Apr 19, 2017

ஸிஹ்ர் ஓரு விளக்கம் தொடர் - 9

ஸிஹ்ர் ஓரு விளக்கம் தொடர் - 9

பி. ஜைனுல் ஆபிதீன்

ஸிஹ்ர் மூலம் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டிருக்க முடியாது என்பதையும். அவ்வாறு நம்புவது ஏராளமான குர்ஆன் வசனங்களுக்கு எதிரானது என்பதையும் நாம் நிரூபித்தோம்.

நமது வாதங்களை மறுப்பதற்காக இஸ்மாயீல் ஸலபி எடுத்து வைத்த சில ஆதாரங்கள் அவருக்கே எதிராக அமைந்துள்ளதையும், சில ஆதாரங்கள் அவருடைய கருத்தை நிறுவ உதவவில்லை என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

அடுத்ததாக இஸ்மாயில் ஸலபி பின்வரும் வாதத்தை எடுத்து வைக்கிறார்.

பாதுகாக்கப்பட்ட நபி:

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்போர் பின்வருமாறு வாதம் செய்கின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸ் பல குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுகின்றது.

தூதரே! உமது இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்டதை எடுத்துரைப்பீராக! (அவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனது தூதுத்துவத்தை நீர் எடுத்துரைத்தவராக மாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களிலிருந்து பாதுகாப்பான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)

இந்த வசனம் மனிதர்களிடமிருந்து நபியை அல்லாஹ் பாதுகாப்பான் என்று உத்தரவாதப் படுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்றால் நபிக்கு அல்லாஹ் கொடுத்த பாதுகாப்பு எங்கே? அல்லாஹ் பாதுகாப்பான் எனும் போது நபிக்கு சூனியம் செய்ய முடியுமா? என்ற அடிப்படையில் வாதம் செய்கின்றனர்.

பீஜே அவர்களது தர்ஜுமா முதலாம் பதிப்பில் 357 ஆம் குறிப்பில் இந்த வசனத்தை முக்கிய சான்றாக அவர் முன்வைக்கின்றார். ஆரம்பத்தில் இந்த வசனம் தான் சூனிய ஹதீஸை மறுப்பதற்கு வலுவான வாதமாக முன்வைக்கப்பட்டது. இந்த வசனத்திற்கு இந்த ஹதீஸ் எங்கே முரண்படுகின்றது?

இந்த வாதத்திற்கு ஒரு வரியில் விடை கூறலாம்! அல்லாஹ் கூறியது போன்று நபி (ஸல்) அவர்கள் சூனியத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள் என்று தானே இந்த ஹதீஸ் கூறுகின்றது? இந்த வசனமும், ஹதீஸும் முரண்படவில்லையே! என்று கூறி விடலாம்.

உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்கள் தாக்கப்படவில்லையா? அவரது முகத்தில் இரத்தம் தோயவில்லையா?

கைபரில் யூதப் பெண், நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியை வழங்கினாள். நபி (ஸல்) அவர்கள் அதில் சிறிது சாப்பிட்டு விட்டார்கள். பின்னர், விஷம் கலக்கப்பட்ட செய்தி வஹீ மூலம் கிடைத்தது. அல்லாஹ் அவர்களைக் காத்தான்.

நபியவர்கள் தனது மரண வேளையில்,

நான் கைபரில் சாப்பிட்ட (விஷம் கலந்த) உணவின் வேதனையை இப்போது உணர்கிறேன். (புகாரி) என்றார்களே! அப்படியாயின் இந்த ஹதீஸ் 5:67 வசனத்திற்கு முரண்படுகின்றதா?

உண்மையில் 5:67 வசனத்தில் நபியைப் பாதுகாப்பதாக அல்லாஹ் உத்தரவாதம் அளிக்கின்றான். அந்த உத்தரவாதத்தின் அர்த்தம் என்னவென்றால் நபியை யாரும் கொல்ல முடியாது என்பதுதான். எனவே, கொல்ல முடியாது எனக் கூறும் குர்ஆன் வசனத்திற்குச் சூனியம் செய்யப்பட்டுப் பின்னர் பாதுகாக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் எந்த வகையில் முரண்படுகின்றது? என்று சிந்தித்துப் பாருங்கள்.

