தடுக்கப்படும் ஜனாஸாதெளிவும்
தீர்வும்
அல்லாஹ்வின் அருளால் இன்று தமிழகமெங்கும் தவ்ஹீத் ஜமாஅத் வளர்ந்து
வருகின்றது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு கிளை உருவாகின்ற போது அங்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றன.
கொள்கைச் சகோதரர்களை ஊர் நீக்கம் செய்வது, அவர்கள் பொதுக்கூட்டம்
நடத்தத் தடை விதிப்பது, அவர்களது குடும்பத்தினர் யாரேனும்
இறந்து விட்டால் அடக்கம் செய்ய மறுப்பது போன்ற கொடுமைகள் தலைதூக்கி விடுகின்றன.
இந்தக் கொடுமைகளால் தவ்ஹீதுவாதிகள் யாரும் தளர்ந்து விடுவதில்லை; தடம் புரண்டு விடுவதில்லை. இந்தக் கொடுமைகளை தவ்ஹீதுவாதிகள்
இயன்ற அளவுக்கு இறையருளால் மிகத் துணிச்சலாக எதிர்கொள்கின்றனர். இந்தக் கொடுமைகளால்
தவ்ஹீத் சகோதரர்கள் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.
ஜனாஸாவை அடக்கம் செய்ய மறுத்தால் அதை சட்டரீதியில் சந்தித்து, அடக்கம் செய்து விடலாம். ஆனால் ஜனாஸா தொழுகை விஷயத்தில் மட்டும்
மார்க்க ரீதியிலான ஒரு பாதிப்பு கொள்கைச் சகோதரர்களுக்கு ஏற்படுகின்றது.
பொதுவாக ஜனாஸா தொழுகை விஷயத்தில் இருவித முட்டுக்கட்டைகள் ஏற்படுகின்றன.
1. இறந்தவர் நம் குடும்பத்தைச் சார்ந்தவராகவே இருப்பார். ஆனால்
அவர் இறுதி வரை இணை வைப்பிலேயே, ஷிர்க்கிலேயே இறந்திருப்பார்.
அவருக்கு நாம் ஜனாஸா தொழ வைக்க முடியாது.
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத்
தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும்
(முஹம்மதுக்கும்) தகாது.
அல்குர்ஆன் 9:113
இந்த வசனம் இணை கற்பிப்பவர்களுக்கு ஜனாஸா தொழுவிப்பதை விட்டும்
நம்மைத் தடை செய்து விடுகின்றது.
ஒருவர் இணை வைப்பில் இறந்தார் என்பதை நாம் எப்படி முடிவு செய்வது? இது முற்றிலும் ஒருவரது உள்ளம் சார்ந்த விஷயம். இதில் நாம் வெளிப்படையை
வைத்துத் தான் முடிவு செய்ய முடியும்.
நாம் இந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யும் போது அவர் மரணிக்கின்ற
வரை எதிர்த்துக் கொண்டே இருந்திருப்பார். நாம் வேண்டாம் என்று தடுத்து, அதன் தீமைகளை எடுத்துக் கூறிய பின்னரும் மவ்லிதை வீம்புக்கு
ஓதியிருப்பார். நாம் தடுத்த பின்னும் கடைசி வரை தர்ஹாவிற்குச் சென்று பிரார்த்தனை செய்திருப்பார்.
இந்த நிலையில் அவர் மரணித்திருந்தால் அவர் இணை வைப்பில் மரணித்திருக்கின்றார் என்று
முடிவு செய்யலாம். இத்தகையோரின் ஜனாஸாவில் நாம் பங்கெடுக்க முடியாது.
2. இறந்தவர் முழுமையான ஏகத்துவக் கொள்கையில் வாழ்ந்த தீவிர தவ்ஹீதுவாதியாக
இருப்பார். அல்லது வீட்டில் மகன் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லும் போது அதை ஆட்சேபணை
செய்யாமல் இருந்திருப்பார். மவ்லிது ஓதக் கூடாது; தர்ஹாவுக்குச்
செல்லக் கூடாது என்று பிரச்சாரம் செய்வதை அவர் எதிர்த்திருக்க மாட்டார். இவ்வாறு எதிர்க்காமல்
இருப்பது மகனுடைய வருவாயில் அவர் காலம் தள்ளுவதால் கூட இருக்கலாம். இருந்தாலும் அவரிடம்
வெளிப்படையாக ஷிர்க்கைக் காணாத போது அல்லது தவ்ஹீது எதிர்ப்பைக் காணாத போது அவர் ஏகத்துவத்தில்
மரணித்திருக்கின்றார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அடிப்படையில் இறந்தவருக்கு நாம் கண்டிப்பாக ஜனாஸா தொழுகை
தொழுதாக வேண்டும். இப்படிப்பட்ட ஜனாஸா தொழுகைக்கு இருவிதமான இடையூறுகள் ஏற்படும்.
