Apr 19, 2017

தாயீக்கள் பற்றாக்குறை தீர்வு கிளைகளிடமே!

தாயீக்கள் பற்றாக்குறை தீர்வு கிளைகளிடமே!

அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் தவ்ஹீது வளர்ச்சி பன்மடங்கு பரிமாணத்தில் வளர்ந்து வருகின்றது. 1980களில் வேர் பிடித்த தவ்ஹீது மரம் இப்போது ஊர் தோறும் கிளைகளாக கிளைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதனுடைய வளர்ச்சியின் வேகத்திற்கும் வீதத்திற்கும் ஈடு கொடுக்கக் கூடிய வகையில் அழைப்பாளர்கள் இல்லை.

அழைப்பாளர்கள் தேவை என்று பல்வேறு கிளைகளிலிருந்து கோரிக்கைகள் குவிந்த வண்ணமிருக்கின்றன. கைவசத்தில் இருக்கும் அனைத்து அழைப்பாளர்களையும் கோருகின்ற கிளைகளுக்கு விரைந்து வினியோகிக்கத் தலைமை தவறுவதில்லை. இருப்பினும் பற்றாப்படி தீரவில்லை.

எங்களுக்கு அழைப்பாளர் இல்லை என்று பல்வேறு கிளைகளிலிருந்து ஏக்கக் குரல்கள் தலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றன. ரமளானில் தாயீக்களின் தேவை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றது. அமீரகம், கத்தார் போன்ற பகுதிகளுக்கு அவசியத்தை முன்னிட்டு அழைப்பாளர்களை அனுப்பியது போக இப்போது புருணை போன்ற நாடுகளுக்கும் அழைப்பாளர்களை அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் தலைமை உள்ளது.

ஆசியாவையும் தாண்டி ஐரோப்பாவிலும் தமிழ் பேசுகின்ற தவ்ஹீது சகோதரர்களிடமிருந்து அழைப்பாளர்களுக்காக அழைப்பு வந்து கொண்டிருக்கின்றது. தலைமை இப்படி ஒரு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, தலைமை மீது கிளைகள் கோபப்படுவதில் எந்தப் பயனும் இல்லை. தாயீக்கள் தரவில்லை என்று வெந்து, வேதனையை தலைமை மீது கொட்டுவதிலும் அர்த்தமில்லை. இருக்கின்ற தாயீக்களைத் தான் தலைமையினால் பிரித்து அனுப்ப முடியும்.

அவரவர் ஊர்களிலிருந்து நன்கு திறமையுள்ள மாணவர்களை, நான்காண்டு கல்வித் திட்டத்தில் அமைந்துள்ள மேலப்பாளையம் இஸ்லாமியக் கல்லூரிக்கு அல்லது இரண்டாண்டு கல்வித் திட்டத்தில் அமைந்துள்ள சேலம் தவ்ஹீது கல்லூரிக்கு அனுப்பி வைப்பது தான் கிளைகளுக்கு முன்னால் உள்ள ஒரே வழியும் வாய்ப்பும் நிவாரணமும் ஆகும். இதைத் தவிர வேறு வழியே இல்லை.

சொந்த ஊரில் உருவாகின்ற ஓர் அழைப்பாளர் அந்த ஊரில் தவ்ஹீது வளர்ச்சி காண்பதில் அதிகம் அக்கறையும் ஆர்வமும் காட்டுவார். அதற்காக முக்கிய கவனத்தையும் முழுமையான கரிசனத்தையும் செலுத்துவார். அதனால் கிளைகள் இந்த முயற்சியில் இறங்கி அழைப்பாளர் பற்றாக்குறையைத் தீர்க்க முன்வர வேண்டும். இதை விட்டு விட்டு தலைமை மீது பழியையும் பாவத்தையும் போட்டு விட்டு, அழைப்புப் பணி மீதுள்ள கடமையை, அதுவும் தங்கள் ஊர் கிளையின் மீதுள்ள பொறுப்பைத் தட்டிக் கழிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.

நமது ஏகத்துவ இயக்கம் ஓர் இதயம் போன்றது. அதன் உயிர் மூச்சு மார்க்க ஞானம் உள்ள, ஒழுக்கமிக்க அழைப்பாளர்கள் தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ள மாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காத போதே மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கொடுப்பார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்: புகாரி 100

மார்க்க அறிஞர்களின் மரணம், மார்க்கக் கல்வியின் மரணம் என்று இங்கு குறிப்பிடுகின்றார்கள். அல்லாஹ், திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

நம்பிக்கை கொண்டோர் ஒட்டு மொத்தமாகப் புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும் போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக் கொள்வார்கள். (அல்குர்ஆன் 9:122)

இதன் அடிப்படையில் நாம் இரத்தமும் வியர்வையும் சிந்தி தியாகத்துடன் வளர்த்த இந்த ஏகத்துவக் கட்டமைப்பு நமது காலத்திலேயே, நம் கண் முன்னாலேயே அழிய நாம் காரணமாக ஆகலாமா? இந்தக் கொள்கை அடுத்த தலைமுறைக்குப் போய்ச் சேர வேண்டாமா?

