பிற மேடைகளில் பிரச்சாரம் தவ்ஹீத் ஜமாஆத் நிலைப்பாடு
ஆர். ரஹ்மத்துல்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கெதிராக வைக்கப்படும் குற்றசாட்டுக்களில்
பிரதான குற்றசாட்டாகப் பேசப்படுவது, இந்த அமைப்பினர்
பிற இயக்கத்தின் மேடைகளில் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்வதில்லை என்பதாகும். இதற்கான
விளக்கத்தை ஒவ்வொரு ஏகத்துவவாதியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம்.
ஏனெனில் ஷைத்தான் மனிதனை ஒரே வடிவத்தில் தான் வழிகெடுப்பான்
என நினைக்கக்கூடாது. மாறாக ஒருவனை வழிகெடுக்க ஷைத்தான் எத்தகைய யுக்தியையும் செய்யத்
தயங்க மாட்டான்.
உதாரணத்திற்கு, வரதட்சணை வாங்கக்கூடாது
என்பதில் நாம் உறுதியோடு இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். இந்தத் தருணத்தில் நம்மை
வழிகெடுக்க ஷைத்தான் வேறு வகையான ஆசை வார்த்தைகளைக் கூறுவான்.
நாமாகக் கேட்டால் தானே தவறு, அவர்கள்
விரும்பிக் கொடுத்தால் தவறா? நாம் எதையும் பெண் வீட்டாரிடம்
கேட்க வேண்டாம்;
அவர்கள் தமது பெண் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பாசத்தினால்
தானே தருகிறார்கள்; இதில் என்ன தவறு? என பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி வரதட்சணை வாங்கத் தூண்டிவிடுவான்.
அதுபோன்று தான் நம்மை சத்தியப் பிரச்சாரம் செய்ய விடாமல் பல
வகையில் எதிர்த்தவர்கள், நமது பிரச்சாரத்தை முடக்க நினைத்தவர்களின்
பல்வேறு சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டதால் ஷைத்தான் தற்போது நமது பிரச்சாரத்தின் வீரியத்தைக்
குறைக்க புதியதொரு யுக்தியாக அசத்தியவாதிகள் வழியாகத் தூண்டிவிட்ட ஒரு வாதம் தான்
"பிற மேடைகளில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை'' என்பது.
இந்த வாதத்திற்குத் தெளிவான விளக்கத்தை நாம் அறிந்து கொண்டால்
ஷைத்தானின் இந்தச் சூழ்ச்சியில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.
பொதுவாக பிற இயக்கத்தினர் மேடையில் பிரச்சாரம் செய்வதால் சொற்பொழிவு
நிகழ்த்துவோருக்கும் அதைக் கேட்கும் மக்களுக்கும் ஏற்படும் அவலங்களையும் ஒவ்வொன்றாகக்
காணலாம்.
தீமையைத் தடுக்க இயலாத நிலை!
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு
செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்!
அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச்
சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர்
குற்றம் புரிபவர்கள்.
திருக்குர்ஆன் 3:110
நன்மையை ஏவி தீமையை தடுப்பதால் தான் நம்மைச் சிறந்த சமுதாயம்
என அல்லாஹ் கூறுகிறான். ஆனால் பிற இயக்கத்தினருடன் பிரச்சாரம் செய்யும் பொழுது நம்மால்
அவர்களின் தீமையைத் தடுக்க முடியாத அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.
உதாரணத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் நடைபெற்ற
பீஸ் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தவிர அனைத்து கொள்கையுடையவருடன்
இனைந்து இஸ்லாத்தை நிலைநாட்ட (?) சொற்பொழிவு நிகழ்ச்சிகளை பீஸ் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் இஸ்லாமியக் கண்காட்சி என்ற போர்வையில் வர்த்தக உலகத்தைக் காட்டும் அந்த நிகழ்ச்சியில், பொருளாதார மோகத்தின் உச்சக்கட்டமாக அக்கண்காட்சியின் வாசலில்
ஒரு காரை வைத்து 6% வட்டிக்குக் கடன் கொடுக்கும்
ஒரு கொடுமை நடந்தேறியது.
