Apr 19, 2017

பள்ளி இடிப்பு பயங்கரவாதத்தை அங்கீகரித்த நீதிமன்றம்

பள்ளி இடிப்பு பயங்கரவாதத்தை அங்கீகரித்த நீதிமன்றம்

டிசம்பர் 6, 1992 - பட்டப்பகலில், வெட்ட வெளியில் ஓராயிரம் ஊடகங்களின் ஒளிப் பார்வையில் ஊர் உலகம் பார்க்க, மத்திய மாநில பாதுகாப்புப் படைகளின் பட்டாங்கமான துணையுடன் பாபரி மஸ்ஜித் ஒரு சில மணி நேரங்களில் இடித்துத் தகர்க்கப்பட்டது, தரைமட்டமாக்கப்பட்டது.

வன்முறைக் கூட்டம் கிளப்பி விட்ட பெரும் வெறியாட்டத்திற்கு, வான்முட்ட கிளம்பிய புழுதி மூட்டத்தின் ஊடே ஒரு வரலாற்றுச் சின்னம், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலம் பலியானது.

இந்த பயங்கரவாதச் செயலுக்கு, காவிக் கும்பலின் காட்டுமிராண்டித்தனத்திற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உரிய தண்டனை வழங்கும் என்ற ஏக்கத்தில் எதிர்பார்த்திருந்த சட்ட வல்லுனர்கள் முதல் சாதாரண பாமரர்கள் வரை தற்போது வெளியாகியிருக்கும் பாபரி மஸ்ஜித் நில வழக்கின் தீர்ப்பைக் கண்டு பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாயினர்.

இந்த ஏக்கத்தை, தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை, மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் டி.ஆர். அந்தியாருஜினா தனது எழுதுகோலில் வடித்திருக்கின்றார். அதை இப்போது பார்ப்போம்.

டிசம்பர் 6, 1992 அன்று பாபரி மஸ்ஜிதை வேட்டையாடிய வெறிக் கூட்டத்திற்கு (தண்டனை வழங்குவது ஒருபுறமிருக்கட்டும்.) அவர்களின் வெறியாட்டத்திற்கு ஒரு சிறு கண்டனம் கூட இல்லாதது இந்தத் தீர்ப்பின் மிகப் பெரிய கூறும் கோளாறும் ஆகும்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக 1994ஆம் ஆண்டு, உச்சநீதி மன்றம் வெளியிட்ட தீர்ப்பில் பின்வருமாறு தெரிவிக்கின்றது.

சொற்ப நேரத்திற்குள்ளாக ஒட்டுமொத்த கட்டடமும் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் வெட்கக் கேடு!

இடிக்கப்பட்டது நாட்டின் பழம்பெரும் வரலாற்றுச் சின்னம் மட்டுமல்ல! பெரும்பான்மையினர் தங்கள் மீது அத்துமீறி அராஜகமாக நடக்க மாட்டார்கள் என்று சிறுபான்மையினர் கொண்டிருந்த உயர்ந்த நம்பிக்கை, நீதியின் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தகர்த்தெறியப்பட்டுள்ளது.

சட்டம் தன் கடமையைச் செய்யும்; அதன் நடவடிக்கை தொடரும் என்று அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இது ஆட்டம் காணச் செய்து விடடது.

எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் மாநில அரசாங்கத்தின் கைகளை மட்டும் நம்பியிருந்த ஐநூறு ஆண்டு காலக் கட்டடம் தகர்த்தெறியப்பட்டு விட்டது.

இது உச்ச நீதிமன்றம் வெளியிட்ட வேதனையின் வெளிப்பாடாகும்.

இது நீதிமன்றம் வெளியிட்ட வேதனை என்றால், அப்போதைய பிரதமர் நரசிம்மராவின் மத்திய அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையைப் பார்ப்போம்.

அயோத்தியாவில் டிசம்பர் 6, 1992ல் நடைபெற்ற ராமஜென்ம பூமி பாபரி மஸ்ஜித் இடிப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயலாகும்.

