Apr 10, 2017

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு – 6

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு – 6
பி. ஜைனுல் ஆபிதீன்

முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்களால் விளங்கிக் கொள்ளத்தக்கவையே என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்து வருகிறோம்.

மூன்றாவது ஆதாரம்

அல்லாஹ் தன் திருமறையில் முதஷாபிஹ் வசனங்களைப் பற்றி இரண்டு இடங்களில் குறிப்பிடுகின்றான். முதலாவது இடம் நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் 3:7 வசனமாகும்.

முதஷாபிஹ் பற்றிக் கூறும் மற்றொரு வசனத்தை நாம் ஆய்வு செய்யும் போது முதஷாபிஹ் என்பது மனிதர்களால் விளங்கிக் கொள்ளத்தக்கதே என்ற கருத்து மேலும் உறுதியாகின்றது.

அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அவை திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், முதஷாபிஹானதாகவும் உள்ளன. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை.

அல்குர்ஆன் 39:23

முதஷாபிஹான வசனத்தைக் கேட்பதால் இறையச்சம் உடையவர்களின் மேனி சிலிர்த்துப் போகும் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகின்றான். மேனி சிலிர்த்தல் என்ற வார்த்தைப் பிரயோகம் எல்லா மொழிகளிலும், ஒரு விஷயம் தெளிவாக விளங்கி உள்ளத்தில் ஊடுறுவுவதற்கே பயன்படுத்தப்படுகின்றது.

முதஷாபிஹ் வசனங்களைக் கேட்பதால் இறையச்சமுடையோரின் மேனி சிலிர்க்கின்றன என்றால் அந்த வசனங்கள் விளங்குவதுடன் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றவும் செய்யும் என்பது தெளிவாகின்றது.

மேனி சிலிர்க்கும் என்று கூறுவதுடன் இறைவன் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மை அடைகின்றன என்றும் குறிப்பிடுகிறான். ஒன்றுமே புரியாவிட்டால் அதைக் கேட்டவுடன் இறை நினைவில் உள்ளங்கள் இளகி விடுமா? முதஷாபிஹ் வசனங்கள் விளங்கும் என்பதற்கு மேலும் ஒரு சான்றாக இது அமைந்துள்ளது.

மேலும் இதே வசனத்தில், குர்ஆன் முதஷாபிஹான வசனங்களைக் கொண்டதால் அதை அழகான செய்தி என்றும் இறைவன் கூறுகின்றான். முதஷாபிஹாக இந்த வேதம் அமைந்திருப்பது அதன் சிறப்புத் தகுதி என்று சிலாகித்துக் கூறுகின்றான். எவருக்கும் விளங்காமல் அமைந்திருப்பதை இறைவன் ஒரு சிறப்புத் தகுதியாகக் குறிப்பிட்டிருப்பானா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்த வாசகமும், முதஷாபிஹ் விளங்கத்தக்கவையே என்பதை உறுதிப்படுத்துகின்றது.

மேற்கண்ட வசனத்தை மிகவும் கவனமாக ஆராயும் போது, 3:7 வசனத்திற்கும் நாம் செய்த பொருளை இது உண்மைப் படுத்துவதைக் காணலாம். இறையச்சமுடையவர்களின் மேனி சிலிர்த்து விடும் என்ற கூற்றின் மூலம் இறையச்சமுடையவர்கள் இதை விளங்கிக் கொள்வார்கள் என்பதை இறைவன் தெரிவிக்கின்றான். அதே போல் 3:7 வசனத்தில், "கல்வியில் சிறந்தவர்கள் முதஷாபிஹ் வசனங்களை விளங்கிக் கொள்வார்கள்' என்று கூறுகின்றான்.

இறையச்சமுடையோர் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவதும், கல்வியில் சிறந்தோர் என்று 3:7 வசனத்தில் குறிப்பிடுவதும் ஒரே வகையினர் தான்.

ஏனெனில் மற்றொரு வசனத்தில், "அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்கள் தான்'' (35:28) என்று கூறுகின்றான். இந்த வகையில் இரு வசனங்களும் ஒரு பொதுவான அம்சத்தைக் கொண்டிருக்கின்றன.

3:7 வசனத்தில், "உள்ளத்தில் வழிகேடு இருப்பவர்கள் குழப்பத்தை நாடி முதஷாபிஹ் வசனங்களைத் தவறாகக் கையாள்வர்' என்றும், கல்வியில் சிறந்தவர்கள் சரியான பொருளைப் புரிந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிட்ட இறைவன், மேற்கண்ட 39:23 வசனத்திலும் அதே கருத்தைத் தெரிவிக்கிறான்.

"இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை'' என்று அந்த வசனத்தை அல்லாஹ் நிறைவு செய்கின்றான்.

அதாவது முதஷாபிஹ் வசனங்களின் மூலம் நேர்வழி பெறுவோரும் உள்ளனர். வழிகேட்டில் வீழ்ந்து கிடப்போரும் உள்ளனர் என்று தெரிவிக்கின்றான்.