சமூகக் கொடுமை என அனைத்து தரப்பு முஸ்லிம்களாலும் அறியப்பட்ட, நிரந்தர நரகம் என்று மார்க்கம் கூறுகின்ற இந்த வட்டி என்கிற
வன்கொடுமையை யாராலும் கண்டிக்க முடியவில்லை.
வட்டி ஹராம் என்பது அங்கு சென்றிருந்த ஜாக் அமைப்பினருக்குத்
தெரியவில்லையா?
அல்லது தனக்கு மட்டும் இறையச்சம் உள்ளது போன்று அவ்லியா வேஷம்
போடும் முஃப்தி காஸிமிகளுக்குப் புரியவில்லையா? ஏன் இந்த அவல
நிலை? பல கொள்கையுடைவர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தி சமரசத்திற்காக சன்மார்க்கத்தைத் தூக்கி எறியும்
அவல நிலைக்கு ஆளானார்கள்.
இது ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம்
யூசுப் எஸ்.டி.எஸ் என்பவர் அந்த பீஸ் நிகழ்ச்சியில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அவர் தனது சொற்பொழிவில் இந்தச் சமுதாயம் 73 கூட்டமாகப்
பிரியும்; அதில் 72 கூட்டம் நரகத்திலும் ஒரு கூட்டம்
சொர்க்கத்திலும் இருப்பதாகக் கூறி, அந்த ஒரு கூட்டம்
என்பது ஷாஃபி,
ஹனஃபி, மாலிகி, ஹன்பலி, தவ்ஹீத், அஹ்லே ஹதீஸ் அனைவரும் தான் சுவனம் செல்லும் அந்த ஒரு கூட்டம்
என்று விளக்கம் தருகிறார்.
மத்ஹபுகள் கூடாது என்று பல ஆண்டுகளாக முழக்கமிட்ட ஜாக் அமைப்பினர்
கலந்து கொண்ட அந்தச் சபையில் தனது கொள்கைக்கெதிராகப் பேசிய இவரைக் கண்டிக்க இயலவில்லை.
கண்டிக்கத் தான் இயலவில்லை என்றால் தவறான கொள்கைகள் அரங்கேறிய அந்த மேடையைப் புறக்கணிக்க
மனமும் இல்லை. மேடை மோகம் இவர்களை சத்திய பிரச்சாரத்திலிருந்து சமரசம் செய்ய வைத்துவிட்டது.
பல தரப்பட்ட கொள்கையுடையோராலும் இணைந்து நடத்தப்பட்ட இந்த பீஸ்
நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தமது கொள்கையில் சமரசம் செய்ததினால் அவர்களின் கொள்கை உறுதி
பீஸ் பீஸாகிப் போய்விட்டது.
இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல தரப்பட்ட கொள்கை உடையவர்களால்
தீமையைத் தடுக்க முடியவில்லை என்றாலும், இந்த நிகழ்ச்சியை
ஏற்பாடு செய்த ஜாகிர் நாயக் அவர்களால் கூட இந்த தீமைகளைத் தடுக்க முடியவில்லை.
மத்ஹப், அனாச்சாரங்கள் எனப்படும் பித்அத்
ஆகியவற்றை எதிர்த்தால் தானே இந்த ஜாகிர் நாயக்கால் தீமையை எதிர்க்க முடியும். இவரே
அதன் ஆதரவாளராக இருந்தால் எப்படித் தடுக்க முடியும்! இந்த ஜாகிர் நாயக் வெறும் மத்ஹப்
ஆதரவாளர் மட்டும் கிடையாது; கடவுள் கொள்கையில் ஷேக் அப்துல்லாஹ்
ஜமாலிக்கு ஒப்பானவர்.
ஜாகிர் நாயக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும்
இறைவனுக்கு உருவம் இல்லை எனக் கூறி, இறைவன் எங்கும் இருக்கிறான் என்கிற அத்வைதக் கொள்கையை ஷேக் அப்துல்லாஹ்
ஜ(கோ)மாலி வாதிட்ட போது, இறைவனுக்கு உருவம் உண்டு எனவும்
இறைவன் அர்ஷில் இருக்கிறான் எனவும் இறைவனின் தனித்தன்மையை நிலைநாட்டி அடுக்கடுக்கான
ஆதாரங்களுடன் மவ்லவி பி.ஜெ அவர்களால் எடுத்துரைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம்.