கொல்ல முடியாது என்பதுதான் 5:67 வசனத்தின் கருத்து என நாம் கூறவில்லை. அந்த வசனத்தின் அர்த்தமும் அதுதான். அந்த வசனம் குறித்த பின்வரும் பீஜே அவர்களின் விளக்கத்தைப் பொறுமையுடன் படித்துப் பாருங்கள்.

யாராலும் கொல்ல முடியாத தலைவர்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில் தான் வசித்தார்கள். வாயிற்காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை.

போர்க் களங்களிலும் பங்கெடுத்து கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கினார்கள். ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை. உம்மை இறைவன் காப்பான என்ற இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. (திருக்குர்ஆன் 5:67)

இப்படி அறை கூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிரூபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை.

இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் அவர்கள் என்றோ கொல்லப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படாதது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான நிரூபணம்.

என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதாரணமாக இன்றைய உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்துப் போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும்.

அன்றைய நிலையில் இவரைப் போல் சர்வ சாதாரணமாக எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மக்களோடு மக்களாக பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து தாம் கூறுவது இறை வாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிரூபித்தார்கள்.



இது ஆய்வாளர் பீஜே அவர்களின் தர்ஜுமா விளக்கக் குறிப்பின் 145ஆவது இலக்கத்தில் இடம்பெறும் விளக்கமாகும். இந்த விளக்கத்தில் எத்தனை இடங்களில் கொல்ல முடியாது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது?

ஆய்வாளர் பீஜே அவர்கள் 5:67 வசனம் நபி(ஸல்) அவர்களைக் கொல்ல முடியாது என்றுதான் கூறுகின்றது என்பதை மிக மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டே அந்த வசனத்திற்கு நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஹதீஸ் முரண்படுகின்றது என்று கூறியது நியாயமா? மார்க்கத்தில் பேணுதலைக் கடைப்பிடிக்கும் வழிமுறையாகுமா? வசனத்தின் அர்த்தத்திற்கே மாற்றமாக பேசலாமா? அல்லாஹ்வின் வார்த்தைக்கு அவன் நாடாத அர்த்தத்தைக் கற்பிக்கலாமா? என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்.

5:67 வசனம் சூனியம் பற்றிய கருத்தைக் கூறவில்லை என்று தெரிந்துகொண்டே அந்த வசனத்தை மக்கள் முன்வைத்துத் தன் மீது மக்களுக்கிருக்கும் நம்பிக்கை, தனக்கிருக்கும் வாதத்திறமை, பேச்சு ஆற்றல் மூலம் நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸிற்கு இது முரண்படுகின்றது என்று வாதிடுவது எந்த வகையில் நியாயம்?

இப்போது சூனியத்தை மறுப்பதற்கு இவர் வைக்கும் ஆயத்துக்களின் உண்மையான அர்த்தம், வாதங்களில் கூட இது ஐயத்தை ஏற்படுத்துகின்றதல்லவா?

சத்தியத்தைத் தேடும் எண்ணத்துடன் நடுநிலையோடு சிந்தித்தால் சூனியம் என்பது வெறும் தந்திர வித்தை என்ற தனது தவறான வாதத்தை வலுவூட்ட அவர் கையாளும் வசனங்களும் இதே அடிப்படையில்தான் தவறாகக் கையாளப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

இவ்வாறு வாதம் செய்யும் இஸ்மாயில் ஸலபி அதிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கவில்லை.

குறிப்பாக கீழ்க்கண்ட வாசகங்களைப் பயன்படுத்தி விமர்சனம் செய்கிறார்.

ஆய்வாளர் பீஜே அவர்கள் 5:67 வசனம் நபி(ஸல்) அவர்களைக் கொல்ல முடியாது என்று தான் கூறுகின்றது என்பதை மிக மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டே அந்த வசனத்திற்கு நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஹதீஸ் முரண்படுகின்றது என்று கூறியது நியாயமா? மார்க்கத்தில் பேணுதலைக் கடைப்பிடிக்கும் வழிமுறையாகுமா? வசனத்தின் அர்த்தத்திற்கே மாற்றமாக பேசலாமா? அல்லாஹ்வின் வார்த்தைக்கு அவன் நாடாத அர்த்தத்தைக் கற்பிக்கலாமா? என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்.

