ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா? - ஓர் ஆய்வு
ஒவ்வொரு ரமளான் மாதத்தின் போதும் ஏகத்துவம் மாத இதழ் ஒரு குறிப்பிட்ட
தலைப்பை மையப்படுத்தி, திருக்குர்ஆன்
சிறப்பிதழாக வெளிவரும். இவ்வாண்டு ரமளான் மாத இதழ், திருக்குர்ஆன் - பைபிள் ஒப்பீட்டு இதழாக மலர்ந்தது. இந்த இதழிலும்
அதன் தொடர்ச்சி வெளிவந்து நிறைவு பெறுகின்றது.
மனித குல பாவ மீட்சிக்கு ஒரே வழி ஏசுவின் சிலுவை மரணம் தான்
என்ற அறிவுக்கு ஒவ்வாத ஒரு கொள்கையை பவுல் என்பவர் கிறித்தவத்தில் புகுத்தி விட்டார்.
அந்தப் படுமோசமான கொள்கையில் மொத்தக் கிறித்தவர்களும் வீழ்ந்து கிடக்கிறார்கள்.
தாங்கள் தவறில் வீழ்ந்து கிடப்பது மட்டுமின்றி முஸ்லிம்களையும்
அந்தப் பாழுங்கிணற்றில் தள்ளுவதற்காகக் கிறித்தவ அழைப்பாளர்கள் அன்றாடம் ஒரு படையெடுப்பை
நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற படையெடுப்பை தென்னாப்பிரிக்காவில் நடத்திக்
கொண்டிருந்தார்கள். அதில் பாதிக்கப்பட்டவர் தான் டாக்டர் அஹ்மத் தீதாத் அவர்கள்.
அவர்களுக்குப் பதில் தாக்குதல் நடத்தத் துவங்கினார். அதன் விளைவாக
விளைந்தது தான் பைபிள் இறைவேதமா? என்ற
நூல். அதன் முக்கியக் கூறுகள் சென்ற ஏகத்துவ இதழில் வெளியாயின.
கிறித்தவ அழைப்பாளர்களின் படையெடுப்பின் விளைவாக உருவான மற்றொரு
நூல்,
ஈதமஈஒஎஒலஒஞச ஞத ஈதமஈஒஎஒஈபஒஞச சிலுவை மரணம் நிஜமா? அல்லது கற்பனையா? என்ற நூல் ஆகும்.
இதில் அஹ்மத் தீதாத் அவர்கள் கனலாய் தெறித்திருக்கிறார். கிறித்தவத்தின்
பொய்ச் சரக்குகளை எரித்துக் கரித்திருக்கின்றார். பைபிளின் பழமைக் கால ஆங்கில நடைக்குள்
புகுந்து,
அதன் கருத்துக்களை விளங்கி அவற்றுக்குப் பதில் கொடுப்பது சாதாரண
விஷயமல்ல!
இப்படி ஓர் அபார ஆங்கிலப் புலமையும், ஆய்வுத் திறமையும் பெற்ற அஹ்மத் தீதாத் அவர்கள் இஸ்லாமிய உலகிற்குக்
கிடைத்த ஒரு புதையல், ஒரு தங்கச்
சுரங்கம் என்று தான் சொல்ல வேண்டும்.
அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்களின் இந்த ஆய்வை நேரடி மொழியாக்கமாகத்
தராமல்,
வாசகர்களுக்கு எளிதாய் விளங்கும் வகையில் அவரது நூலில் கருவாய்
இருந்த கருத்துக்களை தமிழ் நடைக்குத் தக்க அளித்திருக்கிறோம். அஹ்மத் தீதாத் அவர்களுக்கு
அல்லாஹ் அருள் செய்வானாக என்று பிராத்திக்கிறோம்.
ஏசு மரணிக்கவில்லை பைபிளின் வாக்குமூலம்
அமெரிக்காவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் கணக்கியல் நிபுணருமான
மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவர், பட்ங்
100 அந்த நூறு பேர் என்ற நூலை வெளியிட்டிருந்தார். கிறித்தவரான
அவர்,
வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நூறு பேர்களில் முஹம்மது நபி
(ஸல்) அவர்களுக்குத் தான் முதலிடம் கொடுத்திருந்தார். இரண்டாவது இடத்தை நியூட்டனுக்கும்
மூன்றாவது இடத்தை ஏசுவுக்கும் ஆறாவது இடத்தை பவுலுக்கும் கொடுத்திருந்தார்.
உலகில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 1000 மில்லியன். கிறித்தவர்களின் எண்ணிக்கை 1200 மில்லியன். 200 மில்லியன் அதிகம். அதாவது முஸ்லிம்களை விட கிறித்தவர்கள் 20 கோடி பேர் அதிகம். (இது 20 ஆண்டுகளுக்கு முன் உள்ள கணக்கு)
இவ்வளவு பெரிய தொகையினர் பின்பற்றுகின்ற இந்தக் கிறித்தவத்தின்
புகழை இரண்டு பங்குகளாக்கி, அதில் ஒரு
பெரும் பங்கை பவுல் என்பாருக்கு அளிக்கின்றார். காரணம் அவர் தான் கிறித்தவத்தின் உண்மையான
நிறுவனர்.
கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய
நற்செய்தியும் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்.
1 கொரிந்தியர் 15:14
ஆம்! ஒருவர் ஆன்மா மீட்பு அல்லது ஆன்மா மோட்சம், ஆத்ம ரட்சிப்பை அடைய வேண்டுமாயின் அதற்கு ஏசு மரணித்து, உயிர் பெற்று வர வேண்டும். இது தான் பவுல் புகுத்திய பயங்கரமான, படு மோசமான பாதகக் கொள்கையாகும். ஏசு மரணிக்கவில்லை என்றால், அவர் மரணித்து உயிர் பெற்று எழவில்லை என்றால் கிறித்தவத்தில்
பாவ விமோச்சனம், ஆன்மா ரட்சிப்பு என்பதே
இல்லை.
இது பவுல் அறிமுகம் செய்த கொள்கை! இந்தக் கொள்கை, கோட்பாட்டில் தான் மொத்த கிறித்தவமும் தொங்கிக் கொண்டிருக்கின்றது.
உண்மையில் இது ஏசு போதித்த போதனைக்கு எதிரான கொள்கையாகும்.
ஒருவர் இயேசுவிடம் வந்து, போதகரே, நிலை
வாழ்வைப் பெற்றுக் கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்? என்று கேட்டார். இயேசு அவரிடம், நன்மையைப் பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் (கடவுள்) ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக்
கடைப்பிடியும் என்றார். அவர், எவற்றை? என்று கேட்டார். இயேசு, கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும்
அன்பு கூர்வாயாக என்று கூறினார். அந்த இளைஞர் அவரிடம், இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன். இன்னும் என்னிடம்
குறைபடுவது என்ன? என்று கேட்டார்.
அதற்கு இயேசு, நிறைவுள்ளவராக விரும்பினால்
நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக்
கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்
என்றார்.
மத்தேயு 19:16-21
ஆசான் ஏசுவின் இந்தக் கொள்கையைத் தான் மாணவர் பவுல் சிலுவையில்
அறைந்து தொங்க விட்டு விட்டார்.
கிறித்தவர்களிடமிருந்து முஸ்லிம்கள் வேறுபட்டு நிற்பதற்கு அடிப்படை
விவகாரமே பவுலுடைய மனிதர்களின் பாவ மீட்சிக்காக ஏசு இரத்தம் சிந்தி, சிலுவையில் தொங்கி மரணித்தார் என்ற கொள்கை தான்.
பிறருக்கு உதவி செய்வதிலும், நன்மையான காரியங்களைச் செய்வதிலும் முஸ்லிம்கள் யாருக்கும் சளைத்தவர்கள்
அல்லர். அவர்களை நோக்கி கிறித்தவப் பாதிரியார்கள், நீங்கள் ஏசுவின் மரணத்தையும் அவர் உயிர் பெற்று எழுந்ததையும்
நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் உங்கள் செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைகள், கருகிய இலைகள் என்று கூறுகின்றனர்.
எனவே கிறித்தவத்தின் இந்தக் கொள்கை சரி தானா என்ற ஆய்வில், கிறித்தவர்களின் சிம்ம சொப்பனமான அறிஞர் அஹ்மத் தீதாத் இறங்கினார்.
இந்த ஆய்வின் முடிவில், ஏசு மரணிக்கவில்லை என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளிப்
போடுகின்றார். அந்த ஆதாரங்களை இஸ்லாமிய ஆதார நூற்களான குர்ஆன், ஹதீஸிலிருந்து எடுத்துப் போடவில்லை. பைபிளிலிருந்தே எடுத்துப்
போடுகின்றார். இதை இவ்விதழில் இன்ஷா அல்லாஹ் விரிவாகப் பார்ப்போம்.
ஏசுவின் மரணத்தைக் குறித்து முஸ்லிம்களின் நிலைப்பாட்டை முதலில்
பார்த்துக் கொள்வோம்.
நாங்கள் தான் ஏசுவைக் கொன்றோம் என்று யூதர்கள் பெருமையடித்துக்
கொள்கின்றனர். அவர்களுடைய பெருமையையும், கிறித்தவர்களின் சிலுவைக் கொள்கையையும் அல்லாஹ் அடித்துத் தகர்த்தெறிகிறான்.
அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே
கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை.
அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது.
இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு
இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ்
தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:156-158)
அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். (அல்குர்ஆன் 43:61)
ஏசு சிலுவையில் அறையப்படவில்லை; அவர் கொல்லப்படவில்லை; மரணிக்கவும் இல்லை. அவருக்குப் பதிலாக வேறொருவர் சிலுவையில்
அறையப்பட்டார். ஏசுவை அல்லாஹ் வானத்திற்கு உயர்த்திக் கொண்டான். கியாமத் நாள் நெருங்கும்
போது ஏசு மீண்டும் வானிலிருந்து இறங்குவார். அதன் பின்னர் அவர் மரணிப்பார்.
இது ஏசு குறித்து முஸ்லிம்களின் நிலைப்பாடு!
ஒரு போலிக் கொள்கையைத் தகர்த்தெறிவதில் உறுதியான, ஆணித்தரமான, அழுத்தமான, கொள்கையில்
சமரசம் செய்யாத பிரகடனம் இதை விட வேறென்ன இருக்க முடியும்?
கிறித்தவர்கள் மட்டும் குர்ஆனை அல்லாஹ்வின் வார்த்தைகள் என்று
ஏற்றுக் கொண்டிருந்தால் சிலுவைப் பிரச்சனை அறவே எழுந்திருக்காது. ஆனால் அவர்கள் வலுக்கட்டாயமாக
மறுப்பதுடன் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக அனைத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கின்றனர்.
தாமஸ் கார்ஸல் என்பவர் கூறுகிறார்: அந்த மனிதர் முஹம்மது மீதும்
அவரது மார்க்கத்தின் மீதும் வெறுப்புக் காட்டுமாறு கிறித்தவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் இடம் பெறும் கருத்துக்கள் அனைத்தும் கிறித்தவர்களுக்குப்
பதிலளிக்கும் வகையில், முழுக்க முழுக்க
பைபிளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. நமது கருத்தல்ல என்பதை மீண்டும் இங்கே பதிய
வைக்கிறோம்.
இதை முழுமையாக மனதில் நிறுத்திக் கொண்டு இப்போது ஆய்வுக்குள்
செல்வோம்.
ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 1
போர் வீரர் ஏசு
ஆரம்பம் முதல் கடைசி வரை யூதர்கள் ஏசுவை அங்கீகரிக்கவே இல்லை.
அவரை அவர்கள் மறுத்தே வந்தனர். அவரை ஒழிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள்
மேற்கொண்டனர். ஆனால் அவர் மீது யூதர்களால் மரண தண்டனை விதிக்க முடியாது. காரணம், ஆட்சியதிகாரம் அன்றைய ரோமானியப் பேரரசிடம் தான் இருந்தது. யூதர்களிடம்
கோவில் நிர்வாகம் மட்டுமே இருந்தது.
அதே சமயம், தங்கள்
திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் ரோமானியப் பேரரசை வழிக்குக் கொண்டு வரும் செல்வாக்கை
யூதர்கள் பெற்றிருந்தனர். அதன் அடிப்படையில் ஏசு சிலுவையில் அறையப்படுகின்றார். அவரைச்
சிலுவையில் ஏற்றிக் கொல்வதற்கான காரணத்தை, அதாவது அதற்கான குற்றத்தை யூதர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பின்னணியுடன் உள்ளே செல்வோம்.
யூதர்கள் ஏசுவை ஏற்றுக் கொள்ளவே இல்லை. ஏசுவும் இதைப் பொறுப்பதாக
இல்லை. அதனால் அவர் தன்னுடன் இருக்கின்ற 12 சீடர்கள் சகிதமாக ஜெருஸலத்தை நோக்கிப் புறப்படுகின்றார்.
ஏசுவின் நம்பிக்கைக்குரிய சீடர் யோவான் ஒரு விருந்து படைக்கின்றார்.
அவ்விருந்தில் ஏசுவின் 12 சீடர்களும்
கலந்து கொள்கின்றனர். இவ்விருந்து யோவானின் வீட்டு மாடியிலுள்ள அறையில் நடைபெறுகின்றது.
ஏசு,
யோவான் ஆகிய இருவரையும் சேர்த்து 14 பேர் உணவு மேஜையில் அமர்ந்து உணவு சாப்பிடுகின்றார்கள். இதற்கு, கடைசி இரவு விருந்து (கஹள்ற் நன்ல்ல்ங்ழ்) என்று அழைக்கப்படுகின்றது.
இந்த விருந்து சாப்பிட்ட தெம்பில் தான் ஏசு ஜெருஸலம் நோக்கிப் புறப்படுகின்றார். எதற்காக? யூதர்களின் கோவில் நிர்வாகத்தைக் கைப்பற்றி கடவுளின் ராஜ்ஜியத்தை
நிலை நாட்ட!
மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார்.
அவர் நீதியுள்ளவர்; வெற்றி வேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின் மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்.
ஜெக்கரிய்யா 9:9
இந்த முன்னறிவிப்பு நிறைவேறும் வகையில் ஏசுவின் வருகை அமைகின்றது.
கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார் என்று
இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப்
பணித்த படியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல்
உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில்
பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்
பெறுக! உன்னதத்தில் ஓசன்னா! என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.
மத்தேயு 21:5-9
வழியெங்கும் வாழ்த்துக்களும் வரவேற்புக்களும் காத்திருந்தன.
கடவுளின் ராஜாங்கம் வெகு விரைவில் உதயமாகவிருந்தது.
இயேசு எருசலேமை நெருங்கி வந்து கொண்டிருந்தார். அவர் சொன்னதைக்
கேட்டுக் கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப் போகிறது என்று நினைத்தார்கள்.
லூக்கா 19:11
கழுத்தைத் துண்டிக்கக் கட்டளை
கடவுளின் ராஜாங்கத்தை எதிர்க்கும் துரோகிகளைத் தன் முன்னே கொண்டு
வரச் சொல்லி கழுத்தை வெட்டுமாறு கர்த்தர் (?) ஏசு கட்டளையிடுகின்றார்.
மேலும் அவர், நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்கு கொண்டு
வந்து என் முன் படுகொலை செய்யுங்கள் என்று சொன்னார்.
லூக்கா 19:27
குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு அவருக்கு எதிர் கொண்டு போய், ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! இஸ்ரயேலின்
அரசர் போற்றப் பெறுக! என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.
யோவான் 12:13
இவ்வாறு ஏசு வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தார்.
கலக்கத்தில் யூத குருமார்கள்
இதைக் கண்ட பரிசேயர், பார்த்தீர்களா! நம் திட்டம் எதுவும் பயனளிக்கவில்லை. உலகமே அவன்
பின்னே போய்விட்டது என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள்.
யோவான் 12:19
ஏசுவின் எச்சரிக்கை
இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.
யோவான் 12:31
களத்தில் இறங்கிய ஏசு
சீடர்கள் வெளிப்படுத்திய உற்சாகத்தில் ஏசுவுக்கே தலைகால் புரியவில்லை.
அவரே நேரடியாகக் களத்தில் வீர சாகசங்களை ஆற்றத் துவங்கி விடுகின்றார்.
அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும்
கவிழ்த்துப் போட்டார்.
