தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம்
ஆஷிக் சுக்ரியா, கடையநல்லூர்
சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு இறைவன் பல வழிமுறைகளை
நமக்குக் காட்டித் தந்துள்ளான். அதில் ஒன்று தான் அழகிய முறையில் விவாதம் செய்வதாகும்.
இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான். விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக!
அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை
அறிந்தவன்;
அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.
அல்குர்ஆன் 16:125
மேற்கண்ட வசனம் சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு விவாதக்
களம் காண்பதும் ஒரு வழிமுறை என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. பல நபிமார்கள் விவாத
முறையில் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்து அசத்தியவாதிகளை வாயடைக்கச் செய்துள்ளனர்.
இதற்குச் சிறந்த உதாரணமாக நம்முடைய தந்தை நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த
நிகழ்வுகளை நாம் கூறலாம். சிலைகளை வழிபடக்கூடிய மக்களிடம் அவர்களுடைய பிரச்சாரம் முழுவதுமே
விவாதப் போங்கில் தான் அமைந்திருந்தது.
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது
இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச்
செய்பவன் என்று இப்ராஹீம் கூறிய போது, நானும் உயிர்
கொடுப்பேன்;
மரணிக்கச் செய்வேன் என்று அவன் கூறினான். அல்லாஹ் கிழக்கில்
சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்! என்று இப்ராஹீம்
கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு
அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் 2:258
மேற்கண்ட வசனம் இப்ராஹீம் (அலை) அவர்கள் நாட்டை ஆளும் அரசனிடம்
விவாதப் போங்கில் சத்தியத்தை எடுத்துரைத்ததைப் பறைசாற்றுகின்றது.
நபி நூஹ் (அலை) அவர்கள் தம்முடைய சமுதாய மக்களிடம் அதிகமான அளவில்
விவாதம் செய்துள்ளார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் ஆணித்தரமான வாதங்களுக்கு அவர்களால்
பதிலளிக்க இயலாத போது நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம்
செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு
வாரும்! என்று அவர்கள் கூறினர். (பார்க்க: அல்குர்ஆன் 11:32)
இன்றைய காலத்தில் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியப் பிரச்சாரத்திற்கு
எதிராக எத்தனை,
எத்தனை எதிர்ப்பாளர்கள்!
தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பவர்கள் இரு பிரிவினராக உள்ளனர்.
ஒரு கூட்டம் அவர்களுடைய கொள்கையை நாம் விமர்சிப்பதால் நம்மை
எதிர்க்கிறார்கள். இவர்களில் பலர் மிகவும் நல்லவர்கள்.
ஆனால் இன்னும் ஒரு பிரிவினர் இருக்கின்றார்கள். இவர்கள் தான்
மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் நம்மை எதிர்ப்பதெல்லாம் தங்கள் உள்ளங்களில் கொண்டுள்ள
காழ்ப்புணர்வினால் மட்டும் தான். இவர்களில் பலர் மார்க்கப் பிரச்சாரம் செய்கிறோம் என்ற
பெயரில் வெளிநாடுகளில் சல்லிக் காசுகளுக்காகத் தஞ்சமடைந்தவர்கள். அல்லது வெளிநாட்டுக்
காசை நம்பி உள்நாட்டில் மார்க்க வியாபாரம் செய்பவர்கள். ஏசி அறைகளில் இருந்து கொண்டு
ஒன்றிரண்டு பயான்கள் செய்து கொண்டு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக் கொள்பவர்கள். கூலிக்காக
மட்டும் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்யும் இந்த மேதாவிகள் (?) தங்களுடைய எஜமானிய விசுவாசத்தை அதிகம் வெளிப்படுத்துவார்கள்.
தங்களுக்குச் சம்பளம் கொடுக்கும் அரபிகள் என்ன சொன்னார்களோ அது தான் இவர்களின் மார்க்கம்.
