுக்கு ஏற்ப வெட்டிக் கொள்கின்றன.

சில தொழிலாளி எறும்புகள் ஓய்வாகத் தமது கை, கால்களை ஓரிடத்தில் கிடத்திக் கொண்டு படுத்து விடும் போது, பட்டுப் புழுக்களைப் போல் பட்டு நூல் நூற்கவும் அவற்றால் நெய்யவும் தெரிந்த கூடுகளில் வாழும் ஒரு வகைச் சிற்றெறும்புகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றன. சில குட்டி எறும்புகளுக்கு அவற்றுக்கான கூடுகளை உருவாக்கிக் கொள்ளத் தெரியாத போது அதன் சமுதாயம் பாடுபட்டு அதற்காக ஒரு கூட்டை உருவாக்கித் தருகின்றது.

வழிகாட்டியவன் யார்?

எந்த உயிரணுக்களிலிருந்து எறும்புகள் உருவாகின்றனவோ அவற்றிடம் இந்தச் சிக்கல் நிறைந்த பணிகள் எல்லாம் எவ்வாறு ஒப்படைக்கப்படுகின்றன?

நிச்சயம் அங்கே அவற்றிற்கெல்லாம் இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்குரிய வழிகாட்டும் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இத்துடன் பேராசிரியர் மஹ்மூது ஸாலிஹ் அவர்களின் "அறிவு, இறை நம்பிக்கையைத் தூண்டுகிறது' என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்ட கருத்துக்கள் முடிகின்றன.

ஆம்! நிச்சயம் அந்த எறும்புகளுக்கும் அவைகளல்லாத சிறிய, பெரிய பிற படைப்புகளுக்கும் ஒரு படைப்பாளன் இருக்கிறான்; அவன் தான் அவற்றைப் படைத்து அவற்றிற்குச் சரியான வழியையும் காட்டுகின்றான்.

அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்.

அல்குர்ஆன் 87:2, 3

அந்தப் பேராசிரியரின் நூலிலிருந்து நாம் அளித்த எடுத்துக் காட்டுக்கள் உயிரினங்கள், பறவைகள், புழு பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றின் உலகங்களைப் பற்றி மனிதன் பதிவு செய்து வைத்திருக்கின்ற ஆய்வுகளின் ஒரு சிறிய பகுதி தான். இவையல்லாமல் இவை போன்ற இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளின் தொகுப்புகள் இருக்கின்றன.


நம் கண்களுக்குத் தெரிகின்ற இந்த மிகப் பெரும் பிரபஞ்சத்தைப் பற்றி மிகக் குறைவிலும் குறைவாகத் தான் நாம் தெரிந்திருக்கிறோம். அதனையும் தாண்டி இன்னும் எத்தனையோ உலகங்களும் இருக்கின்றன. சாமானியமான நமது மனிதப் படைப்பு புரிந்து கொள்ள முடியுமான அளவுக்கு மட்டுமே இறைவன் அவற்றைப் பற்றி நமக்கு அறிவிக்கின்றான்.

EGATHUVAM OCT 2008