முதஷாபிஹாத் ஓர் ஆய்வு – 8
பி. ஜைனுல் ஆபிதீன்
பத்தாவது ஆதாரம்
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் திருக்குர்ஆனில் நபித்தோழர்களுக்கு
ஏதேனும் விளக்கம் தேவைப்படுமானால் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டுத் தெளிவு பெறுவது
வழக்கம்.
உதாரணமாக,
நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர்
உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது
குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.
அல்குர்ஆன் 4:101
இந்த வசனத்தில் எதிரிகளின் அச்சம் இருக்கும் போது தான் நான்கு
ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாகக் குறைத்துத் தொழுவதற்கு இறைவன் அனுமதிக்கின்றான்.
அச்சமற்று வாழக்கூடிய காலத்திலும் கஸர் செய்யலாமா? என்று
உமர் (ரலி) அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி விளக்கம்
கேட்டார்கள். இது குறித்து முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ்:
நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் நீங்கள் பூமியில்
பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால்
தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது (4:101) என்று தானே அல்லாஹ் கூறுகின்றான்! தற்போது மக்களுக்குப் பாதுகாப்பு
ஏற்பட்டு விட்டதே? என்று கேட்டேன்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்கு
ஏற்பட்ட வியப்பு எனக்கும் ஏற்பட்டது. எனவே, இது குறித்து
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது (இது) அல்லாஹ் உங்களுக்கு
வழங்கிய கொடை (சலுகை) ஆகும். அவனது கொடையை ஏற்றுக் கொள்ளுங்கள் என அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: யஅலா பின் உமய்யா (ரலி), நூல்: முஸ்லிம் 1108
நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன்
அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது என்ற (6:82) வசனம் இறங்கியவுடன், எங்களில் எவர்
தான் அநீதி இழைக்காதிருக்க முடியும்? என்று நபித்தோழர்கள்
கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அநீதி என்று
இறைவன் இங்கே குறிப்பிடுவது இணை வைத்தல் எனும் மாபெரும் அநீதியைத் தான் என்று விளக்கம்
அளித்தார்கள். (நூற்கள்: புகாரி, அஹ்மத்)
உங்களுக்குள் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அது பற்றி உங்களை விசாரிப்பான் என்ற
(2:284) வசனம் இறங்கியவுடன், மனதில் நினைப்பதைப்
பற்றியெல்லாம் இறைவன் விசாரிக்க ஆரம்பித்தால் எவருமே தப்ப முடியாதே? என்று நபித்தோழர்கள் அச்சத்துடன் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு
நபி (ஸல்) அவர்கள், உங்களுக்கு முன்னர் வேதக்காரர்கள்
கூறியதையே நீங்களும் கூறுகிறீர்களா? நாங்கள் செவியுற்றோம்; கட்டுப்பட்டோம் என்று கூறுங்கள் என்று சொன்னார்கள். உடனே எவரையும்
அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் என்ற (2:286) வசனம் இறங்கியது. (நூற்கள்: முஸ்லிம், அஹ்மத்)
இது போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை ஹதீஸ் நூற்களில் நாம் காணலாம்.
நபித்தோழர்களுக்குத் திருமறையின் எந்த வசனத்திற்கேனும் விளக்கம் தேவைப்பட்டால் உடனே
அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்கத் தவறியதே இல்லை என்பதற்கு இவை சான்றுகளாக
உள்ளன.
இப்படியெல்லாம் பல்வேறு வசனங்கள் பற்றி நபித்தோழர்கள் விளக்கம்
கேட்டுள்ளனர். இவ்வாறு கேட்ட போது ஒரு சந்தர்ப்பத்தில், ஒரேயொரு சந்தர்ப்பத்தில், ஒரேயொரு
வசனம் பற்றிக் கூட, இது எனக்கோ, உங்களுக்கோ விளங்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதே இல்லை.
கேட்கப்படும் போதெல்லாம் விளக்கம் அளிக்கத் தவறியதில்லை.
நபித்தோழர்கள் விளக்கம் கேட்ட பல்வேறு வசனங்களில் ஒரே ஒரு முதஷாபிஹ்
வசனம் கூட இருந்திருக்காது என்பதும் பொருத்தமாகப் படவில்லை.
