தலை போனாலும் விலை போகோம்
இறைத் தூதர்கள், தூதுச் செய்தியைச் சமர்ப்பிக்க ஆரம்பித்த மாத்திரத்திலேயே கொலை
முயற்சி,
கோரத் தாக்குதல்கள், கொடுமைகள், ஊர்
நீக்கங்கள், நாடு கடத்தல்கள், சிறைவாசங்கள், சித்ரவதைகள் என்று உடல்ரீதியான சோதனைகளும், கேலி, கிண்டல்கள், பரிகாசங்கள், அவதூறுகள், கடும்
விமர்சனங்கள், பொய்யான குற்றச்சாட்டுக்கள், போலியான கூற்றுக்கள் என உள ரீதியான சோதனைகளும் அவர்களைத் துரத்தின, தொலைத்தெடுத்தன.
இத்தனையையும் தாக்குப் பிடித்தவாறு தான் தங்கள் தூதுச் செய்தியை
மக்கள் மன்றத்தில் தூதர்கள் தாக்கல் செய்தனர்.
இந்த இரு வகையான இடையூறுகளுக்கு இலக்காகாத தூதர்கள் யாருமில்லை
எனுமளவுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
கொலை முயற்சிக்கு உள்ளான தூதர்களின் வரலாறுகளையும் அல்லாஹ் குர்ஆனில்
பதிவு செய்கின்றான். அப்படிக் கொலை முயற்சிக்கு ஆளான, குறி வைக்கப்பட்ட ஒரு தூதர் தான் ஸாலிஹ் (அலை) அவர்கள். இதோ
அவர்களது பிரச்சாரத்தை அல்லாஹ் மறு ஒலிபரப்பு செய்வதைக் கேளுங்கள்.
ஸாலிஹ் நபிக்கு எதிரான சமூதின் சதி
அல்லாஹ்வை வணங்குங்கள்! என்று ஸமூது சமுதாயத்திடம் அவர்களின்
சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். உடனே அவர்கள் இரு பிரிவுகளாக தர்க்கம் செய்யலானார்கள்.
"என் சமுதாயமே! நன்மைக்கு முன்னால் தீமையை ஏன் அவசரமாகத் தேடுகிறீர்கள்? நீங்கள் அருள் செய்யப்பட அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேட மாட்டீர்களா?'' என்று அவர் கூறினார்.
உம்மையும், உம்முடன்
இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம்
அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர்
கூறினார்.
அல்குர்ஆன் 27:45-47
ஸாலிஹ் நபியின் பிரச்சாரத்திற்கு எதிராக ஒன்பது சதிகாரக் கூட்டத்தினர்
ஒன்று கூடினர், ஓரணியில் சேர்ந்தனர். ஸாலிஹைத்
தீர்த்துக் கட்டுவதாக சபதம் எடுத்து சத்தியம் செய்தனர். தடயம் இல்லாத அளவுக்கு அவரை
ஒழித்துக் கட்ட முடிவு செய்கின்றனர்.
அந்நகரத்தில் ஒன்பது கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் பூமியில்
சீரழிவை ஏற்படுத்தினர். சீர்திருத்துவோராக இல்லை.
அல்குர்ஆன் 27:48
ஆனால் அவர்களின் சதியை அல்லாஹ் முறியடித்து விடுகின்றான்.
"அவரையும், அவரது
குடும்பத்தாரையும் இரவில் அழித்து விடுவோம். பின்னர் "அவரது குடும்பத்தினர் அழிக்கப்பட்டதை
நாங்கள் பார்க்கவில்லை; நாங்கள் உண்மையே
கூறுகிறோம்' என்று அவரது உறவினரிடம்
தெரிவித்து விடுவோம்'' என்று அல்லாஹ்வின்
மீது ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கூறினர்.
அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். நாமும் அவர்கள் அறியாதவாறு
பெரும் சூழ்ச்சி செய்தோம். அவர்களது சூழ்ச்சியின் முடிவு என்னவானது என்று கவனிப்பீராக!
அவர்களையும், அவர்களது சமுதாயத்தினர்
அனைவரையும் அடியோடு அழித்து விட்டோம். அவர்கள் அநீதி இழைத்ததால் இதோ அவர்களின் வீடுகள்
பாழடைந்து கிடக்கின்றன! அறியும் சமுதாயத்திற்கு இதில் படிப்பினை உள்ளது. நம்பிக்கை
கொண்டு (நம்மை) அஞ்சியோரைக் காப்பாற்றினோம்.