யோவான் 2:15
படுதோல்வியான படையெடுப்பு
இவ்வளவு வரவேற்புக்கள்! வாழ்த்து மழைகள்! அனைத்தும் வெற்றியைப்
பெற்றுத் தந்தனவா என்றால் இல்லை. சீடர்கள் கூட்டமும், திரண்டு வந்த மக்கள் கூட்டமும் ஏசுவுக்காக எந்தத் தியாகத்தையும்
செய்யத் தயாராக இல்லை. சீடர்களின் உணர்ச்சிப் பெருக்குகளைப் பார்த்து, அவர்களின் இலட்சணங்களைப் புரிந்திருந்த பரிசேயர்கள் சிலர், அவர்களைத் தட்டி வையுங்கள் என்று ஏசுவிடம் சொல்லி வைத்தனர்.
ஆனால் ஏசு அவர்களைத் தட்டி வைக்கவில்லை. பரிசேயர்கள் எச்சரித்தது போன்று சீடர்களின்
போக்கு அமைந்தது.
யூத மத குருமார்களுக்கு இப்போது தகுந்த காரணம் கிடைக்கின்றது.
இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக
இறப்பது நல்லது என்று மத குரு காய்பா கூறினார்.
யோவான் 11:50
விளக்கம் தெரியாத ஒரு கூட்டம் ஏசுவைச் சுற்றி வளைத்து, மொய்த்துக் கொண்டிருப்பதால் இப்போது அவரைப் பகிரங்கமாகக் கைது
செய்வது பொருத்தமாகாது என்று எண்ணி, யூதாஸைப் பிடிக்கின்றார்கள்.
ஆயுதம் தாங்க ஆயத்தமான ஏசு
ஏசு இப்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குகின்றார். யூதர்களை
எதிர்கொள்ளக் களமிறங்கவும், கைகளில் ஆயுதம்
ஏந்தவும் ஆயத்தமாகின்றார். அதற்கான ஆணைகளையும் பிறப்பிக்கின்றார்.
இயேசு சீடர்களிடம், நான் உங்களைப் பணப் பையோ வேறு பையோ மிதியடியோ எதுவுமில்லாமல்
அனுப்பிய போது, உங்களுக்கு ஏதாவது குறை
இருந்ததா?
என்று கேட்டார். அவர்கள், ஒரு குறையும் இருந்ததில்லை என்றார்கள். அவர் அவர்களிடம், ஆனால், இப்பொழுது
பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம்
மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்
லூக்கா 22:35, 36
யூதர்களுக்கு எதிரான புனிதப் போருக்காக ஒரு போர் முழக்கத்தை, ஒரு போர்த் தளபதியாக மாறிப் போன ஏசு முழங்குகின்றார். ஒரு கன்னத்தில்
அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டச் சொன்ன ஏசு தான் இந்தப் போர் முழக்கத்தைச் செய்கின்றார்.
பேதுரு இயேசுவை அணுகி, ஆண்டவரே, என்
சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால் நான் எத்தனை முறை
அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது; ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 18:21, 22
எழுபது தடவை ஏழு முறை, அதாவது 490 முறை
மன்னிக்க வேண்டும் என்று கூறிய ஏசு தான் இந்தப் போர்ப் பிரகடனத்தைச் செய்கின்றார்.
இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன்.
எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும்
இருங்கள்.
மத்தேயு 10:16
இந்த வெள்ளாடுகளைத் தான் வேங்கைகளாக மாறச் சொல்கிறார் ஏசு! சமாதானப்
புறாக்களை சண்டைக் கோழிகளாக்கிக் கொண்டிருக்கிறார். ஏன்? சூழ்நிலை மாறி விட்டது. அதனால் ஏசுவின் கொள்கையிலும் மாற்றம்
ஏற்பட்டு விட்டது. அதனால் தான் இந்தப் புனிதப் போர் முழக்கம். சீடர்களும் வாளாவிருக்கவில்லை.
ஆசானின் ஆணையை ஏற்று இரண்டு வாள்களை வாங்கி விட்டனர்.
ஏசுவின் இன்னொரு முகம்
இங்கே தான் ஏசுவின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறோம். கிறித்தவ
அழைப்பாளர்கள் ஏசுவின் ஒரேயொரு முகத்தை மட்டுமே காட்டுகின்றனர். அது தான் சமாதான முகம்; சாந்த முகம்; அமைதி முகம்; ஆன்மீக முகம்.
அவர்கள் ஏசுவின் மற்றொரு முகத்தை மறைத்தே விட்டனர். அது தான்
சண்டை முகம்! சாகச முகம்! ஆர்ப்பரிக்கும் போர் முகம்! அரசியல் முகம்! இந்த முகத்தைக்
கிறித்தவர்கள் திரை போட்டு மறைத்தே விட்டனர். அவ்வாறு மறைப்பதற்காக அவர்கள் இந்த வாளுக்கு
ஆத்மீக வாள் என்று விளக்கம் தருகின்றனர். இதன்படி வாள் வாங்குவதற்குப் பண்ட மாற்றாகப்
பயன்படுத்தப்பட்ட ஆடைகளும் ஆத்மீக ஆடைகள் என்று தான் கொள்ள வேண்டும். அப்படியானால்
ஏசுவின் சீடர்கள் ஆடையில்லாமல் முழு அம்மணமாகத் தான் காட்சி தந்திருக்க வேண்டும். வாள்
என்பதற்கு இப்படிப் பொருள் கொண்டால், ஏசுவின் சீடர்கள் நிர்வாணிகள் என்று பொருளாகி விடும்.
மக்களை எப்படி மூளைச் சலவை செய்கிறார்கள் என்று பாருங்கள். ஆன்மீக
வாள் என்றால் யாரையும் பதம் பார்க்காமல் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அது சாதாரண கூர்வாள் தான் என்பதை தனது செயல்பாட்டின் மூலம்
நிரூபித்துக் காட்டி விடுகின்றது.
இயேசு அவனிடம், தோழா, எதற்காக
வந்தாய்?
என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர். உடனே இயேசுவோடு இருந்தவருள்
ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய
காதைத் துண்டித்தார்.
மத்தேயு 26:51
ஏசு கைது செய்யப்படும் வேளையில் இந்த வாள் அரசுப் பணியாளரின்
காதைக் கொய்து விட்டது. எனவே ஆன்மீக வாள் என்ற வாதம் ஒரே வீச்சில் அறுந்து போய் விடுகின்றது.
ஏசு ஒரு ஈ, எறும்புக்குக் கூடத் துன்பம்
தர மாட்டார் என்ற ஒரு பக்கத்தை மட்டுமே கிறித்தவ அழைப்பார்கள் காட்டி வருகின்றனர்.
இங்கே ஏசுவின் இன்னொரு முகம் பட்டாங்கமாகத் தெரிகின்றது. அந்த இன்னொரு முகத்தை பைபிள்
இன்னும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை
அல்ல,
வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக
மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்.
மத்தேயு 10:34, 35
மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க
வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு.
அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். மண்ணுலகில் அமைதியை
ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு
உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.
லூக்கா 12:49-51
நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்கு கொண்டு
வந்து என் முன் படுகொலை செய்யுங்கள் என்று சொன்னார்.
லூக்கா 19:27
இராணுவத்திற்கு இரு வாட்கள் தானா?
ஏசு போருக்காக ஆயத்தமாகும் போது அவரது ராணுவத்திற்கு இரு வாட்கள்
போதுமா?
என்ற கேள்வி இங்கே எழலாம். அதற்குப் பதில், போதும் என்பது தான். காரணம், ஏசு எதிர்கொள்ளப் போவது ரோமானிய ராணுவத்தை அல்ல! கோவில் நிர்வாகத்தைப்
பார்த்துக் கொண்டு ஒரு குட்டி சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற மத குரு தலைமையிலான
படையைத் தான்.
இது ரோமானியர்களை எதிர்த்து நிற்கும் யுத்தக் களம் அல்ல! அதற்குத்
தான் மொத்தத் தளவாடங்களும் தேவை. யூதர்களை, யூதர்களே எதிர்த்து நிற்கும் இந்தக் களத்திற்கு இந்த இரட்டை
வாட்கள் போதும். பாறையைப் போன்ற பேதுரு (பீட்டர்), யோவான் (ஜான்) போன்ற பக்த சீடர்கள் இருக்கும் போது ஏசுவிற்கு
என்ன கவலை?
காவல் புரியும் சீடர்கள்?
ஏசு தன் பதினோரு சீடர்களையும் கெத்சமணி தோட்டத்திற்கு அழைத்துச்
செல்கின்றார். அவர்களில் எட்டு பேரை நுழைவாயிலில் நிறுத்துகின்றார்.
இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும் வரை இங்கே அமர்ந்திருங்கள்
என்று அவர்களிடம் கூறினார்.
மத்தேயு 26:36
பிரார்த்தனை செய்யச் செல்கின்றார் என்று யாரும் தவறுதலாகக் கருத
வேண்டாம். காரணம், சாலமோன் கோயில்
ஒரு கல்லெறி தூரத்திற்கு அருகில் தான் இருக்கின்றது. பின்னர் எதற்காக இந்த ஏற்பாடு? போர் வியூகத்திற்காகத் தான். நுழைவாயிலில் எண்வர் படையை நிறுத்தினார்
என்றால் மூவர் படையை இன்னும் உள்ளே அழைத்துச் செல்கின்றார்.
பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச்
சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள்
என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள் என்று அவர்களிடம் கூறினார்.
மத்தேயு 26:37, 38
இவர்களை உள்ளே அழைத்துச் செல்லக் காரணம், ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துவதற்காகத் தான். ஆம்! ஓர்
இரண்டடுக்குப் பாதுகாப்பு வளையத்தை கெத்சமணி தோட்டத்தில் ஏசு ஏற்பாடு செய்கின்றார்.
இப்படி ஈரடுக்குப் பாதுகாப்பு வளையத்தை ஏசு ஏற்படுத்தி விட்டுத்
தான் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றார்.
இவ்வளவும் எதற்கு?
தான் உயிர் வாழ வேண்டும் என்பதற்காகத் தான். பவுல் சொல்வது போன்று
மனிதர்களை முதல் பாவத்திலிருந்து மீட்பதற்காக தன்னையே அர்ப்பணிப்பதற்காக அல்ல!
ஜெருஸலம் நோக்கி ஒரு படையெடுப்பு!
கர்த்தரின் ஆட்சியை எதிர்ப்பவர்களின் கழுத்தை வெட்டக் கட்டளை!
ஆயுதம் ஏந்த ஆயத்தம்!
ஈரடுக்குப் பாதுகாப்பு வளையம்!
இவை அத்தனையுமே, ஏசு சாவதற்குத் தயாராக இல்லை, வாழ்வதற்கு, ராஜாவாக ஆள்வதற்குத் தயாராக இருந்தார் என்பதையே காட்டுகின்றன.
இதன்படி, ஏசு
இறக்க முன்வந்தார் என்பது அப்பட்டமான பொய் என்று விளங்கிக் கொள்ளலாம்.
ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 2
ஏசுவின் பிரார்த்தனை
இப்போது ஏசுவின் பிரார்த்தனையைக் கேளுங்கள்.
பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும்
என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்
படியே நிகழட்டும் என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.
அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக்
கண்டு பேதுருவிடம், ஒரு மணி நேரம்
கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையது தான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து
இறைவனிடம் வேண்டுங்கள் என்றார்.
மீண்டும் சென்று, என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும் என்று இரண்டாம் முறையாக இறைவனிடம்
வேண்டினார். மத்தேயு 26:39-42
அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை
பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.
லூக்கா 22:44
ஏசு இப்படி ஒரு பெண்ணைப் போன்று அழலாமா? என்ற கேள்வி எழலாம். ஏசு ஒருபோதும் தமக்காக அழ மாட்டார்.
உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி
எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதை விட உங்கள் உறுப்புகளில்
ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.
மத்தேயு 5:29, 30
பாவம் செய்த உடலுறுப்பைக் களைந்தெறியச் சொல்லும் ஏசு, தன்னுடலைக் காப்பாற்றுவதற்காக இவ்வாறு வியர்வை சிந்த அழுவாரா? நிச்சயமாக மாட்டார். இவ்வாறு அழுவதற்குக் காரணம், யூத சமுதாயத்திற்காக வேண்டித் தான்.
யூதர்கள் ஒரு வித்தியாசமான வாதத்தை வைத்தனர். மஸீஹ் என்று வரக்
கூடிய எவனையும் கொன்று விட்டால் போதும். அவன் பொய்யன் என்பதற்கு அந்தக் கொலையே சான்றாக
ஆகி விடும். ஏனெனில் மஸீஹ் - மெஸாயா என்றால் நீண்ட காலம் வாழ்பவர் என்ற பொருளில் யூதர்கள்
பயன்படுத்தி வந்தனர். இப்படியொரு விசித்திரமான கருத்தை யூதர்கள் கொண்டிருந்ததற்கு ஓர்
அடிப்படையும் இருந்தது.
ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக் கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.
உபாகமம் 18:20
பைபிளின் இந்த வசனத்தின்படி பொய்யன் தான் கொல்லப்படுவான். தான்
கொல்லப்பட்டு விட்டால் பொய்யன் என்றாகி விடும். யூதர்கள் கூறும் அந்த வாதம் சரியாகி
விடும். உண்மையாளரான தனக்கு ஒரு பொய்யரின் கதி ஏற்பட்டு விடக் கூடாது என்று தான் ஏசு
களங்குகின்றார்; கண்ணீர் வடிக்கின்றார்; கதறுகின்றார்.
மரணத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று கண்ணீர் விட்டுக் கதறி
அழுத இந்த ஏசுவைத் தான் கிறித்தவர்கள், மக்களைக் காப்பதற்காக ஏசு தன்னை அர்ப்பணித்தார் என்று கதையளக்கின்றார்கள்.
அதுவும் இந்த உலகம் உருவாவதற்கு முன்னரே கடவுளுக்கும் குமாரனுக்கும் அப்படி ஓர் உடன்படிக்கை
ஏற்பட்டு விட்டதாம். மூன்று கடவுள்களில் இரண்டாமவரான ஒரு கடவுள், தானே சிலுவையில் தொங்கி மனிதனை முதல் பாவத்திலிருந்து அத்தனை
பாவங்களை விட்டும் மீட்க முற்பட்டாராம். எவ்வளவு பெரிய பொய் என்று பாருங்கள்.
மாடி அறை இரவு உணவிலிருந்து, கெத்சமனி தோட்டத்துக் காவல் ஏற்பாடு உட்பட, இரத்தம் சிந்தும் பிரார்த்தனை வரைக்கும் தனக்கு என்ன நடக்கப்
போகின்றது என்பதை ஏசு தெரிந்து வைத்திருக்கவில்லை.
மரணத்திற்குத் தயங்குகின்ற இப்படிப்பட்ட ஒருவரை மனித குலத்தின்
பாவ மீட்சிக்காகக் கடவுள் தேர்வு செய்திருந்தால் அதற்குப் பெயர் மீட்பு அல்ல! கடவுள்
செய்திருக்கும் மிகப் பெரும் படுகொலையாகும். இந்தப் படுகொலையை பாவ மீட்சி என்று அழைப்பது
கடைந்தெடுத்த அநியாயமாகும்.
ஏசுவின் மரணம் என்பது பவுல் அடிகள் பைபிளில் நுழைத்து விட்ட
கைச்சரக்கு, கற்பனைக் கலப்பு என்பதற்காக
இடையில் இந்த எடுத்துக்காட்டு!
இப்போது ஏசுவின் பிரார்த்தனையைப் பார்க்க வருவோம்.
ஏக்கத்தில் தலைவர்! தூக்கத்தில் தொண்டர்கள்!
(குறிப்பு: ஏசுவின் உதவியாளர்களை அல்லாஹ், திருக்குர்ஆன் 3:52, 61:14 ஆகிய வசனங்களில் அல்லாஹ்வின் உதவியாளர்கள் என்று பாராட்டிச்
சொல்கிறான். இங்கு நாம் குறிப்பிட்டிருப்பது பைபிளின் நிலைப்பாட்டைத் தான் என்பதைக்
கவனத்தில் கொள்ளவும்.)
ஏசு பிரார்த்தனை செய்து விட்டு வந்து பார்க்கையில் சீடர்கள்
உறங்கிக் கொண்டிருக்கின்றனர். எப்படிப்பட்ட காவலர்கள்?
அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக்
கண்டு பேதுருவிடம், ஒரு மணி நேரம்கூட
என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? (என்று கேட்டார்.)
மத்தேயு 26:40
தூங்கிக் கொண்டிருந்த சீடர்களைப் பார்த்து ஏசு கடிந்து கொள்கின்றார்.
மீண்டும் ஏசு வரும் போது அவர்கள் உறங்கிக் கொண்டு தான் இருந்தனர்.
அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக்
கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது
என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.
