Apr 16, 2017

ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்

ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்

இன்றைக்கு இஸ்லாமியர்கள் பல அமைப்பினராகவும், பல்வேறு கொள்கையினராகவும் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும், கொள்கையினரும் தாங்கள் செல்லும் வழியே மேலானது எனவும் போதிக்கின்றனர். ஆனால் குர்ஆனும், நபி வழியும் எதனை மேலானது என்றும், எது இம்மையிலும், மறுமையிலும் நமக்குப் பலன் தரக்கூடியது என்றும் வலியுறுத்துகிறதோ அதற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் எதனை முதன் முதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் மூலம் நாம் காண்போம். இதோ அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக!

அல்குர்ஆன் 47:19

ஒவ்வொருவரும் முதன் முதலில் ஓரிறைக் கொள்கையைத் தான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் வலியுறுத்துகிறது. ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த விஷயத்தில் கவனமற்றவர்களாகவே உள்ளனர்.

இவ்வாறு நாம் கூறும் போது, நாங்கள் ஓரிறைவனைத் தானே வணங்குகிறோம் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கூறுகின்றனர். அல்லாஹ் மட்டுமே இறைவன் என்று கூறுவதால் ஒருவன் ஏகத்துவக் கொள்கையை ஏற்றவனாக கருதப்பட மாட்டான். மாறாக இறைவனுக்குரிய ஒரு பண்பை அவனல்லாதவர்களுக்கு இருப்பதாகக் கருதினாலோ அல்லது அல்லாஹ் அல்லாத ஒரு பொருளுக்கு இறைத் தன்மை இருப்பதாக நம்பினாலோ அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவான். மறுமையில் நிரந்தர நரகத்திற்குச் சொந்தக்காரனாகி விடுவான். இதன் காரணமாகத் தான் இறைவன் இதனைக் கற்றுக் கொள்ளுமாறு கட்டளையிடுகிறான்.



அல்லாஹ் நம்மை படைத்ததன் நோக்கம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை, அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை வணங்குவதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு எதையும் இணை கற்பிக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும். அறிவிப்பவர்: முஆத் (ரலி)



நூல்: புகாரீ 2856

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.

நூல்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரீ 1238

இஸ்லாத்தின் முதல் தூண் ஏகத்துவக் கொள்கை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து (தூண்கள்) மீது நிறுவப்பட்டுள்ளது. (அவை:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 20

இறை நம்பிக்கையின் முதல் நிலை ஏகத்துவக் கொள்கை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான அல்லது அறுபதுக்கும் அதிகமான கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளை தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 58

ஓரிறைக் கொள்கைக்கு நேர் எதிரானது இணை வைப்புக் காரியங்களாகும். இந்த இணை வைப்புக் காரியங்களின் பேராபத்தை ஒருவன் உணர்ந்து கொண்டால் எல்லாவற்றிற்கும் மேலாக இதைக் கற்றுக் கொள்வதற்குத் தான் முக்கியத்துவம் தருவான். இதை அறியாதவர்களாக இருப்பதால் தான் இதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். இவை ஒரு மனிதனுக்கு எவ்வளவு பேராபத்தானவை என்பதைப் பின்வரும் சான்றுகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

ஓரிறைக் கொள்கையின் மகிமை

இறைவனுக்கு இணை கற்பிக்காதவர்கள் எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் சுவர்க்கம் சென்று விடுவார்கள். இதிலிருந்தே நாம் ஓரிறைக் கொள்கையின் மகிமையை விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் திருப்தியை நாடி லாயிலாஹ இல்லல்லாஹ் என்று எவரேனும் சொன்னால் அல்லாஹ் நரகத்தை அவர் மீது தடை செய்துவிடுகிறான் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இத்பான் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 4250

அபூதர் (ர) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்த போது நான் அவர்கடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொண்ட போது (மீண்டும்) அவர்கடம் சென்றேன். அப்போது, லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல், பிறகு அதே நம்பிக்கையில் இறந்து விடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நான், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்) என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்) என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக) அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே) என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5827

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும் ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும், அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (ஆகுக! என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்) என்றும், அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர் என்றும், சொர்க்கம் உண்மை தான் என்றும், நரகம் உண்மை தான் என்றும், எவர் (உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவரது செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்.

அறிவிப்பவர்: உபாதா (ர)

நூல்: புகாரி 3435

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நான் சொர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்! என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமளானில் நோன்பு நோற்க வேண்டும் என்றார்கள். அதற்கவர், என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதை விட அதிகமாக வேறெதைதையும் செய்ய மாட்டேன் என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்! என்றார்கள்.

நூல்: புகாரி 1396

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது இதயத்தில் ஒரு மணிக்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ் சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ் சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 44

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு பயணத்தில் வாகனமொன்றில்) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் முஆத் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபலே! என்று அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்) என்று முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். முஆதே! என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்) என மீண்டும் முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இவ்வாறு மூன்று முறை (அழைப்பும் பதிலும்) நடந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உளப்பூர்வமாக உறுதி கூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்து விட்டான் என்று கூறினார்கள். உடனே முஆத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடட்டுமா? (இதை கேட்டு) அவர்கள் புளகாங்கிதம் அடைவார்களே! என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இல்லை; வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் (அதைக் கேட்டுவிட்டு) அவர்கள் (இது மட்டும் போதுமே என்று நல்லறங்களில் ஈடுபடாமல்) அசட்டையாக இருந்து விடுவார்கள் என்று கூறினார்கள்.

(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தறுவாயில் இந்த ஹதீஸை முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு) அறிவித்தார்கள்.