அல்குர்ஆன் 27:49-53
இறுதியில் ஸாலிஹ் நபியும் அவரைப் பின்பற்றியவர்களும் தான் வென்றனர்.
எரியும் நெருப்பில் இப்ராஹீம் நபி
வரவிருக்கும் ஹஜ் மாதங்கள் ஏகத்துவத்தின் ஈடு இணையற்ற தலைவர்
இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் நிலையான நினைவைத் தாங்கியவை. அந்த இறைத்தூதர் இப்ராஹீமின்
புரட்சிமிகு பகுத்தறிப் பிரச்சாரம் பிரபலமானது. அந்தப் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குப்
பரிசாகக் கிடைத்தது என்ன?
இவருக்காக ஒரு கட்டடத்தைக் கட்டி இவரை நெருப்பில் போடுங்கள்!
என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் 37:97
ஆனால் அல்லாஹ் அதையும் முறியடிக்கின்றான்.
அவருக்கு எதிராகச் சதி செய்ய நினைத்தனர். அவர்களைத் தாழ்ந்தோராக்கி
விட்டோம்.
அல்குர்ஆன் 37:98
மூஸாவுக்கு எதிரான கொலை முயற்சி
நான் தான் உங்கள் கடவுள் என்று கொக்கரித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னிடம்
தூதராக அனுப்பப்படுகிறார்கள் மூஸா (அலை) அவர்கள். அவர்களது அறிவுப்பூர்வமான, ஆணித்தரமான வாதங்கள் எனும் ஆயுதங்களுக்குப் பதில் அளிக்க முடியாமல்
படுதோல்வியடைந்த ஃபிர்அவ்ன், மூஸாவைக்
கொலை செய்யத் துடிக்கின்றான்.
"மூஸாவைக் கொல்வதற்கு என்னை விட்டு விடுங்கள்! அவர் தனது இறைவனை
அழைக்கட்டும். உங்கள் மார்க்கத்தை அவர் மாற்றி விடுவார் என்றும் பூமியில் குழப்பத்தைத்
தோற்றுவிப்பார் என்றும் அஞ்சுகிறேன்'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
அல்குர்ஆன் 40:26
அவரைத் தூக்கில் போடுவதற்குரிய அனைத்து வேலைகளையும் செய்தான்.
அதற்குரிய தருணத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கேற்ப, மூஸா தன் சமுதாயத்தை அழைத்துக் கொண்டு தப்பிக்க முயலும் போது
அவரையும் அவரது சமுதாயத்தையும் ஃபிர்அவ்ன் துரத்தி வருகின்றான். ஆனால் அவனால் அவரை
அழிக்க முடியவில்லை. அவனே அழிந்து போனான். தன்னைக் கடவுள் என்று பிதற்றிக் கொண்டிருந்த
அவனைக் கடலில் மூழ்கடித்ததுடன் மட்டுமல்லாமல் அவனது பிணத்தை உலக மக்களுக்குப் பாடமாக்கியும்
வைத்து விட்டான் வல்ல இறைவன்.
இதை அல்குர்ஆன் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
"உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது. இருவரும் உறுதியாக
நில்லுங்கள்! அறியாதோரின் பாதையை இருவரும் பின்பற்றாதீர்கள்!'' என்று (இறைவன்) கூறினான்.
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும்
போது "இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை
என நம்புகிறேன்; நான் முஸ்லிம்'' என்று கூறினான்.
இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். உனக்குப் பின் வருவோருக்கு நீ
சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில்
அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.
அல்குர்ஆன் 10:89:-92
சாவிலிருந்து தப்பிய சத்தியத் தோழர்
மூஸா (அலை) அவர்கள் கொண்டு வந்த கொள்கையை இஸ்ரவேலர்கள் ஏற்றுக்
கொண்டனர். ஆனால் ஃபிர்அவ்னும் அவனுடைய குடும்பத்தாரும் அந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.
இருப்பினும் ஃபிர்அவ்னின் குடும்பத்தில் ஒருவர் சத்தியத்தை ஏற்றுக் கொள்கின்றார்.
இறைத் தூதர் மூஸாவுக்கு எதிராக ஃபிர்அவ்ன் எடுக்கும் நடவடிக்கையிலிருந்து
அவரைக் காப்பாற்றுகின்றார்.
