பொருளியல் தொடர் 7 - யாசகம் கேட்காதீர்
பொருளாதாரத் தேடலில் சுயமரியாதையைப் பேணுதல்
இஸ்லாம் சம்பாதிக்கச் சொல்கிறது. ஆனால் மானம் மரியாதையை விட்டு
விட்டு சம்பாதிக்கச் சொல்லவில்லை. பொருளாதாரத்தைத் திரட்டும் போது முதல் விதியாக சுயமரியாதை
பேணச் சொல்கிறது.
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குப் பிரச்சாரம் செய்யும் போது, முதலில் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அவனுக்கு இணை வைக்கக் கூடாது என்றும், பிறகு சுயமரியாதை பேண வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா குறைஷித் தலைவர்களில்
ஒருவரான) அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: என்னிடமும் குறைஷி இறைமறுப்பாளர்களிடமும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுதைபியா) ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் குறைஷியரின் வணிகக் குழு ஒன்று ஷாம் (சிரியா) நாட்டில்
வணிகம் செய்துகொண்டிருந்தது.
குறைஷி வணிகக் குழுவினருடன் இருந்த என்னை அழைத்துவரும்படி (ரோம
பைஸாந்தியப் பேரரசர்) ஹெராக்ளியஸ் ஆளனுப்பினார். நாங்கள் அவரிடம் வந்து சேர்ந்தோம்.
அவரும் அவருடைய ஆட்களும் "ஈலிலியா'வில் (பைத்துல் முகத்தஸில்) இருந்தார்கள். ரோமபுரி அரசுப் பிரதிநிதிகள்
தம்மைச் சூழ்ந்திருந்த அ(ரச) வைக்கு வரும்படி எங்களை ஹெராக்ளியஸ் அழைத்தார். (நாங்கள்
அங்கு போய்ச் சேர்ந்த) பிறகு (தமக்கு அருகில் வந்து அமருமாறு) எங்களை அழைத்த துடன்
தம்முடைய மொழிபெயர்ப்பாளரையும் அழைத்தார்.
(பிறகு எங்களைப் பார்த்து,) "தம்மை இறைத் தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த (முஹம்மத்
எனும்) மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?'' என்று கேட்டார். நான் "நானே இவர்களில் (அவருக்கு) நெருங்கிய
உறவினன்''
என்று பதிலளித்தேன். ஹெராக்ளியஸ் (தம் அதிகாரிகளிடம்)
"அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; (அவருடன் வந்திருக்கும்) அவருடைய நண்பர்களையும் எனக்கருகில் கொண்டுவந்து
அவரது முதுகுக்குப் பின்னால் நிறுத்துங்கள்' என்று கூறினார். பிறகு தம் மொழிபெயர்ப்பாளரிடம் "நான்
(முஹம்மதைப் பற்றி) இவரிடம் கேட்பேன். இவர் பொய் (ஏதும்) சொன்னால் உடனே "அவர்
பொய் சொல்கிறார்' என்று கூறிவிட
வேண்டும்''
என அவருடைய நண்பர்களிடம் (மொழிபெயர்த்துச்) சொல் என்று சொன்னார்.
நான் பொய் சொன்னால் என் நண்பர்கள் அதைத் தெரிவித்து விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும்
எனக்கு அப்போது இல்லாதிருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபியவர்களைப் பற்றி
பொய்(யானத் தகவல்களைச்) சொல்லியிருப்பேன்.
பிறகு ஹெராக்ளியஸ் என்னிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேட்ட
முதல் கேள்வி, "உங்களிடையே
அந்த மனிதரின் குலம் எப்படிப்பட்டது?'' என்பதேயாகும். அதற்கு "அவர் எங்களில் சிறந்த குலத்தைச்
சேர்ந்தவர்'' என்று கூறினேன். (பிறகு)
அவர்,
"உங்களில் எவரேனும் இதற்கு முன் இப்படி(த்
தம்மை "நபி' என்று) எப்போதாவது
வாதித்ததுண்டா?'' என்று கேட்டார்.
நான் "இல்லை' என்று பதிலளித்தேன்.
"அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றாரா?'' என்று கேட்டார். நான் "இல்லை' என்றேன்.
"அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா?'' என்று கேட்டார். அதற்கு நான், "இல்லை; பலவீனர்கள்
தாம் (அவரைப் பின்பற்றுகின்றனர்)'' என்று
சொன்னேன். "அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றார்களா? அல்லது குறைந்துகொண்டே போகின்றார்களா?'' என்று கேட்டார். நான், இல்லை; அவர்கள்
(நாளுக்கு நாள்) அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்'' என்று கூறினேன். "அவரது மார்க்கத்தில் இணைந்த பிறகு தம்
புதிய மார்க்கத்தின்மீது அதிருப்தியடைந்து எவரேனும் அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?'' என்று கேட்டார். நான் "இல்லை' என்று சொன்னேன். "அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு
முன் அவர் (மக்களிடம்) பொய் சொன்னார் என்று (எப்போதேனும்) நீங்கள் அவரைச் சந்தேகித்திருக்
கின்றீர்களா?'' என்று கேட்டார். நான் "இல்லை' என்றேன்.
"அந்த மனிதர் வாக்கு மீறுகின்றாரா?'' என்று கேட்டார். நான் "இல்லை; (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக்
காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்னேறாம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்கத்
தெரியாது''
என்று சொன்னேன். இதைத் தவிர (நபியவர்களை குறைசொல்வதற்கு) வேறு
எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அவர், "அந்த மனிதருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?'' என்று கேட்டார். நான் "ஆம்' என்று சொன்னேன். அவர், "அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எப்படி அமைந்தன?'' என்று கேட்டார். "எங்களுக்கிடையேயான போர் (கிணற்று) வாளிகள்
தாம்;
(அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன.
ஒருமுறை) அவர் எங்களை வெல்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெல்வோம்'' என்றேன்.
"அவர் உங்களுக்கு என்ன (செய்யும்படி) கட்டளையிடுகின்றார்?'' என்று கேட்டார். நான் "அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும்/ எவரையும் இணையாக்காதீர்கள்; உங்கள் மூதாதையர் சொல்லி வருகின்ற (அறியாமைக்கால) கூற்றுகளையெல்லாம்
விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார். தொழுகையை
நிறைவேற்றும்படியும், "ஸகாத்' கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும், சுயக்கட்டுப்பாட்டுடன் வாழும்படியும், உறவுகளைப் பேணும்படியும் எங்களுக்கு அவர் கட்டளையிடுகின்றார்'' என்று சொன்னேன்.
நூல்: புகாரி 7
நாம் முதலில் மானத்தை விடாமல் பொருளாதாரத்தைத் திரட்ட முடியுமா? என்று கவனிக்க வேண்டும்.
கஷ்டத்தை சகித்துக் கொள்ள வேண்டும்
நம்மை யாராவது அடித்தால் அல்லது திட்டினால் பொறுத்துக் கொள்கிறோம்.
ஆனால் அல்லாஹ் நமக்கு கஷ்டத்தைக் கொடுத்து சோதிக்கின்றான். இதை நாம் பொறுத்துக் கொள்வதில்லை.
அபூசயீத் அல்குத்ரீ (ர-) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகüல் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு
கேட்ட யாருக்குமே நபி (ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்கüடம்
இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து
போன பின்பு அந்த அன்சாரிகüடம் நபி (ஸல்)
அவர்கள் "என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து
வைக்கப் போவதில்லை. (இருப்பினும்,) யார்
சுயமரியாதையோடு நடந்து கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச்செய்வான். யார்
(இன்னல்களைச்) சகித்துக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான்.
யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக
ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதுவும்) உங்களுக்கு
வழங்கப்படவில்லை'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 6470, 1469
யாசகம் கேட்கக் கூடாது
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு
வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன்
வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, "ஹகீமே!
நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன்
எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில்
வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை
தாழ்ந்த கையைவிடச் சிறந்தது'' என்று
கூறினார்கள்.
அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன்
மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க
மாட்டேன்''
எனக் கூறினேன்.
ஆபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு
ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி)அவர்கள்
(தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் "முஸ்லிலிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு
நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!' எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப்
பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப்
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்: புகாரி 1472
சுய மரியாதையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள்
அல்லாஹ்விடம் துஆ செய்துள்ளார்கள்.
யாசகம் கேட்டால் வறுமை வரும்
யாசகம் வாங்கி சாப்பிட்டால் தொடர்ந்து அல்லாஹ் நமக்கு வறுமையைத்
தருவான். யாசகம் வாங்கி சாப்பிடுவதை விட உழைத்து சாப்பிடுவது சிறந்தது. நாம் உழைத்துச்
சாப்பிட்டால் அல்லாஹ் நமக்கு வறுமையைத் தர மாட்டான். தன்மானத்துடனும், வறுமையில்லாமலும் வாழ வேண்டும் என்றால் உழைத்து வாழ வேண்டும்.
யாருக்கு வறுமை ஏற்பட்டு அவன் மக்களிடம் அதை முறையிடுகிறானோ
அவனுடைய வறுமை அடைக்கப்படாது. யாருக்கு வறுமை ஏற்பட்டு அவன் அதை அல்லாஹ்விடம் முறையிடுகிறானோ
அவனுக்கு அல்லாஹ் விரைவான வாழ்வாதாரத்தையோ அல்லது குறிப்பிட்ட தவணைவரையுள்ள வாழ்வாதாரத்தையோ
விரைவில் வழங்குவான்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: திர்மிதி 2248
யாரிடமும் கேட்க கூடாது
பிறரிடத்தில் பிச்சை எடுத்து, தன்மானத்தை இழந்து பிறரிடத்தில் திட்டு வாங்கி சாப்பிடுவதற்குப்
பதிலாக ஒருவர் உழைத்துச் சாப்பிட்டால் அது அவருக்கு மிகவும் சிறந்ததாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர்
கயிற்றை எடுத்துக் கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று (மலையேறி) விறகு வெட்டி
விற்று,
தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர்மம் செய்வது மக்களிடத்தில்
யாசிப்பதைவிடச் சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1480, 1471
யாசகம் கேட்பவர் மறுமையில்
இழிவாக எழுப்பப்படுவார்
இவ்வுலகத்தில் நாம் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதற்காகவும், தமது செல்வத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் நாம் யாசகம்
கேட்கிறோம். இப்படிக் கேட்பதால் நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று நாம் எண்ணிக்
கொண்டிருக்கிறோம்.
ஆனால் இவ்வுலகத்தில் நமக்குப் பாதிப்பு ஏற்படாவிட்டாலும் மறுமையில்
நமக்குக் கடினமான பாதிப்பு உண்டு. இதை நாம் எண்ணாமல் சில நபர்கள் யாசகம் கேட்கிறார்கள்.
ஆனால் மறுமையில் கிடைக்கும் பாதிப்பை யாசகம் கேட்கக் கூடியவர் அறிந்திருந்தால் எவரும்
யாசகம் கேட்க மாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தம் தேவைக்கு
அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை
நாளன்று வருவான். மேலும் கூறினார்கள்: வியர்வை வழிந்து மனிதனின் பாதிக் காதை அடையும்
அளவுக்கு மறுமை நாளன்று சூரியன் மனிதனுக்கு மிக அருகில் வந்துவிடும். இந்நிலையில் மக்கள்
ஆதம் (அலை) அவர்களிடமும் பிறகு மூசா (அலை) அவர்களிடமும் பிறகு முஹம்மத் (ஸல்) அவர்களிடமும்
வந்து அடைக்கலம் தேடுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1475
யாசகம் கேட்பதற்குத் தகுதியானவர்கள்
யாசகம் கேட்க மூன்று நபர்களுக்கு மட்டுமே தகுதியிருக்கிறது.
இவர்களை தவிர யாரும் யாசகம் கேட்க தகுதி கிடையாது. (1) பிறருடைய கடனை அடைப்பதற்காகக் கடன் பட்டவர். (2) சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தனது வீடு மழையால் இடிந்து
விட்டால் அவரும் அல்லது இயற்கையால் சேதம் ஏற்பட்டவரும் யாசகம் கேட்கலாம். (3) வறுமையில் உள்ளவர் யாசிக்கலாம். இவர் ஏழை என்று மூன்று நபர்கள்
சாட்சி கூற வேண்டும்.