திருக்குர்ஆனின் சில வசனங்கள் வேறு சில வசனங்களுக்கு விளக்கவுரையாக அமைந்திருக்கும் என்ற அடிப்படையில் 3:7 வசனத்தில் இருவேறு முரண்பட்ட அர்த்தங்கள் செய்ய இடமிருந்தாலும் 39:23 வசனம், முதஷாபிஹ் பற்றிய நிலையைத் தெளிவாக, இரண்டு கருத்துக்கு இடம் தராத வகையில் விளக்குகின்றது. இந்த வசனத்தையும் இணைத்து 3:7 வசனத்திற்குப் பொருள் செய்யும் போது இரண்டு வசனங்களும் முதஷாபிஹ் வசனங்கள் பற்றி ஒரே முடிவை அறிவிப்பதை உணரலாம்.

(3:7 வசனத்திலும், 39:23 வசனத்திலும் முதஷாபிஹாத், முதஷாபிஹ் என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் மொழி பெயர்ப்புகளில் இரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் செய்யப்பட்டுள்ளதை அலட்சியப்படுத்தி விட்டு, இரண்டு இடங்களிலும் அரபி மூலத்தைக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

நான்காவது ஆதாரம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அணைத்து "இறைவா! இவருக்கு உன் வேத (ஞான)த்தைக் கற்றுத் தருவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 75

"இறைவா இவரை மார்க்க விஷயத்தில் விளக்கமுடையவராக ஆக்குவாயாக! மேலும் இவருக்குத் தஃவீலை (உண்மையான விளக்கத்தை) கற்றுக் கொடுப்பாயாக!'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது அஹ்மத், இப்னு ஹிப்பான், தப்ரானி ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனையில், "இந்த வேதத்தில் முஹ்கமானவைகளைக் கற்றுக் கொடு!'' என்று கூறாமல், இந்த வேதத்தைக் கற்றுக் கொடு என்று பொதுவாகவே குறிப்பிடுகின்றார்கள். முஹ்கம், முதஷாபிஹ் உட்பட இரண்டு வகையான வசனங்களையுமே இது எடுத்துக் கொள்ளும் என்பதை எவரும் மறுக்க முடியாது.

முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை அறிந்து கொள்ளும் அறிஞர்களில் நானும் ஒருவன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதையும், மேற்கண்ட நபிமொழியையும் கவனிக்கும் போது, நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை முதஷாபிஹ் பற்றியதே என்று அறிய முடிகின்றது. ஏனெனில் முஹ்கம் வசனங்களின் பொருளை அனைவராலும் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

முதஷாபிஹ் வசனங்களின் பொருளை விளங்குவது தான் சிலரால் மட்டும் இயலக்கூடிய காரியம். நபி (ஸல்) அவர்கள் விஷேசமாகப் பிரார்த்தனை செய்திருப்பதால் முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்திற்காகவே துஆச் செய்தார்கள் என்று உணரலாம்.

3:7 வசனத்திலும், நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட துஆவிலும் தஃவீலஹு, அத்தஃவீல் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பது இதை மேலும் உறுதி செய்கின்றது.

இந்த ஆதாரமும் முதஷாபிஹ் வசனங்களை அனைவரும் விளங்க முடியாவிட்டாலும், சிலரால் விளங்க முடியும் என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றது.

ஐந்தாவது ஆதாரம்

திருக்குர்ஆனை இறை வேதம் என்று நம்பாது அதை பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களை இறைவன் மறுமையில் நிறுத்தி விசாரிப்பான். அப்போது அவர்களை நோக்கி, "எனது வசனங்களைப் பற்றி முழுமையாக அறியாமல் அதைப் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தீர்களா? அல்லது வேறு என்ன தான் செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று (இறைவன்) கேட்பான் (27:84) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

"நீங்கள் என் வசனங்களை அறியாமல்'' என்று இறைவன் குறிப்பிடாது, "என் வசனங்களை முழுமையாக அறியாமல்'' என்று கூறுகின்றான். இந்த வாசகம், எதையும் விட்டு விடாமல் முழுமையாக விளங்கிக் கொள்வதற்கே அரபி மொழியில் பயன்படுத்தப்படுகின்றது. சிலவற்றை விளங்கி, சிலவற்றை விளங்காமல் இருப்பதை, முழுமையாக அறிதல் என்று கூற முடியாது. திருக்குர்ஆனில் இதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள கீழ்க்கண்ட இடங்களைப் பார்வையிடுக!

65:12, 72:28, 27:22, 18:91, 18:68, 2:255, 20:110

என் வசனங்களை முழுமையாக அறியாமல் பொய்யென்று கருதிக் கொண்டிருந்தீர்களா? என்ற கேள்வியின் மூலம் இறை வசனங்களை முழுமையாக அறியாமல் இருப்பவர்களைக் கண்டிக்கின்றான். இதன் மூலம் இறை வசனங்கள் அனைத்தையும் அறிய இயலும்; அறிய வேண்டும் என்பது தெளிவாகின்றது. வேதத்தை முழுமையாக அறிய முடியாது என்றிருந்தால் இறைவன் இவ்வாறு கேட்க மாட்டான். அதை ஒரு குற்றமாக விசாரிக்கவும் மாட்டான்.

இறை வேதத்தில் விளங்க முடியாத ஒரு வசனமும் இல்லை என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM NOV 2008