"என் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறும் ஒரு மனிதரை கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு
வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர் உண்மையாளராக
இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு
மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்'' என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரில் தனது நம்பிக்கையை மறைத்துக்
கொண்டிருந்த நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார்.
"என் சமுதாயமே! இன்றைய தினம் ஆட்சி உங்களிடமே இருக்கிறது. பூமியில்
மிகைத்து இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வேதனை நமக்கு வந்து விடுமானால் அதிலிருந்து நம்மைக்
காப்பாற்றுபவன் யார்?'' (எனவும்
அவர் கூறினார்) அதற்கு ஃபிர்அவ்ன் "நான் (சரி) காண்பதையே உங்களுக்குக் காட்டுகிறேன்.
நேரான வழியைத் தவிர (வேறு எதையும்) நான் உங்களுக்குக் காட்டவில்லை'' என்று கூறினான்.
"என் சமுதாயமே! மற்ற சமுதாயத்தினரின் கதியைப் போன்றும், நூஹுடைய சமுதாயம், ஆது சமுதாயம், ஸமூது சமுதாயம் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தோருக்கு ஏற்பட்ட
கதி போன்றும் உங்கள் விஷயத்திலும் நான் அஞ்சுகிறேன்'' என்று நம்பிக்கை கொண்ட (அந்த) மனிதர் கூறினார். அல்லாஹ் அடியார்களுக்கு
அநியாயத்தை நாடுபவன் இல்லை.
என் சமுதாயமே! அழைக்கப்படும் நாளை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்.
அந்நாளில் புறங்காட்டி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக்
காப்பவன் இருக்க மாட்டான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு நேர்
வழி காட்டுபவன் இல்லை.
முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்.
அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும்
"இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்'' எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித்
தான் வழி கெடுக்கிறான்.
அவர்கள் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில்
தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும், நம்பிக்கை கொண்டோரிடமும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியது.
இவ்வாறே பெருமையடித்து அடக்கியாளும் ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
"ஹாமானே! எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு! வழிகளை, வானங்களின் வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும்.
அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன்'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய
செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. (நேர்) வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின்
சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது.
"என் சமுதாயமே! என்னைப் பின்பற்றுங்கள்! உங்களுக்கு நேர் வழி
காட்டுகிறேன்'' என்று நம்பிக்கை கொண்ட
ஒருவர் கூறினார்.
"என் சமுதாயமே! இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான
உலகம்.''
யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி
கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ
நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி
வழங்கப்படுவார்கள்.
என் சமுதாயமே! எனக்கென்ன? நான் உங்களை வெற்றிக்கு அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகிற்கு
அழைக்கிறீர்கள்.
"நான் அல்லாஹ்வை மறுத்து எனக்கு அறிவில்லாத ஒன்றை அல்லாஹ்வுக்கு
இணை கற்பிக்க வேண்டும்'' என்று என்னை
அழைக்கிறீர்கள். நானோ மிகைத்தவனாகிய மன்னிப்பவனிடம் உங்களை அழைக்கிறேன்.
என்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும் மறுமையிலும்
பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும்
இல்லை.
நான் உங்களுக்குக் கூறுவதைப் பின்னர் உணர்வீர்கள்! எனது காரியத்தை
அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன். (என்றும் அவர் கூறினார்)
அல்குர்ஆன் 40:28-44
இந்தச் செய்தி ஃபிர்அவ்னுக்குத் தெரிந்து அந்தத் தோழரை ஃபிர்அவன்
கொல்ல முயற்சிக்கின்றான். ஆனால் அல்லாஹ் அவரைக் காப்பாற்றி விடுகின்றான்.
எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ்
காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது.
அல்குர்ஆன் 4:45
விதிவிலக்காக தாவூத் நபி, சுலைமான் நபி போன்ற ஆட்சியதிகாரம் வழங்கப்பட்ட தூதர்களைத் தவிர
அனைத்துத் தூதர்களுக்கு எதிராகவும் கொலை முயற்சிகள் நடந்துள்ளன. அந்தக் கொலை முயற்சியில்
பலியான தூதர்களும் உண்டு. பாதுகாக்கப்பட்ட தூதர்களும் உண்டு. இங்கு நாம் பார்த்துக்
கொண்டிருப்பது பாதுகாக்கப்பட்ட தூதர்களைத் தான். அந்தப் பட்டியலில் அற்புத மனிதப் படைப்பான
ஈஸா (அலை) அவர்களும் அடங்குகின்றார்கள்.
அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே
கொன்றோம்''
என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை
அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள்
மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத்
தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.
அல்குர்ஆன் 4:157
ஈஸா நபியைக் கொலை செய்ய எதிரிகள் முயற்சி செய்கின்றார்கள். ஆனால்
அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றி விடுகின்றான்.
(ஈஸாவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி
செய்தான். அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன்.
அல்குர்ஆன் 3:54
எதிரிகளின் சதியை முறியடித்து ஈஸா நபியை அல்லாஹ் வானுலகத்திற்கு
உயர்த்திக் கொண்டான்.
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எதிரான முயற்சிகள்
ஈஸா (அலை) அவர்களுக்குப் பின்னால் வந்த இறைத்தூதர் முஹம்மத்
(ஸல்) அவர்கள் தூதுச் செய்தியைச் சமர்ப்பிக்கத் துவங்கிய காலத்திலிருந்து கொலை முயற்சிகள்
அடுக்கடுக்காகத் துரத்துகின்றன, தொடர்கின்றன.
மக்காவிலுள்ள இறை மறுப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய
முயற்சி செய்கின்றார்கள்.
நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கüடம், "இணை
வைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்கüலேயே மிகக் கடுமையானது எது என்று எனக்கு அறிவியுங்கள்'' என்று கேட்டேன். அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் "ஹிஜ்ர்' பகுதியில் தொழுது கொண்டிருந்தபோது, உக்பா பின் அபீமுஜத் என்பவன் முன்னோக்கி வந்து, தன் துணியை நபி (ஸல்) அவர்களுடைய கழுத்தில் வைத்து (முறுக்கி), அவர்கள் மூச்சுத் திணறும்படி (அவர்கüன் கழுத்தைக்) கடுமையாக நெறித்தான். அப்போது அபூபக்ர் (ரலி)
அவர்கள் முன்னால் வந்து அவனது தோளைப் பிடித்து நபி (ஸல்) அவர்களை விட்டு விலக்கினார்கள்.
மேலும்,
"என் இறைவன் அல்லாஹ் தான்' என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்?''
(40:28) என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர்
நூல்: புகாரி 3856
குகை வரை வந்த பகை
இத்துடன் அவர்கள் நிற்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்காவைத்
துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்கின்ற போது அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து
கொலை செய்யத் துடிக்கின்றார்கள். இதை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
(முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏக இறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப்
பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி
செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.
அல்குர்ஆன் 8:30
புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களும் இதை விவரிக்கின்றன.
(ஹிஜ்ரத் பயணத்தின் போது வழியில்) நபி (ஸல்) அவர்களுடன் நான்
("ஸவ்ர்'மலைக்) குகையில் (தங்கி)
இருந்தேன். நான் தலையை உயர்த்திய போது (எங்களைத் தேடி வந்த) கூட்டத்தாரின் பாதங்கள்
என் (தலைக்கு) மேலே தெரிந்தன. நான், "அல்லாஹ்வின் தூதரே! அவர்கüல் எவராவது தம் பார்வையைத் தாழ்த்தி (குகைக்குள் உற்று நோக்கி)னால்
நம்மைப் பார்த்து விடுவாரே! (இப்போது என்ன செய்வது?)'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள்,
"அமைதியாயிருங்கள்; அபூபக்ரே! (நாம்) இருவர்; நம்முடன் அல்லாஹ் மூன்றாமவன். (அவன் நம்மைக் காப்பாற்றுவான்)'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ர் (ரலி)
நூல்: புகாரி 3922
புகாரி 3906 ஹதீஸ்
இது தொடர்பான முழு வரலாற்றையும் நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகின்றது. அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளின் கைகளில் மாட்டி, கொல்லப்படுவதை விட்டும் அல்லாஹ் காப்பாற்றி விடுகின்றான்.
எந்த மக்கா நகரம், முஹம்மத் (ஸல்) அவர்களை விரட்டியடித்து, கைது செய்ய, கொலை செய்ய நினைத்ததோ அந்த மக்கா நகரை நபி (ஸல்) அவர்கள் கைப்பற்றினார்கள்.
இப்படிக் கொலை முயற்சிக்கு எதிராகப் பாதுகாக்கப்பட்ட தூதர்களும் இருக்கிறார்கள்; கொலை முயற்சியில் பலியான தூதர்களும் இருக்கின்றார்கள்.