ஜமாலி போன்ற கோமாளித்தனமான வாதங்களைப் போன்றே தான் ஜாகீர் நாயக்கும்
ரவிசங்கர் என்பவருடன் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவர் தனது உரையில், இறைவனுக்குப் பிள்ளை இல்லை, பெற்றோர்
இல்லை என கூறிவிட்டு, இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை
திருக்குர்ஆனும் பகவத் கீதையும் ஒரே மாதிரி தான் கூறுகிறது என இஸ்லாத்திற்கு எதிரான
கருத்தைப் பதிவு செய்தார்.
எந்த அளவிற்கென்றால் அவர், இறைவனுக்கு
உருவம் இருக்கிறது எனக் கூறினால் நீள வாக்கிலா அகல வாக்கிலா எனக் குழப்பம் வந்து விடும்
எனக் கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் இது குறித்து ஒரு கேள்வியை முன் வைத்தார்.
இதோ அந்தப் பெண் கேட்ட கேள்வி:
நபி (ஸல்) அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? என்று கேட்டார்கள். அப்பெண், அல்லாஹ்
வானத்திலிருக்கிறான் என்று கூறினாள். நான் யார்? எனக்
கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள். நபி (ஸல்) அவர்கள் அவளது எஜமானனிடம்
இவள் முஃமினான பெண்மணியாவாள். இவளை உரிமை விட்டுவிடு என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹகம் (ரலி)
நூல்: முஸ்லிம் (836)
இந்த ஹதீஸை மேற்கோள்
காட்டி அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் எனத் தெளிவாக உள்ளதே இதன் விளக்கம் என்ன? எனக் கேட்கிறார்.
இதற்கு ஜாகீர் நாயக் பதில் கூறும் போது, இந்த ஹதீஸ் குறித்து நாம் அதிகம் சிந்திக்கக் கூடாது என அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) கூறி விட்டார்கள் எனக் கூறி, இறைவன் எங்கும்
இருக்கிறான் என்ற அப்துல்லாஹ் ஜமாலியின் கொள்கைக்கு ஆதரவாக மலுப்பலான பதிலைத் தருகிறார்.
இப்படிப்பட்ட கொள்கையுடையவர்களின் மேடைகளை நாம் பகிர்ந்தால்
தீமையைத் தடுக்க முடியாமல் சமரசம் செய்த இவர்களின் நிலையைப் போன்று தான் நமக்கும் ஏற்படும்.
இந்த அவல நிலையை நாமும் ஒரு காலத்தில் சந்தித்து சங்கடத்திற்கு உள்ளாகியிருந்தோம்.
கடந்த 2004ல் நாம் தமுமுகவுடன் சேர்ந்து
இருந்த கால கட்டத்தில் நெல்லை மாவட்டம் மேலப்பாளயத்தில் தமுமுக சார்பில் நடைபெற்ற ஒரு
பொதுக்கூட்டத்திற்கு, தவ்ஹீத்வாதிகளால் பிரச்சாரம்
செய்யப்படும் அந்த மேடைக்கு, தர்கா வழிபாட்டில் மூழ்கித்
திளைக்கும் எஸ்.எஸ். ஹைதர் அலி என்பவர், அழைக்கப்பட்டார்.
அந்த மேடையில் ஏறிய அவர் தனது சொற்பொழிவின் இறுதியில் "நபிகளாரை கனவிலும் நனவிலும்
கண்டு களிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்குத் தந்தளுள்வானாக'' எனப் பிரார்த்தனை செய்து அசத்தியக் கொள்கையை அள்ளித் தெளித்தார்.