தங்களுடைய எஜமானர்களுக்கு எதிராக யார் எந்தக் உண்மையைச் சொன்னாலும் மார்க்கத்தின் பெயரால்
அவர்களை எதிர்க்கத் தயங்க மாட்டார்கள். அதற்காக மார்க்கத்தின் பெயரால் எத்தகைய இருட்டடிப்பையும்
செய்வதற்குத் தயாராவார்கள்.
சல்லிக் காசுகளுக்காக சத்திய மார்க்கத்தின் அடிப்படையைக் கூட
மாற்றியவர்கள் தான் இவர்கள்! குர்ஆன், ஹதீஸ் மட்டும்
தான் மார்க்கம் என்ற கொள்கையிலிருந்த இந்த மதனிகள், உமரிகள்
இதே கருத்தை மிகவும் வலிமையாக இவர்களை விடவும் அழுத்தமாக ஆழமாக தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம்
செய்த காரணத்தால், இஸ்லாத்தின் அடிப்படைகள் (குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்களைப் பின்பற்றுவது ஆகிய)
மூன்று என மாற்றிக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு கூறுவதால் அனைத்து மதனிகளும், உமரிகளும் இப்படித் தான் என எண்ணி விடாதீர்கள். இவர்களில் மிகவும்
நல்லவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகச் செய்த மாபாதகச் செயல்கள்
அனைத்தையும் நாம் பட்டியலிட்டு விட முடியாது. இவற்றையெல்லாம் நாம் இங்கே கூறுவதற்கு
ஒரு காரணம் இருக்கிறது.
ஜகாத் தொடர்பாக இறைச் செய்தியான குர்ஆன், மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தெளிவான சட்டத்தை
தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து வைத்த போது தவ்ஹீத் ஜமாஅத்தினர் மதம் மாறி விட்டனர் என்று எந்த
வித ஞானமுமின்றி ஃபத்வா கொடுத்தவர்கள் தான் இவர்கள். தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு எதிராக
இவர்கள் செய்த அவதூறுப் பிரச்சாரம் கொஞ்ச நஞ்சமல்ல! விவாதக் களத்தில் சந்திக்கத் துணிவில்லாமல்
வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிலும் இவர்கள் ஓடிய
ஓட்டம் தான் என்ன...... தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை எந்த ஒரு விவாதமாக இருந்தாலும்
உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; உண்மையை நிலை நாட்ட வேண்டும்
என்ற லட்சியங்களோடு தான் களம் இறங்குகிறோம். அதன் அடிப்படையில் தான் தொண்டியில் ஜனவரி
20ம் தேதி தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், விருதுநகரைச் சார்ந்த முஜீபுர் ரஹ்மான் உமரீ என்பவருக்கும் மத்தியில்
விவாத ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பிஜே, கலீல் ரசூல், பொதுச் செயலாளர்
அப்துல் ஹமீத்,
அப்துந் நாஸிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முஜீபுர் ரஹ்மான் என்பவர் சார்பாக அபு அப்தில்லாஹ் என்பவரும்
(இவர் அன்று முதல் இன்று வரை பிஜே என்கின்ற தனி மனிதரை எதிர்ப்பது ஒன்றை மட்டுமே கொள்கையாகக்
கொண்டவர். அதற்காகவே பல்லாண்டுகளாக ஒரு பத்திரிகையை வைத்து பிழைப்பு நடத்துகிறார்.
இயக்கப் பெயர்கள் வழிகேடு என்று கூறும் இந்த அதிமேதாவி பிஜே எதிர்ப்பு என்று வந்து
விட்டால் எந்த இயக்க வாதிகளுடனும் கைகோர்க்கத் தயங்க மாட்டார். சிலரை வழிகேடு என்று
கூறிவிட்டுப் பிறகு அவர்களுடனேயே கைகோர்த்தால் இவர் யார் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்)
அப்துர் ரஹ்மான் மன்பயீ, மற்றும் தமுமுக பிரமுகர்கள்
இருவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முஜீபுர் ரஹ்மான் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்துடன் கருத்து வேறுபாடு(?) கொண்டது முதல் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகப் பல்வேறு விதமான
அவதூறுப் பிரச்சாரங்களையும், விமர்சனங்களையும் செய்துள்ளார்.