பலியான தூதர்கள்
பனூ இஸ்ராயீல்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
இதைக் கீழ்க்காணும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப் பின் பல தூதர்களைத்
தொடரச் செய்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல்
குதுஸ் மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த
போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள்.
அல்குர்ஆன் 2:88
"அல்லாஹ் அருளியதை நம்புங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்களுக்கு அருளப்பட்டதையே
நம்புவோம்'' என்று கூறுகின்றனர். அதற்குப்
பிறகு உள்ளதை (குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.
"நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை
செய்தீர்கள்?'' என்று (முஹம்மதே!)
கேட்பீராக!
அல்குர்ஆன் 2:91
நல்லவர்கள் கொல்லப்படுதல்
ஃபிர்அவ்னுடைய குடும்பத்தில் சத்தியத்தை ஏற்றுக் கொண்ட நல்ல
மனிதர் காப்பாற்றப்பட்டதைப் பார்த்தோம். அதே ஃபிர்அவ்னுடைய ஆட்சியில் சத்தியத்தை ஏற்றுக்
கொண்டதால் மந்திரவாதிகள் கொலையும் செய்யப்பட்டார்கள்.
உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து,
"மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றனர்.
"நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார்.
எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன்.
நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்'' என்று அவன் கூறினான்.
"எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப்
போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு
வழங்குவாய்'' என்றனர்.
"எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள்
இறைவன் மன்னிப்பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்'' (என்றும் கூறினர்.)
அல்குர்ஆன் 20:70-73
இறை நம்பிக்கை கொண்ட அவர்கள் அக்கிரமக்காரன் ஃபிர்அவ்னிடத்தில்
வீரமிக்க பீரங்கிகளாக முழங்கிய முழக்கம் வரலாற்றில் மறக்க முடியாத வார்த்தைகள்.
அந்நகரத்தின் கடைக் கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து,
"என் சமுதாயமே! தூதர்களைப் பின்பற்றுங்கள்!'' என்றார். உங்களிடம் கூலியைக் கேட்காத நேர் வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள்.
என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்? அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! அவனன்றி வேறு
கடவுள்களை ஏற்படுத்திக் கொள்வேனா? அளவற்ற
அருளாளன் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவர்களின் பரிந்துரை எனக்கு எந்தப் பயனையும்
அளிக்காது. அவர்கள் என்னைக் காப்பாற்றவும் மாட்டார்கள். அப்போது நான் பகிரங்கமான வழி
கேட்டில் ஆவேன். நான் உங்கள் இறைவனை நம்பி விட்டேன். எனக்குச் செவி சாயுங்கள்! (என்றும்
கூறினார்). சொர்க்கத்திற்குச் செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது. அதற்கவர் "என்
இறைவன் என்னை மன்னித்ததையும் மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமுதாயத்தினர்
அறிந்து கொள்ளக் கூடாதா?'' என்றார்.
அல்குர்ஆன் 36:20-27
இந்த வசனத்தில் ஒரு நல்ல மனிதர் கொல்லப்பட்ட நிகழ்வைப் பார்க்கிறோம்.
வரலாற்றில் தூதுச் செய்தியைப் பரப்பிய நபிமார்கள் காப்பாற்றப்பட்டும்
இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான சதிகளைத் தூள் தூளாகவும் அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான்.
அதே போன்று நபிமார்கள் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள்.
தூதுச் செய்தியை ஏற்றுக் கொண்ட நல்லவர்கள் எதிரிகளிடமிருந்து
காப்பாற்றப்பட்டும் இருக்கிறார்கள். அதுபோல் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள்.
இந்த வரலாறுகளைத் தான் நாம் மேலே கண்டோம்.
இவ்வளவு எடுத்துக்காட்டுக்களையும் இங்கு கூறுவதற்குக் காரணம், ஏகத்துவப் பிரச்சாரம் என்று அடியெடுத்து வைக்கும் போது இதையெல்லாம்
கருத்தில் கொண்டு தான் இதன் அழைப்பாளர்கள் ஆரம்ப காலகட்டத்தில் களத்தில் இறங்கினார்கள்.