அப்படி முதஷாபிஹ் வசனம் பற்றி நபித்தோழர்கள் கேட்டிருந்தால், (முதஷாபிஹ் யாருக்கும் விளங்காது என்ற கருத்துடையவர்களின் வாதப்படி), இது முதஷாபிஹ்; எனக்கு விளங்காது
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால
நபித்துவ வாழ்வில் தமக்கு அருளப்பட்ட எந்த ஒரு வசனத்தைப் பற்றியும், தமக்கு விளங்காது என்று கூறவே இல்லை. முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வைத்
தவிர வேறு எவரும் விளங்க முடியாது என்பது உண்மையானால் ஒரே ஒரு வசனம் பற்றியாவது நபி
(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு
கூறியதாக எந்தச் சான்றும் கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் எந்த வசனம் பற்றிக் கேட்கப்பட்ட போதும் விளக்கமளித்தார்களே
தவிர, விளக்கம் அளிப்பதில் முஹ்கம், முதஷாபிஹ்
என்றெல்லாம் பேதப்படுத்திக் கொண்டிருக்கவில்லை.
இங்கே இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல வசனங்கள்
விளக்கம் கூறாமலேயே எளிதில் அனைவருக்கும் புரிந்து விடும். வேறு சில வசனங்களை நபி
(ஸல்) அவர்கள் விளக்கத்தின் துணையுடனேயே புரிந்து கொள்ள இயலும். நபித்தோழர்கள் விளக்கம்
கேட்காத - எளிதில் விளங்குகின்ற - வசனங்களை விட, விளக்கம்
தேவைப்பட்ட வசனங்களிலேயே முதஷாபிஹ் வசனங்கள் இருக்க அதிக சாத்தியமுள்ளது. நபித்தோழர்களுக்கே
விளங்கச் சிரமமான வசனங்களில் ஒன்றிரண்டு முதஷாபிஹ் வசனங்கள் கூட இல்லாமல் இருக்குமா? அவ்வாறு இருந்திருந்தால் இவர்களின் வாதப்படி நபி (ஸல்) அவர்கள்
என்ன பதில் கூறியிருப்பார்கள்? இது முதஷாபிஹ் வசனம்; இது எனக்கும் விளங்காது; உங்களில் எவருக்கும்
விளங்காது;
அல்லாஹ்வுக்கு மட்டுமே விளங்கும் என்று தானே கூறியிருக்க வேண்டும்.
அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறாததே, குர்ஆனில்
விளங்காதது எதுவுமே இல்லை என்பதற்குத் தெளிவான சான்றாக உள்ளது.
பதினொன்றாவது ஆதாரம்
முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்களில் எவருக்கும் விளங்காது என்ற கருத்துடையவர்கள், முதஷாபிஹ் வசனங்கள் என்றால் யாவை? என்பதை நிர்ணயிப்பதில் பல அளவுகோல்கள் உள்ளன. ஆளுக்கு ஒரு விளக்கம்
தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் கருத்துப்படியும் பார்த்தால் முழுக் குர்ஆனும்
முதஷாபிஹ் என்ற வகையில் சேர்ந்து, முழுக்குர்ஆனும் அனைவருக்கும்
விளங்காது என்று கூற வேண்டிய நிலை ஏற்படும்.
முதஷாபிஹ் வசனங்கள் யாவை? என்பதைச்
சரியான சான்றுகளுடன் அறியும் போது, முதஷாபிஹ்
வசனங்களை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கல்வியில் சிறந்தவர்கள் விளங்க
முடியும் என்பதை உணரலாம். முதஷாபிஹ் வசனங்கள் எவை? என்பது
பற்றிய விளக்கமே அவை விளங்கக்கூடியவை என்பதற்கு மறுக்க முடியாத சான்றாக உள்ளது.
முதஷாபிஹ் எவை என்பது பற்றிய விளக்கம் இன்ஷா அல்லாஹ் இறுதியில்
கூறப்படும் போது இதை அனைவரும் அறியலாம்.
ஹதீஸ் கலை ஆய்வு தொடர்: 12
மதம் மாறியவனைக்
கொல்ல வேண்டுமா?
எம். அப்பாஸ் அலீ, எம்.ஐ.எஸ்.சி.