மாற்கு 14:40
சப்பைக்கட்டு கட்டுகின்ற லூக்கா
தலைவரை ஏக்கத்திலும், துக்கத்திலும் தவிக்க விட்டு விட்டு, தூக்கத்தில் தொலைந்து போய்க் கிடக்கும் சீடர்களைத் துரோகிகள்
என்று சாடுவதற்குப் பதிலாக, அவர்களது தூக்கத்தை
சோகத் தூக்கம் என்று லூக்கா வர்ணிக்கிறார்.
அவர் இறைவேண்டலை முடித்து விட்டு எழுந்து சீடர்களிடம் வந்த போது
அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
லூக்கா 22:45
மனிதன் சிக்கலில் மாட்டிக் கொள்கின்ற போது, உடலில் ஒரு சுரப்பியானது இரத்தத்தில் ஒரு விதமான திரவத்தைச்
சுரக்கின்றது. அவ்வளவு தான். அவனது தூக்கம் தொலைந்து விடுகின்றது. ஏன் தூக்கம் தொலைய
வேண்டும்?
அவன் தூங்கி விட்டால் எதிரி தனது திட்டத்தை நிறைவேற்றி அவனைக்
கொன்று விடுவான் அல்லது அவனை ஆபத்தில் சிக்க வைத்து விடுவான். இதற்குத் தான் இப்படி
ஒரு தூக்கக் கலைப்புத் திரவம். இறைவன் இயற்கையாக இப்படி ஒரு பாதுகாப்பை மனிதனுக்குத்
தந்திருக்கின்றான். மனித உடற்கூறு இயல் ஆய்வாளர்கள் இதைத் தெரிவிக்கின்றனர்.
ஆனால் லூக்காவோ இதற்கு நேர் மாற்றமாக ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து
விடுகின்றார். ஏசு இப்படியொரு இக்கட்டில் மாட்டித் தவிக்கும் போது இவர்களுக்கு எப்படித்
தூக்கம் வந்தது என்று தெரியவில்லை.
குறட்டை விட்டுத் தூங்கும் இந்தத் தூங்கு மூஞ்சிகளை வைத்துக்
கொண்டு முதலில் கோவில் நிர்வாகத்தையும், அதன் பின் ரோம சாம்ராஜ்ய கோட்டையையும் எப்படிப் பிடிக்க முடியும்? ஒருபோதும் முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் இதோ ஏசுவைக்
கைது செய்வதற்காக அவரது தோட்டத்திற்குக் குருமார்கள் கூட்டம் வந்து நிற்கின்றது.
காட்டிக் கொடுக்கும் யூதாசு! கைதாகும் ஏசு!
ஏசு கணக்குப் போட்டது போன்று யூதாசுடன் யூத மத குருமார்கள், பரிசேயர்கள் மட்டும் வரவில்லை. கூடவே ரோமானியப் படை வீரர்களும்
சேர்ந்து வந்திருந்தார்கள்.
படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய
காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும்
அங்கே வந்தான்.
யோவான் 18:3
இயேசு அவனிடம், யூதாசே, முத்தமிட்டா
மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்? என்றார்.
லூக்கா 22:49
சமயோசிதமிக்க ஏசு இவ்வாறு கேட்டு முடிப்பதற்குள்ளாக சீடர்கள்
படை வீரர் (?) ஒருவர் தலைமைக் குழு ஊழியன்
ஒருவனின் காதை அறுத்து விட்டார். சீடர்களிடம் இப்போது பொங்குகின்ற இந்த வீரம், தான் ஏற்கனவே தீட்டிய திட்டத்திற்கு எதிரானது என்று விளங்கிக்
கொண்ட ஏசு, அந்தச் சீடரைக் கண்டிக்கின்றார்.
அப்பொழுது இயேசு அவரிடம், உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்
மத்தேயு 26:52
வெட்டப்பட்ட காதையும் அதே இடத்தில் வைத்துச் சரி செய்து விடுகின்றார்.
கடைசி நிமிட மாற்றம்
ஏசு இப்போது ஏன் எதிர்க்கவில்லை? ஏற்கனவே தன் ஆட்களிடம் வாட்கள் வாங்கச் சொன்னதை ஏசு மறந்து விட்டாரா? என்றால் நிச்சயமாக இல்லை. ஏசுவுக்கு நன்கு தெரியும். தன் தூங்கு
மூஞ்சி சீடர்களை வைத்துக் கொண்டு இந்த ரோமானியப் படையை எதிர்ப்பது தற்கொலை முயற்சி
என்று தெளிவாக விளங்கி வைத்திருந்தார். அதனால் தான் ஏசு இந்தக் கடைசி நிமிட மாற்றத்திற்குத்
தள்ளப்பட்டார். இறுதியாகக் கைது செய்யப்பட்டு விடுகின்றார்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், ஏசு செய்த இந்தப் பிரார்த்தனை, சீடர்களிடம் அவர் வெளிப்படுத்திய மனவேதனை அனைத்துமே அவர் மரணிக்கத்
தயாரில்லை என்பதையே உணர்த்துகின்றன.
துன்பக் கிண்ணம் தன்னை விட்டும் அகலட்டும் என்று அவர் உருக்கமாக
வைத்த கோரிக்கை எல்லாம் அவர் மரணிக்க விரும்பவில்லை என்பதைத் தான் காட்டுகின்றன.
இப்படி ஒரு மனநிலையில் உள்ள ஒருவர் மனித குலப் பாவ மீட்சிக்குத்
தன்னை அர்ப்பணிக்க வந்தார் என்று எப்படிச் சொல்ல முடியும்?
ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 3
வழக்கு விசாரணை
சீடர்கள் எப்போதும் ஏசுவையும் அவரது பணியையும் தவறாகவே விளங்கி
வைத்திருந்தனர். யூதர்களின் அரசராக அவரைப் பிரகடனப்படுத்துமாறு கேட்டனர். வானத்திலிருந்து
தீயை இறக்குமாறு வேண்டினர். கடவுளின் ஆட்சியில் அவனது வலப்புறத்திலும் இடப்புறத்திலும்
அமருமாறு அவரிடம் கோரினர். கடவுளைத் தங்கள் கண் முன்னால் நேரடியாகக் காட்ட வேண்டும்
என்று முறையிட்டனர். அவரது திட்டத்திற்குப் பொருந்தாத எதையும், எல்லாவற்றையும் அவரிடம் கேட்டு அவரையும் செய்ய வைத்து, தாங்களும் அவ்வாறு செய்தனர்.
இப்படித் தான் அவர்கள் கடைசி வரை செயல்பட்டனர். அந்தக் கடைசி
நேரம் வந்ததும் அவரை அவர்கள் அனைவரும் விட்டு விட்டு ஓடி விட்டனர் என பேராசிரியர் மாமெரி
என்பார் ஏசுவின் சீடர்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.
மைக்கேல் ஹெச். ஹார்ட் கூறுவது போல் வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியவர் முஹம்மது (ஸல்) என்றால்...
பிரிட்டனின் 11வது கலைக் களஞ்சியம் கூறுவது போல் மதத் தலைவர்களில் மாபெரும்
வெற்றித் தலைவர் முஹம்மது (ஸல்) என்றால்...
டைம் மாத இதழ் கூறுவது போல் எல்லாக் காலத்திலும் சிறந்த தலைவர்
முஹம்மது (ஸல்) என்றால்...
லாமர்டைன் தனது துருக்கிய வரலாற்று நூலில் கூறுவது போல் உலகில்
வாழ்ந்த தலை சிறந்த மனிதர் முஹம்மது (ஸல்) என்றால்...
உலகில் வாழ்ந்த தூதர்களிலேயே மிகவும் சோதனைக்குள்ளான தூதர் ஏசு
என்று குறிப்பிட்டுச் சொல்லி விடலாம்.
காரணம், அவரது
மிக நெருங்கிய சீடர்கள் அவரைத் தவறாகப் புரிந்து வைத்திருந்தனர் என்று பைபிள் கூறுகின்றது.
யூத சமுதாயம் அவரது அறிவுரைகளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தது.
அவரைப் பின்பற்றியவர்கள் இன்று வரை அவரைத் தவறான முறையில் சித்தரித்துக்
கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய ஏசு தான், மத குருக்களின் விசாரணையில் மாட்டித் தவிக்கின்றார். அந்த விசாரணையை
இப்போது பார்ப்போம்.
தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு
மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை.
பலர் அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று
முரண்பட்டிருந்தன.
சிலர் எழுந்து, மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்து விட்டுக்
கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக்
கேட்டோம் என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர். அப்படியும் அவர்களுடைய சான்று
ஒத்துவரவில்லை. அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும்
கூற மாட்டாயா? என்று இயேசுவைக் கேட்டார்.
ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை.
மீண்டும் தலைமைக் குரு, போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ? என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு, நானே அவர்; மேலும்
மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும்
காண்பீர்கள் என்றார்.
தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக் கொண்டு, இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது? என்று கேட்க, அவர்கள் அனைவரும், இவன் சாக வேண்டியவன் என்று தீர்மானித்தார்கள். பின்பு சிலர்
அவர் மேல் துப்பவும், அவர் முகத்தை
மூடி அவரைக் கையால் குத்தி, இறைவாக்கினனே, யார் எனச் சொல் என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக்
கன்னத்தில் அறைந்தனர்.
மாற்கு 14:55-65
முடிவு செய்யப்பட்ட தண்டனை
தலைமைக் குரு கயபா, ஏசுவைத் தீர்த்துக் கட்டுவது என்று ஏற்கனவே முடிவு செய்து விட்டார்.
கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய்
இருந்தார். அவர் அவர்களிடம், உங்களுக்கு
ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக
இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை என்று சொன்னார்.
யோவான் 11:49, 50
தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப் பற்றியும் அவருடைய போதனையைப்
பற்றியும் அவரிடம் கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும்
தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும் தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும்
பேசியதில்லை. ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப் பாரும்.
நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே என்றார்.
யோவான் 18:19-21
ஆதாரம் கேட்கும் ஏசு
இயேசு அவரிடம், நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப்
பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்? என்று கேட்டார்.
யோவான் 18:23
ஒருவாறாக, ஏசுவுக்கு
எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. கடவுளைப் பழித்துரைத்தார் என்று ஏசு மீது
குற்றம் சாட்டப்பட்டது. மஸீஹ் என்று சொன்னதால் கடவுளைப் பழிப்பதாகி விடாது. அது போல்
யூதர்களிடம் கடவுளின் குமாரர் என்று சொன்னாலும் பழிப்புரை வருவதில்லை. இருப்பினும்
ஏசுவைக் கொல்ல வேண்டும் என்று மதகுரு கயபா ஏற்கனவே முடிவெடுத்து விட்டார். அதை அரங்கேற்ற
வேண்டும். எனவே தீர்ப்பு அந்தத் திசையை நோக்கிச் சென்றது. தீர்ப்பளிக்கப்பட்ட ஏசுவை
இப்போது யூதர்களால் தண்டிக்க முடியாது.
பிலாத்து அவர்களிடம், நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு
வழங்குங்கள் என்றார். யூதர்கள் அவரிடம், சட்டப் படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது
என்றார்கள்.
யோவான் 18:31
பிலாத்து முன் ஏசு
கடவுளைப் பழித்துரைத்தல் என்பதிலிருந்து, அரச துரோகம் என்று திடீரென குற்றச்சாட்டை யூதர்கள் மாற்றியமைத்தார்கள்.
காரணம்,
ஏசு தன்னைக் கடவுள் என்று வாதிடுகிறார் என்று சொன்னால் அது ஆளுநர்
பிலாத்துக்கு மரண தண்டனைக்குரிய குற்றமாகத் தோன்றாது. அது மட்டுமின்றி கடவுள் என்று
சொல்லிக் கொள்ளும் ஒரு சாதியினர் அவரைச் சுற்றி கணக்கற்ற வகையில் இருந்தனர்.
நம் நாட்டுக் காவலர்கள், முதல் தகவல் அறிக்கையைக் கடைசி வரை, நீதி மன்றத்தில் தாக்கல் செய்கின்ற வரை மாற்றி மாற்றி எழுதுவது
போல் யூதர்கள் குற்றச்சாட்டை மாற்றி அமைக்கின்றனர்.
ஏரோத் முன்னிலையில் ஏசு
இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம்
நாங்களே கேட்டோம் என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.
பிலாத்து அவரை நோக்கி, நீ யூதரின் அரசனா? என்று கேட்க, அவர், அவ்வாறு
நீர் சொல்கிறீர் என்று பதில் கூறினார்.
பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்று கூறினான்.
ஆனால் அவர்கள், இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக்
கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான் என்று வலியுறுத்திக் கூறினார்கள்.
இதைக் கேட்ட பிலாத்து, இவன் கலிலேயனா? என்று கேட்டான்;
அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.
இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக்
குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய்
எதிர்பார்த்திருந்தான்.
அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப்
பதில் எதுவும் கூறவில்லை.
அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல்
மிகுதியான குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள்.
ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி
அனுப்பினான்.
அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும்
அன்று நண்பர்களாயினர்.
லூக்கா 23:2-12
பிலாத்து தீர்ப்பளிப்பதற்கு முன்னால் பிலாத்தின் மனைவி ஒரு தகவலை
அனுப்பி வைக்கிறாள்.
பிலாத்து நடுவர் இருக்கை மீது அமர்த்திருந்த பொழுது அவனுடைய
மனைவி அவனிடம் ஆளனுப்பி, அந்த நேர்மையாளன்
வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர் பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்
என்று கூறினார். மத்தேயு 27:19
அப்போது பிலாத்து, என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத்
தெரியாதா?
என்றான்.
இயேசு மறுமொழியாக, மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும்
இராது. ஆகவே என்னை உம்மிடம் ஒப்புவித்தவன் தான் பெரும் பாவம் செய்தவன் என்றார்.
அது முதல் பிலாத்து அவரை விடுவிக்க வழி தேடினான். ஆனால் யூதர்கள், நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது.
தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி என்றார்கள்.
யோவான் 19:10-12
பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும்
ஒன்றாக வரவழைத்தான்.
அவர்களை நோக்கி, மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு
வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக்
குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை. ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர்
இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை
என்பது தெளிவு. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன் என்றான்.
(விழாவின் போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம்
அவனுக்கு இருந்தது.)
திரண்டிருந்த மக்கள் அனைவரும், இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும் என்று கத்தினர்.
பரபா என்பவன் நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டு கொலை செய்ததற்காக
சிறையிலிடப்பட்டவன். பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப்
பேசினான்.
ஆனால் அவர்கள், அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கத்தினார்கள்.
மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை.
எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன் என்றான்.
அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில்
வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.
அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான்.
கலகத்தில் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள்
கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.
லூக்கா 23:13-25
இந்த இடத்தில் கிறித்தவ அழைப்பாளர்களைக் கொஞ்சம் அடையாளம் காட்டியாக
வேண்டும்.
அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர்
தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு
இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத
செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.
ஏசாயா 53:7
இந்த மேற்கோளின்படி ஏசு என்ற செம்மறியாடு விசாரணையின் போது வாய்
திறக்கவில்லை என்று கிறித்தவ அழைப்பாளர்கள் சாதிக்கின்றனர். இதை உரைநடையாகவும் உற்சாகமாகச்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கவிதையாகவும் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏசு மவுனமாக இருந்தாரா? விசாரணையின் போது தமக்காக வாதிடாமல் இருந்தாரா? இதோ பிலாத்துக்கு முன்னிலையில் அவர் பேசுவதைக் கேளுங்கள்.
பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், நீ
யூதரின் அரசனா? என்று கேட்டான்.
இயேசு மறுமொழியாக, நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக்
கேட்கிறீரா? என்று கேட்டார்.
அதற்கு பிலாத்து, நான் ஒரு யூதனா, என்ன? உன்
இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்? என்று கேட்டான்.
இயேசு மறுமொழியாக, எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய்
இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள்.
ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல என்றார்.
பிலாத்து அவரிடம், அப்படியானால் நீ அரசன் தானோ? என்று கேட்டான். அதற்கு இயேசு, அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி.
இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே
உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்
என்றார்.
யோவான் 18:33-37
மதகுரு கயபாவுக்கு முன்னால் பேசுவதைக் கேளுங்கள்.
இயேசு அவரிடம், நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப்
பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்? என்று கேட்டார்.
யோவான் 18:23
கடவுளிடம் பிரார்த்தனை செய்தது:
அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும்
என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்
படியே நிகழட்டும் என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.