பள்ளிவாசல்களில் தொழத் தடை! மீறிச் சென்றால் அடி உதை! பொதுக்கூட்டங்களில்
பேசுவதற்குத் தடை! திருமணப் பதிவேடு மறுக்கப்படுதல்! அடக்கதலம் மறுக்கப்படுதல்!
தங்கள் உறவினர் இறந்த சோகத்தில் ஏற்கனவே வாடிக் கொண்டிருக்கும்
கொள்கைவாதிகளின் குடும்பங்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல! அப்படிப்பட்ட சமயத்தில் ஜனாஸா
விஷயத்தில் ஊர் தலைவர்கள், பஞ்சாயத்தினர்
காட்டுகின்ற ஆதிக்க, அதிகார வெறியாட்டங்கள்
கொடுமையிலும் கொடுமை!
ஆர்.டி.ஓ., தாசில்தார், காவல்துறை அதிகாரிகள் களத்திற்கு வந்து, அடக்கத்தலத்திற்கு வந்து ஜனாஸாவை அடக்கம் செய்யும் அநியாயங்கள்
இன்னும் பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள்
காவல்துறையில் புகார்கள் பதியப்படாத கிளைகள் இல்லை. நீதிமன்றங்களில்
நிலுவையில் வழக்கு இல்லாத கிளைகள் இல்லை. இந்தக் கொடுமைகள் ஏற்கனவே நடந்தும் இன்று
வரை நடந்து கொண்டும் இருக்கின்றன.
கூட்டுத் திட்ட கொலை முயற்சி
இவற்றின் உச்சக்கட்டமாக, இந்த வெறியாட்டத்தின் சிகரமாக நடந்தவை தான் கொலை முயற்சிகள்.
இதன் ஒரு கூறு தான் பி.ஜே. அவர்களை மேலப்பாளையத்தில் கொத்திக் கூறு போட நடந்த ஒரு கொலை
முயற்சி! இது தமிழக அளவில் தீட்டப்பட்ட ஒரு கொலை சதித் திட்டம். கூலிப்படைகளை ஏவி விட்டு
கொலை செய்ய நடந்த திட்டம்.
இப்படி கொலை பீடங்களைக் கண்டு அரளாத, மிரளாத கொள்கைக் கூட்டத்தினர் தான் அன்று தவ்ஹீது பேரியக்கத்தில்
அலை அலையாகத் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். இளைஞர்கள் குறிப்பாகப் பெண்கள் ஏகத்துவப்
பொதுக்கூட்டங்களில் மொய்க்கத் தொடங்கினர். இப்படி ஓர் எழுச்சி அலையா? ஏகத்துவப் புரட்சியா? என்று தமிழக இயக்கங்களின் இமைகள் நிலை குத்தி நின்றன.
இந்நிலையில் பாபரி மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்தில்
ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்தச் சமுதாயத்திற்கு யார் தலைமை ஏற்பார் என்ற ஒரு எதிர்பார்ப்பு!
அப்போது தான் தியாகங்களின் சின்னங்களாகத் திகழ்ந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர்
தலைமை தாங்க முன்வந்தனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சமுதாயம் என்ற பெயரில் ஒரு சிலர் தவ்ஹீத்
ஜமாஅத்தினருடன் தொடர்பு கொண்டனர்.
அவர்கள், "ஜனநாயகம் ஓர் இணை வைப்பு; சட்டமன்ற, நாடாளுமன்றங்கள்
இணை வைப்பின் கேந்திரங்கள்; தேர்தலில்
ஓட்டுப் போடுவது ஹராம்'' என்று மார்க்க
விளக்கமில்லாத, தெளிவில்லாத சித்ததாந்தங்களை
இஸ்லாமிய சிந்தனைகளாக மாணவர்கள் வட்டத்தில் மட்டும் பரப்பிக் கொண்டு, குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தனர்.
கல்லறை வழிபாடு, கண்மூடித்தனமான மத்ஹபு மாயை இவையெல்லாம் இவர்களுக்கு சில்லறைச்
செய்திகளாகவும், செல்லாக் காசுகளாகவும்
தெரிந்தன.
விடுதிப் பிரச்சாரமும் வீதிப் பிரச்சாரமும்
இந்த இயக்கத்தினருக்கு தர்ஹாக்கள் எல்லாம் "தாகூத்' ஆக - வழிகேடுகளாகத் தெரியாது. அரசியல் தலைவர்கள் தான் இவர்கள்
தாகூத் என்று தெரியும்.