ஜகாத் தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகப் பல்வேறு விதமான விமர்சனங்களைச் செய்துள்ளார்.
இது தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத் இவருக்கு விவாத அழைப்பு விடுத்திருந்து. (இது தொடர்பாக
விரிவான தகவல்கள் தேவைப்படும் போது வெளியிடப்படும்.) ஆனால் இவருடைய கருத்திலிருந்த
நூர் முகம்மது பாக்கவி அவர்கள் மிகத் தைரியமாக நம்முடைய விவாத அழைப்பை எதிர் கொண்டு
ஜகாத் தொடர்பாக முஜீப் என்பவரின் கருத்தை அப்படியே பிரதிபலித்தார்.
நூர் முகம்மது பாக்கவி அவர்களை நாம் பாராட்டியே தீர வேண்டும்.
ஏனென்றால் ஜகாத் விஷயத்தில் அவரளவில் தன்னுடைய கருத்தை அவர் சத்தியம் என நம்பியிருந்தார்
என்றே நமக்குத் தோன்றுகிறது. சில புல்லுருவிகளைப் போன்று வெளியில் நமக்கெதிராக மிகக்
கடுமையான முறையில் விமர்சனங்களைச் செய்துவிட்டு எதனை விமர்சனம் செய்தார்களோ அந்த விஷயத்தைப்
பற்றி எங்கள் முன்னிலையில் விவாதம் செய்ய முன்வாருங்கள் என்று அழைப்பு விடுத்தால் பின்னங்கால்
பிடரியில் அடிக்க ஓடுபவர்களைப் போன்று அவர் ஜகாத் விஷயத்தில் நடந்து கொள்ளவில்லை.
முஜீப் என்பவர் பல்வேறு மார்க்க விஷயங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தின்
சத்தியக் கருத்துக்களுக்கு எதிராக மிகக் கடுமையான முறையில் விமர்சனம் செய்துள்ளார்.
அவைகளில் சில விஷயங்கள் கொள்கை ரீதியிலானவையாகும். 1. இஸ்லாத்தில்
மூலாதாரங்கள் குர்ஆன், மற்றும் ஆதாரப்பூர்வமான ஸஹீஹான
ஹதீஸ்கள் ஆகிய இரண்டு மட்டுமே என தவ்ஹீத் ஜமாஅத் இவ்வுலகிற்கே ஓங்கி உரைக்கிறது. ஆனால்
முஜீப் என்பவர் இஸ்லாத்தின் அடிப்படைகள் இவ்விரண்டு மட்டுமல்ல. ஸஹாபாக்களின் சுயக்
கருத்துக்களையும் மார்க்கத்தின் ஆதாரமாகக் கொள்ள வேண்டும். அதுவும் மார்க்கத்தின் மூலாதாரங்களாகும்
என்பதைக் கொள்கையாக பிரச்சாரம் செய்து வருகின்றார்.
2. அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் குர்ஆனோடு நேரடியாக மோதக்
கூடிய செய்திகள் நபிகள் நாயகம் கூறியது கிடையாது. நபிகள் நாயகத்தின் மார்க்க போதனைகள்
அனைத்துமே இறைவனின் வஹீ செய்தியாகும். வஹீ செய்தி என்பதற்கு ஆதாரமே அவற்றில் முரண்பாடு
ஏற்படாது என்பது தான். எனவே குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்தவற்றை நிறுத்தி
வைக்க வேண்டும் என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.