மத்தேயு 26:39
இதுவெல்லாம் எதைக் காட்டுகின்றது? தன்னுடைய நியாய நிலைப்பாட்டை ஏசு பொருத்தமான இடங்களில், மிகப் பொருத்தமாகவும், போதுமான அளவிலும் எடுத்து வைக்கின்றார். ஆனால் இந்தப் பாதிரிகளும், கிறித்தவ அழைப்பாளர்களும் ஏசு பேசவில்லை என்று சாதிக்கின்றனர்.
அதனால் இவர்கள், கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை என்று மத்தேயு 13:13 கூறும் பட்டியலில் உள்ளவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
இந்தப் பாதிரிகள் தங்களையும் வழிகெடுத்து, பிறரையும் வழிகெடுக்கக் கூடியவர்கள் என்பதற்காக இந்த எடுத்துக்காட்டு.
இப்போது ஏசுவின் விசாரணைக்கு வருவோம்.
பிலாத்து தன் விசாரணையின் போது ஏசு குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கின்றார்.
அடுத்து,
பிலாத்தின் மனைவியும், ஏசுவுக்கு எதிராக எந்த அநீதியும் இழைத்து விடக் கூடாது என்று
செய்தியனுப்புகிறாள்.
இவை நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கும் செய்தி, அரசும், அரசு
இயந்திரமும் ஏசுவை சிலுவையில் அறைந்து கொல்வதற்கு ஆயத்தமாக இல்லை என்பதைத் தான்.
அரசும், அரசு
இயந்திரமும் உதவி செய்தால் மட்டுமே ஏசு கொல்லப்பட முடியும். இல்லையெனில் அது நடக்காது
என்பதை இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
பிலாத்து, நன்கு
விசாரித்த பிறகே ஏசுவைக் குற்றமற்றவர் என்று தீர்மானிக்கிறார். தான் சிலுவையில் அறைந்து
கொல்லப்பட வேண்டும் என்பதில் ஏசு உறுதியாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தனக்குத் தண்டனை வழங்கும் விதமாக பிலாத்திடம் தன்னுடைய கருத்தை
அழுத்தமாகப் பதிய வைத்திருக்க வேண்டும்.
கடவுளின் ராஜ்யத்தை அமைக்க வந்தவர் தான் என்பதைப் பிலாத்திடம்
கூறியிருந்தால் அது அரச துரோகமாகக் கருதப்பட்டு உடனே தண்டனையும் வழங்கப்பட்டிருக்கும்.
ஆனால் ஏசு அவ்வாறு செய்யாததால் பிலாத்து ஏசுவைக் குற்றமற்றவர் என்று தீர்மானிக்கின்றார்.
தலை போனாலும் பரவாயில்லை என்ற கருத்தில் ஏசு தன் வாதத்தை வீராவேசமாகப்
பதிய வைக்கவில்லை. தன் தலை தப்பினால் போதும் என்ற ரீதியில் தான் தன் வாதத்தை ஏசு எடுத்து
வைக்கின்றார். இந்நிலையில் அவரை மனித குல மீட்சிக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் என்று
எப்படிச் சொல்ல முடியும்?
ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 4
இறக்கும் முன்பே சிலுவையிறக்கம்
அரசியல் எதிரிகள், கொலைகாரர்கள், புரட்சியாளர்களைக் களைந்தெடுப்பதற்குப் பல்வேறு விதத்தில் மரண
தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன. கல்லால் எறிந்து கொல்தல், கூர்மையான பொருட்கள் மூலம் கொல்தல், நீரில் மூழ்கடித்தல் போன்ற முறைகளில் சமூக விரோதிகள் கொல்லப்பட்டு
வந்தனர். ஆனால் இந்த முறைகளில் சமூக விரோதிகள் வெகு சீக்கிரமே மரணத்தைத் தழுவி விடுகின்றனர்.
சாவை,
சன்னம் சன்னமாக அனுபவிப்பதில்லை. அணு அணுவாக வேதனையை அனுபவிப்பதில்லை.
சாவை,
அணு அணுவாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக உதயமானது தான் சிலுவையில்
அறைதல்.
சிலுவையில் அறைதலிலும் இரு வித வகைகள் உள்ளன. ஒன்று மெதுவாகச்
சாகடித்தல்; மற்றொன்று வேகமாகச் சாகடித்தல்.
நீண்ட நேரம் சிலுவையிலேயே தொங்க விட்டுச் சாகடிப்பது மெதுவாகக்
கொல்லும் முறையாகும்.
கடப்பாறை போன்ற ஆயுதத்தை வைத்துக் கால் எலும்புகளை உடைத்துக்
கொல்வது! கால் எலும்புகள் தாக்கப்பட்டு முறிந்தவுடன் தொங்குபவர் மூச்சுத் திணறி உயிர்
இழந்து விடுவார். இது வேகமாகச் சாகடிக்கும் முறை!
ஏசு இந்த அவசர மரணத்தை அனுபவிக்கவில்லை. அவரது கால்களும் முறிக்கப்படவில்லை.
காரணம் ஏசு கழுமரத்தில் ஏற்றப்பட்ட கொஞ்ச நேரத்தில் அவர் இறந்து விட்டார் என்று ரோமானியப்
படைத் தளபதி அறிவித்து விட்டார். அதனால் இதற்கு அவசியமில்லாமல் ஆனது.
இது மட்டுமில்லாமல் குற்றவாளியின் கை, கால்களை தோல் துண்டுகளால் சிலுவையில் கட்டித் தொங்க விடுதல், அல்லது அவர்களது கை, கால்களை ஆணிகளால் அறைந்து விடுதல் என்ற இரண்டு முறைகள் உள்ளன.
இதில் ஏசு கழுமரத்தில் அறையப்பட்டாரா? அல்லது கட்டப்பட்டாரா? என்று பார்க்கும் போது, கிடைக்கக்கூடிய விபரங்களை வைத்துப் பார்க்கையில் ஏசு கட்டத்
தான் படுகிறார்.
மற்றச் சீடர்கள் அவரிடம், ஆண்டவரைக் கண்டோம் என்றார்கள். தோமா அவர்களிடம், அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் என்றார்.
எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று
தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள்
நடுவில் நின்று, உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
என்று வாழ்த்தினார்.
பின்னர் அவர் தோமாவிடம், இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில்
இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள் என்றார். தோமா அவரைப் பார்த்து, நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்! என்றார்.
யோவான் 20:25-28
இந்தச் சம்பவத்தில், ஏசு மீண்டும் வந்த போது அவரது கைகளில் ஆணி இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்படியானால் ஏசு சிலுவையில் கட்டப்படவில்லை; ஆணியால் அறையப்பட்டிருக்கிறார் என்று தானே அர்த்தம் என்று கிறித்தவர்கள்
கேள்வி எழுப்புவர். ஆனால் உர்ன்க்ஷற்ண்ய்ஞ் பட்ர்ம்ர்ள் என்றழைக்கப்படும் சந்தேகப்
பேர்வழி தோமாவின் இந்தச் சம்பவம் பொய்யான சம்பவமாகும். ஏசு மீண்டும் வந்ததாக இடம் பெறும்
அனைத்துச் செய்திகளும் பைபிளில் இட்டுக்கட்டப்பட்டவையே!
யோவான் 8வது
அதிகாரத்தில் 1 முதல் 11 வரையிலான வசனங்கள் 1952ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பைபிள் பதிப்பில் நீக்கப்பட்டன. இந்த
வசனங்கள் மூலப் பிரதியில் இல்லை, அதனால்
இது ஒரு போலிச் சம்பவம் என்று கூறி 52 சபையினர் கூடி அதை நீக்கி விட்டனர் என்பதையும், பிறகு வெளியிடப்பட்ட பைபிளில் சேர்க்கப்பட்டதையும் கடந்த இதழில்
பார்த்தோம்.
ஏசு திரும்ப வந்ததாகவும் அவரது கைகளில் ஆணியின் தழும்பைப் பார்த்ததாகவும்
சந்தேகப் பேர்வழி தோமா கூறுவது இது போன்ற போலிச் சம்பவம் தான்.
எனவே ஏசு சிலுவையில் தோல் துண்டுகளால் தான் கட்டப்பட்டிருந்தார்.
சிலுவையில் கட்டப்பட்ட நேரம்
பைபிள் எழுத்தாளர்களின் கருத்துப்படி யூதர்களும் ரோமானியர்களும்
ஏசுவை ஆறாம் நேரத்தில் அதாவது வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு சிலுவையில் ஏற்றப்பட்டார். 9வது நேரம் அதாவது 3 மணிக்கு ஆவியை விட்டார். (உண்மையில் இறக்கவில்லை)
யூதர்கள் வித்தியாசமானவர்கள். கழுமரத்தில் ஏற்ற வேண்டும் என்று
எந்த அளவுக்கு அவசரப்பட்டார்களோ அதே அளவுக்கு இறக்க வேண்டும் என்றும் அவசரப்பட்டார்கள்.
ஏன்?
மறுநாள் அவர்களது புனித நாளான சனிக்கிழமை!
சாவுக்கு ஏதுவான பாவம் செய்த மனிதன் சாகடிக்கப்பட்டபின் அவனது
பிணத்தை ஒரு மரத்திலே தொங்கவிடு, ஆனால்
அவன் பிணம் இரவில் மரத்தில் தொங்கக்கூடாது. அவனை நீ அன்றே அடக்கம் செய்ய வேண்டும்.
ஏனெனில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு
உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டைத் தீட்டுப் படுத்தாதே.
உபாகமம் 21:22, 23
யூதர்களின் வேத நூல் இப்படிக் கூறுவதால் அவர்கள் ஏசுவைக் கழுமரத்திலிருந்து
இரவுக்குள் இறக்க வேண்டும் என்று அவசரப்பட்டார்கள். இப்படியொரு நெருக்கடியை யூதர்களுக்கு
இறைவன் கொடுத்து ஏசுவைப் பாதுகாக்கின்றான். இந்த இறைப் பாதுகாப்பும் ஏசு இறக்கவில்லை
என்பதையே காட்டுகிறது.
ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 5
ஒப்புக் கொள்ளப்பட்ட பிரார்த்தனை
தன்னை இந்த இக்கட்டிலிருந்தும் நெருக்கடியிலிருந்தும் காக்க
வேண்டி இறைவனிடம் ஏசு பிரார்த்தனை புரிந்ததைக் கண்டோம். அதை இங்கு மீண்டும் நினைவு
கூர்வோம்.
பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும்
என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்
படியே நிகழட்டும் என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.
மத்தேயு 26:39
மீண்டும் சென்று, என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும் என்று இரண்டாம் முறையாக இறைவனிடம்
வேண்டினார். மத்தேயு 26:42
அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை
பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.
லூக்கா 22:44
ஏசுவின் உணர்வுப்பூர்வமான இந்தப் பிரார்த்தனைக்கு என்ன பதில்
கிடைக்கும்? ஏசுவின் சகோதரர்களில் ஒருவரான
ஜேம்ஸ் கூறுகிறார்.
நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும் போது நோயுற்றவர் குணமாவார்.
ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். ஆகவே
ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம்
வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமை மிக்க மன்றாட்டு, பயன் விளைவிக்கும். யாக்கோபு 5:16
ஏசுவின் பிரார்த்தனை செவிடன் காதில் விழுந்த சங்கல்ல என்று பவுலும்
உறுதி செய்கின்றார்.
அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல்
எழுப்பி,
கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை
முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி
சாய்த்தார். எபிரேயர் 5:7
கடவுள் செவிசாய்த்தார் என்றால் என்ன பொருள்? கடவுள் ஏசுவுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார் என்பது தான்.
தனது தள்ளாத வயதில் தனக்குப் பிள்ளை வேண்டும் என்று ஆபிரஹாம்
பிரார்த்தனை புரிந்தார். கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். ஜக்கரிய்யா பிரார்த்தித்தார்.
கடவுள் அவருக்கு உடனே பதிலளித்து யோவானை வழங்கினார்.
அதுபோல் ஏசு பிரார்த்தனை புரிகின்றார். அவருக்கும் கடவுள் உடனே
பதிலளிக்கிறார்.
அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை
வலுப்படுத்தினார்.
லூக்கா 22:43
வானவர் வந்து ஏசுவுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றார். ஆம்! ஏசு
மரணித்திடாத வண்ணம் ஒரு பாதுகாப்பை வானவர் வழங்குகின்றார்.
ஏசுவைக் காப்பாற்றுவதற்குக் கடவுள் செய்த ஏற்பாடுகளை இங்கொரு
பட்டியல் இடுவோம்.
1. வானத்திலிருந்து வானவர் மூலம் ஒரு வாக்குறுதி
2. பிலாத்து ஏசுவைக் குற்றமற்றவராகக் காணுதல்.
3. ஏசுவுக்குக் கடுகளவும் துன்பம் தரலாகாது என்று பிலாத்தின் மனைவி
செய்த வேண்டுகோள்.
4. சிலுவையில் கால்கள் முறிக்கப்படாதது.
5. அவசரம் அவசரமாய் ஏசுவை சிலுவையிலிருந்து கீழே இறக்குதல்
இவை அனைத்துமே ஏசு இறக்கவில்லை என்பதற்கு அடுக்கடுக்கான, அற்புதமான ஆதாரங்களாகும்.
ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 6
உறுதிப்படுத்தப்படாத மரணம்
கழுமரத்தில் ஏற்றப்பட்ட ஏசுவின் கால் எலும்புகள் உடைக்கப்படவில்லை.
அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.
சங்கீதம் 34:20
செத்த பிணத்தின் கால் எலும்புகள் உடைக்கப்பட்டால் என்ன? உடைக்கப்படாவிட்டால் என்ன?
கால் எலும்புகள் உடைக்கப்படவில்லை என்றால் அதனால் ஏற்படும் பயன்
உயிருள்ளவருக்குத் தானே! இறந்தவருக்கு அல்லது ஆவியாக மாறியவருக்கு எந்தப் பயனும் கிடையாது.
இந்த அழுத்தமான வாதத்தின்படி ஏசு உயிருடன் தான் இருக்கிறார்
என்பதையே இது உறுதிப்படுத்துகின்றது.
ஏசுவின் கால் எலும்புகளை ரோமப் படையினர் ஏன் உடைக்காமல் விட்டனர்?
படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள்
ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள்
இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை
முறிக்கவில்லை.
யோவான் 19:32, 33
ஏசுவின் இரு பக்கங்களில் கழுமரத்தில் தொங்க விடப்பட்டிருந்த
இருவரின் கால்களை முறிக்கின்ற படை வீரர்கள், ஏசுவிடம் வருகின்றனர். அவர் ஏற்கனவே இறந்து போய் விட்டார் என்று
எண்ணி அவரது கால்களை முறிக்கவில்லை.
ஏசு இறந்து விட்டார் என்பதை நவீன கால ஸ்டெதாஸ்கோப் மூலம் படைவீரர்கள்
உறுதிப்படுத்தவில்லை. காலைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. நாடி பிடித்தும் பார்க்கவில்லை.
அப்படி ஒரு சிந்தனையை அவர்களின் உள்ளங்களில் கடவுள் போட்டு ஏசுவைக் காப்பாற்றினான்.
இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்துமே ஏசுவை மரணத்திலிருந்து
பாதுகாப்பதற்காகத் தான்.
ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 7
யூதர்களை விரட்டிய இறைவன்
இறைவன் ஏற்படுத்திய இன்னொரு ஏற்பாடு, அணு அணுவாக மரணத்தை ஏசு சுவைக்கும் காட்சியைப் பார்த்து ரசிக்க
வேண்டும் என்று யூதர்கள் காத்திருந்தனர். அதற்கான அவகாசத்தையும் அரியதொரு வாய்ப்பையும்
எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால் கடவுள் அவர்களது எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போட்டு விட்டார்.
அந்த யூதக் கூட்டத்தை விரட்டியடிப்பதற்காகப் பலத்த ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டைக் கடவுள்
செய்திருந்தார்.
நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும்
இருள் உண்டாயிற்று.
மத்தேயு 27:45
அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக்
கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. மத்தேயு 27:51
ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை
நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.
லூக்கா 23:44, 45
ஏசு சிலுவையில் தொங்க விடப்பட்ட அந்த நேரத்தில் கிரகணம் ஏற்பட்டு
இருள் சூழ்ந்தது; நிலநடுக்கமும்
ஏற்பட்டது.
யூதர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஏசுவின் சாவை உறுதி
செய்யாமல் நகர மாட்டார்கள். அதற்காக அவர்களை விரட்டியடிப்பதற்காகவும், ஏசுவின் ஆதரவாளர்கள் அவருக்கு உதவுவதற்காகவும் இப்படி ஒரு ஏற்பாட்டைக்
கடவுள் செய்கின்றார்.
ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 8
வியப்புக்குள்ளாகும் பிலாத்து
கடவுள் அந்தரங்கமான, மறைமுகமான வழியில் செயலாற்றுபவர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு
தான் படைவீரர்களின் உள்ளங்களில் ஏசு இறந்து விட்டார் என்ற எண்ணத்தைப் போட்டது!
படை வீரர்கள் சிலருக்கு இப்படி ஓர் எண்ணத்தைப் போட்ட அதே கடவுள், இன்னொரு படைவீரரை ஏசுவின் விலாப்புறத்தில் ஈட்டியால் குத்தும்படி
தூண்டுகிறார். அவ்வாறு குத்தியவுடனே தண்ணீரும் ரத்தமும் வடிந்தன. இது ஏசுவின் உயிரைக்
காப்பாற்றும் வகையில் அமைந்தது. இவ்வாறு இரத்தம் வெளியேறுவதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம்
மறுபடியும் சீராவதற்கு உதவுகின்றது.
சிலுவை என்ற தலைப்பில் கலைக் களஞ்சிய பைபிளில் 960ஆம் பக்கத்தில் வெளியான கட்டுரை, ஏசுவின் உடலில் ஈட்டி ஊடுறுவுகையில் அவர் உயிருடன் இருந்தார்
என்று உறுதிப்படுத்துகின்றது. அந்தக் கட்டுரை, தண்ணீரும் இரத்தமும் சேர்ந்து உடனடியாக வெளியானதையும் உறுதிப்படுத்துகின்றது.
ஈட்டியின் தாக்குதல் உடலில் அதிகமான ஒரு தூண்டுதலை ஏற்படுத்துகின்றது.
இதன் காரணமாக இரத்தக் குழாய்களின் நரம்பு மண்டலங்கள் நிலை குலைந்து தண்ணீர் வெளியாகின்றது
என்று 1949ஆம் ஆண்டு வெளியான திங்கர்ஸ் டைஜஸ்ட் என்ற இதழில் மூத்த மயக்க
மருந்து மருத்துவர் பிரிமோஸ் என்பவர் தெரிவிக்கின்றார்.
ஏசு எத்தனை மணிக்கு சிலுவையில் ஏற்றப்பட்டார் என்பதில் ஒருமித்த
கருத்து எந்த பைபிள் எழுத்தாளருக்கும் இல்லை. ஆனால் யோவான் 19:14 வசனத்தின்படி பகல் 12 மணி வரை பிலாத்து முன்னிலையில் ஏசு இருந்திருக்கிறார்.
அதுபோல் எத்தனை மணிக்கு அவரது ஆவி பிரிந்தது என்பதையும் பைபிள்
எழுத்தாளர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் பகல் 3 மணிக்கு அவர் உயிர் துறந்தார் என்பதில் எழுத்தாளர்களுக்கு மத்தியில்
கருத்தொற்றுமை நிலவுவதாகத் தெரிகின்றது.
கிறிஸ்துவின் வாழ்க்கை என்ற நூலில் 421ஆம் பக்கத்தில் டீன் ஃபர்ரார் என்பவர், ஏசு சிலுவையில் மூன்று மணி நேரம் கிடந்தார் என்று தெரிவிக்கின்றார்.
சிலுவையில் கட்டப்பட்டவர்கள் சாதாரணமாக கால் எலும்பு உடைக்கப்பட்டாலே தவிர 3 மணி நேரத்திற்குள்ளாக இறப்பதில்லை.
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் ஏசுவின் உடலைத் தரும்படி
பிலாத்திடம் கேட்கின்றார். பிலாத்து உடனே நூற்றுவர் தலைவரிடம், ஏசு இறந்ததைக் கேட்டு வியக்கின்றார்.
ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, அவன் இதற்குள் இறந்து விட்டானா? என்று கேட்டான். மாற்கு 15:44
துப்பாக்கி ஏந்திய படையை நோக்கி நிற்கும் ஒருவன் சுடப்பட்டு
சாகின்றான் என்றால் அதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு
தூக்கு மேடையில் தொங்கும் ஒருவன் சாகின்றான் என்றால் அதிலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் அதே சமயம் நம்முடைய எதிர்பார்ப்புக்கு நேர் மாற்றமாக அவர்கள் பிழைத்துக் கொண்டால்
தான் நமக்கு அது வியப்பளிக்கும்.
ஏசு உயிருடன் இருக்கிறார்; இறக்கவில்லை என்று பிலாத்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதனால் தான் அவர் இறந்து விட்டார் என்று தகவல் வந்ததும் அவர் வியப்பிற்குள்ளாகிறார்.
இப்போது அரிமேத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்புக்கு ஏசுவின் உடலை
எடுத்துச் செல்ல அனுமதியளிக்கின்றார். இறுதிச் சடங்கில் அரிமேத்திய ஊரைச் சார்ந்த யோசேப், நிக்தேகம், மகதலா
மரியா,
யாகோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் வந்திருந்தனர்.
குளிப்பாட்டுதல், நறுமணம் பூசுதல் போன்ற காரியங்கள் இரண்டு மணி நேரத்திற்கு நடக்கின்றன.
இவையும் அங்குள்ள யூதர்களை ஏமாற்றுவதற்காக, ஏசு இறந்து விட்டார் என்று நம்ப வைப்பதற்காகத் தான் நடந்திருக்க
வேண்டும்.
இந்த நேரத்தில் ஏசுவின் உடலில் உயிர்த் துடிப்பைக் காண்கின்ற
போது அதை வெளிப்படுத்தி, மாட்டிக் கொடுக்கின்ற
அளவுக்கு அவர்கள் அறிவிலிகள் அல்லர். ஏனெனில் அப்போது ஏசு உயிருடன் இருக்கிறார் என்று
சொன்னால் அது மீண்டும் அவரைத் தொலைத்துக் கட்டுவதற்கு ஏதுவாகி விடும்.
எனவே கடவுள் இவ்வாறு ஒரு பாதுகாப்பை வழங்கி, ஈட்டியின் மூலம் அவரது ரத்த ஓட்டத்தைச் சரிப்படுத்தி, அவரது சீடர்களிடம் ஏசுவை ஒப்படைத்து அவரைப் பாதுகாத்திருக்கின்றார்.
இந்த நிகழ்வும் ஏசு இறக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது.
ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 9
யூதர்களின் சந்தேகம்
இப்போது ஏசு, கல்லறையில் வைக்கப்பட்டு விட்டார். கல்லறை என்றதும் ஆறடி நீளம், இரண்டடி அகலம் என்று கற்பனை செய்ய வேண்டாம். அது பெரிய காற்றோட்டமான
அறை என்று சொல்லலாம்.
கிறிஸ்து இறந்த அந்த நாள் என்ற நூலில் ஏசுவின் கல்லறை 5 அடி அகலம், 7 அடி ஆழம், குறுக்கு
வாட்டக் கம்புகள் கொண்ட அறை என்று ஜிம் பிஷப் என்பவர் குறிப்பிடுகின்றார்.
குடிசை வாழ் மக்களுக்கு இது போன்ற இடங்கள் கிடைத்தால் மகிழ்ச்சியாக
ஏற்றுக் கொள்வார்கள்.
இப்படிப்பட்ட விசாலமான அறையில் தான் ஏசு அடக்கம் செய்யப்படுகின்றார்.
அடக்கம் செய்யப்பட்ட பின் யூதர்களுக்கு ஐயப்பாடும், அமைதியின்மையும் ஏற்படுகின்றது. ஏன்?
1. கல்லறை மிக மிக அருகில் அமைந்திருந்தது. 2. அந்தரங்க சீடர்களின் உதவிகள்.
3. இன்னும் ஏசுவின் சிலுவைக் கூட்டாளிகள் உயிருடன் இருந்தது.
4. உடலைப் பெறுவதற்கு பிலாத்தின் அவசர அவசரமான அனுமதி
இத்தனையும் யூதர்களின் சந்தேகப் புயல்களைக் கிளப்பி விட்டன.
உடனே அவர்கள் பிலாத்திடம் ஓடோடி வருகின்றார்கள்.
மறுநாள், அதாவது
ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக்
குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். அவர்கள், ஐயா, அந்த எத்தன்
உயிருடன் இருந்தபொழுது மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன் என்று
சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. ஆகையால் மூன்று நாள் வரை கல்லறையைக் கருத்தாய்க்
காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத்
திருடிச் சென்றுவிட்டு, இறந்த அவர்
உயிருடன் எழுப்பப்பட்டார் என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று
வேலையை விடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும் என்றனர். மத்தேயு 27:62-64
ஆனால் அவர்கள் மறுநாள் அதாவது ஞாயிற்றுக் கிழமையன்று பிலாத்திடம்
வந்து புகார் செய்கின்றார்கள். நீங்களே போய் காவல் காத்துக் கொள்ளுங்கள் என்று பிலாத்
கூறி விட்டார்.
இங்கே முந்தைய தவறு என்று யூதர்கள் குறிப்பிடுவது, ஏசுவின் காலை முறிக்காமல் சிலுவையிலிருந்து இறக்க அனுமதித்ததைத்
தான். கடைசித் தவறு என்று குறிப்பிடுவது கல்லறையைச் சரியாக மூடாமல் விட்டதை!
அதாவது குதிரையைக் கட்டிப் போட்டு விட்டு, லாயத்தை மூடச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாது, குதிரை மாயமாகி விட்டது என்பது! கடவுளின் இந்தத் திருவிளையாடல்
அவர்களுக்குத் தெரியவில்லை.
வாரத்தின் முதல் நாள்! ஞாயிற்றுக்கிழமை முதன் முதலில் மகதலா
மரியா மட்டும் வருகிறாள்.
வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர்
முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். மாற்கு 16:9
எதற்காக அவள் அங்கு சென்றாள்?
ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமி என்பவளும் அவருக்குச் சுகந்த வர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்
கொண்டு,
மாற்கு 16:1
அவருக்கு சுகந்த வர்க்கமிடுவதற்காக!
இது உயிருள்ளவர்களைக் குறிக்கும் சொல்! இதற்கு எபிரேய மொழியில்
மஸஹ்,
தடவுதல், மஸாஜ்
செய்தல்,
தேய்த்து விடுதல் என்று பொருள்.
இறந்தவரின் உடலில் மூன்று நாளுக்குப் பிறகு தேய்த்து விடக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யூத, கிறித்தவர்கள்
இதுபோன்று செய்வதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது முஸ்லிம்கள் இப்படிச் செய்வார்களா? எவருமே இப்படிச் செய்வதில்லை.
அப்படியானால் மக்தலா மரியா என்ற யூதப் பெண் இறந்து போனவரின்
(ஏசுவின்) உடலுக்கு 3 நாளுக்குப்
பிறகு எதற்காக நறுமணப் பொருள் தேய்த்து விட வருகின்றார்?
இறந்தவரின் உடல் இறந்து போன சிறிது நேரத்தில் விறைத்துப் போகத்
தொடங்கும். மூன்று நாட்கள் ஆகி விட்டால் உடலில் திசுக்கள் உடைந்து, உடல் பொங்கி, நாற ஆரம்பித்து விடும்.
இப்போது தேய்த்தால் என்ன வரும்? சதை துண்டு துண்டாகப் பிய்த்துக் கொண்டு வரும். எனவே மூன்று
நாட்களுக்குப் பிறகு தேய்த்தல் என்பது அர்த்தமற்ற செயல்!
ஆனால் அதே சமயம் உயிருள்ள ஒருவரை தேய்த்து விடுதல் என்று சொன்னால்
ஒரு அர்த்தமிருக்கும். அது தான் இங்கு நடக்கின்றது. ஏசுவுக்கு இறுதிச் சடங்கு செய்தவர்கள், அரிமேத்திய ஊரைச் சார்ந்த யோசேப், மகதலா மரியா போன்றவர்கள் தான்.
அவர்களில் ஒருவரான மகதலா மரியா தான் 2 இரவுகள், ஒரு
பகல் கழித்து யூதர்களின் புனித நாளான சனிக்கிழமைக்குப் பின் ஏசுவைக் கவனிப்பதற்காக
வருகின்றார். அங்கு வந்த போது தான் அவருக்கு ஓர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் காத்திருக்கின்றது.
ஏசுவுடைய கல்லறைக் கல் அகற்றப்பட்டிருந்தது. அவருடைய மேனியில்
கிடந்த துணி உள்ளே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த
நறுமணப் பொருள்கள் எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்;
கல்லறை வாயிலிருந்து கல்புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.
அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத்
தோன்றினர்.
இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் அப்பெண்களை நோக்கி, உயிரோடு இருப்பவரைக்
கல்லறையில் தேடுவதேன்? (என்று கேட்டனர்)
லூக்கா 24:1-5
பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார். அங்கு அவர் குனிந்து பார்த்தபோது
உடலைச் சுற்றியிருந்த துணிகளை மட்டுமே கண்டார்; நிகழ்ந்ததைக் குறித்துத் தமக்குள் வியப்புற்றவராய்த் திரும்பிச்
சென்றார்.
லூக்கா 24:12
திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து
இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய
தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது.
அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர்
போலாயினர். அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத்
தெரியும்.
அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை
வந்து பாருங்கள்.
நீங்கள் விரைந்து சென்று, இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் எனச் சீடருக்குக் கூறுங்கள்.
உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக்
காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் என்றார். மத்தேயு 28:2-7
அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று
அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்.
லூக்கா 24:23
இயேசு உயிரோடு இருக்கிறார் (ஆப்ண்ஸ்ங்) என்று தான் வானவர்கள்
கூறுகிறார்கள். உயிர் பெற்று எழுந்தார் என்று சொல்லவில்லை.
இது பல கேள்விகளை எழுப்புகிறது.
கல் ஏன் அகற்றப்பட்டது? மரணத்தை வென்றவர் என்றால் ஆவியாக வெளியேற வேண்டும். ஆவி வெளியேறுவதற்குக்
கல் ஏன் அகற்றப்பட வேண்டும்? ஓர்
ஆவி வெளியேற வேண்டும் என்றால் அதனுடைய உடலில் கிடந்த துணி ஏன் நீக்கப்பட வேண்டும்?
கற்கோட்டையின் சிறைச்சாலையோ, இரும்புக் கம்பியினால் ஆன கூண்டுகளோ ஆவியைத் தடுத்து நிறுத்த
முடியாத போது இந்தக் கல்லறைக் கல் எம்மாத்திரம்?
அப்படியானால் ஏசுவை யாரும் கடத்தியிருக்க வேண்டும் என்று மகதலா
மரியா அழுகின்றார். அதை ஏசு - வானத்திலிருந்து அல்ல - அருகில் நின்று கவனித்துக் கொண்டு
இருக்கிறார்.
இயேசு அவரிடம், ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்? என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், ஐயா, நீர் அவரைத்
தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்
என்றார்.
யோவான் 20:15
தோட்டாக்காரர் வேடத்தில்...
ஏசுவுக்கு அவள் யாரென்று நன்கு தெரியும். அவள் யாரைத் தேடுகிறாள்
என்பதும் ஏசுவுக்குத் தெரியும். தன்னைக் காணவில்லை என்பதற்காகத் தான் அவள் அழுகின்றாள்
என்பதும் தெரியும். தான் ஒரு தோட்டக்காரர் போல் காட்சியளிப்பதால் அவளால் அடையாளம் காண
முடியவில்லை என்றும் ஏசுவுக்குத் தெரியும். இருப்பினும் இப்படி ஒரு கேள்வி எதற்கு? ஒரு சின்ன விளையாட்டு காட்டுவதற்காகத் தான்.
மகதலா மரியா அவரை ஏன் தோட்டக்காரர் என்று நினைக்க வேண்டும்? உயிர்த்தெழுந்து வந்தவர்கள் தோட்டக்காரர் போலவா காட்சியளிப்பார்? ஒருபோதும் கிடையாது.
அவள் ஏசுவைத் தோட்டக்காரர் என்று எண்ணியதற்குக் காரணம், அவர் தோட்டக்காரர் வேடத்தில் இருந்ததால் தான். அவர் ஏன் தோட்டக்காரர்
தோற்றத்தில் காட்சியளிக்க வேண்டும்? காரணம், அவர்
யூதர்களைக் கண்டு பயப்படுவதால்! அவர் ஏன் யூதர்களைக் கண்டு பயப்பட வேண்டும்? காரணம் அவர் இறக்கவில்லை.
அவர் இறந்திருந்தால், அவர் யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. காரணம், உயிர்த்தெழுந்தவர் மீண்டும் இறக்க மாட்டார். இவ்வாறு பைபிள்
தான் கூறுகின்றது.
மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு
வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி. எபிரேயர் 9:27
பத்திரிகைகளில், இறந்தவர் உயிருடன் திரும்பினார் என்று செய்தி வெளியிடுவார்கள்.
