Apr 12, 2017

பாக்தாதைக் காக்காத பரிதாப முஹ்யித்தீன்

பாக்தாதைக் காக்காத பரிதாப முஹ்யித்தீன்

எம். ஷம்சுல்லுஹா

மார்ச் 26, 2003 - அமெரிக்கா, பிரிட்டன் தலைமையிலான பன்னாட்டுப் படைகள் பாக்தாதுக்குள் படையெடுத்துச் சென்றனர். பேரழிவு ஆயுதங்கள் (ரங்ஹல்ர்ய்ள் ர்ச் ஙஹள்ள் உங்ள்ற்ழ்ன்ஸ்ரீற்ண்ர்ய்) வைத்திருப்பதாக ஒரு பொய் சாக்கு சொல்லி அமெரிக்கா மற்றும் அதன் கைக்கூலிப் படைகள் ஐ.நா.வின் ஒப்புதல் இல்லாமல் இராக்கிற்குள் புகுந்தன.

இந்தப் படையினரின் குறி இராக்கின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிப்பது தான். அதற்கு ஒரே வழி சதாமைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும். அந்த முயற்சியில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஆதரவு நாடுகளும் ஏற்கனவே தோல்வியைச் சந்தித்திருந்தன. எனவே அவற்றின் அடுத்தக்கட்ட நடவடிக்கை சதாமைக் கொலை செய்வது தான். அதற்காக இராக்கில் அந்தப் படைகள் 2007ம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் குடிமக்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். 2008ல் ஐம்பது லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அருகில் உள்ள நாடுகளில் அடைக்கலம் புகுந்தவர்கள் மட்டும் இருபது லட்சம். இவ்வாறு ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது.

பச்சிளம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என சகட்டுமேனிக்கு, சரமாரியாக இந்தச் சண்டாளப் படையினரால் கொல்லப்பட்டனர். சிறையிலும் வெளியிலும் கற்பழிக்கப்பட்ட பெண்கள், கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட ஆண்கள், பெண்கள் என்று இந்தப் படையினர் செய்த அராஜகங்கள், அக்கிரமங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

ஜார்ஜ் புஷ் என்ற சண்டாளன் பதவி மாறிய பின்பும், உத்தம வேஷம் போடும் உபாமா பதவிக்கு வந்த பிறகும் இந்த அநியாயங்கள் நின்றபாடில்லை. இப்போது இங்கே நாம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறோம்.

அகிலத்தை ஆளும் முஹ்யித்தீன்?

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி இந்த இராக் நாட்டிலுள்ள பாக்தாதில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய பக்தர்கள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் கருதுகின்றனர்.

அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள்

அடக்கி விளையாட வல்லீர்

அகிலமோர் ஏழினையும் ஆடுங்கரங்கு போல்

ஆட்டி விளையாட வல்லீர்

மண்டலத் தண்டரை அழைத்தருகிருத்தியே

வைத்து விளையாட வல்லீர்

மண்ணகமும் விண்ணகமும் அணுவைத் துளைத்ததில்

மாட்டி விளையாட வல்லீர்

கண்டித்த கடுகில் ஏழு கடலைப் புகட்டிக்

கலக்கி விளையாட வல்லீர்

கருதரிய சித்தெலாம் வல்லநீர் அடிமை என்

கண்முன் வரு சித்தில்லையோ

நண்டளந் திருநாழியாவனோ தேவரீர்

நற்குணங் குடிகொண்ட பாத்துஷாவான குரு

நாதன் முஹ்யித்தீனே!

இந்தப் பாருலகத்தை முஹ்யித்தீன் தன் கையில் பந்தாக வைத்து, ஏழு உலகத்தையும் ஆடும் தொட்டிலாக்கி, அணுவுக்குள் மண்ணையும் விண்ணையும் நுழைத்து, கடுகுக்குள் ஏழு கடலையும் புகட்டி, கலக்கி விளையாட வல்லவராம்.

இவ்வாறு குணங்குடி மஸ்தான் என்ற கவிஞன் பாடுகின்றான். மஸ்தான் என்றால் போதை ஏறியவன் என்று பொருள்.

இந்த மஸ்தான் தான் பித்தம் தலைக்கேறி இப்படிப் பாடுகின்றான் என்று பார்த்தால் அரபி தெரிந்த மஸ்தான் எழுதிய யாகுத்பா என்ற பாடல் அதைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இருக்கின்றது.

அண்ட கோடியின் அச்சாணி

1

வானம், பூமி இரண்டிலும் வாழ்பவர்களின் குத்பு அவர்களே!