ஆனால் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்து நபிகள் நாயகம் கூறியதாக
வரக்கூடிய எந்தச் செய்தியாக இருந்தாலும் அது ஹதீஸ் தான். இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள்
அனைத்து ஹதீஸ்களையும் மறுப்பதற்குரிய வாயில்களைத் திறந்து விட்டுள்ளார்கள். இவர்கள்
மனோஇச்சையைப் பின்பற்றுகிறார்கள் என முஜீப் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டிற்கு
எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
3. பிஜே அவர்களின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பிலும், விரிவுரையிலும் பல்வேறு தவறுகள் இருப்பதாக முஜீப் என்பவர் கடுமையாகக்
குற்றம் சாட்டியுள்ளார்.
4. பிஜே அவர்கள் ஸஹாபாக்களைத் திட்டுகின்றார் என முஜீப் என்பவர்
குற்றம் சாட்டியுள்ளார்.
5. பிஜே அவர்களினால் தான் குர்ஆன் மட்டும் போதும் என சொல்லக் கூடியவர்கள்
தோன்றினார்கள். மற்றும் காதியானிகள் தோன்றினார்கள் என முஜீப் என்பவர் கூறியுள்ளார்.
6. ஜகாத் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத் வழிகேட்டில் உள்ளது. நாங்கள்
தான் சத்தியக் கருத்தில் உள்ளோம் என முஜீப் என்பவர் கூறியுள்ளார்.
7. ஜாக் இயக்கத்தினர் இவருக்கு ஆதாரவாக இருப்பதினால் பிறை விஷயத்தில்
தவ்ஹீத் ஜமாஅத்தின் சரியான நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்தை முஜீப் என்பவர் சரி காண்கிறார்.
இது போன்ற இன்னும் பல விஷயங்களை வெளிநாட்டிலும் உள்நாட்டிலும்
அவர் மிகக் கடுமையான முறையிலும், விமர்சனக் கண்ணோட்டத்திலும்
எடுத்துரைத்துள்ளார்.
இப்படி தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக முஜீப் என்பவரும் அவருடைய
அடிவருடிகளும் பல விஷயங்களைத் திரித்து மாற்றிக் கூறியிருந்த காரணத்தினாலும், பல்வேறு இடங்களில் விவாதம் செய்யத் தயார் என்று அழைப்பு விடுத்த
காரணத்தினாலும் சத்தியத்தின் பேரியக்கமாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு முயற்சிகளை
எடுத்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்தவர்கள் மாயமாய் மறைந்து விடக்கூடாது என்பதற்காக
பல்வேறு விதமான கடிதத் தொடர்புகளுக்குப் பிறகு ஜனவரி 20ம் தேதி தொண்டியில் விவாத ஒப்பந்த அமர்வுக்கு ஏற்பாடு செய்தது.
ஒருவன், தான் எடுத்து வைக்கும் கருத்துகளில்
உண்மையாளன் என்பதற்கு ஆதாரம் அவன் யாருக்கு எதிராக என்னென்ன கருத்துகளை மிகக் கடுமையான
முறையில் மக்களுக்கு மத்தியில் முன் வைத்தானோ அதை சம்பந்தப்பட்டவருக்கு முன்னால் நிரூபிக்கத்
தயாரானவனாக இருக்க வேண்டும்.
