Apr 12, 2017

அழகாய் தோன்றும் (அரசியல்) அமல்கள்

அழகாய் தோன்றும் (அரசியல்) அமல்கள்

எம். ஷம்சுல்லுஹா

மனிதனுக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட அல்குர்ஆன், இம்மை மறுமை நன்மைகளைப் பற்றி மிகத் தெளிவாகவே எடுத்துச் சொல்கின்றது.

இவ்வுலகிலும், மறு உலகிலும் மாபெரும் நன்மைக்குரியவர் யார்? மாபெரும் நஷ்டத்திற்குரியவர் யார்? என்பதையும் திருக்குர்ஆன் நமக்கு விளக்கி விடுகின்றது.

திருக்குர்ஆன் ஒருவனை மிகப் பெரிய நஷ்டத்திற்குரியவனாக, ஈடு இணையற்ற இழப்பையுடையவனாகக் கூறுகின்றது. திருக்குர்ஆனைப் படிக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் அந்த நஷ்டவாளி நாம் தானா? என்பதைச் சற்று சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் அந்த வகையைச் சார்ந்தவரில்லை என்றால் நமது பாதை சரியானது. நம்முடைய செயல்கள் அல்லாஹ் குறிப்பிடுகின்ற அந்த நஷ்டவாளிகளின் செயல்களாக இருந்தால் நம்முடைய பாதை தவறானது; அது வழிகேடு என்று விளங்கிக் கொண்டு மரணம், மறு உலகம் வரும் முன் திருந்திக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் அந்த நஷ்டம், சரிகட்ட முடியாத நஷ்டமாகும். இதைத் தான் அல்லாஹ் தன் திருமறையில் சொல்கிறான்.

செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.

அல்குர்ஆன் 18:103-105

தான் செய்யும் தீய அமலை, தூய அமலாகக் காண்பவன் தான் மிகப் பெரிய நஷ்டத்திற்குரியவன் என்று அல்லாஹ் குறிப்பிட்டு விட்டு, இவனுக்காகக் கவலைப்பட்டு உம்முடைய உயிர் பிரிந்து விட வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்கிறான்.

யாருக்கு அவனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாகக் கருதினானோ அவனா? (சொர்க்கவாசி?) அல்லாஹ், தான் நாடியோரை வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 35:8

இதற்குக் காரணம், இவர்கள் ஒரு போதும் திருந்த மாட்டார்கள்; இவர்களது உள்ளங்கள் இறுகிப் போய் விட்டன; இத்தகையவர்கள் அல்லாஹ்வினால் அழிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் பின்வரும் வசனம் விளக்குகின்றது.

அவர்களுக்கு நமது வேதனை வந்ததும் அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? மாறாக அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். (அல்குர்ஆன் 6:43)

எனவே இதன்படி யார் யாரெல்லாம் அழிக்கப்பட்டார்களோ அவர்கள் அனைவருக்கும் அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கியே காட்டியிருக்கின்றான். அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னுக்கு அவனது அமல் அழகாகத் தோன்றியது.

ஹாமானே! எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு! வழிகளை, வானங்களின் வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும். அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன் என்று ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. (நேர்) வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது. (அல்குர்ஆன் 40:36, 37)

அழிக்கப்பட்ட ஆது, ஸமூது கூட்டத்தினருக்கு அவர்கள் செய்த அமல்கள் அழகாகத் தோன்றின.

ஆது மற்றும் ஸமூது சமுதாயத்தினரையும் (அழித்தோம்). அவர்களின் குடியிருப்புக்களிலிருந்து இது உங்களுக்குத் தெளிவாகி விட்டது. அவர்களது செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். அவர்கள் அறிவுடையோராக இருந்த போதும் (நல்) வழியை விட்டும் அவர்களைத் தடுத்தான். (அல்குர்ஆன் 29:38)

இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டு, திருந்தாத அனைத்துச் சமுதாயங்களுக்கும் ஷைத்தான் அவர்களின் செயல்களை அலங்கரித்தே காட்டியிருக்கிறான்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டினான். இன்னும் அவனே இன்று அவர்களின் உற்ற நண்பன். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 16:63

அடையாளம் காண அழகான வழிகள்

ஷைத்தானின் இவ்வளவு பெரிய அலங்கார அமைலையும், அல்லாஹ்வின் சரியான வழியையும் அடையாளம் காண்பது எப்படி? என்ற கேள்வி இங்கே எழுகின்றது. இதை எளிதில் தெரிந்து கொள்ளும் விதத்திலேயே அல்லாஹ் அமைத்துள்ளான்.

