Apr 12, 2017

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு – 9

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு – 9

பி. ஜைனுல் ஆபிதீன்

சில ஐயங்களும் விளக்கங்களும்

முதஷாபிஹ் எவை என்பது பற்றிய விளக்கத்தைத் தக்க சான்றுகளுடன் சமர்ப்பிப்பதற்கு முன் இதுபற்றிச் செய்யப்படும் தவறான பிரச்சாரங்கள் சிலவற்றை அடையாளம் காட்டுவது அவசியமாகும்.

தவறான பிரச்சாரம் - 1

இதுவரை யாருமே கூறாத - கூறத் துணியாத - எந்தத் தப்ஸீர்களிலும் கூறப்படாத ஒரு கருத்தை நாம் சொல்லி விட்டோமாம்! அதனால் இந்த விளக்கம் தவறாம்! இப்படிச் சிலர் புறப்பட்டிருக்கிறார்கள்.

இதில் இரண்டு விதமான தவறுகளை இவர்கள் செய்கிறார்கள்.

இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் குர்ஆனும், நபிவழியும் மட்டுமே என்பதை இவர்கள் மறுக்கின்றனர். யாருமே கூறாததாக இருந்தாலும் எந்தத் தப்ஸீரிலும் காணப்படாத கருத்தாக இருந்தாலும் குர்ஆன், ஹதீஸ் அதைக் கூறுமானால் நாமும் அதைக் கூறுவோம். அதனால் ஏற்படும் உலகத்து விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை.

நாம் இதுவரை எடுத்து வைத்த வாதங்கள் குர்ஆனின் எந்த வசனத்துடன் முரண்படுகின்றது? எந்த ஹதீசுடன் மோதுகின்றது? என்பதைத் தான் இவர்கள் கூற வேண்டுமே தவிர, அந்தத் தப்ஸீரில் இல்லை, இந்தத் தப்ஸீரில் இல்லை என்று தக்லீது செய்வது முறையல்ல என்று கூறிக் கொள்கிறோம்.

அடுத்து, முதஷாபிஹ் வசனங்களைக் கல்வியில் சிறந்தவர்கள் விளங்குவார்கள் என்று நாம் கூறியது யாருமே கூறாதது என்பது மாபெரும் அவதூறும் வீண்பழியுமாகும். இந்தக் குற்றச்சாட்டில் அவர்கள் வேண்டுமேன்றே அவதூறு சொல்கிறார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும், இப்னு மஸ்ஊது (ரலி) அவர்களும் இதையே கூறியுள்ளார்கள் என்பதைத் தகுந்த சான்றுகளுடன் முன்பே எழுதியுள்ளோம். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் தலை சிறந்த மாணவர் முஜாஹித் அவர்களும் இவ்வாறே கூறுகின்றார். (புகாரி)

குர்ஆன், ஹதீஸ் இரண்டை மட்டுமே பின்பற்ற வேண்டும்; தனிமனித வழிபாடு ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர்களில் முதல் இடத்தை வகிக்கின்ற அறிஞர் இப்னு குதைபா (ஹிஜிரி 126) அவர்கள், முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வும் கல்வியில் சிறந்தவர்களும் விளங்க முடியும் என்பதற்குத் தனி நூலே எழுதி அடுக்கடுக்கான சான்றுகளைச் சமர்ப்பிக்கின்றார்கள்.

முதஷாபிஹ் வசனங்களைத் தங்களின் தவறான கொள்கைக்குச் சான்றாக எடுத்து வைத்து வழிகெடுத்துக் கொண்டிருந்த ஜஹ்மிய்யா, கதிரிய்யா ஆகிய பிரிவினருக்கு மறுப்பாக, ஜஹ்மிய்யாக்களுக்கும் வழிகேடர்களுக்கும் மறுப்பு என்று நூல் எழுதிய இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்கள், ஜஹ்மிய்யாக்கள் தங்கள் கொள்கைக்குச் சான்றாக எடுத்து வைத்த வசனங்கள் ஒவ்வொன்றையும் விமர்சிக்கும் போது, இது முதஷாபிஹ் வசனம் என்று குறிப்பிட்டு விட்டு, அதன் சரியான விளக்கம் எது எனவும் தகுந்த சான்றுகளுடன் சமர்ப்பிக்கின்றார்கள்.