ஆனால் முஜீப் என்பவர் விவாத ஒப்பந்த நிகழ்வின் போது, நான் பிஜே அவர்களின் திருக்குர்ஆன் விரிவுரை சம்பந்தமாக மட்டும்
தான் விவாதத்திற்கு வருவேன். மற்றவற்றிற்கு நான் தயார் இல்லை. என்று பல மணி நேரம் பிடிவாதம்
பிடித்தார். விவாத ஒப்பந்த சிடிக்களைப் பார்ப்பவர்கள் இதைத் தெளிவாகக் காணலாம். ஆனால்
தவ்ஹீத் ஜமாஅத்தினர், நீங்கள் எங்களுக்கு எதிராக பல்வேறு
விதமான கருத்துகளைப் பிரச்சாரம் செய்துள்ளீர்கள். ஆகையால் திருக்குர்ஆன் விரிவுரை சம்பந்தமாகவும்
நாம் விவாத்திற்குத் தயார். ஆனால் நீங்களும் நாங்களும் கருத்து வேறுபாடு கொண்டுள்ள
அனைத்து தலைப்புகளிலும் விவாதம் செய்ய வேண்டும் என ஆணித்தரமாக எடுத்துரைத்து அதற்காக
இப்போதே விவாத ஒப்பந்தமும் கையெழுத்தாக வேண்டும் என தெளிவான காரண காரியங்களோடு விளக்கியது.
இல்லை, இல்லை நாங்கள் திருக்குர்ஆன்
விரிவுரை சம்பந்தமாக மட்டுமே விவாதத்திற்கு வருவோம்; மற்றவற்றிற்கு
தனித்தனியாக விவாத ஒப்பந்தம் செய்வோம் என்று கூறி பின்வாங்கிக் கொண்டே சென்றார்கள்.
இறுதியில் சத்தியத்தின் பேரியக்கமாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுதியைக் கண்டவர்கள்
இதற்கு மேலும் நாம் பின்வாங்கினால் அது நமக்கு இழிவாக ஆகிவிடும் என்பதை உணர்ந்த பிறகு
அரைகுறை மனதுடன் மற்ற தலைப்புகளிலும் விவாதிக்கச் சம்மதித்தனர். ஆனால் திருக்குர்ஆன்
விரிவுரை சம்பந்தமாக விவாதம் முடிந்த பிறகு தான் மற்ற தலைப்பிற்கான காலத்தையும் இடத்தையும்
முடிவு செய்ய வேண்டும் எனக் கூறினர்.
மேலும் திருக்குர்ஆன் விரிவுரை சம்பந்தமாக இதுவரை மக்களுக்கு
மத்தியில் எடுத்து வைத்த தலைப்புகளைத் தான் விவாதிக்க வேண்டும் என முஜீப் என்பவரிடம்
தவ்ஹீத் ஜமாஅத்தினர் கூறினர்.
ஆனால் முஜீப் என்பவரோ விவாதம் என்பது சத்தியத்தை விளக்குவதற்குத்
தான் என்பதை உணராமல் அதை பிஜேக்கு எதிரான போட்டியாக எடுத்துக் கொண்டு, நான் இதுவரை விமர்சித்த கருத்துக்கள் மட்டுமல்லாமல் புதிய புதிய
தலைப்புகளையும் விவாதத்தின் போது கூறுவேன் என்றார்.
விவாதம் என்பது போட்டியல்ல. திடீரென்று எங்கிருந்தோ ஒரு கேள்வியைக்
கேட்டு ஜெயிப்பதற்கு. இது சத்தியத்தை விளக்குவதற்காக ஏற்பாடு செய்யப்படுகின்ற ஒன்று.
ஒருவன் தன்னுடைய கருத்தை நிலைநாட்டுவதற்கு இது வரை கூறாத புதிய ஆதாரங்களை விவாதத்தில்
எடுத்து வைக்கலாம். ஆனால் தலைப்பையே புதிதாக இனிமேல் தேடிக் கண்டுபிடித்து விவாதத்தின்
போது மட்டும் தான் கூறுவேன் என்பது சத்தியத்தை நிரூபிப்பதற்குரிய முறையல்ல என்பதை உணர்ந்திருந்த
தவ்ஹீத் ஜமாஅத்தினர் அதை முறையாக எடுத்து விளக்கி, நீங்கள்
எத்தனை கருத்துக்களை வேண்டுமானாலும் விவாதத்தில் வையுங்கள். ஆனால் அவை எவை என்கின்ற
அட்டவணையை எங்களுக்குத் தந்தால் தான் அவை தொடர்பான ஆதாரங்களை திரட்டி விவாதத்தின் போது
முறையாக எடுத்துரைக்க முடியும் என்பதை விளக்கிய பின் முஜீப் என்பவர் அதைத் தருவதாக
வாக்குறுதி அளித்தார். அதன் பிரகாரம் அவர் அந்த அட்டவணையை அளித்தார். அதில் முறையாக
இல்லாமல் பொத்தாம் பொதுவாக பிஜே மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யார் எப்படி நடந்து கொண்டாலும் அவர்களை விவாதக் களத்தில் சந்திக்க தவ்ஹீத் ஜமாஅத் ஒரு
போதும் தயங்காது.