1. பதில் இல்லாமை

ஷைத்தானின் வழிக்குப் பதில் கிடைக்காது.

இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா? என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்! என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள் என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.

பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, இவை பேசாது என்பதை நீர் அறிவீரே! என்றனர்.

அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா? என்று கேட்டார்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா? (என்றும் கேட்டார்.)

நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்! என்றனர்.

அல்குர்ஆன் 21:62-68

இப்ராஹீம (அலை) அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அந்த மக்களால் பதில் சொல்ல முடியவில்லை.

வாயடைத்துப் போன அரசன்

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன் என்று இப்ராஹீம் கூறிய போது, நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன் என்று அவன் கூறினான். அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்! என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 2:258

இவ்வாறு பதில் சொல்ல முடியாவிட்டால் அந்தப் பாதை தவறானது; அது ஷைத்தான் அலங்கரித்துக் காட்டும் மாய வழி, தீய வழி என்பதை விளங்கிக் கொள்ளலாம். இதைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர் வழியின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழி கெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 28:50)

2. போலிச் சாக்கு; பொய்யான நியாயம்

ஏகத்துவம் மிகைத்து விடும் போது, அசத்தியவாதிகள் இந்தக் கேள்விக் கணைகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் போது சாக்குப் போக்குகளை, சப்பைக்கட்டுகளை, நொண்டிச் சமாதானங்களை, நோஞ்சான் பதில்களைத் தருவார்கள். அதாவது தாங்கள் செய்யும் இந்தத் தவறான காரியங்களுக்கு ஒரு நியாயம் கற்பிப்பார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட போது இப்படிப்பட்ட பதிலைத் தான் அளித்தார்கள்.

நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன? என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 21:52, 53

ஏகத்துவத்தை எடுத்து வைத்த ஏனைய இறைத் தூதர்களின் சமுதாயங்களும் இதே பதிலைத் தான் கூறினார்கள். இதற்கு அல்லாஹ் பின்வருமாறு கேள்வி எழுப்புகின்றான்.

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன் 2:170)

இந்தக் கேள்விக்கும் அவர்களிடம் பதில் இல்லை. தங்களிடம் பதில் இல்லை என்றதும் தங்கள் பாதையை மாற்றி, தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றி, திருத்திக் கொள்ளவில்லை என்றால் ஷைத்தான் அழகாக்கிக் காட்டும் பாதையைப் பின்பற்றுகிறார்கள் என்றே அர்த்தம்.

ஷைத்தானின் தந்திரம்

நல்ல பாதை என்றால் அதை நம் பெற்றோர் ஏன் பின்பற்றவில்லை? நமது பெற்றோர் நரகவாசிகளா? என்ற நியாயத்தை ஷைத்தான் அவர்களது உள்ளத்தில் போடுகிறான். அவ்வளவு தான்! அவர்கள் நரகத்திற்குச் செல்லும் வரை அந்தப் பாதையை விட்டு நகர்வதில்லை.

இப்படி ஒவ்வொரு கெட்ட செயலுக்கும் ஷைத்தான் ஒரு நியாயத்தைக் கற்பிப்பான். அவனால் ஏமாற்றப்படுவோர் அவனது இந்தத் தந்திர வலையில் வீழ்ந்து விடுகின்றார்கள்.

அவனது வலையில் இறை மறுப்பாளர்கள் எப்படியெல்லாம் விழுந்தார்கள் என்பதை அல்லாஹ் நமக்குத் தெளிவாகக் குர்ஆனில் விளக்கிக் காட்டத் தவறவில்லை. அவற்றில் ஒன்றிரண்டைப் பார்ப்போம்.

தள்ளி வைக்கப்படும் புனித மாதங்கள்

துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு மாதங்களை அல்லாஹ் புனிதமாக்கி, அம்மாதங்களில் போர் செய்வதைத் தடை செய்திருக்கின்றான். மக்கத்து இணை வைப்பாளர்கள் முஹர்ரம் மாதத்தில் சண்டையிட்டு விட்டால் அதற்குப் பதிலாக ஸஃபர் மாதத்தைப் புனிதமாக்கி அதில் சண்டையிட மாட்டார்கள்.