கவலைப்படுங்கள்! இப்போது களமிறங்குங்கள். உங்கள் ஊர்களிலிருந்து இக்கல்லூரிகளில் கல்வி பயில அழைப்பாளர்களை அனுப்புங்கள்.

ஆனால் அதே சமயம், தலைமை இப்படிக் கூறுகிறது என்பதற்காக படிப்பு ஏறாத மக்குகளையும் மழுங்கல்களையும் அனுப்பி வைத்து விடாதீர்கள். காரணம், பொதுவாக சமுதாயத்தில் மதரஸாவுக்கு அனுப்பப்படுகின்ற மாணவர்கள், "பையனுக்குப் படிப்பே வரவில்லை. அதனால் மதரஸாவுக்கு அனுப்புகிறேன்' என்று பெற்றோர் கூறுவது வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் ஆகி விட்டது.

இந்த மாணவர்கள் மதரஸா வந்து ஆசிரியர்களின் பிராணனை வாங்குவதுடன் மட்டுமல்லாமல் படிப்பு முடிந்து வெளியே வந்ததும் நரகத்திற்கு அழைக்கும் பிரதான ஏஜெண்டுகளாகவும் மாறி விடுகின்றனர். காரணம் குர்ஆன், ஹதீஸை எப்படி விளங்க வேண்டும் என்று தெரியாத மூடர்களை மதரஸாவுக்கு அனுப்பி வைப்பது தான்.

அதனால் நல்ல புத்திசாலியான, பட்டப்படிப்பு அல்லது +2 அல்லது எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்களை அனுப்புங்கள். அவர்கள் அழைப்பாளர்கள் என்ற பட்டதாரிகளாக மட்டுமில்லாமல் சமுதாயத்தை சத்தியப் பாதைக்குக் கொண்டு செல்லும் படைப்பாளிகளாகவும் உருவாவார்கள்.

பொதுவாக மதரஸாவுக்கு வந்து கல்வி படிப்பவர்கள் பிழைப்புக்கு வழியில்லாதவர்கள், பிறரிடம் கையேந்துபவர்கள் என்ற இழிநிலை இருப்பதால் தான் இக்கல்விக்குப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்புவதில்லை. ஆனால் தவ்ஹீது ஜமாஅத் அந்நிலையை மாற்றி ஓர் அற்புத நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

தன்மானமிக்கவர்களாகவும், தரமிக்கவர்களாகவும் தவ்ஹீது தாயீக்கள் உருவாகியிருக்கின்றார்கள். அதற்கு இஸ்லாமியக் கல்லூரியிலிருந்து வெளிவந்து அழைப்புப் பணியில் செயல்படுகின்ற அழைப்பாளர்கள் சாட்சியங்களாக அமைந்திருக்கின்றார்கள். பொது அறிவு, கணிணி அறிவு, ஆங்கில ஞானம் என பல்வேறு வகைகளிலும் சிறந்து விளங்குவதுடன் சத்தியப் பிரச்சாரப் பணியிலும் விவாதக் களங்களிலும் வெளுத்துக் கட்டி வருகின்றார்கள்.

மிகச் சிலர் அழைப்புப் பணி என்ற வட்டத்திற்கு வெளியே சென்று வருவாயை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்ற தகவலும் வருகின்றது. இப்படிப்பட்டவர்கள் ஏகத்துவத்திற்குத் துரோகம் செய்பவர்கள்; மறுமையிலும் நஷ்டத்திற்குரியவர்கள் என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.

அழைப்பாளர்கள் பற்றாக்குறைக்குத் தன்னாலான பெரும் பொருளாதாரச் செலவீட்டில் இஸ்லாமியக் கல்லூரியையும் தவ்ஹீது கல்லூரியையும் தலைமை தீர்வாகத் தந்திருக்கின்றது. இரு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு ஏழை மாணவர்களைக் கிளைகளிலிருந்து தத்தெடுத்து அனுப்புங்கள். அழைப்புப் பணியே அழகிய பணி என்பதால் செல்வந்தர்களும் தங்கள் பிள்ளைகளை இப்பணியின் மகத்துவம் கருதி இக்கல்விக்காக அனுப்பி வையுங்கள்.

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? (அல்குர்ஆன் 41:33)

EGATHUVAM SEP 2010