Apr 30, 2017

பரமக்குடி துப்பாக்கிச் சூடு காரணம் தீண்டாமையே!

பரமக்குடி துப்பாக்கிச் சூடு காரணம் தீண்டாமையே!

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதியன்று, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பச்சேரி (பள்ளர் சேரி என்பது தான் பச்சேரி என்று அழைக்கப்படுகின்றது) என்ற ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவன் பழனி குமார் (வயது 16) கொலை செய்யப்படுகின்றான்.

தேவர் சமுதாயம் அதிகமாக வாழ்கின்ற முத்துராமலிங்கபுரத்திலும், தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமாக வாழ்கின்ற பச்சேரியிலும் முத்துராமலிங்கத் தேவரை தரக்குறைவாகத் தாக்கி சுவர்களில் எழுதப்பட்டிருந்தது. அதை இந்தப் பள்ளி மாணவன் தான் எழுதினான் என்பதால் அவன் கொலை செய்யப்பட்டுள்ளான். இதனைத் தொடர்ந்து தான் 6 பேர் பலியாகக் காரணமான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இது தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் சாரம்சமாகும்.

தற்போது துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக முதல்வரின் இந்தக் கருத்தை தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வன்மையாக மறுக்கின்றார்.

செப்டம்பர் 9ஆம் தேதியன்று நடந்த பதினாறு வயதுச் சிறுவனின் படுகொலைச் சம்பவத்திற்கும் கலவரத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிடுகின்றார். தன்னைக் கைது செய்தது தான் கலவரத்திற்குக் காரணம் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினமான செப்டம்பர் 11ஆம் தேதியன்று அவரது நினைவிடத்தில் ஜான் பாண்டியன் மரியாதை செலுத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்திருந்தது. மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ராமநாதபுரத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறி ஜான் பாண்டியனை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் காவல்துறை கைது செய்தது.

இது தான் கலவரத்திற்கு வித்திட்டது என்று ஜான் பாண்டியன் தெரிவிக்கின்றார்.

இதற்கிடையே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமைப் போராளிகள், அறிவு ஜீவிகள் அடங்கிய உண்மை அறியும் குழுவினர் செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் பரமக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய நகரங்களுக்கு வருகையளித்தனர். பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணங்கள், அது தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் விசாரித்து அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டனர். அதில் அவர்கள் முக்கியமாகக் குறிப்பிடுவது தீண்டாமையைத் தான்.

அந்தப் பகுதியிலும், மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்திலும் அதிக ஆதிக்கம் கொண்டுள்ள ஒரு சாதியினரிடம், இம்மானுவேல் சேகரனின் குருபூஜை பெரிய அளவில் நடைபெறக் கூடாது என்ற எண்ணம் குடி கொண்டிருக்கின்றது. இது தான் கலவரத்திற்கும் துப்பாக்கிச் சூட்டிற்கும் காரணம் என்று அந்த உண்மை அறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ராமநாதபுரம் பகுதிகளில் முத்துராமலிங்கத் தேவருக்கு இதே போன்ற குருபூஜை என்ற பெயரில் நினைவு விழா நடத்தப்படுகின்றது. இந்த நினைவு விழாவில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர், சாதி சங்கத் தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு கலந்து கொள்கின்றார்கள். இதற்கு நிகராக இம்மானுவேல் சேகரனின் நினைவு விழா நடத்தப்பட வேண்டும் என்று தலித்துகள் நினைக்கின்றார்கள்.

பொதுவாகவே நமது நாட்டில் தலித்துகளுக்கு தனிக் குவளைகள் வைக்கப்படும் தேநீர்க் கடைகள் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை.

உயர் ஜாதியினர் வசிக்கும் பகுதிகளில் செருப்பு போட்டு நடப்பதற்கு தலித்துகளுக்கு இன்னும் உரிமை கிடைக்கவில்லை.

உயர் சாதியினர் வாழ்கின்ற பகுதிகளில் சைக்கிளில் ஏறிச் செல்வதற்கு அனுமதியில்லை.

உயர் சாதியினர் வசிக்கின்ற பகுதிகளில் குடிநீர் குழாய்களிலும், கிணறுகளிலும் தண்ணீர் பிடிப்பதற்கு அனுமதியில்லை. குளங்களில் குளிப்பதற்கு அனுமதியில்லை.

உயர் சாதியினர் வணங்கும் கோயில்களில் வணங்குவதற்கு அனுமதியில்லை.

கோர, கொடிய இந்தத் தீண்டாமைக்குத் தீர்வு என்ன?

