Apr 16, 2017

நாத்திகம் தோற்றது ஏகத்துவம் வென்றது

நாத்திகம் தோற்றது ஏகத்துவம் வென்றது

தனது அறிவுப்பூர்வமான வாதத்தின் மூலம் அசத்தியக் கோட்டைகளை ஆட்டுவித்த இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னந்தனி மனிதராக நின்று அசத்தியபுரியை வென்று காட்டியவர். பதில் இல்லையெனில் அந்தக் கொள்கை அசத்தியம்! பொய்! போலி என்று உலகுக்கு உணர்த்திய பகுத்தறிவுப் பகலவன்! சிலை வணக்கத்தின் சிம்ம சொப்பனம்!

அவர் வைத்த வாதத்திற்கு அரசனால் பதில் சொல்ல முடியவில்லை.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன் என்று இப்ராஹீம் கூறிய போது, நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன் என்று அவன் கூறினான். அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்! என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 2:258

அந்தப் பகுத்தறிவுப் பகலவன் வைத்த வாதத்திற்கு அவரது சமுதாயத்தினராலும் பதில் சொல்ல முடியவில்லை.

நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன? என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர். நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.

நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா? என்று அவர்கள் கேட்டனர். அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன் என்று அவர் கூறினார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன் (என்றும் கூறினார்.) அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்.

நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன் என்று அவர்கள் கூறினர். ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார் எனக் கூறினர். அவரை மக்கள் மத்தியில் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும் என்றனர்.

இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா? என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்! என்று அவர் கூறினார்.

உடனே விழிப்படைந்து நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள் என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, இவை பேசாது என்பதை நீர் அறிவீரே! என்றனர்.

அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா? அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா? என்று கேட்டார்.

அல்குர்ஆன் 21:52-67

அறிவுரீதியான வாதத்திற்குப் பதில் இல்லை என்றால், அவர் பேரரசராக இருந்தாலும், பெரும் சமுதாயமாக இருந்தாலும் அந்தப் பேரரசு, பெரும் சமுதாயம் என்பது பெயரளவில் தான். உண்மையில் அவர்கள் சாவிகள்; சருகுகள்; பதர்கள்.

சத்தியத்தில் இருந்து கொண்டு இது போன்று பதில் சொல்பவர், தனி மனிதராக இருந்தாலும் அவர் தான் ஒரு சமுதாயம் என்று ஓர் உயரிய அளவுகோலை அல்லாஹ் நமக்குத் தெரிவிக்கின்றான்.

இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.

அல்குர்ஆன் 16:120

அந்தப் பகுத்தறிவுத் தந்தையின் பாட்டையில், பாதையில் தான் தவ்ஹீத் ஜமாஅத் வெளிச்சமிகு பயணம் செய்கின்றது.

கப்ரு வணங்கிகளிடம், காதியானிகளிடம், கிறித்தவர்களிடம், குர்ஆன் மட்டும் போதும் என்ற குருட்டு சிந்தனை உடையவர்களிடம், குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களையும் ஏற்க வேண்டும் என்று பிதற்றும் பிதற்றல்காரர்களிடம், ஜகாத், பிறை போன்ற மார்க்கச் சட்டங்களில் மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களிடம் என பல்வேறு விவாதக் களங்களைச் சந்தித்த தவ்ஹீத் ஜமாஅத், அண்மையில் தன் பாதையில், தன் அனுபவத்தில், தன் பயணத்தில் இது வரை சந்தித்திராத, கண்டிராத நாத்திகவாதிகளிடம் ஒரு வாதக் களத்தைச் சந்தித்தது.

பகுத்தறிவுவாதிகள் (?) இவர்கள்! இவர்களிடம் மோத முடியுமா? முட்ட முடியுமா? இவர்களை எதிர்த்து வாதம் செய்ய முடியுமா? என்று இந்த நூற்றாண்டில் நினைப்பதற்கே பயந்து கொண்டிருந்தது இஸ்லாமியச் சமுதாயம்!

இப்ராஹீம் நபியின் பாதையில் இவர்களையும் இந்த ஜமாஅத் சந்திக்கும் வகையில் அவர்களைச் சந்திக்கு அழைத்தது; சந்தித்தது. அவர்கள் செய்வது பகுத்தறிவு வாதம் அல்ல! பைத்தியக்கார வாதம் என்று நிறுவி, நிரூபித்து அவர்களை சந்தி சிரிக்க வைத்தது. அவர்கள் கொண்ட கொள்கையில் அவர்களையே சந்தேகிக்க வைத்தது.

இந்த நாத்திகம் தமிழகத்திற்குப் புதிது! ஆனால் அல்குர்ஆனுக்குப் புதிதல்ல!

நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு இல்லை. மரணிக்கிறோம்; வாழ்கிறோம்; காலத்தைத் தவிர வேறு எதுவும் எங்களை அழிப்பதில்லை எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு இது பற்றி எந்த அறிவும் இல்லை. அவர்கள் ஊகம் செய்வோர் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 45:24

கேடு கெட்ட இந்தச் சிந்தனை ஓட்டத்திற்கும் தன்னிடம் தக்க பதிலைச் சேமித்தே வைத்துள்ளது. அந்த அற்புத வேதம் தான் இந்த விவாதக் களத்தில் நின்றது! வென்றது! அல்ஹம்துலில்லாஹ்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் இறைத் தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித் தான் ஆக வேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப் பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருய வேத அறிவிப்பு (திருக்குர்ஆன்) தான். ஆகவே, நபிமார்கலேயே மறுமை நால், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4981


தவ்ஹீத் ஜமாஅத் கண்ட இந்த வெற்றி முதல் கட்ட வெற்றி தான். இந்த ஜமாஅத்தின் தொண்டர்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் - முஸ்லிம், கிறித்தவர்கள், இந்துக்கள், ஆத்திகர்கள், நாத்திகர்கள் அனைவரிடமும் - இதைக் கொண்டு செல்வதில் தான் இறுதிக் கட்ட வெற்றி அமைந்துள்ளது.

EGATHUVAM NOV 2009