என்று யாகுத்பா என்ற அரபிப் பாடல் துவங்குகின்றது. இதிலிருந்து தான் இந்தப் பாடலை யா குத்பா - குத்பை அழைத்துப் பாடப்பட்ட கவிதை என்று குறிப்பிடுகின்றனர்.

வானத்தில் வாழ்பவர்கள் என்பதற்கு மலக்குகள் என்பதைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது. அப்படியானால் வானவர்களின் தலைவரே! அல்லது வானவர்களுக்கும் அச்சாணி போன்றவரே! என்பது இதன் பொருளாகின்றது.

வானவர் தலைவரான ஜிப்ரீல் (அலை), மீக்காயீல் (அலை) போன்றவர்களுக்கும் இவர் தலைவரா? அவர்களுக்கெல்லாம் இவர் தலைவர், அச்சாணி போன்றவர் என்பது வரம்பு மீறிய புகழ் இல்லையா?

அதே போன்று பூமியில் வாழ்பவர்கள் என்பதில், நபிமார்கள், அண்ணலாரின் அன்புத் தோழர்கள், இமாம்கள் அனைவரும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் இவர் தலைவர் என்பதையோ, அவர்களுக்கெல்லாம் அச்சாணி போன்றவர் என்பதையோ ஒரு முஸ்லிம் எப்படி ஏற்க முடியும்? இது இஸ்லாத்தின் கொள்கைக்கே முரணான ஒன்றில்லையா?

மகத்தான இரட்சர்

2

எல்லாக் காலங்களிலும் நேரங்களிலும் (எங்களைக்) காப்பாற்றும் மகத்தான ரட்சகரே!

இதுவும் யாகுத்பாவின் வரியாகும்.

எப்போதோ இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்ட ஒரு மனிதரை இவ்வாறு கூறி அழைப்பது இஸ்லாமியக் கொள்கைக்கு எவ்வளவு முரணானது?

நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 72:21, 22

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 7:188

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

அல்குர்ஆன் 35:13, 14

இதுபோன்ற எண்ணற்ற வசனங்கள், இறைவன் அல்லாத எவராக இருந்தாலும் அவர்களின் வாழ்வு முதல் சாவு வரை அனைத்துப் பிரச்சனைகளும் இறைவனின் அதிகாரத்திற்கு உட்பட்டவை தான் என்பதையும், அவனைத் தவிர எவருக்கும் எந்தவிதமான சுய அதிகாரமும் கிடையாது என்பதையும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விடுகின்றன.

எல்லாக் காலங்களிலும் எங்களைக் காப்பாற்றும் மகத்தான இரட்சகரே என்று இறந்து விட்ட ஒருவரை அழைப்பதற்கு ஒரு முஸ்லிம் எவ்வாறு துணிவான்?

இறைவனைத் தவிர எவரை அழைத்துப் பிரார்த்தனை செய்தாலும், பிரார்த்திக்கப்படுபவர் நபியாக இருந்தாலும், நல்லடியாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே! அவர்கள் ஒருக்காலும் இரட்சகராக ஆகவே முடியாது. இந்த அடிப்படையை உணராத காரணத்தினால் தான் எல்லாக் காலங்களுக்கும் மகத்தான இரட்சகரே என்று இந்தக் கவிஞனும் அவனது அபிமானிகளும் அழைக்கின்றனர்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அல்குர்ஆன் 7:194

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

அல்குர்ஆன் 7:197

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

அல்குர்ஆன் 22:73

இந்த வசனங்களையும், இதுபோன்ற கருத்தில் அமைந்த எண்ணற்ற வசனங்களையும் ஒருமுறை கவனியுங்கள். இந்த வசனங்கள் கூறும் உண்மைக்கு மாற்றமாக யாகுத்பாவின் மேற்கண்ட வரிகள் அமைந்திருப்பதை உணர முடியும்.

எவராக இருந்தாலும் அவர் அல்லாஹ்வின் அடிமையே! அணுவளவுக்குக் கூட அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. தங்களுக்கே சுயமாக உதவிக் கொள்ளவும் முடியாது. ஈயைப் படைக்கும் அளவுக்குக் கூட அவர்களுக்கு ஆற்றல் இல்லை என்ற போதனைகளையும், எல்லாக் காலங்களிலும் காப்பாற்றும் மகத்தான ரட்சகரே என்ற யாகுத்பா வரிகளையும் ஒருசேர எப்படி ஒருவன் நம்ப முடியும்?

