Apr 19, 2017

உயிரைக் கொடுத்தேனும் உரிமையை மீட்போம்

உயிரைக் கொடுத்தேனும் உரிமையை மீட்போம்

60 ஆண்டுகளுக்குப் பின் பாபரி மஸ்ஜித் இடப் பிரச்சனையில் அலகாபாத் உயர்நீதி மன்ற பெஞ்ச் 30.09.10 அன்று தனது தீர்ப்பை வழங்கியது.

இந்தத் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை முன்னரே ஓரளவுக்கு நம்மால் கணிக்க முடிந்தது.

"பாபர் மஸ்ஜிதா? ராமர் கோவிலா? என்பதை முடிவு செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை, இதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது'' என்று கூறி வந்த சங்பரிவார்கள், "பேச்சுவார்த்தை மூலம் அல்லது நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலம் கோயில் கட்டுவோம்'' என்று கொக்கரித்த சங் பரிவார்கள், சமீப காலமாகக் குரல் மாறி ஒலிக்கத் துவங்கினர்.

ஜனநாயக ரீதியில் தீர்ப்பை ஏற்போம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ராவ் பகாவத் தெரிவித்தார். அலகபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை மதிப்போம் என்று பி.ஜே.பி.யின் துணைத் தலைவர் கல்ராஜ் மிஷ்ரா தெரிவித்தார்.

பொதுவாக அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போடுவார்கள் என்றால் அரசியல் சாக்கடையைச் சுத்தம் செய்ய வந்த பி.ஜே.பி. பல வேடம் போடும். ஏனெனில் முதல்வர் கருணாநிதியின் கூற்றுப்படி அது ஓர் ஆக்டோபஸ்! சங்பரிவார்களின் சிந்தனையையும் செயல்பாட்டையும் அகமாகவும் முகமாகவும் கொண்டு ஜனித்த பன்முக அவதாரம். பல வேடம் தரிப்பது அதன் கை வந்த கலை!

நீதிமன்றத் தீர்ப்பை அப்படியே ஏற்போம் என்று தங்களின் நிலைப்பாட்டிற்கு மாற்றமாகச் சொன்னார்கள். இதிலிருந்தே தீர்ப்பு காவிமயமாக இருக்குமோ என்ற ஒரு கலக்கம் முஸ்லிம்களின் உள்ளங்களில் ஏற்படாமல் இல்லை.  முஸ்லிம்கள் இவ்வாறு சந்தேகப்படுவதற்குப் பல்வேறு காரணங்களும் இருந்தன.

பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நிர்வாகத் துறைக்கு நிகராக நீதித் துறையும் அடுக்கடுக்காக முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்திருக்கின்றது.

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஒரு கூட்டம் பாபரி மஸ்ஜிதுக்குள் சென்று ராமர் சிலைகளைக் கொண்டு உள்ளே வைக்கின்றது. நிர்வாகத் துறை (அப்போதைய உத்திரப் பிரதேச காங்கிரஸ் அரசு) பள்ளிவாசலுக்குப் பூட்டு போடுகின்றது.

ஜனவரி 16, 1950ல் கோபால் சிங் விஷாரத் என்பவர் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்கின்றார். பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளுக்குப் பூஜை நடத்தப்பட வேண்டும் என்றும், அவற்றை அப்புறப்படுத்தக் கூடாது என்றும்  ஒரு தற்காலிக உத்தரவைக் கோரியே அந்த வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது. பைசாபாத் உரிமையியல் நீதிமன்றம் அதை அனுமதிக்கின்றது. அலகாபாத் உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் அதை உறுதியும் செய்கின்றது.

1986ல் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி, சிலைகளுக்குப் பூஜை செய்வதற்காகப் பள்ளிவாசலின் பூட்டுக்களைத் திறக்க உத்தரவிடுகின்றார். இது விஷ்வ ஹிந்து பரிஷத்தின் விஷமப் பிரச்சாரத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றியாகும். இந்த வெற்றியை வழிமொழியும் விதமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில நாட்களே இருந்த நிலையில் நவம்பர் 9, 1989 அன்று ராஜிவ் காந்தியின் காங்கிரஸ் அரசாங்கம், கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு விஷ்வ ஹிந்து பரிஷத்திற்கு அனுமதி அளிக்கின்றது. இது தான் பாபரி மஸ்ஜித் உடைக்கப்படுவதற்கு அடித்தளமாக ஆனது.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம்:

பள்ளியில் சிலைகள் வைக்கப்பட்டவுடன் நிர்வாகத் துறை அவற்றை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அப்புறப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறின. அப்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் அரசுகள் தான்.

ஓர் அக்கிரமம் நடைபெறும் போது அதற்கு வடிகாலாகவும் விடிவாகவும் அமைவது நீதி மன்றங்கள் தான்.

பைசாபாத் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முதலில் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கின்றது. அதன் பின்னர் அலகாபாத் உயர்நீதி மன்றம் அதை உறுதி செய்து அநீதியிழைக்கின்றது.