இவர்கள் வெறும் ஒரு வழிபாட்டுத் தலத்தின் மீது தாக்குதல் தொடுக்கவில்லை. மாறாக, இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கை, மீது ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். அரசியல் சாசனம் போற்றுகின்ற சட்டத்தின் ஆட்சியை காலில் போட்டு மிதித்துள்ளனர்.

திடுமென ஒரு சில ஆயிரம் பேர்கள் அடங்கிய ஒரு கும்பல், கோடிக்கணக்கான இந்திய சமுதாயங்களின் உள்ளங்களை வரம்பு கடந்து புண்படுத்தியுள்ளனர் என்பது வெட்கக்கேடான செயலாகும்.

இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டு அவர்கள் பெரும் வேதனைக்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகியிருக்கின்றனர்.

இது மத்திய அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையாகும்.

பள்ளியை அதே இடத்தில் திரும்பக் கட்டித் தருவோம் என்று அப்போதைய பிரதமர் நரசிம்மராவும், மத்திய அரசும் 1992, டிசம்பர் 7 அன்றும், டிசம்பர் 27 அன்றும் அறிவித்தனர். பாபரி மஸ்ஜித் இடிப்பு எனும் அரக்கச் செயலின் தாக்கம் தான் மேற்கண்ட இந்த அறிவிப்புக்கள்.

தற்போது வெளியாகியுள்ள அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு, 1992, டிசம்பர் 6 அன்று நடந்த பள்ளிவாசல் இடிப்பு எனும் வெறிச் செயலை அறவே கண்டு கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல! சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலமானது ஏதோ காலி நிலம் என்பது போன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

பள்ளி இடிப்பு என்ற குற்றச் செயலை முடிந்து போன கதையாக்கியுள்ளனர்.

1. ஏற்கனவே அங்கிருந்த பள்ளியின் மையக் குவிமாடத்திற்குக் கீழ் அமைந்த பகுதியில் தான் ராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கை அடிப்படையில் அந்தப் பகுதி இந்துக்களுக்கு என்றும்,

2. ராமரின் சபுத்ரா, சீதா ரசோய் அமைந்த பகுதி நிர்மோகி அகாராவிற்கு என்றும்,

3. இவ்விரு சாராருக்கும் ஒதுக்கப்பட்ட இந்தப் பகுதிகளைத் தவிர எஞ்சிய பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு இந்து மனுதாரர்களுக்கும், ஒரு பகுதி முஸ்லிம்களுக்கும் வகுக்கப்படும் எல்லை வரையறைக்குத் தக்க வழங்கப்பட வேண்டும்.

"இன்று சர்ச்சைக்குரிய பகுதியில் பள்ளியே இல்லை'' என்ற அடிப்படையில் அமைந்த (தவறான) இந்தத் தீர்ப்பைச் செயல்படுத்தி, பங்கிடத் துவங்கினால் 6.12.1992 அன்று பள்ளிவாசலை இடித்த குற்றச் செயலை நீதிமன்றம் அங்கீகரித்து விடுகின்றது; அதைச் சட்டப்பூர்வமாக்கி விடுகின்றது.



ஒரு சொத்து தனக்குரியது என்று வழக்குத் தொடுத்த ஒரு சாரார், (பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நடந்தது போன்று) சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அந்தச் சொத்தின் அப்போதைய அமைப்பையோ, தோற்றத்தையோ, அதன் தன்மையையோ தனக்குச் சாதகமாக மாற்றினால் அந்த சாராருக்கு நீதிமன்றம் போட வேண்டிய முதல் உத்தரவு என்ன?

அந்தச் சொத்தை அது ஏற்கனவே இருந்த அதே தோற்றத்தில் ஆக்கித் தர வேண்டும் என்ற உத்தரவு தான்.

இந்தக் கடமையைத் தான் ஒரு நீதிமன்றம் செய்ய வேண்டும். இது தான் நீதி வழங்கும் சரியான சட்டத்தின் ஆரம்ப இலக்கணமாகும்.