இவர்களைத் தவிர யாசிப்பதற்கு யாருக்கும் தகுதி கிடையாது.
கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத்
தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தர்மப் பொருட்கள் நம்மிடம் வரும் வரை இங்கேயே இருங்கள். அதில்
ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்'' என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: கபீஸா!
மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப்
பொறுப்பேற்றுக் கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்றவரை
யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர்.
அவர் "வாழ்க்கையின் அடிப்படையை' அல்லது "வாழ்க்கையின் அவசியத் தேவையை' அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம். இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர்.
அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன்வந்து,
"இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்'' என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் "வாழ்க்கையின் அடிப்படையை' அல்லது "வாழ்க்கையின் அவசியத் தேவையை' அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும். கபீஸா! இவையன்றி
மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி
ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடை செய்யப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார்.
நூல்: முஸ்லிம் 1887
ஸஹாபாக்கள் எடுத்த உறுதிமொழி
ஸஹாபாக்களின் நிலைமைகளை எடுத்துக் கொண்டால் இஸ்லாத்தை ஏற்ற பிறகு
சாப்பிடுவதற்கும் இருப்பதற்கு இருப்பிடமும் அவர்களுக்குக் கிடையாது. இவ்வளவு கஷ்டப்பட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இவர்களின் நிலைமைகளைப் பார்த்த பின்னரும், நீங்கள் யாரிடத்திலும் யாசகம் கேட்கக் கூடாது என்று உறுதிமொழி
எடுத்தார்கள்.
அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒன்பது பேர், அல்லது எட்டுப் பேர், அல்லது ஏழு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம்.
அப்போது அவர்கள் "நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா?'' என்று கேட்டார்கள். அது நாங்கள் உறுதி மொழி அளித்திருந்த புதிதாகும்.
எனவே,
"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் முன்பே உறுதிமொழி
அளித்துவிட்டோம்'' என்று கூறினோம்.
பின்னர் அவர்கள் "நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா?'' என்று (மீண்டும்) கேட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள்
(ஏற்கெனவே) உறுதிமொழி அளித்துவிட்டோம்'' என்று நாங்கள் (திரும்பவும்) கூறினோம்.
பின்னர் (மூன்றாவது முறையாக) "நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம்
உறுதிமொழி அளிக்கக் கூடாதா?'' என்று கேட்ட
போது,
நாங்கள் எங்கள் கைகளை நீட்டி "அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம்
நாங்கள் உறுதிமொழி அளிக்கிறோம். எதற்காக நாங்கள் தங்களிடம் உறுதிமொழி அளிக்க வேண்டும்?'' என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், "அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; ஐவேளைத் தொழுகைகளைத் தொழ வேண்டும்; எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் (என்று உறுதிமொழி அளியுங்கள்)'' என்று கூறிவிட்டு, (அடுத்த) ஒரு வார்த்தையை மெதுவாகச் சொன்னார்கள்: "மக்களிடம்
எதையும் (கைநீட்டி) யாசிக்கக் கூடாது'' என்றும் உறுதிமொழி கேட்டார்கள். (அவ்வாறே நாங்களும் உறுதிமொழி
அளித்தோம்.) பிறகு அ(வ்வாறு உறுதியளித்த)வர்களில் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில்
ஒருவரது சாட்டை (வாகனத்தின் மேலிருந்து) விழுந்தால் கூட அதை யாரிடமும் எடுத்துத் தருமாறு அவர்கள் கேட்டதில்லை.
நூல்: முஸ்லிம் 1886
தனது செல்வத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காக யாசகம் கேட்டால்
நரக நெருப்பையே கேட்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதிகம் பொருள்
சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பவன், (நரகின்) நெருப்புக் கங்கையே யாசிக்கிறான்; அவன் குறைவாக யாசிக்கட்டும். அல்லது அதிகமாக யாசிக்கட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1883
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM OCT 2010