இந்தச் சிந்தனை இவர்களுக்கு எப்படி வந்தது? ஷைத்தான் அவர்களிடம் ஒரு நியாயத்தைக் கற்பிக்கின்றான். வருடத்திற்கு நான்கு மாதங்கள் புனிதமானவை. அம்மாதங்களில் சண்டை போடக் கூடாது. அவ்வளவு தான்! அவை எந்த மாதங்களாக இருந்தால் என்ன? கணக்கு நான்கு மாதங்கள் தான். அதனால் புனித மாதத்தை அடுத்த மாதத்திற்குத் தள்ளிப் போடுவது தவறில்லை என்று ஒரு நியாயத்தை ஷைத்தான் அவர்களிடம் போடுகின்றான். அவர்களும் அதைத் தள்ளிப் போடுகின்றனர். ஆனால் இந்த நியாயத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவில்லை. இது உச்சக்கட்ட இறைமறுப்பு என்று மிக வன்மையாகக் கண்டிக்கிறான்.

(மாதத்தின் புனிதத்தை) தள்ளிப் போடுவது (இறை) மறுப்பை அதிகப்படுத்துவதே. இதன் மூலம் (ஏக இறைவனை) மறுப்போர் வழி கெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடம் அதன் புனிதத்தை நீக்கி விடுகின்றனர். மறு வருடம் அதற்குப் புனிதம் வழங்குகின்றனர். அல்லாஹ் புனிதமாக்கிய எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் புனிதமற்றதாக்கி விடுகின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 9:37

வறுமைக்குப் பயந்து குழந்தைகளைக் கொலை செய்தல்

வழிகேட்டில் செல்லக்கூடிய ஒவ்வொருவருக்கும் இப்படித்தான் ஷைத்தான் ஒரு நியாயத்தை ஏற்படுத்துகிறான். இதைத் தான் அல்லாஹ் அழகாய் தோன்றும் அமல் என்று கூறுகின்றான்.

இப்படி மக்கா முஷ்ரிக்குகளுக்கு அழகாய் தோன்றிய இன்னொரு செயல், தாங்கள் பெற்ற பிள்ளைகளைக் கொலை செய்வதாகும். அதற்கும் ஷைத்தான் அவர்களிடம் ஒரு நியாயத்தைப் போடுகின்றான். அதுதான் வறுமை!

வறுமையின் காரணமாக நாமே நம்மைக் காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கும் போது நம்முடைய பிள்ளைகளை எப்படிக் காப்பாற்ற முடியும்? அதனால் அந்தப் பிள்ளைகளைக் கொலை செய்து விடுவோம் என்ற முடிவுக்கு வருகின்றனர்.

இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன.

அல்குர்ஆன் 6:137

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

அல்குர்ஆன் 17:31

அந்தக் குழந்தைகளுக்கும் உங்களுக்கும் நாமே உணவு கொடுக்கின்றோம் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் சாட்டையடி கொடுக்கின்றான்.

இந்த விளக்கங்களைப் பின்னணியாகக் கொண்டு இன்றைய இணை வைப்பாளர்களுக்கு வருவோம்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்! என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:194, 195

இந்த வசனங்களை ஆதாரமாகக் காட்டி, நீங்கள் இறந்தவர்களிடம் கேட்காதீர்கள் என்று நாம் சொல்லும் போது, இந்த வசனங்கள் எல்லாம் சிலைகள் சம்பந்தப்பட்டவை என்று ஷைத்தான் இவர்களிடம் ஒரு நியாயத்தைப் போடுகின்றான்.

அஃறிணை அல்ல! உயர்திணை

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:20, 21

கல் இறந்து விட்டது; மண் மரணித்து விட்டது என்று உயிரற்ற பொருட்களுக்குக் கூற மாட்டோம். இறந்தவர்கள், உயிரற்றவர்கள் என்று அல்லாஹ் சொல்வதிலிருந்து நிச்சயமாக இது இறந்து போன பெரியார்களைத் தான் குறிக்கும் என்று நாம் கூறும் போது அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. அவர்களது நியாயம் அடிபட்டுப் போகின்றது.

தங்களிடம் பதில் இல்லை; தாங்கள் சொல்லும் நியாயமும் தவறானது என்றதும் பாதை திரும்பினார்களா? தவ்ஹீதுக்கு வந்தார்களா? இல்லை! தங்கள் அசத்தியத்தில் உறுதியுடன் நிற்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் செய்கின்ற அமல்கள் அவர்களுக்கு அழகாய்த் தோன்றுகின்றன.

