இறை ஆலயமும் இப்ராஹீம் நபியும்
உலகத்தில் முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபாவாகும்.
அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல்
ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
அல்குர்ஆன் 3:96
இது, முதல் மனிதர்
ஆதம் (அலை) அவர்கள் தொழுத புனித ஆலயமாகும்.
"(கஅபாவிலுள்ள) ஹஜருல் அஸ்வத் (எனும் கல்லானது) சுவனத்திலிருந்து
வந்ததாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: நஸயீ 2886
ஆதம் (அலை) அவர்களுக்குப் பின்னால் அந்த ஆலயத்தின் தொடர்பு எப்போது
அறுந்து போனது? என்பதை அடித்துச் சென்ற
கால வெள்ளத்தில், அரித்துச்
சென்ற நீர் வெள்ளத்தில் கண்டுபிடிப்பதற்குக் குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்தத் தடயமும் இல்லை.
ஆனால் அது எப்போது புதுப்பிக்கப்பட்டது? புனர் நிர்மாணம் செய்யப்பட்டது? என்பதைத் திருக்குர்ஆனில் நாம் தெளிவாகக் காணலாம்.
ஆம்! அந்த இறையாலயத்தைப் புதுப்பித்த புண்ணியவான்கள் ஏகத்துவப்
புரட்சியாளரும் இறை நண்பருமான இப்ராஹீம் (அலை) அவர்களும், அவரது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களும் தான்.
எனவே அவர்கள் எழுப்பிய ஆலயமான கஅபாவின் வரலாற்றை இந்தத் துல்கஅதா, துல்ஹஜ் மாதங்களில் நினைத்துப் பார்ப்பது மிகவும் பொருத்தம்
என்ற அடிப்படையில் இவ்விரு மாத ஏகத்துவ இதழ்களில் கஅபாவின் வரலாற்றைக் கொண்டு வர முடிவு
செய்து சென்ற இதழில் அதன் ஒரு பகுதியை வெளியிட்டோம்.
அந்தக் கஅபா வரலாறு தரும் கரு இது தான்.
கண்ணியமிக்க ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபியினால் கட்டப்பட்ட ஏகத்துவ
மையமான கஅபா, அவர்களது சந்ததிகளால் இணை வைப்பிற்குக் கடத்திச் செல்லப்பட்டது.
அதன் பின்னர் இப்ராஹீம் நபியின் சந்ததியில், இரத்த பந்தத்தாலும் ஏகத்துவ பந்தத்தாலும் சொந்தமான முஹம்மத்
(ஸல்) அவர்கள் அதன் மீட்புப் பணியில் ஈடுபடுகின்றார்கள்.
தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அந்த மீட்புப் பணியை மேற்கொள்ளும்
போது அந்த ஆலயத்திலிருந்து விரட்டியடிக்கப் படுகிறார்கள். பிறகு அவ்வூரை, மக்காவை விட்டும் துரத்தப் படுகிறார்கள்.
அகதியாய் ஆன அவர்கள் ஆட்சித் தலைவராக அந்த ஆலயத்தை மீட்டு, மீண்டும் ஏகத்துவ மையமாக ஆக்குகின்றார்கள். இதைத் தான் இந்தக்
கஅபா வரலாற்றில் நாம் காணவிருக்கின்றோம்.
ஏகத்துவவாதிகளாகிய நாம் பல்வேறு சோதனைகளைச் சந்திக்கிறோம். ஊர்
நீக்கம்,
தாக்குதல்கள், கொலை முயற்சி, பள்ளிவாசலில் தொழுவதற்குத் தடை போன்ற அக்கிரமங்கள் இன்றும் தொடர்கின்றன.
இதுபோன்ற சோதனைகளைச் சந்திக்கும் ஏகத்துவவாதிகள் துவண்டு விடாமல், கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல், ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள் கற்றுத் தந்த கொள்கை
உறுதியுடன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் காட்டிய வழியில் நடந்தால் நமக்கும் இது போன்ற ஒரு வெற்றியை இறைவன் தருவான்
என்ற படிப்பினையும் இந்த வரலாற்றில் அடங்கியுள்ளது.
இப்ராஹீம் நபியின் தியாகங்களை நினைத்துப் பார்க்கும் வகையில்
அமைந்த இந்த ஹஜ் மாதத்தில், ஏகத்துவம்
இதழை ஹஜ் சிறப்பிதழாக, கஅபா வரலாற்றுச்
சிறப்பிதழாக உங்களுக்கு வழங்குகின்றோம்.
EGATHUVAM DEC 2008