1986ல் அதே பைசாபாத் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், பூஜை செய்வதற்குப் பூட்டைத் திறக்க உத்தரவிட்டு மீண்டும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கின்றது.

நீதிமன்றங்களின் அநீதியும் அநியாயமும் இத்துடன் நிற்கவில்லை.

மார்ச் 12, 2003 அன்று அலகாபாத் உயர்நீதி மன்றம், இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறைக்கு ஓர் உத்தரவை இடுகின்றது. பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வு செய்ய வேண்டும் என்பது தான் அந்த உத்தரவு!

தொல்பொருள் ஆய்வுத் துறையும் பத்தாவது நூற்றாண்டின் கோயில் அல்லது இந்துக்களின் வளாகம் இந்த இடத்தின் கீழ் இருந்தது என்று சொல்லி வைத்தாற்போல் தெரிவித்தது.

நீதித் துறை முஸ்லிம்களுக்கு இழைத்து வந்த அநீதிகளின் முத்தாய்ப்பாக தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பங்கிட்டு அதில் இரண்டு பங்கை இந்துக்களுக்கும் ஒரு பங்கை முஸ்லிம்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பது தான் தீர்ப்பு. கட்டப்பஞ்சாயத்துக்களில் அளிக்கப்படும் தீர்ப்பைப் போன்று அமைந்த இந்தத் தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஒருபுறம்.

இந்தத் தீர்ப்பின் சாரமாக, நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துக்களைப் பார்த்தால் இதுவரை சங்பரிவார்கள் பாபரி மஸ்ஜித் குறித்து என்ன கருத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்களோ அதை அப்படியே தெரிவித்து வெந்த புண்ணில் வேல் அல்ல! சூலாயுதத்தைப் பாய்ச்சியுள்ளனர்.

தீர்ப்பின் சாராம்சம்

1. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் தான்.

2. சர்ச்சைக்குரிய இடம் பாபரால் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்ட ஆண்டு உறுதியாகவில்லை. இதைப் பள்ளிவாசல் என்று கருத முடியாது. ஏனெனில் இது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமாக அமைந்துள்ளது.

3. அகழ்வாராய்ச்சித் துறை ஆய்வின்படி சர்ச்சைக்குரிய பள்ளிவாசல் இருந்த இடத்தில் இந்துக்களின் பிரம்மாண்ட வழிபாட்டுத் தலம் இருந்தது.

4. மத்திய வக்ஃப் வாரியம் பாபரி மஸ்ஜித் தொடர்பாகத் தாக்கல் செய்த மனு காலம் கடந்தது.

5. பள்ளிவாசலின் மையப்பகுதியில் 1949, டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நள்ளிரவில் சிலைகள் கொண்டு வைக்கப்பட்டன.

6. வழக்கில் உள்ள சொத்து ராம ஜென்ம பூமியாகும். அதில் ராமர், சீதா மற்றும் இதர சிலைகளும் இருந்தன. அதனால் அவற்றை வணங்கும் உரிமை இந்துக்களுக்கு உள்ளது.

ராம ஜென்ம பூமியை மக்கள் வழிபடுவதுடன், நினைவு தெரிந்த நாட்களுக்கு முன்பே அதைப் புனித இடமாகக் கருதி மக்கள் அங்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

பள்ளிவாசல் கட்டப்பட்ட பின்னர் 1949, டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் அங்கு சிலைகள் வைக்கப்பட்டது நிரூபணம் ஆகியுள்ளது. இதன் மூலம் சர்ச்சைக்குரிய இடத்தின் வெளிப்பகுதி இந்துக்களின் அனுபவத்தில் இருந்தது தெரிய வருகின்றது.

உள் பகுதியிலும் அவர்கள் போய் வணங்குகின்றனர் என்பதும் நிரூபணம் ஆகின்றது. இந்துக்கள் அங்கு போய் வணங்கி வருவதால் சர்ச்சைக்குரிய இடத்தைப் பள்ளிவாசலாகக் கருத முடியாது. ஏனெனில் இது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிராக அமைந்துள்ளது.

இது தான் அலகாபாத் உயர்நீதி மன்றத் தீர்ப்பின் சாராம்சம். இங்கு தான் நீதித்துறையின் கருப்புச் சட்டை காவிச் சட்டையாக மாறியிருக்கின்றது என்பதை உணர முடிகின்றது.

இதுவரை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. வகையறாக்கள் என்ன சொல்லி வந்தார்களோ அதை அப்படியே நீதிபதிகள் பிரதிபலித்துள்ளனர்.

ஒரு சொத்து யாருக்குரியது என்பதற்கு நீதிமன்றம் பார்க்க வேண்டிய சட்டத்தின் வரையறையானது, அந்தச் சொத்தின் உரிமை மற்றும் அனுபவம் ஆகிய இரண்டைத் தான்.

1. சம்பந்தப்பட்ட சொத்து யாருக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள்.

2. அது யாருடைய அனுபவத்தில் இருந்து வருகின்றது?