ஏகோபித்தக் கருத்தில் ஏன் தடுமாற்றம்? மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்பதை அனைத்து அறிஞர்களும் ஏகமனதாக
ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. மதம் மாறியவனைக்
கொல்ல வேண்டும் என்று சொல்பவர்கள் கூட சில நேரங்களில் கொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்கள்.
ஒரு பெண் மதம் மாறிவிட்டால் அவளைக் கொல்லக் கூடாது என்று ஹனஃபீ மத்ஹபைச் சார்ந்த பல
அறிஞர்கள் கூறுகிறார்கள். பெண் ஆயுதங்களைத் தூக்கி போர் செய்ய மாட்டாள் என்பதே இதற்குக்
காரணம். இஸ்லாத்திற்கு ஒருவன் புதிதாக வந்து விட்ட சிறிது நாளில் மதம் மாறிவிட்டால்
இவனுக்கும் இச்சட்டம் பொருந்தாது என்றும் சிலர் கூறுகிறார்கள். மொத்தத்தில் மதம் மாறியவர்களைக்
கொல்ல வேண்டும் என்ற சட்டத்தைக் கூறுபவர்கள் கூட இச்சட்டத்தைச் சிலருக்குப் பொருத்துகிறார்கள்; சிலருக்குத் தளர்த்துகிறார்கள் என்பதே உண்மை. மதம் மாறியவரைக்
கொல்ல வேண்டும் என்ற இந்தச் சட்டத்தில் மாற்றுக் கருத்துள்ளவர்களும் இருக்கிறார்கள்.
நாம் மட்டும் இதை மறுக்கவில்லை. இமாம் சுஃப்யான் சவ்ரீ மற்றும் அந்நஹயீ ஆகிய இருவரும், மதம் மாறியவன் கொல்லப்படக் கூடாது. அவன் மரணிக்கும் வரை திருந்திக்
கொள்ளும் படி அவனுக்குக் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இக்காலத்து அறிஞர்கள்
பலர் நம்மை விட இச்சட்டத்தைப் பலமாக மறுத்துள்ளார்கள்.
எதிர் வாதங்களும், முறையான பதில்களும்
மதம் மாறியவனைக் கொல்லுமாறு மார்க்கம் சொல்லவில்லை என்பதற்குப்
பல குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டினோம்.
எதிர்க் கருத்தைக் கொண்டவர்கள் இவற்றில் பெரும்பாலான ஆதாரங்களுக்குப் பதில் சொல்லாமல்
ஒன்றிரண்டு ஆதாரங்களுக்கு மட்டும் அடிப்படையில்லாத பதிலைச் சொல்கிறார்கள்.
வாதம்: 1
மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற வசனம் யாருக்காக இறங்கியதோ
அவர்களுக்கு மட்டும் தான் நிர்பந்தம் இல்லை என்ற சட்டம் பொருந்தும் இந்த அடிப்படையில்
இஸ்லாத்திற்குள் வராமல் இருப்பவரை இஸ்லாத்திற்கு வருமாறு நிர்பந்திக்கக் கூடாது என்பதை
மட்டும் தான் இந்த வசனம் சொல்கிறது. இஸ்லாத்திற்கு வந்து விட்டு மதம் மாறுபவனை நிர்பந்திக்கக்
கூடாது என்று இந்த வசனம் சொல்லவில்லை என்று வாதிடுகிறார்கள். இந்த வசனம் இறங்கியதற்கான
காரணத்தை விளக்கும் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். குழந்தைகள்
பிறந்து அக்குழந்தைகள் அனைத்தும் மரணித்து விடும் போது தனக்கு பிறக்கின்ற குழந்தை உயிரோடு
இருக்குமானால் அக்குழந்தையை யூதனாக மாற்றி விடுவேன் என்று (அறியாமைக் காலத்தில்) பெண்
தன் மீது கடமையாக்கிக் கொள்பவளாக இருந்தாள். பனூ னளீர் என்ற (யூதக் கூட்டம் ஊரை விட்டும்)
வெளியேற்றப்பட்ட போது அன்சாரிகளுடைய குழந்தைகளில் சிலரும் அதில் இருந்தார்கள். எனவே
அன்சாரிகள் எங்கள் பிள்ளைகளை நாங்கள் (யூத மதத்தில்) விட்டு விட மாட்டோம் என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை.
வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது என்ற வசனத்தை இறக்கினான். அறிவிப்பவர்:
இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 2307
பிறப்பிலே யூதர்களாக இருந்தவர்களை இஸ்லாத்திற்கு வரும்படி நிர்பந்திக்கக்
கூடாது என்பதற்குத் தான் இந்த வசனம் இறங்கியது. இஸ்லாத்திற்கு வந்துவிட்டு மதம் மாறியவனைத்
திரும்ப இஸ்லாத்திற்கு வருமாறு வற்புறுத்துவதற்குத் தடையாக வசனம் இறங்கவில்லை. எனவே
மதம் மாறியவனை நிர்பந்திப்பதற்குத் தடையாக இந்த வசனத்தைக் காட்ட முடியாது என்று கூறுகிறார்கள்.
நமது விளக்கம்
இவர்கள் விளங்கியிருப்பது முற்றிலும் தவறானது. பெண்களை நிர்பந்தமாகச்
சொந்தமாக்காதீர்கள் என்று குர்ஆன் கூறுகிறது. இந்த வசனம் இறங்குவதற்கு முன்பு அறியாமைக்
காலத்தில் கணவன் இறந்த உடன் மனைவியை அக்கணவனின் சொந்தக்காரர்கள் மணம் முடித்துக் கொள்வார்கள்.
அல்லது தாங்கள் விரும்பிய ஆட்களுக்கு மணமுடித்து வைப்பார்கள். இதைக் கண்டித்து இந்த
வசனம் இறங்கியதாக புகாரியில் 4579வது எண்ணில் இடம்பெற்றுள்ள செய்தி
கூறுகிறது. கணவனை இழந்த பெண்னை நிர்பந்தப்படுத்தக் கூடாது என்பதற்குத் தான் இந்த வசனம்
இறங்கியது. எனவே திருமணமே செய்யாத பெண்ணை நிர்பந்திப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை
என்று இவர்கள் விளங்குவார்களா? நிச்சயமாக அவ்வாறு எவரும் விளங்க
மாட்டோம். மாறாக பெண்ணை நிர்பந்திக்கக் கூடாது என்ற பொதுவான தடையை வைத்துக் கொண்டு
எந்தப் பெண்ணையும் எந்த வகையிலும் நிர்பந்திக்கக் கூடாது என்றே விளங்குவோம். இது போன்று
அமைந்த வசனம் தான் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற வசனம். மார்க்கத்தில் எந்த
நிர்பந்தமும் கிடையாது என்று குர்ஆன் சொல்வதால் எதுவெல்லாம் நிர்பந்தமாகுமோ அவை அனைத்தும்
கூடாது என்று சொல்வது தான் குர்ஆனைப் புரிந்து கொள்ளும் முறையாகும்.
வாதம்: 2
மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறும் வசனம் மாற்றப்பட்டு
விட்டது என்று கூறி அதற்கு ஆதாரமாக, இணை வைப்பவர்களிடத்தில்
போர் புரியுமாறு கட்டளையிடும் வசனங்களைக் காட்டுகின்றனர். இந்த வசனங்களின் அடிப்படையில்
மார்க்கத்தில் நிர்பந்தம் இருக்கிறது. எனவே இந்த வசனங்கள், நிர்பந்தம் இல்லை என்று கூறும் வசனத்தை மாற்றி விட்டன என்ற வாதத்தை
முன் வைக்கின்றனர்.
நமது விளக்கம்
மனோஇச்சையைப் பின்பற்றுவதற்குச் சிறந்த உதாரணமாக இந்த விளக்கம்
அமைந்துள்ளது. குர்ஆனுடைய சட்டம் மாற்றப்படுவதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொல்ல வேண்டும். முரண்பாடில்லாத வசனங்களுக்கு மத்தியில்
முரண்பாட்டை ஏற்படுத்தி ஒன்றை ஓரங்கட்டுவது முஸ்லிமிற்கு அழகல்ல. நிர்பந்தம் கிடையாது
என்று கூறும் வசனம் மாற்றப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்? மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கு அடுத்த வரியிலே ஒரு
காரணத்தையும் அல்லாஹ் இணைத்துச் சொல்கிறான். அந்தக் காரணம் இருக்கும் போதெல்லாம் அந்தச்
சட்டமும் நிலைத்திருக்கும். இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து
நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத
பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:256
இஸ்லாம் தெளிவான மார்க்கம் என்பதால் உண்மை எது, பொய் எது என்பதைச் சிந்திப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.