இந்தப் பாடல் வரிகளை நம்பினால் அவன் திருக்குர்ஆனை மறுக்க வேண்டும்; திருக்குர்ஆனின் மேற்கண்ட வசனங்களை நம்பினால் அவன் யாகுத்பாவை மறுக்க வேண்டும்.

அனைத்து ஆற்றலும் கொண்டவர்

3

நீங்கள் விரும்பிய அத்தனை ஆற்றலையும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கி விட்டான். எனவே தாங்கள் அவனது படைப்புகளில் ஆற்றல் மிக்கவராயும் அவர்களின் கீழ்ப்படிதலுக்கு உரியவராயும் இருக்கிறீர்கள்.

இதுவும் யாகுத்பாவின் வரிகளாகும்.

ஒருவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்தாலும், அவர் விரும்பிய ஆற்றல் அனைத்தையும் அல்லாஹ் அவருக்கு வழங்கியதில்லை.

தான் எண்ணிய அனைத்தையுமே சாதித்துக் கொள்பவன் என்ற சிறப்புத் தகுதி இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு.

இவை அனைத்தும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளிலிருந்து பெறப்படும் உண்மைகளும் அதன் கொள்கைகளுமாகும். இந்த உண்மைகளுக்கு முரணாக மேற்கூறப்பட்ட யாகுத்பா பாடல் அடிகள் அமைந்துள்ளன.

மிகப்பெரும் இறைத்தூதர்களில் ஒருவரான நூஹ் (அலை) அவர்களின் மகன் தனது தந்தையின் வழியைப் பின்பற்றவில்லை. நிராகரிப்பவனாகவே இருந்தான். இறை மறுப்பாளர்களை அழிப்பதற்காக இறைவன் மாபெரும் வெள்ளப் பிரளயத்தைத் தோற்றுவித்தான். அதிலிருந்து காப்பாற்றிக் கொள்ள நூஹ் நபி இறைவனின் கட்டளைப்படி ஒரு கப்பலைத் தயாரித்து அதில் அவர்களும், அவர்களை நம்பிக்கை கொண்டவர்களும் ஏறிக் கொண்டனர். ஆனால் அதில் நூஹ் நபியின் மகன் ஏறிக் கொள்ளவில்லை. தன் மகனைக் காப்பாற்றுமாறு இறைவனிடம் அவர்கள் கேட்ட போது, அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல என்று கூறி இறைவன் மறுத்து விட்டான். இந்தச் சம்பவம் திருக்குர்ஆனின் 11வது அத்தியாயம் 42 முதல் 46 வரையிலான வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் தந்தை நேர்வழிக்கு வர வேண்டுமெனப் பெரிதும் விரும்பினார்கள். அவர்கள் விரும்பிய இந்தக் காரியம் கைகூடவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கூட அவர்கள் விரும்பிய ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அப்துல் காதிர் ஜீலானிக்கு விரும்பிய ஆற்றலையெல்லாம் இறைவன் வழங்கி விட்டான் என்று இந்தக் கவிஞன் உளறுகின்றான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தமது பெரிய தந்தை அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினார்கள். அவர் மரணப் படுக்கையில் இருந்த சமயத்தில் போதித்துப் பார்த்தார்கள். ஆனாலும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. இதற்காக நபி (ஸல்) அவர்கள் பெரிதும் கவலையுற்ற போது, நீர் விரும்பியவர்களை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது; மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான் என்ற (28:56) வசனம் இறங்கியது. (பார்க்க புகாரி 1360, 3884, 4675, 4772)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே அவர்களின் அனைத்து விருப்பங்களையும் அல்லாஹ் நிறைவேற்றித் தரவில்லை. அப்துல் காதிர் ஜீலானிக்கு இந்த ஆற்றலை அல்லாஹ் வழங்கினான் என்று இந்தக் கவிஞன் பாடுகின்றான்.

யரோ ஒருவன், முஹ்யித்தீனைப் புகழ்கிறேன் என்ற பெயரில் அவரை அல்லாஹ்வுடைய இடத்தில் தூக்கி நிறுத்துகின்றான். இந்தப் பாடலைத் தான் மவ்லவிகள் பவ்யமாக, பணிவாக, பக்தியாகப் பாடி வருகின்றனர்.

இப்போது நாம் கேட்கும் கேள்வி இது தான்.