திருக்குர்ஆன் விரிவுரை சம்பந்தமாக அதிகமான கருத்துகளை முஜீப்
என்பவர் எடுத்து வைத்துள்ளார். எனவே இவை அனைத்தையும் விவாதித்து முடிக்கும் வரை விவாதம்
தொடர வேண்டும். அல்லது குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற வேண்டும் என்ற
கருத்தை தவ்ஹீத் ஜமாஅத் முன்வைத்தது.
காரணம், ஒரு நாளில் இவ்வளவு விஷயங்கள்
குறித்தும் வாதப் பிரதிவாதங்கள் செய்வது கடினம். மேலும் விவாதத்தின் மூலம் மக்களுக்கு
உண்மையை விளங்க வைக்க வேண்டும் என்பது தான் தவ்ஹீது ஜமாஅத்தின் நிலை. ஒரு நாள் மட்டுமே
விவாதம் என்றால் அரைகுறையாக முடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அதுபோன்று, நேரமின்மை காரணமாக நாம் சில
விஷயங்களை விளக்க முடியாத நிலை ஏற்பட்டால், அதை வைத்துக்
கொண்டு, நான் இன்னின்ன கேள்விகள் கேட்டேன்; இவர்கள் பதில் சொல்லவில்லை என்று விவாதம் முடிந்த பின் முஜீப்
கூறிவிடக் கூடாது. இது போன்ற காரணங்கள் ஒரு நாளைக்கு அதிகமாக விவாதம் நடத்தப்பட வேண்டும்
என்று தவ்ஹீது ஜமாஅத் கூறியது.
ஆனால் முஜீப் என்பவர் ஒரு நாளுக்கு அதிகமாக விவாதம் செய்ய நான்
தயாரில்லை என்றுரைத்து அதிலேயே பிடிவாதமாக இருந்ததால் தவ்ஹீத் ஜமாஅத் அதற்கும் இறங்கி
வந்தது.
இன்ஷா அல்லாஹ் பிஜே அவர்களின் திருக்குர்ஆன் விரிவுரை தொடர்பான
விவாதம் 2009 மார்ச் 29 அன்று தொண்டியில் நடைபெறும்
என முடிவு செய்யப்பட்டது. இரு தரப்பிலும் தலா 100 பேர் மட்டுமே
அனுமதிக்கப்படுவர் என்பது போன்ற பல்வேறு ஒப்பந்தங்களும் அங்கே கையெழுத்தாகியது.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது.
உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.
(அல்குர்ஆன் 21:18)
உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே
உள்ளது. (அல்குர்ஆன் 17:81)
மேற்கண்ட இறைவசனங்கள் உண்மையான இறை நம்பிக்கையாளர்களுக்கு ஒரு
பாடத்தை உணர்த்துகின்றன. எப்படிப்பட்ட பெருங்கூட்டங்கள் அணிதிரண்டு நின்றாலும் சத்தியம்
தான் வெல்லும் என்பதே அந்த உண்மை. இவ்விவாதத்தின் மூலம் அல்லாஹ் சத்தியத்தை உலகுணரச்
செய்வானாக.
EGATHUVAM MAR 2009