தர்ஹா, கப்ரு
வழிபாடுகள் கூடாது என்று சொன்னாலே இவர்களுக்குக் குமட்டல் வரும்; கோபம் வரும். மத்ஹபு விமர்சனம், தக்லீது கண்டனம் என்று சொல்லி விட்டால் போது இவர்களுக்கு அலர்ஜியும்
அஜீரணமும் ஏற்பட்டு விடும்.
இதற்குக் காரணம் இவர்களது தாய் இயக்கம் ஜமாஅத்தே இஸ்லாம். இவர்கள்
நட்சத்திர விடுதியில் இருந்து கொண்டு, சட்டை மடிப்புக் கலையாத சமரச அழைப்புப் பிரச்சாரம் செய்வார்கள்.
மடிப்புக் களையாத வெள்ளைச் சட்டையினருக்கு நடுவீதி, நடுச் சந்தியில் பிரச்சாரம் செய்வதெல்லாம் தெரியாது.
இப்படிப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாம் அமைப்பினருக்குப் பிறந்தது தான்
இந்த மாணவர் அமைப்பு! தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை என்பது போல் தாய்ச் சபையின் கொள்கையை அப்படியே
தரித்துக் கொண்டவர்கள்.
வந்தார்கள்! சென்றார்கள்!
இந்த மாணவர் இயக்கத்தினர் தவ்ஹீத் ஜமாஅத்தினருடன் சங்காத்தம்
கொண்டார்கள். நாங்களும் தவ்ஹீதுவாதிகள் தான் என்று நடித்தார்கள், நாடகமாடினார்கள். அடையாளமும் அறிமுகமும் இல்லாத இவர்களுக்கு
தவ்ஹீத் ஜமாஅத் ஓர் அறிமுகத்தை, அடையாளத்தை
ஏற்படுத்திக் கொடுத்தது.
செல்லாக் காசான இவர்களுக்கு இந்த ஏகத்துவக் கொள்கை செல்வாக்கைக்
கொடுத்தது, செல்வமும் கிடைத்தது. இப்போது
வெளியே போய் விட்டார்கள். பழைய கொள்கைக்கு மாறி விட்டார்கள். வந்த பாதைக்கே திரும்பி
விட்டார்கள்.
ஆனால் ஜனநாயகம் ஓர் இணை வைப்பு என்ற பழைய கருத்திற்குள் மட்டும்
திரும்பிப் போகவில்லை, போக மாட்டார்கள்.
காரணம்,
அந்தக் கொள்கைக்குப் போனால் அரசியல் பதவிகள் கிடைக்காது அல்லவா?
இது தவிர மீதி அனைத்திலும் பழைய கொள்கைப் பாதையில் தான் செல்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் தான் பிரிந்து சென்ற பின் கூலிப் படையை ஏவி விட்டு பி.ஜே.யைக் கொலை
செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வது, அல்லாஹ் இதுபோன்ற பல சதி வலைகளை விட்டும் தவ்ஹீதுவாதிகளைக் காப்பாற்றியிருக்கிறான்.
தூதுச் செய்தியைச் சமர்ப்பிக்க வந்த தூதர்களுக்கு எதிராகத் தொடர்ந்து
வந்த சதிகளை அல்லாஹ் தான் தூள் தூளாக்கினான். அந்தத் தூதர்கள் கொண்டு வந்த செய்தியைத்
தான் தவ்ஹீத் ஜமாஅத் மக்களிடம் எடுத்துச் செல்கின்றது.
எந்த ஆலிமும் சத்தியத்தை மக்களுக்கு மத்தியில் சொல்ல வராத போது
பி.ஜே.யும் அவருடன் இருந்தவர்களும் முன்வந்தனர். எதிர்ப்புகள் ஏவுகணைகளாக வந்து இறங்கின.
எத்தனையோ சதி வலைகள் பின்னப்பட்டன. இவர் சமர்ப்பிப்பது தூதர் கொண்டு வந்த செய்தி என்பதால்
அல்லாஹ் இவரைக் காப்பாற்றினான்.
அன்று சத்தியம் மக்களுக்கு முழுமையாகச் சென்றடையாத காலம். ஆனால்
இன்றோ,
அல்லாஹ்வின் அருளால் இந்தச் சத்தியத்தை ஏற்று நடக்கும் அடுத்த
தலைமுறை உருவாகி விட்டது.