எனவே இவ்வளவு தெளிவான மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான். இச்சட்டத்தை
மாற்றிவிட்டு நிர்பந்தத்தை மார்க்கம் ஏற்படுத்தியதென்றால் தெளிவாக இருந்த இஸ்லாம் தெளிவை
இழந்து விட்டது. அதனால் நிர்பந்திக்கச் சொல்கிறது என்று பொருள் வரும். நபி (ஸல்) அவர்களால்
இஸ்லாம் மென்மேலும் தெளிவுபடுத்தப் பட்டதால் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற சட்டம்
மென்மேலும் வலுப்பெற்றது என்று தான் சொல்ல முடியும். (முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால்
பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக
ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா?
அல்குர்ஆன் 10:99
எல்லோருக்கும் நேர்வழி காட்டுவதை அல்லாஹ் நாடவில்லை. அல்லாஹ்வே
நாடாத போது நபியே நீ எப்படி நிர்பந்திப்பாய்? என்று அல்லாஹ்
கேட்கிறான். மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கு இது போன்ற காரணம் சொல்லப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு நிர்பந்தம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது என்று
சொன்னால் அல்லாஹ் எல்லோருக்கும் நேர்வழி காட்ட மாட்டான் என்ற விதியை மாற்றிக் கொண்டான்
என்று கூற வேண்டிய கட்டாயம். வரும்.
அதிகமான மக்கள் நேர்வழி இல்லாமல் மரணிப்பதை கண்ணால் பார்க்கக்
கூடிய நாம் இதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்? எனவே காரணங்களோடு
சொல்லப்பட்ட இந்த வசனம் மாற்றப்பட்டது என்று கூறுவது குர்ஆனை மறுத்த குற்றத்தில் நம்மைச்
சேர்த்து விடும். அல்லாஹ் நம் அனைவரையும் இதை விட்டும் பாதுகாக்க வேண்டும்.
வாதம்: 3
நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக
இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை)
மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும்
இல்லை.
நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று (முஹம்மதே!)
எச்சரிப்பீராக! அல்குர்ஆன் 4:137
மதம் மாறியவர்களைக் கொல்லக் கூடாது என்பதற்கு இந்த வசனத்தை நாம்
முன் வைத்தோம். இந்த வசனத்தின் பின்பகுதி நயவஞ்சகர்களைப் பற்றிப் பேசுவதால் இங்கு சொல்லப்பட்டவர்கள்
நயவஞ்சகர்கள் தான். மதம் மாறிகளைப் பற்றி இங்கு பேசப்படவில்லை. எனவே மதம் மாறிகளைக்
கொல்லக் கூடாது என்பதற்கு இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டக் கூடாது என்று எதிர்த் தரப்பினர்
கூறுகின்றனர்.
நமது விளக்கம்
இந்த வசனம் நயவஞ்சகர்களைக் குறிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை.
நயவஞ்சகர்களைக் குறிப்பதால் நாம் வைத்த வாதத்திற்கு இந்த வசனம் எப்படிப் பொருந்தாமல்
போகும்? நயவஞ்சகனாக இருப்பவன் மதம் மாறியாகவும் இருக்க முடியும். நயவஞ்சகர்களில்
மதம் மாறியவர்களைப் பற்றி இந்த வசனம் பேசுகிறது. இந்த நயவஞ்சகர்கள் ஈமான் கொண்டு பிறகு
மறுத்து விட்டதாக அல்லாஹ் சொல்கிறான். ஈமான் கொண்டு விட்டுப் பிறகு இறை நிராகரிப்பாளனாக
மாறியவன் மதம் மாறியவன் இல்லை என்று இவர்கள் சொல்லப் போகிறார்களா?