ஒன்று, தடுக்கப்பட்ட பள்ளிகளில் ஜனாஸா
தொழ வேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலை ஏற்படும். இதுபோன்ற கட்டங்களில் இந்த ஜனாஸாவை வீட்டில்
வைத்து தொழுவதையும் ஊர் ஜமாஅத் தடுக்கின்றது. அல்லது பள்ளிக்கு வெளியேயும் தொழ முடியாத
இக்கட்டான நிலை.
அடுத்து, பள்ளியில் தொழுவதற்கு வாய்ப்பு
கிடைக்கின்றது;
ஆனால் தொழுகை நடத்துகின்ற இமாம் இணை வைப்பில் உள்ளவர். இறந்தவர்
தவ்ஹீதுவாதியாக இருந்தாலும், இறந்தவரின் தந்தை அல்லது சகோதரர்
முஷ்ரிக்காக இருப்பார். அவர்களில் யாராவது ஒருவர் ஜனாஸா தொழுவிப்பார். அத்தகைய இணை
வைப்பாளரைப் பின்பற்றி ஒரு தவ்ஹீதுவாதி ஜனாஸா தொழுகை மட்டுமல்லாது வேறு எந்தத் தொழுகையும்
தொழ முடியாது.
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை
நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல்குர்ஆன் 9:17)
இந்த வசனத்தின் படி இணை கற்பிப்பவருக்குப் பள்ளிவாசலை நிர்வாகம்
செய்யத் தகுதியில்லை என்று அல்லாஹ் கூறுவது, பள்ளியில்
மின்சாரக் கட்டணம் செலுத்துவது பற்றியது அல்ல. இமாமாக நின்று தொழுவிக்கும் முக்கியமான
நிர்வாகப் பொறுப்பையே அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான்.
அதனால் இத்தகைய இணை கற்பிக்கும் இமாம், ஜனாஸா தொழுகை மட்டுமல்லாது வேறு எந்தத் தொழுகை நடத்தினாலும்
அவரைப் பின்பற்றித் தொழ முடியாது. அப்படியானால் இதற்குத் தீர்வு என்ன?
இரவில் அடக்கம் செய்யப்பட்டவரின் அடக்கவிடத்தைக் கடந்து சென்ற
நபி (ஸல்) அவர்கள், "இது எப்போது அடக்கம் செய்யப்பட்டது?'' எனக் கேட்டார்கள். தோழர்கள் "நேற்றிரவு தான்'' என்றதும், "எனக்கும் சொல்லியனுப்பியிருக்கக்
கூடாதா?'' எனக் கேட்டார்கள். அதற்கு அம்மக்கள், "அதை நாங்கள் இருள் சூழ்ந்த இரவில் அடக்கினோம். எனவே தான் உங்களை
விழிக்கச் செய்ய விரும்பவில்லை'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள்
தொழத் தயாராக எழுந்து நின்றார்கள். நான் உட்பட அனைவரும் அவர்களுக்குப் பின்னால் அணி
வகுத்ததும் அவர்கள் (ஜனாஸா) தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 1321, 1248, 458, 460
இந்த ஹதீஸின்படி கப்ரில் போய் தொழலாம் என்று சிலர் விளக்கமளிக்கின்றனர்.
இது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில் இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய தனிச் சட்டமாகும்.
பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கருத்த "பெண்' அல்லது "இளைஞர்' ஒருவரைக் காணாமல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். "அவர் இறந்துவிட்டார்' என மக்கள் தெரிவித்தனர். "நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக்கூடாதா?'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த)
விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
"அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்'' என்று கூறினார்கள்.
மக்கள் அதைக் காட்டியதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு அவருக்காக தொழுகை நடத்தினார்கள்.
பிறகு "இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள்
மண்டிக் காணப்படுகின்றன. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 1588
இந்த ஹதீஸில் "எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு
வெளிச்சத்தை ஏற்படுத்துவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு
மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன் 9:103)
என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். எனவே கப்ரில் சென்று தொழுவது
நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய தனிச் சட்டம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
அதனால் இதுபோன்ற கட்டங்களில் தவ்ஹீதுவாதிகளுக்கு முன்னால் இருக்கும்
ஒரு வழிமுறை காயிப் ஜனாஸா ஆகும்.
தவ்ஹீதுவாதி ஒருவர் இறந்து விடும் போது, அவருக்கு இணை வைப்பாளர்கள் முன்னின்று ஜனாஸா தொழுகை நடத்தினால், தொழுகையே நடக்கவில்லை என்று எடுத்துக் கொண்டு காயிப் ஜனாஸா தொழுவது
தான் சரியான வழிமுறையாகும். நஜ்ஜாஷி மன்னர் இறந்த போது, நபி (ஸல்) அவர்கள் காயிப் ஜனாஸா தொழுததை இதற்கு முன்மாதிரியாக
எடுத்துக் கொள்ள வேண்டும்.
EGATHUVAM OCT 2011