பாக்தாத் மீது பன்னாட்டுப் படைகள் படையெடுத்து வந்த போது - அந்தப் படையினர் அங்குள்ள லட்சக்கணக்கான குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் அனைவரையும் இன்று வரை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் போது - உயிருடன் இருப்பவர்களையும் கை, கால்களை முடமாக்கி, கண்களைக் குருடாக்கி, காதுகளைச் செவிடாக்கி, சொந்த நாட்டிலேயே அம்மக்களை அகதிகளாக்கி அநியாயம் செய்து கொண்டிருக்கும் போது - இந்த சகலகலா வல்லவன், நினைத்ததை முடிப்பவன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அந்த மக்களை ஏன் காப்பாற்ற வரவில்லை?

முஹ்யித்தீன் மவ்லிதில் வருவது போல் பருந்தின் கழுத்தைத் திருகிச் சாகடித்து விட்டுப் பின் உயிர் கொடுத்தவர், செருப்பை ஸ்கட் ஏவுகணையாக அனுப்பி கொள்ளையர்களைக் கொன்று தன் பக்தர்களைக் காப்பாற்றியவர், ஜின்களை வசப்படுத்தியவர், குணங்குடி மஸ்தான் கூறுவது போல் பாருலகையே பந்தாக கைக்குள் வைத்து விளையாடுபவர் ஏன் இந்த பாக்தாதைக் காப்பாற்றத் தவறினார்?

புஷ்ஷின் பூதாகரப் படையை ப்பூ என்று தன் வாயால் ஊதி ஒழிக்காமல் ஏன் விட்டார்? இந்த மவ்லிதை ஓதும் சுன்னத் வல்ஜமாஅத் பக்தர்களே! மவ்லிதுப் பாடல் பாடும் மவ்லவிப் பாகவதர்களே! முஹ்யித்தீன் ஏன் பதிலளிக்கவில்லை? ஏன் காப்பாற்ற, கரை தேற்ற வரவில்லை? பதில் சொல்லுங்கள் பார்ப்போம். இதற்கு ஒருபோதும் உங்களால் பதில் சொல்ல முடியாது.

ஆனால் எங்களிடம் பதில் இருக்கின்றது. நாங்கள் பதில் சொல்கிறோம். எங்களுடைய சொந்தப் பதில் அல்ல! அது அல்லாஹ் குர்ஆனில் சொல்கின்ற பதில்!

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:20-21

முஹ்யித்தீன் இறந்து போனவர்; அவருக்கு வெளியே என்ன நடக்கின்றது என்று தெரியாது. இவர்களால் அறவே எதுவும் செய்ய முடியாது என்று அல்லாஹ் அடித்துச் சொல்கிறான்.

முஹ்யித்தீன் செவியுற மாட்டார்

நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

அல்குர்ஆன் 30:52

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

அல்குர்ஆன் 35:22

இந்த வசனத்தில், இறந்தவர்களும் உயிருள்ளவர்களும் சமமாக மாட்டார்கள் என்று குறிப்பிட்டு விட்டு, இறந்தவர்களை நீர் செவியேற்கச் செய்ய முடியாது என்று கூறுகின்றான்.

இவையெல்லாம், இறந்தவர்கள் ஒருபோதும் செவியுற மாட்டார்கள்; பதிலளிக்க மாட்டார்கள் என்பதற்குக் குர்ஆன் கூறும் தெளிவான சான்றுகள்.

அதனால் தான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் எழுந்து வந்து பதிலளிக்கவில்லை; பதிலளிக்கவும் மாட்டார். அப்படிப் பதிலளிப்பார் என்று ஒருவன் நம்பினால் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவன் ஆவான்.

பாக்தாதில் அடங்கியிருக்கும் முஹ்யித்தீனை இங்கிருந்து அழைப்பவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கட்டும். பாக்தாதில் உள்ள மக்களுக்கே பலனும் பயனும் தராத பரிதாபத்திற்குரிய முஹ்யித்தீன் நமக்குப் பதில் தருவாரா? சிந்தியுங்கள்.

மவ்லிது ஓதுவதை நிறுத்தி விட்டு, முஹ்யித்தீனைக் கடவுளாக்கும் அந்தப் பாழாய் போன பாடல் நூற்களை பகிரங்கமாகக் கொளுத்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள்.


குறிப்பு: அப்துல்காதிர் ஜீலானி ஒரு நல்லடியார். அவர் தன்னைக் கடவுளாக்குமாறு ஒரு போதும் சொல்லவே இல்லை. இவர்கள் தான் அவரைக் கடவுளாக்கி இருக்கின்றார்கள். அதைக் குத்திக் காட்டுவதற்காகத் தான், பரிதாப முஹ்யித்தீன் என்று தலைப்பிட்டிருக்கிறோம். முஹ்யித்தீனைக் குறை சொல்வதற்காக அல்ல!

EGATHUVAM APR 2009