மதம் மாறிகளைக் கொலை செய்யக் கூடாது என்பதற்கு நயவஞ்சகர்களை
நபி (ஸல்) அவர்கள் கொலை செய்யாமல் விட்டதை முன்பே ஆதாரமாகக் காட்டினோம். நயவஞ்சகர்களைப்
பற்றி இந்த வசனம் பேசுவதால் இது மதம் மாறிகளைக் குறிக்காது என்று கூறுவது சிறுபிள்ளைத்
தனமானது. இமாம் புகாரி அவர்கள் ஸஹீஹுல் புகாரியில் மதம் மாறிய ஆண், மதம் மாறிய பெண் தொடர்பான சட்டம் என்று தலைப்பிட்டு அதற்குக்
கீழே பல வசனங்களைக் குறிப்பிடுகிறார்கள். மதம் மாறிகளைப் பற்றி பேசவில்லை என்று எதிர்த்
தரப்பினர் கூறிய மேலுள்ள வசனத்தையும் அங்கு பதிவு செய்துள்ளார்கள். மதம் மாறிகளைக்
குறிக்காத வசனத்தை சம்பந்தமில்லாமல் இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்து விட்டார்கள்
என்று இவர்கள் சொல்ல வருகிறார்கள். நமது கருத்திற்கு இந்த ஒன்றை மட்டும் ஆதாரமாக வைக்கவில்லை.
நாம் பல வசனங்களைக் கூறியிருக்கும் போது இந்த ஒன்றுக்கு மட்டும் தப்பான விளக்கத்தைக்
கொடுத்து விட்டு மீத வசனங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். வளரும் இன்ஷா
அல்லாஹ்
தொடர்: 3
ஜனநாயகம்
நவீன இணை வைத்தலா?
பி. ஜைனுல் ஆபிதீன்
மனிதச் சட்டங்களின் காரணமாகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.
குடும்பக்கட்டுப்பாடு போன்ற சட்டங்களும் இதன் காரணமாகவே கொண்டு வரப்படுகின்றன என்பது
ஜனநாயகம் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் துணைக் காரணங்கள்.
மதுக்கடைகளை அரசாங்கம் திறந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் குடித்தாக
வேண்டும் என்று அதன் அர்த்தமில்லை. குடித்தே ஆக வேண்டும் என்று எந்த நாட்டிலும் சட்டம்
இயற்ற முடியாது. நாம் குடிக்காமல் இருந்து கொள்வதற்கும் உரிமை உள்ளது.
அது போல் கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று
எந்தச் சட்டமும் இல்லை. மனிதச் சட்டங்கள் ஆட்சி புரியும் நாடுகளில் கோடானுகோடி பேர்
குடும்பக் கட்டுப்பாடு செய்யாமலேயே வாழ்கின்றனர்.
ஒன்றிரண்டு சட்டங்கள் இஸ்லாத்திற்கு எதிரானதை முஸ்லிம்கள் மீது
திணிக்கும் வகையில் அமைந்தால் அதை மட்டும் எதிர்த்து நின்று போராடி அதை ரத்துச் செய்ய
முடியும்.
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்குக் கட்டாய ஜீவனாம்சம் என்ற
சட்டம் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு
இந்த ஜனநாயகம் தான் காரணமாக அமைந்தது.
முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாக வாழ விரும்பினால் அதை எந்த மனிதச்
சட்டத்தாலும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்த நிலை!
வணக்க வழிபாடுகள் தவிர மற்ற விஷயங்களில் மனிதர்களுக்கு சட்டமியற்றும்
அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி மனிதர்கள் இயற்றும் சட்டங்கள் மார்க்கத்திற்கு
எதிராக இல்லாவிட்டால் அதற்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. மார்க்கத்திற்கு
எதிராக இருந்தால் அதை எதிர்த்துப் போராடும் கடமை நமக்கு உள்ளதே தவிர மனிதனுக்கு அல்லாஹ்
வழங்கிய அதிகாரத்தை ஒட்டு மொத்தமாகப் பறிப்பது நமது வேலையில்லை என்பதை இவர்கள் புரிந்து
கொள்ள வேண்டும்.
இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்க வேண்டும்.
மனிதச் சட்டம் என்ற வாதத்தை எடுத்து வைப்போர் எத்தனையோ மதரஸாக்கள், பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். பல நிறுவனங்களையும் தொழில்களையும்
நடத்துகின்றனர். அங்கெல்லாம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களே!