அதாவது இறந்து விட்டார் என்று மக்கள் நினைத்திருப்பார்கள்; டாக்டர் சான்றிதழ் அளித்திருப்பார்; ஆனால் அவர் தெய்வாதீனமாகப் பிழைத்திருப்பார். அந்தச் செய்தியை
சாதாரணமாகப் போட்டால் அதற்கு ஒரு விறுவிறுப்பு இருக்காது. அதனால், இறந்தவர் உயிருடன் திரும்பினார் என்று வெளியிடுகின்றன. அதாவது
அவர் உண்மையில் இறக்கவில்லை என்பதை இந்தக் கொட்டேஷன் மூலம் தெரிவித்து விடுகின்றன.
பிணத்திற்கு அவர் என்று சொல்வதுண்டா?
இப்போது மகதலா மரியாவின் உரையாடலுக்கு வருவோம்.
இயேசு அவரிடம், ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்? என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், ஐயா, நீர் அவரைத்
தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்
என்றார்.
யோவான் 20:15
ஐண்ம் அவரை, அவரை எங்கே என்று மகதலா கேட்கிறாள். ஏசுவின் உடலை மகதலா கேட்கவில்லை.
காரணம் இறந்தவரின் உடலை ஒரு பெண் தனியாகச் சுமக்கவும் முடியாது என்பது மகதலா மரியாவுக்கு
நன்றாகவே தெரியும். அதனால் அவள் கேட்டது, உயிருடன் உள்ள ஏசுவைத் தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.
இப்போது ஏசு, மரியா என்று அழைக்கிறார்.
இயேசு அவரிடம், மரியா என்றார். மரியா திரும்பிப் பார்த்து, ரபூனி என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு போதகரே என்பது பொருள்.
இயேசு அவரிடம், என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும்
செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்
எனச் சொல் என்றார்.
ஜான் 20:16, 17
இந்த அழைப்புக் குரல் யாருக்குச் சொந்தம் என்பதை மரியா புரிந்து
கொள்கிறாள். உடனே ரபூனி என்று அழைக்கிறாள். ஆர்வத்தில் அவரைத் தொட முயற்சிக்கிறாள்.
அப்போது ஏசு, அதற்கு மேற்கண்டவாறு கூறுகிறார்.
இவ்வாறு அவர் கூறுவதற்குக் காரணம், உடல் மற்றும் மன ரீதியான காயங்கள் தான்.
அதாவது, நான்
இன்னும் மரணிக்கவில்லை. ஆவியாக எழுந்து வரவில்லை. திரும்பத் தான் வந்திருக்கிறேன் என்று
குறிப்பிடுகின்றார்.
நான் இன்னும் என் தந்தையிடம் செல்லவில்லை என்றும் கூறுகிறார்.
இது யூதர்களின் வழக்கப்படி, நான் இன்னும்
மரணிக்கவில்லை என்றே பொருள்.
இதுவரை நாம் கண்ட விளக்கங்கள் அனைத்துமே, ஏசு இறக்கவில்லை, அவர் இறந்து மறுபடி உயிர் பெற்று வரவில்லை. கல்லறையில் உயிருடன்
தான் இருந்தார். அதே உயிருடன் தான் எழுந்து வந்திருக்கின்றார் என்பதை அழுத்தம் திருத்தமாகத்
தெரிவிக்கின்றன.
ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 10
நம்ப மறுக்கும் சீடர்கள்
மரியா அந்தத் தகவலை சீடர்களிடம் சொன்ன போது அவர்கள் நம்ப மறுக்கின்றனர்.
அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும்
கேட்ட போது அவர்கள் நம்பவில்லை. மாற்கு 16:11
கல்லறையிலிருந்து கிளம்பிய ஏசு எம்மாவு என்ற ஊரை நோக்கிச் செல்கின்றார்.
அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு
கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு.
அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர்
உரையாடிக் கொண்டே சென்றார்கள்.
இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்ற போது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்.
ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள்
மறைக்கப்பட்டிருந்தன.
லூக்கா 24:13-16
பயணம் ஒரு கட்டத்தை அடைந்த போது, சீடர்களுடன் உணவும் சாப்பிடுகிறார்.
அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்த போது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன.
அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்து போனார்.
லூக்கா 16:30, 31
இங்கு, அவர்களது
கண்கள் திறந்தன என்று கூறப்படுவது, நேரடி அர்த்தத்தில் இல்லை. ஏனெனில் அவ்வாறு அர்த்தம் கொடுத்தால்
இவ்வளவு நேரம் பயணம் செய்யும் போது கண்களை மூடியிருந்தார்கள் என்றாகி விடும். எனவே
கண்கள் திறந்தன என்று கூறப்படுவது, ஏசுவை அடையாளம் கண்டு கொண்டார்கள் என்ற பொருளில் தான்.
இவர்கள் போய் இதர சீடர்களிடம் சொல்கிறார்கள். அவர்களும் நம்ப
மறுக்கிறார்கள்.
காரணம், ஏசு
உயிருடன் இருக்கிறார் என்ற ஆதாரத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதே இரத்தமும்
சதையும் உள்ள ஏசு! உணவு சாப்பிடும் ஏசு! அவர்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
ஆனால் இதே சீடர்களிடம் மகதலா மரியா, ஏசுவின் ஆவியைக் கண்டேன் என்று கூறியிருந்தால் ஒப்புக் கொண்டிருப்பார்கள்.
ஏசுவுடன் ஒன்றாய் எம்மாவு என்ற ஊருக்கு வந்த இருவரும், அவரது ஆவியைக் கண்டேன் என்று சொன்னால் ஒப்புக் கொண்டிருப்பார்கள்.
இதற்குக் காரணம் அவர்கள் ஆவியை அதிகமதிகம் பார்த்தவர்கள். பன்றிக்குள்
ஆவி புகுந்து இரண்டாயிரம் பேரைக் காலி செய்தது என்று நம்பியவர்கள்.
பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய
இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து
வீழ்ந்து மூழ்கியது.
மாற்கு 5:13
மகதலா மரியாவிடமிருந்து ஏழு ஆவிகள் வெளியானதைப் பார்த்தவர்கள்.
அதனால் அவர்களுடைய வாழ்நாளில் நம்பப்படுபவற்றை, அவர்கள் நம்பத் தான் செய்தனர். ஆனால் உயிருடன் உள்ள ஏசுவை, அதிலும் உயிருடன், உடலுடன் உள்ள ஏசுவை அவர்களால் நம்ப முடியவில்லை. அதிலும் குறிப்பாக
மரணத்தின் பிடியிலிருந்து தப்பிய ஏசுவை அவர்களால் நம்ப முடியவில்லை. காரணம் இவர்கள்
நம்பிக்கை குன்றியவர்கள் என்று பைபிள் கூறுகின்றது. (பார்க்க மத்தேயு 6:30,
8:26, 14:31, 16:8, லூக்கா 12:28)
1. ஏசு உயிருடன் இருக்கிறார் என்று மக்தலா மரியா சாட்சி சொல்கிறார்.
2. ஏசு உயிருடன் இருக்கிறார் என்று எம்மாவுவின் இரு சீடர்கள் சாட்சி
சொல்கின்றனர்.
3. ஏசு உயிருடன் இருக்கிறார் என்று இரு வானவர்கள் சாட்சி சொல்கின்றனர்.
4. ஏசு உயிருடன் இருக்கிறார் என்று பெண்ணுக்கு அருகில் நின்ற இரு
மனிதர்கள் சாட்சி சொல்கிறார்கள். (லூக்கா 24:4,5)
இத்தனை பேர்களும் சொன்னதைக் கேட்காத இவர்கள், தங்களின் தலைவர் ஏசு சொல்வதையாவது கேட்பார்களா? இனி வரும் தலைப்புகளில் பார்ப்போம்.
ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 11
பயந்து நடுங்கிய சீடர்கள்
எம்மாவுவைச் சேர்ந்த இருவரும் ஜெருஸலத்திற்கு வருகையளிக்கின்றனர்.
அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.
அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.
அங்கிருந்தவர்கள், ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத்
தோற்றம் அளித்துள்ளார் என்று சொன்னார்கள்.
அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்
கொடுக்கும் போது அவரைக் கண்டுணர்ந்து கொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
லூக்கா 24:33-35
இங்கே லூக்கா சொல்கின்ற 11 பேர் என்ற கணக்கு தவறான கணக்காகும். ஏனெனில், ஏசு வருகையளித்த போது அவரது சீடர்களில் ஒருவரான தாமஸ் அங்கு
இல்லை. (பார்க்க யோவான் 20:24)
மேலும் யூதாசும் அங்கு இல்லை. ஏனெனில் ஏசு திரும்ப வரும் போது
யூதாசு உயிருடன் இல்லை. தற்கொலை செய்து விட்டான். (பார்க்க மத்தேயு 27:5)
எம்மாவுவைச் சேர்ந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேரைத் தாண்டாது. இங்கு லூக்கா 11 பேர் என்று குறிப்பிடுவது மாற்கு 16:14 வசனத்தைக் காப்பியடித்துத் தான். இந்த லட்சணத்தில் 1 கொரிந்தியர் 15:5 வசனத்தில், அவர்கள் 12 பேர்
என்று பவுல் குறிப்பிடுகின்றார். பவுலையும் சேர்த்தால் கூட 12 வராது.
பைபிள் எழுத்தாளர்களிடம் இந்த எண்ணிக்கைகளுக்குப் பெரிய மதிப்பு
இருக்காது. இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், இவர்களுடைய அறிவிப்புக்களில் தான் எத்தனை தில்லுமுல்லுகள் என்பதைக்
காட்டுவதற்காகத் தான். இப்போது விஷயத்திற்கு வருவோம்.
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சி, சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள்.
அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, உங்களுக்கு அமைதி உரித்தாகுக! என்று வாழ்த்தினார்.
யோவான் 20:19
சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில்
நின்று,
உங்களுக்கு அமைதி உரித்தாகுக! என்று அவர்களை வாழ்த்தினார்.
அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.
லூக்கா 24:36-37
பயப்படக் காரணம் என்ன?
மகதலா மேரி பயப்படாமல் ஏசுவைக் காணச் செல்கின்றார். ஆனால் பத்து
ஆண் சீடர்கள் பயந்து நடுங்குகின்றார்கள். ஒரு மகதலா மேரி என்ற பெண் நடுங்கவில்லை. அது
மட்டுமின்றி பற்று மிகுதியால் அவரைப் பற்றிப் பிடிக்கவும் முனைகிறாள். ஆனால் பக்தி
மிகு இந்தப் பத்து சீடர்கள் பயந்து நடுங்கிச் சாகின்றார்களே! ஏன்?
இதற்குப் பெரிய காரணம் ஒன்றுமில்லை. இந்தப் பத்து சீடர்களும்
ஏசுவை நட்டாற்றில் விட்டு ஓடியவர்கள் என்று பைபிள் கூறுகின்றது.
அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.
மாற்கு 14:50
அந்தச் சீடர்கள் அனைவருமே ஏசு சிலுவையில் கட்டப்பட்டு இறந்து
விட்டார் என்று மட்டும் தான் கேள்விப்பட்டிருந்தார்கள். ஏசு சிலுவையில் ஏற்றப்படும்
போது,
அவர் சிலுவையிலிருந்து இறக்கப்படும் போது, கல்லறையில் வைக்கப்படும் போது, அங்கிருந்து எழும் போது இவர்கள் ஏசுவுடன் இருக்கவில்லை. அதனால்
அவர்கள் ஏசுவை ஆவியாகத் தான் பார்க்கிறார்கள்.
ஆனால் மகதலா மேரியோ ஏசுவை மனிதராகப் பார்த்தாள். காரணம், அவள் இறுதி வரை ஏசுவுடன் இருந்தவள். ஏசு இறக்கவில்லை, கல்லறைக்குள் உயிருடன் தான் இருந்தார் என்பது மகதலா மேரிக்குத்
தெரியும். இது தான் சீடர்கள் பயந்ததற்கும், மகதலா மேரி பயப்படாமல் ஏசுவைத் தொட முயன்றதற்கும் காரணம்.
ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 12
ஆவியல்ல! மனிதர் தான்!
தனது சீடர்களுக்கு ஏசு முறையாக முகமன் கூறிய பின்னர் பின்வருமாறு
கூறுகின்றார்:
நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக்
காண்பித்தார்.
லூக்கா 24:38-40
ஏசு இதன் மூலம் தெரிவிப்பது இது தான். அட அடிமுட்டாள்களா! ஆவிக்கு
ஏது சதை?
ஆவிக்கு ஏது எலும்பு? ஆவிக்கு ஏது இரத்தம் என்று சிந்தியுங்கள்; நான் சாகவில்லை; அதே ஏசு தான் அப்படியே வந்திருக்கிறேன் என்று தெளிவாகத் தெரிவிக்கின்றார்.
ஆவிக்கு சதையோ, எலும்போ கிடையாது என்பது எல்லோரும் ஏகோபித்து ஒத்துக் கொண்ட
உண்மை. ஏசு அதைத் தான் தனது சீடர்களிடம் உணர்த்துகின்றார். எனவே இறந்தவர் மீண்டும்
எழுந்து வந்தால் அவர் ஆவியாகத் தான் வருவார். அதே ஆளாக வர மாட்டார்.
அஹ்மத் தீதாத் அவர்கள் இவ்வாறு ஒரு கருத்தரங்கில் கூறிய போது
ஒரு கிறித்தவ அழைப்பாளர் எழுந்து, இறந்தவர்
மீண்டும் உயிர் பெற்றால் அவர் ஆவியாகத் தான் வருவார் என்று யார் சொன்னது? என்று கேட்டார். அதற்கு அஹ்மத் தீதாத், ஏசு தான் என்று பதில் கூறினார். இது எங்கு இடம் பெறுகின்றது? என்று கேட்டார். இது பைபிளில் லூக்காவில் இடம் பெறுகின்றது.
ஆவிக்கு சதையோ, எலும்போ கிடையாது என்று
பைபிள் கூறுகின்றது எனக் கூறிப் பின்வரும் விளக்கத்தை அளித்தார் அஹ்மத் தீதாத்!
ஒரு யூதப் பெண்ணுக்கு 7 கணவர்கள். யூதக் கலாச்சாரப்படி ஒருவர் குழந்தையில்லாமல் இறந்து
விட்டால் அவரது சகோதரர் அந்த மனைவியைத் திருமணம் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு சகோதரரும்
இறந்து கொண்டே இருந்தால் அடுத்தடுத்து உள்ள சகோதரர்கள் திருமணம் முடிக்க வேண்டும்.
ஏழு பேரையும் இந்தப் பெண் திருமணம் முடிக்கிறாள். அந்தப் பெண்ணும்
இறந்து விட்டாள். பரலோக வாழ்வில் அந்த ஏழு பேரும் அந்தப் பெண்ணும் எழுப்பப்படுவார்கள்.
அப்போது ஏழு பேருமே அந்தப் பெண் தனக்கு என்று கோருவார்கள். அங்கு அந்தப் பெண் யாருடன்
சேர்ந்து வாழ்வாள்? இது தான் ஏசுவுக்கு
முன்னால் உள்ள கேள்வி.
அதற்கு ஏசு அளிக்கும் பதில்:
இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய்
இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
லூக்கா 20:36
அவர்கள் சாகாத ஆவிகளாகி விடுவார்கள். அவர்களுக்கு உணவு தேவையில்லை.
உடை தேவையில்லை. பாலியல் உணர்வு தேவையில்லை. அவர்கள் வானவர்களுக்குச் சமமானவர்கள்.
இந்தச் சம்பவம் லூக்கா 20:27-36 வசனங்களில் இடம் பெற்றுள்ளது.
இந்த விளக்கத்தின்படி, தான் மீண்டும் உயிர் பெற்று வந்தவர் அல்ல! அதாவது ஆவி அல்ல!
உடலும் உயிரும் சேர்ந்த அதே ஏசு தான். பசி, தாகம் உள்ள ஒரு ஜீவன் தான் என்பதையும் இங்கே ஏசு நிரூபித்துக்
காட்டுகின்றார்.
அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா? என்று கேட்டார். அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம்
கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள் முன் அமர்ந்து உண்டார்.
லூக்கா 24:41-43
இவ்வளவும் எதற்காக? தான் ஓர் ஆவி என்பதை நிரூபிக்கவா? இல்லை! எலும்பும் சதையும் இணைந்த மனிதன் தான் என்பதை நிரூபிப்பதற்காக!
அல்லது இவை அனைத்தும் நடிப்பு என்று கிறித்தவ உலகம் சொல்ல வேண்டும்.
ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 13
யோனாவின் அற்புதம்
நான் உயிர்த்தெழுந்து வருவேன் என்று ஏசு முன்னறிவிப்புச் செய்ததாக
பைபிள் பிரச்சாரகர்கள் மார்தட்டிக் கொள்கின்றனர். பைபிள் என்றழைக்கப்படும் இந்நூல்கள்
ஏசுவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின், நூறாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டவை. ஏசுவின் வாழ்நாளில் எந்த
நூலும் எழுதப்படவில்லை. இவ்வாறு எழுதுமாறு ஏசு யாருக்கும் உத்தரவிடவுமில்லை.
சிலுவை குறித்த முன்னறிவிப்புக்களைப் பற்றி, மாற்கு நூலின் விளக்கவுரையில் டேய்லர் என்பார், முடிந்த காரியங்களுக்கு முன்னறிவிப்புக்களை பைபிள் எழுத்தாளர்கள்
கட்டி விட்டிருக்கிறார்கள் என்று அழகாகக் குறிப்பிடுகின்றார்.
யூதர்கள் மோசேக்கு கணக்கற்ற இடையூறுகளைக் கொடுத்தனர். இப்போது
அவருக்கு அடுத்து வந்த ஏசு என்ற தூதருக்கு அவர்கள் இடையூறு கொடுக்கின்றனர். அவரிடம்
அவர்கள் குதர்க்கமான, குருட்டுத்தனமான
கேள்விகளைக் கேட்டு இடைஞ்சல் அளிக்கின்றனர். அந்தக் கேள்விகளில் ஒன்று இதோ:
அப்பொழுது மறைநூல் அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு
மறுமொழியாக, போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம் என்றனர்.
மத்தேயு 12:38
இங்கு அவர்கள் அடையாளம் என்று கேட்பது ஏசு ஏதேனும் அற்புதம்
செய்ய வேண்டும் என்பதைத் தான். அப்போது ஏசு அங்கலாய்த்துக் கொண்டே கூறுகிறார்:
அதற்கு அவர் கூறியது; இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு
இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.
யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில்
இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.
மத்தேயு 12:39,
40
யோனாவின் அற்புதம் அல்லது அடையாளம் என்பது என்ன? இதை பைபிளிலிருந்தே பார்ப்போம்.
அமித்தாயின் மகன் யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
அவர்,
நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், அதற்கு அழிவு வரப்போகிறது என்று அங்குள்ளோருக்கு அறிவி. அவர்கள்
செய்யும் தீமைகள் என் முன்னே வந்து குவிகின்றன என்றார். யோனாவோ ஆண்டவரிடமிருந்து தப்பியோட
எண்ணித் தர்சீசுக்குப் புறப்பட்டார். அவர் யோப்பாவுக்குப் போய், அங்கே தர்சீசுக்குப் புறப்படவிருந்த ஒரு கப்பலைக் கண்டார்; உடனே கட்டணத்தைக் கொடுத்து விட்டு, ஆண்டவர் திருமுன்னின்று தப்பியோட அந்தக் கப்பலில் ஏறி, அதில் இருந்தவர்களோடு தர்சீசுக்குப் பயணப்பட்டார். ஆனால் ஆண்டவர்
கடலில் கடுங்காற்று வீசும்படி செய்தார். கடலில் பெரும் கொந்தளிப்பு உண்டாயிற்று; கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது. கப்பலில் இருந்தவர்கள்
திகிலடைந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தம் தம் தெய்வத்தை நோக்கி மன்றாடலானார்கள்.
கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அவர்கள் அதிலிருந்த சரக்குகளைக் கடலில் தூக்கியெறிந்தார்கள்.
யோனாவோ ஏற்கெனவே கப்பலின் அடித்தட்டுக்குப் போய்ப் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
கப்பல் தலைவன் அவரிடம் வந்து, என்ன
இது?
இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறாயே! எழுந்திரு. நீயும் உன்
தெய்வத்தை நோக்கி வேண்டிக் கொள். ஒருவேளை அந்தத் தெய்வமாவது நம்மைக் காப்பாற்றலாம்.
நாம் அழிந்து போகாதிருப்போம் என்றான். பிறகு கப்பலில் இருந்தவர்கள், நமக்கு இந்தப் பெரும் தீங்கு யாரால் வந்தது என்று கண்டறியச்
சீட்டுக் குலுக்குவோம் என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். அவ்வாறே அவர்கள்
சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது. எனவே, அவர்கள் அவரை நோக்கி, இப்பொழுது சொல். இந்தப் பெருந்தீங்கு யாரால் வந்தது? உன் வேலை என்ன? எங்கிருந்து வருகிறாய்? உன் நாடு எது? உன் இனம் எது? என்று கேட்டார்கள். அதற்கு அவர், நான் ஓர் எபிரேயன். நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணகக் கடவுளாகிய
ஆண்டவரை வழிபடுபவன் என்று சொன்னார். மேலும், தாம் அந்த ஆண்டவரிடமிருந்து தப்பியோடி வந்ததாகவும் கூறினார்.
எனவே,
அவர்கள் மிகவும் அஞ்சி, நீ ஏன் இப்படிச் செய்தாய், என்று கேட்டார்கள். கடலில் கொந்தளிப்பு மேலும் கடுமையாகிக் கொண்டிருந்ததால்
அவர்கள் யோனாவிடம், கடல் கொந்தளிப்பு
அடங்கும்படி நாங்கள் உன்னை என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், நீங்கள் என்னைத் தூக்கிக் கடலில் எறிந்து விடுங்கள். அப்பொழுது
கொந்தளிப்பு அடங்கி விடும்; நீங்கள் பிழைத்துக்
கொள்வீர்கள். உங்களைத் தாக்கும் இந்தக் கடும்புயல் என்னால் தான் உண்டாயிற்று என்பது
எனக்குத் தெரியும் என்றார். ஆயினும், அவர்கள் கரை போய்ச் சேர மிகுந்த வலிமையுடன் தண்டு வலித்தனர்; ஆனால் அவர்களால் இயலவில்லை. ஏனெனில், கடலின் கொந்தளிப்பு மேலும் மிகுதியாகக் கொண்டேயிருந்தது. அவர்கள்
அதைக் கண்டு ஆண்டவரை நோக்கிக் கதறி, ஆண்டவரே, இந்த
மனிதனுடைய உயிரின் பொருட்டு எங்களை அழிய விட வேண்டாம்; குற்றமில்லாத ஒருவனைச் சாகடித்ததாக எங்கள் மீது பழி சுமத்தவேண்டாம்.
ஏனெனில்,
ஆண்டவராகிய நீரே உமது திருவுளத்திற்கேற்ப இவ்வாறு செய்கிறீர்
என்று சொல்லி மன்றாடினார்கள். பிறகு அவர்கள் யோனாவைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்; கடல் கொந்தளிப்பும் தணிந்தது. அதைக் கண்டு அந்த மனிதர்கள் ஆண்டவருக்கு
மிகவும் அஞ்சினார்கள். அவர்கள் ஆண்டவருக்குப் பலி செலுத்தினார்கள்; பொருத்தனைகளும் செய்து கொண்டார்கள். ஆண்டவர் ஏற்பாடு செய்திருந்த
படியே ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. யோனா மூன்று நாள் அல்லும் பகலும்
அந்த மீன் வயிற்றில் இருந்தார். யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறு, தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடலானார்; ஆண்டவரே! எனக்கு இக்கட்டு வந்த வேளைகளில் நான் உம்மை நோக்கி
மன்றாடினேன். நீர் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர். பாதாளத்தின் நடுவிலிருந்து
உம்மை நோக்கிக் கதறினேன்; என் கூக்குரலுக்கு
நீர் செவிகொடுத்தீர்; நடுக் கடலின்
ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்; தண்ணீர்ப்
பெருக்கு என்னைச் சூழந்து கொண்டது. நீர் அனுப்பிய அலை திரை எல்லாம் என் மீது புரண்டு
கடந்து சென்றன. அப்பொழுது நான், உமது
முன்னிலையிலிருந்து புறம்பே தள்ளப்பட்டேன் இனி எவ்வாறு உமது கோவிலைப் பார்க்கப் போகிறேன்
என்று சொல்லிக் கொண்டேன். மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை அழுத்திற்று; ஆழ்கடல் என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது. மலைகள் புதைந்துள்ள
ஆழம் வரை நான் கீழுலகிற்கு இறங்கினேன். அங்கேயே என்னை என்றும் இருத்தி வைக்கும்படி, அதன் தாழ்ப்பாள்கள் அடைத்துக் கொண்டன. ஆனால், என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அந்தக் குழியிலிருந்து என்னை உயிரோடு மீட்டீர். என் உயிர்
ஊசலாடிக் கொண்டிருந்த போது, ஆண்டவரே! உம்மை
நினைத்து வேண்டுதல் செய்தேன். உம்மை நோக்கி நான் எழுப்பிய மன்றாட்டு உமது கோவிலை வந்தடைந்தது.
பயனற்ற சிலைகளை வணங்குகின்றவர்கள் உம்மிடம் கொண்டிருந்த பற்றினைக் கைவிட்டார்கள். ஆனால், நான் உம்மைப் புகழ்ந்து பாடி உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; நான் செய்த பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். மீட்பு அளிப்பவர் ஆண்டவரே
என்று வேண்டிக்கொண்டார். ஆண்டவர் அந்த மீனுக்குக் கட்டளையிட, அது யோனாவைக் கரையிலே கக்கியது. யோனா: அதிகாரம் 1, 2
இப்போது இந்தச் சம்பவத்தை ஆய்வு செய்வோம்.
1. யோனா கடலில் தூக்கியெறிப்படுகின்றார். அவர் இவ்வாறு தூக்கியெறியப்படும்
போது உயிருடன் எறியப்பட்டாரா? அல்லது
பிணமாக எறியப்பட்டாரா?
இதற்கு எல்லோரும் ஒருமித்துக் கூறும் பதில், அவர் உயிருடன் எறியப்பட்டார் என்பது தான்.
2. கடலில் எறியப்பட்டவுடன் மீன் அவரை விழுங்கியது. அப்போது அவர்
உயிருடன் விழுங்கப்பட்டாரா? அல்லது பிணமாகவா?
இதற்கும் எல்லோரும் ஒருமித்துக் கூறும் பதில்: உயிருடன் தான்
விழுங்கப்பட்டார்.
3. மூன்றாம் நாள் அவரை மீன் தரையில் கக்கியது. அப்போதும் அவர் உயிருடன்
தான் இருக்கிறார்.
இந்த மூன்று சமயத்திலும் யோனா உயிருடன் தான் இருந்தார் என்பதை
யூதர்களும் ஒப்புக் கொள்கின்றனர். கிறித்தவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். முஸ்லிம்களும்
ஒப்புக் கொள்கின்றனர். இதில் ஏசு தெரிவித்திருக்கும் அடையாளம், அற்புதம் மூன்று மதத்திலும் ஒத்து அமைந்துள்ளது. யோனா என்ற புத்தகத்திலிருந்து
இடம் பெறும் இம்மாபெரும் அற்புதத்தை மீண்டும் ஒருமுறை தொகுத்துப் பார்ப்போம்.
1. ஒருவரைக் கடலில் தூக்கிப் போட்டால் அவர் கண்டிப்பாக இறந்தாக
வேண்டும். யோனா இங்கே சாகாததால் அது ஓர் அற்புதம்.
2. ஒரு மீன் வந்து மனிதனை விழுங்கி விட்டது என்றால் அவன் இறந்தாக
வேண்டும். ஆனால் யோனா இறக்கவில்லை. அதனால் உண்மையில் இது இரு மடங்கு அற்புதம்.
3. மீன் வயிற்றுக்குள் சென்ற பின்னராவது மூச்சுத் திணறி இறந்தாக
வேண்டும். மூன்று இரவுகள், மூன்று பகல்கள்
ஆகியும் யோனா இறக்கவில்லை. எனவே இது அற்புதங்களில் சிறந்த அற்புதம்.
ஒருவரை நோக்கி ஒரு துப்பாக்கிக் குண்டு வேகமாகப் பாய்கின்றது.
அம்மனிதனும் தரையில் விழுந்து சாகின்றான். இதற்குப் பெயர் அற்புதமா என்றால் இல்லை.
ஆனால் குண்டடிபட்டவன் சரிந்து விழாமல், சாகாமல் நின்று கொண்டிருக்கிறான் என்றால் அது ஓர் அற்புதம் என்போம்.
இதே போன்று, யோனா இப்போது இறந்து விடுவார்; இப்போது இறந்து விடுவார் என்று எதிர்பார்க்கும் போதெல்லாம் அவர்
உயிருடன் இருக்கிறார் என்றால் அது அற்புதங்களில் சிறந்த அற்புதமாக அமைந்து விடுகின்றது.
இப்போது நாம் ஏசுவின் அற்புதத்திற்கு வருவோம்.
யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில்
இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.
மத்தேயு 12:40
இது, ஏசு தம்மைப்
பற்றிக் கூறிய முன்னறிவிப்பு என்று பைபிள் கூறுகின்றது.
அதாவது யோனா மீன் வயிற்றில் இருந்தது போன்றே, தானும் நிலத்தின் உள்ளே மூன்று இரவும், மூன்று பகலும் இருப்பதாக ஏசு கூறுகின்றார்.
ஏசு நிலத்தின் உள்ளே இறந்து தான் இருந்தார்; பின்னர் தான் உயிர்ப்பித்து எழுந்தார் என்று கிறித்தவர்கள் கூறுவது
உண்மையென்றால் ஏசு கூறியது பொய் என்றாகி விடும். ஏசு பொய் கூறினார் என்று சொல்லப் போகிறார்களா? என்ற கேள்வியை கிறித்தவ உலகத்திடமே விட்டு விடுவோம்.
ஏசு கூறுவது உண்மை என்றால், யோனாவைப் போன்று நிலத்தின் உள்ளே இருப்பேன் என்று கூறுவது உண்மை
என்றால்,
ஏசு இறக்கவில்லை என்பது நிரூபணமாகி விடும்.
யோனா மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது போன்று ஏசுவும் நிலத்தின்
உள்ளே உயிருடன் தான் இருந்தார் என்பது இப்போது பைபிளில் ஏசு, தம்மைப் பற்றிக் கூறிய முன்னறிவிப்பிலிருந்தே உறுதியாகின்றது.
ஓர் எளிய கணக்கு
கிறித்தவ நாடுகளில் புனித வெள்ளி அன்று விடுமுறை அளிக்கின்றார்கள்.
இந்த வெள்ளிக்கிழமை புனித வெள்ளிக்கிழமை என்று ஏன் அழைக்கப்படுகின்றது?
பாவங்களுக்காக ஏசு மரணித்த நாள் என்பதால்! இதற்காகத் தான் கிறித்தவ
நாடுகள் விடுமுறை அளிக்கின்றன.
ஏசு சிலுவையில் 3 மணி நேரத்திற்கு மேலாகக் கிடக்கவில்லை. வெள்ளியன்று சூரியன்
மறைவதற்குள்ளாக ஏசுவைக் கல்லறைக்குக் கொண்டு சென்று விட்டார்கள் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.
1. ஏசு வெள்ளி இரவு (விடிந்தால் சனி) அன்று கல்லறையில் இருந்ததாகக்
கருதப்படுகின்றது.
2. சனிக்கிழமை பகலும் அவர் கல்லறையில் இருந்தார் என்று கருதப்படுகின்றது.
3. சனிக்கிழமை இரவும் (விடிந்தால் ஞாயிறு) அவர் கல்லறையில் இருந்தார்
என்று கருதப்படுகின்றது. இதில் கிறித்தவ அமைப்புகளில் எந்த ஓர் அமைப்பிற்கும் மாற்றுக்
கருத்து இல்லை.
ஞாயிற்றுக் கிழமை காலை மகதலா மேரி கல்லறைக்கு வந்த போது கல்லறை
காலியாக இருந்தது.
இங்கு மேற்கண்ட மூன்று சம்பவத்திலும் கருதப்படுகின்றது என்று
நாம் குறிப்பிடுவதற்குக் காரணம், புதிய
ஏற்பாட்டின் 27 புத்தகங்களில் எதிலுமே
ஏசு எப்போது கல்லறையிலிருந்து வெளியேறினார் என்ற குறிப்பு இல்லை. 27 ஆசிரியர்கள் யாரும் அதை நேரடியாகக் காணவும் இல்லை.