இந்த இரண்டு சான்றுகள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களைத் தான் சட்டம் பார்க்கும்.

இவ்விரண்டையும் தாண்டி அகழ்வாராய்ச்சி, மக்களின் நம்பிக்கை என்பதெல்லாம் சட்டத்தின் வரம்பல்ல! சட்டம் இவ்வாறு பார்க்கச் சொல்லவில்லை.

சட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதா? நிச்சயமாக இல்லை. சாத்திரங்களின் அடிப்படையில் தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நீதி செத்து விட்டது என்பதற்கு இந்தத் தீர்ப்பு உதாரணமாக அமைந்துள்ளது.

சட்டம் எதற்கு? நீதி எதற்கு? நீதி மன்றம் எதற்கு?

வலியவன் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி எளியவனை ஏமாற்றி விடக் கூடாது; பணக்காரன் தனது பண பலத்தை வைத்து பாட்டாளியை ஏமாற்றி விடக் கூடாது என்பதற்காகத் தானே!

சங் பரிவாரங்கள் முஸ்லிம்களிடமிருந்து இந்த இடத்தைக் கற்பனையான காரணத்தைக் கூறி அபகரிக்கத் துடிக்கின்றது.

இந்த அபகரிப்பையும் ஆக்கிரமிப்பையும் செய்வதற்கு சங்பரிவார்களுக்கு நீதிமன்றம் முகவராகச் செயல்படுமானால் எதற்காக நாம் நீதிமன்றத்தை நாட வேண்டும்? இப்படிச் செயல்படுவதற்கு எதற்காக நீதிமன்றம்?

முஸ்லிம்களிடமிருந்து இப்படி அநியாயமாக பாபரி மஸ்ஜிதை நீதி மன்றம் பறித்துக் கொடுக்குமானால் அதுவும் முகமூடி அணிந்த சங்பரிவார் தான்.

அதனால் நீதிமன்றத் தீர்ப்பு என்றால் அது நீதியின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். சட்டத்தின் வரம்பு அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.

நீதிக்குப் புறம்பாக, சாத்திரத்தின் அடிப்படையில் அந்தத் தீர்ப்பு அமைந்தால் அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருந்தாலும் முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள்.

சங்பரிவார்களின் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி அந்த இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கும் வரை முஸ்லிம்களின் அறவழிப் போராட்டம் தொடரும்.

பைசாபாத் உரிமையியல் நீதி மன்றம், அதன் பின்னர் அலகாபாத் உயர்நீதி மன்றம் ஆகியவை ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கள் நீதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. சாத்திரத்தின் அடிப்படையிலும், மதச் சார்புடனும் தான் தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போது அது தான் தொடர்ந்துள்ளது.

இதுவே இறுதித் தீர்ப்பு அல்ல. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. எனினும் உயர்நீதி மன்றமாக இருந்தாலும் சரி! உச்சநீதி மன்றமாக இருந்தாலும் சரி! நீதிபதிகளும் மனிதர்கள் தான்.

அண்மையில் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன், உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதிகளில் 16 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கின்றார். முடிந்தால் என் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடுத்துக் கொள்ளுங்கள் என்று சவாலும் விடுத்திருக்கின்றார்.

அதனால் காசுக்கு விலை போகும் நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

இப்படிக் காசுக்கும் காவிச் சிந்தனைக்கும் விலை போன நீதிபதிகளின் தீர்ப்பினால் தான் பாபரி மஸ்ஜித் உடைப்புக்கு உள்ளானது. மீண்டும் அதே போன்று ஓர் அநியாயத் தீர்ப்பு தான் தற்போது வெளியாகியுள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்குமே அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:135

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 5:8

இந்த வசனங்களின்படி முஸ்லிம்கள் ஒருபோதும் அநியாயத்திற்குத் துணை போக மாட்டார்கள். ஒரு முஸ்லிம் தன்னுடைய சொத்தை மீட்பதற்காகக் கொல்லப்பட்டால் கூட அவரது மரணம் தியாக மரணம் என்ற முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்?'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை'' என்று கூறினார்கள். அந்த மனிதர், "அவன் என்னுடன் சண்டையிட்டால்...?'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்!'' என்று கூறினார்கள். "(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்று விட்டால்...?'' என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், "அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்'' என்றார்கள். "நான் அவனைக் கொன்று விட்டால்...?'' என்று அவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் நரகத்திற்குச் செல்வான்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 202

தன்னுடைய சொத்துக்காக உயிரை விடலாம் எனும் போது அல்லாஹ்வின் சொத்தான பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காகத் தங்கள் இன்னுயிரை மாய்ப்பதற்கு முஸ்லிம்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள். உயிரைக் கொடுத்தேனும் உரிமையை மீட்க முன்வருவார்களே தவிர உரிமையை இழக்க மாட்டார்கள்.


அதே சமயம் இந்த உரிமை மீட்புப் போராட்டம் ஒரு போதும் வன்முறை வழியில் நடக்காது; அறவழியிலேயே அமையும்.

EGATHUVAM OCT 2010