அத்துடன் நில்லாது நம்மைக் கடுமையாக எதிர்க்கவும் செய்கிறார்கள். அதுவும் ஏகத்துவம் ஆளுக்கு மேல் ஆள் சேர்ந்து நாளுக்கு நாள் வளர்கின்றது என்று தெரிந்தும் எதிர்க்கிறார்கள். இதற்குக் காரணம், இவர்களது அமல்கள் இவர்களுக்கு அழகாகவும் நியாயமாகவும் தோன்றுவது தான்.

மக்கா இணை வைப்பாளர்கள் இதனால் தான் பத்ருப் போரைக் கண்டார்கள்.

ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகானதாகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை; நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன் எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த போது பின் வாங்கினான். உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்று கூறினான்.

அல்குர்ஆன் 8:48

மக்கா இணை வைப்பாளர்களின் வழியைத் தான் இன்று சுன்னத் ஜமாஅத்தினர் எனப்படுவோர் பின்பற்றுகின்றனர். இவர்களது அமல்களை ஷைத்தான் அலங்கரித்துக் காட்டுகின்றான்.

சாக்கடையில் சந்தனம்! கற்றாழையில் கஸ்தூரி!

இது இணை வைப்பாளர்களின் நிலை என்றால், நம்முடன் பயணம் செய்து பாதியில் இறங்கிச் சென்ற பங்காளிகளின் நிலை என்ன? அவர்களுக்கு ஷைத்தான் இன்று அரசியலை அழகாக்கிக் காட்டியுள்ளான். இவர்கள் சொல்லும் நியாயம் என்ன? ஷைத்தான் இவர்களிடம் போட்ட நியாயம் என்ன?

சாக்கடையைத் துப்புரவு செய்வது தான் இவர்கள் சொல்லும் நியாயம்! ஒரு போதும் எங்களுக்கு ஓட்டுக் கேட்டு உங்களிடம் வர மாட்டோம் என்று மேடைக்கு மேடை சத்தியமிட்டுச் சொல்லி கழகத்தை வளர்த்தவர்கள் இன்று ஓட்டுப் பொறுக்கி அரசியலில் ஈடுபடுவதற்குச் சொல்லும் காரணம் தான் - ஷைத்தான் இவர்களுக்கு அழகாக்கிக் காட்டிய நியாயம் தான் சாக்கடை உதாரணம்!

சாக்கடை இனி சந்தன ஓடையாக மாறப் போகின்றது; கற்றாழையில் இனி கஸ்தூரி வாடை வீசப் போகின்றது. வேம்பூ மாம்பூவாகப் போகின்றது. வெற்றிடம் இனி வெற்றி இடமாகப் போகின்றது என்றெல்லாம் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 542 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்ட கனவில் மிதக்கிறார்கள்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் வேண்டுமல்லவா? அதற்காகத் தான் இந்தச் சாக்கடைக் குளியல் என்று காரணம் கூறுகிறார்கள்.

நாளை ஒரேயொரு தொகுதி தான் என்று கூறி கருணாநிதி ஆப்பு வைத்து விடும் போது என்ன சொல்வார்கள்? நாம் ஒரு தொகுதியில் ஜெயித்தால் 234 தொகுதியிலும் ஜெயித்த மாதிரி என்று வியாக்கியானம் கூறுவார்கள். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நியாயத்தை ஷைத்தான் இவர்களுக்கு அழகாக்கிக் காட்டுகின்றான்.

சாதாரண மக்களே சாக்கடை என்று மூக்கைப் பொத்துகின்ற போது, ஒரு ஏகத்துவவாதி அதன் பக்கத்தில் நெருங்க முடியுமா? அந்த நெடியின் பக்கம் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியுமா? அதற்காக அரசியலே கூடாது என்று நாம் கூற வரவில்லை. மார்க்கத்தை அடகு வைக்கும் அரசியல் கூடாது என்று தான் கூறுகிறோம்.

கருணாநிதி வரும் போது எழுந்து நிற்கிறார்கள். இப்படி எழுந்து நிற்பது கூடுமா? என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

இலங்கையில் முஸ்லிம்களைக் கண்டமேனிக்கு துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்து, அவர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி, அவர்களின் சொத்துக்களை அபகரித்த விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடக்கும் மனிதச் சங்கிலியில் பங்கேற்கிறார்கள். இது சமுதாயத் துரோகம் இல்லையா? என்ற கேள்விக்குப் பதிலில்லை.