முதஷாபிஹ் வசனங்களுக்கு ஜஹ்மிய்யாக்கள் தந்த விளக்கம் தவறானது என்று குறிப்பிட்டு விட்டு, சரியான விளக்கத்தையும் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்கள் தருவதிலிருந்து, முதஷாபிஹ் வசனங்களின் பொருளை அறிஞர்கள் விளங்க முடியும் என்று தெளிவுபடுத்துகின்றார்கள்.

குர்ஆன், ஹதீஸ் இரண்டை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கைக்காகப் பிற்காலத்தில் மிகவும் தீவிரமாகப் போராடிய ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் முதஷாபிஹ் வசனங்களைக் கல்வியில் சிறந்தவர்களும் விளங்க முடியும் என்று கூறி விட்டு எண்ணற்ற சான்றுகளைச் சமர்ப்பிக்கின்றார்கள்.

இதற்கு எதிரான கருத்துக் கொண்டவர்களிலும் அறிஞர் பெருமக்கள் பலர் இருப்பது உண்மையே!

இரண்டு தரப்பினரும் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் எடை போட்டு, அதில் எது குர்ஆன், ஹதீஸ் இரண்டுக்கும் ஒத்ததாக உள்ளதோ அதையே ஏற்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பிரச்சனையை நாம் அணுகுகின்றோம்.

எவருமே கூறாததை நாம் கூறி விட்டோம் என்பது அவதூறாகும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

எவருமே கூறாததாக இருந்தாலும், கூறப்படுவது குர்ஆன் ஹதீஸ் போதனைகளுக்குப் பொருத்தமாக உள்ளதா? என்பது தான் உண்மை முஸ்லிம்களின் கவனத்தில் வர வேண்டும்.

தவறான பிரச்சாரம் - 2

கல்வியில் சிறந்தவர்களும் முதஷாபிஹ் வசனங்களை விளங்கலாம், விளங்க முடியும் என்று நாம் எழுதி வருகிறோம். கல்வியில் சிறந்தவர்கள் என்றால் யார்? என்ற விளக்கம் பின்னர் வரும் என்று முன்பே தெரிவித்துள்ளோம். நாம் என்ன எழுதுகிறோம் என்பதைக் கடைசி வரை பொறுமையாகக் கவனிக்க இயலாதவர்கள், மவ்லவிகள் தான் முதஷாபிஹ் வசனங்களை விளங்க முடியும் என்று நாம் கூறுவதாகவும், அரபி மொழி அறிந்தவர்கள் தான் விளங்க முடியும் என்று நாம் கூறுவதாகவும் பிரச்சாரம் செய்கின்றனர்.

கல்வியில் சிறந்தவர்கள் என்று நாம் கூறுவது மவ்லவிகளையோ, அரபி மொழி அறிந்தவர்களையோ அல்ல! அது பற்றிய விளக்கம் பின்னர் வரும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், குர்ஆனை யாராலும் விளங்க முடியும் என்று அடையாளம் காட்ட முன்வந்த போது, முஹ்கமான வசனங்களை விளங்க அரபி இலக்க அறிவு தேவையில்லை, முதஷாபிஹ் வசனங்களை விளங்க அரபி மொழியின் இலக்கண அறிவு தேவை என்று ஆரம்பத்தில் கூறியவர்கள் தான் இவ்வாறு விமர்சனம் செய்கிறார்கள்.