5:67 வசனம் சூனியம் பற்றிய கருத்தைக் கூறவில்லை என்று தெரிந்துகொண்டே அந்த வசனத்தை மக்கள் முன்வைத்துத் தன் மீது மக்களுக்கிருக்கும் நம்பிக்கை, தனக்கிருக்கும் வாதத்திறமை, பேச்சு ஆற்றல் மூலம் நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸிற்கு இது முரண்படுகின்றது என்று வாதிடுவது எந்த வகையில் நியாயம்?

நான் தெரிந்து கொண்டே இந்த வாதத்தை எடுத்து வைப்பதாகக் கூறி நோக்கம் கற்பிக்கிறார். ஆனால் இந்த வாதத்துக்கு முழுத் தகுதி பெற்றவர் இஸ்மாயீல் ஸலபி தான். தெரிந்து கொண்டே உண்மைக்கு மாறான கருத்தை அவர் தான் விதைக்கிறார். எப்படி என்று பார்ப்போம்.

இப்போது திருக்குர்ஆனின் எட்டாவது பதிப்பு உங்கள் கைகளில் தவழ்கிறது. முதல் பதிப்பில் இதையும் ஒரு வாதமாக நாம் எடுத்து வைத்திருந்தோம். அடுத்தடுத்த பதிப்புகளுக்காக நாம் மீண்டும் ஆய்வு செய்து வந்த போது இந்த வாதத்தில் சில கேள்விகள் எழுவதையும் அந்தக் கேள்விகளில் நியாயம் இருப்பதையும் அறிந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிர் பாதுகாப்பைத் தான் இவ்வசனம் சொல்கிறது என்பது தான் அதன் கருத்து என்பதால் நாமே கவனித்து அடுத்தடுத்த பதிப்புகளில் இந்த வாதத்தை நீக்கி விட்டோம். இவர் விமர்சனம் செய்வதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் நீக்கியதைத் தான் இப்போது பயங்கரமான வாதமாக எடுத்து வைக்கிறார்.

நாம் அடுத்தடுத்த பதிப்புகளில் இந்த வாதத்தை வைக்கவில்லை என்பதை இவரும் அறிந்திருக்கிறார். அதனால் தான் முதல் பதிப்பில் பீஜே இவ்வாறு குறிப்பிட்டார் என்று அவரே குறிப்பிடுகிறார்.

எந்த மனிதரின் கருத்தை மறுப்பதாக இருந்தாலும் அந்த மனிதர் அந்தக் கருத்தில் இப்போது இருந்தால் மட்டுமே விமர்சிக்க வேண்டும். அல்லது அந்தக் கருத்தில் இப்போதும் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாவிட்டாலும் விமர்சிக்கலாம். அந்தக் கருத்தில் அவர் இப்போது இல்லை எனும் போது தெரிந்து கொண்டே அதை விமர்சனம் செய்வது கயமைத் தனமாகும். ஆனால் முதல் பதிப்பில் நான் எழுதியதை அடுத்தடுத்த பதிப்பில் நானே நீக்கிய பிறகு அதை இப்போதும் நான் சொல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது தான் நேர்மையா? இவர் கேட்ட நியாயமா? மார்க்கத்தில் பேணுதலைக் கடைப்பிடிக்கும் வழிமுறையாகுமா? வசனத்தின் அர்த்தத்திற்கே மாற்றமாக பேசலாமா? அல்லாஹ்வின் வார்த்தைக்கு அவன் நாடாத அர்த்தத்தைக் கற்பிக்கலாமா? இத்தனை கேள்விகளும் இவரை நோக்கியே திரும்புகிறது.

இவர் சுட்டிக் காட்டுவதை விட அதிகக் கேள்விகள் அதில் எழுவது நமக்குத் தெரிந்து தான் அந்த வாதத்தை அறவே நீக்கி விட்டோம். அந்த வாதத்தை நாமே மாற்றிக் கொண்டிருக்கும் போது அதற்குப் பதில் சொல்லி நான் அந்தக் கருத்தில் தான் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விதைப்பது தான் நேர்மையா? இது தான் பேணுதலா?

குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கத்தின் அடிப்படை என்ற அறிவு கிடைக்கும் முன்பு கடந்த காலங்களில் சில பித்அத்களையும் நான் செய்துள்ளேன். அதையெல்லாம் எடுத்துக் காட்டி அதற்கும் இவர் மறுப்பு எழுதினாலும் எழுதுவார் போலும். எனவே நாம் இதற்குப் பதில் சொல்லத் தேவை இல்லை.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM NOV 2010