தற்போதைய பாபரி மஸ்ஜித் வழக்கைப் போன்று சொத்தை அதே வடிவத்தில் திரும்பத் தர வாய்ப்பில்லை எனில், அப்போது நீதிமன்றத்தின் கடமை என்ன?

சட்டத்தைக் கையில் எடுத்து, அதற்குப் புறம்பாக நடந்த சாராருக்கு அந்தச் சொத்தின் பயனை அனுபவிப்பதற்கு அறவே அனுமதி தரக் கூடாது.

இது தான் நீதிமன்றத்தின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். இது தான் நீதி வழங்கும் சட்டத்தின் ஆரம்ப இலக்கணமாகும்.

நீதி வழங்கும் சட்டத்தின் இந்த ஆரம்ப இலக்கணத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் புறக்கணித்திருக்கின்றது.

தீர்ப்பின் திறனாய்வு

இந்தத் தீர்ப்பின் தன்மையை இப்போது அலசுவோம்.

பள்ளியின் மையக் குவிமாடத்தின் கீழ் தான் ராமர் பிறந்த இடம் இருந்தது, அல்லது இடிக்கப்பட்ட ராமர் கோயில் இடிபாடுகளில் தான் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்றே ஒரு பேச்சுக்கு ஒத்துக் கொண்டு உயர் நீதிமன்றத்தை நோக்கி ஒரு கேள்வியை எழுப்புவோம். அந்தப் பள்ளி அதே இடத்தில் இடிக்கப்படாமல் இருந்திருந்தால் உயர் நீதிமன்றம் இப்போது வழங்கிய இதே தீர்ப்பை வழங்கியிருக்குமா? நிச்சயமாக வழங்காது.

அவ்வாறு வழங்கினால், 500 ஆண்டு கால பழமை வாய்ந்த அந்தப் பள்ளிவாசலை தகர்க்கச் சொல்லி முதலில் நீதிமன்றம் உத்தரவு போட வேண்டும். அப்போது தான் (மூன்று பங்கு என்ற பாகப் பிரிவினைக்குத் தக்க) காலி நிலம் கிடைக்கும்.

இப்படி ஒரு தீர்ப்பு, பள்ளி உடைக்கப்படாமல் இருக்கும் போது சாத்தியமா? என்றால் நிச்சயமாக சாத்தியமில்லை என்பது தான் சரியான பதில்.

இது காலி நிலம் சம்பந்தப்பட்ட வழக்கல்ல! கட்டப்பட்ட ஒரு பள்ளிவாசல், சட்டத்திற்குப் புறம்பாக இடிக்கப்பட்ட வழக்கு! சட்டத்திற்குப் புறம்பான இந்தச் செயலை சாதகமாக்கிக் கொண்டு நிலத்தை மூன்று கூறாகப் பங்கிட வேண்டும் என்று நீதிமன்றம் இப்படி ஓர் உத்தரவைப் போடலாமா? இது எப்படி நியாயமாகும்?

சமரசம், தேசிய அளவிலான சமாதானம் என்பதை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகப் புரிகின்றது.

இதை முஸ்லிம்கள் இதே உணர்வில் புரிந்து கொண்டு ஒத்துக் கொண்டால் எந்தவித மதப் பிரச்சனையும் இருக்காது. எதிர்பார்க்கப்படுவதும் இந்த அமைதி நிலை தான்.

இந்த நோக்கம் நிறைவேறாமல் தீர்ப்பு ஒத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றால் இது முஸ்லிம்களின் உள்ளங்களில் ஆறாத ரணத்தையும் மாறாத வேதனையையும் பதியச் செய்து விடும்.


காரணம், தங்கள் வழிபாட்டுத் தலம் அநியாயமாக இடிக்கப்பட்டதை நீதிமன்றம் மன்னித்ததுடன் மட்டுமல்ல! அதைச் சரி கண்டு, சட்டப்பூர்வமாக ஆக்கி விட்டது என்று முஸ்லிம்கள் உறுதியாக நம்புகின்றனர்.

EGATHUVAM NOV 2010