ஒரு முத்துராமலிங்கத் தேவருக்கு இணையாக இம்மானுவேல் சேகரனுக்கும் குருபூஜை நடத்தி விட்டால் இந்தப் பிரச்சனை தீர்ந்து விடுமா?

இட ஒதுக்கீட்டின் மூலம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ஆவதிலோ, அல்லது உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆவதிலோ அல்லது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படித்து அதிகாரியாக ஆவதிலோ இது ஒழியப் போவதில்லை.

இந்தியாவில் தலித்துகள் கல்வி, அரசியல், வேலை வாய்ப்பு என எல்லாத் துறைகளிலும் இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவித்து, எங்கும் வியாபித்திருக்கின்றார்கள். ஆனால் தீண்டாமைத் தீயை இதுவரை அணைக்க முடியவில்லை.

தலித்துகள் இதற்குச் சரியான தீர்வைக் காணாததால் தான் இது போன்ற இழிவுகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

சாதியை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்ட அத்தனை திட்டங்களும் தோல்வியைத் தழுவி விட்டன என்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை என்னும் அளவுக்கு இந்தச் சம்பவம் முன்னுதாரணமாக அமைந்து விட்டது. ஆனால் சாதியை ஒழிக்கும் ஒரு தீர்வு, திட்டம் இதுவரை தோல்வி அடையவில்லை. அது தூய இஸ்லாம் ஆகும்.

இதோ நம் அனைவரையும் படைத்த கடவுளான அல்லாஹ் அழைக்கின்றான்.

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான்.

அல்குர்ஆன் 39:6

மனித குலத்தில் ஒரேயொரு சாதி தான். அதைத் தவிர வேறு எந்தச் சாதியும் இல்லை. இதைத் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

முஸ்லிம்கள் இப்போது ஹஜ்ஜிற்காக மக்காவிற்கு செல்லத் துவங்கி விட்டனர்.

மக்காவில் உள்ள அரஃபா பெருவெளியில் உலகெங்கிலுமிருந்து வந்த முஸ்லிம்கள் உயர்ந்தவர் - தாழ்ந்தவர், வெள்ளையர் - கருப்பர், பணக்காரன் - ஏழை என்ற பாகுபாடு இல்லாமல், இன வேறுபாடு இல்லாமல், மொழி வேறுபாடு இல்லாமல் வந்து சங்கமிக்கின்றனர். ஏன் இந்தச் சங்கமம்? ஏன் இந்த மாநாடு? திருக்குர்ஆனின் இந்த வசனத்தின் கருத்தை நிரூபிப்பதற்காகத் தான். நிலைநிறுத்துவதற்காகத் தான்.

தேவர் என்ற சாதியும், தலித் என்ற தாழ்த்தப்பட்டவரும் இல்லை. எல்லோருமே ஆதம் என்ற மூல, முதல் மனிதரின் பிள்ளைகள் என்றாகி விடுகிறோம்.

குழாயடியிலிருந்து மட்டுமில்லாமல் கோயிலடியிலிருந்து விரட்டியடிக்கப்படும் சமுதாயமே! உங்களுக்கு விமோசனம் தர, விடுதலை தர, உங்கள் தீண்டாமையைத் துடைக்க, உடைக்க, அழிக்க ஓர் உயர்திரு உன்னத ஆலயம்.

அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

அல்குர்ஆன் 3:96

இங்கே உங்கள் ஆலயங்கள் விரட்டியடிக்கும் போது இந்த ஆலயமோ உங்களை விரும்பி அழைக்கின்றது.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

அல்குர்ஆன் 3:97

இந்த ஆலயத்தில் உள்ளே நுழைந்ததும் அங்கு மட்டும் பாதுகாப்பல்ல! உலகெங்கும் பாதுகாப்பு! உள்ளே நுழைந்த மாத்திரத்தில் நம்முடைய தந்தை, மனித குலத்தின் முதல் தந்தை ஆதம் கட்டிய முதல் ஆலயத்தில் நுழைந்து விட்ட ஒரு நிம்மதி! ஓர் ஆனந்தம்! ஒரு திருப்தி!

ஆனால் ஒரேயொரு நிபந்தனை, அந்த ஒரு இறைவனை மட்டும் நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கை இருந்தால் போதும். தீண்டாமை தானாக அழிந்து விடும். சாதிப் பாகுபாடுகள் தானாக ஒழிந்து விடும்.

ஜனவரி 2007 ஏகத்துவம் இதழில், தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே என்ற கட்டுரை வெளியிடப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் அந்தக் கட்டுரையை இங்கு வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் சில மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

EGATHUVAM OCT 2011