அன்று அந்த ஆரம்பக்கட்டத்தில், குரல் வளை நெறிக்கப்பட்டால் குரல் கொடுக்க நாதியில்லாத அந்தக்
கால கட்டத்திலேயே கொலைக்கு அஞ்சாத தவ்ஹீது அழைப்பாளர்கள் இப்போதா அஞ்சப் போகிறார்கள்?
பி.ஜே.யோ மற்ற தவ்ஹீது அழைப்பாளர்களோ இறைத் தூதர்கள் அல்லர்!
இறைத் தூதர்களுக்குத் தான் அல்லாஹ்வின் பாதுகாப்பு என்ற வாக்குறுதியும் வளையமும் இருந்தது.
அந்த வளையம் இவர்களுக்குக் கிடையாது என்பதை நன்கு தெரிந்தே வைத்திருக்கிறோம்.
பி.ஜே. கொல்லப்படலாம்; அல்லது தானாக
மரணிக்கலாம். ஆனால் கூலிப் படையை ஏவிக் கொலை செய்யலாம் என்று கணக்குப் போடுகின்ற, குமுதம் ரிப்போர்ட்டருக்குப் பதறியடித்துப் பேட்டி கொடுக்கின்ற
இந்த வஞ்சகப் பேர்வழிகளுக்குச் சொல்கிறோம். பி.ஜே. முதல் கடைநிலை அழைப்பாளர் வரை உள்ள
இவர்களைக் கொலை செய்து விட்டால் இந்த இயக்கத்தை வேரறுத்து விடலாம் என்று கனவு காணாதீர்கள்.
இன்ஷா அல்லாஹ் ஏகத்துவத்தின் அழைப்பாளர்கள் புதைக்கப்பட மாட்டார்கள்.
விதைக்கப்படுவார்கள். ஒரு பி.ஜே. இடத்தில் ஆயிரம் அழைப்பாளர்கள் முளைப்பார்கள். அதனால்
இந்தக் கொலைச் சதிக்கு ஒருபோதும் இந்த இயக்கம் பயப்படாது. சத்தியத்திற்காக சாவதை, ஷஹாதத் சாவாக, தியாகச் சாவாக, சந்தோஷச் சாவாகவே இந்த இயக்கத்தினர் எடுத்துக் கொள்வார்கள்.
நம்பிக்கை கொண்டு ஃபிர்அவ்ன் முன்னிலையில் வீர மரணத்தைத் தழுவிய
மந்திரவாதிகள் முழங்கிய மந்திரச் சொற்களை முழங்கியவாறு இந்த இயக்கத்தினர் சாவார்கள், சரிவார்கள். இதை தவ்ஹீது அழைப்பாளர்கள் தங்களது பொது மேடைகளிலும், பயிற்சி முகாம்களிலும் சொல்லத் தவறுவதில்லை என்பதை இந்த நேரத்தில்
ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலை போனாலும் தவ்ஹீதுக் கொள்கையில் விலை போக மாட்டோம். அரசியல், புகழ், பதவி, பொருள், மிரட்டல்
இவற்றுக்காக நிலை மாற மாட்டோம். பச்சோந்தி போல் நிறம் மாற மாட்டோம்.
இதைச் சொல்லிக் கொள்ளும் அதே வேளையில், யாரும் வந்து எங்களைத் தாக்கி விட்டுப் போய் விடலாம் என்று சர்வ
சாதாரணமாக வாசலைத் திறந்து வைக்க மாட்டோம். இன்ஷா அல்லாஹ் மனித சக்திக்கு உட்பட்டு
எச்சரிக்கையுடன் இருப்போம்.
கடந்த காலங்களில் இவர்களைப் போன்ற நயவஞ்சகர்கள் நம்முடன் கலந்திருந்தனர்.
ஆனால் இப்போது இந்த இயக்கத்தில் தியாகச் சிந்தனையுடன், தூய மனதுடன் செயல்படுகின்ற எத்தனையோ சிங்கங்கள் இருக்கிறார்கள்.
அதனால் திறந்த வீட்டில் நாய் நுழைவது போல் நுழைந்து யாரையும் கடித்து விட்டுப் போய்
விடலாம் என்று இவர்கள் மனப்பால் குடிக்க வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.
ஒரு தவ்ஹீதுவாதி ஏழையாக இருப்பான். ஆனால் கோழையாக இருக்க மாட்டான்
என்பதை இந்தப் பச்சோந்திகளுக்குச் சொல்லி வைக்கின்றோம்.
EGATHUVAM OCT 2010