அது எப்படி?
தங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட நிறத்தில், குறிப்பிட்ட ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று கூறுவதன் மூலம்
சட்டமியற்றும் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.
தங்கள் நிறுவனத்துக்கு இத்தனை மணிக்குப் பணியாளர்கள் வரவேண்டும்; இத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிறார்களே!
இதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒரு குடும்பத் தலைவன் தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான்.
இப்படி எல்லா மனிதர்களும் தத்தமது வட்டத்துக்குள் சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கையில்
எடுத்துக் கொள்ளாமல் இல்லை.
அது போல் தான் நாட்டை ஆளும் பொறுப்பு சுமத்தப்பட்டவர்கள் அதற்குரிய
சட்டங்களை வகுக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இவ்வாறு
வாதிடுகின்றனர்.
முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் அவர்களால் இஸ்லாம்
கூறுகின்ற சட்ட திட்டங்களைச் செயல்படுத்தும் ஆட்சியை அமைக்க முடியாது. இத்தகைய நாடுகளில்
ஆட்சியைக் கைப்பற்றக் களமிறங்கும் கட்சிகளில் ஒரு கட்சி அதிகத் தீமை செய்யும் கட்சியாகவும், இன்னொரு கட்சி குறைந்த தீமை செய்யும் கட்சியாகவும் இருக்கலாம்.
நமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகத் தீமை செய்பவர்கள்
ஆட்சியைக் கைப்பற்றாமல் நம்மால் தடுக்க முடியும். இதை நாம் புறக்கணித்தால் மிகவும்
அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சிக்கு வரக் கூடிய நிலை நமது மடத்தனத்தால் ஏற்பட்டு விடும்
என்பதையும் இவர்கள் உணரவில்லை.
மனிதச் சட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஆட்சியை ஏற்படுத்த வாக்களிப்பது
ஒரு புறமிருக்கட்டும். அத்தகைய ஆட்சியில் நாம் அங்கம் வகிப்பதற்கும் நமக்கு அனுமதி
உண்டு.
நம்முடைய மானம், மரியாதை, நமது கொள்கை ஆகியவற்றை மீறாமல் அத்தகைய வாய்ப்பு நமக்குக் கிடைக்குமானால்
அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்பதற்கு யூசுப் நபியின் வரலாறு சான்றாக அமைந்துள்ளது.
யூசுப் நபியின் வரலாறு பற்றி அல்லாஹ் கூறும் போது, கேள்வி கேட்பவர்களுக்கு அவரது வரலாற்றில் சான்றுகள் உள்ளன என்று
அல்லாஹ் கூறுகின்றான்.
யூசுப் நபியவர்கள் இறைத் தூதராக இருந்தும் மனிதச் சட்டத்தின்படி
நடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றார்கள்.
இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்!
நான் அறிந்தவன்;
பேணிக் காப்பவன் என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 12:55
மேலும் மன்னர் இறைச் சட்டத்தின்படி ஆட்சி நடத்தவில்லை என்பதைப்
பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.
அல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை
எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார்.
அல்குர்ஆன் 12:76
அறிவுப்பூர்வமாகச் சிந்திக்காமல், குர்ஆனை உரிய முறைப்படி ஆராயாமல் அரை வேக்காட்டுத் தனமாக அணுகியதால்
தான் இந்த வாதத்தை எடுத்து வைக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
ஜனநாயகம் ஒரு இணை வைத்தலே என்பதற்கு இவர்கள் மற்றொரு ஆதாரத்தையும்
முன்வைக்கின்றனர்.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப முடிவு
செய்வதாகும். ஆனால் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் பெரும்பான்மைக்குக் கட்டுப்படக்
கூடாது என்று எச்சரிக்கிறது. எனவே பெரும்பான்மையினரின் முடிவை ஏற்க வேண்டும் என்பது
குர்ஆனுக்கு எதிரானது என்று கூறுகின்றனர். இதுவும் அரைவேக்காட்டுத் தனமே ஆகும்.
இதுபற்றியும் நாம் விரிவாகவும் விளக்கமாகவும் அறிந்து கொள்வோம்.
EGATHUVAM MAR 2009