விடுதலைப்புலிகளின் அழிவுக்காக முஸ்லிம்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு ஆதரவாக இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று துவக்க விழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சிகளைத் தவிர, ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும், உலக நாடுகள் அனைத்துமே புலிகள், இலங்கை அரசு ஆகிய இரண்டு தரப்பும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் போது, இவர்கள் இலங்கை அரசை மட்டும் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இது, காட்டான்குளத்தூரில் தொழுது கொண்டிருந்த போது விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்குச் செய்யும் துரோகம் இல்லையா? என்று இவர்களிடம் கேட்டால் பதில் இல்லை.

* சட்டமன்றம் போனால் சபாநாயகர் வரும் போது எழுந்து நின்று மரியாதை

* காலஞ்சென்ற தலைவர்களுக்கு மவுன அஞ்சலி; இறந்து போன தலைவர்களை ஒரு நிமிடம் எழுந்து நின்று வணங்குதல்

* சட்டமன்ற, நாடாளுமன்ற வளாகத்தில் சிலை திறப்பில் பங்கேற்பு

* தலைவர்களின் உருவப்படங்களுக்கு மாலை மரியாதை

இப்படி இணை வைப்பின் பட்டியல் நீளுகின்றது.

தாய் மண்ணை வணங்குவோம் என்ற பாடல் வரிகளைப் பாடும் போது பக்தியாக வணங்குதல்

மாநகராட்சி மேயரைக் கூட வணக்கத்திற்குரிய மேயரே! என்று இணை வைக்கும் வார்த்தைகளைக் கூறியே அழைக்க வேண்டும்.

அரசாங்க நிகழ்ச்சிகளில் குத்து விளக்கு ஏற்றித் துவங்க வேண்டும். இது நெருப்பு வணங்கிகளின் வணக்க வழிபாடாகும்.

முதல் அமைச்சர், பிரதம அமைச்சர் வரும் போதெல்லாம் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.

ஓட்டுப் பொறுக்குவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு, அதை நிறைவேற்றாமல் இருப்பது.

தேர்தல் செலவுகளுக்காக வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் கட்டாய வசூல் வேட்டை

ஒன்றிரண்டு தொகுதிகளைப் பெறுவதற்காக சமுதாய நலனைக் குழிதோண்டிப் புதைத்தல்

இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.

இப்போது சொல்லுங்கள்! சாதாரண முஸ்லிமல்லாத ஒரு பாமரன் கூட இந்தச் சாக்கடையைக் கண்டு மூக்கைப் பொத்துகிறான். ஒரு தவ்ஹீதுவாதி இதன் அருகில் கூட நெருங்க முடியுமா?

இந்த அரசியல் வெறும் கழிவுகளைச் சுமந்து வரும் சாக்கடை அல்ல! திராவகத்தைத் திரவமாக, கந்தகத் தூளை அதன் சகதியாக, கதிர்வீச்சை அதன் வெப்பமாகக் கொண்டு ஓடுகின்ற ஓர் அணுஉலை ஓடையாகும். அது ஓடுகின்ற தடத்தை, அந்த மண்ணையே மலடாக்கி விடும். அருகில் உள்ள மரத்தையே அது பட்டுப் போகச் செய்து விடும்.

அப்படிப்பட்ட ஓடைக்கு அருகில் ஒரு தவ்ஹீதுவாதி ஒரு போதும் நெருங்க முடியாது. அதிலும் திருக்குர்ஆனில் இப்ராஹீம் நபி மற்றும் குகைவாசிகளின் புறக்கணிப்பு வரலாறைப் படித்த ஒரு ஏகத்துவ வாரிசுகள் ஒரு போதும் இந்த அணுக்கழிவு ஓடைக்கு அருகில் நெருங்க முடியாது.

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5


இந்த வசனத்தின்படி நமது இலட்சியமும் இலக்கும் ஏகத்துவம் தான். அந்த இலக்கை நோக்கிய இந்தப் பயணத்தின் ஊடே எத்தனை பேர் பாதி வழியில் இறங்கிப் போனாலும் நாம் இறங்க மாட்டோம். ஷைத்தான் அழகாக்கிக் காட்டும் அமல்களைப் பார்த்துச் சறுக மாட்டோம்; சருகாக ஆக மாட்டோம் என்று உறுதி பூணுவோம். அந்த உறுதியிலேயே உயிர் பிரிய அல்லாஹ்விடம் உருக்கமாகப் பிரார்த்திப்போம்.

EGATHUVAM MAR 2009