நூல்: புகாரி 99

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். எங்களுடன் அமர்ந்திருந்த சிலரில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். அப்போது எங்களிடையேயிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நெடு நேரமாகியும் அவர்கள் எங்களிடம் (திரும்பி) வரவில்லை. அவர்களுக்கு (எதிரிகளால்) ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; நாங்கள் பீதி அடைந்தவர்களாக (அங்கிருந்து) எழுந்தோம். பீதியுற்றவர்களில் நானே முதல் ஆளாக இருந்தேன். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடிக்கொண்டு புறப்பட்டேன். பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த அன்சாரிகளுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். அத்தோட்டத்தின் வாசல் எங்கே என்று (தேடியவனாக) அதைச் சுற்றி வந்தேன். ஆனால் (அதன் வாசலை) நான் காணவில்லை. அத்தோட்டத்திற்கு வெளியே இன்னொரு தோட்டத்திலிருந்து வாய்க்கால் ஒன்று அதனுள் சென்று கொண்டிருந்தது. உடனே நான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று (என் உடலைக்) குறுக்கிக் கொண்டு (அந்த வாய்க்கால் வழியே தோட்டத்திற்குள்) நுழைந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

அப்போது அவர்கள், அபூஹுரைராவா? என்று கேட்டார்கள். நான், ஆம், அல்லாஹ்வின் தூதரே! என்றேன். என்ன விஷயம்? என்று கேட்டார்கள். நீங்கள் எங்களிடையே இருந்து கொண்டிருந்தீர்கள். (திடீரென) எழுந்து சென்றீர்கள். நெடு நேரமாகியும் நீங்கள் எங்களிடம் திரும்பவில்லை. எனவே, (எதிரிகளால்) ஏதேனும் உங்களுக்கு ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; பீதியுற்றோம். நான் தான் பீதியுற்றவர்களில் முதல் ஆளாவேன். எனவே தான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று உடலைக் குறுக்கிக் கொண்டு இந்தத் தோட்டத்திற்கு வந்தேன். இதோ மக்கள் என் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஹுரைரா! (என்று என்னை அழைத்து) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்! என்று கூறினார்கள்.

நான் உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், இவை என்ன காலணிகள், அபூஹுரைரா? என்று கேட்டார்கள். அதற்கு நான் இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி, இக்காலணிகளை (ஆதாரமாக)க் கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள் என்று சொன்னேன். உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். திரும்பிச் செல்லுங்கள், அபூஹுரைரா! என்று சொன்னார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள்.

நான், உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார். நான் மல்லாந்து விழுந்து விட்டேன். பிறகு, திரும்பிச் செல்லுங்கள் என்று கூறினார் என்றேன்.

அப்போது உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்? என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில் சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள்தாம் அபூஹுரைராவை அனுப்பி வைத்தீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள், அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் (நற்)செயல் புரிய விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறே அவர்களை விட்டுவிடுங்கள் (அவர்கள் நற்செயல் புரியட்டும்) என்று சொன்னார்கள். நூல்: முஸ்லிம் 52

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும்.

பிறகு அல்லாஹ் அவனிடம் இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா? என்று கேட்பான். என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள்தான்) என்று அவன் கூறுவான். (நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் என் இரடசகனே ஏதுமில்லை என்று கூறுவான்.

அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும் அதில் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் நிச்சயமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்று சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும்.

நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?) என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் நிச்சயமாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய் என்று கூறுவான். அந்த பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்த சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடிவிடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது. அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ் (ரலி)

நூல்: திர்மிதி 2563

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் (தனக்கு இணை வைக்காத ஒரு அடியானைப் பார்த்து) ஆதமுடைய மகனே நீ பூமி நிறைய பாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்கவில்லை. எனவே நான் உனக்கு பூமி நிறைய பாவமன்னிப்பை வழங்குகின்றேன் என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூதர்(ரலி)

நூல்: அஹ்மத் 20349

நம்மை மறுமையில் காப்பாற்றக் கூடியது இந்த ஏகத்துவம் மட்டும் தான். நாம் அதில் தவறிழைத்து விட்டோம் என்றால் அதை விடப் பேரிழப்பு வேறோன்றுமில்லை. நாம் மக்களுக்குச் செய்கின்ற சேவைகளிலேயே மிகச் சிறந்த சேவை அவர்களுக்குச் சத்தியத்தை எடுத்துரைப்பது தான்.

இன்றைக்கு இதைத் தவிர மற்ற அனைத்துப் பணிகளுக்கும் பெரும் கூட்டம் இருக்கிறார்கள். இந்த சத்தியப் பிரச்சாரத்தை எடுத்துரைப்பதற்குத் தான் அனைவரும் தயங்குகிறார்கள்.

ஏனென்றால் இதனை எடுத்துரைக்கும் போது பல விதமான சோதனைகள் பல விதங்களிலும் வந்து கொண்டிருக்கும். அப்படி சோதனைகள் வரவில்லையென்றால் நாம் சத்தியத்தைக் கூறவில்லை என்று தான் பொருள்.

சமுதாயம் எவ்வளவு எதிர்த்தாலும், அனைவருமே இந்த சத்தியப் பிரச்சாரத்திற்கு எதிராகக் களமிறங்கினாலும், எவ்வளவு பின்னடைவுகளைச் சந்தித்தாலும் இந்த சத்தியப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டோம் என்பதில் உண்மையான தவ்ஹீத்வாதிகள் உறுதியாக இருக்க வேண்டும்.

ஓரிறைக் கொள்கையில் அவசியத்தை இது வரை கண்டோம். இணை வைத்தலின் தீமைகளைப் பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.


EGATHUVAM NOV 2009