அதைக் கண்டிக்கவோ அதற்கு மறுப்பு சொல்லவோ யாருக்கும் திராணி
இல்லாமல் போன அவல நிலையை ஒருவரும் மறக்க இயலாது. ஆனால் ஒரு விஷயம், இந்த மேடையில் ஹைதர் அலீ என்ற முஷ்ரிக் ஏறினால் நாங்கள் ஒரு
போதும் மேடையில் ஏற மாட்டோம் என மறுத்து ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்களும் எம்.எஸ்.சுலைமான்
அவர்களும் ஒதுங்கிக் கொண்டார்கள். இதைத் தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய இயலவில்லை.
இதனால் தான் பிறர் மேடையில் ஏறி நாம் பிரச்சாரம் செய்வதில்லை
என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
இதுமட்டுமின்றி பிறர் மேடைகளைப் பகிர்வதால் பேச்சாளர்களுக்கு
ஏற்படும் மற்றொரு அவலநிலை இதை விடப் படுமோசமானதாகும்.
இரட்டை வேட நாடகம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே
மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும்
அவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும் செல்கிறான்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)
நூல்: புகாரி 7179
இரட்டை வேடம் போடுபவன் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் என்று
நபிகளாரால் மிகவும் கண்டிக்கப்பட்ட ஒரு செயலை எந்த ஒரு முஸ்லிமும் செய்யக் கூடாது.
குறிப்பாக சத்தியப் பிரச்சாரத்தைப் பிற மக்களுக்கு எடுத்துரைப்பவர் ஒருக்காலும் செய்யக்கூடாது.
ஆனால் பிற கொள்கையுடையவர்களின் மேடைகளைப் பகிர்வதால் இரட்டை வேடம் போடும் நயவஞ்சகனாக
மாறும் அவல நிலை ஏற்படும்.
நம்மோடு மேடையில் அமர்ந்திருப்பவரின் மனம் புண்பட்டு விடக்கூடாது
என்பதற்காகவும் அவரை திருப்திப்படுத்துவதற்காகவும் அல்லாஹ்வின் மார்க்கத்தை மறைக்க
வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.
பிற அமைப்பினரின் வழிகெட்ட கொள்கைகளையும் தவறுகளையும் அவர்கள்
சமுதாயத்திற்குச் செய்த துரோகங்களையும் அம்பலப்படுத்தும் போது நம்மிடம் இருந்த வேகமும்
வீரியமும் அந்த அமைப்பினரோடு சேர்ந்து மேடை ஏறும் போது, அவர்களோடு பழகி பல்லிளித்து, அவர்களின்
குற்றங்களை நாம் ஒன்றும் அறியாதவர்கள் போன்று நடித்து மக்களை மடையர்களாக்கும் நிலை
ஏற்படும்.
சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம் என்று கூறிவிட்டு
லட்சக்கணக்கில் வசூலித்து மோசடி செய்து, இன்று வரை
ஒழுங்காகக் கணக்குக் காட்டாத த.மு.மு.க.வுடன் சேர்ந்து நாம் பிரச்சாரம் செய்தால் இவர்களைக்
கண்ணியவான்களாக்க நேரிடும்.
வட்டி இல்லா கடனுதவி பெற வந்த ஓர் அபலைப் பெண்ணின் வாழ்வில்
விளையாடிய ஒழுக்கங்கெட்ட பாக்கருடன் பிரச்சாரம் செய்தால் அந்த அயோக்கியர்களை ஒழுக்க
சீலராக்க நேரிடும்.
உதட்டில் தேனும் உள்ளத்தில் தேளும் கொண்ட அரசியல்வாதிகளுக்கு
வேண்டுமானால் இந்தத் தன்மை பொருந்திப் போகுமே தவிர, அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தை நாடி பிரச்சாரம் செய்யும் நமக்கு ஒருக்காலும் பொருந்தாது.
பிற அமைப்பினரோடு பிரச்சாரம் செய்யும் பேச்சாளர்களுக்கு ஏற்படும்
அவலங்களைப்போல அதைப் பார்க்கும் மக்களும் பல அவலங்களை சந்திக்க நேரிடும்.
அவற்றை அடுத்த இதழில் அறிவோம், இன்ஷாஅல்லாஹ்.
EGATHUVAM DEC 2011