ஒரே ஒருவர் தான், அதாவது அரிமத்திய ஊரைச் சேர்ந்த யோசேப் மட்டும் தான் இதுபற்றித்
தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் பைபிளில் அவரது குரல் அமுக்கப்பட்டு விட்டது. அவருடன்
கூடவே இருந்த நிக்தேதமையும் சேர்த்துக் கொள்ளலாம். காரணம், அவ்விருவரும் தான் ஏசு கல்லறையில் வைக்கப்படும் போது அருகில்
இருந்தவர்கள். அவ்விருவரும் வெள்ளி மாலை (விடிந்தால் சனி) இருள் படர்ந்த பிறகு, காயம் பட்ட ஏசுவுக்கு ஒற்றடம் கொடுத்து வைத்தியம் செய்வதற்கு
எடுத்துச் சென்றவர்கள். அவர்களது சாட்சியக் குரல்கள் பைபிளில் பதிவாகாமல் நிரந்தரமாக
அமுக்கப்பட்டு விட்டது.
எளிய கூட்டல்
என்ன தான் கூட்டினாலும், எத்தனை முறை கூட்டினாலும் கிடைக்கப் போகின்ற விடை, ஒரு பகல், இரண்டு
இரவுகள் தான். கணக்கு மன்னன் ஐன்ஸ்டீன் வந்தாலும் இந்த விடையை மாற்ற முடியாது.
ஏசு கிறிஸ்து அறிவித்த முன்னறிவிப்பில் கிறித்தவர்களின் பொய்யைப்
பாருங்கள்.
1. ஏசு யோனாவைப் போன்றவர் அல்லர். யோனா மீன் வயிற்றில் உயிருடன்
இருந்தார். ஆனால் ஏசுவோ கல்லறையில் இறந்தே கிடந்தார்.
2. மூன்று இரவுகள், மூன்று பகல்கள் நிலத்திற்குள் இருப்பேன் என்று ஏசு சொன்னார்.
ஆனால் கிறித்தவர்களோ, ஏசு கல்லறையில்
ஒரு பகல்,
இரண்டு இரவுகள் இருந்தார் என்று சொல்கின்றார்கள்.
இதில் யார் பொய் சொல்கிறார்கள்? ஏசுவா? அல்லது
கிறித்தவர்களா? பைபிளா? என்று அவர்களே பதில் சொல்லட்டும்.
1. மகதலா மேரி
2. எம்மாவுவைச் சேர்ந்த சீடர்கள்
3. வானவர்கள்
4. இரு கல்லறைத் தோழர்கள்
ஆகியோரின் ஆணித்தரமான சாட்சி ஆதாரங்களை நாம் ஏற்கனவே பட்டியலிட்டுள்ளோம்.
அவை அனைத்துமே ஏசு உயிருடன் தான் இருந்தார் என்பதைச் சந்தேகமில்லாமல் நிரூபிக்கின்றன.
இருப்பினும் ஏசுவின் சீடர்கள் அவற்றை நம்ப மறுத்தனர். நவீன சீடர்களாவது இதை நம்புவார்களா? சாத்தியமில்லை. சந்தேகப் பேர்வழி தாமஸைப் போல் இவர்களும் நம்புவதற்குச்
சாத்தியமில்லை.
தொகுப்புரை
இதுவரை எடுத்துக் காட்டிய அனைத்து ஆதாரங்களும் ஏசு இறக்கவில்லை
என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இங்கு இதுவரை கண்ட விளக்கங்களிலிருந்து சிறு
குறிப்புகள் அடங்கிய ஒரு தொகுப்பை இங்கே அளிக்கிறோம்.
1. இறப்பதற்கு ஏசு காட்டிய தயக்கம்
யூதர்களை அடக்குவதற்காக அவர் போர் வியூகம் வகுத்தார். காரணம், தாம் உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.
2. கடவுளின் உதவி கேட்டுப் பிரார்த்தனை
கடுமையான கதறல், கண்ணீர் மூலம் தன்னை உயிருடன் காக்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை
புரிந்தார்.
3. இறைவன் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்தல்
தன்னை உயிருடன் காக்க வேண்டும் என்று ஏசு செய்த பிரார்த்தனையை
கடவுள் ஒப்புக் கொண்டார்.
4. வலுப்படுத்த வந்த வானவர்
அவரை உயிருடன் பாதுகாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் கடவுள்
வானவரை அனுப்பி அவரை வலுப்படுத்தினார்.
5. பிலாத்து அவரை நிரபராதியாகக் காணுதல்
ஏசு ஒரு நிரபராதி என்று பிலாத்து செய்த முடிவு. ஏசுவுக்கு உயிர்
வாழ்வளிப்பதற்கு ஒரு பொருத்தமான காரணமாக அமைகின்றது.
6. பிலாத்தின் மனைவி கண்ட கனவு
ஏசுவுக்கு எந்தத் தீங்கும் ஏற்படக் கூடாது; அதாவது அவர் உயிருடன் காப்பாற்றப்பட வேண்டும் என்று பிலாத்தின்
மனைவி,
பிலாத்திடம் கோரிக்கை வைக்கின்றார்.
7. சிலுவையில் 3 மணி நேரம்
வழக்கத்தில் உள்ள முறைப்படி, சிலுவையில் யாரும் இவ்வளவு சீக்கிரம் இறப்பதில்லை. ஏசு சிலுவையில்
கட்டித் தொங்க விடப் பட்டிருந்தாலும் அவர் உயிருடன் தான் இருந்தார்.
8. இரு சிலுவைக் கூட்டாளிகளும் உயிருடன் இருத்தல்
ஏசுவுடன் சிலுவையில் மாட்டப்பட்ட இரு சக சிலுவைக் கூட்டாளிகள்
அதுவரை உயிருடன் தான் இருந்தனர். எனவே ஏசுவும் அதே கால கட்டத்திற்கு உயிருடன் தான்
இருந்தாக வேண்டும்.
9. பைபிள் கலைக் களஞ்சியத்தின் கருத்து
ஏசுவின் உடலில் ஈட்டி ஊடுறுவிய போது ஏசு உயிருடன் தான் இருந்தார்
என்று சிலுவை என்ற தலைப்பின் கீழ் பைபிள் கலைக் களஞ்சியம், 960ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
10. இரத்தமும் தண்ணீரும் கொப்பளித்தல்
ஈட்டி குத்திய மாத்திரத்தில், உடனே இரத்தமும் தண்ணீரும் கொட்டியது ஏசு உயிருடன் இருந்தார்
என்பதற்கு ஒரு சிறந்த அடையாளம்.
11. கால் எலும்புகள் முறிக்கப்படவில்லை
ஏசு உயிருடன் இருந்தால் தான் எலும்புகள் உடைக்கப்படாமல் இருப்பதில்
ஒரு பயன் இருக்கும்.
12. இடி, நில நடுக்கம், கிரகணம்
ஏசு சிலுவையில் கட்டப்பட்டிருக்கும் போது யூதர்கள் அருகில் இருந்தால், அவர் மரணிக்கவில்லை என்பதை யூதர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.
அதனால் அவர்களைக் கலைப்பதற்காக இடி, நில நடுக்கம் மற்றும் கிரகணத்தைக் கடவுள் ஏற்படுத்துகிறார்.
13. யூதர்களின் சந்தேகம்
ஏசு மரணத்திலிருந்து தப்பி விட்டார்; அவர் உயிருடன் உள்ளார் என்று யூதர்கள் சந்தேகம் கொண்டனர்.
14. பிலாத்தின் ஆச்சரியம்
அவ்வளவு சீக்கிரத்தில் சிலுவையில் மாட்டப்பட்ட ஒருவர் இறக்க
மாட்டார் என்று பிலாத் அனுபவத்தில் விளங்கியிருந்தார். அதனால் அவர் ஏசுவின் மரணத்தில்
சந்தேகம் கொண்டிருந்தார்.
15. கல்லறை ஒரு நல்லறை
ஏசுவின் கல்லறை விசாலமான, காற்றோட்டமான ஓர் அறையாக அமைந்திருந்தது. இது ஏசுவை உயிருடன்
காப்பதற்கு வசதியாக அமைந்தது.
16. அகற்றப்பட்ட கல்லறைக் கதவு
கல்லறைக் கதவு அகற்றப்பட்டது. உடல் துணி மடிக்கப்பட்டிருந்தது.
எல்லாமே ஏசு உயிருடன் இருப்பதால் தான்.
17. பிரேதத் துணி ஆய்வறிக்கை
ஏசுவின் பிரேதத் துணியை ஆய்வு செய்த ஜெர்மானிய அறிவியல் ஆய்வாளர்கள்
ஏசுவின் இதயம் இயங்கிக் கொண்டிருந்தது என்று தெரிவிக்கின்றனர்.
18. தோட்டக்காரர் வேடம்
ஏசு ஆவியானவராக எழுந்திருந்தால் தோட்டக்கார வேடம் அவருக்குத்
தேவையில்லை. தோட்டக்கார வேடம் அவருக்குத் தேவைப்பட்டதற்குக் காரணம், தன்னை யூதர்கள் அடையாளம் கண்டு கொன்று விடக் கூடாது என்பதற்காகத்
தான்.
19. என்னைத் தொடாதே!
என்னைத் தொடாதே என்று மகதலா மேரியைப் பார்த்து ஏசு சொல்கிறார்.
அவ்வாறு தொடுவது தனக்கு வேதனையளிக்கும் என்பதால் இப்படிச் சொல்கிறார். இவ்வாறு அவர்
சொல்வதிலிருந்து அவர் உயிருடன் இருப்பது உறுதியாகின்றது.
20. தந்தையிடம் இன்னும் நான் செல்லவில்லை
யூதர்களின் வார்த்தையில், நான் இன்னும் இறக்கவில்லை, உயிருடன் தான் இருக்கிறேன் என்று ஏசு தெரிவிக்கின்றார்.
21. பயப்படாத மேரி
ஏற்கனவே ஏசுவை உயிர்த் துடிப்புடன் கண்டதால் மகதலா மேரி, உயிருடன் உள்ள ஏசுவையே தேடுகின்றார்.
22. பயத்தில் உறைந்த பக்த சீடர்கள்
ஏசு சிலுவையில் மாட்டப்பட்டு உயிர் துறந்தார் என்று செவி வழிச்
செய்திகளை நம்பியதால் ஏசுவை நேரில் கண்டதும் சீடர்கள் பயத்தில் உறைந்தனர்.
23. உணவு உண்ட ஏசு
உணவு இன்றியமையாதது. எப்போது? உயிருடன் இருக்கும் போது! ஏசு உயிருடன் இருந்தார். அதனால் அவர்
உணவு சாப்பிட்டார்.
24. எதிரிகளின் பார்வையிலிருந்து தப்பிய ஏசு
ஏசு எதிரிகளின் கண்களை விட்டும் தன்னைத் தற்காத்துக் கொண்டார்.
காரணம் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார் என்பதால் தான்.
25. சுருக்கமான பயணம்
ஏசு மிக சுருக்கமான பயணத்தை மேற்கொண்டார். காரணம் அவர் உயிருடன்
இருந்ததால்! ஆவியாக இருந்தால் தூரம் ஒரு பொருட்டல்ல!
26. கல்லறைத் தோழர்களின் வாக்குமூலம்
கல்லறைத் தோழர்கள், மகதலா மேரியிடம், அவர்கள் அப்பெண்களை நோக்கி, உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? என்று கேட்கின்றனர். (லூக்கா 24:4)
ஏசு உயிருடன் இருந்தார் என்பதையே இது காட்டுகின்றது.
27. வானவர்களின் வாக்குமூலம்
ஏசு உயிர் பெற்று எழுந்தார் என்றோ அல்லது ஆவியாக எழுந்தார் என்றோ
வானவர்கள் சொல்லவில்லை. உயிருடன் உள்ளார் என்று தான் குறிப்பிடுகின்றனர்.
28. மகதலா மேரியின் வாக்குமூலம்
மகதலா மேரி ஏசுவின் ஆவியை அல்லது அவரது பேயைத் தேடவில்லை. உயிருடன்
உள்ள ஏசுவைத் தான் தேடுகிறார். சீடர்கள் நம்ப மறுத்தது, ஏசு உயிருடன் இருக்கிறார் என்பதைத் தான்.
29. டாக்டர் பிரிமோஸ் வாக்குமூலம்
ஈட்டியின் தாக்குதல் உடலில் அதிகமான ஒரு தூண்டுதலை ஏற்படுத்துகின்றது.
இதன் காரணமாக இரத்தக் குழாய்களின் நரம்பு மண்டலங்கள் நிலை குலைந்து தண்ணீர் வெளியாகின்றது
என்று டாக்டர் பிரிமோஸ் அளிக்கும் வாக்குமூலமும் ஏசு உயிருடன் இருந்தார் என்பதைக் காட்டுகிறது.
30. ஏசுவின் முன்னறிவிப்பு
ஏசு தன்னை யோனாவுடன் ஒப்பிடுகிறார். இந்த ஒப்பீட்டின்படி அவர்
உயிருடன் இருந்தாக வேண்டும்.
இங்கு குறிப்பிட்ட இந்த சிறு குறிப்புத் தொகுப்புகளை, கிறித்தவத்தின் ஆத்மா மீட்புக் கொள்கைகளைப் பொசுக்குகின்ற நெருப்புப்
பொறித் தொகுப்புகளைப் படியுங்கள். இதுவரை கண்ட விளக்கங்களையும் வாதங்களையும் படியுங்கள்.
கிறித்தவ நண்பர்களிடம் விவாதியுங்கள். அவர்கள் உண்மையான இறைத்தூதர் ஏசுவின் கொள்கைகளை
ஏற்று மறுமையில் வெற்றி பெற அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
முடிவுரை
அஹ்மத் தீதாத் கூறுகின்றார்:
என்னுடைய இளமைப் பருவத்தில் தென்னாப்பிரிக்காவின் ஆடம்ஸ் மிஷனில்
நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது கிறித்தவ பாதிரி மாணவர்களுடன் கருத்துப் பரிமாற்றத்தில்
ஈடுபட நேர்ந்தது. மனித குல மீட்சிக்கு ஒரே வழி ஏசுவின் சிலுவை மரணம் தான் என்று அப்போதிருந்து
எனக்கு ஊட்டப்பட்டது.
ஏசுவின் சிலுவை மரணம் தான் தங்களது விமோசனம் என்று அதிகமான கிறித்தவ
இளைஞர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதைக் கண்டேன். அதை நம்பாதவர்கள் நரகவாதிகள் என்று அறிந்தேன்.
எளிதில் ஈர்ப்புக்குள்ளாகும் இளைஞனாக இருந்த என்னை இது மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கிறித்தவத்தின் அஸ்திவாரமான இந்த நம்பிக்கை, எனது ஆய்வின் மையக் கருவானது. புதிய ஏற்பாடுகள் அனைத்தையும்
முழுமையாக மேய்ந்து, ஆய்ந்து உண்மையை
அறிய முனைந்தேன்.
இவ்வாறு இந்த ஆய்வில் ஈடுபட்ட என்னிடம் யாரும் முஸ்லிம் என்ற
அடிப்படையில் ஏசுவின் சிலுவை மரணம் பற்றி உன்னுடைய நம்பிக்கை என்ன? என்று கேட்க மாட்டார்கள் என்று மிகக் கண்ணியமாக நம்புகிறேன்.
காரணம் ஏசுவின் சிலுவை மரணம் தொடர்பாக என் நம்பிக்கை, திருக்குர்ஆன் 4:157 வசனம் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்ற அந்த சத்திய நம்பிக்கை தான்.
என் மீது கிறித்தவ நம்பிக்கையாளர்கள் காட்டிய கரிசனமும் அக்கறையும்
தான் என்னுடைய இந்த ஆய்வுக்கு ஒரு தூண்டுகோலாகவும் உந்துதலாகவும் அமைந்தது.
அவர்களுடைய கரிசனத்தையும், ஆவலையும் நான் அதிகக் கவனத்துடனும், கருத்துடனும் எடுத்துக் கொண்டு, விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, அவர்களுடைய ஆதாரங்களையே துணையாகக் கொண்டு இந்த ஆய்வுப் பயணத்தை
மேற்கொண்டேன். அதன் விளைவுகளைத் தான் நீங்கள் இப்போது பகிர்ந்து கொண்டு திகைப்பில்
ஆழ்ந்திருக்கிறீர்கள்.
என்னுடைய வீட்டு வாசலைப் பள்ளமாக்கி, கதவைத் தட்டி, இப்படி ஒரு முயற்சியில் என்னை இறக்கி விட்டு, இப்படி ஓர் ஆய்வை இயற்ற வைத்த நூற்றுக்கணக்கான கிறித்தவ நண்பர்களுக்கு
என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்லாண்டுகள் நான் பட்ட பாட்டின், படித்துப் படித்துப் பார்த்து நான் செய்த ஆய்வின் பலன் இது என்று
கூறி முடிக்கிறேன்.
EGATHUVAM OCT 2009
EGATHUVAM OCT 2009
- அஹ்மத் தீதாத்