அரபு மொழி தெரிந்தவர்கள் தான் முதஷாபிஹ் வசனங்களை விளங்க முடியும் என்று கூறுபவர்கள் வழிகேடர்கள் என்று கூறுகின்றனர்.

இந்தத் தொடரின் எந்த ஒரு இடத்திலும், கல்வியில் சிறந்தவர்கள் என்றால் அரபு மொழி அறிவு உடையவர்கள் என்று எழுதவே இல்லை. அதன் விளக்கத்தை இனிமேல் எழுதுவோம் என்றே தெரிவித்து வருகிறோம்.

முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்களில் எவருக்கும் விளங்காது என்ற கருத்துடையவர்களின் வாதங்களை வரிக்கு வரி நாம் விமர்சனம் செய்திருப்பதை ஒப்புக் கொள்ளும் சில சகோதரர்கள், அவர்கள் எடுத்து வைக்கும் முக்கியமான ஒரு வாதத்திற்கு நாம் பதில் கூறவில்லையே! என்று சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே அதற்கும் நாம் விளக்கம் அளித்து விட்டு முதஷாபிஹ் என்றால் எவை என்ற விளக்கத்திற்குச் செல்வோம்.

மனிதர்களில் எவருக்குமே விளங்காதவற்றை இறைவன் ஏன் அருளினான் என்றால், ஈமான் கொள்கிறார்களா? இல்லையா? என்று சோதிப்பதற்காகத் தான் முதஷாபிஹ் வசனங்களை அருளினான் என்று முதல் சாரார் கூறியதற்கு நாம் பதில் அளிக்கவில்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டு.

மனிதர்கள் அனைவரும் இயற்கையாகவே முஃமின்களாக இருந்து விட்டால், இயற்கையாகவே குர்ஆனை நம்பியவர்களாக இருந்து விட்டால் அவர்களை எப்படியும் சோதிக்கலாம்; அதில் அர்த்தமிருக்கும்.

மனிதர்கள் இறைவனையும் நம்பாது, அவனது தூதரையும் நம்பாது வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர்களை நம்பச் செய்யும் பெரிய ஆதாரமாக இறைவன் அருளியது தான் திருக்குர்ஆன். அந்த ஆதாரமே விளங்காவிட்டால் அவர்கள் எப்படி இறைவனை நம்புவார்கள்?

அவர்களுக்கு என்ன சொல்லப்படுகின்றது என்று விளங்காத போது அவர்களை எப்படிச் சோதிக்க முடியும்?

இறைவனையும் தூதரையும் நம்ப வைக்கும் ஆதாரத்தையே நம்ப முடியாதவாறு இறக்கி வைத்து அவர்களைச் சோதிக்க வேண்டுமா? இதற்குப் பேசாமல் குர்ஆனை இறக்கி வைக்காமலேயே, அவர்கள் ஈமான் கொள்கிறார்களா? இல்லையா? என்று சோதிக்கலாமே!

ஆதாரங்களைத் தெளிவாக எடுத்து வைத்து விட்டு, இறைவனைப் பற்றிப் புரிய வைத்து விட்டு, அதன் பின் இறைவன் மனிதனுக்குப் பல சோதனைகளை வழங்கலாம். இந்தச் சோதனைகளுக்குப் பின்னரும் அவன் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றானா? இல்லையா? என்று சோதிக்கலாம். அதில் நியாயமிருக்கும். இறைவனைப் பற்றிப் புரிய வைப்பதற்காக எடுத்து வைக்கப்படும் ஆதாரமே சோதனையாக இருந்தால் ஒருவன் எப்படி ஈமான் கொள்வான்? இது ஏற்க முடியாத வாதமாகும்.

இனி முதஷாபிஹ் என்றால் என்ன? என்பதன் விளக்கத்தைக் காண்போம். இத்தொடரில் அது தான் மிகவும் முக்கியமானது என்பதால் அவற்றை விரிவாகவும் கவனமாகவும் அலசுவோம்.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM APR 2009